எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது. (10) பிரசுரம் : வார்த்தை ஜனவரி, 2009.
வ.ஸ்ரீநிவாசன்.
மும்பை குண்டு வெடிப்பு, சட்டக் கல்லூரி மோதல், சமீபத்திய மழை வெள்ளம் இவற்றில் சென்னை மக்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியது கடைசி விஷயம்தான். (அடுத்த வீட்டுக் காரரின் மரணத்தை விட தன்னுடைய தலைவலிதான் ஒருவருக்கு முக்கியமானதாக இருக்கும் –ன்கிறார் டேல் கார்னகி). பலர் வீடுகளுக்குள் சாக்கடை தண்ணீர் வந்து விட்டது. கழுத்தளவு, இடுப்பளவு, முழங்கால் அளவு தண்ணீரில் வீதிகளில், சாலைகளில் மக்கள் போக வேண்டி இருந்தது. மேல் தட்டு மக்கள் வீடுகளுக்கும் பால், பிஸ்கட், ரொட்டி முதலியவை போலீசாரால் விநியோகிக்கப் பட்டன. ‘பிரளயம்’ என்ற தலைப்பில் ஜெயகாந்தனுடைய கதை இருக்கிறது. குடிசை வாழ் மக்களுக்கு ஒவ்வொரு மழைக் காலமுமே பிரளயம்தான். மழை வெள்ளத்திற்கு நாற்பது பேர் பலி, அறுபது பேர் பலி என்ற வருடாந்திர செய்திகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. நிபுணர் குழு வருகை, வெள்ளச் சேத கணக்கு, நிவாரணம், இலவச உணவு, பணம் என்கிற தேர்தல் உத்திகள் எல்லாம் மழை சீசனின் வருடாந்திரக் கச்சேரிகள்.
சட்டக் கல்லூரி மோதல் சில வருடங்களுக்கு முன்பு வரை பள்ளி சென்று வந்த சிறுவர்களின் வெறியின் வெளிப்பாடு. பயங்கரமாக இருந்தது. ‘இவன் நம்ம ஆளா’ என்று கேட்கச் சொல்லி தமிழர்களைப் பிரித்த தலைவர்களின் கேள்வி, கண்ணாடியில் விழுந்த விரிசல் போல், நூறு குடிசையிருக்கும் இடத்தில் ஒரு குடிசையில் பற்ற வைத்த தீ போல், பரவி எவ்வளவு பெரிய துவேஷ விருட்சமாக வளர்ந்திருக்கிறது என்பதைக் காட்டியது.
மும்பை குண்டு வெடிப்பு மீண்டும் சென்னை மழை வெள்ளத்தைப்போல, ‘அனைவரும் சமம்’ என்ற நம் நாட்டின் இலட்சியத்தை நோக்கி நமது அரசுகள், நாம் எல்லோரும் எவ்வளவு தூரம் முன்னேறி யுள்ளோம் என்பதற்கு எடுத்துக் காட்டு. பொது மக்களில் எல்லா வர்க்கத்தினரும் பாதிக்கப் பட்டுள்ளனர். தொலைக் காட்சி சேனல்களுக்கு வேட்டைதான். ஒரே ஒரு சாம்பிள். கையில் குண்டு துளைத்து ஒருவர் ரத்தம் வடிய அங்கும் இங்கும் ஓடுகிறார். இன்னொரு கை அவர் கையை பிடிக்கிறது. துணியைக் கட்டவா? மருந்திடவா? இல்லை அவர்கள் காமிராக்காரருக்கு அந்தக் கை சரியாகத் தெரியும் வண்ணம் திருப்புவதற்காக.
2004ல் மொத்தத் தமிழகமும், இந்தியாவுமே கும்பகோணம் தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்காக அதிர்ச்சியையும் அனுதாபத்தையும் தெரிவித்து, அமைதி ஊர்வலம், பிரார்த்தனைகள் என்று ஏதவது செய்ய வேண்டுமே இந்தத் துயரிலிருந்து மீள என்று செய்தன. ஸ்ரீரங்கம் கல்யாண சத்திரத்தில் தீ விபத்து. மணமகள் தவிர அனைவரும் சாவு. மீண்டும் துக்கம். தர்மபுரியில் பஸ்ஸோடு எரித்து மூன்று மாணவிகள் கொலை. தினகரன் பத்ரிகை அலுவலகத்தில் அமளி. மூன்று ஊழியர்கள் கொலை. எவ்வளவோ குண்டு வெடிப்புகள். பயங்கரவாதத் தாக்குதல்கள். செய்திகள். சூளுரைகள். ஆதியோடந்தமான விமர்சனங்கள். மழையில் மின்சாரம் தாக்கி சாவது முதல் தீ விபத்து வரை, அராஜக அடிதடிகள் முதல் பயங்கரவாதத் தாக்குதல் வரை அனைத்துக்கும் அடிப்படையில் நாம் சரியாக வாழாததுதான் காரணம்.
ஒவ்வொரு உற்பாதத்தின் போதும் இந்த மாபெரும் துயரிலிருந்து தப்ப ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும் என்று பலரும் முயல்கிறார்கள். இதற்கு பரிகாரம் இருக்கிறது. முடியுமா? போக்குவரத்து விதிகளை ஒழுங்காகக் கடை பிடிக்க முடியுமா? கறுப்புப் பணம் பண்ணாமல் ஒழுங்காக வரி கட்ட முடியுமா? லஞ்சத்தின் இருமுனைகளில் எந்த ஒன்றிலும் இல்லாதவராக நாம் இருக்க முடியுமா? கள்ள சந்தையிலிருந்து நம்மை முற்றாக விடுவித்துக் கொள்ள முடியுமா? எந்த ஒரு ஜாதியையும், மதத்தையும், இனத்தையும் தூஷிக்காமல் துவேஷிக்காமல் இருக்க முடியுமா? தொழிலதிபர்களும், இன்ன பிற பிரபலஸ்தர்களும், மக்களுக்காக மட்டுமே வாழும் தலைவர்களும், நடிகர்களும் உதாரண புருஷர்களாக தங்கள் உண்மையான சொத்துக் கணக்கு, வருமானக் கணக்கு அனைத்தையும் வெளியிட முடியுமா?
இதெல்லாம் செய்யாமல் சும்மா மும்பை குண்டு வெடிப்புக்காக, சட்டக் கல்லூரி அடி உதைக்காக, வெள்ளத்தில் உயிர் விட்டவர்களுக்காக உணர்ச்சிவசப் படுவது பெட்டைப் புலம்பல் மட்டுமில்லை, ஆபாச வேஷம்.
************
1995ல் நான் முதன்முறையாக ஒரு கிராம வங்கிக் கிளையில் மேலாளராகப் பணி ஆற்றினேன். வேலூரிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் சுமார் 18 கி.மீ. சென்று, அங்கிருந்து உட்புறமாக 4 கி.மீ. சென்று வங்கியை அடைய வேண்டும். மொத்தம் ஐந்து கிராமங்கள் அந்தக் கிளையின் சேவையின் கீழ் வந்தன. வறண்ட மாவட்டத்திலிருந்த அவ்வூரிலேயே கோடையில் கூட ஒரு குளுமை இருந்தது. செப்டம்பருக்குப் பிறகு ஊரே குளிர் பதனம் செய்யப்பட்டது போல் இருக்கும். ஜாதி என்கிற விஷயத்தின் ஸ்தூல இருப்பு, உழைப்பும், ஓய்வும் சரியாக கலந்த வாழ்க்கை, தூய நீர், காற்று, தாவரங்களின் அரவணைப்பு, மனிதர்களிடம் அவர்கள் வெளியே காட்டிய நவரசங்களையும் மீறித் தெரிந்த பிறர் மேல் உள்ள நம்பிக்கை முதலியவை நான் அதுகாறும் இருந்த பெரு நகர, நகரக் கிளைகளில் காணாதவை.
ஒருவருடைய வீட்டின் மாடிப் பகுதியில் கிளை இருந்தது. வீடு, வங்கிக் கிளையானது தெரியும். இரும்பு அறைக்குப் பதிலாக இரும்புப் பெட்டிதான் இருந்தது. மேலாளருக்குத் தனி அறை கிடையாது. ஒரு இரண்டறை அடி மரத் தடுப்புதான். ஒரு அதிகாரி, நான்கு குமாஸ்தாக்கள், ஒரு கடை நிலை ஊழியர், மற்றும் தண்ணீர் கொண்டு வர பெருக்க என்று ஒருவர், வாரத்துக்கு இரு முறை வந்து போகும் விவசாய அதிகாரி, ஒருமுறை வந்துபோகும், தங்க நகைகளை தரம் பார்த்து மதிப்பு சொல்லும் ஒருவர் என்று சொற்பமானவர்களே அங்கு இருந்தோம்.
தலித், வன்னியர், முதலியார், ஆசாரி, இசுலாமியர், பிராமணர், நாடார் என்ற பிரிவுகளில் பிறந்தவர்களாக நாங்கள் இருந்தோம். நான் கிளையில் சேர்ந்த முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரை நாங்கள் அனைவரும் ஒன்றாகவே உணவு இடைவேளையின் போது உணவருந்தினோம். அப்போது வங்கி மற்றும் குடும்ப விஷயங்களை மனம் விட்டு பேச முடிந்தது. இந்து, இசுலாமிய கிறித்தவ பண்டிகைகளுக்கு அவ்வூர் மக்களிடமிருந்து சாப்பிட ஏதாவது வந்து விடும். சர்க்கரைப் பொங்கலிலிருந்து, பிரியாணி வரை.
கிளைக்குச் சென்ற முதல் நாள் ஒருவர் கடன் கேட்டார். குடித்திருந்தார். அவருக்கு ஏற்கனவே கடன் பாக்கி இருக்கிறது என்று ஊழியர்கள் சொன்னார்கள். கொடுக்க முடியாது பழைய கடனைக் கட்டுங்கள் என்று சொன்னதும் கோபம் வந்து “ மெயின் ரோட்டுக்கு வருவேயில்லே, பார்த்துக் கொள்கிறேன்”” என்று கத்தி விட்டுப் போனார். அப்போது பயமாகவே இருந்தது. ஒன்றும் நடக்கவில்லை. அது போன்ற சம்பவம் வேறெதுவும் பின்னர் நிகழவில்லை.
அந்த கிராமங்களில் பலரும் இராணுவத்தில் இருந்தனர். ஒரு குடும்பத்தில் குறைந்தது ஒருவர். மர்ச்சன்ட் நேவியில் இருந்த ஒருவர் எப்போதாவது விடுமுறையில் வருவார். வங்கியின் ஆங்கில தினசரியைப் படிப்பார். ஆங்கிலத்தில் பேசுவார். அவர் ஊர் திரும்பியதும் அவர் மனைவியோடு தொலைபேசியில் பேச எங்கள் கிளை தொலைபேசியில்தான் அழைப்பார். செல்போன்கள் வராத காலம். பல குடும்பங்களில் தகப்பன் மகனுக்கு இடையே பண விஷயங்களில் இரகசியமுண்டு.
வாழை, மாம்பழ பிஸினஸ் செய்து வந்த சகோதரர்களில் தம்பி ஒரு அரசியல் கட்சியில் இருந்தார். பின் தன் ஜாதிக் கட்சியில் இணைந்தார். வங்கிக்கு வந்தாலே தன் பெரியமனிதத் தோரணையைக் காட்டுவார். மரியாதையாக இருப்பார். தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பற்றிச் சொல்லுவார். பலரிடம் இருந்த குடிப் பழக்கமும் உண்டு. என்ன வேண்டும் செய்கிறேனென்பார். பந்தா காட்டினாலும் அப்பாவி என்று தெரியும். அண்ணன் அவ்வப் போது வங்கிக்கு வருவார். மிக தன்மையான, ஸ்திரபுத்தி உள்ள மனிதர். அவர் பெயர் முதலில் கேட்டபோது வேடிக்கையாக இருந்தது. “பெரியப்பா”. ஒரு நாள் அவர் வங்கிக்கு வந்தபோது, “என்ன பெரியப்பா, நீங்கள் அரசியலில் சேரவில்லையா” என்று கெட்டதற்கு “அதெல்லாம் நமக்கு எதுக்குங்க. நாம சும்மா மனுஷன்” என்றார்.
இந்த வாழ்க்கையில் நான் பல சும்மா மனுஷர்களை சந்தித்து இருக்கிறேன். கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தால் நம் கண்களிலிருந்து தப்பிவிடுவார்கள். நம்புங்கள். அவர்களால் மட்டுமே இந்த உலகம் சுழல்கிறது. அவர்களைத் தெரிந்து கொள்ள:- அவர்கள் பெரும்பாலும் பிரபலமானவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு இலட்சியம், கொள்கை, துவேஷம் கருத்தாக்கம், முதலிய எந்த எழவும் இருக்காது. அவர்களுக்கு ஜாதி, மதம், நிறம், இனம் பற்றி பிணைப்பு இருக்காது. குடும்பத்துக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் உழைத்துக் கொண்டு இருப்பார்கள். ஆசிரியரோ, ஆடு மேய்ப்பவரோ, வியாபாரியோ, பூசாரியோ, ஆணோ, பெண்ணோ வாழ்வோடு இரண்டறக் கலந்து, எங்கும் துருத்திக் கொண்டு நிற்காமல் ‘பார்த்தால் பிறர் போல் இருப்பர்’.
ஒரு நாள், நானும் என் அதிகாரியும் இனி மாலையில் கிளையிலிருந்து நான்கு கி.மீ. ஏன் நடக்கக் கூடாது; உடற்பயிற்சி ஆயிற்று. மனதுக்கும் இதமாக இருக்கும். என்று முடிவு செய்து மோட்டார் சைக்கிள்களை இதர ஊழியர்களிடம் கொடுத்து அவற்றை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க ஏற்பாடு செய்து விட்டு கிளம்பினோம். ஒரே நாளுடன் அந்த தேகப்பியாசம் முடிந்து விட்டது.
காரணம் 1: வழியில் பார்த்த சுமார் ஒரு டஜன் பேர் “என்ன மேனேஜர் சார். வண்டி ரிப்பேரா? நான் கொண்டு போய் விடட்டுமா என்று அன்புடன் கரிசனத்துடன் கேட்டார்கள். காரணம் 2: நான்கு இடங்களில் வெவ்வேறு விதமான பாம்புகள் சாலையைக் குறுக்காக கடந்து சென்றன. அதில் இரண்டு இடங்களில் கடந்தவை விஷப் பாம்புகள் என்று என் உடன் வந்த அதிகாரி பயத்துடன் சொன்னார்.
மிகச் சிறப்பாக பணியாற்றிய கடை நிலைஊழியர் ஒருவர் இருந்தார். பின்னர் நான் திருச்சி கிளையில் இருக்கையில் சுமார் நான்கு வருடங்கள் கழித்து ஒருநாள் அவர் அங்கு தன் மனைவி மகன்களுடன் வந்தார். ‘கன்யாகுமரி போகிறோம். இங்கு கிளையில் உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம்’ என்றார். கிளையின் வேலை நேரம் முடிந்து விட்டது. கைகால் கழுவிக் கொண்டு, சிறிது சிற்றுண்டியும், காஃபியும் அருந்தி விட்டு புறப்பட்டார்கள். ‘வருகிறேன்’ என்று எழுந்தவர் மேஜையைச் சுற்றிக் கொண்டு வந்து என்னருகில் நின்றார். எழுந்த என்னை ஆரத்தழுவிக் கொண்டார். மிகத் திடமான இரண்டு கரங்கள் என்னைப் பற்றிக் கொண்டிருந்தன. (முன்னாள் இராணுவ வீரர்) அவர் இதயம் துடிப்பதை என் நெஞ்சு உணர்ந்தது. இரண்டு முறை விம்மினார். இரண்டு நிமிடங்கள் அப்படியே இருந்தவர் விலகி பின்னால் சென்று “வருகிறேன் சார்” என்று புன் முறுவல் செய்துவிட்டுப் புறப்பட்டுப் போனார். அவரது குடும்பத்தினரும் புன்னகையோடு கிளம்பினார்கள். நாம் கைம்மாறு செய்யவே முடியாத, நாம் தகுதியாகவே முடியாத விஷயம் அன்பு. அது நிகழ்கையில் நாம் ஆட்பட மட்டும்தான் முடியும்.
**************
ஒரு படத்தில் இடம் பெற்ற “இந்த நாட்டுல சைலன்ஸ் என்கிற வார்த்தையைக் கூட சத்தம் போட்டுதான் சொல்ல வேண்டியிருக்கிறது”. என்கிற வசனம் பலராலும் புகழப் பட்டது. “சைலன்ஸ்’ என்கிற வார்த்தையை எங்கு சொல்லப் போகிறோம். பெரும்பாலும் கூச்சல், சப்தம் இருக்கும் இடங்களில்தான். அதை சத்தம் போட்டு சொல்லாமல் மெதுவாகச் சொன்னால் யார் காதில் விழும்?
வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்கிறார்கள். சூரன் வீழ்ந்தான், முருகன் வாழ்ந்தான். இராவணன் வீழ்ந்தான், இராமன் வாழ்ந்தான். எனவே ஜென்மப் பகைவர்களில் ஒருவர் வீழ்ந்தால் மற்றவர் வாழ்வார்தான்.
படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் அப்போது சிவன் கோவிலை இடிக்கலாமா?
************
‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” - கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம். கம்யூனிஸத்திற்கு எதிரான ஒரு கம்யூனிஸ்ட்டின் உண்மைப் பாடல்.
5 comments:
ramachandran said...
Saar ungal post miga nandraga irukkirathu (tamizh font illai - mannikkavum). thodarnthu valayil ezhuthungal - ungal ezhuthal enathu thamizh aarvam athikarikkirathu.
ippadikku,
coimbatore (junior) ramachandran.
June 19, 2009 4:15 PM
V.Srinivasan./வ.ஸ்ரீநிவாசன் said...
Thanks Mr. Ramachandran.
June 20, 2009 6:30 PM
தரமான நடையில் சிறப்பாக எழுதிகிரிர்கள்.படிக்க நிறைவாக உள்ளது.நன்றி.
சும்மா மனுசன்...Blessed are the meek,for they shall inherit the earth....ஆழமான கருத்து
இவ்வளவு நாட்கள் கழிந்த பின்னரே உங்கள் ஒருசேரப் படிக்கும் வாய்ப்பு
கிடைத்தது.வாழ்த்துகிறேன்.
கோரா,கோவை
Thank you Sir.
Post a Comment