FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Friday, January 22, 2010

சருகு

சருகு (பிரசுரம் சொல்வனம்)


வ.ஸ்ரீநிவாசன்



பால கிருஷ்ணன் டி.வி.எஸ். 50 யை நிறுத்தி விட்டு குழந்தை பிரியாவை இறக்கி விட்டான். அதற்கு இன்னமும் தூக்கம் முழுவதுமாகக் கலையவில்லை. அப்பா கையைப் பிடித்தவாறே பார்க்குக்குள் நுழைந்தது.

சுற்றிலும் மரங்கள். பூச்செடிகள். சுமார் அரை கி.மீ. அளவுக்கு சதுரமான நடப்பதற்கான பாதை. நடுவில் உட்கார சிமின்ட் பெஞ்சுகள். ஒரு உட்சதுர சுற்றுக் கம்பி வேலிக்குள் சறுக்கு மரம். ஊஞ்சல். புல் அப் செய்யும் பார். பாரலல் பார் என்று விளையாட்டுத் திடல்.

வெய்யில் இன்னும் வரவில்லை. சுமார் முப்பது பேர் விட்டு விட்டு ஒருவராக இருவராக நாலைந்து பேர்களாக பிரதட்சணமாக நடந்து கொண்டிருந்தார்கள். விதம் விதமான நடைகள். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய பிரச்னை, மூட்டுவலி, தொப்பை, அழகு, ஃபாஷன் என்று எவ்வளவோ காரணங்கள். வித வித ஆடைகள்.
வேகங்கள். யாரோ ஒருவர் எதிர் திசையில் இடம் வந்தார்.

பாலகிருஷ்ணனுக்கு இது முதல் முறை. அவன் வாழ்நாளில் வாக்கிங் போனதில்லை. அவன் சென்னையில் இதுகாறும் இருந்த தெருக்களில் நடப்பதே ஒரு கலை. பீச் கொஞ்சம் தொலைவில் இருந்தது. வாக்கிங் போகும் எண்ணம் கூட வந்ததில்லை. அது போன்ற விஷயங்கள் தனக்கு விதிக்கப் பட்டதில்லை என்று கூட அவனுக்குத் தோன்றியதில்லை.

உத்யோக உயர்வுடன் மாற்றலுமாகி கோவைக்கு வந்ததும் அதன் சீதோஷ்ணமும், அருகாமையில் இருந்த பார்க்கும், வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத் தக்க மாறுதலுக்கான சாத்தியமும் இன்று உந்தி அவனை இங்கு அனுப்பியிருக்க வேண்டும்.

அப்பாவும், தங்கையும் சென்னையில் இருந்தார்கள். அதே ஒண்டுக் குடித்தனம். இரண்டு வாரத்துக்கு முன் அம்மாவும், மனைவியும், பிரியாவும் அவன் கூட கோவைக்கு வந்தார்கள். அம்மா குடி வைத்து விட்டு அடுத்த வாரம் போய் விடுவாள். தங்கை பி.எஸ்ஸி. கடைசி வருஷம். முடிந்ததும் குடும்பம் இங்கே வந்து விடும்.

இந்த வீட்டில் ஒரு ஹால், மற்றும் இரண்டு அறைகள், சமயலறை என்று இருந்தது.சின்னதுதான். ஆனால் திருவல்லிக்கேணியின் கூடம், சமயலறை, காமரா அறை என்ற ரயில் பெட்டி ஜாகையை விட சௌகர்யமாக இருந்தது. முக்கியமாக பொது கக்கூஸ், குழாயடி தொந்தரவுகள் இல்லை.

பால கிருஷ்ணனுக்கு ஏ.சி. கோச்சில் பயணிப்பது, லிஃப்டில் போவது, ஆங்கிலத்தில் பேசுவது, சூப்பர் மார்க்கெட்களில் பொருள் வாங்குவது முதலியவை இதயத் துடிப்பை அதிகப் படுத்தும் செயல்பாடுகள். ஹோட்டலுக்குப் போவதே அபூர்வம். போனாலும் அங்கு சர்வரிடம் ஆர்டர் செய்வது ரொம்பக் கஷ்டமான காரியம். ஏனோ அவனுக்கான சர்வர்கள் செவிடர்களாகவே இருந்து விடுகிறார்கள். ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு எடுபிடியாக ஆபீஸ் பார்ட்டிக்குப் போன போது அவன் செத்துப் பிழைத்தான்.

அவனுக்குப் பணக்காரர்கள் மீதோ பளபளப்பான வாழ்க்கை மீதோ ஆசையும் இல்லை. எரிச்சலும் நிச்சயம் இல்லை. அவை அவன் உலகத்திலோ, அகராதியிலோ, ப்ரக்ஞையிலோ, ஸ்மரணையிலோ இல்லாத விஷயங்கள்.

இரண்டே பான்ட், சட்டை, இரவல் வாங்கிய அல்லது இரண்டாம் கை புத்தகங்கள், கால்நடை, அம்மா போடும் சாப்பாடு, அப்பாவின் வளவளாப் பேச்சு இவற்றுக்கிடையே வளர்ந்தவன்.

வாழ்க்கை எல்லாவற்றையும் நேரிடச் செய்து விடுகிறது. அவனுக்கும் படிப்பு முடிந்து வேலையும் கிடைத்து கல்யாணமும் ஆகி, காய் வைத்தால் காலையில் பழுத்துக் கனிந்து விடும் காமிரா அறையில் இயற்கையின் ரஸவாதங்களும் நடந்து பிரியாவும் வந்துதித்து அவளுக்கும் வயது ஆறாகப் போகிறது.

கோவைக்கு உத்யோக உயர்வோடு மாற்றல் வந்தபோது ‘இந்த திருவல்லிக்கேணி வாழ்ககையை’ மாற்றுவது பற்றி யோசிப்பது கூட நரக வேதனையாகி அதை கேன்சல் செய்ய எவ்வளவோ முயன்றான். கூடக் கிடைக்கும் ஆயிரம் ரூபாயும், அப்பாவி மனைவிக்கு கிடைக்கக் கூடிய கொஞ்ச நாள் சுதந்திரத்தைப் பற்றி தெளிவின்றி லேசாக உணர்ந்து மறந்து போன சாத்தியமும் அவனை இங்கு கொண்டு வந்து சேர்த்தன.

பணத்தைத் துரத்துபவர்கள் பணக்காரர்கள் என்று சொல்கிறார்கள். ஏழைகளுமல்லவா. உண்மையில் கண்ணுக்கே தெரியாத அதை ஓயாமல் துரத்துபவர்கள் அவர்களே. எப்பொழுதும் கண்ணுக்கே தெரியாமல் தூரத்தில் செல்லும் அதன் குதியங்கால் தெரிந்ததாய் நினைத்து பாலகிருஷ்ணன் கோவை வந்தான்.

சென்னைவாசியான அவனுக்கு தென்னை மரத்தைத் தவிர தாவர அறிவும் காக்காயைத் தவிர பறவை அறிவும் கிடையாது. பார்க்கில் இருந்த மரங்களும் செடிகளும் அவன் கண்ணில் படவில்லை. ஃபைவ் ஸ்டார் ஹோட்டல், லிஃப்ட் இவற்றுக்குள் ஆவது போலவே என்ன செய்வது என்ற திகைப்பு அவனுக்கு வந்தது. தானும் பிரியாவும் மட்டும்தான் செருப்போடு இருக்கிறோம் என்று அவனுக்குத் தெரிந்தது. பாக்கி எல்லோரும், வேட்டி கட்டிய ஓரிருவரைத் தவிர சாக்ஸ், ஷ¨ஸென்று முறைப்படி வந்திருந்தார்கள். வேட்டிக் காரர்கள் கூட கட் ஷ¨ அணிந்திருந்தார்கள்.

பால கிருஷ்ணன் குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு உட்புற விளையாட்டுத் திடலுக்குள் போனான். இரண்டு சறுக்கு மரங்கள். ஒன்றில் இரண்டு வட இந்தியக் குழந்தைகள் ஒன்றை ஒன்று துரத்தியபடி விளையாடிக் கொண்டிருந்தன. அவை போட்ட கூச்சலும், சிரிப்பும், அவற்றின் வேகமும் பிரியாவைக் கொஞ்சம் மிரளவே வைத்தன.

அடுத்த சறுக்கு மரம் காலி. வழக்கமாய் வந்த ஜாக்ரதை உணர்வின் படி அதை பால கிருஷ்ணன் நன்றாகக் கவனித்தான். அதில் ஆணியோ, பிய்ந்த சிலாம்போ இல்லை என்று உறுதி செய்தவுடன் தூக்கி பிரியாவை சறுக்கு மரத்தின் பாதியில் உட்கார்த்தினான். பிரியா அவன் தோள்களைப் பயந்து பற்றிக் கொண்டது. அதன் இடுப்பையும் தோளையும் பிடித்துக் கொண்டு மெல்ல சரிவாக அதை கீழே நகர்த்தி வந்தான். தரையைத் தொட்டதும் நின்று கொஞ்சம் தைரியமாய் அவனைப் பார்த்தது.
‘இன்னொருவாட்டிப்பா’ என்றது. தூக்கி மறுபடியும் இரண்டு தரம் அதே மாதிரி செய்தான். அதன் கண்கள் அகன்று மலர்ந்தன. உதட்டில் சிரிப்பு.

இப்போது நல்ல தைரியம் வந்துவிட்டது. நல்ல வேளை. கிழியாத கவுனும் ஜட்டியும் போட்டுக் கொண்டிருந்தது. செருப்பை சறுக்கு மரத்தடியில் விட்டு விட்டு, பின்புற ஏணி வழியாக ஏறி மேலிருந்து சறுக்கியது. உடனே ஓட்டமாக ஓடி ஏணியில் மறுபடியும் ஏறியது.

“பத்ரம்டா தங்கம்” என்று பால கிருஷ்ணன் கூறினான்.

“சரிப்பா” என்று சறுக்கியது.

பால கிருஷ்ணன் அருகில் நின்றான். தான் என்ன செய்யலாம் என்று யோசித்தான். சிமின்ட் பெஞ்ச்களில் பறவைகளின் எச்சம் தடிமனாகக் கோட்டிங் போட்டிருந்தது. செருப்பைக் கழற்றி புல் தரையில் கால் வைக்கையில் சில்லென்று பித்த வெடிப்புக்கு இதமாக இருந்தது. கூடவே பூச்சி பொட்டு ஏதாவது இருக்குமோ என்று தோன்றியது. உடனே செருப்பில் கால்களை நுழைத்துக் கொண்டான்.

சூரியன் இன்னும் சூடேறவில்லை. நான்கு கிழவர்கள் கிரிக்கட் பற்றிப் பேசிக் கொண்டு போனார்கள். இரண்டொருவர் செல்ஃபோனில் பேசியபடியே ஒரு கையை வீசி வீசி நடந்து கொலஸ்ட்ராலைக் குறைக்கப் பிரயத்தனித்தார்கள். மூன்று பெண்கள் இருந்தனர். சூடிதாரில் ஒருவரும், புடவையில் இருவரும். மூவர் காலிலும் கான்வாஸ் ஷ¨. தான் நினைத்தது போலன்றி பலரும் மத்ய தர வர்க்கத்தினராகவே இருப்பது கண்டு பால கிருஷ்ணனுக்கு ஆசுவாசமாக இருந்தது.

ஆனால் அவர்களோடும் அவனுக்கு பந்தம் இல்லை. அவன் அந்தக் கூட்டத்துக்குள்ளும் இல்லை.

பிரியாவிடம் “ஜாக்ரதையா விளையாடிண்டு இருக்கியா. இங்கேயே. அப்பா ஒரு ரவுண்ட் போயிட்டு வர்ரேன்” என்று சொல்லி விட்டு தலையாட்டிய குழந்தையிடமிருந்து நகர்ந்து திரும்பித் திரும்பி அவள் சரியாக சறுக்குகிறாளா என்று பார்த்தவாறே நடை பாதைக்கு வந்தான்.

குளிர்ச்சி முகத்தில் அடித்தது. தான் யாரோடும் அங்கு சேர முடியாது என்று அவனுக்குத் தெரிந்தது. வழக்கமான சங்கட உணர்வும் இல்லை. தான் யாரோடும், ஏன் பெற்றோறோடும், சகோதரியோடும், மனைவியோடும் இந்தக் குழந்தையோடும் கூட ஒட்டவில்லை என்று அவனுக்குத் தெரிந்தது. ‘தங்கமும், செல்லமும்’ பழக்க தோஷத்தில் உதிர்ந்த சொற்கள்.

தன்னை உயர்ந்தவனென்றோ தாழ்ந்தவனென்றோ அவன் நினைக்கவில்லை. எதோடும் ஒட்டாமல் எல்லாவற்றுக்கும் மத்தியில். அவனுக்கு நண்பர்களே இல்லை. ஆனால் ஆபீஸில் எல்லோருக்கும் வேண்டியவன். அக்கம் பக்கத்திலும் அப்படித்தான். காதலியும் கிடையாது. குழந்தையிலிருந்தே கவலை, கடமை என்றே வாழ்க்கை ஓடிவிட்டது. இன்று பார்க்குக்கு வந்ததே கல்யாணத்திற்குப் பிறகு அவனுடைய பெரிய அதிசயம். பிரியாவோடு இரண்டு, மூன்று முறைகள்தான் தனியாக வெளியே வந்திருக்கிறோம் என்ற ஞாபகம் தெறித்தது. பள்ளிக்குக் கொண்டு விடுவது, டாக்டர் வீடு எல்லாவற்றையும் மனைவியோ அம்மாவோ பார்த்துக் கொண்டு விட்டனர். அவன் முதலாளிக்கு அவன் இருபத்து நாலு மணி நேரமும் வேலை செய்தாலும் திருப்தி வருவதில்லை. மனைவியோடு கூட உறவினர் வீடுகள், கோவில் என்று போனது மிகவும் கம்மி. அதிலும் முக்கால் வாசி பெற்றோர் சகிதமாகத்தான் போய் வந்திருக்கிறான். அதில் அவனுக்குக் குறையுமில்லை.

எதிலும் ஒட்டவில்லை. எதுவும் ஒட்டவில்லை. தான் திடீரென்று மாயமாகி விட்டால் பொருளாதார காரணங்களுக்காக அன்றி யாருக்கும் அது தெரியக் கூட செய்யாது, தனக்கும் அது பாதகமில்லை என்று தோன்றியது. சுற்றி வருகையில் உள்ளே இன்னும் பிரியா சறுக்கிக் கொண்டிருப்பது தெரிந்தது, பக்கங்களைக் கைகளால் பற்றியபடி.

பிரியா யாரோ போல் தெரிந்தாள். அவளிடமிருந்து அவனை நோக்கி பிரத்யேகமாக எதுவும் நிகழவில்லை. அந்த வட இந்தியக் குழந்தைகள் போன்றே அவளும் யாரோ. அவளுக்கும் தனக்கும் தனிப் பட்ட உறவு ஏதுமிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. இப்படியே அவளை விட்டு விட்டு எல்லாவற்றையும் விட்டு விட்டு நடந்து கூடப் போய் விடலாம். அதனல் பாதகம் இல்லை. அது ஒரு பொருட்டு இல்லை. தான் ஒரு போதும் அது போல் செய்யப் போவதில்லை என்றாலும் அது ஒன்றும் செயற்கையாகவோ துக்ககரமானதாகவோ பாவமாகவோ வக்கிரமாகவோ அவனுக்குத் தோன்றவில்லை.

பிரியா யாரோ கோடி கோடி யாரோக்களில் ஒருத்தி. தான் போய் விட்டால் அது என்ன செய்யும்? கஷ்டப்படும். வீட்டிற்குப் போக அதற்குத் தெரியாது. விலாசமும் தெரியாது. ஆனால் இவற்றையெல்லாம் காரணமாகக் கொண்டு சேர்ந்து வாழ்வது மீண்டும் கடமையைத் தவிர வேறென்ன?

இந்த எண்ணம் ஏற்படுத்திய திகைப்போடு அதை மறுதலித்து அவன் மீண்டும் உள்ளே விளையாட்டுத் திடலுக்குள் வந்தான். சறுக்கு மரத்தை நெருங்கினான். அதன் உச்சியிலிருந்து பிரியா சறுக்கிக் கொண்டு வந்தது. இப்போது பக்கங்களைப் பிடிகாமல், கைகளை உயர்த்தியபடி. தரையை அடைந்ததும் ‘ஜிங்’கென்று எழுந்து நின்று அவனைப் பார்த்து வெற்றிகரமாகச் சிரித்தது.

“போலாமா” என்றதும் ‘இன்னொரு வாட்டி’ என்று கேட்காமல் செருப்பை அணிந்து கொண்டு தலையை ஆட்டிக் கொண்டு கிளம்பியது. அவனுக்கு என்ன தோன்றியதோ அதைத் தூக்கிக் கொண்டான். தூக்குவதற்கான குழந்தைகளை விட அவள் உய்ரமும், வயதும் சற்று அதிகம்தான். ஆனால் அவள் ரொம்ப ஒல்லி. அதனல் கூட உயரமாகத் தெரிந்தாள். அவள் உடல் அவன் மார்பில் பாதி அகலம் கூட இல்லை. அவன் கழுத்தின் மேல் கையை மாலையாகப் போட்டுக் கொண்ட போது நான்கு வருஷத்துக்கு முன் டி.வி.எஸ். ஃபிப்டியில் முதன்முறையாக முன்னால் நிற்க வைத்துக் கொண்டு போன போது, அது சந்தோஷம் தாங்காமல் திரும்பி அவனை முத்தமிட்டது ஞாபகம் வந்தது.

வேகமாகத் துடிக்கும் அதன் இதயம் அவன் இதயத்துக்குள் துடித்தது. அவன் அதன் வலது கன்னத்தில் ஆர முத்தமிட்டான். அது வாய்விட்டு சிரித்தவாறே தலையை வளைத்து தன் இடது கன்னத்தைக் காட்டியது.

மாற்றலும், வீடு பேறும்

மாற்றலும், வீடு பேறும் (பிரசுரம் சொல்வனம்)


வ.ஸ்ரீநிவாசன்



மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. உடலில் உள்ள செல்கள் தொடர்ந்து மாறி ஒரு சமயம் மொத்தமாக அனைத்துமே மாறி விடுகின்றன. போர்ஹே “பத்து வருடங்களுக்கு முன்னால் நான் எழுதியவற்றுக்கு என்னை பொறுப்பாக்காதீர்கள். அது வேறு ஆள்.” என்றாராம்.

‘சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, யாரோ எந்த வீட்டிலிருந்தோ எங்கேயோ போய் விட்டார்கள், ஏழரை நாட்டுச் சனி,’ என்பனவெல்லாம் எனக்குப் புரிந்ததேயில்லை. பாரதி சொன்னதில் நான் கடை பிடிக்கும் ஒரு விஷயம் ஜோதிடம் பற்றி அவர் கூறியது.

ஆனாலும் இட மாற்றங்களும், வீடு மாற்றங்களும் கிரகங்களைப் போல் எனக்கும் நடந்து கொண்டேதான் இருக்கின்றன. வங்கி உத்யோகத்தில் இருக்கும் கஷ்டங்களில் இதுவும் ஒன்று. நாடோடி வாழ்க்கை. ஆனால் நாடோடிகளைப் போல் சுதந்திரமுமின்றி கூடுகளுக்கு அலைய வேண்டும்.

முதன் முதலாக மாற்றலாகி சேலம் போய் இருந்த நான்கு வருடங்களில் ஆறு வீடுகளுக்கு அட்வான்ஸ் கொடுத்து, வாடகையும் கொடுத்து இருக்கிறேன். முதல் வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டுக் குடி போக முடியவில்லை. இரண்டாவது வீட்டில் ஒரு நான்கு நாட்கள் கூட இல்லை. போய்க் குடியேறிய இரண்டாம் நாள் என் தாயாருக்கு உடல் நலம் மிகவும் குன்றி உடனே சென்னை திரும்ப வேண்டியானது.

அதன் பின் அதிகாரம் மிக்க ஒரு அரசுத் துறையாளர் வீட்டின் பின் போர்ஷனில் குடி போனோம். நான் கடைசியாகத் தேளைப் பார்த்த வீடு அதுதான். பூகோளமயமாக்கலில் காணாமல் போன ஜீவராசிகளில் ஒன்று நகர, மாநகரத் தேள்.


அந்த வீட்டில் இருக்கையில் என் திருமணம் நடந்தது. புது மருமகள் வருவதற்கு முன், வீட்டின் முன் போர்ஷன் காலியாகி, என் தாயார் முயற்சியால் நாங்கள் அங்கு குடி போய் விட்டோம். பக்கத்தில் வீட்டின் சொந்தக்காரர். தினமும் அரசு ஊழியர்கள் வருவார்கள், வீட்டு வேலை செய்ய. பூக்காரர்கள் மட்டும் பத்து பேர் வருவார்கள். ஆனால் அவர் அலுவலகத்திற்கு கிழிந்த சட்டையுடன் சைக்கிளில் போய் வருவார். அந்த வீட்டம்மாளுக்கு எங்களைப் பிடிக்கவில்லை. தம்பதியரிடையே பயங்கர சண்டைகள் நடக்கும். சண்டை என்றால் அந்தம்மாள் கத்துவார்கள். அவர் கெஞ்சுவார். இதைத் தவிர ‘ஆடட் அட்ராக்ஷன்’ அந்த வீட்டின் அரை வட்ட வடிவில் கண்ணாடி பதித்த சன்னல்களோடு மிக அழகாக இருக்கும் முன்னறையில் சில உருவங்கள், ஒலிகள் இரவில் வருவதாக என் அம்மா சொன்னார்கள். எங்கள் வீட்டு வேலைக்காரப் பெண்மணியும் அவ்வீட்டைப் பற்றிய கதைகளைச் சொல்லியிருக்கிறார். அந்த வீட்டம்மாள் அப்படி இருப்பதற்குக் காரணமும் அதுதான் என்று இருவரும் நிச்சயமாக நம்பினார்கள். ஆயினும் நாங்கள் அந்த வீட்டைக் காலி செய்ததற்குக் காரணம் அதுவல்ல. அவர்கள் வீட்டில் பொங்கிய சச்சரவுகளும் வெறுப்பும் வெளியிலும் கசிந்து எங்கள் போர்ஷனை நோக்கியும் வர ஆரம்பித்தன. என் வங்கியைச் சேர்ந்த முக்கிய வாடிக்கையாளர்கள் அந்த வீட்டைக் காலி செய்வது உசிதம் என்று அறிவுறுத்தினார்கள். எனவே நல்ல வேளையாக சிறிது ஞானக் கொள்முதலிலேயே வீடு மாறினோம்.

இப்போது வந்த வீடு புது வீடு. டவுனுக்குள் இருக்கும் வீடுதான். ஆனாலும் எதிரில் பெரிய வயல் வெளி. சொந்தக் காரர் செட்டியார். அவர் மனைவி வேறு ஜாதியைச் சேர்ந்தவர். மகள் திருமணம் ஆகி கணவனை விட்டுப் பிரிந்து வாழ்பவர். மகன். நல்லவர்கள். மரியாதை மிக்கவர்கள். ஆனால் பணத்தேவை அதிகம். அதனால் அடிக்கடி கடன் கேட்டார்கள். இந்தக் காரணத்திற்காக நாங்கள் மறுபடி வீடு மாறினோம்.

அது ஒரு வீடு கட்டும் மேஸ்திரியுடையது. அவர் இறந்து விட்டார். அவரது இரண்டு மகன்களும் வீட்டின் குறுக்கே சுவர் எழுப்பி இரண்டு முன் மற்றும் இரண்டு பின் போர்ஷன்களாக வைத்திருந்தனர். தொடர்ந்து ஆறு மாத இடைவெளியில் பின் வீட்டில் குடியேறிய குடும்பத்தின் குடும்பத் தலைவர்கள் இறந்து போனார்கள். இரண்டும் தற்கொலை என்று பின்பு தெரிய வந்தது.

மாற்றலில் சென்னை திரும்பியதும் சென்னையில் ஒரு உறவினரின் குவார்ட்டர்ஸில் மூன்று மாதங்கள் இருந்தோம். என் சொந்த ஃபிளாட்டுக்கு பின்பு சென்றோம். எண்ணி ஐந்தாம் வருடம் மாற்றலில் கல்கத்தா சென்றோம். சௌத்ரி என்பவரின் வீட்டில் ஒரு போர்ஷனில் மூன்று வருடங்கள் தங்கினோம். மீண்டும் சென்னை. சொந்த ஃபிளாட். மறுபடி ஐந்து வருடங்களில் வேலூர் சென்றோம். முதலில் ஒரு முதலியார்(பஸ் முதலாளி) வீட்டு மாடியில் தங்கினோம். வெலூர் வெயிலின் கொடுமையையெல்லாம் ஞாபகம் வைக்க முடியாதவாறு என் தாயார் மரணம் அங்கு சி.எம்.சி.யில்தான் நடந்தது. அவரது ஈமச் சடங்குகளும் மே மாதத்தில் வற்றிப் போன பாலாற்றங்கரையில்தான் நடந்தன. இரண்டாம் வருடம் வங்கியின் குவார்டர்ஸுக்குக் குடி பெயர்ந்தோம். நாயுடு ஒருவரின் வீடு. மிகப் பெரிய கனவான். என் மனைவி உடல் நலம் ஒரு சமயம் குன்றியபோது அந்த வீட்டம்மாளின் மடியில் படுக்க வைத்துக் கொண்டுதான் அவர்கள் காரில் மருத்துவரிடம் சென்றோம். பழைய ஆனால் பிரம்மாண்டமான வீடு. மழைக்கு ஒழுகும் ஓர் அறை இருந்தது. தண்ணீர் செலவானால் வீட்டின் லட்சுமி போய் விடுவாள் என்ற அச்சத்தில் எப்போதுமே தண்ணீர் சிக்கனமாகவே செலவழிப்பார்கள். அங்கிருந்து திருச்சி. கண் தெரியாத ஆனால் எமகாதகரான ஒரு பாலக்காட்டு பிராமணரின் வீட்டின் மேல் போர்ஷனில் குடி போனோம். எல்லா வசதிகளும் இருந்த அந்த வீட்டைக் காலி செய்து கோவை வரும்போது அதிகமாக ஒரு மாத வாடகையை அவர் அட்வான்ஸிலிருந்து எடுத்துக் கொண்டார். கோவையில் ஒரு நாகர்கோயில் பிராமணர் வீட்டின் மாடியில் குடி இருந்தோம். அங்குதான் என் மாமனார் திடீரென்று இற்ந்து போனார். பின்பு சென்னை ஃபிளாட்டை விற்று கோவையில் வாங்கிய ஃபிளாட்டில் குடியேறினோம். மீண்டும் சென்னை. நான்கு வருடங்கள் வெயிலும், புழுதியும் பிச்சு வாங்கிய வீட்டில் குடி இருந்தோம். இருந்த எல்லா வீடுகளுமே பெரிய விஸ்தாரமான வீடுகள்தான். ஆனால் புத்தகக் குவியல்களால் சிறியதாக ஆகிவிடுபவை. இப்போது மீண்டும் கோவையில் சொந்த ஃப்ளாட்டில் வாசம் ஆரம்பித்து இருக்கிறது.

என் தாயாருக்கு தூத்துக்குடியில் ஏழு வீடுகள் இருந்தன. அவற்றில் குடி இருந்தவர்களிடமிருந்து எப்போதேனும் வாடகையும், பெரும்பாலும் அஞ்சலட்டைகளும் வரும். “வேலை போய் விட்டது,” “தகப்பனார் காலமாகி விட்டார்,” “மகள் திருமணம் நிச்சயமாகி விட்டது,” என்று வித விதமான சேதிகள் அவற்றில் வரும். என் தகப்பனார் கர்ம சிரத்தையாக பதில் போடுவார். “வேறு வேலை சீக்கிரம் கிடைக்கட்டும்,” “எங்கள் மனமார்ந்த வருத்தங்கள்,” “நல்ல படி நடக்க எங்கள் வாழ்த்துகள்,” என்பன போன்ற வாசகங்களன்றி வாடகையைப் பற்றி ஒரு வரி இராது. ஆயினும் என் தகப்பனார் அகால மறைவுக்குப் பின் என் பெரியப்பா உதவியால் விற்கப் பட்ட அவ்வீடுகள், எங்களிடமிருந்து கைமாறியபின், பல விதங்களிலும் பொருளாதார ரீதியில் எங்களுக்குத் துணை நின்றன.

என் மாமனார் கட்டிய வீடு ஸ்ரீரங்கத்தில் இருக்கிறது. அதில் அவரது பெயர்ப் பலகையோ அல்லது வீட்டினுள் அவரது புகைப் படமோ இராது. அவரது மகள், மருமகன்(நான்), பேத்தியின் புகைப்படங்களே சுவர்களில் இருக்கும். வீட்டின் கீழ்ப்பகுதியில் குடியிருப்பவர் பொறுப்பில்தான் காம்பவுண்ட் சாவி, தண்ணீர் மோட்டார் ஸ்விட்ச் எல்லாம் இருக்கும். அவர் மரணத்தின் போது பத்து வருடங்களுக்கு முன் அங்கு குடியிருந்தவர் வந்து, சொந்தத் தகப்பனைப் பறிகொடுத்த பிள்ளை போல, கதறி அழுத போது நாங்கள் எல்லோரும் கலங்கிப் போனோம்.

-o00o-

என் வீட்டைத் தவிர என் பள்ளி நண்பன் பார்த்தசாரதியின் வீட்டில்தான் நான் அதிக நாட்கள் தங்கி இருக்கிறேன். சென்னையில் வசிக்காதபோது, சென்னை செல்லும் போதெல்லாம் அவன் வீட்டில் தங்குவேன். நான் சென்னை ஃபிளாட்டை விற்று விட்டு ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்திலிருந்து அவன் வீட்டுக்குத்தான் போனேன். இரவு ரயில். புறப்படும் முன், “சொந்த வீட்டை விற்பது கஷ்டம்தான்.
வருத்தமாகத்தான் இருக்கும்.” என்றான் ஆறுதலாக. “இல்லையே” என்று பதில் சொன்னேன். அதே போல் சுமார் நாலரை வருடங்கள் சென்னை வீட்டின் வெயிலில் தூசியில் குடி இருந்துவிட்டு இப்போது சொந்த வீட்டுக்குக் கோவை போனதும் “சொந்த வீட்டில் வாழ்கிற மகிழ்ச்சியில் எல்லாம் மறந்துவிடும்.” என்றான். அதற்கும் என் பதில் “இல்லையே,”தான். கோவையின் குளிர்ச்சியில் சென்னையில் பட்ட பாடு மறந்து விட்டது. சொந்த வீடு என்பதற்கும் அதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.

எது சொந்த வீடு. எந்த வீடு யாருக்கு சொந்தம். ஒரு விதத்தில் குடியிருப்பவருக்கு வீடு சொந்தம் என்பதில் ஓர் அர்த்தம் இருக்கிறது. அந்த வீட்டின் அனுகூலங்களையும், குறைபாடுகளையும் அன்றாடம் தவறாது அனுபவிப்பவர் என்பதால். மேலும் எல்லா வீடுகளுக்கும் அங்கு மிக அதிக நேரம் வசிக்கும், புழங்கும்
பெண்களே சொந்தக்காரர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது.

எவ்வளவோ வீடுகளில் இருந்தாயிற்று, சொந்த வீடுகள் உட்பட.

எனினும் இப்போதும், என் கனவுகளில், வயது அற்ற நான் என் தற்போதைய, புதிய, பழைய, உறவு, நட்பு வட்ட மற்றும் தெரிந்த , தெரியாத மனிதர்களோடு உலவுவது சென்னையில் பிறந்ததிலிருந்து இருபத்தேழு வருடங்கள் வாழ்ந்த வாடகை வீட்டில்தான்.

“முட்டாள்கள் வீடுகளைக் கட்டுகிறார்கள்; அறிவாளிகள் அவற்றில் வசிக்கிறார்கள்” என்று ஒரு பழமொழி இருக்கிறதே. கு.அழகிரிசாமியின் “யாருக்கோ கட்டிய வீடு” கதையைப் படித்துப் பாருங்கள். கிரீஷ் காசரவள்ளியின் ‘மனே’ படத்தைப் பாருங்கள். சொந்த வீடு என்னும் சொப்பனங்கள் கலைந்து போகும். மழை தாக்காது, வெயில் நேரடியாக வேகாது நம்போன்று வாழ்பவர்கள் அதிருஷ்டசாலிகள். கோடானு கோடிப் பேர் ஒவ்வொரு மழையிலும் ‘பிரளய’த்தை சந்தித்து, வெயிலில் ‘கல்நார்’ கூரைகளின் கீழ் வெந்துபோய் வாழ்கிறார்கள். கோடிக் கணக்கான ரூபாய்களில் புரண்டு ஐந்து, ஆறு, ஏழு நட்சத்திர வாழ்க்கையை அனுபவிக்கும் அரசியல்வாதிகள் கண்களுக்கு அவர்கள் துயரம் எங்கே தெரியும்; அரசியல்வாதிகளுக்கு அவர்கள் வெறும் துடைத்துப் போடும் காகிதங்கள்தானே. பதிலுக்கு அவர்கள் துடைத்துப் போடும் காகிதம் வாக்குச் சீட்டு.

-o00o-

ஜே.க்ருஷ்ணமூர்த்தி ஒருவரின் அழைப்பின் பேரில் ஒரு முறை பம்பாய் சென்றிருக்கிறார். விமான நிலையத்திலேயே அவர்கள் இல்லை. ஒருவாறு அவர்கள் வீட்டை அடைந்த போது அக மகிழ்ந்து வரவேற்றிருக்கிறார்கள். வீட்டுத் தலைவரும் தலைவியும் சாப்பிடாமல் பேசிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். பள்ளி சென்றிருக்கும் தங்கள் மகளும் வந்து விடட்டும், க்ருஷ்ணமூர்த்தியோடு சேர்ந்து உணவருந்த அவள் பெரிதும் விரும்புவாள் என்று சொல்லி மேலும் காத்திருப்பு. இறுதியில் அந்தப் பெண் வந்ததும் அவளும் உற்சாகத்தோடு மேலும் பேசிக் கொண்டு இருந்திருக்கிறாள். நேரம் போனதைப் பற்றி, க்ருஷ்ணமூர்த்தி இன்னும் சாப்பிடவில்லை என்பது பற்றி, அவர்கள் உணரவேயில்லை. பேச்சின் ஊடே அச்சிறுமி “எவ்வளவோ ஊர்கள், நாடுகள் பார்த்திருக்கிறீர்கள், உங்களுக்கு மிகவும் பிடித்த இடம் எது” என்று கேட்டதும், க்ருஷ்ணமூர்த்தி, அவளிடம் அன்போடு: “இங்கேதான் (here)” என்றாராம்.

க்ருஷ்ண மூர்த்தி நிரந்தரமாக எங்கேயுமே தங்கியதில்லை. ஒரு வருடத்தில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து முதலிய நாடுகள் ஒவ்வொன்றிலும் ஒரு சில மாதங்கள் இருப்பதே வழக்கம். ஒரு முறை ஓர் இந்தியர் அவரிடம், “நீங்கள் ஓர் இந்தியர், அதனால் இந்தியாவில்தான் தங்க வேண்டும். அதுதான் சரி” என்றதும் அவர் சொன்ன பதில்: “என் வீடு இந்த உலகத்தில்” (“My home is in this world”).

நம்மனைவருக்குமே அப்படித்தான், இல்லையா?

ஓரு அந்தக் காலத்துக் காதல் கதை

ஓரு அந்தக் காலத்துக் காதல் கதை (பிரசுரம் சொல்வனம் 22-01-10)


வ.ஸ்ரீநிவாசன்.



தமிழ்வாணன் மாடியிலிருந்து இறங்கி வருகையிலேயே எதிர் வீட்டு வாசலில் பூஷணம் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து விட்டான். நல்ல வேளையாக கம்பிகளுக்குப் பின்னால் திண்ணையில் மீசைக்காரரைக் காணோம். அகம் நிறைந்து முகம் மலர சிரித்தான். பூஷணம் முகத்திலும் புன்னகை. யாராவது பார்த்து விட்டால்… என்று உறைந்த சிரிப்போடு நடக்க ஆரம்பித்தான்.

தமிழ்வாணன் சராசரி உயரம். எண்ணை போட்டு கர்லிங் பண்ணிக் கொண்ட கிராப். பென்சிலால் வரைந்தது போல் சரியாக வெட்டப் பட்ட மீசை. வெள்ளைச் சட்டை. பேன்ட். செருப்பு. கையில் டிபன் பாக்ஸ் பை.

நாலு வீடு தள்ளி தெரு முனையில் இருந்த பிள்ளையார் கோவிலில் நின்று தோப்புக் கரணம் போடுவதைப் போல் திரும்பிப் பார்த்தான். பூஷணம் அங்கேயேதான் அவனைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தாள். அவன் கண்களுக்கு அவள் டி. ஆர். ராஜகுமாரி, வைஜயந்திமாலாவையெல்லாம் மிஞ்சி விட்டாள். உண்மையில் அவள் ஒல்லியாக, கச்சலாக, கருப்பாக இருந்தாள். ஆனால் ஒளி மிகுந்த கண்கள். கருப்பான பெண்களுக்கு பெரும்பாலும் அமைவது போன்ற நீண்ட கூந்தல். நெற்றியில் புரளும் கற்றை மயிர். பாவாடை, தாவணி கட்டிய பதவிசிலேயே அவள் சமர்த்து தெரிந்தது.

பிள்ளையார் கோவிலுக்கு எதிர் வீட்டைப் பார்த்தான் தமிழ். பூஷணத்தின் உயிர்த்தோழி ஒரு அய்யங்கார் பெண் அங்கு குடி இருந்தாள். திருமணமான பெண். குழந்தைகள் இல்லை. அவள் வீட்டுக்காரர் அரசாங்க உத்தியோகஸ்தர். காலையில் ஆபீஸ் போனால் இரவுதான் வருவார். சிநேகிதிகள் பல நாள் யாரோ ஒருவருடைய வீட்டில் சேர்ந்து இருப்பார்கள்.

பூஷணத்திற்கு வீட்டு வேலை அதிகம். மீசைக்காரரின் மூத்த பெண் அவள். இரண்டு தங்கைகள், ஒரு தம்பி, அப்பா, அம்மா, மாமா. அப்பாவின் மண்டி நஷ்டம் ஆகி அவரது நாலைந்து வீடுகளின் வாடகையில் வண்டி ஓடுகிறது. மாமா அச்சாபீஸ் வைத்திருந்தார். கல்யாணம் பண்ணிக் கொள்ளவில்லை. உப தொழில் நாட்டு வைத்தியம். அம்மாவுக்கு உதவி என்ற பெயரில் வீட்டு நிர்வாகம் பூஷணத்திடம். எனவே அவள் சிநேகிதி அங்கு இருக்கும் நாட்கள் அதிகம். அவள் பெயர் சுலோச்சனா.

தமிழ் பார்த்த போது சுலோச்சனாவைக் காணோம். அவளிடமும் தமிழ் பேசியதே இல்லை. எனினும் அவள் பூஷணம் மனதில் இருந்ததை அறிந்தவள் என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது.

தமிழ் பி.ஏ. முடித்ததுமே வீட்டருகில் இருந்த பள்ளியில் ஆறாவது வகுப்பு வாத்தியார் வேலை கிடைத்தது. அவன் பள்ளியில் ஒன்று வேட்டியைப் பஞ்சகச்சமாக அணிந்து வர வேண்டும் அல்லது பேன்ட். அதனாலேயே புதிதாக பேன்ட் போட ஆரம்பித்தான். ஒரு ஸைக்கிளும், பேன்ட்டின் அடிப் பாகத்தில் கால்களை ஒட்டிப் பிடிக்குமாறு வளையங்களையும் (பேன்ட் சக்கரத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க) வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்குள் ஸைக்கிளில் அவன் பின்னால், முன்னால் பூஷணம் பயணம் செய்ய ஆரம்பித்து விட்டாள்.

-o00o-

பூஷணம் கலங்கிய கண்களோடுதான் ‘வா சுலோ’ என்று சொன்னாள்.

‘என்னாச்சு’

‘வீட்ல தமிழ் விஷயத்தைச் சொல்ல வேண்டிய நேரம் வந்துட்டுது.’

‘ஏன் மாப்பிள்ளை பார்க்கறாளா மறுபடியும்’

மண்டியின் நஷ்டத்துக்கப்புறம் கொஞ்ச நாள் கல்யாணப் பேச்சு இல்லாமல் இருந்தது.

‘சொல்லு பூஷணம்’

‘ஆமா’

‘பணம் கிடைச்சுடுத்தா. செலவுக்கு என்ன பண்ணுவார் உங்கப்பா’

‘செலவே இல்லாத கல்யாணம்’

‘என்னது?’

‘மாமாவுக்கே கட்டி வைக்கப் போறாங்களாம்’

‘யார் அந்த ஏணிக்கா?’

எத்திராஜை அவர்களிருவரும் ஏணி என்றுதான் சொல்வர்கள். ஆறடிக்கு குறையாமல் ஒல்லியாக நெடு நெடுவென்று இருப்பான்.

பூஷணத்தின் கண்ணீர் தமிழ் பற்றியா? அல்லது இருவது வயது அதிகமான மாமனைப் பற்றியா? இல்லை இரண்டுமாகத்தான் இருக்கும்.

குடும்பம் பணக் கஷ்டத்தில் இருக்கையில் எத்திராஜ் கையை நாட வேண்டி வந்ததும் அதுவரை இருந்த சுதந்திரம் பறி போய் விட்டது. அரசல் புரசலாக இந்தப் பேச்சு முன்பும் எழுந்தாலும் மீசைக்காரர் அந்த ‘திருட்டுப் பயலு’க்கு தன் மகளைக் கட்டித் தர தயாராயில்லை. அதற்கு எந்தக் காரணத்தையும் விட மச்சினன் என்ற இளக்காரமே முக்கிய காரணம். இப்போ மச்சினன் கை ஓங்கி விட்டது. மீசைக்காரரிடம் பாக்கி இருந்ததும் தொங்கும் நரைத்த சீப்பு மீசையும் எதைப் பார்த்தாலும் எரிச்சலும்தான்.

‘தொத்தா என்ன சொல்றாங்க?’ என்று கேட்டாள் சுலோ. பூஷணத்தின் அம்மாவைத்தான் அப்படி அழைப்பாள், அந்த வீட்டில் பலரும் அழைப்பதைப் போல.

‘தொத்தாவுக்கு அடி வாங்கத் தெம்பில்லை………. அப்பா கிட்டே நீதான் பேசணும்’

மீசைக்காரர் சுலோவிடம் மரியாதையாகவும், அன்பாகவும்தான் இருந்தார். தொத்தாவும் அவளைத் தன் இன்னொரு பெண்ணாகத்தான் பாவித்தாள். அதுவும் சுலோ பெற்றோர் இல்லாத கூடப் பிறந்தவர் இல்லாத பெண் என்பதால் தொத்தாவிற்கு அவளிடம் வாஞ்சை அதிகம்.

சுலோவுக்குத் தூக்கி வாரிப் போட்டது, கூச்சமாக இருந்தது, பயமாகவும் இருந்தது.

இருந்தாலும் ‘சரி’ என்றாள். ஏணியை நினைத்தால், இதைச் சொல்ல வேண்டும் என்ற உத்வேகமும் கூடவே பயமும் அதிகமாயின.

-o00o-

தமிழ் இதுவரை பூஷணத்திடம் பேசியதில்லை. கடிதப் பரிமாற்றங்கள் மூன்று, நான்கு முறை நடந்தது, அகல் விளக்கு மாடம் வழியாக. அவன் அவள் கலங்கிய கண்களைப் பார்த்ததும் பயந்து போய்விட்டான். அவனுக்கும் அவள் அப்பாவின் மீசை மீதும் மாமனின் உயரத்தின் மீதும் பயம் உண்டு. ஆனால் தன் அப்பா நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நினைத்தான்.

அவன் அப்பா எடுத்த எடுப்பிலேயே நம்ப ஜாதி என்ன அவங்க ஜாதி என்ன, நம்ப தெய்வம் என்ன அவங்க தெய்வம் என்ன என்று ஆரம்பித்து நம்ப அந்தஸ்து என்ன அவங்க அந்தஸ்து என்ன என்று வந்து நின்றார். தமிழின் அம்மா இராமலிங்க சுவாமிகளின் குடும்பத்துக்கு தூரத்து உறவு. மீன் என்று சொன்னால் வாந்தி எடுத்து விடுவாள். ஆனாலும் தன் ஒரே மகனுக்காக அவன் சந்தோஷத்துக்காக எதையும் செய்யச்
சித்தமாயிருந்தாள். கணவரையும் அவள் ஆதியோடந்தம் அறிவாள். அவர் மனசின் பாசம் எப்பேற்பட்ட ஊற்றினது என்பது அவளுக்குத் தெரியும்.

-o00o-

சுலோவும், சுலோவிடம் தன் சொந்தப் பெண்களிடம் போலவே, ஏன் அதற்கு மேலும் அன்பு கொண்டாடிய தொத்தாவும் மீசைக்காரரையும், தமிழின் தாயார் அவன் தகப்பனாரையும் கெஞ்சி, விவாதம் செய்து, காலில் விழுந்து அந்தக் காதல், கல்யாணத்தில் நிறைவேறுவதை சாத்தியமாக்கினார்கள்.

-o00o-

இந்த முடிவு என் மனசுக்குகந்த, என் மறைந்து போன தாயாரின் தீராத மனக் குறைகளில் ஒன்றிற்கு இதமளிக்க வேண்டி நான் கற்பனை செய்த, முடிவு.

எனக்கு பனிரெண்டு வயதாகையில் தொத்தா பாட்டி எங்கள் சமையலறை வாசற்படியில் அமர்ந்து கொண்டு அம்மா கொடுத்த எதையோ சாப்பிட்டுக் கொண்டு இருக்கையில் கதறி அழுததைப் பார்க்க நேர்ந்த அன்று இரவு அம்மா சொன்னாள்.

‘இவளும்தான் சேர்ந்துண்டு என் பூஷணத்தைக் கொன்னா”

அம்மா மீசைக்காரரிடம் பேசியபோது அவர் ‘நீ உண்மையிலே என் பொண்ணுன்னா இப்படிப் பேசுவியா? இல்லே பூஷணம் உண்மையிலே உன் கூடப் பிறந்தவள்னா இப்படிப் பேசுவியா’ என்று கேட்டு விட்டு தன் வீட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று கறாராகச் சொல்லி விட்டார்.

தமிழின் குடும்பத்தில் என்ன நடந்தது என்ற விவரம் இல்லை.

மூன்றே மாதத்தில் பூஷணம் இறந்து போனாள். மூன்று மாதம் அவள் சாப்பிடவே இல்லையாம். படுக்கையிலேயே கடைசி ஒரு மாதம் கிடந்திருக்கிறாள்.

ஆனால் அவள் செத்த அன்று பாடையில் வைத்துத் தூக்கிப் போகையில் தெருவில் தமிழ் எதிர் வீட்டு மாடியிலிருந்து ஓடி வந்து தோளில் பாடையைச் சுமந்து கொண்டானாம். மீசைக்காரரோ, எத்திராஜோ, தமிழின் அப்பாவோ ஸ்தம்பித்துப் போய் ஒன்றுமே சொல்லவில்லையாம். சுடுகாடு வரை தோள் மாறாமல் அவனே போயிருக்கிறான். வந்ததும் அவன் குடும்பம் ஒரே வாரத்தில் ஊரை விட்டே போய்
விட்டார்களாம்.

அம்மாவின் வார்த்தைகளில் இதை நினைக்கையில் தமிழ் இறங்கி வந்து ஒரு வார்த்தை கூடப் பேசியறியாத பூஷணத்தின் பாடையின் ஒரு மூங்கில் கழியைத் தோளில் சுமக்கும் சித்திரம் கண்களின் நீருக்கடியில் தோன்றுகிறது.

எவ்வளவோ முறை தொத்தா பாட்டியும் என் அம்மாவை அக்கா என்று அழைக்கிற தொத்தாவின் இரண்டு பெண்களும் மகனும் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். என் முன்னால் பூஷணம் பற்றி யாரும் பேசியதே இல்லை. எனக்கு அவர்களைப் பார்க்கையில் வேறெதுவும் நினைவுக்கு வந்ததே இல்லை.

Tuesday, January 19, 2010

பிரமிள் (1939-1997)

பிரசுரம் : உயிரெழுத்து

வ.ஸ்ரீநிவாசன்

திரு. பிரமிள் அவர்களோடு பழகும் சந்தர்ப்பம் எனக்கு திரு. டேவிட்
சந்திரசேகர் மூலமாக நேர்ந்தது. எழுபதுகளின் மத்தியில் என் நண்பர் திரு
எஸ். பார்த்தசாரதி தன்னுடன் பணி புரிந்து வரும் (சிண்டிகேட் வங்கி)
டேவிட் சந்திரசேகரை எனக்கு அறிமுகம் செய்தார். இலக்கியம், ஆன்மிகம்,
சினிமா மற்றும் இதர கலைகளில் எனக்கும் டேவிடுக்கும் இருந்த ஒத்த ஆர்வம்
எங்கள் நட்பை வளர்த்தது.

டேவிடும், அவர் நண்பர்கள் திரு. ஜெயபாலன் மற்றும் திரு. மணி (இவர்கள்
இருவரையும் நான் சந்தித்ததே இல்லை; இவர்கள் அப்போது சென்னையில் இல்லை)
ஆகியோரும் திரு. வெங்கட் சாமிநாதனின் கட்டுரைகளைப் புத்தக வடிவில் கொண்டு
வர விரும்பினார்கள். இதன் நிமித்தம் திரு. சி.சு. செல்லப்பா அவர்களை
டேவிட் சந்தித்த போது நானும் உடன் சென்றேன். (செல்லப்பா அவர்கள் இருந்த
அதே தெருவில்தான் நானும் இருந்தேன்.) புத்தக உருவாக்கத்தில் சி.சு.செ.
பெரிதும் உதவினார். 'பாலையும் வாழையும்' வெளி வந்தது.

இது நடந்து கொண்டு இருக்கும்போதே அடுத்து திரு. தருமு சிவராமு (பிரமிள்)
வின் கவிதைத் தொகுப்பை அச்சில் கொண்டு வர வேண்டுமென்று அவர்கள் (டேவிட்
மற்றும் அவர் இரு நண்பர்கள்) விரும்பினார்கள். "வெ.சா.வும் சிவரமுவும்
சி.சு.செ.வின் இரண்டு மகன்கள்; சிவராமுவே "prodigal son" என்று டேவிட்
கூறுவார். டேவிடுக்கு பிரமிளை சந்திப்பதில் கொஞ்சம் தயக்கம் இருந்தது.
என்னையும் உடன் வரச் சொன்னார். 'அவர் மிகவும் விசித்ரமாகவும், எதிர்
பார்க்க முடியாத விதமாகவும் பழகுவாராம். எனக்கு சந்திப்பதற்கு அச்சமாக
உள்ளது.அவரிடம் ரொம்பக் கவனமாகப் பேச வேண்டுமாம். அதுவும் மௌனியைப்
பற்றி குறை எதுவும் கூறிவிடக் கூடாதாம். நீங்களும் வாருங்கள்" என்று
டேவிட் என்னை அழைத்தார்.

நாங்கள் பிரமிளை பெஸன்ட் நகரில் முதன் முதலில் சந்தித்தோம். அவர் ஒரு
மிகச் சிறிய அறையில் குடி இருந்தார். அந்த அறையும், சூழ் நிலையும் அவர்
வாழ்ந்து வரும் கடின வறுமை நிலையைக் காட்டின.

மிகவும் unconventional லாக இருந்த போதிலும் அவர் எங்களிடம் நட்பாகவே
பேசினார். அவர் பேசிய விதம் சென்னை வாசிகளான எங்களுக்கு மலையாள, தென்
தமிழ் நாட்டு பாதிப்போடு  அவர் பேசுவது போலத் தோன்றியது .(அது முற்றிலும்
சரியல்ல) இடுப்பில் ஒரு துண்டு கட்டியிருந்தார். குத்திட்டுக் கொண்டு
பேசினார். ஒரு பெட்டியில் நிறைய புத்தகங்களிருந்தன.

'தமிழ் நாட்டில் ஆறே ஆறு பேர்தான் கலகக்காரர்கள்" என்று கூறினார்; பாரதி,
புதுமைப்பித்தன், க.நா.சு., சி.சு.செ., வெ.சா., மற்றும் தான் என்றார்.
(இந்த ஜாபிதா இரண்டே வருடங்களில் தேய்ந்து கட்டெறும்பாகி விட்டது.)

இதன் பின்னர் இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவரை சந்தித்து அவர்
பேசுவதைக் கெட்கும் சந்தர்ப்பம் அடிக்கடி வந்தது. டேவிட் அவரைத் தன்னால்
முடிந்தவரை பார்த்துக் கொண்டார். என் வீட்டிற்கு டேவிட் வாரத்திற்கு
இரண்டு அல்லது மூன்று முறை வந்து கொண்டிருந்த காலம் அது. பிரமிளும்
அடிக்கடி வந்தார்.

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பும், அவர்
பேச்சுக்களையும் சம்பாஷணைகளையும் நேரில் கேட்கும் பேறும் அறுபதுகளின்
இறுதியிலும், எழுபதுகளின் ஆரம்பத்திலுமிருந்தே எனக்குக் கிட்டியதால்
பிரமிளுக்கு ஜே. கிருஷ்ணமூர்த்தியிடமிருந்த ஈடுபாடு எங்களுக்கு ஒரு பொது
ஆர்வமாக இருந்தது. ஜே. கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்புகளை பிரமிளைப்
போல் யாரும் செய்ததில்லை என்றே எண்ணுகிறேன். பகவான் ரமணர் மீதும்,
காஞ்சிப் பெரியவர் (சந்திரசேகரேந்திர சரஸ்வதி) மீதும் அவர் மதிப்பு
கொண்டிருந்தார். எனினும் ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர் எண்ணங்களிலும்
எழுத்துகளிலும் மிக மிக அதிகமாகவும் முக்கியமாகவும் வியாபித்திருந்தார்.

அவர் பேசுகையில் இயல்பாக அவருடைய ஆழ்ந்த அகன்ற படிப்பும் brillianceஸ§ம்
தென்படும். மிக பலமான அபிபிராயங்கள் கொண்டிருந்த போதும் உரத்தோ
சப்தமிட்டோ அவர் பேசி நான் பார்த்ததில்லை. முழு நீள டெரிலின் சட்டையை
பேன்ட்டில் இன் செய்து கொண்டு வருவார். ஒரே உடையை பல நாட்கள் அணிய
வேண்டிய நிலையிலேயே அவர் இருந்தார்.

தன் சிறு பிராயம் பற்றியும், தாயார், தகப்பனார் பற்றியும் மிகச் சில
சமயம் சொல்லுவார். வேடிக்கையும், ஹாஸ்யமும் புத்தி கூர்மையும் நிரம்ப
பேசுவார். சில சமயம் கோபமும் எரிச்சலுமாயிருப்பார். எப்பேற்பட்ட
நிலையிலும் பணம் வேண்டும் என்று வாய் திறந்து கேட்டதில்லை. டேவிட்
வீட்டில் நடந்த கல்யாணத்திற்குச் சென்று வந்த பிறகு 'அங்கு நன்றாக
சாப்பிட்டேன் உடனே எக்ஸர்சைஸ் செய்து எல்லாவற்றையும் பலமாக மற்றிக்
கொண்டேன்' என்று குழந்தை மாதிரி சொன்னார்.

அவர் சொல்லியே jorge louis borgess,  Nabokov  போன்றவர்களை நாங்கள்
படிக்க ஆரம்பித்தோம். (ஆனால் தாஸ்த்யவ்ஸ்கி பற்றியோ டால்ஸ்டாய் பற்றியோ
அவர் பேசியதாக ஞாபகம் இல்லை.) Borgess பற்றி மௌனிதான் அவரிடம் முதலில்
சொன்னார் என்றும் சொல்லியிருக்கிறார்.

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சரிதம், மேரி லூட்யென்ஸ் எழுதியது, முதல் பகுதி
அப்போது வெளி வந்தது. அதை வாங்குமளவுக்குப் பணம் இல்லாததால் சர்மா என்ற
ஒருவரிடம் அதை வாங்கிப் படித்து அதற்குக் கட்டணமாக ஒரு தொகை கொடுத்தேன்.
பிரமிளும் அதை படித்திருந்தார். ஹரிஜன ஆலயப் பிரவேசம் பற்றி
கிருஷ்ணமூர்த்தி கூறிய மொழிகளை(1) சிலாகித்து நான் டேவிடிடம்  சொல்லிய சில
நிமிடங்களிலேயே பிரமிளும் வந்து அதைப் பற்றிக் குறிப்பிட்டு  மிக
உயர்வாகச் சொன்னது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி. திரு சர்மா பற்றிக்
குறிப்பிடுகையில் 'அவருக்கு என் மேல் பிரியம்" என்றவர் "அவருக்கு எல்லார்
மீதும் பிரியம்" என்று முடித்தார்.

சா. கந்தசாமி, ஞானக் கூத்தன், சுந்தர ராமசாமி, அசோக மித்திரன் மீதேல்லாம்
அவருக்கு இலக்கிய ரீதியான மரியாதை இல்லை. ஜெயகாந்தன் மீதும் அப்படியே.
வானம்பாடிகள், கம்யூனிஸ்ட்கள் என்று அந்தப் பட்டியல் நீளும். 'சோ' வின்
துக்ளக்கில் சில இடங்களை ரஸித்துப் படிப்பார். அப்படிப் படிக்கையில் வாய்
விட்டு பல முறை சிரித்து நான் பார்த்திருக்கிறேன். 'மெகனாஸ் கோல்ட்' அவர்
விரும்பி மீண்டும் பார்த்த படம். அதே போல் 'பொல்டெர்ஜிஸ்ட்' படம்
டெலிவிஷனுக்கெதிரான படம் என்று கூறுவார்.

அவர் கவிதைத் தொகுப்புக்கு 'கைப் பிடியளவு கடல்' என்ற தலைப்பைத் தந்து,
அதற்கு அட்டைச் சித்திரத்தையும் அவரே வரைந்து தந்தார். செல்லப்பாவும்
பிரமிளும் பேசாதும், சந்திக்காதும் இருந்த போதும் அந்தப் புத்தக
உருவாக்கத்திலும் செல்லப்பா பெரிதும் உதவி செய்தார். பிரமிளும்
செல்லப்பவிற்காகவே "ஒரு பாப்பாத்தி நகத்தோடு என் பறை நகம் மோதி.." என்ற
கவிதை வரிகளை " ஒரு உயர் ஜாதிக்காரி நகத்தோடு என் பறை நகம் மோதி.." என்று
செல்லப்பா அதைப் படிப்பதற்கு முன்பே மாற்றிக் கொடுத்தார். முதலில் அந்த
கவிதைத் தொகுப்பை செல்லப்பாவிற்கே சம்ர்ப்பணம் செய்யலாமா என்று
யசித்தார். அது மிகவும் பர்சனலாக இருக்குமோ என்றே தன் தாயாருக்கு அதை
சமர்ப்பித்தார். புத்தகம் வெளி வந்ததும், பிரமிளுக்கு அதன் அட்டை
பிடிக்கவில்லை. "ஜோஸியப் புத்தகம் போலிருக்கிறது" என்று சொன்னார்.

ந்யூம்ராலஜியிலும், இதர ஜோஸிய விஷயங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்
மேலேயே பல பரிசோதனைகளைப் பண்ணிக் கொண்டார். அவர் பெயர் பல மாற்றங்களை
அடைந்ததற்கு இதுவே காரணம். அவர் நண்பர்களில் பலரும் பெயரை மாற்றிக்
கொண்டமைக்கும் இதுவே காரணம். நாரணோ ஜெயராமன் என்பது கூட இதனால் என்று
நினைவு. டேவிட் சந்திரசேகர் 'தாவிதோ சந்துரு' வானதற்கு இவரே காரணம். என்
பெயரை ஆங்கிலத்தில் எழுதும்போது ஒரு 'எஸ்' கூடச் சேர்த்துக் கொள்ளச்
சொன்னார். இல்லையேல் மிகுந்த  'பணச் சிக்கல்' வரும் என்றார். இதை
சாதாரணமாகச் சொன்னாரே அன்றி கட்டாயப் படுத்தவில்லை. எனக்கு
இவற்றிலெல்லாம் நம்பிக்கையில்லாத காரணத்தால் நான் மாற்றிக் கொள்ளவில்லை.

சி.சு.செ. வைச் சந்திக்காமலிருந்த காலம். ஓரு நாள் அவர் வீட்டுக்குப்
போய் விடலாம் என்று முடிவு செய்து  உள்ளே நுழையப் போனவர் படி ஏறும் முன்
பிளாட்பாரம் தடுக்கியதால், போக வேண்டாம் என்று திரும்பி விட்டார்.

தியசாபிகல் சொசைடி, ஜே.கே. ஸ்டடி சென்டர், கன்னிமாரா என்று பல
நூலகங்களிலும் புத்தகம் படிப்பார். நபகொவின் ஒரு புத்தகம் (இடா) என்னிடம்
இருப்பது கண்டு அதை வாங்கிக் கொண்டார். பெர்க்மனுடைய 'ஃபோர் ஸ்க்ரீன்
ப்ளெஸ்" அவரிடமிருந்தே வாங்கி நான் படித்தேன்.

ஏப்ரல் 20 அவரது பிறந்த தினம் (1939). ஏப்ரல் 20தான் ஹிட்லருக்கும்
பிறந்த தினம் என்பது அவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். ஒருவருடைய
நெற்றி மற்றும் மூக்கின் அமைப்பு, கைரேகை போன்றவற்றுக்கும் அவரது
வாழ்க்கைக்கும் சம்பந்தம் இருப்பதாகக் கூறுவார். (கிருஷ்ண மூர்த்தியின்
நெற்றியிலிருந்து பள்ளம் இல்லாமல் நேர்க் கோடாக இறங்கும் மூக்கை விசெஷத்
தன்மையது என்பார்) ஓருவர் முகத்தைப் பார்த்தே தன்னால் அவர் என்ன
நினைத்துக் கொண்டிருக்கிறார் என்பதைச் சொல்ல முடியும் என்பார். தனக்கு
'மைண்ட் ரீடிங்க்" தெரியும் என்று அவர் கூறியதைக் கேட்ட என் தாயார்
அவருக்கு அமானுஷ்ய சக்தியெல்லாம் இருக்கும் என்று நம்பினார்.

ஒரு அதீத செல்லம் கொடுக்கப் பட்ட குழந்தையின் மனப் பான்மை (pampered &
spoiled child) அவருக்கு இருந்தது. ஆனால் அவர் ஒரு போதும் பணம்
உறிஞ்சுபவராகவோ, தன்மானத்தை விட்டவராகவோ இருந்ததில்லை. சிறு சிறு பண
உதவிகளைக் கூட தான் எழுதிய புத்தகங்களை அவை வெளி வருகையில் பணம் வாங்கிக்
கொள்ளாமல் கொடுத்து அவர் சரி செய்திருக்கிறார்.

சில சமயம் சில விஷயங்களைப் பற்றி மிகவும் அற்புதமாக வர்ணித்துக்
காட்டுவார். சில சம்பவங்களைக் விவரிப்பார். தன் தரப்பு வாதங்களைக்
கூறுவார். பிறகு "நான் சொன்னது எதுவுமே முக்கியமல்ல. எனக்கு இந்த
'டிராமா'தான் முக்கியம்" என்பார். நடந்து கடற்கரை அருகில் எத்தனையோ
நாட்கள் சென்றிருக்கிறோம். டேவிட் அல்லது என் தோள்களைப் பற்றியப்படி
நடப்பார்.

அவருடைய 'நட்சத்திர் வாசி' யையும், 'ஊர்துவ யாத்ரா" (பின்னால் இது 'மேல்
நோக்கிய பயணம்' என்ற பெயரில் வெளியானது) வையும் கையெழுத்துப் பிரதிகளாகப்
படிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

சங்கரரைவிட புத்தரையே அதிகம் மதித்தார். டைகர் வரதாச்சரியார் போன்றவர்களை
சிலாகித்துப் பேசுவார். கிட்டப்பாவை மிகவும் மதித்தார். அவர்
சுந்தராம்பளை மணந்து கொண்டதை ரஸித்துச் சொல்லுவார். டி.கே. ஷண்முகம்,
பகவதி நடிப்பைப் புகழ்வார். காந்தியை ஒரு ரிஷி (saint) என்பார். பெரியார்
பற்றி ஒரு கடுமையான விமரிசனம் அவரிடம் சொல்லப் பட்ட போது அதை அவர்
மறுத்தேதும் சொல்லவில்லை. பாரதியோடு இருந்த அந்நாட்களிலேயே பரதி தாசன்
நன்கு எழுதினார் என்பார்.

"சாப்பிட்டு சாப்பிட்டு தொப்பை வளர்க்கும் பிராம்மணார்த்தக்
காரர்களுக்கும் ஞானத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்" என்பார்
(பாரதி). "வெள்ளாளர்கள் பிராமணர்களை விட தாங்களே உயர்ந்தவர்கள் என்று
நம்புகிறவர்கள்". "கலப்புத் திருமணம் செய்து கொண்ட உயர் ஜாதிப் பெண்ணின்
நடத்தை சமூகத்தால் சந்தேகிக்கப் படும்" "பிராமணர்கள் மிகப் பலருக்கு
சம்ஸ்க்ருதம் என்றால் என்ன வென்றே தெரியாது ஆனால் சம்ஸ்க்ருதம் தேவ பாஷை,
அது மாதிரி வருமா என்பார்கள்" "திராவிட இயக்கக் காரர்களுக்கு பிராமணர்கள்
என்றால் பிடிக்காது. ஆனால் பிராமணப் பெண்கள் என்றால் தீராத ஆசை"
'சி.சு.செ.வுக்கு கடைசியில் எஞ்சியுள்ளது சி.மணி, சச்சிதானந்தன், மற்றும்
நான்தான். இதில் ஒருவரும் பிராமணரில்லை" - இவையெல்லாம் அவர் பேசுகையில்
ஜாதி சம்பந்தமாகப் பொதுவாகக் கூறியவை.

மற்றும் நண்பர்களிடையே பயமற்று, தயக்கமற்று  எழுத்தாளர்களடும் பிறரோடும்
ஆன தனிப்பட்ட உறவுகள் பற்றியும், தன்னைப் பற்றியும், தன்னுடைய சில
புதிரும் ஆச்சர்யமும் நிறைந்த திட்டங்கள் பற்றியும் அவர்
கூறியிருக்கிறார்..

1978ன் ஆரம்பத்தில் நான் வேலை மாற்றலாகி வேளியூர் சென்று விட்டேன்.
டேவிடும் அகால மரணம் அடைந்து விட்டார். பிரமிளோடு தொடர்பு விட்டுப்
போயிற்று. சென்னையில் இடை இடையே இருக்கையில் கிருஷ்ணமூர்த்தியின்
பேச்சுக்களைக் கேட்கச் செல்கையில் சில சமயம் அடையார் வஸந்த விஹாரில்
பிரமிளைப் பார்ப்பேன். அவரோடு இருக்கும் நண்பர்களை அறிமுகம் செய்வார்.
நான் சென்னையில் இல்லாத போதும் என் நண்பன் பார்தசாரதியிடம் தான் எழுதி
வெளி வந்துள்ள புத்தகத்தை எனக்கு கொடுக்கச் சொல்லி அளித்து இருக்கிறார்.

ஜே.கிருஷ்ணமூர்த்தியின் போதனைகள் மீது அவருக்கு ஈடுபாடு பெரிதும் இருந்த
போதும் அவருக்கு இருந்த கடுமையான அபிப்பிராயங்களும், தன்னைப் பற்றியும்
பிறர் பற்றியும் அவருக்கு இருந்த பிம்பங்களுமே அவர் விழைந்த சிருஷ்டியின்
உந்நதத்திற்கும் அதை விட ஆன்மிக மலர்ச்சிக்கும்,  தடைகளாகி விட்டனவோ
என்று அவருடைய பல பிந்தைய எழுத்துகளைப் படிக்கையில் தோன்றுகிறது.

என் பார்வையில் அவருடைய தத்துவ தரிசனங்களின் மற்றும் படைப்புத் திறனின்
உச்சமாக அது ஒரு தொகுப்பாகவே இருந்த போதினும் 'தியானதாரா' தென்படுகிறது.

1997 ஜனவரியில் அவர் காலமானார். அவர் மறைவு வெகு நாட்கள் கழித்தே எனக்கு
தெரிய வந்தது.



***********************


(1)When the reporters asked him what he thought about the untouchables
entering the temples he shocked them by the unexpected reply that
there should be no temples. (1932 - page 283, 'The Years of Awakening"
- Mary Lutyens)



வ.ஸ்ரீநிவாசன்.

***************