FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Showing posts with label சிறுகதை/. Show all posts
Showing posts with label சிறுகதை/. Show all posts

Friday, October 9, 2015

காண்பதும், கேட்பதும்

காண்பதும், கேட்பதும்

 | சொல்வனம் : இதழ் 137 | 04-10-2015
TN_Drivers_Rickshaw_Auto_India_Tamil_Nadu
“கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்” என்கிறார்கள். இந்த விசாரிப்பது என்கிற விஷயம்தான் பிரச்னை. அதற்காக, காண்பது, கேட்பது ஆகிய விஷயங்களில் பிரச்னை இல்லை என்று இல்லை. இந்த விசாரிப்பதில் யாரை விசாரிப்பது, என்ன விசாரிப்பது, எப்படி விசாரிப்பது என்று ஆரம்பத்திலேயே விவகாரம் துவங்கி விடும்.
வெளி விஷயங்களுக்கு இந்த விசாரிப்பு ஓரளவு உதவலாம். உள் விஷயங்களுக்கு நாம் யார் யாரையோ விசாரிப்பது பிரயோசனம் அற்றது. நாம் நம்மையேதான் விசாரிக்க வேண்டும்.
உலகில் உள்ள அனைத்து விவகாரங்களிலும், விஷயங்களிலும் சந்தேகம் இருந்தாலும் அவை அனைத்தும் சேர்ந்தும் நம் மீது நமக்கு இருக்கும் சந்தேகத்துக்கு இணையாக மாட்டா. உங்களைப் பற்றித் தெரியாது. என்னளவில் சொல்கிறேன்.
வெளி விஷயங்கள் பற்றி விசாரிப்பதில் அவை பற்றி கிட்டத் தட்ட தெரிந்து கொள்ளலாம்.
கோவையிலிருந்து மதுரை எத்தனை தூரம்? பஸ்ஸில் போனால் எத்தனை நேரம்? என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். மதுரைக்கு அடிக்கடி சென்று வருபவரைக் கேட்டால் கிட்டத் தட்ட சரியான தகவலே வரக் கூடும். கோவை டு மதுரை தடத்தில் பஸ் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் இன்னமும் சரியாக, துல்லியமாக, மனமிருந்தால், சொல்வார்கள்.
“எப்போ வீட்டுக்கு வர்ரீங்க?” என்கிற கேள்விக்கு, “ ஐந்து மணிக்கு” என்பவர்கள் உண்டு. “ஐந்திலிருந்து ஐந்தரைக்குள்’ என்பவர்களும் உண்டு. ஆனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் வருவார்கள். சிலர் சொல்லிவிட்டு வரமலும் போகலாம்.
சரி. இவ்வளவு பீடிகை ஏன்? இது என்ன கதையா, கட்டுரையா என்று என்னிடம் விசாரித்தீர்கள் என்றால் இது கதை என்றுதான் சொல்வேன், நம்புவதும், நம்பாததும் உங்கள் கையில்.
நான் அவ்வப்போது திருச்சிக்குப் போய் அங்கு என் மனைவியின் பூர்வீக வீட்டில் சில நாட்கள் தங்கி சில வேலைகளை முடித்துக் கொண்டு வருவதுண்டு. ஜாகை என்னவோ கோவையில். நாற்பத்தைந்து வயதிலேயே எல் ஐ சி யிலிருந்து விருப்ப ஓய்வு எடுத்துக் கொண்டு இப்போது ஓய்வு பெறும் வயது அறுபதையும் தாண்டியாயிற்று. சுக ஜீவனம். மொத்த சர்வீஸும் கோவையில் என்பதால் கோவையே தங்குமிடமாகி விட்டது. நாள் பட்ட கல்யாணம். பையன்கள் ரெண்டு பேரும் கோவையிலேயே கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்கள்.
திருச்சியில் வீட்டிலிருந்து எங்காவது போய் வர வேண்டுமென்றால் நான்கு தெரு தள்ளி அருகிலேயே ஆட்டோ ஸ்டாண்ட். ஒரு ஃபோன் பண்ணினால் 5 நிமிடத்தில் வந்து விடுவார்கள். அங்கிருந்த பல டிரைவர்களைப் பல வருடங்களாகத் தெரியும். அந்தப் பக்கமாக நடந்து போகையில் தெரிந்த டிரைவர்கள் இருந்தால் புன்னகைப்பார்கள்; வணக்கம் சொல்வார்கள்.
இந்த ஆட்டோக் காரர்கள் கோவை, சென்னையில் இருப்பவர்கள் போலன்றி கொஞ்சம் இணக்கமாக இருப்பார்கள். டவுன் பஸ்ஸிலும் நடத்துநர்கள் இன்னமும் கொஞ்சம் நட்போடு இருப்பார்கள். திருச்சி பெரிய கிராமம் போல் இன்னமும் கூட இருப்பது போல் தோன்றும். அதுவும் எங்கள் வீடு இருக்கும் இடம் அந்த சின்ன ஊருக்குள்  இருக்கும் இன்னொரு சின்ன ஊர். பல ஆட்டோ டிரைவர்களுக்கும் அங்கு வசிக்கும் பலரையும் பர்ஸனலாகத் தெரியும். ஊர்க் காரர்களுக்கும் அவர்களைப் பற்றி தெரியும். இவர்கள் என்றில்லை, மளிகைக் கடைக் காரர்கள், ஹோட்டல்காரர்கள், ரிக்ஷாக்காரர்கள், தெருவில் காய்கறி விற்பவர்கள் முதலிய பலருக்கும் ஊர்க்காரர்களோடு குசலம் விசரிக்க, தம் குடும்ப சேதி சொல்ல விஷயமும், நட்பும் இருக்கும்.
ஆட்டோ ஸ்டாண்டில் 10, 15 வருடங்களுக்கு முன்பு கொஞ்சம் ஆட்டோக்களே இருந்தன. ஊரிலேயே சில இடங்களில்தான் ஸ்டாண்ட் இருக்கும். இப்போதெல்லாம் பல்கிப் பெருகி விட்டன.
அப்போதெல்லாம் எங்கள் வீட்டுக்கு ரெகுலராக ஓட்டியவர் பெயர் க்ருஷ்ணன். அவர் லவுட் ஸ்பீக்கர் வாடகைக்கு விடுகிற குடும்பத்தைச் சேர்ந்தவர். லவுட் ஸ்பீக்கர் க்ருஷ்ணன் என்றுதான் சொல்வார்கள். சின்னப் பையன்தான். அப்போது 18, 20 வயதுதான் இருக்கும். ரொம்ப மரியாதையான பையன்.
சொன்னால் சொன்ன நேரத்துக்கு வந்து விடுவான். தான் வர முடியாவிட்டாலும் ஸ்டாண்டிலிருந்து வேறு யாரையாவது அனுப்பி விடுவான்.
ஒரு முறை ஊருக்கு வந்தபோது ஃபோன் பண்ணினால் எடுக்கவேயில்லை. அப்புறம் இன்னொரு வண்டியைக் கூப்பிட்டேன். அவர் பெயர் கருணாகரன். அவரே அப்புறம் தொடர்ந்து வந்தார். “க்ருஷ்ணன் எங்கேப்பா” என்று கேட்ட போது அவன் இப்போல்லாம் இந்த ஸ்டாண்டுக்கு வரதில்லை சார்” என்றார்.
ஒரு வருடம் இருக்கலாம். க்ருஷ்ணனை எதேச்சையாக திருவானைக்காவலில் பார்த்த போது வழக்கம் போல் கைகட்டிக் கொண்டு பேசினான். “ஜோசியர் ஒரு ரெண்டு வருஷம் வண்டி ஓட்ட வேண்டாம்னு சொல்லிட்டார் சார். அதான் ஓட்டறதில்லை” என்றான்.
அப்புறம் கொஞ்ச நாட்களில் ஒருவேளை ஒரு வருடம் ஒன்றரை வருடம் ஆகியிருக்கலாம். ஒருமுறை ஊருக்கு வந்தபோது க்ருஷ்ணனைப் பழைய ஸ்டாண்டிலேயே பார்த்தேன். இன்னும் சிவகுமார், வெங்கடேசன், ஞான சம்பந்தம் என்றெல்லாம் நிறையப் பேர் ஸ்டாண்டுக்கு வந்து விட்டார்கள்.
கருணாகரனையே நான் வாடிக்கையாகக் கூப்பிட்டேன். அவர் வர முடியாவிட்டால் யாரையாவது அனுப்பி விடுவார். வாடகையும் ஓரளவு நியாயமாக இருக்கும். க்ருஷ்ணனை விட கொஞ்சம் கம்மி என்றே சொல்லலாம். ஒரு முறை கருணாகரனைக் கூப்பிட்டபோது அவர் வேறு சவாரியில் இருந்ததால் க்ருஷ்ணனை அனுப்பினார்.
அதே ஒல்லியான கருத்த உருவம். பவ்யம்.
“என்னப்பா? காணவே காணோம்?” என்றேன்.
கையைக் கட்டிக் கொண்டு, தலையைக் குனிந்துகொண்டு கண்களைச் சந்திக்காமல், “மறுபடியும் இங்கேயே வந்துட்டேன் சார்” என்றான். அவன் வந்த வேளை கருணாகரனுக்கும் வேறு பிரச்னைகள் வந்தபடியால் மீண்டும் க்ருஷ்ணனே தொடர்ந்து வர ஆரம்பித்தான்.
ஒரு தடவை. நல்ல மத்தியான வேளை. திருச்சி கோடை. அவசரமாக மத்திய பஸ் ஸ்டாண்ட் போக வேண்டி இருந்தது. க்ருஷ்ணனுக்கு ஃபோன் பண்ணினேன். “இதோ வரேன் சார்’ என்றான்.
5 நிமிடத்தில் வண்டி வந்து விட்டது. ரொம்ப அநியாயத்துக்கு இளைத்துப் போயிருந்தான். அடர்த்தியில்லாத தாடி வேறு கன்னத்திலும், முகவாயிலும்.
வண்டியில் அமர்ந்ததும் “என்னப்பா? இப்படி எளச்சுட்டே?”என்றேன்.
“நான் க்ருஷ்ணன் இல்லங்க. அவன் பிரதர் ராஜேஷ்” என்றான்.
‘ அட, அப்பிடியே இருக்கே? அவர் வண்டியிலேயே வந்திருக்கே?”
“ஆமா சார் ! ரெண்டு பேருமா வண்டிய ஓட்றோம். காலைலே அவுரு, ராத்திரி நான். இன்னிக்கு அண்ணனுக்கு வேற வேலை வந்திருச்சு. அதான் நான் வந்தேன்”
பஸ் ஸ்டாண்ட் வந்ததும் ‘எவ்ளோப்பா?” என்று கேட்டேன். ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் பல மாதங்கள் ஆகியிருப்பதால் எல்லா டிரைவர்களிடமும் வாடகை என்ன என்று கேட்டே கொடுப்பேன். அவர்களும் பெரும்பாலும் நியாயமாகவே சொல்வார்கள்.
கையைக் கட்டிக் கொண்டு பவ்யமாக “200 ருபாய் சார்” என்றான் ராஜேஷ்.
“இருநூறா? க்ருஷ்ணன் 150 தானே வாங்குவாரு?”
“இல்ல சார் இப்போ ஏறிடுச்சு”
எனக்கு எரிச்சலாக இருந்தது. உடனே க்ருஷ்ணனுக்கு ஃபோன் போட்டேன்.
ராஜேஷ் தன் பான்ட் பாக்கட்டில் கையை விட்டு செல் ஃபோனை எடுத்து “ஹலோ’ என்றான்.
“க்ருஷ்ணா” என்றேன்.
“சொல்லுங்க சார்”
எனக்குக் குழப்பமாக இருந்தது. “க்ருஷ்ணன்தானே?”
“இல்ல சார் நான் அவுரு ப்ரதர் ராஜேஷ்”
நான் ஃபோனைத் துண்டித்தேன்.
“என்னப்பா அவன் ஃபோனை நீ வச்சுண்டு இருக்கே?”
‘ஆமா சார். இது சவாரிக்கான ஃபோன். ஆட்டோலேயிருக்கும். இதத் தவிர எங்களுக்கு தனித் தனி ஃபோன் ரெண்டு பேர்கிட்டேயும் இருக்கு”
“சரி ! இந்தா” என்று ரூபாய் 200 ஐக் கொடுத்துவிட்டு போனேன்.
அடுத்த தடவை ஊர் வந்த போது, க்ருஷ்ணனிடம் சொன்னேன் : “உன் தம்பி பஸ் ஸ்டாண்டுக்கு இருநூறு வாங்கிட்டாம்பா”
“இல்ல சார் இப்போ இருநூறுதான்” என்றான்.
அண்ணன் தம்பி தொடர்ந்து வந்தார்கள். கொஞ்சம் ரேட் ஜாஸ்திதான். ஆனால் பதவிசாக ஓட்டுவார்கள். அனாவசிய வேகம் இருக்காது.
ஒரு தரம் ஒரு சேஞ்சுக்காக சிவகுமாரைக் கூப்பிட்டேன், பஸ் ஸ்டாண்ட் போக.
எல்லா ஆட்டோக்களின் விஸிடிங் கார்டுகளும் என்னிடம் இருந்தன. எல்லா கார்ட் களிலும் ரங்கநாதர் சயனித்துக் கொண்டிருப்பார். அதே போல் ஆட்டோக்களின் முகப்புக் கண்ணாடியின் உட்புறத்தில் ரங்கநாதரின் அனந்த சயனம் நிச்சயம் உண்டு. கூடவே வேறொரு சாமி அல்லது அம்மன் துணை என்று போட்டிருக்கும். வெளிக் கண்ணாடிகளிலும், ஸீட்டின் பக்கப் பலகைகளிலும் ஒரு அஜீத்தோ, விஜய்யோ இருப்பர்கள். 15 வருடம் முன்னால் ரஜினி, கமல் படங்கள் இருந்தன.
சிவகுமார் கொஞ்சம் குண்டாகக் கருப்பாக இருப்பான். தாடி பெரிதாக அடர்த்தியாக இருந்தது. க்ருஷ்ணன் வயதுதான் இருக்கும்.
“என்னப்பா தாடி? ஏதாவது வேண்டுதலா?”
“இல்ல சார். வைஃப் ப்ரெக்னன்டா இருக்காங்க. வீட்டுல அதான் ஷேவ் பண்ணக் கூடாதுனுட்டாங்க.”
சிவகுமார் பஸ் ஸ்டாண்ட் போக 150/ தான் வாங்கினான். கொஞ்சம் வேகம் அதிகம். நான் சொல்லி விட்டேன். “எனக்கு அவசரம் கிடையாது சிவகுமார். மெள்ள நிதானமாப் போங்க.” என்று.
அப்புறம் ஒரு மாதத்துக்குள் இரண்டுதடவை போக வேண்டி ஆகி விட்டது. இரண்டு தடவையும் போய் ஒரு வாரம் தங்கியபோது சிவகுமாரையே கூப்பிட்டேன். அவனையும் பழகி விட்டது.
அப்புறம் திருச்சிக்குப் போய் 6 மாசம் ஆகி விட்டது. மேலே வீட்டில் குடி இருந்தவர்கள் காலி செய்கிறார்கள். அதனால் போய் ஒரு பத்து நாள் தங்க வேண்டி வந்தது.
வெளியில் போக வேண்டி வந்ததும் சிவகுமாரைக் கூப்பிட்டேன்.
“குழந்தை பிறந்து விட்டதா?” என்று கேட்டேன். “இல்ல சார், இன்னும் ரெண்டு மாசம் ஆகும்” என்றான். தாடியை மழித்திருந்தான். நான் ஒன்றும் கேட்கவில்லை. வண்டி கிளம்பியதும் வழக்கம்போல் கருணாகரன், வெங்கடேசன் என்று எல்லாரும் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டுக் கொண்டே வந்தேன்.
“கருணாகரனுக்குக் கல்யாணம் ஆகி விட்டது. கரூர் போயிட்டான். அங்கே இப்போ வண்டி ஓட்டறான். ஞான சம்பந்தம் காடராக்ட் ஆபரேஷன் பண்ணி ஒரு வாரமா வண்டி ஓட்றதில்லை.”
“க்ருஷ்ணன், ராஜேஷ் எப்படி இருக்காங்க?”
“ஆங்.. க்ருஷ்ணன் இருக்கான். ராஜேஷ் இல்லை” என்றான்.
அண்ணனுக்குக் கல்யாணம் ஆயாச்சு. தம்பிக்கு ஆகலை. பிரிஞ்சு போயிட்டானோ என்னவோன்னு நினத்தபடியே,
“ஏன்? எங்க போயிட்டான்?” என்று கேட்டேன்.
“இல்லங்க. அவன் இல்லை” என்றான்.
“என்னப்பா சொல்றே?”
“உடம்பு சரியில்லாம இருந்தான். வீட்டிலேயே இருந்தான். இப்போ இல்லை”
மேற்கொண்டு அவன் பேச விரும்பவில்லை. வண்டியின் வேகத்தை அதிகப் படுத்தினான்.
“மொள்ள போப்பா’ என்றேன்.
ரொம்ப ஒல்லியா இருந்தான். என்ன வியாதியோ பாவம். வேறென்ன பழக்கம் இருந்ததோ?
எங்கள் வீட்டின் மேலே குடியிருந்தவர்கள் சொன்னது ஞாபகம் வந்தது.
“இப்போல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் மத்தியானத்துக்குப் பின்னால ஆட்டோவே கிடைக்கறதில்லை. எல்லாரும் எங்கயோ போயிடறாங்க. பக்கத்து வீட்டுல லட்சுமணன் பொண்ணு பிரசவ வலிலே துடிச்ச்ண்டு இருந்தா. ஞாயித்துக் கிழமை ராத்திரி மணி 8. ஒரு ஆட்டோ வரலை. அப்பறமா தில்லை நகர்லேருந்து யாரோ அவங்க சொந்தக்காரங்க ஆட்டோ கூட்டிண்டு வந்தாங்க. இந்த டிரைவர்கள் எல்லோருமே ரொம்ப நல்லவர்கள். மரியாதையானவர்கள். ஏழைகள். உழைக்கிறவர்கள். ஆனா யார் யாரோ எது எதுவோ செய்யறாங்க. யார் யாராலேயோ.”
இறங்கும் போது “இன்னும் 10 நாள் இருப்பேன். கொஞ்ச இடங்களுக்குப் போக வேண்டி இருக்கு” என்று சிவகுமாரிடம் சொல்லி அனுப்பினேன்.
வயலூர், வெக்காளியம்மன் கோவில், ஐயப்பன் கோவில், உத்தமர் கோவில் எல்லாம் போய் வந்தேன்.
ஊருக்குக் கிளம்புகிற அன்று காலை சமயபுரம் ப்ரொக்ராம். சிவகுமாரைக் கூப்பிட்டேன். 7:30க்கு வரச் சொன்னேன்.
7: 30 க்கு வண்டி வந்ததற்கு அடையாளமாக ஹார்ன் 2 முறை அடித்தது.
“இதோ வரேன்” என்று குரல் கொடுத்து விட்டு 5 நிமிஷத்தில் வெளியே போனேன்.
க்ருஷ்ணன்.
“என்னப்பா எப்படி இருக்கே?”
வண்டியிலிருந்து இறங்கி நின்று கை கட்டி “நல்லா இருக்கேன் சார்” என்றான்.
“சமயபுரம் போலாம்” என்றேன்.
வண்டி கிளம்பியதும் எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. வருத்தமாக இருந்தது. இவனுக்கே 30, 32 வயதுதான் இருக்கும். இவன் தம்பி. இன்னமும் சின்னவன். பாவம்.
“வீட்டிலே எல்லாம் சௌக்கியமா?’
“இருக்காங்க சார்”
‘ராஜேஷ்…’ என்று ஆரம்பித்ததும்
“நைட் டூட்டி சார்” என்றான்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரே குழப்பம். சிவகுமார் “இல்லை” என்று சொன்னதை நாம்தான் தப்பாகப் புரிந்து கொண்டு விட்டோமோ? நல்ல வேளை உளராமல் இருந்தோம்.
“இப்போ எங்கே இருக்கான்?” என்றேன். இது என்ன கேள்வி என்று எனக்கே புரியவில்லை.
கொஞ்சம் விட்டு பதில் வந்தது. “வீட்டுல இருக்கான் சார்”
நான் மேற்கொண்டு பேசவில்லை.
கோவிலுக்குப் போய் விட்டு வீட்டுக்கு வந்து க்ருஷ்ணனை அனுப்பிய பின் சிவகுமாருக்கு ஃபோன் பண்ணினேன்.
“எங்கப்பா இருக்கே?”
“வீட்லதான் இருக்கேன் சார். எங்கெயாவது போணுமா சார்?”
“இல்லல்ல. ஏன்யா வரலை காலைலே?’
“சாரி சார். அம்மாக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்லே. ஆஸ்பத்ரி போயிட்டேன். அதான் க்ருஷ்ணனை அனுப்பிச்சேனே சார். வரலையா அவன்?”
“வந்தான் வந்தான். அம்மா எப்படி இருக்காங்க?”
“கொஞ்சம் முடியலதான் சார். இன்னும் ரெண்டு நாளைக்கு வண்டிய எடுக்க முடியாது. அம்மா கூட ஆஸ்பத்ரிலே இருக்கணும். அம்மாக்கு சாப்பாடு எடுத்துட்டு போகத்தான் வீட்டுக்கு வந்தேன் சார்.”
“பத்ரமா பாத்துக்கோப்பா.. ஆமாம் அவன் என்னமோ ராஜேஷ் வீட்ல இருக்காங்கறான்?”
“ஆமாம் சார். அவன் அப்படித்தான் சொல்லுவான்.”
“பணம் எதாவது வேணுமா சிவகுமார்?’
‘இல்லங்க சார். இருக்கு. வண்டி வேணுன்னா சொல்லுங்க சார். பசங்களை அனுப்பறேன்”
“சரிப்பா”
அன்று இரவு கோவைக்குத் திரும்ப வேண்டும். பத்தே முக்காலுக்கு வண்டி. சிவகுமார் வரமாட்டான் என்பதால், க்ருஷ்ணனுக்கு ஃபோன் பண்ணி ஒன்பதே முக்காலுக்கு வீட்டுக்கு வரச் சொன்னேன்.
சரியாக ஒன்பது நாற்பதுக்கெல்லாம் ஆட்டோ வந்து விட்டது. நான் வெளியே வந்ததும் வழக்கம் போல் வண்டியிலிருந்து இறங்கி கை கட்டிக் கொண்டு பவ்யமாக நின்றான்.
“க்ருஷ்ணா, ஜங்க்ஷனுக்குப் போலாம்பா” என்றவாறே தோள் பையை ஸீட்டில் வைத்து விட்டு ஏறி உட்கார்ந்தேன்.
முன்னால் ஏறிக் கொண்டே “சரிங்க சார், நான் ராஜேஷ் சார்” என்றான்.
வண்டி புறப்பட்டு விட்டது. நான் ஸீட்டில் சரிந்து உட்கார்ந்து விட்டேன். இருட்டு வேறு.
கோஞ்சம் வினாடிகள் கழித்துக் கேட்டேன்:
“ஏன் அண்ணன் வரலை?”
கொஞ்சம் விட்டு பதில் வந்தது.
“ராத்திரிலே அண்ணன் ஓட்டறதில்லை சார், நான்தான்”
குரல் கம்மியிருந்ததோ? அரைகுறை இருட்டிலும், தெருவிளக்கொளியிலும் காதுகளுக்கு முன்னாலும், அடியிலும் அடர்த்தியற்ற தாடி தெரிந்தது. காலையில் இருந்ததா? உடம்பு இளைப்பாகத்தான் தெரிந்தது. வண்டி வேகம் எடுத்தது. பின்னந்தலையும், காலரும், காக்கிச் சட்டையில் மறைந்த மெலிந்த தோள்களும்தான் தெரிந்தன.
இந்த குண்டும் குழியுமான திருச்சியின் சாலைகளில், ஆட்டோவில், எந்த உடம்புதான் குலுங்காது?

Tuesday, June 24, 2014

தீட்டு

தீட்டு

 | பிரசுரம் : சொல்வனம் இதழ் 107 | 16-06-2014
 எதிர்ச் சாரியிலிருந்த ‘ரிக்ஷா ஸ்டாண்டி’லிருந்து எதற்காக பலர் தன் வீட்டை நோக்கி ஓடுகிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை. இன்னும் ஐம்பதடி தூரத்தில் வீடு. ஓட ஆரம்பித்தவன் உடன் வரும் டாக்டருக்காக நின்றான். “சீக்கிரம் டாக்டர், சீக்கிரம்” என்று பதட்டத்துடனும், மரியாதையுடனும் சொன்னான்.
 “டாக்டர் வீட்டுக்குப் போ. அவரை கையோடு அழைச்சுண்டு வா” என்று அம்மா சொன்னதும் கிளம்பி ஐந்து நிமிட ஓட்ட நடையில் அவர் வீட்டுக்கு வந்தும் விட்டான். அவரிடம் “அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. உடனே வாருங்கள்” என்று அழைத்தபோது மணி பத்தேமுக்கால் இருக்கும். எல்லோரையும் “நேரத்துக்கு சாப்பிடு” என்று சொல்லும் டாக்டர் அப்போதுதான் இரவு சாப்பாட்டை முடித்திருந்தார். கை கழுவி, சட்டை அணிந்து பையை எடுத்துக் கொண்டு அவர் கிளம்ப ஒரு 6,7 நிமிடங்கள் ஆகியிருக்கலாம். அவர் இருந்த தெருவின் இறுதியில் தெருவை அடைத்துக் கொண்டிருந்த சிவன் கோவிலின் கோபுரத்தை நோக்கி நின்று கண்மூடி, கைகூப்பி “அப்பா உடம்புக்கு ஒன்றும் இருக்கக் கூடாது. அப்பா நலமாய் இருக்கவேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். மனசுக்குள் ஒரு விளம்பரப் பாடல் ஓடிக் கொண்டிருந்தது. சாயந்தரத்திலிருந்தே அந்தப் பாட்டு விடாது ஓடிக் கொண்டிருந்தது.
 டாக்டர் வெளியே வந்ததும் அவர் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டான். “என்னாச்சு” என்றார் அவர். “என்னமோ தெரியலை டாக்டர். டாய்லட் போய் விட்டு வந்தார். ஏதோ புஸு புஸுன்னு மூச்சு விடறார். என்னிடம் விளையாடறார் என்று நான் முதலில் நினைத்தேன். அம்மாதான் உடனே டாக்டரை அழச்சுண்டு வான்னு சொன்னா.”
வீட்டு வாயிலில் கூட்டம். சாலையிலிருந்து உள்ளே பார்த்தால் தெரியும் சன்னலில் ஏழெட்டு பேர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே விரைந்தான். அப்பா கண்ணை மூடி கட்டிலில் மல்லாக்க படுத்துக் கொண்டிருந்தார். இடது கை மார்பின் மேல் இருந்தது. வலது கை தலைக்கு மேல் இருந்தது. வழக்கமான மடிப்புக் குலையாத எட்டு முழ வேஷ்டி. சிவந்த மார்பு, உள்ளடங்கிய வயிறு. சாதாரணமாகத்தானே இருக்கார்? வாயோரமாக கொஞ்சம் நுரை மாதிரி இருந்தது.
கசகசவென்று சப்தம். அறை வாசலிலும் உள்ளேயும் பக்கத்து விட்டுக் காரர்கள். குழப்புவதற்கென்றே இருப்பவர்கள். அம்மா அழுதவாறே அவனைப் பார்த்தாள். “ராஜா, ராஜா” என்றாள்.
அவன் கூட்டத்தினரைப் பார்த்து “ஒண்ணும் சத்தம் போடாதீங்க. கலவரப்படுத்தாதீங்க. இதோ டக்டர் வந்துட்டார். அப்பாவுக்கு ஒண்ணும் இல்லை” என்றான்.
அம்மா பெருங்குரலில் “அப்பா நம்மளையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாடா” என்று அழுகையூடாகவே அலறினாள்.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனறியாமல் கால்கள் விட்டுப் போயின. தளர்ந்து விழுந்தவன் அப்பாவின் தலைமாட்டில் இருந்த கட்டிலின் கட்டையில் முகவாயைப் பதித்துக் கொண்டான். அம்மா கையில் இருந்த துண்டை வாங்கி அப்பாவின் வாயைத் துடைத்தான். சுதாரித்துக் கொண்டு “அம்மா. பயப்படாதே. இதோ டாக்டர் வந்து விட்டார். எல்லாம் சரியாயிடும்” என்று அவரைப் பார்த்தான்.
அவர், “ஆமாம்பா. போயிட்டார்” என்று சொல்லி விட்டு, ராஜாவின் அருகில் விழுந்திருந்த தன் பையை எடுத்துக் கொண்டு  அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தார்.
அன்று இரவு யார் யாரோ வந்தார்கள். சிலர் அழுது கொண்டே, சிலர் அலறியபடி. பெரிய குரலில் பக்கத்து வீட்டு மாமி “அண்ணா, போயிட்டேளே. சின்னக் குழந்தைகளை விட்டுட்டுப் போக எப்பிடிண்ணா முடிஞ்சுது” என்று கூவி அழுதது அவனை பாதிக்கவில்லை. ஆனால் அப்பாவின் கீழே வேலை பார்க்கும் ஜகன்னாத மாமா வீட்டு வாசலில் வருகையிலேயே குழறி அழுதபடி தட்டுத் தடுமாறி உள்ளே வருவதற்குள் அது அவர்தான் என்று பார்த்துத் தெரிவதற்குள் அவனும் தரையில் கீழே விழுந்து அழுது கொண்டிருந்தான்.
யார் யாரோ யார் யாருக்கெல்லாமோ சேதி தெரிவித்தார்கள். இந்த 18 வயதில் அவன் முதன் முதலாக ஓர் இரவு முழுதும் தூங்கவில்லை.
Theettu_Lone_Tree_Fall_Autumn_Leafless_Alone_Standing_loneliness
***
ராஜாவின் சின்னப் பெரியப்பா பையன் அவனை விட 13 வயது பெரியவன். ராஜா அவனை “அம்பி” என்று பெயர் சொல்லித்தான் அழைப்பான். அம்பிக்கு 3 தம்பிகள், 5 தங்கைகள். அவர்கள் அவனை “அம்பியண்ணா” என்று அழைப்பது வேடிக்கையாய் இருக்கும். தன் சொந்தத் தம்பி தங்கைகளைவிட அம்பிக்கு ராஜாவின் மேல்தான் பிரியம் அதிகம் என்று எல்லோரும் சொல்வார்கள். ராஜாவுக்கு அம்பி சொல்வதெல்லாம், செய்வதெல்லாம்தான் சரி. அம்பிக்கு நிறைய சிநேகிதர்கள். அம்பி காதல் திருமணம் செய்து கொண்டான். ராஜாவின் அப்பாதான் அதை பல சிக்கல்களைக் கடந்து நடத்தி வைத்தார்.
தானும் அம்பி மாதிரி இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்காமலேயே ராஜா அம்பி மாதிரி இருக்க ஆரம்பித்தான். அவனுக்கும் இப்போது பள்ளி நண்பர்கள் நிறையப் பேர். புதிதாய்ச் சேர்ந்த கல்லூரியிலும் நண்பர்கள். தெருவிலும் நண்பர்கள். க்ரிக்கட் டீம் நண்பர்கள் வேறு.
அவன் உயர் நிலைப்பள்ளியில் ஆறாவது வகுப்பில் சேர்ந்தபோது பத்து நிமிட நடையிலிருந்த அந்தப் பள்ளிக்குச் செல்லும் வழியில் பாதி தூரத்தில் ஒரு சங்கீத பாடசாலை இருந்தது. அதில் பலர் பயின்றார்கள். முதல் நாள் அவன் பள்ளிக்குச் சென்றபோது அந்த சங்கீத வாத்தியாரின் பையன்கள் மூன்று பேரில் நடுவிலவன் ராஜாவை வழி மறித்தான். புத்தகப் பையைப் பிடித்திழுத்து அவனை ஒரு சுற்று சுற்றி விட்டான். இரண்டு மூன்று முறை சுற்றி விட்டு ராஜா தள்ளாடுகையில் அவன் பை, தண்ணீர்க் குடுவை எல்லாம் கீழே விழுந்தன. தன்னை விட ஓரடி உயரத்தில் இருந்த அவனைப் பார்க்கவே பயமாய் இருந்தது. மறு நாளிலிருந்து அம்மா அவ்வழியே சென்ற இன்னொரு பெரிய பையனிடம் துணைக்குப் போகுமாறு சொல்லி அவனோடு ராஜாவைப் பள்ளிக்கு அனுப்பினாள். சங்கீத வாத்தியாரின் மூன்றவது பையன் குரு அவன் கிளாஸிலேயே படித்தான். சென்ற வருடம் + 2 முடித்த போது அவன் ஃபெயிலாகி விட்டான்.  ஆனால் அதற்குள் காதல் வசப்பட்டு இருந்தான். வசப்படாமல் இருந்தாலும் அவன் ஃபெயில்தான் ஆகியிருப்பான். ராஜாவுக்கு நெருங்கிய தோழனாக இருந்தான். அவன் அண்ணன் 10ம் வகுப்பிலேயே ஃபெயில் ஆகி விட்டதால் அதன் பிறகு சில வருடங்களாக ராஜாவைப் பார்ப்பதையே தவிர்த்தான். ஏழு வருடங்களுக்கு முன் தன்னை மிரட்டியவன் இவன் என்பது கூட மறந்து போய் விட்டது. அது சுமார் ஒரு வார காலத்திலேயே மறக்கவாரம்பித்து விட்டது. குருவும் கடந்த சில மாதங்களாக அவ்வளவாக சந்திப்பதில்லை.
 அந்த மூன்றாவது பையன் குரு மூலமாகத்தான் மூர்த்தி ராஜாவுக்கு நண்பனானன்.
மூர்த்தி ஒன்றிரண்டு வயது பெரியவனாக இருக்கக் கூடும். பள்ளியிறுதி முடித்ததும் வேலைக்குப் போய்விட்டானாம். ஒரு தனியார் கம்பனியில் வேலை பார்த்து வந்தான். ராஜாவின் வீட்டிற்கு எதிர்த் தெருவில் மூன்றாவது வீட்டில் இருந்தான். அவனோடு அவன் தாயும், தம்பியும் இருந்தார்கள். தகப்பனார் சிறு வயதிலேயே, அவன் தம்பி பிறந்த கொஞ்ச நாளில் இறந்து விட்டாராம். குரு சொல்லித்தான் இதெல்லாம் ராஜாவுக்குத் தெரியும்.
பள்ளி இறுதி ரிஸல்ட் வரும் வரை ராஜா, குரு, மூர்த்தி மூவரும் பல நாட்கள் சேர்ந்து பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். ரிஸல்ட்டுக்கு அப்புறம் அதுவும் ராஜா கல்லூரியில் சேர்ந்த பின் குரு அதிகம் வருவதில்லை. மாதத்திற்கு ஒரு முறை சந்தித்தால் அதிகம். ஆனால் மூர்த்தி வருவது குறையவில்லை.. மூர்த்தியும், குருவும் தனியே சந்தித்துக் கொள்கிறார்கள் என்பதும் ராஜாவுக்கு தெரியும். நேரம் தோதுபடவில்லை என்று ராஜா நினைத்தான். அது உண்மையும் கூட.
சொல்லப் போனால் மூர்த்தி குருவை விட ராஜாவுக்கு நெருங்கியவனாகி விட்டான். மூர்த்தி பெரும்பாலும் வேட்டி கட்டியிருப்பான். முகம் பளிச்சென்று இருக்கும். விபூதியும், சந்தனமும் இருக்கும். வேலைக்குப் போகும்போது பேன்ட் அணிந்திருப்பான். மூர்த்திக்கும், ராஜாவுக்கும் ஒரே சினிமா கதாநாயகனைப் பிடிக்கும் என்பதுதான் அவர்களை மேலும் பிணைத்தது. அந்தக் கதாநாயகனுக்கு அவ்வளவு ரசிகர் கூட்டம் இல்லை. அவன் நடித்த மோசமான படங்களையும் இருவரும் சேர்ந்து பார்த்தார்கள்.
மூர்த்தி ராஜா விட்டுக்கு வந்தால் உள்ளே வரமாட்டான். வாயிற்கதவருகில் அல்லது வீட்டு மொட்டை மாடியில் நின்று பேசிவிட்டுப் போய் விடுவான். தன் வீட்டுக்கு வருமாறு அவன் ராஜாவை அழைத்ததேயில்ல. ஆனால் பேச ஆரம்பித்தால் மணிக்க்கணக்கில் உலக விஷயம் எல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். சினிமா அவர்களின் பெரிய பேசுவிஷயமாக இருந்தது. அவன் பெண்கள் பற்றி பேசாதது ஓர் ஆச்சர்யம். அதே போல் கோவில், சினிமாவுக்கெல்லாம் கூட வரும் அவன் 2 கி.மீ. தொலைவில் இருந்த மெரீனா பீச்சுக்கு இதுவரை வந்ததில்லை.
 ராஜாவின் நண்பர்கள் குழாம் பெரும்பாலான மாலைப் பொழுதுகளை பீச்சில்தான் கழிக்கும். அவன் அப்பாவே, கடற்கரை எதிரில் அமைந்திருந்த தன் கல்லூரியை விட பீச்சில்தான் ராஜா அதிக நேரம் இருக்கிறான் என்றும், அவன் உருப்பட மாட்டனென்றும், இரண்டு வீடு தள்ளி இருக்கும் அவரது 30 வருட பழக்க சலூன் காரரிடம் அஸிஸ்டென்டாகச் சேர்த்து விடப் போவதாகவும் அடிக்கடி சொல்லியிருக்கிறார்.
 குருவிடம் ஒருநாள் ராஜா சொன்னான் : “மூர்த்தி எல்லா இடத்துக்கும் வர்ரான். ஆனா பீச்சுக்கு மட்டும் வரவே மாட்டெங்கறான்”. குரு “ஆமாண்டா. அவன் பீச்சுக்கு வரமாட்டான். அவன் அங்கே முன்னாடி சுண்டல் வித்துண்டு இருந்தான். இப்போ வேலைக்குப் போனப்பறம் கொஞ்சம் சௌகரியமா இருக்க்காங்க. அங்கே போனால் பழைய ஞாபகம் எல்லாம் வருமில்லையா. அதான். அவனை கேட்டுடாதே. வருத்தப் படுவான்” என்றான். ராஜவுக்குத் துணுக்கென்றது. பாவம் என்று சொல்லிக் கொண்டான். குருவும், மூர்த்தியும் எவ்வளவு நண்பர்கள் என்றும் தோன்றியது. பொறாமையும் வரவில்லை.
Theettu_Lone_Tree_Fall_Autumn_Leafless_Alone_Standing_Solitude
 ***
அம்பியும், அவன் பிள்ளைத் தாய்ச்சி மனைவியும் ஒரு மணி நேரத்தில் வந்துவிட்டார்கள்.
 காலையில் ஊரிலிருந்து இரண்டு பெரியப்பாக்களும் வந்து விட்டார்கள். பெரிய பெரியப்பா அப்பவை விட 10 வயது பெரியவர்; இரண்டாமவர் 8 வயது. பெரியவரின் கம்பனியில் இரண்டாமவர் வேலை பார்க்கிறார். இரண்டு பேரும் காரில் வராமல் ரயிலில்தான் வந்திருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்குள் நுழைகையில் ராஜா சின்னப் பெரியப்பாவைப் போய்க் கட்டிக் கொண்டு பெருங்குரல் எடுத்து அழுதான். அவர் வெறுமனே நின்றார். ஒன்று பேசவில்லை. பெரிய பெரியப்பாவிடம் அவனுக்கு நெருக்கம் இருந்தது இல்லை. தொடப் பிடிக்காதது போல் அவனை விலக்கி விட்டு சின்னப் பெரியப்பா உள்ளே போனார். அவர் அழவில்லை என்பது அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
வாத்தியார் வந்ததும் சடங்குகள் ஆரம்பித்தன. தெருவெல்லாம் அப்பா ஆபீஸ்காரர்கள். பக்கத்து வீட்டுக் காரர்கள். தெருக்காரர்கள். நிறையத்தான் கும்பல். அகால மரணம் வேறு அனைவரையும் பாதித்திருந்தது.
அம்பி, ஒன்று விட்ட சித்தப்பா ஒருவர், இரண்டு விட்ட அண்ணன் ஒருவன், ஜகன்னாத மாமா நால்வரும் எல்லாக் காரியங்களையும் பார்த்துக் கொண்டார்கள். ராஜாவின் நண்பர்கள் தலை தெரிந்தது. யாரும் அவன் பக்கம் வரவில்லை.
தெருவில் ஈரத் துணியோடு, வெற்று மார்போடு கையில் தீச்சட்டியோடு “என்ன நடந்தாலும் திரும்பிப் பார்க்கவே கூடாது” என்கிற வாத்தியார் மற்றும் பெரியவர்களின் கட்டளையோடு செல்கையில் தெரு முனையிலிருந்த வீட்டின் மொட்டை மாடியிலிருந்து தன்னைப் பார்க்கமாட்டாளா என்றிருந்த பானு பார்ப்பது தெரிந்தது. அது ஒரு விளைவையுமே ஏற்படுத்தவில்லை என்பதும் தெரிந்தது.
இடுகாட்டில் விறகுகளையும், வரட்டியையும் அடுக்கிய பின் முகத்தின் மேல் ஒரு வரட்டியை வைக்கும் முன் வாத்தியார் “பாத்துக்கோப்பா, கடைசியா ஒருதரம் பாத்துக்கோ” என்றதும் பக்கத்திலிருந்த பலரும் கேவுவதுகேட்டது. அவன் சிதையின் மேல் விழுவது போல் சாய்ந்தான். நான்கைந்து பேர் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அவன் திமிறினான். அவர்கள் அவனை விட மாட்டார்கள் என்பது அவனுக்குத் தெரியும். தன் துக்கம்தான் பெரியது என்று தெரிவிக்க அப்படிச் செய்தான். எல்லாவற்றுக்கும் அடியில் “இது சும்மா. ஒன்றுமேயில்லை” என்று ஓர் அமைதியிருந்ததும் அது லேசாகப் புன்முறுவல் செய்ததும் தெரிந்தது.
கடைசி வரட்டியை மார்பில் வைக்க சொன்னார்கள்.வைத்து எரியூட்டினான். அடக்க முடியாமல் குமுறிக் குமுறி அழுதான். “நாங்கள்ளாம் ராட்சஸாப்பா. இதுவே எங்க வேலை” என்று வாத்தியார் அவனிடம் சொன்னார்.
மாலை வீட்டுக்கு வந்த போது நண்பர்கள் சிலர் இருந்தனர். லேசாக மழை பெயதது. “அப்பா நனைவாரே” என்றான். அவர்கள் ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்து கொண்டார்கள்.
***
இரவு பெரியப்பாக்களிருவருக்கும் பாயைப் போட்டு ஜமக்களத்தை விரித்து படுக்கை தயார் செய்தான். அப்பா இருந்தால் அதைச் செய்வார். அம்பி இருந்தாலும் அதைச் செய்வான். அம்பி அவன் வீட்டுக்குப் போய் விட்டான். அப்படிப் போவான் என்று ராஜா நினைக்கவில்லை. இந்த ஒரே நாளில் எவ்வளவோ நடந்து இது ஒன்றும் அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. பெரியப்பாக்கள் படுத்துக் கொண்டதும் அவனும் படுத்துக் கொண்டான். உடனே உறங்கி விட்டான். இத்தனைக்கும் மாலை இடுகாட்டிலிருந்து வந்ததுமே சுமார் 36 மணி நேரங்களுக்குப் பின் அவன் தரையில் ஒரு தலையணையை வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் உறங்கியிருக்கிறான்.
 நிறைய உறவினர்கள் தங்கி விட்டார்கள். மறு நாள் காலையிலிருந்து நண்பர்கள் ஒவ்வொருவராக வந்தார்கள். அப்போதும் சிலரைப் பார்த்ததும்தான் அழுகை வந்தது. எல்லோரும் சம வயதினர். அவர்களுக்கு இந்த சந்தர்பத்தில் எப்படி இருப்பது என்பது தெரியவில்லை. ஒரு நண்பனிடமிருந்து அப்பா ‘வோடௌஸ்’ புத்தகங்களை வாங்கிப் படிப்பார். அந்த நண்பன் வந்ததும் “இனி வோடௌஸ் புத்தகங்கள் கொண்டு வர வேண்டாம்” என்றான். அதைச் சொல்லும் போதே “பொய். பொய்” என்று கேட்டது.
இரவு அருகில் படுத்துக் கொண்ட சித்தப்பாவிடம் காலை எழுந்ததும் “ஒரு கனவு கண்டேன். ஸ்ரீ ராமரை பட்டபிஷேக கோலத்தில் பார்த்தேன். அவர் திடீரென்று எழுந்து கொண்டு “வாங்கோ. நீங்க ஒக்காருங்கோ” என்றார். அப்பா வந்து கொண்டிருந்தார். அப்புறம் அப்பா சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்ள ராமர் அருகில் நின்றார்” என்றான். இதில் எத்தனை கனவு எத்தனை புனைவு என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் சித்தப்பா “பயப்படாதே. அதுனாலே ராமர் ஸ்தானத்துக்கு அப்பா பொயிட்டார்ன்னா அர்த்தம். அப்படியெல்லாம் இல்லை. இதுக்காக பகவான் கோச்சுக்க மாட்டார்” என்றார். சித்தப்பாவுக்கு தன் கனவும் அது சொன்ன கதையும் புரியவில்லை என்பது அவனுக்குத் தெரிந்தது. அவன் மேலே ஒன்றும் சொல்லவில்லை.
***
ஆனந்தன், கிரி, விஜயன், குரு, ராமன், கனகசபாபதி, சீனிவாசன், தீனன், குலசேகரன் என்று நண்பர்கள் நாள்தோறும் வந்து கொண்டே இருந்தார்கள்.
 13ம் நாள் சுபம். சுப ஸ்வீகாரம். பலருக்கும் தீட்டு கழிந்தது. இனி எல்லாம் சாதாரணம். வழக்கம் போல். கோவிலுக்குப் போய் வந்ததும் எல்லாம் நிறைவுக்கு வந்தன. உறவினர்கள் கிளம்பிப் போக ஆம்பித்தனர். பெரிய பெரியப்பா எத்தனை செலவாச்சு. இனி எத்தனை நாட்களில் அப்பாவின் பி.எஃப், கிராசுவிடி வரும் அதுவரை மாசம் எத்தனை செலவுக்குத் தரவேண்டும் என்பதை ராஜாவின் அம்மாவிடமும், அம்பியிடமும் கேட்டுக் கொண்டார். தான் பணம் அனுப்புவதாகவும் அப்பாவின் பணம் வந்ததும் உடனடியாக தான் அனுப்பிய எல்லாவற்றையும் கணக்குப் பண்ணி அனுப்பி விடவேண்டும் என்று அவர்களிடமும் , ராஜாவிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார். சின்னப் பெரியப்பாவும் அவருடன் போய் விட்டார்.
 ***
இரண்டு நாட்கள் கழித்து வீட்டு வாசலிலிருந்து இறங்கி தெருவில் ஆனந்தனுடனும், குருவுடனும் பேசிக் கொண்டிருந்தான் ராஜா.
 “எப்போடா காலேஜ் போற?” என்றான் குரு.
 “அடுத்த வாரம்”.
 “இப்போ துணைக்கு யார்டா இருக்கா.?”
 “நான் அம்மா, தங்கை அவ்வளவுதான். அம்பி தினம் வருவான். சித்தப்பா ஞாயித்துக் கிழமை வருவார். ஒரு ஒண்ணு விட்ட பெரியம்மா இன்னும் ஒரு மாசம் தங்குவா. அதான் நீங்கள்ளாம் இருக்கேளே.” என்றவன் “துணைக்கு இருக்கற எல்லாருமே ஒருநா செத்துப் போயிடுவா. கடவுள்தான் துணை.” என்று முடித்தான்.
 மூவரும் மௌனமானார்கள்.
 “என்னமோ இப்படி அடிக்கடி நடிக்கறோம்” என்று நினைத்த ராஜா, நிலைமையை சகஜமாக்க குருவிடம் “டேய். ஒன் ஃப்ரெண்ட் மூர்த்தி எங்கடா? அவன் ஒத்தந்தான் வந்து பார்க்கவேயில்லை” என்றான்.
 குரு பதில் சொல்லவில்லை.
 “ ஒரு நா விடாம தினம் நான் காலேஜ்லேருந்து வந்ததும் வந்து பாப்பான். இப்போ வரவேயில்லை. ஏன்னு தெரியல. ரெண்டு நா முன்னாடி சுபமாயிடுத்து. இனிமே வருவானாயிருக்கும். “என்ன ஃப்ரெண்ட்டா அவன்.”
 தயங்கித் தயங்கி குரு சொன்னான், “அவன் வர மாட்டாண்டா. 10 நாள் முன்னாடி ஜுரத்துல போயிட்டான்.”
ஏற்கனவே இடி விழுந்த தலையில் மீண்டும் ஒரு இடி விழுந்த மாதிரி இருந்தது.
 அவனறியாமல் “ஆ” என்று கத்தினான்.
 “அவன் போன மூணாம் நாள் அவன் அம்மாவும் போயிட்டா”
 முகம் கோணலாகி, வாய் பிளந்து, கொஞ்சம் இடைவேளை எடுத்துக் கொண்டிருந்த, கட்டுப் படுத்த முடியாத அழுகை பீறிட்டுக் கொண்டு வர ராஜா அவர்களை விட்டு விட்டு வீட்டுக்கு உள்ளே ஓடினான்.
 ***
மறு நாள் குளித்து விட்டு வீட்டுக்குள் ஜன்னல் முன், அவன் அப்பாவைப் போலவே, நின்று ராஜா வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். எதிர்த் தெருவில் யாரோ வருவது போலிருந்தது. ஆ ! மூர்த்தி ! இல்லை, மூர்த்தி இல்லை. வேட்டியும் சட்டையும் மூர்த்தி மாதிரியே இருந்தது. மூர்த்தியை விட கொஞ்சம் பருமன். ஓவ் ! மூர்த்தியின் தம்பி. ஓரிரு தடவை பார்த்திருக்கிறான். பள்ளியிறுதி படித்துக் கொண்டிருப்பவன். இப்போ அவனுக்கு யாருமே இல்லை. அப்பா இல்லை. அண்னனும், அம்மாவும் கூட இப்போ போய் விட்டர்கள். அவன் பெயர் தெரியாது. கூப்பிடலாம் என்று வாயெடுத்தான். அவனை உள்ளே வரச் சொல்லலாம், சாப்பிட்டானா என்று கேட்கலாம் என்று சன்னலிலிருந்து நகர்ந்து அறைக்கு வெளியில் வந்து வாசலை நோக்கி வேகமாகச் செல்கையில் “அவனோடவா சகவாசம்?  எவ்வளவு துரதிருஷ்டசாலி” என்ற பயம் கனன்றெழுந்தது. வாசல்வரை போகாமல், அந்த இடத்திலேயே, அப்படியே நின்று விட்டான்.
அதற்குப் பின் அவன் எப்போதும், எங்கும் ராஜாவின் கண்களில் படவேயில்லை.
***

Friday, September 30, 2011


தர்ப்பணம்

வ.ஸ்ரீநிவாசன்                      பிரசுரம் : சொல்வனம் : இதழ் 56 | 19-9-2011
வாத்தியார் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்ததும் மனசு விச்ராந்தியாக இருப்பதை ஸ்ரீதரன் உணர்ந்தான். மணி ஏழு. மாதம் பிறக்கும்போதும், அமாவாசையன்றும் அவன் அதிகாலையில் எழுந்திருக்கிறான். குளிக்கிறான். நெற்றிக்கு இட்டுக் கொள்கிறான். அம்மா கொடுக்கும் எள், வெற்றிலை பாக்குப் பொட்டலத்தோடு கிளம்பி இதுபோல் வாத்தியார் வீட்டுக்கு சைகிளில் வருகிறான். இன்றைக்கு கல்லூரி இல்லை. அவசரம் இல்லை.
திண்ணை நன்றாக வழவழவென்று இருந்தது. சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். சிம்மாசனம் மாதிரி சிகப்பு சிமின்டில் திரட்சியாக ஒரு வளைசல். அது திண்டு மாதிரியும் இருந்தது. கையை அதன் மேல் அணைவாகப் போட்டுக் கொண்டு காலை வேளைக் குளத்தையும், அதற்கப்பால் தெரிந்த பார்த்தசாரதி பெருமாள் கோவிலையும் பார்த்தான். அதற்குள்ளாகவே ஜன நடமாட்டம் இருந்தது. நிறையப் பேர் கோவிலுக்குள்ளேயும், கோவிலிலிருந்தும் போய்க்கொண்டு இருந்தார்கள்.
வாத்தியார் வர இன்னும் அரை மணியாகலாம். ஒரு பேட்ச் முடிந்து எல்லோரும் போய் விட்டார்களாம். வாத்தியார் யார் வீட்டுக்கோ போய் இருக்கிறார். அப்பா இருந்தபோது இது மாதிரி இடைவெளிகளில் வீட்டிற்கே வந்து பண்ணி வைப்பார். வாத்தியார் அவன் முதல் பிறந்த நாளின் போதும் வந்தவர். அவன் பிறப்பதற்கு பத்து வருடங்களுக்கு முன்பாகவே அதாவது சுமார் 28 வருடங்களாகவே அவன் வீட்டுக்கு வைதீகக் காரியங்கள் செய்பவராக இருப்பவர். அவன் அத்தை பாஷையில் சத்தான மனுஷர். எழுபது வயதுக்கு மேல் இருக்கும். வெள்ளை முடி படர்ந்த முகம், மார்பு. சிகப்புத் தோல். உள்ளடங்கின, வெளியில் எங்குமே சாப்பிடாத வயிறு. இளையாளோடு இந்த வீட்டில் ஒரு போர்ஷனில் குடியிருக்கிறார்.
உள்ளேயிருந்து வாத்தியாருடைய பெண் வந்தாள். சிகப்பாக, சுருட்டை மயிரோடு இருக்கிற தன்னைப் பார்ப்பதற்குத்தான் வருகிறாளோ என்ற சந்தேகத்தோடு அவன் தீவிரமாக வெளியில் பார்க்க ஆரம்பித்தான். அப்புறம் “ஸ்ப்ச். எனக்கென்ன” என்கிற மாதிரி அவளைப் பார்த்தான். அவள் வாசல் கதவருகில் போய் நின்று கொண்டாள். பதினாறு வயதிருக்கும். அழகாக இருந்தாள். அவள் அவன் பக்கம் திரும்பி வெகு இயல்பாக சாதாரணமாக, “ அடுத்த தெருவுக்குத்தான் போயிருக்கார், நான் வேணும்னா போய் சொல்லிட்டு வரவா?“ என்றாள்.
அவளை நேரே பார்க்காமல் “வேணாமே ! நேரமானா பரவாயில்லை,” என்றான் ஸ்ரீதரன்.
“இன்னிக்கு ஒரு பாட்ச்தான். வெளியிலிருந்து வந்ததும் உடனே பண்ணி வச்சுடுவார்,” என்று தகவல் சொன்னாள். ஸ்ரீதரனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
அவள் உள்ளே போகாமல் கதவு அருகிலேயே நின்றாள். தெருவின் இருபுறமும் திரும்பிப் பார்த்தாள். கணுக்கால் அருகில் பாவாடையில் கிழிசல்; அவள் சுதந்திரமாக தன்னிச்சையாக நின்றாள். அவனை அலட்சியப் படுத்துகிற மாதிரியும் இல்லாமல், அவன் இருப்பால் கஷ்டப் படுகிற மாதிரியும் இல்லாமல் அவள் இந்தக் காலை வெய்யில் மாதிரி, அந்த வீட்டு வாசலில் தெருவில் போட்டிருந்த கோலம் மாதிரி சுபாவமாக நின்றாள். ‘கோலம் அவள் போட்டதுதானோ?’ என்று ஸ்ரீதரன் யோசித்தான்.
‘ஏய்!’ ரோட்டில் போன இன்னொரு பெண்ணைக் கூப்பிட்டாள். அவன் ஆவலோடு அவளைத் தாண்டி தன் பார்வையை செலுத்தினான். பார்த்த கணமே ‘எலி மாதிரின்னா இருக்கா’ என்று மனதில் சொல்லிக் கொண்டான்.
வாத்தியாரின் பெண் வாசற்படியில் லாகவமாக இறங்கி ஸ்ரீதரன் நிறுத்தியிருந்த சைக்கிளைத் தாண்டி, அந்த எலி மாதிரி இருந்த பெண்ணின் கையைக் கோர்த்துக் கொண்டு கோவில் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். தலை மயிரைத் தூக்கிச் செருகி இருந்ததால் கழுத்தின் செழுமை நன்றாகத் தெரிந்தது. அதில் வளையமிட்ட முடிக்கற்றைகள் அதன் அழகை இன்னும் அதிகப் படுத்தின. அவள் போவதையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் நடை அசிங்கமாக இருந்தது. காலை எட்டி எட்டி வைத்தாள். தூரத்தில் போனதும் எதேச்சையாகத் திரும்பிப் பார்த்துவிட்டுப் போனாள். எதேச்சையாகவா என்று ஸ்ரீதரனுக்குத் தோன்றியது.
அவளுடைய மைனஸ் பாயின்டுகள் அவனுக்கு இப்போது தோன்ற ஆரம்பித்தன. அவன் அவளை மறந்துவிட்டு குளத்தைப் பார்த்தான்.
குளத்தின் எதிர்ப்புற படிக்கட்டுகளில் ஒரு இள வயதுப் பெண் நிற்பதை அசுவாரஸ்யமாகப் பார்த்தான். அவள் படியோரமாக நடந்து ஒரு மண்டபத்தின் தூணின் அருகில் நின்றாள். புடவைக் கொசுவத்தை உடம்பிலிருந்து உயர்த்திப் பிடித்துக் கொண்டாள். இவன் புரிந்து கொண்டான். குளத்து நீரின் நினைப்பு குமட்டியது. குளம் மொத்தமுமே மூத்திர ஜலம்தானோ?
அந்தப் பெண் புடவையாலேயே கால்களைத் துடைத்துக் கொண்டாள். அதே குளத்துத் தண்ணீரை எடுத்து முகத்தைக் கழுவிக் கொண்டாள். அப்புறம் புடவைத் தலைப்புக்குள் கைவிட்டு ரவிக்கையை அவிழ்க்கத் துவங்கினாள். காசிப கோத்ர விஜயராகவ சர்மனின் பிள்ளையான ஸ்ரீநிவாச சர்மனின் பிள்ளையான ஸ்ரீதரனுக்குக் குளத்தின் அந்தப் பக்கத்துக்குப் போகவேண்டும் போல் இருந்தது.
“யாருப்பாது? கோபுவா?”
வாத்தியார்.
“இல்லை தாத்தா ! நான்தான் ஸ்ரீதரன்.”
“சீதரனா ! மன்னிச்சுகோடாப்பா. மறந்தே பூட்டேன். வந்து ரொம்ப நாழியாச்சா?”
“இல்லை ! இப்பதான் வந்தேன்.”
“சரி உள்ளே வா!”
மனசே ஆகாமல் உள்ளே போனான்.
“மாடிக்குப் போ ! நான் தாம்பாளம் எடுத்துண்டு வரேன்.”
அவன் மாடிக்குப் போனான். மாடியின் முகப்புப் பகுதியிலிருந்த போர்ஷன் அவன் வீதியைப் பார்க்க வொட்டாமல் தடுத்தது.
அவன் மொட்டை மாடியில் வெறுமே நின்றான். வாத்தியார் மாடியேறி வந்தார். காலைச் சூரியனில் வாத்தியாரின் சிகப்பு நிறம் - தோல் சுருங்கின நிலையிலும் - பிரமாதமாக இருந்தது.
“உக்காந்துக்கோ.”
உட்கார்ந்தான்.
“சட்டையை அவுத்துடு.”
- குளித்துவிட்டு மடி வேஷ்டியைக் கட்டிக்கொண்டு, குருவை சேவித்து. . . .
சட்டையையும் பனியனையும் அவிழ்த்தான். வாட்சைக் கழட்டி சட்டைப் பாக்கட்டில் வைத்தான். தான் சினிமா போகிற மாதிரி வந்ததை நினைத்து வருத்தப் பட்டான். - அப்பா ! மன்னிச்சுக்கோங்கப்பா ! - கையை மாரில் கட்டிக் கொண்டான். தலையைக் குனிந்துகொண்டான்.
வாத்தியார் அவன் காலடியில் இரண்டு தர்ப்பத்தைப் போட்டார். கையில் இருந்த பவித்திரத்தை அவனிடம் கொடுத்தார். முதலில் ஆசமனம் பண்ணச் சொன்னார்.
ஆசமனம். மந்திரமே இவனுக்குத் தெரியாது. கிறிஸ்தவன் மாதிரி புஜங்களையும், முகத்தையும் தொட்டுக் கொண்டன்.
பிராணாயாமம். மந்திரம்? அப்பா பெயரை திரும்பத் திரும்ப மனதுக்குள் சொல்லிக் கொண்டான். இதானா பிராணாயாமம்? அவனுக்குத் திடீரென்று இது ரொம்ப உசத்தி என்று தோன்றியது.
வாத்தியார் மந்திரம் சொன்னார். இவன் தொடர முடியாத வேகத்தில் சொன்னார். படு அவசரம். - இன்னும் எத்தனை வீடுகளுக்குப் போகவேண்டுமோ? வாத்தியார் பெண்ணின் பாவாடை கிழிசல் அவனுக்கு ஞாபகம் வந்தது. - இவன் மந்திரத்தைக் கூடச் சொல்வதாக பாவனை செய்தான். வீட்டிற்கு வந்து அப்பாவுக்கு பண்ணிவைக்கும் போது வாத்தியார் மெதுவாக பவ்யமாக சொல்லுவாரென்பதை நினைத்துக் கொண்டான்.
“ம். ப்ராசீனாவேதம்.”
“ப்ராசீனாவேதம்.”
“கூடச் சொல்றயே ! பூணலை இந்தப் பக்கம் போட்டுக்கோ !”
“ம்.”
“எள் கொண்டு வந்திருக்கியா?”
“சட்டையிலே இருக்கு.”
கஷ்டப் பட்டுக் கொண்டு நுனிவிரலால் சட்டையை நிமிர்த்தி - மடி - பாக்கட்டிலிருந்து அந்தப் பொட்ட்லத்தை எடுத்தான். வெத்தலையெல்லாம் கூட வந்தது.
“சீக்கிரம்ப்பா!”
“இதோ வர்ரேன்.” கடுமை தொனித்தது.
“ஜலத்தை எடுத்துக்கோ !”
அப்புறம் அப்பா,  தாத்தா, கொள்ளுத்தாத்தா, பாட்டி . . . .
கையை நிமிர்த்திண்டு வலது கை கட்டைவிரலை கிண்டி வாய் மாதிரி வச்சுண்டு அதன் வழியாக ஜலத்தை விடறதுக்கு நன்னா இருக்கு. இது மாதிரி பண்ணிண்டே இருக்கலாம் போல இருக்கு. இதே மாதிரி ஹோமத்துல நெய்யை மேலேருந்து - கைய உசத்தி விடு, சுட்டுடப் போறது - விடறதும் ரொம்ப இன்டரஸ்டிங். விட்டுண்டே இருக்கலாம். காடு பத்திண்டு எரியற மாதிரி , ஜ்வலிச்சுண்டு நெருப்பு மேலே கிளம்பும்.
“பாட்டி பேரு என்ன?”
“ம்?”
“அப்பாவோட அம்மா பேரு !”
“கோமளவல்லி.”
“ம். பேரச்சொல்லு.”
சொன்னான்.
மாடியில் இருந்த அந்தப் போர்ஷனிலிருந்து ஒரு பெண் வந்தாள். இவனைப் பார்த்தாள். உதட்டைச் சுழித்து “அப்பா ! வாத்தியார் வந்தாச்சு. யாருக்கோ பண்ணி வச்சுண்டு இருக்கார். குளிக்கப் போங்கோ,” என்றாள்.
இவனைவிட இரண்டு அங்குலமும், இரண்டு வயதும் ஜாஸ்தியாய் இருக்கும்.
இவன் கூச்சப்பட்டான். மேல் கையால் உடம்பை மூட முடியவில்லை. நான் எதுக்கு வெக்கப் படணும்? பொம்ம்னாட்டியா என்ன? ஆனா கையை தாம்பாளத்துங்கிட்டே வச்சுண்டு மேல் கையால் நெஞ்சை மூடிக்கறச்சே மார் பொம்ம்னாட்டி மாதிரிதான் இருக்கு.
சிரித்தான். தீவிரமாக மந்திரம் சொல்ல ஆரம்பித்தான்.
அந்தப் பெண் அங்கே நின்றவாறு அவன் தர்ப்பணம் செய்வதையே பார்த்தாள். அவனுக்கு ரொம்பக் கூச்சமாக இருந்தது. தன் உடம்பின் குறைகள் எல்லாம் அவளுக்குத் தெரிவதாய் உணர்ந்தான். மேலே பார்த்தான்.
வாத்தியார் அவனை எழுந்துகொண்டு தாம்பாளத்தை வலம் வரச் சொன்னார். இவன் எழுந்ததும், நழுவுவது போல் இருந்த வேஷ்டியை இறுகப் பற்றிக் கொண்டான். அவள் உள்ளே போய்விட்டாள்.
“ம். சேவி !”
சேவித்தான்.
“அபிவாதயே !….”
“அபிவாதயே,” - காதுல கையை வச்சுண்டதுக்கப்புறம் சேவிக்கணுமா? சேவிச்சதுக்கப்புறம் காதுல கைய வச்சுக்கணுமா? -
“உக்காந்து ஆசமனம் பண்ணு.”
ஆசமனம். கிறிஸ்தவம். சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்.
எழுந்து அம்மா கொடுத்த வெத்தலை பாக்கையும், சட்டை பாக்கட்டிலிருந்த ரூபாயையும் வாத்தியாரிடம் கொடுத்து சேவித்தான்.
“இரு வரேன்!” என்று சொல்லிவிட்டு வாத்தியார் கீழே போனார்.
வாட்சைக் கட்டிக் கொண்டான். பனியனை எடுத்துப் போட்டுக் கொண்டான். தலை கீழாகப் போட்டுக் கொண்டதால் அவிழ்த்து மீண்டும் மாட்டிக் கொண்டான். சட்டையைப் போட்டுக் கொண்டான். ஜன்னல் வழியாக அந்தப் போர்ஷனுக்குள் பார்த்தான். அந்தப் பெண் இருக்கும் இடம் தெரியவில்லை.
“சீதரா ! இங்கே வாடாப்பா !” வாத்தியாரின் குரல்.
குளக்கரை ஞாபகம் அப்போதுதான் வந்தது. அவன் விறுவிறுவென்று கீழே போனான்.
வாத்தியார் அவனிடம் நோன்பு சரட்டைக் கொடுத்து “அக்காவாத்துல கொடுத்துடு. நான் அப்பறமா போய் பாக்கறேன்”
“சரி.”
கிளம்பினான்.
“அடுத்ததரம் இனிமே அமாவாசைதான். இதே மாதிரி வந்துடு. ரெண்டு நிமிஷத்துல பண்ணி வச்சுடறேன்.”
“சரி. நான் வரட்டுமா?”
அவன் வேகமாக வெளியே போனான். அந்தப் பெண் ஜாக்கட்டை படிக்கட்டின் மேல் உலர்த்திவிட்டு அருகில் உட்கார்ந்துகொண்டிருந்தாள்.
அவன் சைக்கிளை மிதித்தான். அப்பாவுடைய சைக்கிள்தான். அவன் பிறப்பதற்கெல்லாம் முன்பே வாங்கியது. கனமாக, ஒரு துருவில்லாமல் இருந்தது. முனகாமல், மிருதுவாக ஓடியது. கையிலுள்ள வாட்ச் அப்பாவுடையதுதான். அவர் கல்யாணத்துக்குப் போட்டது. ஜரிகை மற்றும் சாதாரண எட்டு முழ வேஷ்டிகள், சட்டைகள், பான்ட்கள், அவர் காலேஜில் படிக்கையில் போட்டுக் கொண்டவை கூட கிழிசல் இல்லாமல். அப்பா எல்லாவற்றையும் அப்படி பத்திரமாக வைத்துக் கொள்வார். அதில் டென்ஷனும் இருக்காது. தன் உடம்பைத்தான் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அது அவரோட அப்பா அம்மா கொடுத்தது. சின்ன வயசில் கால் முட்டி வலியோடு ஜுரமும் வந்திருக்கிறது. யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘முட்டியை நக்கிய கிருமி இதயத்தை கடித்து’ விடுமாம். பின்னால் ‘ருமாடிசம்’ என்கிற அந்த வியாதி பற்றி எங்கோ படிக்கையில் தெரிந்துகொண்டான்.
சாவதற்கு சில நாட்கள் முன்பு கூட ஆபீஸிலிருந்து திரும்பி வந்து நாற்காலியில் உட்கார்ந்துகொண்ட அப்பா எதற்கோ அவர் பர்ஸை எடுக்கச் சொன்னார். அவன் நல்ல லெதர் வாசனை இப்போதும் அடிக்கும் அந்த பழங்காலத்துப் பர்ஸை எடுத்து அவரிடம் கொடுத்தான். “என் கிட்டே ஏன் கொடுக்கற. இனிமேல் நீதான் பர்ஸ் பணம் எல்லாம் வச்சுக்கணும்; அப்பாவையும், அம்மாவையும் பாத்துக்கணும்.காலேஜ் சேர்ந்தாச்சு,” என்று புன் முறுவல் பூத்தவாறே சொன்னார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. வெறுமனே தலையை ஆட்டினான். அந்த முறுவல் அவனுக்கு ஏதாவது கற்றுக் கொடுக்கும் போது மட்டும் விசேஷமாக வரும். சப்தரிஷி கணங்களை பீச்சில் படுத்தவாறே முதன்முறையாகக் காட்டியபோது, டிக்ஷனரி பார்க்க, டைரக்டரி பார்க்க, பாங்க்குக்குப் போக, சிரசாசனம் போட, ஆஃப் ஸ்பின் எது, லெக் ஸ்பின் எது என்று கற்றுக் கொடுத்தபோதெல்லாம் அந்த முறுவல் கூடவே இருக்கும். ப்ளஸ் டூ முடிந்து காலேஜ் சேர்ந்ததும் “ஹௌ டு வின் ஃப்ரெண்ட்ஸ் அண்ட் இன்ஃப்லூயன்ஸ் பீபிள்” புத்தகமும், ‘எ மாரேஜ் மானுவல்” புத்தகமும் வாங்கிக் கொடுத்து ‘படிச்சுக்கோ, உபயோகமா இருக்கும்’ என்றபோதும் இருந்தது. ஹ ! என்ன மாதிரி அப்பா ! இந்த மாதிரி அப்பா கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். அவர் போய்ட்டாதான் என்ன? அவர் ப்ரியம்? அவரிடம் நான் வளந்த இந்த பதினெட்டு வருஷங்களின் நினைப்பு? இதுக்கு நான் என்ன செய்வேன்? என்ன செய்ய முடியும்? அட் லீஸ்ட் இனிமேல் தர்ப்பணம் பண்ணாமலாவது இருக்கலாம். -
சைக்கிளை ‘டக்’ கென்று நிறுத்தினான். மனம் தெளிவாக இருந்தது. முகத்தில் ஒரு முறுவல் பூத்தது. இன்றுதான் காலேஜ் இல்லையே, என்ன அவசரம்? மெதுவாக சைக்கிளை தள்ளியவாறு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

Sunday, October 10, 2010

தரிசனம்

தரிசனம்

வ.ஸ்ரீநிவாசன் | பிரசுரம் : சொல்வனம் - இதழ் 34 | 19-09-2010
oillamp2சுகுமாரனும், அவன் மனைவி மனோரமாவும், தாயார் பகவதியும் அந்த ஊரை அடைந்து கோவிலை நெருங்கியபோது மணி பத்து ஆகிவிட்டது. நல்ல வேளையாக அவர்கள் எட்டு மணிக்கே வேறொரு ஊரில் சாப்பிட்டுவிட்டார்கள். இந்த ஊருக்குள் நுழைந்த உடன் ஒரு கடையில் நிறுத்தி பாலும் சாப்பிட்டு விட்டார்கள்.
கோவில் இருந்த தெருவின் அடுத்த வீதியிலேயே நல்ல லாட்ஜ் ஒன்று இருந்தது. சுகுமார் தன் ஆபீஸில் இருந்த ஒருத்தரிடமிருந்து அறைக்கு சிபாரிசு கடிதம் கொண்டு வந்திருந்தான். முதல் மாடியில் குளியலறை இணைந்த, மூன்று படுக்கைகளைக் கொண்ட அறை ஒன்று கிடைத்தது.
காரிலேயே பதினைந்து நாள் டூர். ஒரு வாரத்திற்குள்ளாகவே பெண்கள் இருவரும் களைத்து விட்டார்கள். கார் ஓட்டுவது சுகுமார் நினைத்தை விட கடினமான வேலை என்பது தெரிந்து விட்டது. இரண்டு செல்ஃபோன்களின் சார்ஜர்களையும் வீட்டிலேயே மறந்து விட்டு வந்தது துன்பமாய் இருந்தது. இரண்டு செல்லுமே செத்து விட்டன. நாளை முழுதும் இந்த ஊரிலேயே தங்கிவிட்டு மெதுவாகத்தான் டூரைத் தொடரவேண்டும். ஒரு செல்ஃபோன் சார்ஜர் வாங்க வேண்டும்.
ஒரு டெலிஃபோன் இருந்தது. அறையின் அமைப்பு சின்னதாக இருந்த போதிலும் அமைதியாக இருந்தது. லாட்ஜில் அறைகள் தெருவிலிருந்து தள்ளி இருந்ததும், தெரு ஆளரவமற்று இருந்ததும் காரணமாக இருக்கலாம். படுக்கை விரிப்புகள் தலையணைகள் எல்லாம் சுத்தமாக இருந்தன. திரைச் சீலைகள் காற்றில் பம்மிக் கொண்டிருந்தன. மூன்று வழி இசைக்கு அந்த அறையில் வசதி இருந்தது. சுகுமார் அதற்கான பட்டனைத் திருகியபோது ‘கர்புர்’ என்று சப்தம் வந்தது. டி.வி.ரிமோட்டையும் காணோம்.
முகம் கழுவிக் கொள்ளக் கூட சோம்பலாக இருந்ததால் பாத்ரூம் போய்விட்டு அவன் மனைவியும், தாயாரும் படுக்கையில் படுத்துக் கொண்டார்கள். சுகுமாரனும் படுப்பதற்கு ஆயத்தமானான். படுத்தவாறே தலையருகே இருந்த ஃபோன் ரிசீவரை ஒருமுறை எடுத்து காதில் வைத்துக் கொண்டான். டி.வி.ரிமோட் கேட்கலாம் என்ற யோசனை அரைகுறையாக மனதில் உருவான சமயம் “டக்’ என்ற சப்தத்தைத் தொடர்ந்து “யெஸ் ப்ளீஸ்” என்ற ஆண் குரல் கேட்டது. சில நொடி தயங்கிய சுகுமாரன் “கோவில் காலையில் எப்போது திறக்கும்” என்று கேட்டான்.
“காலை நாலு மணிக்கு. தவிர இன்று சனிக்கிழமையில் வரும் அமாவாசையென்றபடியால் இரவு மணி ஒன்றுக்கு ஒரு விசேஷ பூஜை உண்டு. அதில் ராஜா கலந்து கொள்வார்.”
“எந்த ராஜா?”
“இந்த ஊர் ராஜா”
“ஓ அப்படியா! ரொம்ப நன்றி. இரவு 12.30க்கும் மறுபடி காலை 3.30க்கும் எழுப்ப முடியுமா?”
“நிச்சயம்”
“இரண்டு தடவையும் அவசியம் எழுப்புங்கள்”
“நிச்சயம்”
“நன்றி”
இன்று காலையிலிருந்தே பிராயாணம் செய்த களைப்பும், புழுதி படிந்த உடம்பும், தலையும், லேசான ஜலதோஷமும் அவனைத் தொந்தரவு செய்தன. ஒருவேளை தூங்கிப் போய்விட்டால் பூஜைகளைப் பார்க்க முடியாமல் போய்விடுமே என்று தோன்றியது. அதற்கு என்ன செய்ய முடியும், அதிருஷ்டம் இருந்தால் பார்ப்போம் என்று சமாதானமும் செய்து கொண்டான். ஒரு கணம் உடம்பை அலம்பிக் கொள்ள எண்ணியவன் “அப்பா” என்றவாறே படுத்துக் கொண்டு விட்டான். கையருகில் இருந்த ஸ்விட்சை அமுக்கி லைட்டை அணைத்தான். இருட்டில் கண்ணை இடுக்கிக் கொண்டு ரேடியம் வாட்சைப் பார்த்தான். மணி பத்திலேயே நின்று போயிருந்தது. பத்தரை இருக்கும் என்ற எண்ணம் முடிவுறுவதற்குள்ளாகவே தூக்கத்தின் நுழைவாயில் திறந்து விட்டது.
-o00o-
அப்போதுதான் கண் மூடினாற் போல் இருந்தது. டெலிஃபோன் பல முறை அடித்து விட்டது. ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து இவன் ரிசீவரை எடுத்ததும் “கோவிலுக்குப் போக வேண்டும் என்று எழுப்பச் சொன்னீர்களே” என்ற குரல் வந்தது.
“நன்றி”.
ஒரு ஐந்து நிமிடம் கழித்துத்தான் எழுந்தான். மனோரமாவையும், தாயாரையும் எழுப்பினபோது அவர்கள் அசதியோடு சற்று கோபத்தோடே எழுந்தார்கள்.
“கோவிலுக்குப் போகலாம். எழுந்திருங்கள்.”
இருவரும் உடம்பு கெஞ்சுகிறது. காலையில் போகலாம் என்று முனகினார்கள்.
“ராஜா வருகிறாராம். இவ்வளவு ரூபாய் செலவழித்துக் கொண்டு வந்தது இதற்காகவா? தூங்கவா வந்தீர்கள்” என்று எழுப்பினான்.
அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. ஒரு வாரமாகவே அலைச்சல். அலைச்சல். மனோரமா மூன்று மாதங்களுக்கு முன்புதான் டைஃபாய்டிலிருந்து மீண்டிருந்தாள். பகவதி அம்மாளோ கால்வலியால், காலாணியால் அவதிப்படுபவள்.
அவர்களை மேலும் எழுப்ப முற்படுவதில் பிரயோஜனமில்லை, அது சரியுமில்லை, இனி தாமதம் செய்தால் தானும் பார்க்க முடியாமல் போய்விடும் என்று தான் மட்டும் வேஷ்டியும், மேல் துண்டுமாக செருப்புமில்லாமல் சுகுமாரன் கிளம்பினான். “சரி நான் போய்விட்டு வரேன். ரூமை உள்ளே தாள் போட்டுக் கொள்ளுங்கள். பத்திரம்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
கீழிறங்கி வந்தபோது வரவேற்பு மேசையில் யாரையும் காணோம். வெளியில் வந்து திரும்பி கோவில் இருக்கும் வீதியை அடைந்தான். இருட்டில் நிழலைப் போல கோவில் உயர்ந்து பிரும்மாண்டமாக நின்றது. கபந்தன் வயிறைப் போல் திறந்த வாயில் வழியாக எண்ணெய் விளக்குகள் மின்னின. மின்வெட்டோ என்னவோ சாதாரணமாக ஜகத்ஜோதியாக விளங்கும் அந்தப் பிரதேசம் இருளில் ஆழ்ந்திருந்தது.
படிகள் ஏறி கோவிலின் நுழை வாயிலை அடைந்தான். உள்ளே வெகுதூரத்தில் சுமார் ஐம்பது பேர் போல் தெரிந்தனர். மேலும் உள்ளே செல்ல பத்து அடி நடந்திருப்பான். இடுப்பு உயரத்துக்கான கம்பிக் கதவு தடுத்தது. சுவரில் “பர பர”வென்று தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன.
சுகுமார் கதவைத் திறக்க முயன்றான். பூட்டி இருந்தது. காற்றோட்டமாக இருந்த அந்த பிரகாரத்தில் ஆறடிக் கொன்றாக எரிந்த தீப்பந்தங்களைத் தவிர சில கண்ணாடி விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன.
கதவுக்கு அந்தப் பக்கம் ஒரு தூண் ஓரமாக ஒருவர் படுத்து இருப்பது தெரிந்தது.
“ஏங்க” என்று அவரைக் கூப்பிட்டான். அவர் அசைவதாகக் காணோம். ராஜா வருவது இவர்களுக்கெல்லாம் பழகிப் பழகி சாதாரண விஷயமாகி விட்டிருக்கும். மறுபடி குரலை உயர்த்தி “என்னங்க, உங்களைத்தான் ஐயா, இந்தக் கதவைத் திறக்க முடியுமா?” என்று கேட்டான்.
அவர் அசைவது தெரிந்தது. பிறகு தலையை உயர்த்துகையில் சாய்வாய் இருந்த தீப்பந்தத்தின் வெளிச்சம் அவர் முகத்தில் பட்டது. சடையாய்ப் பரந்த தலைமுடியோடு அவன் பால் திரும்பிய அந்த முகத்தில் தாடியும் மீசையும் மண்டி இருந்தன. போறாததற்கு அந்த ஆளுக்கு ஒரே ஒரு கண்தான் இருந்தது.
சுகுமாருக்கு அருவருப்பாக இருந்தது. என்றாலும் “இந்தக் கதவைத் திறக்க முடியுங்களா” என்று கேட்டான். அந்த ஆள் பதிலே சொல்லாமல் மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டார். மேற்கொண்டு அவரிடமிருந்து ஒரு அசைவும் இல்லை.
“பிச்சைக் காரப் பயலுக்குத் திமிரைப் பார்” என்று தனக்குள் சொல்லிக் கொண்ட சுகுமாரன் ஒருவேளை அந்த ஆள் பயித்தியமோ என்னவோ என்றும் நினைத்துக் கொண்டான்.
கம்பிக் கதவைப் பிடித்தவாறே வலதுபுறமாக நகர்ந்து வேறு வழி இருக்கிறதா என்று பார்த்தான். அவன் நினைத்தபடியே ஓரிடத்தில் ஒரு ஆள் நுழையுமளவுக்கு கம்பிகள் விட்டிருந்தன. அதன் வழியாகப் பிரகரத்துக்குள் நுழைந்தான்.
அவன் நினைத்ததைவிட பெரியதாய் இருந்த கோவிலின் விசாலமும், பிரும்மாண்டமும், இருட்டின் நெருக்கமும் மயக்கம் தந்தன. கோவிலின் தூண்கள் தீப்பந்தங்களின் சப்தத்தில் நிசப்தத்தைப் பெரிதாக்கி விரதம் காப்பது போல் நின்றன. அவற்றினின்றும் விவரம் இன்னதென்று இருளில் தெரியாத சிலைகள் தம்பாட்டுக்கு அவனை நோக்கின.
3166110726_00f270eb0b_b
நிலாக்காலத்தில் பிரகாராமும், திறந்த வெளியும், கோபுரமும், முற்றமும், மின்சாரத்தை லட்சியம் பண்ணாமல் பிரேமையையும், அமைதியையும் கொடுத்திருக்கும். இப்போது பரபரப்பையும் மீறி லேசான குழப்பமும் பயமும் ஏற்பட்டன.
பள்ளம் ஏதாவது இருக்குமோ, கல் ஏதாவது தூக்கிக் கொண்டு இருக்குமோ என்ற கவனிப்போடு அவன் மெதுவாகவே அந்தக் கூட்டத்தை நோக்கி நடந்தான்.
பிரகாரங்கள் மாட வீதிகளைப் போல் அகலமாக இருக்க, இடையில் இருந்த முற்றத்தின் மத்தியில் ஒரு மண்டபம் இருந்தது.
சுகுமாரன் மெள்ளப் போவதற்குள் முற்றத்தைக் கடந்து அந்தக் கூட்டம் முழுவதும் எதிர் பிராகாரத்தை அடைந்து விட்டிருந்தது. அந்தக் கூட்டத்திலிருந்து துளிக்கூட சப் தம் இல்லை. தானும் எதிர்புறம் போகலாம் என்று நினைத்தபோது மண்டபத்திற்கு வலது புறத்தில் சுமார் முப்பதடி தூரத்தில் பிரதான கோயிலை இணைக்கும் வாயிலின் கதவு திறந்தது. அங்கிருந்து மண்டபத்துக்கு மூன்று அடி அகலப் பாதை ஒன்று இருந்தது.
இருட்டுக்குப் பழகியிருக்க வேண்டிய கண்கள் தீப்பந்தத்தைப் பார்த்துப் பார்த்து மீண்டும் அரைகுறையாகவே பார்த்தன. எதிர் பிரகாரத்தில் இருந்த கூட்டம் புகைப் படலம் போல் காட்சி அளித்த போதிலும் அவர்கள் ஒருமித்த நோக்கோடு அந்த நிகழ்ச்சிக்காக காத்திருந்தது அவர்கள் காத்த அமைதியில் தெரிந்தது.
யாரோ ஒரு சிலர் கை கால்களை அசைக்கும் சப்தம், யாரோ ஓரிருவர் இருமும் சப்தம் என்று இரண்டு நிமிடம் கடந்தது.
திடீரென்று பிரதான கோவிலின் இணைப்பு வாயிலில் இரண்டு பேர் தோன்றினார்கள். அவர்கள் கையில் தீப்பந்தம் இருந்த போதிலும் அவர்கள் சரித்திர கால சிப்பாய்களைப் போல ஆடை அணிந்திருந்தார்கள் என்பது தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.
அவர்கள் ஒரு சங்கீத தாள கதியில் மண்டபத்தை நோக்கி நகர்ந்தார்கள். “ராஜா ராஜா ராஜா” என்ற மெல்லிய ஆனால் கசகசப்பான பல குரல்களும், கால்களை எம்பிப் பார்க்கும் சப்தமும் கூட ஒரு கட்டுப்பாட்டுடன் கேட்டன.
இரண்டு சிப்பாய்களைத் தொடர்ந்து அவர்களே போன்று உடையணிந்த மூன்று ஜோடி சிப்பாய்கள் தோன்றினர். அவர்களுக்கு இரண்டடி தள்ளி பூசாரியைப் போன்ற இருவர் முன்னாலும், வெண்பட்டுக் குடையையும், சாமரங்களையும் ஏந்திய நான்கு பேர் பின்னாலும் வர தலையில் ஜரிகைத்தலைப்பாகை அணிந்த ஒருவர் வந்தார்.
“அதோ ராஜா ! அதோ ராஜா !” என்ற ஏக காலக் குரல்கள்.
சுகுமார் ஒருகணம் ஆஜானுபாகுவான வெண்பட்டுக் குடை தாங்கிய சிப்பாய் ஒருவனை அவனது ஆகிருதி கருதி ராஜாவோ என்று நினைத்தான். ஆனால் அவன் சம்பிரதாயமாய் நினைத்ததற்கு மாறாக ராஜா ஒரு பட்டு வேட்டி மட்டுமே தரித்து இருந்தார். மிகவும் சிறுகூடாக சிவப்பாக ஒல்லியாக குள்ளமாக
இருந்தார். தலையில் பட்டோ ஜரிகையோ ஒரு துணியை முண்டாசு மாதிரி கட்டியிருந்தார். தலைப்பாகையைச் சுற்றிப் பூச்சரங்கள் வேறு தொங்கிக் கொண்டிருந்தன. மிக மெதுவாக வியாதியஸ்தரைப் போல ஆனால் கூட இருந்த யார் பற்றியும் சிந்தனை அற்றவர் போல் நடந்தார்.
சுகுமார் ஏமாற்றமே அடைந்தான். இந்த குட்டி ராஜாவை பொம்மை ராஜாவைப் பார்ப்பதற்கா வந்தோம் என்று இருந்தது. தானும் அறையில் தூங்கியிருக்கலாம் என்று தோன்றியது. என்றாலும் ராஜாவின் படாடோபமும் அகந்தையும் அற்ற அமைதி அவனுக்குக் கொஞ்சம் ஆறுதல் அளித்தது.
முன்னால் வந்த சிப்பாய்களும், பின்னால் வந்த வெண்குடை, சாமரம் ஏந்தியவர்களும் மண்டபத்தினைச் சுற்றி நிற்க ராஜாவும், இரண்டு பூசாரிகளும் மண்டபத்தின் படிகளில் ஏறி நான்காவது படியில் நின்றனர்.
பூசாரிகள் மெல்லிய ஆனால் துல்லியமான குரலில் சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகம் ஏதோ சொன்னார்கள். ராஜா மேலும் இரண்டு படியேறி மண்டபத்தின் மத்தியில் போய் நின்று கொண்டார். சன்னதியின் புறமாகத் திரும்பி நெடுஞ்சாண்கிடையாக ஒரு முறை விழுந்து வணங்கினார். சுகுமார், எப்படி எழுந்திருப்பாரோ என்று நினைக்கையிலேயே மிகுந்த சிரமத்துடன் தானே எழுந்தார்.
இப்போது மண்டபத்தின் மத்தியில் சன்னதியை நோக்கியவாறு கூப்பிய கரங்களோடு ராஜா நின்றார். இரண்டு படி கீழே ராஜாவைப் பார்த்தவாறு பூசாரிகள் இருவரும் நின்றனர். இன்னும் சன்னதி திறக்கவில்லை. சில சடங்குகள் முடிந்ததும்தான் திறப்பார்கள் போலும். ஒரு பூசாரியின் கையில் இருந்த தட்டில் பன்முக விளக்கும் கற்பூரமும் எரிந்தன. மற்றொருவர் தட்டில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. எதிர் பிரகாரத்தில் இருந்தவர்கள் தாமே ஒருவர் பின் ஒருவராக சீரான வரிசையில் முற்றத்தில் இறங்கி மண்டபம் நோக்கி நகர்ந்தனர். ஒவ்வொருவராக ராஜாவை விழுந்து வணங்கிவிட்டு கற்பூரத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டு மற்றொரு தட்டில் இருந்ததை கழுத்திலும், நெற்றியிலும் இட்டுக்கொண்டு திரும்பி கோயிலின் இணைப்பு வாயிலை நோக்கி முற்றத்தின் மத்தியில் இருந்த ராஜா வந்த பாதை வழியே நடந்தனர்.
அந்தக் கூட்டத்தின் வரிசை கிட்டத் தட்ட முடிந்துவிட்ட போது வந்ததற்கு தானும் ராஜாவை வணங்கிவிட்டுப் போவோம் என்று சுகுமாரன் முற்றத்தில் இறங்கினான்.
oillamp2மன்னரை நெருங்கி மண்டபப் படிகளில் கால் வைக்கும்போது அவரது தோற்றம் இன்னும் அவன் ஏமாற்றத்தை அதிகமாக்கியது. ராஜா தொண்ணூறு வயதுக் கிழவராக தோலெல்லாம் சுருங்கி இருந்ததோடு மட்டுமின்றி அவர் உடம்பு லேசாக நடுங்கிக் கொண்டும் இருந்தது. அடுத்த இரண்டு படிகளைக் கடந்த போதுதான் அதை எதேச்சையாகக் கவனித்தான். தலைப்பாகையிலிருந்து தொங்கி ஆடிய மலர்ச் சரங்களுக்கூடாக அவருக்கு ஒரே ஒரு கண்தான் இருப்பது தெரியவந்தது. இன்னொரு கண் மூடிக் கொண்டு குழிந்து காணப் பட்டது. மேலே செல்லாமல் அதிர்ச்சியுடன் வேகமாய்த் திரும்புகையில் கற்பூரத்தட்டை பூசாரி அவன் பக்கமாய் இடிப்பது போல் நீட்ட அவன் விதிர்திர்த்து பூசாரியைப் பார்த்தான். அவன் பயந்த மாதிரியே பூசாரிக்கும் ஒரே ஒரு கண்தான் இருந்தது. இடது கண் மூடிக் குழிந்து இருந்தது. தன் ஒற்றைக் கண்ணால் பூசாரி அவனைப் பார்த்ததில் அடக்க முடியாத வெறுப்பை சுகுமாரன் துல்லியமாக உணர்ந்தான். தொண்டையிலிருந்து எழுந்த சப்தம் வாயிலேயே நிற்க தான் முதலில் நின்ற பிரகாரத்தை நோக்கி நகர்ந்து பிறகு ஓடினான். கோயிலின் வாயிலை நோக்கி ஓடுகையில் குளிர் வாடைக் காற்றினிடையே அவன் மார்பும், கழுத்தும், முகமும், முதுகும் வியர்த்துக்
கொட்டின. வாய் கைத்துப் போனமாதிரி அருவருப்பாக இருந்தது. ஒரு நேரம் அவனையும் அறியாமல் திரும்பிப் பார்க்கையில் அவன் நடந்து கொண்டது ஒரு பாதிப்பையுமே ஏற்படுத்தாது பிராகரங்களும், முற்றமும், மண்டபமும் அரவமற்று தீர்க்கமான நிசப்தத்தில் ஆழ்ந்து இருந்தது தெரிந்தது.
வேகமான பெருமூச்சுகளோடு வீதியை அடைந்து இடுப்புத் துண்டால் முகத்தையும், உடம்பையும் துடைத்துக் கொண்டு திரும்பி லாட்ஜ் அருகில் வந்தபோதுதான் கம்பிக் கதவையோ அதனருகில் படுத்திருந்த ஆளையோ தான் கவனிக்கவேயில்லை என்ற எண்ணம் தலை தூக்கியது.
லாட்ஜுக்குள் மங்கலான விளக்குகள் வராந்தாவில் எரிந்தன. வரவேற்பு மேசையில் ஒருவன் தலையைச் சாய்த்து லேசாக வாயைத் திறந்து கண்களைக் கையால் மூடித் தூங்கிக் கொண்டிருந்தான்.
சுகுமார் தன் அறையை அடைந்து கதவை உட்புறமாகத் தாள் போட்டுக் கொண்டான். இன்னும் படபடப்பு இருந்தது. மேஜையிலிருந்த தம்ப்ளர் தண்ணீரை குடித்தான். “தூங்கு மூஞ்சி !” என்று தன் மனைவியைத் திட்டினான். தாளிடாத கதவைத் திறந்து யாராவது வந்திருந்தால்தான் தெரியும் என்று நினைத்தவாறே அவளை எழுப்பி தான் பார்த்ததைச் சொல்ல எண்ணியவன் படுக்கையில் குப்புற விழுந்து ஒருமுறை விம்மிவிட்டு உறங்கிப் போனான்.
-o00o-
டெலிஃபோன் பல முறை அடித்து விட்டது. ஆழ்ந்த தூக்கத்திலிருந்து இவன் எழுந்து ரிசீவரை எடுத்ததும் “கோவிலுக்குப் போக வேண்டும் என்று எழுப்பச் சொன்னீர்களே” என்ற குரல் வந்தது.
-o00o-

Sunday, September 5, 2010

காலம்

காலம்

வ.ஸ்ரீநிவாசன் |               பிரசுரம்: சொல்வனம் : இதழ் 32 | 23-08-2010
அந்த அறை ரொம்பப் பெரியதுமில்லை; மிகவும் சிறியதுமில்லை. பனிரெண்டுக்கு பனிரெண்டு இருக்கலாம். அதன் ஒரு சுவரினருகில் போடப் பட்டிருந்த இரும்புக் கட்டிலில் மெலிந்து போன மெத்தையின் மேல் நாராயணன் படுத்திருந்தான். நல்ல ஜுரம். மத்தியான நேரம். மதறாஸ் வெய்யில். ஃபேன் உஷ்ணக் காற்றை அறையில் சுழல விட்டுக் கொண்டிருந்தது.
அவன் படுக்கையிலிருந்தவாறே அறைக் கதவைப் பார்க்க முடியும். சரியாகச் சொன்னால் அறைக் கதவுகள். இரட்டைக் கதவுகள். அதில் ஒன்று எப்போதும் சாத்தியும் இன்னொன்று திறந்தும் இருக்கும். ராத்திரியில் கூட காற்றுக்காக. திறந்த கதவின் வழியாக மாடிப் போர்ஷனுக்குப் போகும் படிகளும் அதைத் தாண்டி பின் கட்டிற்குப் போகும் வழியை இணைக்கும் முற்றமும் நடுக் கட்டு வரையிலுமான பாதையும் தெரியும்.
அதன் வழியாக அம்மாவின் தலை தெரியாதா என்று நாராயணன் பார்த்துக் கொண்டிருந்தான். ஜுரமும், குளிரும், போர்வையின் இதமும், உறுத்தலும், கண்களின் எரிச்சலும் அவனுக்கு லேசான தலை சுற்றலைத் தந்தன.
அம்மா வருகையில் ஏதாவதுகொண்டு வருவாள். கஞ்சி, நார்த்தங்காய் ஊறுகாய், ஜூஸ்.. .. ஏதாவது. அவர்கள் போர்ஷனுக்கு சமையலறை, நடுக் கட்டையும் தாண்டி, பின் கட்டில் இருந்தது. பின் கட்டிற்கும் முன்னறைக்குமாக அம்மா இத்தனை வருஷமாக நடந்த நடையில் இந்த உலகத்தை எத்தனையோ முறை சுற்றி வந்திருக்கலாம்.
இது மாதிரி அவன் எவ்வளவோ தடவை ஜுரம் வந்து படுத்திருக்கிறான். தரையில், பின்பு அப்பா போன பிறகு அவர் கட்டிலில். அம்மா ந்யூஸ் பேப்பரை பற்ற வைத்து அதில் வெந்நீர் வைத்து எத்தனையோ நாள் பாதி ராத்திரியில் தாகத்திற்கு கொடுத்திருக்கிறாள்.
ஜுரம் வந்ததும் டாக்டர் ராமராவ் டிஸ்பென்ஸரிக்குப் போய் விடுவார்கள். அது நான்கு அறைகள் கொண்ட டிஸ்பென்ஸரி. இரண்டு அறைகளில் பெஞ்சுகள் இருக்கும். மூன்றாவது அறைக்கு முன் ஒரு மரத் தடுப்பு. அதற்குள்ளும் ஒரு பெஞ்சு. பிறகு கடைசி அறையில் மருந்து கலக்கும் பெரிய பியானோவைப் போன்ற மர மேஜை.
டாக்டர் ராமராவ் நாடகங்களில் வரும் டாக்டர்களைப் போல ஓயாமல் பேசிக் கொண்டிருப்பார். அவன் குழந்தையாய் இருந்ததிலிருந்து அவர்தான் குடும்ப டாக்டர். அம்மா அவனைத் தோளில் தூக்கிக் கொண்டு டாக்டர் வீட்டுக்கு வந்திருக்கிறாள். இப்போது அவனுடைய இருபத்தைந்து வயதிலும் அவர்தான் டாக்டர். அவர் டிஸ்பென்ஸரியில் போய் எத்தனை நாள் உட்கார்ந்து கொண்டிருந்திருப்பான். சில சமயம் படுத்துக் கொண்டும். ரொம்ப சில சமயம் டாக்டரே வீட்டிற்கும் வந்திருக்கிறார்.
நாராயணன் ஒருக்களித்துப் படுத்துக் கொள்ள முயன்றான். கைகளையும் கால்களையும் கட்டிப் போட்ட மாதிரி இருந்தது. முகத்தின் மேல் ஒரு பாரம். அவன் இதயம் அடிப்பதோ நுரையீரல் துடிப்போ அவனுக்கே பக் பக் என்று கேட்டது. அதையும் ஃபேனின் கடக் கடக்கையும் தவிர வேறு சப்தமில்லை. கண் கதவின் மேலிருந்து அகலவில்லை. அம்மா இன்னும் வரவில்லை. வருவாள். ஏதாவது பண்ணி கொண்டு வருவாள். இப்போவெல்லாம் மருந்தை அவனே சாப்பிட்டு விடுகிறான். நான்கைந்து வருஷங்களுக்கு முன்பெல்லாம் கூட அம்மாதான் தருவாள். அப்பாவுக்கு எத்தனை விதம் விதமான மத்திரைகளை வேளா வேளைக்கு எடுத்துத் தந்திருப்பாள். மருந்து சாப்பிட சின்னக் குழந்தையைப் போல் அலைக் கழிப்பதில் அவன் அப்பா மாதிரிதான் இருந்தான். இப்போது மாறி விட்டான். கருட மூக்கு ஒன்றைத் தவிர வேறொன்றிலுமே அவன் அப்பா மாதிரி இல்லை.
தலை தெறித்தது. சுற்றலும் நிற்கவில்லை. அவனுக்கு எப்பவுமே ஜுரம் பிடிக்கும். லேசான ஜுரத்தோடு முற்றத்தில் விழும் மழையைப் பார்த்துக் கொண்டே யிருப்பான். அந்தச் சேர்க்கை அவனுக்குப் பிடிக்கும். படித்துப் படித்துத் தலை வலி வந்து ஜுரம் வந்திருக்கிறது. மழையில் நனைந்து. காரணமேயில்லாமல். வாய்க் கசப்பு சில சமயம் தாள முடியாது. முன்பெல்லாம் ஒவ்வொரு முறை மாத்திரையை விழுங்கும் போதும் தொண்டையில் சிக்கிக் கொள்ளுமோ என்ற கலவரம் வரும். அதனாலேயே அதைத் தவிர்க்கப் பார்ப்பான். ஜுரம் தீர்ந்த பிறகும் சூட்டால் உதடுகள் காய்ந்து உலர்ந்து உரிந்து கொண்டிருக்கும். அதைக் கூடப் பிய்த்துப் போடாமல் சும்மா இருப்பான். பிய்த்தால் ரத்தம் வந்துவிடுமோ என்று பயம்.
ஏன் இன்னும் வரவில்லை? அவனுக்கு ஆயாசமாக இருந்தது. இந்த வாட்டி வயிற்று வலியோடு ஜுரம் வந்துவிட்டது. குளிர் வேறு. பனியன், முழுக்கைச் சட்டை, லுங்கி, மேலே போர்வை. எல்லாவற்றையும் மீறி குளிரியது. கையைச் சட்டைக்குள் விட்டுக் கொள்ளலாம் என்றால் அசைக்கவே முடியவில்லை. நடு நெஞ்சில் என்னவோ உறுத்தியது, நீளமான பல்லி மாதிரி. அது ரொம்ப காலமாக நகராமல் அங்கேயே இருந்த மாதிரி தோன்றியது.
ஜுரத்தோடு தலை சுற்றல் வந்தால்தான் ரொம்பப் பிரச்னை. தலையைக்கொஞ்சம் உயர்த்தினால் போதும் அதல பாதளத்துக்குள் சரிவது போல பயங்கரமாக இருக்கும்.
குழந்தையாய் இருக்கையில் ஒரு முறை ஆகாரம் வேண்டாம் என்று மறுத்து அழுதிருக்கிறான். அழுது ஜுரம் ஜாஸ்தியாகப் போகிறதே என்று அம்மாவும் ஒன்றும் தரவில்லை. ‘அய்யோ அம்மா ! பயமா இருக்கே ! பள்ளத்துக்குள்ளே விழறேனே ! பிடிச்சுக்கோ ! பிடிச்சுக்கோ !’ என்று கத்தியிருக்கிறான். அம்மா அலறி அடித்துக் கொண்டு பக்கத்துப் போர்ஷன் மாமியைக் கூப்பிட, அவள், அனுபவஸ்தி, ஆறு குழந்தை பெற்றவள், ‘குழந்தைக்கு ஆகாரம் கொடுத்தியா’ என்று கேட்டிருக்கிறாள். அம்மா இல்லையென்றதும், ‘முதல்லே அதைக் கொடு’ என்று பாலாடையால் புகட்டி, பிறகுதான் தலை சுற்றல் நின்றிருக்கிறது.
ஒரு முறை வேடிக்கைக்காக ஒன்று செய்தான். அப்பா அவனுக்கு ஜுரம் வந்தால் கதை சொல்லிக் கொண்டே இருப்பார். ஒரு தடவை அவர் மடியில் படுத்துக்கொண்டே கண்களை மூடிக் கொண்டு ‘உம்’ கொட்டாமல் இருந்தான். குழந்தை ‘உம் கொட்டவேயில்லையே’ என்று அப்பா பயந்து போய் ‘நாணு ! நாணு !’ என்று அவனை உலுக்கினார். அவன் சும்மா இருந்தான். அம்மாவும் வந்து கலவரத்தோடு அழைத்தாள். சிறிது கழித்து கண்ணைத் திறந்தான். ‘என்னடா என்னடா ‘ என்று அப்பாவும், அம்மாவும் கேட்டார்கள். அவன் வெறுமனே சிரித்து ‘கதை சொல்லுங்கோப்பா’ என்றான். அப்பாவையும் அம்மாவையும் ஏமாற்றினது சந்தோஷமாகவும், பயமாகவும் இருந்தது. நடித்தேன் என்று இன்று வரை சொல்லவில்லை.
முற்றத்தில் வெய்யில் நிரம்பி வழிந்தது. ஆளரவமே இல்லை.
கண்களை மூடிக் கொண்டான்.
ஒரு தடவை ஜுரம் விடவேயில்லை. அம்மை போட்டி விட்டது. ஒரு ஜட்டியை மட்டும் போட்டுக் கொண்டு ஒற்றைத் துணியில் படுக்கை. வாழையிலைக்குப் போகவில்லை. வாய்க் கசப்பு தாளவில்லை. நலைந்து அடி தூரத்தில் இருந்த பீரோ கண்ணாடியில் பார்த்தபோது முகமே தெரியவில்லை. ஏதோ புகைதான் தெரிந்தது.
அன்று இரவு. கதவு வழியாக முற்றத்தில் பெரிய வாண வேடிக்கை நடப்பதைப் பார்த்தான். முற்றத்தில் ஐந்து முகங்களைக் கொண்ட தெரு விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. விர் விர்ரென்று பலரும் சைக்கிளில் பறந்தனர். பிளாஸ்டிக் சாமான்கள் விற்கும் பஜார். தலையில் கர்ச்சீப்பை குல்லா மாதிரி கட்டிக் கொண்டு லுங்கியோடு யார் யாரோ சைக்கிளில் பறந்தனர். கொஞ்ச நேரத்தில் அவன் அவனிலிருந்து கிளம்பி இரண்டு அடி மேலே போய்க் குப்புறத் திரும்பி கீழே பார்த்தான். கோமணம் போன்ற ஜட்டியுடன் உடல் முழுக்க, முகம் முழுக்க வார்த்திருந்த வட்டங்களுடன் கிழித்த நாராக செயலற்றுக் கிடந்த உடம்பைப் பார்த்தான். எத்தனை நேரம் வாண வேடிக்கை, பிளாஸ்டிக் பஜார், சைக்கிள்களின் விர் நடந்ததென்று தெரியாது. அப்போது காலமில்லை. தன்னையே தான் ஒட்டின்றி அனுதாபமின்றி வெறுமனே பார்த்துக் கொண்டிருந்து விட்டு மல்லாந்து மீண்டும் கீழே வந்தான்.
காலையில் அம்மா ‘நாணு நாணு’ என்று மெதுவாக அழைத்தெழுப்புகையில் கண் விழித்த போது எல்லாம் அமைதியாய் இருந்தது. முதல் நாள் கண்ணாடியில் தெரியாமல் மறைந்து போயிருந்த முகம் இப்போது தெரியவாரம்பித்தது. அப்புறம் இருபத்தியோரு நாட்கள் கழித்துதான் தலைக்கு ஜலம் விட்டது, வேப்பிலை மிதக்கும் இதமான வெந்நீர். இது நடந்து ஐந்தாறு வருடங்களாகி விட்டன.
இப்போது கூட ஜுரம் எத்தனை நாளாக இருக்கிறது என்று தெரியவில்லை. அம்மையாய் இருக்குமோ. மனம் சொன்ன உடனே கன்னத்தில் போட்டுக் கொள்வதாய் நினைத்துக் கொண்டான். கையை வெளியே எடுக்க பயமாய் இருந்தது. குளிர். சங்கிலியில் கட்டிய மாதிரி.
ஒரே வலி. எரிச்சல்.
அவன் நெற்றியில் ஒரு கை படர்ந்தது. கை ஜில்லென்று இருந்தது. ஐஸ் மாதிரி இருந்தது. அம்மா. கண்களை அவன் திறக்கவேயில்லை. ஏதாவது சாப்பிடக் கொண்டு வந்திருப்பாள். வாயை மட்டும் திறக்க வேண்டும். மெதுவாக கை நெற்றியிலிருந்து அகன்றது. அம்மா சொல்லட்டும் வாயைத் திறக்கலாம் என்று இருந்தான். அம்மா சொல்லவேயில்லை. சிறிது கழித்து வாயைத் திறக்க எண்ணி, சிறிய கீற்றாக கண்களைத் திறந்து பார்த்தான்.
கண்ணாடி அணிந்து கொண்டு குப்பென்று நரைத்த தலையோடு குண்டாக ஒரு மூதாட்டி நின்று கொண்டிருந்தாள். இது யார் நம்ம வீட்டிற்குள்? அவள் கண்களில் கலவரமும் கண்ணீரும் தெரிந்தன. அவளருகில் வேள்ளை கவுனும், குல்லாயும் அணிந்த ஒரு பெண்ணும், நடு வயது தாண்டிய, லேசான வழுக்கையோடும், நீண்டு வளைந்த மூக்கோடும் இருந்த சிவத்த ஆள் ஒருவரும் நின்று கொண்டிருந்தார்கள். அந்த மூதாட்டி அவரிடம் “ஜுரம் குறையவே இல்லையேடா. அப்பா இது மாதிரி கிடந்ததே இல்லையேடா. எனக்கு பயமா இருக்கேடா” என்றாள். அவர் ‘குறைஞ்சுடும்மா. குறைஞ்சுடும். டாக்டர்லாம் பார்க்கிறாளோல்லியோ. கவலைப் படாதே’ என்றார்.
அம்மாவைத்தான் இன்னும் காணோம்.