தீட்டு
வ.ஸ்ரீநிவாசன் | பிரசுரம் : சொல்வனம் இதழ் 107 | 16-06-2014
எதிர்ச் சாரியிலிருந்த ‘ரிக்ஷா ஸ்டாண்டி’லிருந்து எதற்காக பலர் தன் வீட்டை நோக்கி ஓடுகிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை. இன்னும் ஐம்பதடி தூரத்தில் வீடு. ஓட ஆரம்பித்தவன் உடன் வரும் டாக்டருக்காக நின்றான். “சீக்கிரம் டாக்டர், சீக்கிரம்” என்று பதட்டத்துடனும், மரியாதையுடனும் சொன்னான்.
“டாக்டர் வீட்டுக்குப் போ. அவரை கையோடு அழைச்சுண்டு வா” என்று அம்மா சொன்னதும் கிளம்பி ஐந்து நிமிட ஓட்ட நடையில் அவர் வீட்டுக்கு வந்தும் விட்டான். அவரிடம் “அப்பாவுக்கு உடம்பு சரியில்லை. உடனே வாருங்கள்” என்று அழைத்தபோது மணி பத்தேமுக்கால் இருக்கும். எல்லோரையும் “நேரத்துக்கு சாப்பிடு” என்று சொல்லும் டாக்டர் அப்போதுதான் இரவு சாப்பாட்டை முடித்திருந்தார். கை கழுவி, சட்டை அணிந்து பையை எடுத்துக் கொண்டு அவர் கிளம்ப ஒரு 6,7 நிமிடங்கள் ஆகியிருக்கலாம். அவர் இருந்த தெருவின் இறுதியில் தெருவை அடைத்துக் கொண்டிருந்த சிவன் கோவிலின் கோபுரத்தை நோக்கி நின்று கண்மூடி, கைகூப்பி “அப்பா உடம்புக்கு ஒன்றும் இருக்கக் கூடாது. அப்பா நலமாய் இருக்கவேண்டும்” என்று வேண்டிக் கொண்டான். மனசுக்குள் ஒரு விளம்பரப் பாடல் ஓடிக் கொண்டிருந்தது. சாயந்தரத்திலிருந்தே அந்தப் பாட்டு விடாது ஓடிக் கொண்டிருந்தது.
டாக்டர் வெளியே வந்ததும் அவர் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டான். “என்னாச்சு” என்றார் அவர். “என்னமோ தெரியலை டாக்டர். டாய்லட் போய் விட்டு வந்தார். ஏதோ புஸு புஸுன்னு மூச்சு விடறார். என்னிடம் விளையாடறார் என்று நான் முதலில் நினைத்தேன். அம்மாதான் உடனே டாக்டரை அழச்சுண்டு வான்னு சொன்னா.”
வீட்டு வாயிலில் கூட்டம். சாலையிலிருந்து உள்ளே பார்த்தால் தெரியும் சன்னலில் ஏழெட்டு பேர் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவன் கூட்டத்தை விலக்கிக் கொண்டு உள்ளே விரைந்தான். அப்பா கண்ணை மூடி கட்டிலில் மல்லாக்க படுத்துக் கொண்டிருந்தார். இடது கை மார்பின் மேல் இருந்தது. வலது கை தலைக்கு மேல் இருந்தது. வழக்கமான மடிப்புக் குலையாத எட்டு முழ வேஷ்டி. சிவந்த மார்பு, உள்ளடங்கிய வயிறு. சாதாரணமாகத்தானே இருக்கார்? வாயோரமாக கொஞ்சம் நுரை மாதிரி இருந்தது.
கசகசவென்று சப்தம். அறை வாசலிலும் உள்ளேயும் பக்கத்து விட்டுக் காரர்கள். குழப்புவதற்கென்றே இருப்பவர்கள். அம்மா அழுதவாறே அவனைப் பார்த்தாள். “ராஜா, ராஜா” என்றாள்.
அவன் கூட்டத்தினரைப் பார்த்து “ஒண்ணும் சத்தம் போடாதீங்க. கலவரப்படுத்தாதீங்க. இதோ டக்டர் வந்துட்டார். அப்பாவுக்கு ஒண்ணும் இல்லை” என்றான்.
அம்மா பெருங்குரலில் “அப்பா நம்மளையெல்லாம் விட்டுட்டுப் போயிட்டாடா” என்று அழுகையூடாகவே அலறினாள்.
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவனறியாமல் கால்கள் விட்டுப் போயின. தளர்ந்து விழுந்தவன் அப்பாவின் தலைமாட்டில் இருந்த கட்டிலின் கட்டையில் முகவாயைப் பதித்துக் கொண்டான். அம்மா கையில் இருந்த துண்டை வாங்கி அப்பாவின் வாயைத் துடைத்தான். சுதாரித்துக் கொண்டு “அம்மா. பயப்படாதே. இதோ டாக்டர் வந்து விட்டார். எல்லாம் சரியாயிடும்” என்று அவரைப் பார்த்தான்.
அவர், “ஆமாம்பா. போயிட்டார்” என்று சொல்லி விட்டு, ராஜாவின் அருகில் விழுந்திருந்த தன் பையை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தார்.
அன்று இரவு யார் யாரோ வந்தார்கள். சிலர் அழுது கொண்டே, சிலர் அலறியபடி. பெரிய குரலில் பக்கத்து வீட்டு மாமி “அண்ணா, போயிட்டேளே. சின்னக் குழந்தைகளை விட்டுட்டுப் போக எப்பிடிண்ணா முடிஞ்சுது” என்று கூவி அழுதது அவனை பாதிக்கவில்லை. ஆனால் அப்பாவின் கீழே வேலை பார்க்கும் ஜகன்னாத மாமா வீட்டு வாசலில் வருகையிலேயே குழறி அழுதபடி தட்டுத் தடுமாறி உள்ளே வருவதற்குள் அது அவர்தான் என்று பார்த்துத் தெரிவதற்குள் அவனும் தரையில் கீழே விழுந்து அழுது கொண்டிருந்தான்.
யார் யாரோ யார் யாருக்கெல்லாமோ சேதி தெரிவித்தார்கள். இந்த 18 வயதில் அவன் முதன் முதலாக ஓர் இரவு முழுதும் தூங்கவில்லை.
***
ராஜாவின் சின்னப் பெரியப்பா பையன் அவனை விட 13 வயது பெரியவன். ராஜா அவனை “அம்பி” என்று பெயர் சொல்லித்தான் அழைப்பான். அம்பிக்கு 3 தம்பிகள், 5 தங்கைகள். அவர்கள் அவனை “அம்பியண்ணா” என்று அழைப்பது வேடிக்கையாய் இருக்கும். தன் சொந்தத் தம்பி தங்கைகளைவிட அம்பிக்கு ராஜாவின் மேல்தான் பிரியம் அதிகம் என்று எல்லோரும் சொல்வார்கள். ராஜாவுக்கு அம்பி சொல்வதெல்லாம், செய்வதெல்லாம்தான் சரி. அம்பிக்கு நிறைய சிநேகிதர்கள். அம்பி காதல் திருமணம் செய்து கொண்டான். ராஜாவின் அப்பாதான் அதை பல சிக்கல்களைக் கடந்து நடத்தி வைத்தார்.
தானும் அம்பி மாதிரி இருக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்காமலேயே ராஜா அம்பி மாதிரி இருக்க ஆரம்பித்தான். அவனுக்கும் இப்போது பள்ளி நண்பர்கள் நிறையப் பேர். புதிதாய்ச் சேர்ந்த கல்லூரியிலும் நண்பர்கள். தெருவிலும் நண்பர்கள். க்ரிக்கட் டீம் நண்பர்கள் வேறு.
அவன் உயர் நிலைப்பள்ளியில் ஆறாவது வகுப்பில் சேர்ந்தபோது பத்து நிமிட நடையிலிருந்த அந்தப் பள்ளிக்குச் செல்லும் வழியில் பாதி தூரத்தில் ஒரு சங்கீத பாடசாலை இருந்தது. அதில் பலர் பயின்றார்கள். முதல் நாள் அவன் பள்ளிக்குச் சென்றபோது அந்த சங்கீத வாத்தியாரின் பையன்கள் மூன்று பேரில் நடுவிலவன் ராஜாவை வழி மறித்தான். புத்தகப் பையைப் பிடித்திழுத்து அவனை ஒரு சுற்று சுற்றி விட்டான். இரண்டு மூன்று முறை சுற்றி விட்டு ராஜா தள்ளாடுகையில் அவன் பை, தண்ணீர்க் குடுவை எல்லாம் கீழே விழுந்தன. தன்னை விட ஓரடி உயரத்தில் இருந்த அவனைப் பார்க்கவே பயமாய் இருந்தது. மறு நாளிலிருந்து அம்மா அவ்வழியே சென்ற இன்னொரு பெரிய பையனிடம் துணைக்குப் போகுமாறு சொல்லி அவனோடு ராஜாவைப் பள்ளிக்கு அனுப்பினாள். சங்கீத வாத்தியாரின் மூன்றவது பையன் குரு அவன் கிளாஸிலேயே படித்தான். சென்ற வருடம் + 2 முடித்த போது அவன் ஃபெயிலாகி விட்டான். ஆனால் அதற்குள் காதல் வசப்பட்டு இருந்தான். வசப்படாமல் இருந்தாலும் அவன் ஃபெயில்தான் ஆகியிருப்பான். ராஜாவுக்கு நெருங்கிய தோழனாக இருந்தான். அவன் அண்ணன் 10ம் வகுப்பிலேயே ஃபெயில் ஆகி விட்டதால் அதன் பிறகு சில வருடங்களாக ராஜாவைப் பார்ப்பதையே தவிர்த்தான். ஏழு வருடங்களுக்கு முன் தன்னை மிரட்டியவன் இவன் என்பது கூட மறந்து போய் விட்டது. அது சுமார் ஒரு வார காலத்திலேயே மறக்கவாரம்பித்து விட்டது. குருவும் கடந்த சில மாதங்களாக அவ்வளவாக சந்திப்பதில்லை.
அந்த மூன்றாவது பையன் குரு மூலமாகத்தான் மூர்த்தி ராஜாவுக்கு நண்பனானன்.
மூர்த்தி ஒன்றிரண்டு வயது பெரியவனாக இருக்கக் கூடும். பள்ளியிறுதி முடித்ததும் வேலைக்குப் போய்விட்டானாம். ஒரு தனியார் கம்பனியில் வேலை பார்த்து வந்தான். ராஜாவின் வீட்டிற்கு எதிர்த் தெருவில் மூன்றாவது வீட்டில் இருந்தான். அவனோடு அவன் தாயும், தம்பியும் இருந்தார்கள். தகப்பனார் சிறு வயதிலேயே, அவன் தம்பி பிறந்த கொஞ்ச நாளில் இறந்து விட்டாராம். குரு சொல்லித்தான் இதெல்லாம் ராஜாவுக்குத் தெரியும்.
பள்ளி இறுதி ரிஸல்ட் வரும் வரை ராஜா, குரு, மூர்த்தி மூவரும் பல நாட்கள் சேர்ந்து பேசிக்கொண்டிருந்திருக்கிறார்கள். ரிஸல்ட்டுக்கு அப்புறம் அதுவும் ராஜா கல்லூரியில் சேர்ந்த பின் குரு அதிகம் வருவதில்லை. மாதத்திற்கு ஒரு முறை சந்தித்தால் அதிகம். ஆனால் மூர்த்தி வருவது குறையவில்லை.. மூர்த்தியும், குருவும் தனியே சந்தித்துக் கொள்கிறார்கள் என்பதும் ராஜாவுக்கு தெரியும். நேரம் தோதுபடவில்லை என்று ராஜா நினைத்தான். அது உண்மையும் கூட.
சொல்லப் போனால் மூர்த்தி குருவை விட ராஜாவுக்கு நெருங்கியவனாகி விட்டான். மூர்த்தி பெரும்பாலும் வேட்டி கட்டியிருப்பான். முகம் பளிச்சென்று இருக்கும். விபூதியும், சந்தனமும் இருக்கும். வேலைக்குப் போகும்போது பேன்ட் அணிந்திருப்பான். மூர்த்திக்கும், ராஜாவுக்கும் ஒரே சினிமா கதாநாயகனைப் பிடிக்கும் என்பதுதான் அவர்களை மேலும் பிணைத்தது. அந்தக் கதாநாயகனுக்கு அவ்வளவு ரசிகர் கூட்டம் இல்லை. அவன் நடித்த மோசமான படங்களையும் இருவரும் சேர்ந்து பார்த்தார்கள்.
மூர்த்தி ராஜா விட்டுக்கு வந்தால் உள்ளே வரமாட்டான். வாயிற்கதவருகில் அல்லது வீட்டு மொட்டை மாடியில் நின்று பேசிவிட்டுப் போய் விடுவான். தன் வீட்டுக்கு வருமாறு அவன் ராஜாவை அழைத்ததேயில்ல. ஆனால் பேச ஆரம்பித்தால் மணிக்க்கணக்கில் உலக விஷயம் எல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். சினிமா அவர்களின் பெரிய பேசுவிஷயமாக இருந்தது. அவன் பெண்கள் பற்றி பேசாதது ஓர் ஆச்சர்யம். அதே போல் கோவில், சினிமாவுக்கெல்லாம் கூட வரும் அவன் 2 கி.மீ. தொலைவில் இருந்த மெரீனா பீச்சுக்கு இதுவரை வந்ததில்லை.
ராஜாவின் நண்பர்கள் குழாம் பெரும்பாலான மாலைப் பொழுதுகளை பீச்சில்தான் கழிக்கும். அவன் அப்பாவே, கடற்கரை எதிரில் அமைந்திருந்த தன் கல்லூரியை விட பீச்சில்தான் ராஜா அதிக நேரம் இருக்கிறான் என்றும், அவன் உருப்பட மாட்டனென்றும், இரண்டு வீடு தள்ளி இருக்கும் அவரது 30 வருட பழக்க சலூன் காரரிடம் அஸிஸ்டென்டாகச் சேர்த்து விடப் போவதாகவும் அடிக்கடி சொல்லியிருக்கிறார்.
குருவிடம் ஒருநாள் ராஜா சொன்னான் : “மூர்த்தி எல்லா இடத்துக்கும் வர்ரான். ஆனா பீச்சுக்கு மட்டும் வரவே மாட்டெங்கறான்”. குரு “ஆமாண்டா. அவன் பீச்சுக்கு வரமாட்டான். அவன் அங்கே முன்னாடி சுண்டல் வித்துண்டு இருந்தான். இப்போ வேலைக்குப் போனப்பறம் கொஞ்சம் சௌகரியமா இருக்க்காங்க. அங்கே போனால் பழைய ஞாபகம் எல்லாம் வருமில்லையா. அதான். அவனை கேட்டுடாதே. வருத்தப் படுவான்” என்றான். ராஜவுக்குத் துணுக்கென்றது. பாவம் என்று சொல்லிக் கொண்டான். குருவும், மூர்த்தியும் எவ்வளவு நண்பர்கள் என்றும் தோன்றியது. பொறாமையும் வரவில்லை.
***
அம்பியும், அவன் பிள்ளைத் தாய்ச்சி மனைவியும் ஒரு மணி நேரத்தில் வந்துவிட்டார்கள்.
காலையில் ஊரிலிருந்து இரண்டு பெரியப்பாக்களும் வந்து விட்டார்கள். பெரிய பெரியப்பா அப்பவை விட 10 வயது பெரியவர்; இரண்டாமவர் 8 வயது. பெரியவரின் கம்பனியில் இரண்டாமவர் வேலை பார்க்கிறார். இரண்டு பேரும் காரில் வராமல் ரயிலில்தான் வந்திருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக்குள் நுழைகையில் ராஜா சின்னப் பெரியப்பாவைப் போய்க் கட்டிக் கொண்டு பெருங்குரல் எடுத்து அழுதான். அவர் வெறுமனே நின்றார். ஒன்று பேசவில்லை. பெரிய பெரியப்பாவிடம் அவனுக்கு நெருக்கம் இருந்தது இல்லை. தொடப் பிடிக்காதது போல் அவனை விலக்கி விட்டு சின்னப் பெரியப்பா உள்ளே போனார். அவர் அழவில்லை என்பது அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.
வாத்தியார் வந்ததும் சடங்குகள் ஆரம்பித்தன. தெருவெல்லாம் அப்பா ஆபீஸ்காரர்கள். பக்கத்து வீட்டுக் காரர்கள். தெருக்காரர்கள். நிறையத்தான் கும்பல். அகால மரணம் வேறு அனைவரையும் பாதித்திருந்தது.
அம்பி, ஒன்று விட்ட சித்தப்பா ஒருவர், இரண்டு விட்ட அண்ணன் ஒருவன், ஜகன்னாத மாமா நால்வரும் எல்லாக் காரியங்களையும் பார்த்துக் கொண்டார்கள். ராஜாவின் நண்பர்கள் தலை தெரிந்தது. யாரும் அவன் பக்கம் வரவில்லை.
தெருவில் ஈரத் துணியோடு, வெற்று மார்போடு கையில் தீச்சட்டியோடு “என்ன நடந்தாலும் திரும்பிப் பார்க்கவே கூடாது” என்கிற வாத்தியார் மற்றும் பெரியவர்களின் கட்டளையோடு செல்கையில் தெரு முனையிலிருந்த வீட்டின் மொட்டை மாடியிலிருந்து தன்னைப் பார்க்கமாட்டாளா என்றிருந்த பானு பார்ப்பது தெரிந்தது. அது ஒரு விளைவையுமே ஏற்படுத்தவில்லை என்பதும் தெரிந்தது.
இடுகாட்டில் விறகுகளையும், வரட்டியையும் அடுக்கிய பின் முகத்தின் மேல் ஒரு வரட்டியை வைக்கும் முன் வாத்தியார் “பாத்துக்கோப்பா, கடைசியா ஒருதரம் பாத்துக்கோ” என்றதும் பக்கத்திலிருந்த பலரும் கேவுவதுகேட்டது. அவன் சிதையின் மேல் விழுவது போல் சாய்ந்தான். நான்கைந்து பேர் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அவன் திமிறினான். அவர்கள் அவனை விட மாட்டார்கள் என்பது அவனுக்குத் தெரியும். தன் துக்கம்தான் பெரியது என்று தெரிவிக்க அப்படிச் செய்தான். எல்லாவற்றுக்கும் அடியில் “இது சும்மா. ஒன்றுமேயில்லை” என்று ஓர் அமைதியிருந்ததும் அது லேசாகப் புன்முறுவல் செய்ததும் தெரிந்தது.
கடைசி வரட்டியை மார்பில் வைக்க சொன்னார்கள்.வைத்து எரியூட்டினான். அடக்க முடியாமல் குமுறிக் குமுறி அழுதான். “நாங்கள்ளாம் ராட்சஸாப்பா. இதுவே எங்க வேலை” என்று வாத்தியார் அவனிடம் சொன்னார்.
மாலை வீட்டுக்கு வந்த போது நண்பர்கள் சிலர் இருந்தனர். லேசாக மழை பெயதது. “அப்பா நனைவாரே” என்றான். அவர்கள் ஒன்றும் சொல்லாமல் தலை குனிந்து கொண்டார்கள்.
***
இரவு பெரியப்பாக்களிருவருக்கும் பாயைப் போட்டு ஜமக்களத்தை விரித்து படுக்கை தயார் செய்தான். அப்பா இருந்தால் அதைச் செய்வார். அம்பி இருந்தாலும் அதைச் செய்வான். அம்பி அவன் வீட்டுக்குப் போய் விட்டான். அப்படிப் போவான் என்று ராஜா நினைக்கவில்லை. இந்த ஒரே நாளில் எவ்வளவோ நடந்து இது ஒன்றும் அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. பெரியப்பாக்கள் படுத்துக் கொண்டதும் அவனும் படுத்துக் கொண்டான். உடனே உறங்கி விட்டான். இத்தனைக்கும் மாலை இடுகாட்டிலிருந்து வந்ததுமே சுமார் 36 மணி நேரங்களுக்குப் பின் அவன் தரையில் ஒரு தலையணையை வைத்துக் கொண்டு இரண்டு மணி நேரம் உறங்கியிருக்கிறான்.
நிறைய உறவினர்கள் தங்கி விட்டார்கள். மறு நாள் காலையிலிருந்து நண்பர்கள் ஒவ்வொருவராக வந்தார்கள். அப்போதும் சிலரைப் பார்த்ததும்தான் அழுகை வந்தது. எல்லோரும் சம வயதினர். அவர்களுக்கு இந்த சந்தர்பத்தில் எப்படி இருப்பது என்பது தெரியவில்லை. ஒரு நண்பனிடமிருந்து அப்பா ‘வோடௌஸ்’ புத்தகங்களை வாங்கிப் படிப்பார். அந்த நண்பன் வந்ததும் “இனி வோடௌஸ் புத்தகங்கள் கொண்டு வர வேண்டாம்” என்றான். அதைச் சொல்லும் போதே “பொய். பொய்” என்று கேட்டது.
இரவு அருகில் படுத்துக் கொண்ட சித்தப்பாவிடம் காலை எழுந்ததும் “ஒரு கனவு கண்டேன். ஸ்ரீ ராமரை பட்டபிஷேக கோலத்தில் பார்த்தேன். அவர் திடீரென்று எழுந்து கொண்டு “வாங்கோ. நீங்க ஒக்காருங்கோ” என்றார். அப்பா வந்து கொண்டிருந்தார். அப்புறம் அப்பா சிம்மாசனத்தில் அமர்ந்து கொள்ள ராமர் அருகில் நின்றார்” என்றான். இதில் எத்தனை கனவு எத்தனை புனைவு என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் சித்தப்பா “பயப்படாதே. அதுனாலே ராமர் ஸ்தானத்துக்கு அப்பா பொயிட்டார்ன்னா அர்த்தம். அப்படியெல்லாம் இல்லை. இதுக்காக பகவான் கோச்சுக்க மாட்டார்” என்றார். சித்தப்பாவுக்கு தன் கனவும் அது சொன்ன கதையும் புரியவில்லை என்பது அவனுக்குத் தெரிந்தது. அவன் மேலே ஒன்றும் சொல்லவில்லை.
***
ஆனந்தன், கிரி, விஜயன், குரு, ராமன், கனகசபாபதி, சீனிவாசன், தீனன், குலசேகரன் என்று நண்பர்கள் நாள்தோறும் வந்து கொண்டே இருந்தார்கள்.
13ம் நாள் சுபம். சுப ஸ்வீகாரம். பலருக்கும் தீட்டு கழிந்தது. இனி எல்லாம் சாதாரணம். வழக்கம் போல். கோவிலுக்குப் போய் வந்ததும் எல்லாம் நிறைவுக்கு வந்தன. உறவினர்கள் கிளம்பிப் போக ஆம்பித்தனர். பெரிய பெரியப்பா எத்தனை செலவாச்சு. இனி எத்தனை நாட்களில் அப்பாவின் பி.எஃப், கிராசுவிடி வரும் அதுவரை மாசம் எத்தனை செலவுக்குத் தரவேண்டும் என்பதை ராஜாவின் அம்மாவிடமும், அம்பியிடமும் கேட்டுக் கொண்டார். தான் பணம் அனுப்புவதாகவும் அப்பாவின் பணம் வந்ததும் உடனடியாக தான் அனுப்பிய எல்லாவற்றையும் கணக்குப் பண்ணி அனுப்பி விடவேண்டும் என்று அவர்களிடமும் , ராஜாவிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார். சின்னப் பெரியப்பாவும் அவருடன் போய் விட்டார்.
***
இரண்டு நாட்கள் கழித்து வீட்டு வாசலிலிருந்து இறங்கி தெருவில் ஆனந்தனுடனும், குருவுடனும் பேசிக் கொண்டிருந்தான் ராஜா.
“எப்போடா காலேஜ் போற?” என்றான் குரு.
“அடுத்த வாரம்”.
“இப்போ துணைக்கு யார்டா இருக்கா.?”
“நான் அம்மா, தங்கை அவ்வளவுதான். அம்பி தினம் வருவான். சித்தப்பா ஞாயித்துக் கிழமை வருவார். ஒரு ஒண்ணு விட்ட பெரியம்மா இன்னும் ஒரு மாசம் தங்குவா. அதான் நீங்கள்ளாம் இருக்கேளே.” என்றவன் “துணைக்கு இருக்கற எல்லாருமே ஒருநா செத்துப் போயிடுவா. கடவுள்தான் துணை.” என்று முடித்தான்.
மூவரும் மௌனமானார்கள்.
“என்னமோ இப்படி அடிக்கடி நடிக்கறோம்” என்று நினைத்த ராஜா, நிலைமையை சகஜமாக்க குருவிடம் “டேய். ஒன் ஃப்ரெண்ட் மூர்த்தி எங்கடா? அவன் ஒத்தந்தான் வந்து பார்க்கவேயில்லை” என்றான்.
குரு பதில் சொல்லவில்லை.
“ ஒரு நா விடாம தினம் நான் காலேஜ்லேருந்து வந்ததும் வந்து பாப்பான். இப்போ வரவேயில்லை. ஏன்னு தெரியல. ரெண்டு நா முன்னாடி சுபமாயிடுத்து. இனிமே வருவானாயிருக்கும். “என்ன ஃப்ரெண்ட்டா அவன்.”
தயங்கித் தயங்கி குரு சொன்னான், “அவன் வர மாட்டாண்டா. 10 நாள் முன்னாடி ஜுரத்துல போயிட்டான்.”
ஏற்கனவே இடி விழுந்த தலையில் மீண்டும் ஒரு இடி விழுந்த மாதிரி இருந்தது.
அவனறியாமல் “ஆ” என்று கத்தினான்.
“அவன் போன மூணாம் நாள் அவன் அம்மாவும் போயிட்டா”
முகம் கோணலாகி, வாய் பிளந்து, கொஞ்சம் இடைவேளை எடுத்துக் கொண்டிருந்த, கட்டுப் படுத்த முடியாத அழுகை பீறிட்டுக் கொண்டு வர ராஜா அவர்களை விட்டு விட்டு வீட்டுக்கு உள்ளே ஓடினான்.
***
மறு நாள் குளித்து விட்டு வீட்டுக்குள் ஜன்னல் முன், அவன் அப்பாவைப் போலவே, நின்று ராஜா வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். எதிர்த் தெருவில் யாரோ வருவது போலிருந்தது. ஆ ! மூர்த்தி ! இல்லை, மூர்த்தி இல்லை. வேட்டியும் சட்டையும் மூர்த்தி மாதிரியே இருந்தது. மூர்த்தியை விட கொஞ்சம் பருமன். ஓவ் ! மூர்த்தியின் தம்பி. ஓரிரு தடவை பார்த்திருக்கிறான். பள்ளியிறுதி படித்துக் கொண்டிருப்பவன். இப்போ அவனுக்கு யாருமே இல்லை. அப்பா இல்லை. அண்னனும், அம்மாவும் கூட இப்போ போய் விட்டர்கள். அவன் பெயர் தெரியாது. கூப்பிடலாம் என்று வாயெடுத்தான். அவனை உள்ளே வரச் சொல்லலாம், சாப்பிட்டானா என்று கேட்கலாம் என்று சன்னலிலிருந்து நகர்ந்து அறைக்கு வெளியில் வந்து வாசலை நோக்கி வேகமாகச் செல்கையில் “அவனோடவா சகவாசம்? எவ்வளவு துரதிருஷ்டசாலி” என்ற பயம் கனன்றெழுந்தது. வாசல்வரை போகாமல், அந்த இடத்திலேயே, அப்படியே நின்று விட்டான்.
அதற்குப் பின் அவன் எப்போதும், எங்கும் ராஜாவின் கண்களில் படவேயில்லை.
***
No comments:
Post a Comment