FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Tuesday, June 24, 2014

நானும், அசோகமித்திரன் அவர்களும்

நானும், அசோகமித்திரன் அவர்களும்

 | பிரசுரம் : சொல்வனம் இதழ் 100 | 23-02-2014
“எழுத்தாளர்கள் பெரும்பாலும் மிகச் சிறிய, சாதாரண மனிதர்கள். அநேகமாக அவர்கள் எல்லாருக்கும் அவர்களைப் பற்றி பிறரிடம் சொல்லும்போதோ எழுதும்போதோ நிஜமல்லாதது மிகவும் இயல்பாக வந்து விடுகிறது” – அசோகமித்திரன்.
சொல்வனத்தில் முன்பு ஓர் இலக்கியப் பெருந்தகையைப் பற்றி யார் யாரிடம் கட்டுரைகள் கேட்கலாம் என்று ஆலோசித்தபோது ஒரு பிரபலஸ்தரின் பெயர் மொழியப்பட்டது. அப்போது அவரிடம் கேட்டால் அவர் முழுக்க முழுக்கத் தன்னைப் பற்றி எழுதிக் கொண்டு விடுவார் என்று சொல்லப்பட்டதும் ‘ஆம், உண்மைதான்’ என்று அவரை அணுகவில்லை. இப்போது அசோகமித்திரன் பற்றிய கட்டுரைகளைத் தாங்கி வரும் சிறப்பிதழில்  என் இந்தக் கட்டுரையும் அதே போல் அதிகம் என்னைப் பற்றி இருக்கும் என்கிற சம்சயம் இருப்பதால்தான் மேற்படி தலைப்பு.
ami_tn copyஒரு நேர்காணலில்  அசோகமித்திரன் இப்படிச் சொல்கிறார் “ஓர் எழுத்தாளனை எவ்வளவு விரிவாகப் பேட்டி கண்டாலும் அது அரைகுறையாகத் தான் இருக்கும். ஆனால் ஒரு சிறுகதையைப் படித்தால் கூட அந்த எழுத்தாளர் பற்றி நிறைய அறிய முடியும்.” அதே போல் இது போன்ற தனி மனிதத் ‘தன்மை’ நோக்கு எப்படியும் மிகுந்துவிடும்  நினைவுப் பதிவுகளாலும் ஓர் எழுத்தாளரைப் பற்றி முழுவதும்  தெரிந்து கொள்ள முடியாது. ஒரு வரியில், ஒரு வாசகத்தில் கவனமான வாசகனுக்கு எழுத்தாளன் அகப்பட்டு விடுவான். ஆயினும் நேரில் சந்தித்துப் பழகுகையில் எழுத்தைச் சார்ந்து மற்றும் எழுத்துக்கு அப்பாற்பட்டு ஒரு சில கவனிப்புகள் நிகழும். அதுவே நீண்ட காலமான தொடர்பாய் இருக்கையில் அது பற்றிய நினைவுகூரல் அவ்வெழுத்தாளரின் எழுத்துகளுக்கு ஓர் அனுபந்தமாய் அமைய வாய்ப்புண்டு. மிக நெருங்கிய உறவினரிடையே உள்ள எடைபோடல்கள், கணிப்புகள் கூட ஒரு மனிதனை சரியாக உருவப்படுத்தித் தர முடியாது. என்றாலும் இவ்வனுபவங்கள் மூலம் ஒரு சித்திரத்தை வரைய முயல்கிறோம். பிள்ளையாரைப் பிள்ளையாராய்ப் பிடிப்பதே கஷ்டம். என்னவாகவெல்லாமோ முடிந்து விடும். அதனால்தான் ‘நானும்’ என்று என்னைப் பிரதானப் படுத்திக் கொண்டு  இக்கட்டுரை.
எனினும் கணந்தோறும் மாறிக் கொண்டே இருக்கிற மனித ஜீவராசியில் ஒரு மனிதனை ‘இவன் இன்னான்’ ‘இப்படிப்பட்டவன்’ என்று எப்படிச் சொல்ல முடியும். என்னைப் பற்றியே என்னால் சொல்லிக் கொள்ள முடியாதே. ஆனால் ஒருவருடனான உறவு எனக்கு என்னவிதமான தாக்கங்களை, உணர்வுகளை, நினைவுகளைத் தந்திருக்கிறது என்று சொல்லலாம். அதில் நேர்மையிருந்தால், அன்பிருந்தால் அது ஓரளவு பயனுள்ளதாகலாம்.
கல்லூரிக் காலத்தில், 1970களின் ஆரம்பத்தில் ‘கணையாழி’ எங்கள் நண்பர் குழாமிற்கு அறிமுகம் ஆனது. அத்துடன் எங்களைப் பிரமிப்பில் ஆழ்த்திய அசோகமித்திரன் அவர்களது எழுத்துகளும். விரைவிலேயே என்னுடைய பள்ளி நண்பர் திரு. என். கல்யாணராமனுடையதும், என்னுடையதுமான எழுத்துகள் கணையாழியில் வெளிவந்தன. கணையாழியை சென்னையிலிருந்து நடத்தி வந்தவர் அசோகமித்திரன். கல்யாணராமனின் பெயர் இருந்த பக்கம் தவறிப் போனதால் கணையாழி ஆசிரியர் ‘சிவசங்கரா’ என்கிற பெயரில் அதை வெளியிட்டார். (‘சிவசங்கரி’ அப்போது மிகவும் பிரபலமான ஜனரஞ்சகப் பத்ரிகை எழுத்தாளர்.) அவரெழுத்துகள் கிட்டத் தட்ட ஒரு ‘சென்சேஷன்’ மாதிரி ஆயின. வெங்கட் சாமிநாதன், சுந்தர ராமசாமி போன்றவர்களையும் கவர்ந்தன. சிவசங்கரா அப்பொதைய எதிர்பார்ப்பில் இன்று ஜெயமோகன் போல் பரவலான அங்கீகாரமும், வாசகர் வட்டமும், தாக்கமும், புகழும் உடைய ஓர் ஆளுமையாக வருவார் என்று எண்ணப்பட்டது. ஆனால் நம்புவதெல்லாம் நடப்பது உண்டா என்ன?
அசோகமித்திரனின் உறவுக்கார இளைஞர்கள் ஐ.ஐ.டி.யில் படித்து வந்த கல்யாணராமனைச் சந்தித்து அசோகமித்திரனை சந்திக்குமாறு சொன்னார்கள். அசோகமித்திரனைச் சந்திக்கச் செல்கையில் கல்யாணராமன் என்னையும் உடன் வரச் சொன்னார்.
அப்போது அசோகமித்திரன் தியாகராய நகரில் தாமோதர ரெட்டி தெருவில் தம் சொந்த வீட்டில் இருந்தார். சொந்த வீடு என்றால் அவரது குடும்ப வீடு. மாடிக் கட்டிடம். தனி வீடு. சந்திப்பு சுமுகமாக, சௌகர்யமாக அமைந்தது. அதன் பின் நான் அவ்வப்போது சென்று அவரைச் சந்தித்து வந்தேன். அப்போதே ‘இல்லஸ்ட்ரேடட் வீக்லி’யில் அவர் எழுத்துகள் வெளிவந்திருந்தன.
ASOKAMITHTHIRAN-4

நன்றி : ‘காலம்’ இதழ்
எப்போதுமே அவரிடம் அதிகம் பேசிவிட முடியும். அந்த விதத்தில் அவர் மற்றும் அதற்கு சுமார் 30 வருடங்கள் கழித்து சந்தித்து நெருங்கிய நண்பராகிவிட்ட  திரு. நாஞ்சில் நாடன் இருவருமே எழுத்தாளர்களில் அதிசயமாக நாம் பேசுவதைக் கேட்பவர்கள்; தாங்கள் பேச வேண்டியதைக் கூட பேசாத அளவுக்கு இடம் கொடுப்பவர்கள். ஆரம்ப காலத்திலும், இப்போது போலவே, நானும் மனதில் தோன்றியதையெல்லாம் பேசினேன். ஒரு கேள்வி இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. “சார்த்தர் (அப்போதெல்லாம் சாத்ரே :-) ) எப்படி? ஜே.க்ருஷ்ணமூர்த்தி மாதிரியானவரா?” இந்த மாதிரியெல்லாம் கேட்டதாலோ என்னவோ அசோகமித்திரன் கல்யாணராமனிடம் “ஹி ஈஸ் எ ஹாட் ஃபெல்லோ. இவனோடு எப்படி ஃப்ரெண்டாய் இருக்கிறீர்கள்?”என்று கேட்டிருக்கிறார். கல்யாணராமனும் கர்ம சிரத்தையாய் என்னிடம் அதை வந்து சொல்லியும் விட்டா(ன்)ர். ஆனால் ஆச்சர்யகரமாக இந்த விஷயம் என் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நான் அவரிடம் எப்போதும் போலவே இருந்தேன். இது நினைவில் ஒரு வடுவையும் ஏற்படுத்தாத வெறும் செய்தியாக அப்படியே நிற்கிறது.
இதற்குள் இரண்டு கதைகளும், சில கடிதங்களும், கவிதைகளும் என்னுடையவை கணையாழியில் வெளிவந்து விட்டன. மூன்றாவதாக ‘கிணற்றில் விழுந்த சோகம்’ என்கிற கதையை எழுதிக் கையெழுத்துப் பிரதியை அசோகமித்திரனிடம் கொடுத்தேன். சில நாட்கள் கழித்து அவர் வீட்டுக்கு ஒரு பின் மாலை நேரத்தில் போனபோது, அவர் மாடியிலிருந்து இறங்கி வந்தார். எனக்கு அருகில் வந்து“ரொம்ப நன்னா இருக்கு. கடவுள் அருளால நீ நன்னா இருக்கணும். நிறைய எழுதணும். நன்னா வரணும்” என்று ஆசீர்வதிப்பது போல் ஒரு புனித உணர்வோடு மெல்லச் சொன்னார். பின் அந்தக் கதை ‘கணையாழி’யில் பிரசுரமாகியது. திரு. விட்டல் ராவ் அவர்கள் தொகுத்த ‘இந்த நூற்றாண்டு சிறுகதைகள்’ நூலிலும் இடம் பெற்றது.
அசோகமித்திரனின் ஆசி பற்றிச் சொல்கையில், மீண்டும், “நம்புவதெல்லாம் நடப்பது உண்டா என்ன?”தான். நான் அதற்கப்புறம் அதிகம் எழுதி பத்ரிகைகளுக்கு அனுப்பவில்லை. இரண்டு கதைகளும், சில கவிதைகளும் கணையாழியில் வெளிவந்தன.
ஒரு வேளை நம்பியது நடப்பது உண்டுதான் போலும், நம் காலக் கணக்குகளுக்கு அப்பாற்பட்டு. சுமார் 30 வருடங்கள் கழிந்த பின்னர் ‘வார்த்தை’ இதழில் மீண்டும் நான் எழுதத் துவங்கி அது ‘சொல்வனத்தில்’ தொடர்கிறது. கல்யாணராமனும் தன் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குச் செய்யும் மொழிபெயர்ப்புகள் மூலம் மிக அவசியமான தமிழ் இலக்கியச் சேவை செய்து வருகிறார். அவரது சொல்வனம் பேட்டியை இங்கே காணலாம்.
அந்த முதல் சந்திப்புகளில் அவர் புத்தகங்களை அவர் வீட்டில் பெறுகையில் அதில் கலர் பென்சிலால் கையெழுத்திட்டுத் தருவார். சில வருடங்களுக்கு முன்பு புத்தகக் கண்காட்சியில் அவரைச் சந்தித்த போது ஒரு நூலில் கையெழுத்து இட்டுத் தருகையில் “நாற்பதாண்டு கால நண்பர்” என்று குறிப்பிட்டிருந்தார்.
செஸ் ஆடுவார். அவர் வீட்டில் ஆடிப் பார்த்த ஞாபகம் இருகிறது. வீட்டைப் பெருக்கி அறையைச் சுத்தம் செய்வார். ஒரு வராந்தா இருக்கும்  அதில் ஓரிரு நற்காலிகள். அதில் ஒரு மர நாற்காலிக்குக் ஒரு கை இருக்காது.
திருவல்லிக்கேணியில் என் வீட்டிற்கு அசோகமித்திரன் வந்திருக்கிறார். பின் அபிராமபுரத்தில் நாங்கள் இருந்தபோது அந்த இல்லத்திற்கும் வந்திருக்கிறார். கல்கத்தாவிற்கு வந்தபோது என் வீட்டில் தங்கியிருக்கிறார்.
சேலம், கல்கத்தா, வேலூர், திருச்சி, கோவை என்று பல ஊர்களில் இருந்த சமயங்களில் சென்னைக்குச் செல்லும் போதெல்லாம் கூடியவரை அவரைப் பார்ப்பதுண்டு. சந்திப்புகள் தி.நகரிலிருந்த அவர் வீடு அடுக்ககமான பின்பும் தொடர்ந்தது. பின்னர் அவர் வேளச்சேரியில் உள்ள அடுக்ககத்திற்குச் சென்ற பின்னரும்  தொடர்கிறது.
ASOKAMITHTHIRAN-251, PHOTO BY PUTHUR SARAVANAN
ஒருமுறை 1988ல் கலகத்தாவிலிருந்து வந்தபோது அவரைச் சந்திக்கையில் “உங்களுக்கு ப்ளட் ப்ரெஷர் இருக்கா?’ என்று கேட்டார். நான் இல்லை என்றேன். “இல்லை உங்கள் கழுத்தைப் பார்த்தால் அப்படித் தெரிகிறது” என்றார். அதற்கு இரண்டு வருடங்கள் கழித்து உயர் ரத்த அழுத்தம் என்னோடு வந்து இணைபிரியாமல் ஒட்டிக் கொண்டது.
பின்பொருமுறை உயர் ரத்த அழுத்தம் இருப்பதை  அவரிடம் சொன்னபோது ‘இது மாதிரி பல விஷயங்களிலும் ஈடுபாடு இருக்கும் உங்களுக்கு இது எப்படி வந்தது?” என்று ஆச்சர்யப் பட்டார்.
ஃபார்மலான விசாரணைகள் இருக்காது. இப்போதும் ஃபோன் செய்தால் ‘நான் ஸ்ரீநிவாசன் பேசுகிறேன்” என்றெல்லாம் அவரிடம் சொல்ல வேண்டாம். அவர் எடுத்தவுடனே “சொல்லுங்கோ” என்றுதான் ஆரம்பிப்பார். அதே போல் விஷயம் இல்லாமல் பேச்சை இழுத்துக் கொண்டிருக்க மாட்டார். ரொம்ப ‘ப்ருஸ்க்’காக நாம் பேசுவதைக் ‘கட்’ பண்ணவும் மாட்டார். சரியான அளவு சரியாகப் பேசுவார். பேச்சில் நேரில் பேசுகையில் இருக்கும் நகைச்சுவை அப்படியே வரும். கொஞ்சம் அசந்தால் நாம் நிறைய சுவைகளை விட்டு விடுவோம்.
வீட்டிற்குப் போனதும் பிஸியாக இருந்தால் சொல்லிவிடுவார். வீட்டில் ‘திவசம்’போன்றவை நடக்கையில் இருக்கச் சொல்லிப் பேசுவது என்பது கிடையாது. ஆனால் அனாவசியமாக பிகு செய்து கொள்பவர் இல்லை. தி.நகரில் கிருஷ்ணவேணி தியேட்டர் அருகில், பஸ் டெர்மினஸுக்கு எதிரில் அவர் தெரு. வீட்டிலிருந்து வெளியே வந்து தியேட்டர் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் காஃபி சப்பிடுவோம். இப்போதெல்லாம் வேளச்சேரியில் அவர் வீட்டிலேயே காஃபி தந்து விடுகிறார்கள். நல்ல காஃபி. திருமதி.அசோகமித்திரன் சகஜமாக ‘வா, போ” என்று பேசுவார்கள். இவர் இன்னமும் மரியாதையாகத்தான் பேசுவார். பிறரிடம் பேசுகையில் அவன் இவன் என்று சொல்லலாம்.
ஒரு முறை ஒரு மிக முக்கியமான தமிழ் எழுத்தாளர் ஒருவருக்கு இதய சிகித்சை நடை பெற்று இருந்தது. அவர் அசோக மித்திரன் அவர்களுக்கு நெடு நாளைய நண்பர்.  ஊரிலிருந்து வந்த நான் “சார். அவருக்கு இதய சிகித்சை நடைபெற்றது” என்று சொன்னேன். அவர் உடனே “ ஓ ! அப்போ அவரும் மேஜர் ரைட்டர் ஆயிட்டருன்னு சொல்லுங்கோ” என்றார். இதை நான் பின்னர் ஊரிலிருந்த நண்பரிடமும் சொன்னேன். அவர் இதைக் கேட்டு விட்டு ரசித்து சிரித்தார். 2011ல் நானும் மேஜர் ரைட்டர் ஆகி விட்டேன்.
இந்த மாதிரியான கருப்பு நகைச்சுவை’ தவிர தூய நகைச்சுவையும் அவரிடம் கொட்டிக் கிடக்கும். 5, 6 வருடங்களுக்கு முன் சென்னையில் நான் சாலிகிராமத்தில் இருந்தபோது அவர் வேளச்சேரியில் இருந்தார். ஒருநாள் “சந்திக்க வரவா?” என்று ஃபோனில் கேட்டபோது, “அவ்வளவு தூரம் வர வேண்டாம் நான் புத்தகக் கண்காட்சிக்கு நாளை வருகிறேன். அங்கே சந்திக்கலாம்” என்று சொன்னார். அங்கு சென்றேன். ‘காலச் சுவடு’ ஸ்டாலில் அவர் வாசகர்களுக்கு நூல்களில் ‘கையொப்பம்’ இட்டுக் கொண்டிருந்தார். நான் அவர் அருகில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். ஓர் அன்பர் அருகில் வந்தார். 25,30 வயதுக்காரர். அவர் மிகுந்த மரியதையுடன் அசோகமித்திரனிடம் பேசிக் கொண்டே இருந்தார். இவரும் வழக்கம்போல் கேட்டுக் கொண்டிருந்தார்.  ஒரு சமயம் அசோகமித்திரன் நாற்காலியிலிருந்து எழுந்துகொண்ட போது “சார்! உட்காருங்க ! உட்காருங்க! நீங்க ஏன் எழுந்துக்கறீங்க ? என்ன வேணும் சொல்லுங்க. நான் கொண்டு வர்ரேன்” என்றார். “இல்ல சார் பரவாயில்லை” என்றார் அசோகமித்திரன். “நோ நோ ! என்ன வேணும் சொல்லுங்க நான் செய்யறேன்” என்றார் அவர். அசோகமித்திரன் மீண்டும் “பரவாயில்லங்க” என்றார். அவ்விளைஞர் விடுவதாய் இல்லை. அப்போது அசோக மித்திரன் சொன்னார்: “இதை நான் மட்டுந்தான் செய்ய முடியும். எனக்காக வேற யாரும் செய்ய முடியாது சார்”என்று சொல்லி விட்டு சிரித்தார். பிறகு ‘டாய்லெட்’ பக்கம் போனார்.
இப்போது சமீபத்தில் சொல்வனம் கலந்துரையாடல் ஏற்பாடுகள் பற்றி ஃபோனில் அவரிடம் சொன்னபோது, “ஓஹோ கஸ்தூர்பா நகரிலா? அங்கே ஒரு ‘ஹியரிங் எய்ட் ரிப்பேர்’ கடை இருக்கு. அங்கே கொஞ்சம் போயிட்டு போக முடியுமா? இதை ரவிசங்கரோட ‘காதுல’ போடறேளா?” என்று கேட்டு விட்டு சிரித்தார்.
அந்தக் கலந்துரையாடலில் கூட என்னைப் பற்றிக் குறிப்பிடுகையில் கோயம்பத்தூரில் இருக்கிறார், என்று சொல்லி ஸ்ரீரங்கத்தில் என்று திருத்தியதும் “கோயம்பத்தூர் என்றால் ஸ்ரீரங்கத்தில் இருக்கிறேன் என்பார், ஸ்ரீரங்கம் என்றால் கோயம்பத்தூர் என்பார்” என்று சொல்லுவதுதான் அவர் பாணி. சில தனிப்பட்ட வேலைகள் காரணமாக இரண்டு ஊரிலும் இருந்து கொண்டிருக்கும் எனக்கே இந்த சந்தேகம் வருவதுண்டு. ‘ஜன் சதாப்தி’யில் திருச்சி கோவைக்கிடையே எத்திசையில் செல்கையிலும் சக பயணி “எங்கே இருக்கீங்க?” என்றதும் நானே “நாம் எங்குதான் இருக்கிறோம்” என்று திகைப்பது வழக்கம்.
தி. நகரில் ஒரு சமயம் இவரைச் சென்று சந்தித்தபோது வேறு சிலரும் இருந்தார்கள். அவர்கள் பின்னாளில் எழுத்துத் துறையில் பிரபலமானவர்களானார்கள். ஒருவர் மிகவும் பிரபலம் ஆகியுள்ளார். அவர் அசோகமித்திரனிடம் ஒரு பேனாவைக் கொடுத்து “கரைந்த நிழல்கள் எழுதிய கைகளுக்கு” என்று நாடக பாணியில் சொன்னார். அவர்கள் எல்லோரும் கொஞ்ச நேரம் கழித்துப் போய்விட்டர்கள். அப்போது அசோக மித்திரன் சொன்னார் : “இவர் கரைந்த நிழல்களைப் படிக்கவேயில்லை.”
ஆனால் எந்த ஓர் எழுத்தாளரைப் பற்றியும், அவர்களது தனி வாழ்க்கை பற்றியும் கேவலமாகவோ, துவேஷத்துடனோ ஒரு வார்த்தை சொன்னதில்லை. பிரமிளோடு ஆன ஒரு சந்திப்பில் ஜே. க்ருஷ்ணமூர்த்தி பற்றி அவர் சொன்னவையெல்லாம் தவறு என்று ஆணித்தரமாக இவர் ஒருமுறை சொல்லி நிறுவியிருக்கிறார். ஆனால் பிரமிள் பற்றி தரக் குறைவான விமர்சனங்கள் வந்ததே இல்லை. (சொல்லப் போனால் நான் படிக்காத பிரமிளின் எழுத்து ஒன்றின்  பிரதியை என்னிடம் கொடுத்தார். நான் அதை எடுத்துவர மறந்து விட்டேன்.) அதே போல் வெங்கட் சாமிநாதன் பற்றியோ, சுந்தர ராமசாமி பற்றியோ கூட. ஜெயகாந்தனிடம் கணையாழிக்காக தொடர்பு கொண்டபோது அவர் எவ்வளவு கண்ணியமாக நடந்து கொண்டார் என்பதைப் பற்றிச் சொல்லியுள்ளார்.
அவர் மூத்த மகன் ரவிசங்கர் அஸ்ஸாமில் இருந்த போது  கல்கத்தாவில் இருந்த என் வீட்டிற்கு வருவதுண்டு. மிக அமைதியான, இனிமையான பையன். இளைய மகன் முத்துக் குமாரும் வந்திருக்கிறார். அசோக மித்திரனின் மூன்றாவது மகன் ராமக்ருஷ்ணன் குமுதத்தில் ஒரு ‘சைகிள் தொலையும் கதை’ எழுதியிருப்பார். அருமையான புத்திசாலித்தனமான வியக்க வைக்கும் கதை. மூவரையும் பற்றி நினைக்கையில் தோன்றும் : ‘அவரவர் எச்சத்தாற் காணப் படும்.
அசோகமித்திரன், மனைவி குழந்தையுடன். நன்றி : 'காலம்' இதழ்

அசோகமித்திரன், மனைவி குழந்தையுடன். நன்றி : ‘காலம்’ இதழ்
ஃபோன் போன்றவையெல்லாம் 1990 களுக்குப் பின்னர்தான் சாமான்யருக்கும் சாத்தியமாகின. அதற்கு முன்னர், அதற்குப் பின்னரும் கூட போஸ்ட் கார்டில் தொடர்பு இருந்தது. போஸ்ட் கார்டில் ‘டியர் ஃப்ரெண்ட்’ என்றுதான் ஆரம்பிப்பார். பெயர் விளிப்பு இருக்காது.
அசோக மித்திரன் மெல்லிய குரலில், சிரித்துக் கொண்டே, அனாயாசமாகப் பல அற்புதங்களைச் சொல்லிவிடுவார். சில வருடங்களுக்கு முன் ஜெயமோகனின் கோவை வாசகர் சந்திப்பில் திரு. சண்முக நாதன் என்கிற ஒருவர் அசோகமித்திரன் டில்லி வந்திருந்த போது அவர் நினைவில் நிற்கும் ஒரு வாசகத்தினைக் கூறுமாறு கேட்டவர்களிடம் அவர் (அசோகமித்திரன்) சொன்னதைச் சொன்னார்: “The futility of gratification of a desire”.
இதே போல் ஒரு வாசகத்தினை ஜெயமோகனிடம் கேட்ட போது அவர் சொன்னது: “ Wave is nothing but water, so is the sea”. இருவரின் ‘பெர்ஸனாலிடி’ யும் இதில் தெரிவதாக எனக்குத் தோன்றியது.
தனிப்பேச்சுகளில் அவர் தன் கருத்துகளை மழுப்பிச் சொன்னதில்லை. மேடைகளிலும், நேர்காணல்களிலும் கூட நல்ல பெயர் வாங்க ‘பொலிடிகல்லி கரெக்ட்’ டாக தொனிக்க, வரலாற்றில் ‘முற்போக்கு’முத்திரை பெற அவர் பேசியதில்லை.
ஒரு பிரபல தமிழ் நடிகர் பற்றி சொல்கையில் ‘விஷக் கிணறு’ என்றும் பிரபல இயக்குனரை ‘விஷ ஊற்று’ என்றும் என்னிடம் சொன்னார்.
‘ 70 களில் பேசுகையில் “இன்னும் பத்து வருடங்களில் பிராமண துவேஷம் இருக்காது” என்று அவர் சொன்னார். நான் “இல்லை சார், தி.மு.க. ஆட்சி அமைந்தபின் பல்கலைக் கழகங்கள், கல்வி சம்பந்தப் பட்ட துறைகள், அரசு இயந்திரத்தின் முக்கிய இடங்கள் ஆகியவற்றில் எல்லாம் தங்கள் கட்சியின் மற்றும் தி.க.வினரின் கொள்கைகளோடு உடன்படுபவர்களாகவே சேர்த்துவிட்டார்கள். அதனால் இது இன்னும், குறைந்த பட்சம் இலக்கிய, அறிவுஜீவி உலகிலாவது மிகவும் அதிகரிக்குமேயன்றி குறைய வாய்ப்பில்லை” என்றேன். பல வருடங்கள் கழித்து இந்த உரையாடலை நினைவுகூறி “நீங்கள் சொன்ன மாதிரிதான் ஆகிவிட்டது” என்று சொன்னார்.
கல்கத்தாவுக்கு இவர் வந்த சமயம் எனக்கு உடல் நலமில்லாமல் இருந்தது. ஆனால் அவரிடம் சொல்லவில்லை. கல்கத்தா தமிழ்ச் சங்கம் அவரை வரவழைத்திருந்தது. என் வீட்டில் தங்கினார். அங்கிருந்தே பீஹார் சென்று அவர் தம்பியையும் அவர் குடும்பத்தினரையும் சந்தித்து வந்தார். இராமக்ருஷ்ண மடத்திற்குச் சென்று வந்தார். அங்கு இராமக்ருஷ்ணரின் சிலை முன்பு முழந்தாளிட்டு அவர் வணங்கும் போது அவரது உடல் எவ்வளவு நெகிழ்ச்சியாக, கெட்டிப்படாமல் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். அதே போல் அவரை விட சுமார் 20 வயது இளையவனான எனக்குத் தூக்க சிரமமாக இருந்த தோள் பையை சிரமமில்லாமல் தூக்கிக் கொண்டார். என்னிடமிருந்து அவர் வாங்கிக் கொண்டதும் எனக்கு உண்மையிலேயே ‘அப்பாடா’ என்றிருந்தது. அவர் எழுத்துகளும் அவ்வாறே. வெளியில் தோன்றும் எளிய மெல்லிய தோற்றத்துக்கு உள்ளே சக்தியும், வலுவும் மிக்க ஆரோக்கியமான ஒன்று.
கல்கத்தாவிலிருந்து பின் பாங்காக் சென்று வந்தார். அங்கிருந்து வருகையில் என் 4 வயது மகளுக்கு ஒரு ஃப்ராக்’ வாங்கி வந்திருந்தார். அவருக்கு அதற்கு நேரமும், கவனமும்,  மனமும் இருந்திருக்கிறது. அதுதான் அசோகமித்திரன்.
சாப்பாடு மேசையில் அவர் சாப்பிடுகையில் என் பெண் மேசையின் மேல் அமர்ந்து கொண்டு அவரோடு பேசுவாள். அவர் அவளிடம் “என்னம்மா கிளி, சொல்லும்மா கிளி” என்றுதான் பேசுவார். எல்லாக் குழந்தைகளையும் அப்படித்தான் சொல்வார் போலும். தமிழர்களையே சந்திப்பது அபூர்வம் என்கிற படியால் வீட்டுக்கு வரும் தமிழ் நாட்டுக்காரர்களோடு விடாமல் அவள் பேசுவாள். மேலும் எல்லோரையும் போலவே அவளும் அவரிடம் அதிகம் பேசினாள்.  “உங்க பல் ஏன் இப்படி இருக்கு?” என்பது போன்ற பிறரைக் கூச்சமோ, கோபமோ கொள்ளச் செய்து விடும் கேள்விகளையும் அவர் கவனத்துடன் கேட்டு அவள் கேள்விக்கெல்லாம் அசராமல் பொறுமையாகப் பதில் சொன்னார்.
என் மனைவியோடு பேசிக் கொண்டிருந்த போது, சுஜாதா வாசகியான அவரிடம், “ஸ்ரீநிவாசனுக்கெல்லாம் சுஜாதாவை அவ்வளவு பிடிக்காது. சுஜாதா எழுதுவார். ஆனால் கொஞ்சம் வக்கிரம்” என்றார். சாப்பிட்ட சமையலை, குறிப்பாக ரசத்தை மிகவும் புகழ்ந்தார் என்பதை இன்னமும் என் மனைவி நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு எந்த விஷயமுமே பொருட்படுத்தத்தக்கதுதான். ஆனால் உண்மையிலேயே பொருட்களின் மேல் ஆசையில்லாதவர், பொருள் ஈட்டுவதிலும்.
எழுதுவதும், படிப்பதும் தரும் மகிழ்ச்சிக்காகவே இலக்கியத்தில் இருக்கிறார்.
கல்கத்தா தமிழ் சங்கத்தில் பேசுகையில் ‘இன்னும் சுமார் பத்து வருடங்களில் அடுத்த நூற்றாண்டு வரப் போகிறது. அப்போது நீங்கள் எல்லோரும் இருப்பீர்கள். நான் நிச்சயம் இருக்க மாட்டேன்’ என்று பேசினார். என்னடா இது இப்படிப் பேசுகிறாரே என்று தோன்றியது.
சென்னையில் நான் இருந்த காலத்திலும், இல்லாத போதும் என் வீட்டிற்கு வந்து என் அம்மா, தங்கை குடும்பத்தாரைப் பார்த்து விட்டுப் போவார்.
1990களில் அவர் சிங்கப்பூர் போக நேர்ந்தபோது வெகு நாள் இடைவெளிக்குப் பின் என்னைத் தொடர்பு கொண்டார். அப்போது என் தங்கை குடும்பம் அங்கே போய் செட்டில் ஆகி விட்டார்கள். அவர்கள் வீட்டில் கூடப் போய்த் தங்கலாம் என்று சொன்னோம். “என்னவாவது எடுத்துப் போக வேண்டுமா?” என்று அவர் கேட்டதும் “சரி தருகிறேன்” என்று என் அம்மா சொன்னார். அப்போது என் அம்மா உடல் நலம் குன்றி வீட்டில் படுத்திருந்தார். ஆனால் மீண்டும் அசோகமித்திரன் வீட்டிற்கு வந்தபோது அவர் ஏதோ சென்னையிலிருந்து திருச்சியோ, கோவையோ செல்வது மாதிரி எண்ணி சற்று பெரிதான ஒரு பார்சலை என் அம்மா என் தங்கைக்காகக் கட்டித் தந்து விட்டார். அதுவும், அப்போது அசோகமித்திரனுக்கு வந்த தர்ம சங்கடமுமாக அவர் எழுதும் கதை ஒன்று என் முன் நடந்தேறியது. ஆனால் அவர் அது பற்றி எழுதவில்லை. நானும். இப்போது சொல்லிவிட்டதால் இனி கதையாக்க முடியாது. அந்த பொருட்களை அவர் தவறாது எடுத்தும் சென்றார்.
சிங்கப்பூரில் என் தங்கை திருமதி.அசோகமித்திரனை சில இடங்களுக்கு அழைத்துச் சென்றார். அவர் மகன் உபநயனத்தின் போது அசோகமித்திரனும் திருமதியும் வந்திருந்தார்கள். க்ரேஸி மோஹனும் வந்திருந்தார். அவர் இவரைப் பார்த்ததும் ‘இவர் செய்யறதுதான் இலக்கியம், நாங்கள் செய்யறதெல்லாம் கலக்கியம்’ என்று அவர் பாணியில் சொன்னார். இது 1997டிஸம்பரில் நடந்தது. 2009 ஆகஸ்ட்டில் என் மகள் திருமணத்தின் போது அசோகமித்திரன் உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி இருந்ததால் வர முடியவில்லை. பின்னர்2011 நவம்பரில் என் தங்கையின் மகன் திருமணத்துக்கும் அசோகமித்திரன் திருமதியோடு வந்திருந்தார். மிகவும் பலஹீனமாக இருந்தார். கிளம்புகையில் அவர் காரில் கண்களை மூடி சரிந்து அமர்ந்ததும் நன் பயந்து போய் விட்டேன். வீட்டிற்குப் போய்ச் சேர்ந்து ஃபோனில் பேசியதும்தான் நிம்மதியாயிற்று.
சொல்வனத்துக்காகக் கேட்டதும் உடனே தி.ஜா. பற்றி ஃபோனிலேயே நேர்கணல் செய்ய முடிந்தது. அது சொல்வனம் – 50 தி.ஜானகிராமன் சிறப்பிதழில் வந்தது.
அதே போல் ஐந்தாம் ஆண்டு ஆரம்பத்தின்போது அந்த இதழுக்காக தானே கணினியில் தட்டச்சு செய்து மொழி பெயர்ப்பு பற்றி ஒரு சிறு கட்டுரையை அனுப்பி வைத்தார். வெளியே சென்று தபாலாபீஸிலிருந்து அனுப்புவது என்பது தற்போதைய போக்குவரத்து நெரிசலில் எப்படி தனக்கு முடியாத காரியம் ஆகி விட்டது என்பதையும், அதனாலேயே டைப் செய்த கட்டுரையை அனுப்பியதையும் சொன்னார்.
சி.சு.செல்லப்பா அவர்களுடைய ‘வாடிவாசல்’ பற்றிய என் விமர்சனக் கட்டுரையைப் படித்து விட்டு ‘ப்ரில்லியன்ட்’ என்று மெயில் அனுப்பியிருந்தார். ஃபோனில் பேசுகையில் “செல்லப்பா இருந்த காலத்தில் அவருக்கு இது போன்ற ஒரு விமர்சனக் கட்டுரை வரவில்லை” என்றார்.
அசோகமித்திரன் எவ்வளவுக்கெவ்வளவு சுவாரஸ்யமாக உரையாடுபவரோ அவ்வளவுக்கவ்வளவு ஒரு விதத்தில் ‘reluctant speaker’. ஓட்டுக்குள் போய் விடுவார். நாம் சொல்வதை வெறுமனே தலையசைத்து ஆமோதித்து விடுவார். இல்லாவிட்டால் ஒரு chuckle. அவ்வளவுதான்.
அவரது நகைச்சுவை உயர்தரமானதும் நுட்பமானதுமாகும். நாம் கவனிக்கவில்லை என்றால் தவற விட்டு விடுவோம். (உ-ம்) “முன்னுரை என்பதை சில சமயம் படிக்காமலேயே கூட எழுத முடியும்.”
இசை அறிவும், ருசியும் உள்ளவர். ‘சிம்மெந்திர மத்தியம’த்தில் அமைந்த எம். எஸ். அவர்கள் ‘சேவாசதனத்’தில் பாடிய ‘குகசரவணபவ’ பாடல் பற்றி இவர் ஒரு கட்டுரையில் எழுதியதும் தான் என் தாயார் எனக்கு தாலாட்டு பாடிய அப்பாடல் பற்றிய, ராகம், படம் போன்ற முழுத் தகவல்களும் தெரிந்தன.
அசோகமித்திரன் பற்றி பல கட்டுரைகளும், சில நூல்களும் வந்திருக்கின்றன. அசோகமித்திரனின் வீச்சும், பரப்பும், ஆழமும், இன்னமும் பூரணமாக ஆராயவோ எழுதவோபடவில்லை. அவரை நகர மத்யதர வாழ்க்கையைப் பற்றி எழுதுபவர் என்றவர்களுக்கும், அவரை வறுமையில்வாடுபவராக எழுதியவர்களுக்கும் அவரைப் பற்றி அதிகம் தெரியவில்லை. தாம் தோராயமாய் அனுமானித்ததை உண்மை போல் சொல்கிறார்கள். வறுமையில்இருப்பது வேறு, வாடுவது வேறு.
அசோகமித்திரன் கூரான யதார்த்த வாதி, புத்திசாலி. ஆனால் தந்திரசாலியல்ல. தன் புத்திசாலித்தனத்தை அவர் பணம் செய்யப் பயன் படுத்தவில்லை. அவரது தமிழ், ஆங்கில எழுத்துகள் அச்சேறிய போது இக்கட்டுரையை வாசிக்கும் பலர் பிறந்திருக்கக் கூட மாட்டர்கள். ஆனால் தன் இலக்கியத்திறனை சுயலாபத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளவேயில்லை. ஒரு மணிவிழா, ஒரு பொன்விழா எதுவும் பெரிய அளவில் எடுத்துக் கொள்ளவில்லை. சினிமாவிலேயே இருந்திருந்தும் அதில் பணம் பண்ண நுழையாதவர். மிக நுண்புலனுணர்வு கொண்டவர். யார் முன்பும் தன் கலையைச் சமர்ப்பணம் செய்யாதவர். பட்டதாரியான இவர் ஏதோ ஒரு வேலையில் ‘பாதுகாப்பை’ப் பெற்றுக் கொண்டு இருந்திருக்கலாம். எழுத்துக்காக மிக எளிய வசதியற்ற வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ்பவர். அவர் வீட்டுச்சூழல் ‘வறுமையின் வாட்டல்’ அல்ல. ஆனால்  ‘சௌகர்யமானதும்’ அல்ல. இவர் போல இலக்கியத்துக்காக சம்பாத்யத்தை விட்ட மனிதரை வைத்துக்கொண்டு திருமதி.அசோகமித்திரன்  கஷ்டப் பட்டிருக்கிறார். அசோகமித்திரன் இது பற்றியெல்லாம் பேசியதே இல்லை. குடும்ப வீடு. வடகையில்லை. பிழைத்தார். மூன்றும் ஆண் பிள்ளைகள். தப்பித்தார். இன்றைய இலக்கிய உலகில் எந்த ஒருவரை விடவும் தார்மீக வாழ்வில் வழுவியவர் இல்லை. அது பற்றி உரத்த குரலில் பேசாதவர். அவ்வளவுதான்.  ‘காந்தி’யைப் பற்றி எழுத எல்லாத் தகுதிகளும் உடையவர்.
அசோகமித்திரன், மனைவியுடன். நன்றி : 'காலம்' இதழ்

அசோகமித்திரன், மனைவியுடன். நன்றி : ‘காலம்’ இதழ்
 கூச்சமும் ‘ஹ்யுமிலிடி’யும் உள்ளவர். தன் புகழ் அறவே பேசாதவர். அபார ஞாபகசக்தி உண்டு. நான் 40 வருடங்களுக்கு முன்பிருந்த தெருவின் பெயரை மறக்காமல் சொல்லுவார். இந்த ஞாபக சக்தியும் அக்கறையும் அவருக்கு பல நண்பர்களைப் பெற்றுத் தந்துள்ளன. எல்லோரோடும் அவரால் நுணுக்கமாக, அணுக்கமாக இருக்க முடிகிறது.
சாவியோ, குமுதமோ,விகடனோ எங்கும் ஒரேமாதிரி எழுதியவர். பலர் மாதிரி ஜாக்ரதையாக தன் அபிப்பிராயங்களைச் சொல்லாமல் இருப்பவர் அல்ல. சாருவின் நூலுக்கு அவர் எழுதிய முன்னுரையில் எனக்கு இக்கதைகள் புரியவில்லை என்கையிலாகட்டும், வேறு ஒருவரது நூலை உயிர்மை மேடையில் வெளியிட்டபோது அந்நூலில் நம்பகத் தனமை இல்லை என்று சொன்னதிலாகட்டும் உண்மையைச் சொல்வதிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. விலக்குகளும் உண்டு. சில நூல் முன்னுரைகளில் கூர்மையற்ற விமர்சனமற்ற மையமான அசோகமித்திரனைப் பார்க்கலாம். அது அவராக முன்னுரை என்றால் அப்படித்தான் இருக்க வேண்டுமென்று  தேர்ந்தெடுத்துக் கொண்டது.
இவ்விதழில் உள்ள இன்னொரு கட்டுரையை எழுதியவர் இவர் பற்றி தம் நண்பர்களுக்கு எதிர்மறை அபிப்பிராயங்கள் இருப்பதாகக்  குறிப்பிட்டிருந்தார். இவர் கதைகளைப் படித்து விட்டு இவரை அன்பின் வடிவம் ‘personification of love’ என்று பிம்பப் படுத்திக் கொண்டு விடுகிறார்கள். அவர்களுக்கு அன்பு பற்றி வேறு பிம்பங்கள் உள்ளன. அன்பு உண்மையிலிருந்து விலகியது என்றும் நினைப்பவர்கள் உண்டு. அவரது, லேசான எள்ளல் அவ்வப்போது ஊடுருவும், கூர்மையான யதார்த்தமான உண்மையான பேச்சில் ஏமாற்றம் அடைந்து விடுகிறார்கள்.
அயோவா சென்று பல மாதங்கள் கழித்து திரும்பியதும் ஒரு முறை சொன்னார். “ வீட்டு மனிதர்கள் பற்றிய நினைவு வரவில்லை. என் கனவில் அவர்கள் ஓரிரு முறை வந்திருந்தால் அதிகம்”. இந்த ஒட்டற்ற தன்மை கூட அவர் பற்றிய எதிர்மறை அபிப்பிராயங்களுக்கு காரணமாக இருக்கலாம். மிகைப் படுத்தப் பட்ட சொற்களலான உள்ளீடற்ற உறவுகளுக்கே பழக்கமான மனிதர்களுக்கு இப்படித் தோன்றுவது ஆச்சர்யம் இல்லை. எழுத்தாளனின் objectivity அவன் கதைக்கு, கலைக்கு பெரிதும் உதவினாலும் ஒரு விதத்தில் இத்தகைய கருத்துகள் உருவாகக் காரணமாகி விடுகிறது. மேலும் அசோகமித்திரன் போன்ற நுண்புலனுணர்வு மிக்கவர்களுக்குத் தான் அறிவாளி என்பது தெரியும். Mediocrity யை அவர் அதிக நேரம் அனுமதிப்பதில்லை. அதை அவர் அவமானப் படுத்துவதும் இல்லை.
எழுத்தாளர்களுக்குப் பல சமயம் சக மனிதர்களின் மனம் பரிசோதனைச் சாலையாக ஆகிவிடுகிறது. அதனலேயே ஞானம் அல்லது முக்திக்கு, இலக்கியம் என்னும் ஆன்மீக சாதனம் ஒரே நேரத்தில் வழியாகவும், தடையாகவும் ஆகி விடுகிறது. இதை முற்றிலும் உணர்ந்தவர் நம்மோடு பழகும் அசோகமித்திரன்.
தமிழக அறிவு சீவி உலகில் நிலவும் துவேஷத்துக்கு இலக்கிய உலகில் பெரிதும் ஆளானவர். ஆனால் சாமானிய வாசகருக்கு சாதி, மதங்களைக் கடந்து வாழ்வு பற்றிச் சொல்லும் நண்பர். அஞ்சாதவர். உறுதியானவர். தமிழ் இலக்கிய உலகில் மெத்தப் படித்த வெகு சிலரில் ஒருவர். இன்னமும் படித்துக் கொண்டிருப்பவர், எழுதிக் கொண்டிருப்பவர். தமிழ்ச்சிறுகதையுலகில் புதுமைப்பித்தன்போல இவரும் ஒரு சிகரம்.
ஆனாலும் ஒரு புது எழுத்தாளனைப் போன்ற ஆர்வத்துடனும், ஆசையுடனும்  இன்றுதான் முதல் கதை எழுதியவர் போன்று “எப்படி இருக்கு, பரவாயில்லையா?” என்றோ, நாம் “நன்றாய் இருக்கிறது” என்று ஆரம்பித்ததும் “அப்படியா நன்னாயிருக்கா?” என்று அரைகுறை ஆமோதிப்புடனோ கேட்பவர். ‘ஆகாயத்தாமரை’ க்ரேசியாக இருந்தது என்றதும் சிரித்து ரசித்தார். ‘மானசரோவரில்’ என்னதான் நடந்தது என்று கேட்ட போது தமக்கும் தெரியாது என்று சொன்னார்.
ஆரம்ப நாட்களில் பொதுக் கூட்டங்களில் சந்தித்தால் கைகளை மெல்லப் பற்றிக் கொள்வார். அடுத்தவர் வந்ததும் நம்மிடமிருந்து கைகளை விடுவித்துக் கொண்டு அவர்கள் கைகளைப் பிடித்துக் கொள்வார். கோர்ப்பதும், விடுவதும் எளிதாக, நிகழ்வதே தெரியாதவாறு மென்மையாக இருக்கும். ஜே. க்ருஷ்ணமூர்த்தி ஞாபகம் வரும். அவரும் அப்படிச் செய்வதைப் பார்த்திருக்கிறேன். ஜே. க்ருஷ்ணமூர்த்தியின் காலை வேளை உரையாடல் ஒன்றில் அடையாறில் உள்ள வசந்த விஹாரில் கூட அசோகமித்திரனை ஒரு மார்கழி மாதத்தில் சந்தித்து இருக்கிறேன். “ இந்த வானிலை எல்லோருக்கும் சுகமாக இருக்கும். என் போன்ற உடல் நலம் இல்லதவர்களுக்குத்தான் அப்படியில்லை” என்றார். அப்போதே அவர் ஆஸ்துமாவினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார்.
க்ருஷ்ணமூர்த்தியின் பேச்சொன்றின் முழுத் தமிழ் வடிவை இவர் நாவலின் ஓர் அத்தியாயமாகவே வைத்திருந்தார். (ஆகாயத் தாமரை என்று நினைக்கிறேன்.) பின்னர் சமீபத்தில் நான் முக நூலில் க்ருஷ்ணமூர்த்தியின் மேற்கோள்களை எடுத்துப் போடுவதைப் பார்த்து எனக்கு எழுதியிருந்தார். “ நானும் ஒரு காலத்தில் அவரால் ஈர்க்கப் பட்டிருந்தேன். ஆனால் பின்னால் டிஸில்யூஷன் ஆகி விட்டது”
இனி அவர் எழுத்தைப் பற்றிக் கொஞ்சம் :
80 வயதில் முகநூலில் புதிதாய் வர அவருக்கு முடிந்தது. கணினியில் தமிழில் தட்டச்சுவதைத் தெரிந்து கொண்டார். எப்போதும் கற்றுக் கொண்டே இருப்பவர். எல்லவற்றிலிருந்தும். எல்லோரிடமிருந்தும். அதனால்தான் இன்னமும் நாம் எதிர் பார்க்காத மாதிரியான எழுத்துகளை அவரால் தர முடிகிறது. இந்த எதிர்பார்க்க முடியாத, கணிக்க முடியாத தன்மை நல்ல எழுத்துக்கு இன்றியமையாதது. அது சம்பவங்களின் திடீர்த் தன்மையாலோ, திடீர்த் திருப்பங்களாலோ விளைவது அல்ல. சொல்லப் போனால் அவற்றால் நிச்சயம் அவை நிகழ்வதே இல்லை. ஆனால் வாழ்வின் சுய ரூபத்தை நாம் பார்க்காத அளவுக்கு – நம் கண்களும் காதுகளும் மனமும் மூடப்பட்டு இருப்பதால் நம்மால் கனிக்க முடியாமல் மறைந்து கிடப்பனவற்றை – இவர் சொல்லும்போது ‘அட’ என்கிற வார்த்தை கூட எழாமல் நாம் அவ்வுண்மையை சந்திக்கிறோமே அந்த unpredictability யைச் சொல்கிறேன்.
இந்த ஜகதீசன் தியாகராஜனுக்கும் மூன்று கண்கள்தாம். நமக்குத் தெரியாதவற்றையெல்லாம் அவை பார்த்துவிடும். பரந்த வெளி பழக்கமில்லாது தாறுமாறாக ஓடும் எலியைக் காக்கைக் கொத்திக்கொண்டு போவதை எல்லோரும் காணமுடியும். அதற்கு அப்பால் போய் முந்தின இரவு எலிப்பொறியின் கொக்கியில் மாட்டிய வடை அப்படியே தின்னப்படாமல் இருப்பதை அவர் பார்க்கிறார்.  அம்பிகாபதியின் மரண தண்டனை நிறைவேற்றப் பட்டபின் அமராவதி என்னவானாள் என்று கேட்கிறார்.
ASOKAMITHTHIRAN-27, PHOTO BY PUTHUR SARAVANAN
சுஜாதா இவரைப் பற்றிச் சொல்கையில் “உண்மையில் அவன் சோகமித்திரன்” என்பார். அவரது பெரும்பாலான கதைகளின் மொத்தத் தாக்கம் அப்படியிருக்கலாம். கதைகளூடேயும், அவரது பல கட்டுரைகளிலும் அவர் ‘அசோக’மித்திரனும்தான் என்பதை உணர்வோம்.
தூய தமிழில் கதைகள் எழுதப்படுவதற்கான முன்னோடிகளில் ஒருவர்.  அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்த ‘தண்டவாளங்கள்’ என்று எழுதாமல் ‘இருப்புப் பாதைகள்’ என்று எழுதியவர். இது ஒரு உதாரணம்தான்.
எல்லா நல்ல எழுத்தாளர்களுக்கும் வாசகருக்கும் இடையே உள்ளது போலவே அசோகமித்திரனுக்கும் வாசகருக்கும் இடையே அவர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக உறவு உண்டு. அவருடைய மிக பிரசித்தி பெற்ற சிறுகதைகளைத் தவிர, சில சமயம் ‘விட’ வேறுகதைகள் ஒரு வாசகரைக் கவரும். அவருடைய ‘இந்திராவுக்குவீணை கற்றுக்கொள்ள வேண்டும்’ மற்றும் அதன் தொடர்ச்சியாக பலவருடங்களுக்குப் பின் வந்த ‘இந்திராவுக்கு வீணைகற்றுக் கொள்ளமுடியவில்லை’ இரண்டும் அது மாதிரி என்னை மிகவும்கவர்ந்த கதைகள். ‘‘குழந்தைகள்’, ‘அப்பாவின்சிநேகிதர்’, தீபாவளி மலர் ஒன்றில் வந்த ‘நகலகக் கதை’ எல்லாமேஅந்த மாதிரிதான்.சொல்லப் போனால் ஒரு தீபாவளி மலரில் வந்த மிகப் பிரபலமான இன்றைய முன்னணி இளம் எழுத்தாளர்கள் இருவர் கதைகளையும் விட இந்த முதியவர் எழுதிய கதை நன்றாக இருந்தது.
ஒரு கதையில் ஒருஅகலமான, மிகவும்போக்குவரத்து உள்ள சாலையை அவ்வளவாக வசதி இல்லாத  ஒரு முதியவர் கடக்கமுயல்கையில் ஒரு ஏழைச் சிறுமி அவரிடம் சீப்பு / earbuds விற்க முற்படுவாள். ஒரு பக்கம்அளவுதான் இருக்கும் அந்தக் கதை. அவர் எப்படியோ கஷ்டப்பட்டு பாதிச் சாலையைக் கடந்து இடைவெளியில் நிற்கையிலும்அவள் அவரைத்தொடர்வாள். சிறுமி, அதுவும் ஏழை என்பதால் அவளுக்குநேர்ந்திருக்கக் கூடிய அபாயங்களை அவர் இதற்கிடையில் யோசிப்பார்.அந்தப் பரிவில் பொருள் எதையும் வாங்காமல் அவளிடம் ஒரு பத்துரூபாயைக் கொடுத்துவிட்டு, நெரிசலைத் தண்டி ஒரு வழியாக எதிர்ப்புறம் சென்றுசேர்ந்ததும் அந்தச்சிறுமி கூடவே வருவதைப் பார்ப்பார். வந்தவள் அவரிடம் ஒரு சீப்பை / ear buds ஸைக்கொடுத்துவிட்டுப் போவாள்.
நுண்தகவல்களை வர்ணிப்பதில் அவர் சத்யஜி ராய் மாதிரி. இவர் எழுத்து என்கிற ஊடகத்தின் வழியாக செய்து கொண்டிருப்பதை இன்னும் பல் பரிமாணமுள்ள சினிமா ஊடகத்தில் ராய் செய்தார். ராய் மேலும் ஓவியம் வரையவும், இசை அமைக்கவும், சிறுவர் மற்றும் துப்பறியும் கதைகள் எழுதவும்,குழந்தைகள் பத்ரிகை நடத்தவும், ஒளிப்பதிவு, எடிடிங் போன்றவற்றையும் அப்பழுக்கில்லாமல் செய்தார். இருவரது எளிமை, சிக்கலற்ற தெளிவு, கூர்மை, கவனிப்பு,கருணை, நகைச்சுவை, பார்வை அரிதானவை. கலையின் ஊற்று அவற்றில் தென்படும். ‘பீதோவனி’ன்  இசை பற்றிச் சொல்கையில் ராய் அதன் ‘Strength and simplicity’ யை நினைவு கூர்வார். மூவரின் கலைக்கும் அது பொருந்தும்.
ஒரு கதையைப் படிக்கையில் நாம் வாழ்வையும், எழுதிய ஆசிரியரையும் நம்மையுமே படிக்கிறோம். ஒரு மோசமான கதை எழுத்தாளர் யாரென்பதை நமக்குக் காட்டிக் கொடுக்கும். நல்ல கதைகள் நேர்மறையாகவும், பிற எதிர்மறையாகவும் நமக்கு, மெல்ல, நம்மையறியாமலே கற்பிக்கும்.
சில கதைகளைப் படிக்கும்போது அதன் ஆசிரியர் தம்மை வெளிப்படுத்திக் கொள்ள முயல்வதற்கு நேரெதிராக நான் அவரை முழுதும் புரிந்துகொள்கிறேன். ஜெயகாந்தனையோ, ஜானகிராமனையோ படிக்கையில் வாழ்வு பற்றிய அவர்களது கருணை மிகு பார்வையை நான் உணர்கிறேன். அசோகமித்திரன் ‘ஒற்றனி’ல் பூண்டு அதிகம் சாப்பிடும் எழுத்தாளன் ஒருவனின் வாழ்வில் நிகழும் பெருந்துயரைச்சொல்லும் அத்தியாயத்தில் கடைசி வரியில் பூண்டு வாசனையைப்பற்றி மீண்டும் எழுதுகையில்’ஹா! இது,இது, இதுதான் அசோகமித்திரன்’ என்று தெரிந்துகொள்கிறேன்.
 புற நிகழ்வுகளைப் பற்றி மட்டுமே சொல்லி அக நிகழ்வுகளை முழுமையாக உணர்த்துகிற மாயம் தெரிந்தவர். அவர் எழுதுவது ‘ரிபோர்டிங்’ இல்லை. அப்படி என்றெண்ணி அவர் பாணியில் பலரும் எழுத முற்பட்டு தோல்வி அடைந்திருக்கிறார்கள். காரணம் அவரது எழுத்து தொடர்ந்த ‘உட் பார்வைகளால்’(insights) கோர்க்கப் பட்டது. ஒன்றன் பின் ஒன்றாக அவை மலரும். ஒவ்வொரு விஷயமும்,நிலைமையும், மனமும், செயலும் மிக்க ஆழத்திலிருந்து தம்மை வெளிப்படுத்திக் கொள்கையில் அவ்வாழத்திற்கு இடைஞ்சல் இல்லாமல் அதை அமைதியாகக் கவனித்து எழுதும் பொறுமையும், தீர்க்கமும் அவருக்கு உண்டு.  அதே போல் அவரது எழுத்துகள் ‘still photographs’ ஸும் இல்லை. இயங்கிக் கொண்டே இருப்பவை. ‘His writings are movements in insights. ‘இன்சைட்’ களின் பவனி.
வாழ்வோடேயே பொறுமையாய், நிதானமாய், நோக்கமின்றி நடந்து அதுசொல்வதையெல்லாம் கேட்டு, காட்டுவனவற்றையெல்லாம் பார்த்து அதை எழுதுபவர் அசோகமித்திரன்.
குழந்தைகள் கதையின் கடைசி வரி, (“எல்லாப் பெண்களுக்கும் இனி பிறக்கப் போகும் குழந்தைகள் பற்றியும் அவள் நினைத்தாள்”) ‘இன்று’ நாவலில் வரும் சீதாவின் ‘புனர் ஜென்மம்’, (இந்த தற்கொலைக்கு ஈடாக நான் எங்குமே படித்ததில்லை. என்னைக் கண்ணீர் சிந்த வைத்த பல அசோக மித்திரனின் எழுத்துகளில் இதுவும் ஒன்று. ‘இன்று’ நாவலின் ஒவ்வொரு அத்தியாயமும் டால்ஸ்டாயின் நூல்களின் தலைப்பைக் கொண்டிருக்கும்.) ‘தண்ணீரி’ல் வரும் நெல்லூர் தடியன்கள் முன் நிர்வாணமாக நடக்க வேண்டிய வாழ்க்கை, வாயைத் திறந்து கொண்டு தூங்கும் இந்திராவினம்மா, அப்பாவின் சிநேகிதரிடம் அழும் அம்மா, ‘ஒற்றனில்’ நிகழும் அசாதாரண சம்பவங்கள், அதில் வரும் ‘அம்மாவின் பொய்கள் கவிதை’ நாடகமாகையில் நடக்கும் அபத்த நாடகம், உண்மையும் பொய்யும் இரண்டற கலந்து விட்ட இடுப்பளவு தண்ணீரே உள்ள பாவம் கழுவும் மானசரோவர்,   பாட்டியை  போ போன்னு விரட்டிட்டு ரயில் ஏத்தக் கூட வராத அப்பாவிடம் என்ன சொல்வது என்கிற பேத்தியின் நிலை, அவளை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன் என்கிற அப்போதுதான் ரயில் நிலையத்தில் சந்த்தித்தவனிடம் ‘அதோ அவ அப்பா வந்து விட்டார்’ என்று பொய்யாய்ச் சொல்லிக் காக்கும் பாட்டி என்று கணக்கற்ற வாழ்க்கையின் உண்மைகள். மலர்களை மட்டுமே காட்டி முட்களை மறைக்க மாட்டார்.
எழுத்தாளர் அசோகமித்திரன் என்றால் ஒரே வார்த்தையில் awareness. அதன் விரிந்த பொருள்  விழிப்பு, விழிப்புணர்வு, விதிவிலக்குகளேயற்ற கவனிப்பு, துல்லியம், தெளிவு, இரக்கமற்ற கருணை.
அவரது ‘யுத்தங்களுக்கு நடுவில்’ ஒரு Magnum opus ஆகியிருக்க வேண்டியது. ஒரு பெரு நாவலின் hints கள் போல், தந்தி மொழியில் ஒரு கதையைச் சொல்வது போல் அமைந்து விட்டது. கால அவகாசம் இல்லை என்று அப்படி வெளியிட்டு விட்டாரோ என்னவோ. ஆனால் அதில் எனக்கு ஒரு ஆசுவாசம். பல மனிதர்களை, பல ஆண்டுகளைச் சொல்லும் ஒரு தமிழ் நாவலில் நல்ல வேளையாக ‘adultery’ இல்லை. அது பற்றிப் பேசாத ஒரு பெரிய நாவல் வருமா என்று காத்திருந்தேன்.
அதே போல் ‘குறி’ யீட்டு  – அதாவது ஆண் குறி, பெண் குறி என்கிற வார்த்தைகள் எப்படியும் இருந்தாக வேண்டும் என்கிற எழுதாத நியதி உள்ள – நாவல்களால் நிரம்பிய நவீன தமிழ் இலக்கிய  உலகில் அந்த நியதியை மீறியவராகவே அசோகமித்திரன் எழுதி வருகிறார். ‘ஷாக்’கொடுக்க அவர் முயன்றதே இல்லை. எனவேதான் அவர் சொல்பவை அவற்றின் முழு நம்பகத் தனமையால் நம்மைத் தப்பிக்க விடாது தாக்குகின்றன. படித்து வெகு காலத்துக்கு உண்மையாக வலிக்கும்.
1971ல் மண்டபம் பழனிச்சாமி என்பவர் இவர் கதைகளை விமர்சித்து இருந்தார். ‘தண்ணீர் ஒரு தண்டனை’ என்று எழுதியிருந்தார். ஒரு கதையில் “குந்திக் கொண்டு உட்கார்ந்தான் என்று எழுதியிருப்பது தவறு. குந்திக் கொண்டான் என்றாலே போதும். இப்படியெல்லாம் எழுதுகிறார்.” என்று குறிப்பிட்டிருந்தார். அசோக மித்திரனின் சிறுகதைத் தொகுப்பு நூலில் பின்னட்டையில் மண்டபம் பழனிச்சாமியின் கருத்துகள் இடம் பெற்றிருந்தன.
முதன்முதலாக மண்டபம் பழனிச் சாமியோடு நடந்த விவாதத்தில் நான் இவர் எழுத்து பற்றி இரண்டு வார்த்தைகளில் குறிப்பிட்டுச் சொன்ன போது அவர் சில கதைகளே எழுதியிருக்கக்கூடும். ஆனால் இந்த வார்த்தைகள் கணையாழி அக்டோபர் 1971 இதழின்  அட்டையில்வந்தன. இப்போது இந்தக் கட்டுரையையும் அவ்வார்த்தைகளோடு முடிக்கிறேன். ‘மகத்தான எழுத்து.’

No comments: