கூறுகிறேன்… முடிந்தால் கேளுங்கள் – 4
பிரசுரம் : சொல்வனம் : இதழ் 99 | 18-01-2014|
சிங்கப்பூரில் இட்லி – பயணக் கட்டுரை
விட்டு விட்டு வரும் இந்தத் தொடரின் ஆரம்ப இரண்டு கட்டுரைகளில் சிங்கப்பூர் பற்றி வந்தது. எப்பாடு பட்டாவது எல்லாக் கட்டுரைகளிலும் சிங்கப்பூர் வருமாறு பார்த்துக் கொண்டால் இக்கட்டுரைகள் ஒரு நாள் நூல்வடிவம் பெறுகையில் இதை ஒரு பயண நூலாக்கி விடலாம் என்று தோன்றியது. அப்போது கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் தவிர பயண நூல் எழுதிய பெருமையும் வரும். அப்புறம் பாக்கி இருப்பது நாடகம், சினிமா, காவியம், இதிஹாசம்தான். அவற்றைச் சுலபமாகச் செய்துவிடும் நம்பிக்கையும் வந்துவிடும். Success begets success இல்லையா? கற்பனை பாரதியின் ஞானரதமாக இல்லாவிட்டாலும் ஒரு ஆட்டோ ரிக்ஷா அளவுக்காவது இருந்தது தெரிந்தது. கற்பனைதான் பண்ணுகிறோம் என்று தெரிந்தபின் கடிவாளம் இல்லாமல் அதைச் செய்தால் என்ன என்று எண்ணுகையில் எண்ணிலடங்கா வண்ணச் சோலைகள் விரிந்தன. பயண நூல். எக்கச் சக்க விற்பனை. அதில் வரும் பணத்தைக் கொண்டு இன்னும் பயணங்கள். எனவே மேலும் பயண நூல்கள். சமையற்காரர் முன் குபேரன் தோன்றி செல்வச் செழிப்பாகக் கனவு காண் அல்லது கற்பனை செய் அதில் காண்பதெல்லாம் உனக்குத் தருகிறேன் என்று வரம் அருளினால் ஒரு வேளை அதில் சந்தன விறகும், தங்க அண்டாவும், வைரக் கரண்டியும் வரலாம்.
இந்த குறைந்த விட்ட வட்டத்தை விட்டு விஷயத்துக்கு வருவோம்.
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். என்னை விட 7,8 வயது இளையவர். நிறையப் படித்தவர். பல பட்டங்கள் வாங்கியவர். கதை, கவிதை தவிர கட்டுரை நூல்களையும் படிப்பவர். கல்லூரிகளில் மேலாண்மை வகுப்புகள் எடுப்பவர். ஃபிஷன், நான் – ஃபிக்ஷன், தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் படிக்கும் ஆச்சர்யமானவர். அவர் ஒரு முறை சொன்னார். “சாண்டில்யன் கதைகள் நல்ல கதைகள். அவர் பல ஆராய்ச்சிகள் செய்து நிறைய வரலாற்றுத் தகவல்களின் பேரில் கதைகளை எழுதியிருக்கிறார். இன்றைக்கும் அவரது நூல்கள் பெரிதும் விற்பனை ஆகின்றன.” சாண்டில்யனின் கதா நாயகி, ஏதோ ராஜகுமாரி, அழகிய மஞ்சத்தில் குப்புறப் படுத்துக் கொண்டு சாளரத்தின் வழியே வழியும் நிலவொளியில் மயங்கி மையல் வசப்பட்டு இருப்பதை ஒரு கதா நாயகன் அவளறியாமல் பார்த்து, அவளது பின்னம் பக்கங்களில் வைத்த தன் கண்களை எடுக்கவொண்ணாமல் தவிப்பது போன்ற வர்ணனைகளை முதலில் சில தடவை விறுவிறுப்போடு படித்து விட்டு அவர்கள் இருவரும் அடுத்த அத்யாயத்தில் அதற்கு மேல் ஒன்றும் செய்யாமல் இருந்ததால் சாண்டில்யனைப் படிப்பதையே விட்டு விட்ட எனக்கு இதில் உடன்பாடு இல்லையெனினும் நாகரிகம் கருதியும் மேலும் படிக்காமலேயே ஒருவரை விமர்சிக்க நானென்ன தமிழ் நாட்டின் புகழ் பெற்ற அறிவு சீவிகளிலொருவனா என்கிற ஆத்ம ஞானத்தின் காரணமாகவும் மறுக்கவில்லை. அப்புறம் தொடர்ந்தவர் “பயணக் கட்டுரைகள் என்றால் மணியன்தான் சார்” என்றார். அவர் அப்படி சொன்னதும் பல பயணக் கட்டுரைகளை தீவிர இலக்கிய வாசகர்கள் ‘எங்கே இட்லி கிடைக்கும்’ எனபதை எழுதுவதா பயணக் கட்டுரை என்று வாங்கு வாங்கென்று விளாசியிருப்பது நினைவுக்கு வந்தது. அப்புறம் சாண்டில்யன் மாதிரி மணியனை விட்டு விடக் கூடாது இதுபற்றி ஒரு ஆய்வு செய்ய வேண்டும் என்று துணிந்தேன். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. நானும் சாண்டில்யனும் ஒரே சாதி. மணியன் வேறு சாதி. சாண்டில்யனைப் பற்றி எழுதினால் பின்னால் ‘வரலாறு’ என்னைப் பற்றி என்ன சொல்லும்? வரலாற்றில் இடம் பெறும் எண்ணம் இருப்பவர்கள் ஜாக்ரதையாக இருக்க வேண்டும். நாளைய ‘வரலாறு’ நம்மை ‘முற்போக்கு’, ‘ஜாதி பேதமற்றவர்’, ‘சுயஜாதி அபிமானம் இல்லாதவர்’, சமுதாயத்தின் கீழ் தட்டு மக்களை மதித்தவர், அவர்களுக்காக துக்கம் அனுஷ்டித்தவர், ‘மதசார்பற்றவர்’ என்றேல்லாம் பேச வேண்டுமா இல்லையா? வரலாற்றில் இடம் பெறும் எண்ணம் கொண்டவர்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நடந்து கொள்வதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? அதிலிருந்து பாடம் கற்கா விட்டால் எப்படி. எனவே மணியனை ஆதரிக்க முடிவு செய்தேன்.
மணியனின் பயணக் கட்டுரைகளையோ, வேறு எழுத்துகளையோ நான் படித்ததில்லை. ஆனால் அவர் ‘எங்கே என்ன சாப்பிடக் கிடைக்கும்’ என்று எழுதியிருந்தால் அதில் என்ன தவறு என்பது எனக்கு உண்மையாகவே தெரியவில்லை. பலர் பயணக் கட்டுரை எழுதுபவர்களை ‘நல்ல வேளை, சாப்பாடு பற்றி எழுதிவிடுவீர்களோ’ என்று பயந்தேன் என்று புகழ்வதை அடிக்கடி கண்டிருக்கிறேன். சாப்பாடு என்ன மேலை நாட்டினரைப் போல நமக்கு கைகளால் தீண்டத் தகாததா? அதிலும் இட்லி.
சரி, ‘எப்படி இப்படி ஒரு விஷயம் பற்றி எழுத வந்து பலதும் பற்றி சொல்கிறீர்கள்’ என்று நீங்கள் வியப்பது எனக்குத் தெரிகிறது. அந்த இரகசியத்தை இப்போது சொல்கிறேன். இதற்கு சிறுவயதில் எனக்குக் கிடைத்த பயிற்சியே காரணம். எங்கள் திருவல்லிக்கேணியில் நான் கேட்காத மேடைப் பேசாளர்களே கிடையாது. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், சொல்லின் செல்வர் சம்பத், கவியரசு கண்ணதாசன், தீபம் நா. பார்த்தசாரதி என்று ஒரு பெரிய லிஸ்ட். அதிலும் நடமாடும் பல்கலைக் கழகமாகிய நாவலர் நெடுஞ்செழியன் எங்கள் தொகுதிக்காரர். அதனால் எந்த தி.மு.க. மீட்டிங்கில் யார் வரவில்லையென்றாலும் அவரை அழைத்து வந்து விடுவார்கள். அவரே தன்னைப் பற்றி ‘ஸ்டெப்னி’ மாதிரி என்னப் பயன்படுத்திக்கிறாங்க என்று வேடிக்கையாகச் சொல்லுவார். அண்ணா முதற்கொண்டு பெரும் பேச்சாளர்கள் எந்தத் தலைப்பிலும் நொடி அறிவிப்பில் பேசுவார்கள் என்பதும் வரலாறு. அதிலும் நாவலர் நெடு நேரம் பேசுவார். அப்பேச்சுகளையெல்லாம் கேட்ட எனக்கு அதுவே பயிற்சி. சில பத்திகளுக்கு முன் வந்த ஒரு நீண்ட வாக்கியத்தை விட வேறு சான்று வேண்டுமா?
என்னிடம் எந்த தலைப்பு பற்றியும் கேளுங்கள் உடனே நெடு நேரம் பேச என்னால் முடியும். தவிர சில பேச்சாளர்கள் மாதிரி தலைப்பையே தொடாமல் ஏதேதோ பேசி முடித்துவிடும் ஞான சூன்யமோ, மறதிக்காரனோ நானில்லை.
சரி இப்போ விஷயத்துக்கு. இட்லி சாப்பிடாத தமிழன் உண்டா? இன்னும் கேட்டால் இட்லி பிடிக்காத தமிழன் உண்டா? ஒவ்வொரு உணவு விடுதி அறிவிப்பிலும் பிள்ளையார் சுழிக்கு அப்புறம் இருக்கும் வஸ்து இட்லிதானே?
குழந்தைகள், வியாதியஸ்தர்கள், வயதானவர்கள் அனைவருமே கூட உண்ணக் கூடிய அதி சாதுவான பண்டம் இட்லிதானே?
நான் கடந்த இரண்டு மாதங்களாக பல்வலியால் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். தாடைகள் பூட்டுப் போட்டுக் கொண்டு வாயைத் திறக்கவோ, பேசவோ, பல் துலக்கவோ படு சிரமம். ஒரு புறம் கன்னம் ஒரு முழு இட்லியை அடக்கிக் கொண்ட மாதிரி வீக்கம் வேறு. அப்போது என் ஆபத்வாந்தவனாக கை கொடுத்தவை இட்லிகள்தாம். அதற்கு முன்னரும் நான் இட்லிதாசன் என்பது உண்மைதான். ஆனால் வீட்டம்மாவின் விருப்பம், எப்போதும்போல், எதிரிடையான தோசை என்பதால் வீட்டில் இட்லி நடமாட்டம் குறைவு.
ம.பொ.சி., கி.ஆ.பெ.விஸ்வநாதம் ஆகிய முழு வாழ்வு வாழ்ந்தவர்கள் மிகக் கட்டுப்பாடான உணவுப் பழக்கம் கொண்டவர்கள். அவர்கள் வெளி ஊர் சென்றல் அவர்களுக்கு முன்பே அவர்களது உணவு விருப்பம் / பழக்கம் பற்றிய தகவல் போய் விடும். அதில் இட்லி நிச்சயம் இருக்கும்.
இன்னும் இட்லி பற்றி எவ்வளவோ சொல்லலாம். நம் வழக்கத்துக்கும் மரபுக்கும், நம் குருமார்களுக்கும் ஏற்ப ஓர் ஆராய்ச்சி. இட்லி என்கிற மூன்றேழுத்தில் ஓர் உயிர் எழுத்து, ஒரு மெய்யெழுத்து, ஓர் உயிர் மெய் எழுத்து இருக்கிறது. இதிலிருந்தே இது தமிழன் உணவு என்பது புலனாகவில்லையா?
இல்லை இட்லி வெளி மாநிலத்திலிருந்து நமக்குக் கிட்டிய ‘வந்தேறி’ என்பவர்கள் உண்டு. விநாயகரே ‘வந்தேறி’ பட்டம் வாங்கிய பிறகு இட்லி அந்தக் குழுவில் இருந்தால் அதற்கென்ன குறைச்சல். வந்தேறிய விநாயகரிடம் ஔவைக் கிழவி ‘சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்கிறாள். எனவே ஔவை பற்றியும் டவுட்டாக இருக்கிறது. இப்போதுதானே ஆராய்ச்சியாளனானேன். அதன்படிக்கு எப்படி சங்கத் தமிழ் மூன்றையும் வந்தேறி விநாயகர் பதுக்கி வைக்க அதை ஔவை என்கிற பச்சைத் தமிழச்சி மீட்கிறாள் என்கிற வரலாற்றின் நுட்பத் தகவலாகவும் இதைக் கொள்ளலாம். வரலாறு பற்றிய இரு வேறு கட்டுரைகள் இவ்விதழில் வந்துள்ளன. அவற்றோடு சேர்த்து இதைப் புரிந்து கொள்ளவும்.
விநாயகரும் இட்லியும் பிரிக்க முடியாத இரட்டையர்கள் மாதிரி மேலே இரண்டு இடங்களில் சேர்ந்து வந்து விட்டார்கள். எனவே ஆராய்ச்சி மனம் மேலும் சொல்கிறது : ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும், மாபெரும் கோவில்களிலும், மரத்தடி, குளக்கரைகளிலும் இருப்பவர் பிள்ளையார். அதே போல் இட்லியும் எங்கும் எவருக்கும் எளிதில் அருள் பாலிப்பது.
ஒரு ஊருக்குப் போபவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யாமல் இருக்க முடியும். ஆனால் சாப்பிடாமல் இருக்க முடியுமா? எல்லோருக்கும் சொந்தக் காரர்களோ நண்பர்களோ எல்லா ஊர்களிலும் இருப்பார்களா? “அந்த ஊர் சாப்பாடைச் சாப்பிடுங்களேன். ஏன் எல்லா இடத்திலும் இட்லி தோசை என்று அலைகிறீர்கள்?” என்று நாஞ்சில் நாடன் போன்ற கலை மனமும், தேர்ச்சி மிகு ருசியுணர்வும் கொண்ட அறிஞர்கள் கேட்கலாம். ஆனால் தாம்பரத்தை இதுகாறும் தாண்டாத சென்னை வாசிகளுக்கு அது முடியுமா? போன இடத்தில் படுத்துவிட்டால் என்ன செய்வது என்று பெரிய லக்கேஜாக மாத்திரைகளை எடுத்துச் செல்லும் முத்தண்ணாக்களுக்கு? எனவே எங்கே நம்ம ஊர் சாப்பாடு கிடைக்கும் என்பது அவசியம் தெரிய வேண்டும். அது இணையத்தில் கிடைக்கும், பத்ரிகைகளில் கிடைக்கும் என்பீர்கள். அதையெல்லாம் எல்லாராலும் தேட முடியுமா? பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கென்றுதான் பயணக் கட்டுரைகள், பயண நூல்கள். அதில் அவசியம் பதிவாக வேண்டியது ‘எங்கே இட்லி கிடைக்கும்’ என்பதுதான். பின் கொசுறாகக் காஃபி, சாம்பார், வேண்டுமென்றால் தோசை இத்யாதி. ஆனால் மன்னர் வந்தால் கூடவே ரத,கஜ,துரக, பாதாதிகள் வரும் என்பது போல் இட்லிக் கடைகளில் இவையும் இருக்கும்.
மேலும் ஒரு நாட்டின் பொருளாதாரம், அரசியல், சரித்திரம், பூகோளம், பண்பாடு, கலாச்சாரம், இசை, தலைவர்கள், கலைஞர்கள் பற்றியெல்லாம் எழுத கொஞ்சமாவது சரக்கு வேண்டும். ‘சரக்கு’ பற்றி எழுத அனுபவம் வேண்டும்.
உலகத்தில் எது அதி முக்கியமானதோ அது இகழப்படும் என்பது வழக்கு. பெண்கள். நமக்கு உணவைப் பயிறிட்டுத் தரும் விவசாயக் கூலிகள். துப்புரவுத் தொழிலாளர்கள் – இவர்களெல்லாம் இல்லாமல் அமையாது உலகு. ஆனால் காலம் காலமாக ஏச்சுக்கும், பேச்சுக்கும், சுரண்டலுக்கும் ஆட்பட்டு வருபவர்கள் இவர்கள். அதே மாதிரி இட்லியின்றியும் அமையாது உலகு. ஆனாலும் தமிழ் ‘ரைம்’ களில், சொலவடைகளில் ‘தோசை’ க்கு இருக்கும் இடம் இட்லிக்கு இல்லை. திட்டும் போது மட்டும் இவர்களுக்கு ‘இட்லி’ வேண்டும். அதுதான் உலகம்.
ஆசிரியர் குழுவினரின் பின் குறிப்பு:
இந்தக் கட்டுரை பதிப்புக்குத் தயாரனதும்தான் இதில் சிங்கப்பூரில் இட்லி கிடைக்கும் இடம் பற்றி கட்டுரையாளர் குறிப்பிடவேயில்லை என்பதைக் கவனித்தோம். கட்டுரையாளரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எனவே எங்களுக்குத் தெரிந்தவரையில் சிங்கப்பூரில் இட்லி கிடைக்கும் சில இடங்கள்: கோமள விலாஸ், கோமளாஸ், முருகன் இட்லி கடை, எம்.டி.ஆர்., பிக் பைட்ஸ், ஹோட்டல் ராஜ், சரவண பவன், ஆனந்த பவன், இதைத் தவிர எண்ணற்ற சிறு சிறு கடைகள் மற்றும் அனைத்துத் தமிழர், தென்னிந்தியர் இல்லங்களிலும். லிட்டில் இந்தியாவில் இருக்கும் ஸ்ரீநிவாஸ பெருமாள் கோவிலில் வெஜிடபிள் பிரியாணி கூட கிடைக்கிறது என்பது கொசுறு செய்தி.
No comments:
Post a Comment