FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, August 14, 2014

கீற்று

கீற்று


வ. ஸ்ரீநிவாசன் :  சொல்வனம் இதழ் 110 : 1-8-2014
boy-looking-out-window-in-the-rain
இளம் குளிர்.
பரவலாய் வீசும் மழை.
மரங்களில், இலைகளில் மலர்ச்சி.
வீடுகள் நனைந்து கொண்டே
வெளியே சாலையில் வேடிக்கை பார்க்கும்.
முகப்பில் சன்னல் கம்பிகளில்
அல்லது
கைகளில் கன்னம் பதித்து
சிறுமியரும், பையன்களும் கூட.
உள்ளேயும் உள்ள வானம்
“சற்றே வெறிக்கட்டுமா?”
என்று மெதுவாய்
உத்திரவு கேட்கும்.
உறங்கும் குழந்தை,
மஹாவிஷ்ணுவின் கிலுகிலுப்பைக்கு
சிரித்து முடித்த பின்னர்தான்
‘உம்’ கொட்டும்.
அதுவரை அமைதியாய்க்
கை கட்டி நிற்கத்தான் வேண்டும்.
-

Friday, November 16, 2012

சரஸ்வதி வந்தனம்

சரஸ்வதி வந்தனம்




Photo: சரஸ்வதி வந்தனம்
 
தன்னைக் கற்ற லன்றிக் கல்வி 
பின்னை ஒன்றுண்டோ வேறு - ஞானத் 
தாமரையி லெழுந்தருளும் தாயே ! சரஸ்வதி ! 
மாமதுரி ! தன்னைக் கற்றுணர எமக்கருள்வாய்.
 
அன்பெழி லுண்மையுருவா யிலங்கும் 
உன்னில் எமைக் கண்டு ஒன்றின்றி வேறு 
ஒன்றென்றும் இல்லை என உள் உணர்ந்து 
நின்றிருக்க நீயருள்வாய்.
 
அருள்கின்ற நீயும் 
திரள்கின்ற அருளும் 
பெறுகின்ற யாமும் வெவ்வேறா? 
பொருளின் பொருள் பொருளே !
 
நெற்றிக்கண் பரமனும் சக்தியும், 
நெடுமாலுமி லக்குமியும் போல் 
கலைமகளே நான்முகன். 
கற்றலே சிருஷ்டி!




 தன்னைக் கற்ற லன்றிக் கல்வி 
 பின்னை ஒன்றுண்டோ வேறு - ஞானத்                                     
 தாமரையி லெழுந்தருளும் தாயே ! சரஸ்வதி ! 
 மாமதுரி ! தன்னைக் கற்றுணர எமக்கருள்வாய்.

அன்பெழி லுண்மையுருவா யிலங்கும் 
உன்னில் எமைக் கண்டு ஒன்றின்றி வேறு 
ஒன்றென்றும் இல்லை என உள் உணர்ந்து 
நின்றிருக்க நீயருள்வாய்.

அருள்கின்ற நீயும் 
திரள்கின்ற அருளும் 
பெறுகின்ற யாமும் வெவ்வேறா?    
பொருளின் பொருள் பொருளே !

நெற்றிக்கண் பரமனும் சக்தியும், 
நெடுமாலுமி லக்குமியும் போல் 
கலைமகளே நான்முகன். 
கற்றலே சிருஷ்டி!



23-10-2012
ஸ்ரீரங்கம்
திருச்சி - 6

Monday, August 27, 2012


கவிதைகள்

வ.ஸ்ரீநிவாசன்  பிரசுரம் : சொல்வனம் | இதழ் 74 | 16-08-2012
1. மனிதத் துன்பவியல்
தம்மை முழுதாய்க் கொடுத்து,
-காற்றைத்
தழுவும் மரங்கள்.
எதன் மேலும் ஏறி
விளையாடும் அணில்கள்
இசைக்கும் புட்கள்
வானம் பெற்றுப் பிழைத்த கோள்கள், விண்மீன்கள்
வந்து போகும் விருந்தாளி மேகங்கள்
ஒளி, வெளி, வளி,
சிந்தாத கடல், புல் மலரும் பூமி.
எங்கும் என்றும் குறைவுறா அமுதம்
பருகாத மனம்.

2. எல்லா இதயங்களிலும் இவ்வடைப்பு
உலகை - அதாவது பிரபஞ்சத்தை -
அதாவது உம்மையும், என்னையும்
எனப் பொய்யாய்ப் பிரிந்திருக்கும் நம்மை -
உருவாக்கி இயக்கும் சக்தியென்று
ஒன்று தனியாய்
உள்ளதென்ற எண்ணம்.
அதில் பிறந்த அவ்விருமை
அடைத்து விடுகிறது இதயத்தை.
மொத்த உலகத்தின் - அதாவது பிரபஞ்சத்தின் -
அதாவது நீரும், நானும் எனத் தோன்றும் நம்மின் -
உள்ளிரைச்சல் ஓய்கையில்
அஹம் பிரம்மாஸ்மி
தத் த்வம் அஸி,
தௌ ஆர்ட் தட்
அன் அல் ஹக்
நானே உண்மை
என்றெல்லாம்
வார்த்தைகளற்று
மூச்சொவ்வொன்றிலும்
முறுவல்
கேட்கலியோ?
– கேட்டு
மூடி திறக்கலியோ?

3. ஆதாரக் கேள்வி அல்லது பதில்
அர்த்த நாரியாவது?                                  
அதுதானே முழுமை.
அரனும், அம்மையும்தானே
இருமை ?
-o00o-

Saturday, November 19, 2011

மலை மீது பயணம் (ஒரு கொண்டை ஊசி வளைவுக் கவிதை)


மலை மீது பயணம் (ஒரு கொண்டை ஊசி வளைவுக் கவிதை)

வ.ஸ்ரீநிவாசன் பிரசுரம் : சொல்வனம் | இதழ் 59 | 12-11-2011 
சூரியனை
- மகிழ்வோடு
வரவேற்கும் - எங்கேயும் போலான -
ஆதரவு வெளிர் வானம்.
துணை உள்ளோம், துயர் துடைக்க என
உயர்ந்திருக்கும் பெயர் தெரியா
பெருமரங்கள்.
விரி சிரிப்பை, சுக ஒளியைப்
பரப்பி வரும் சிறு குழந்தை
மழைப் பூக்கள்; பூ மழைகள்.
மென் செடிகள், புதர்கள்,
தாவரங்கள், புள்ளினங்கள்,
பூச்சிகள், புழுக்கள்.
மேக உறவினர்கள்.
குளிர்ப் பச்சை.
எல்லாவற்றையும் இணைக்கும்
பூங்காற்று. 
வளைவில் திகைப்பூட்டும்
அருவிகள், அருவித் தடங்கள்.
தூரத்துப் புகை ஊர்கள்…..
மனித இதயம் போல்
கடிந்திருந்தாலும்
அனைத்தையும்
ஏந்தி நிற்கும் மலை.
-o00o-
இவை,
மற்றும்
மலைதனைப் பிளந்து
சாலை செய்த தொழிலாளர்
பொறியாளர்
அனைவருக்கும்
என் வணக்கம்.
-o00o-
பார்வை அமைதியைக்
குலைக்கும்
கவிதையின் சொல்லுருவைத்
தொலைத்தேன்.
-o00o-
நெஞ்சப் பனிமலையுருகி
மொத்தமாய்க் கரைந்து
பெருகிய தன்பருவி.
 

Saturday, June 11, 2011

மூன்று கவிதைகள்


மூன்று கவிதைகள்

வ.ஸ்ரீநிவாசன் | பிரசுரம் : சொல்வனம் : இதழ் 51 | 10-6-2011
படிக்க ஒரு நூல்
வெட்டி உயிர் போகும்.
விழும் உடல் எழும்.
கட்டிவைத்த ஆசை
காமம் காற்றோடு போகும்.
விடுதலையும் தளையும் என
வேஷம் போடும்.
சூடும் குளிர்ச்சியும்
இடை நிலைகளும்
உணரும் உடம்பு
பேசும் பேச்சைக்
கேட்டால் போதும்.
பிறகெதுவும் வேண்டாம்.
-o00o-
ஒரு பறவை பழம் தின்னும்
எச்சமிடும்; கூடுகட்டும்;
குடும்பம் நடத்தும்.
ஒரு பறவை வெறுமனே
அமர்ந்திருக்கும்.
அது
ஆன்மாவா?
ஆதிக்க சக்தியா?
அலட்சிய புத்தியா?
மரணமா?
இரண்டு உளவா?
தீராத் துயரென்னும்
சந்தர்ப்பத்தில்
உள்ளே எக்காளமிடும்.
அதுவே
அடிவயிற்றிலிருந்து
உருண்டையாய்க் கிளம்பி
அழும் ஒன்றை விழுங்கி
அசைக்க முடியாததெனத் தோன்றி
அழிந்தும் போகும்.
-o00o-
எதுவும் முடிவதில்லை
நேற்று நீ செய்த நன்றை - நான்
நினைத்தே பார்ப்பதில்லை.
வழியெல்லாம் மழை பெய்து வெள்ளம்.
வண்டி ஏதும் தப்புவதில்லை.
இடுப்பில் குழந்தை.
இல் சுகத்தின், துயரின்
இல்வெறுப்பின், அலுப்பின்
இறுதி வடிவம்.
தீபப் பிறை வர்த்தி
ஏற்றப்படும் முன்
இருந்ததா கடவுள்?
இருந்ததா வன்முறை?
இல்லையா கடவுள்?
இல்லையா வன்முறை?
அன்றி
ஏதும் தொடர்வதில்லை.

Sunday, May 29, 2011

மரமும் நிழலும், மற்றும் சில கவிதைகள்


மரமும் நிழலும், மற்றும் சில கவிதைகள்

வ.ஸ்ரீநிவாசன் | பிரசுரம்: சொல்வனம்- இதழ் 49 | 09-05-2011 
ப்பொழுதும் போல்” எதுவும் நடப்பதேயில்லை.
முப்பொழுதும் முகிழ்க்கும் புதிது.
இப் பொழுதுக்கு ஏழு கடல், ஏழு மலை,
ஏழு ஜென்மம் தாண்டி வர வேண்டும்.
0
அது துல்லியமானது.
காத்திரமானது.
பிரபஞ்சத்திலேயே பலமானது.
உண்மை மட்டுமே ஆனது.
அதைப் பிடித்துக் கொண்டு
சொர்க்கத்திற்குப் போய் விடலாம். - ஏன்
மோட்சத்தையே அடைந்து விடலாம்.
அது
இங்கு மட்டுமே இப்போது மட்டுமே.
0
தூய ஊற்றின் துளி ஒன்று
கலைஞனின் உள் பட்டு என்
கண்ணை, காதை, மனதைத் தொட்டு
ஒளியேற்றும். ஒளியை
கைப் பையில், பாக்கட்டில்,
நினைவில், உயிலில்
போட்டு வைக்க முடியாது.
0
எல்லா உணர்ச்சிகளும்
கண்ணீர்களும்
சிரிப்புகளும்
அப்போதைக்கு
மட்டுமே.
moon_tree
ற்று முன் பார்த்த
சந்திரன் - அருகில் ஒரு தாரகை -
அவற்றை
நாலு அடி நடந்த பின்
தீர முழுதாய்ப் பார்த்துவிட வேண்டும் எனத்
திரும்பினால்
தெரிவது அவற்றை மறைக்கும்
மரமும், நிழலும்தான்.
மரமும், நிழலும் மட்டும்
மட்டமா என்ன?
0
திரை கழன்று
தெரியும் காட்சியும்
இன்னொன்றின் திரை.
0
ஸ்பரிசம்
உடல்
மொழியையும்
எண்ணத்தையும்
உதிர்த்து விட்டு
தானே
தொடர்பு கொள்ள
விழைகிறது.
0
கண்ணாடிக்கு நினைவுகளே இல்லை/கிடையாது.
0

Saturday, December 25, 2010

அம்மா





அம்மா   பிரசுரம்:சொல்வனம்-2-11-2010 இதழ்-37

இருள் உதிரும். ஒழுகும்.
சிம்னி விளக்கு சுவரில் ஒட்டியபடி
உயரத்தில்.
அப்பா அம்மா மத்தியில்
இன்னும் யோசித்துத் தனியாகாத
பத்திரக் குழந்தை.
தரையில் மெத்தென்ற,
புடவை, வெள்ளை வேட்டியால்
புனைந்த படுக்கை.
-o00o-
காலணி தயார். தேய்த்த உடை தயார்.
பசி அறியாத வயிற்றுக்கும் வாய்க்கும்
ருசியான உணவு தயார். எல்லோரும்
சினிமா போய் வந்த நாலு மணி
நேரத்திற்குப் பின்பும் உடை மாற்றும் முன்
சூடான சாப்பாடு தயார்.
குமிட்டிதான்.
ஃபிரிட்ஜ், ஓவன் என்ற பெயரெல்லாமே
தெரியாது.
-o00o-
பண்டிகை நாள், பலகாரம், பட்சணம்
புதுத் துணி, மஞ்சள் குங்குமம்,
எண்ணெய் ஸ்நானம்
‘லட்சுமி கல்யாணம் வைபோகமே’
எல்லாம் சரியாய் இளைப்பின்றி
எப்படி நடந்தது.
அப்பாவுக்குத் தண்ணீர் தம்ப்ளரில்
கையில் தர வேண்டும்
அருமையை விட கடுமை அதிகம்.
முள்ளில் ரோஜா.
-o00o-


கிணற்று மேடையில்
குடம் வைக்க அமைத்த குழியில்
தேங்கிய தண்ணிரைக் காகம் பருகும்.
துணி காயப் போடும் கம்பிகளில்
சென்ற நிமிடம் என்பது இருந்தது
என்னும் சாட்சியாய் நீர் முத்துகள்.
ஓடுகள் குளிரும்.
துவைக்கும் கல் கழுதையை விட பொறுமை.
பொதியோடு அடி சுமக்கும்.
அதன் முகமெங்கும் அம்மை வடு.
நாற்புறமும் இறங்கிக் குமிழும் ஓடு.
நடுவில் சிறு முற்றம்.
ஒரு பக்கம் தாழ்வாரம்.
ஒரு பக்கம் கிணறு.
குட்டிச் சுவர் தடுத்த குளியலறை ஒரு பக்கம்.
நடுவில் ஆட்டுக் கல். துவைக்கும் கல்.
வெந்நீர் அறையில் அண்டாவும்
விறகும் போய் பாய்லரும் கரியும்.
சமையல் அறையில் மூலைகளில்
மண் அடுப்புகள், விறகு மறைந்து
குமிட்டியும் போய் மண்ணெண்ணெய்
ஸ்டவ்.
தரை வெறும் தரை.
தினம் பெருக்கித் துடைக்கும் வேலைக்காரப்
பெண்மணி, காய்க்கார, பால்கார, கரிக்கார,
பழக்கார பெண்கள் எல்லாரும்
அவள் பேச்சுக்காய் காத்திருப்பர்.
எல்லோருக்கும் கொடுப்பதற்கு
ஏதாவது வைத்திருப்பாள்,
அதைவிட நிச்சயம் அன்பு.
-o00o-

அம்மா (மீண்டும்)

இப்போதெல்லாம்
நான் நிறைய நேரம்
ஒதுக்குகிறேன், உனக்காக.
அலுவலக பகாசூரன்
விழுங்கியது போக,
அகமுடையாள், குழந்தை.
அம்மாவுக்கு ஏது நேரம்?
தொலைக் காட்சி, பத்திரிகை,
தூக்கம், ஆசை.
தின்னவும் குளிக்கவும் கூட
நேரம் இல்லை.
சோம்பல், மயக்கம்
தூக்கக் கலக்கம்.
இடையில் வள்ளல் நினைப்பில்
உன் அறைக்குள் நுழைகையில்
அலுவல், இலக்கியம், அரசியல்
நினைவு வரும்.
‘உம்’ கொட்டல் பேச்சா?
கொஞ்ச நேரம் - இன்னும்
கொஞ்ச நேரம் - இருந்திருக்கலாம்.
ஆனால் ஆபீஸ், ஆசை, யோசனைப் பேய்
தூக்க வெறி.
இப்போ அப்படியில்லை.
ஆபீஸில், மோட்டார் சைக்கிளில்,
பொண்டாட்டி, பெண், டி.வி.யோடு
போது போகையில்
உன்னோடு (மட்டுமே) இருக்க
முடிகிறது.
நீ போன பிறகு.
-o00o-

அம்மா (3)

அவள் ஒரு மந்திரவாதி.
இப்படித்தான் ஒரு சமயம்
தன் வளையை
சைக்கிளாய் மாற்றினாள்.
அப்பா ஆபீஸ் போனது அதில்தான்.
தங்கை பிறந்த போது
வெய்யிலைத் தணிக்க
வளையலை மின் விசிறியாக்கினாள்.
மருத்துவர் செலவு, மருந்து
என்றெல்லாம் ஆக்கியிருக்கிறாள்.
ஒருநாள் கூட அயர்ந்து படுத்ததில்லை.
அலண்டு போனதில்லை.
சோம்பல், சுணக்கம் இல்லை.
கசங்கின புடைவையோ, கலைந்த
தலையோ, தூசித் தரையோ
பத்தான பாத்திரமோ
பார்த்தில்லை.
பிறக்கும் முன் தகப்பனை
பின் பதினைந்தில் தாயை,
முப்பதுகளில்கணவனை
இழந்த துக்கத்தை
எவர் மீதும் ஏற்றியதில்லை.
எங்கும் காட்டியதில்லை.
எட்டு நாள்
ஐ.சி.யூ.வின்
கண்ணாடி மௌனத்தில்
இரும்பு இதய நர்ஸ்களின்
அசட்டு சுத்த அலட்சியத்தில்
தனிமை வாசம்.
ஒரு நாள் கூட
அதற்கு முன்
தனியாய் இருந்ததில்லை,
முழு வாழ்நாளிலும்.



அம்மா (4)

எவ்வளவோ எண்ணங்கள்
எதையுமே சொல்லவில்லை.
எவ்வளவோ வண்ணங்கள்
எதையுமே பார்க்கவில்லை.
பிறந்தவுடனேயே தொப்புள் கொடியைத்
துண்டித்து விட்டார்கள்.
பிள்ளை தனி. தாய் தனி.
இது புரியாமல்……..
அவனுக்கு அவன் ஆசை,
ஆபீஸ். அவ்வளவுதான்.
அவளுக்கு இன்னமும் அவன்
குழந்தைதான், மடி மேல்.
அவன் பசி அவளது.
அவன் சட்டை கசங்கல்
அவள் மனத்தது.
அவன் வெற்றி யார் கண்ணும்
படாமல் அமைதியாய் பருக, நிறைய.
அவன் பயத்தை கவலையை
அவள் வாங்கித் துடைத்து எறிவாள்.
அவனுக்குத் துக்கமே இல்லை
எப்பவும்
நேற்றுவரை.
அவள் இருக்கிறாள்
எதையும் தீர்க்க.
ஒரு வேளை சோறு ஆறியதில்லை.
காப்பி கசந்ததில்லை.
பசி வந்ததில்லை, தாகம்
எடுத்ததில்லை.
உப்போ சர்க்கரையோ
தூக்கலாய் இருந்ததில்லை
வெளியில் இருந்து திரும்புகையில்
கதவில் பூட்டு தொங்கியதில்லை.
வெற்றி வெளியே தெரிவதற்கில்லை.
அது அவள் வாழ்வின் உள்ளே.
வீண் உணர்ச்சி, உயர்வு நவிற்சி
கிடையவே கிடையாது.
அவள் என்றும் ராணிதான்.
பயந்தோ கெஞ்சியோ
பழக்கம் இல்லை.
வீட்டின் சகல
பொறுப்புகளையும், பிள்ளைகளின்
வாழ்வின் சகல நிகழ்ச்சிகளையும்
தினசரியின் சகல காரியங்களையும்
அன்பால், ஆளுமையால்
தொப்புள் கொடி அறுந்ததையே
தெரிந்து கொள்ளாமல் அசடாய்
நிகழ்த்தியவள்.
ஒருநாள் இரண்டு நாள் அல்ல.
நாற்பத்தைந்து வருடங்கள், ஐந்து
மாதங்கள், மூன்று நாட்கள்
அவளைப் பொறுத்தவரை
அன்றுதான்
தொப்புள் கொடி
எரிக்கப் பட்டது.
அதுவரை அவன்
அவளில் ஒரு
அங்கம்தான்.
அவள் அவன்
வாழ்க்கையை வாழ்ந்த
அஞ்ஞானத்தில்
தன் வாழ்க்கையை
வாழத் தவறி விட்டாள்.

Friday, October 15, 2010

காமப் புகை நடுவே…

காமப் புகை நடுவே…

வ.ஸ்ரீநிவாசன் | பிரசுரம் : சொல்வனம் : இதழ் 36 | 15-10-2010 
பழைய ஏற்பாடு
காற்றும் ஒளியும்
ஆகாய வெளியும்
ஆச்சர்யமானவை.
காதல் வேகம்
மரணத்தின் குழந்தை.
மனித குலம்
தீர்ந்து போய்விடுமோ
என்ற பயமே - தீராத
காமமாய்ப் பரிணமிக்கும்



girl











-o00o-

பெண்
வளைந்த திரி சுடர் புருவம்
சிவந்த விரி சோழியுள்
விளைந்த நல் கரு முத்து விழி
கரையாத அமுதக் கன்னம்
ஆணுக்கு இதில் ஒன்றே ஒன்று போதும்.
இயற்கையின் நம்பிக்கை இன்மையால்
இன்ன பிற பலப் பல.
குரங்கு கைப் பூமாலை.
-o00o-









புணர்ச்சி
தீ தழுவிய
காகிதம்
கட்டிப் புரளும்.
காமப் புகை நடுவே
கரிக் கரு.
girl2
மோட்சம் (அ) தப்பித்தல்
காம நதியின்
கரையில் அமர்ந்து
காலையும் கையையும்
அளைந்தது போக - இப்போ
முழுவதும் அதிலேயே
மூழ்கி ஆயிற்று.
கவலையை மறக்க
காமத்தை மறக்க
கடவுள் இன்மையை சரி செய்ய.
போதையில்
புதைந்துள்ள ரகஸ்யங்கள்
வெளி வரலாம்.
ஈரலும் இருதயமும்
என்னவாகுமோ - எனவே
காமம் பாதுகாப்பானது.
மரண ஜ்வாலைக்கு
ஆஹுதியாய்
மீண்டும் மீண்டும்.
தளர்ச்சி, பறக்கும் உடல்.
உடல் உயிருக்கு விடும் சவால்.
வலியை விவரிக்க முடியாது.
சுகமும் அப்படியே.
வாசனையை வரைய முடியாதது போல.
உருகி உருகி
செயல் ஒரு சடங்காகி
வெறியில் காமம் குளிர்ந்து போய்
வெறும் வெறி மட்டும்தான் மிச்சம்.
கோடி கோடியாய் உயிர்களை
உதிக்க வைத்த இந்த மகாநதியின்
வீச்சையும் பரப்பையும்
வெற்றி கொள்ள விரையும் வெறி.
கரையோர சாக்கடைகளில்
கோவில் மணி ஒலிக்கும்.
அபிமானக் கொடி பறக்கும்.
மரணத்தை முயங்க
மனம் பதைத்து சுருங்க
தளர்ந்த கண்ணும்
அலட்சியத்தால் கோணிய உதடுகளும்
உந்நதம் பற்றிப் பேசும்
பொய் நாக்குகளை மறுதலித்த
உடலேயான உள்ளமும்
புழுவைக் கதிரவனாக்கி
அண்ட வெளியை
கமண்டலத்தில் அடைத்து
இந்திரியமாய்த் தெறிக்க
வைக்கும் நீச்சலும்…
இந்த
முடிவற்ற செயலின்
ஊடே
மூச்சுக் காட்டும்
மோட்சம்.


Monday, May 24, 2010

மெய்யாதரவு

மெய்யாதரவு பிரசுரம் : நவீன விருட்சம் (ஏப்ரல்-ஜூன் 2002)இதழ்-56

காற்று
ஒருக்களித்த
கதவின் வழியாக
நீளமான
ஒற்றைப் பின்னலைப் போல்
ஊள்ளே வந்து
புது மூச்சைக் கொடுத்து
வியர்வையை அகற்றி
மனதைத் துடைத்து
பின் வழியாகப்
போய் விட்டது
நன்றி நினைப்பதற்குள்.

எழுதியது : 23-10-94

வைதவ்யம்.

வைதவ்யம். பிரசுரம் நவீன விர்ருட்சம் (ஜூலை - செப் 2002) இதழ்-57

விதிர்க்கும் விளக்கின் சுடர்;
அது மட்டும்தான் துணை.
அப்பா போன பிறகு
அடுக்குள்ளில்தான் படுக்கை.
(இன்று மாலையிலிருந்தே
மின்சாரம் இல்லை.
விளக்கின் வாழ்க்கை எனவே நீண்டது.)
கொஞ்ச நெரத்தில் சுடர்
அடக்கமாய் சிம்னிக்குள்
அமர்ந்து கொள்ளும்.
ஏற்கனவே
முன்னிரவென மயங்கி
கரப்பான்கள் புறப்பாடு.
கருஞ்சுவர் கர்ப்பகிரஹங்களிலிருந்து
மூட்டைப் பூச்சிகள் எழுந்தருளல்.
தன்னந்தனியான விதவை
அன்னைக்கும் அவளின் இரு
சின்னக் குழந்தைகளுக்கும்
இவை பற்றிக் கூட பயமில்லை.
கோடையின் உஷ்ணம் தாளாது
அவ்வப்போது உத்திரத்திலிருந்து
விழும்
தேள்களைப் பற்றித்தான்.

எழுதியது : 8-2-02.

Tuesday, February 16, 2010

கவிதைகள் 1970-79

1. இழந்த சொர்க்கம்

நெருப்புக் கதிர்கள்
அணைத்த அணைப்பில்
சுருண்ட உடம்பும்
வரண்ட குடலும்
வீட்டில் நுழைந்து
மூலைக்குச் சென்று
ஏலக்காய் வெட்டி வேர்
கடையில் வாங்கின ஒரணா ஐஸ்
எல்லாம் மணத்த
பானை ஜலத்தை
டம்ளரில் மொண்டு
அடுத்த வீட்டுப் பெண்ணை
மெல்ல நினைத்து கண்ணை மூடி
குடிக்க எடுக்கையில்
டம்ளரின் உள்ளே
ஜலத்தில் மிதந்த
வெள்ளைப் பல்லி
வயிற்றைப் பிசைந்தது.

ஏப்ரல் 1971 கணையாழி.

2. விசாரங்கள்

எனக்குள்ளேதான் எத்தனை பயங்கள்?
இந்தப்
படிப்பை எப்படி முடிப்பேன்?

முடித்ததும் முளைக்கும் உத்யோகத்தில்
எப்படி நிலைப்பேன்?

எவன் மேலேயிருந்து
என்னை இயக்குவான்?
கடுகா?
கல்கண்டா?

வேலையில் நிலைத்ததும்(தான்)
விவாஹம் !
[ஹ்ம் ! எத்தனை யுகங்கள் இடையில் !]

வியாபிக்கப் போபவள் பிணைப்பால்
விளையப் போவது
விஷமா?
சுகமா?
நாலே நாட்களில் நான் வெறுக்கும்
நம்மூர்ப் படம் பார்க்க
நச்சரிப்பாளோ?
அவள்
என்னை அணைத்து யாரை நினைப்பாள்?
யாரை அணைக்கையில் என்னை நினைப்பாள்?

பிறக்கும் பிள்ளை
[பெண்ணோ?]
கறுப்போ, சிவப்போ?
மேதையோ, முட்டாளோ?
பொறுக்கியோ, கோழையோ?

பிந்தின நாட்களில் வாசத் திண்ணையில்
(கொல்லைப் புறமோ?)
பார்வை மங்கி உட்காருவேனோ?
எழுபது வயதில் - என் இருபதில்
இறந்த
அப்பா அருகில் அமர்வது போன்ற
இனிய நினைவும் மங்கிப் போகுமோ?
அவர்
முகம்
நினைப்பில் வருமோ?

என்
பதினைந்தில் அணைத்து இறுக்கின
அத்தையின் பெண்
என் மனைவி அறியாமல்
இடையில் இடையில்
புதிதாய் என்னைப் பாவியாய்
மாற்றும்
சந்தர்ப்பம் (சந்தோஷமோ?)
வருமோ?

எத்தனை ஏக்கம்? எத்தனை பயங்கள்?
இத்தனையும்
"இன்றைக்கிரவே எல்லாம் முடிந்தால்"
என்ற பயத்தில்
சுட்டுப்
பொசுங்கி
உருகிக்
கருக.........
ஹா !

ஜூலை 1971 - கணையாழி.


3. மாறும் மதிப்பீடுகள் (OR) வளர்ச்சி


சின்ன வயசில் ஊர்
'அசிங்கம்' என அரற்றியது
'அற்புதம்' ஆனதாலும்
'அற்புதம்' என சிலிர்த்தவைகள்
'அசிங்கமா'ய்ப் போனதாலும்
இன்று
லிங்கங்கள்
இடம் மாறினவோ?

செப்டம்பர் 1971 - கணையாழி.



4. அலகுகளும் அளவைகளும்

நடிப்புத் திறமையை
நன்கொடை, கத்தல்களாலும்
எழுத்தின் மஹிமையை
எழுதியவன் பாரம்பர்யத்தாலும்
மொழியின் வளமையை
முச்சந்திச் சிலைகளாலும்
நிர்ணயிக்கும்
எங்கள் - தமிழ்ச் சாதியின் -
அறிவை
எம் செயல்களால்
அளக்கிறீரே !
மூடர்களே ! சம்பந்தம் இருக்கலாமோ?

செப்டம்பர் 1971 - கணையாழி


5. பழி

குதிரைகள் வண்டியேறி
சாட்டையைச் சொடுக்க வேண்டும் !
கொள் பைகள் கழுத்தில் தொங்க
மனிதர்கள் ஓட வேண்டும் !
கோழிகள் பெரியதாகி
குற்றுயிர் மானுடரை
தலைகீழாய்த் தொங்க விட்டு
சைக்கிளில் பறக்க வேண்டும் !
மாடுகள் மனிதன் காலில்
கயிறுகள் கட்டி விட்டு
பிள்ளையைக் கொன்றருகில்
பிதுங்கு வைக்கோலாக்கி
மார்பினில் இருந்து ரத்த
மாரியைப் பெறுதல் வேண்டும் !
எருதுகள் மனிதன் தோளில்
இமயத்தை ஏற்ற வேண்டும் !
நாய்களின் வீட்டையெல்லாம்
மானுடர் காக்க வேண்டும் !
சேவல்கள் திருநீறோடு
சிலிர்க்கும் பொய் பக்தியோடு
கூவிடும் மனிதர் சிரஸை
கோவில் முன் கொய்தல் வேண்டும் !
[புண்ணியம் (!) எய்தல் வேண்டும் !]

ஹே ! மனிதா !
உன் ஆறறிவுச் சூதும்
அளவடங்கா சுய நலமும்
காற்றினில் கரைந்து போக.......

செப்டம்பர் 1971 - கணையாழி.
எஸ்.பி.சி.ஏ. தங்கள் மலரில் பிரசுரித்தது.


6. நாம்


மழைத்துளிகள்
வான் பிரிந்து
உலகில் உதிர்வது
சில - மரங்களில்
சில - தரை முரட்டில்
சில - கடல் பரப்பில்
எங்கெங்கெல்லாமோ
தெறித்து
மறைவதற்காக.

மே 1976, கணையாழி


7. சித்தாந்தங்கள்


நாங்கள் புலிகள் !
வாழ்க்கையை அறிந்து
அறிந்ததை
வாயில் அடக்கினோம்.
பல்லின் கூர்மை
பொய்யைக் கிழிக்கும்.
உடம்பை விதிர்த்து
உலகை மறுப்போம்.
வாழ்க்கை வேட்டை
எமைத்
தரையில் விரித்து
சப்பணமிட்டு
சொகுசாய் அமர்கையில்
எங்கள் தியரிகள்
முதுகில்
முகத்தில்
வாலில்
கோடுகள்.

மே 1976, கணையாழி.


8. தாங்கிச் சுமைகள்

அவரவர் குதிரையில்
அவரவர் குடை நிழல்.
அவரவர் குதிரையை
அவரவர் சுமப்பர்.
சுமந்திட வேறோர்
குதிரையைத் தேடுவர்.
தேடிக் கிடைத்ததும்
குளம்புகள் தலையில்.
வாலில் ஜடாமுடி
வகையாய்த் திரித்திட
வாலும் அறுந்திடும்.
மூளிக் குதிரையை
முதுகில் சுமப்பதே
முழு முதற் வேலை.
முதுகுக் கலைவது
அடுத்த சோலி.

மே 1976 கணையாழி.


9. ஜீவிதம்

தளிட்ட அறையில்
தனியனாய் இருக்கையில் - இங்கு
எனைத் தவிர யாரும்
ஜீவிப்பதில்லை.
எங்கோ ஒரு சப்தம்.
என் நிச்சயம் நடுங்கும்.
என் மன விதைகளில்
விளைந்த
விருக்ஷங்கள்
எப்போதும்
என்னைப்
பகிர்ந்து
கொள்கையில்
தாளிட்ட அறையிலும்
நான்
தனியனாய் இல்லை.
தனித் தனித் தனித்........
அப்போது
கழுத்திற்காய்
நூல்
இழையில்
கத்தி
காத்திருக்கும்
அவனாக, அதுவாக, அவளாக.
கருப்பு பூதமொன்று
எனை நசுக்கும்.
எப்போதும்
மனசுக்குள்
ஆயிரம்
பேச்சு.
ஏதோ சில பாட்டு.
தீராத குழப்பங்கள்
தீனி.
நாம்
எல்லோரும்
சேர்ந்து காணும்
கனவா
வாழ்க்கை?
தூக்கமே விழிப்போ
-என்
சொப்பனமே
நிஜமோ.
இங்கு
இறப்புக்கும்
இருப்புக்கும்
இடையே
இல்லாத கோட்டை
இழுத்தவர் யார்?
நான்?
மரணம்
உதிப்பதற்காய்
இருளும்
வாழ்வில்
எது கவலை? பயம்?
எது துயரம்? சந்தோஷம்?
என் மீது
விழும் எச்சில்
துப்பியவன் மேலும்.
என் மீது
பாய் கத்தி
எடுப்பது எவர் உயிரை?
மரணக் கடல் கலக்க
எல்லாம் விரைகையில்
எதுவும் நிகழலாம்
இல்லையா?
நிகழட்டும்
நிகழட்டும்
பாதகமில்லை.
இது
விளைவிப்பது
ஒழுங்கீனம்? (Disorder)
அலட்சியம்? (Indifference)
குழப்பம்? (Confusion)
இல்லை.
பற்றின்மை.
அமைதி.

10. ஜனவரி 1977 கணையாழி.


மோட்சம் தேடாத எருமைகள்

குருவிகள் உள்ளே வந்து - மின்
விசிறியில் அடிபடும் என்று
ஜன்னலைச் சாத்தியாச்சு.
வியர்வை.
விலாவும் தரையும் பிசுபிசுக்க
வலிய வரவழைக்கும் தூக்கம்.
வேலை ஒன்றும் பளுவானதில்லை
ஆனால் ஒரு இடைவேளையையும்
விடுவதற்கு மனசில்லை.
ராப்பூரத் தூக்கம். பகல்பூரத் தூக்கம்.
பிரச்னைகளைத் தீர்க்கக்
காலையில் திடச் சித்தம் பூண்ட காலம்
மலையேறிப் போச்சு.
எது பற்றிப் பேசினலும் ரெண்டு
பக்கமும் சரியோ என்ற
தீராத சந்தேகம்.
இன்று சேற்றிலிருந்து
எழுந்து விட வேண்டும் என்று
உடம்பின் எல்லா மூலைக்கும்
ஆணைகள் விடுத்த மூளைக்கு
அப்பவே தெரியும்
இது 'சும்மா' ஒரு அலண்டாத விளையாட்டு.
யார் எந்த அரசியல் பேசினால் என்ன?
ஆபீஸ§ சம்பளம் குமாஸ்தா மூளையை
யார் என்ன ஏசினால் என்ன?
மூளையைக் காட்டிலும்
அதில் படரும் பாசி
சக்தியுள்ளது.
இதில் ஒரு துக்கமும் இல்லை.
பதட்டமும் படபடப்பும் குறைந்தாலும்
அதற்குத் தெளிவைக் காட்டிலும்
சோம்பலே காரணம்.
சும்மா இருப்பது
சுகமோ இல்லையோ
அதில் தொந்தரவில்லை !
ஒருகால் -
ஒரு நாள் -
புத்து வைக்கலாம்.
இல்லே ! புல் முளைக்கலாம்.

ஜூன் 1979 கணையாழி.


11. வாழ்க்கை


வெறுங்கையால் போட்ட முழம்.
அடியற்ற பாத்திரம்;
காற்று.
துளி நிஜ விஷம் கரைந்த
கற்பனைப் பாலாறு.
விரலிடுக்கால் வழிந்த த்ரவம்.
வார்த்தைகள் சிதைத்த அர்த்தம்.
யாரும் பாராத மரமுச்சிப் பேய்.
இருட்டின் புகைப் படம்
பயத்தின் ஆகாரம்.
மரணம் வடித்த சிலை.

அக்-நவம்பர் 1979 கணையாழி.