தரிசனம்
வ.ஸ்ரீநிவாசன் | பிரசுரம் : சொல்வனம் - இதழ் 34 | 19-09-2010
சுகுமாரனும், அவன் மனைவி மனோரமாவும், தாயார் பகவதியும் அந்த ஊரை அடைந்து கோவிலை நெருங்கியபோது மணி பத்து ஆகிவிட்டது. நல்ல வேளையாக அவர்கள் எட்டு மணிக்கே வேறொரு ஊரில் சாப்பிட்டுவிட்டார்கள். இந்த ஊருக்குள் நுழைந்த உடன் ஒரு கடையில் நிறுத்தி பாலும் சாப்பிட்டு விட்டார்கள்.
கோவில் இருந்த தெருவின் அடுத்த வீதியிலேயே நல்ல லாட்ஜ் ஒன்று இருந்தது. சுகுமார் தன் ஆபீஸில் இருந்த ஒருத்தரிடமிருந்து அறைக்கு சிபாரிசு கடிதம் கொண்டு வந்திருந்தான். முதல் மாடியில் குளியலறை இணைந்த, மூன்று படுக்கைகளைக் கொண்ட அறை ஒன்று கிடைத்தது.
காரிலேயே பதினைந்து நாள் டூர். ஒரு வாரத்திற்குள்ளாகவே பெண்கள் இருவரும் களைத்து விட்டார்கள். கார் ஓட்டுவது சுகுமார் நினைத்தை விட கடினமான வேலை என்பது தெரிந்து விட்டது. இரண்டு செல்ஃபோன்களின் சார்ஜர்களையும் வீட்டிலேயே மறந்து விட்டு வந்தது துன்பமாய் இருந்தது. இரண்டு செல்லுமே செத்து விட்டன. நாளை முழுதும் இந்த ஊரிலேயே தங்கிவிட்டு மெதுவாகத்தான் டூரைத் தொடரவேண்டும். ஒரு செல்ஃபோன் சார்ஜர் வாங்க வேண்டும்.
ஒரு டெலிஃபோன் இருந்தது. அறையின் அமைப்பு சின்னதாக இருந்த போதிலும் அமைதியாக இருந்தது. லாட்ஜில் அறைகள் தெருவிலிருந்து தள்ளி இருந்ததும், தெரு ஆளரவமற்று இருந்ததும் காரணமாக இருக்கலாம். படுக்கை விரிப்புகள் தலையணைகள் எல்லாம் சுத்தமாக இருந்தன. திரைச் சீலைகள் காற்றில் பம்மிக் கொண்டிருந்தன. மூன்று வழி இசைக்கு அந்த அறையில் வசதி இருந்தது. சுகுமார் அதற்கான பட்டனைத் திருகியபோது ‘கர்புர்’ என்று சப்தம் வந்தது. டி.வி.ரிமோட்டையும் காணோம்.
முகம் கழுவிக் கொள்ளக் கூட சோம்பலாக இருந்ததால் பாத்ரூம் போய்விட்டு அவன் மனைவியும், தாயாரும் படுக்கையில் படுத்துக் கொண்டார்கள். சுகுமாரனும் படுப்பதற்கு ஆயத்தமானான். படுத்தவாறே தலையருகே இருந்த ஃபோன் ரிசீவரை ஒருமுறை எடுத்து காதில் வைத்துக் கொண்டான். டி.வி.ரிமோட் கேட்கலாம் என்ற யோசனை அரைகுறையாக மனதில் உருவான சமயம் “டக்’ என்ற சப்தத்தைத் தொடர்ந்து “யெஸ் ப்ளீஸ்” என்ற ஆண் குரல் கேட்டது. சில நொடி தயங்கிய சுகுமாரன் “கோவில் காலையில் எப்போது திறக்கும்” என்று கேட்டான்.
“காலை நாலு மணிக்கு. தவிர இன்று சனிக்கிழமையில் வரும் அமாவாசையென்றபடியால் இரவு மணி ஒன்றுக்கு ஒரு விசேஷ பூஜை உண்டு. அதில் ராஜா கலந்து கொள்வார்.”
“எந்த ராஜா?”
“இந்த ஊர் ராஜா”
“ஓ அப்படியா! ரொம்ப நன்றி. இரவு 12.30க்கும் மறுபடி காலை 3.30க்கும் எழுப்ப முடியுமா?”
“நிச்சயம்”
“இரண்டு தடவையும் அவசியம் எழுப்புங்கள்”
“நிச்சயம்”
“நன்றி”
இன்று காலையிலிருந்தே பிராயாணம் செய்த களைப்பும், புழுதி படிந்த உடம்பும், தலையும், லேசான ஜலதோஷமும் அவனைத் தொந்தரவு செய்தன. ஒருவேளை தூங்கிப் போய்விட்டால் பூஜைகளைப் பார்க்க முடியாமல் போய்விடுமே என்று தோன்றியது. அதற்கு என்ன செய்ய முடியும், அதிருஷ்டம் இருந்தால் பார்ப்போம் என்று சமாதானமும் செய்து கொண்டான். ஒரு கணம் உடம்பை அலம்பிக் கொள்ள எண்ணியவன் “அப்பா” என்றவாறே படுத்துக் கொண்டு விட்டான். கையருகில் இருந்த ஸ்விட்சை அமுக்கி லைட்டை அணைத்தான். இருட்டில் கண்ணை இடுக்கிக் கொண்டு ரேடியம் வாட்சைப் பார்த்தான். மணி பத்திலேயே நின்று போயிருந்தது. பத்தரை இருக்கும் என்ற எண்ணம் முடிவுறுவதற்குள்ளாகவே தூக்கத்தின் நுழைவாயில் திறந்து விட்டது.
-o00o-
அப்போதுதான் கண் மூடினாற் போல் இருந்தது. டெலிஃபோன் பல முறை அடித்து விட்டது. ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து இவன் ரிசீவரை எடுத்ததும் “கோவிலுக்குப் போக வேண்டும் என்று எழுப்பச் சொன்னீர்களே” என்ற குரல் வந்தது.
“நன்றி”.
ஒரு ஐந்து நிமிடம் கழித்துத்தான் எழுந்தான். மனோரமாவையும், தாயாரையும் எழுப்பினபோது அவர்கள் அசதியோடு சற்று கோபத்தோடே எழுந்தார்கள்.
“கோவிலுக்குப் போகலாம். எழுந்திருங்கள்.”
இருவரும் உடம்பு கெஞ்சுகிறது. காலையில் போகலாம் என்று முனகினார்கள்.
“ராஜா வருகிறாராம். இவ்வளவு ரூபாய் செலவழித்துக் கொண்டு வந்தது இதற்காகவா? தூங்கவா வந்தீர்கள்” என்று எழுப்பினான்.
அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. ஒரு வாரமாகவே அலைச்சல். அலைச்சல். மனோரமா மூன்று மாதங்களுக்கு முன்புதான் டைஃபாய்டிலிருந்து மீண்டிருந்தாள். பகவதி அம்மாளோ கால்வலியால், காலாணியால் அவதிப்படுபவள்.
அவர்களை மேலும் எழுப்ப முற்படுவதில் பிரயோஜனமில்லை, அது சரியுமில்லை, இனி தாமதம் செய்தால் தானும் பார்க்க முடியாமல் போய்விடும் என்று தான் மட்டும் வேஷ்டியும், மேல் துண்டுமாக செருப்புமில்லாமல் சுகுமாரன் கிளம்பினான். “சரி நான் போய்விட்டு வரேன். ரூமை உள்ளே தாள் போட்டுக் கொள்ளுங்கள். பத்திரம்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
கீழிறங்கி வந்தபோது வரவேற்பு மேசையில் யாரையும் காணோம். வெளியில் வந்து திரும்பி கோவில் இருக்கும் வீதியை அடைந்தான். இருட்டில் நிழலைப் போல கோவில் உயர்ந்து பிரும்மாண்டமாக நின்றது. கபந்தன் வயிறைப் போல் திறந்த வாயில் வழியாக எண்ணெய் விளக்குகள் மின்னின. மின்வெட்டோ என்னவோ சாதாரணமாக ஜகத்ஜோதியாக விளங்கும் அந்தப் பிரதேசம் இருளில் ஆழ்ந்திருந்தது.
படிகள் ஏறி கோவிலின் நுழை வாயிலை அடைந்தான். உள்ளே வெகுதூரத்தில் சுமார் ஐம்பது பேர் போல் தெரிந்தனர். மேலும் உள்ளே செல்ல பத்து அடி நடந்திருப்பான். இடுப்பு உயரத்துக்கான கம்பிக் கதவு தடுத்தது. சுவரில் “பர பர”வென்று தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன.
சுகுமார் கதவைத் திறக்க முயன்றான். பூட்டி இருந்தது. காற்றோட்டமாக இருந்த அந்த பிரகாரத்தில் ஆறடிக் கொன்றாக எரிந்த தீப்பந்தங்களைத் தவிர சில கண்ணாடி விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன.
கதவுக்கு அந்தப் பக்கம் ஒரு தூண் ஓரமாக ஒருவர் படுத்து இருப்பது தெரிந்தது.
“ஏங்க” என்று அவரைக் கூப்பிட்டான். அவர் அசைவதாகக் காணோம். ராஜா வருவது இவர்களுக்கெல்லாம் பழகிப் பழகி சாதாரண விஷயமாகி விட்டிருக்கும். மறுபடி குரலை உயர்த்தி “என்னங்க, உங்களைத்தான் ஐயா, இந்தக் கதவைத் திறக்க முடியுமா?” என்று கேட்டான்.
அவர் அசைவது தெரிந்தது. பிறகு தலையை உயர்த்துகையில் சாய்வாய் இருந்த தீப்பந்தத்தின் வெளிச்சம் அவர் முகத்தில் பட்டது. சடையாய்ப் பரந்த தலைமுடியோடு அவன் பால் திரும்பிய அந்த முகத்தில் தாடியும் மீசையும் மண்டி இருந்தன. போறாததற்கு அந்த ஆளுக்கு ஒரே ஒரு கண்தான் இருந்தது.
சுகுமாருக்கு அருவருப்பாக இருந்தது. என்றாலும் “இந்தக் கதவைத் திறக்க முடியுங்களா” என்று கேட்டான். அந்த ஆள் பதிலே சொல்லாமல் மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டார். மேற்கொண்டு அவரிடமிருந்து ஒரு அசைவும் இல்லை.
“பிச்சைக் காரப் பயலுக்குத் திமிரைப் பார்” என்று தனக்குள் சொல்லிக் கொண்ட சுகுமாரன் ஒருவேளை அந்த ஆள் பயித்தியமோ என்னவோ என்றும் நினைத்துக் கொண்டான்.
கம்பிக் கதவைப் பிடித்தவாறே வலதுபுறமாக நகர்ந்து வேறு வழி இருக்கிறதா என்று பார்த்தான். அவன் நினைத்தபடியே ஓரிடத்தில் ஒரு ஆள் நுழையுமளவுக்கு கம்பிகள் விட்டிருந்தன. அதன் வழியாகப் பிரகரத்துக்குள் நுழைந்தான்.
அவன் நினைத்ததைவிட பெரியதாய் இருந்த கோவிலின் விசாலமும், பிரும்மாண்டமும், இருட்டின் நெருக்கமும் மயக்கம் தந்தன. கோவிலின் தூண்கள் தீப்பந்தங்களின் சப்தத்தில் நிசப்தத்தைப் பெரிதாக்கி விரதம் காப்பது போல் நின்றன. அவற்றினின்றும் விவரம் இன்னதென்று இருளில் தெரியாத சிலைகள் தம்பாட்டுக்கு அவனை நோக்கின.
நிலாக்காலத்தில் பிரகாராமும், திறந்த வெளியும், கோபுரமும், முற்றமும், மின்சாரத்தை லட்சியம் பண்ணாமல் பிரேமையையும், அமைதியையும் கொடுத்திருக்கும். இப்போது பரபரப்பையும் மீறி லேசான குழப்பமும் பயமும் ஏற்பட்டன.
பள்ளம் ஏதாவது இருக்குமோ, கல் ஏதாவது தூக்கிக் கொண்டு இருக்குமோ என்ற கவனிப்போடு அவன் மெதுவாகவே அந்தக் கூட்டத்தை நோக்கி நடந்தான்.
பிரகாரங்கள் மாட வீதிகளைப் போல் அகலமாக இருக்க, இடையில் இருந்த முற்றத்தின் மத்தியில் ஒரு மண்டபம் இருந்தது.
சுகுமாரன் மெள்ளப் போவதற்குள் முற்றத்தைக் கடந்து அந்தக் கூட்டம் முழுவதும் எதிர் பிராகாரத்தை அடைந்து விட்டிருந்தது. அந்தக் கூட்டத்திலிருந்து துளிக்கூட சப் தம் இல்லை. தானும் எதிர்புறம் போகலாம் என்று நினைத்தபோது மண்டபத்திற்கு வலது புறத்தில் சுமார் முப்பதடி தூரத்தில் பிரதான கோயிலை இணைக்கும் வாயிலின் கதவு திறந்தது. அங்கிருந்து மண்டபத்துக்கு மூன்று அடி அகலப் பாதை ஒன்று இருந்தது.
இருட்டுக்குப் பழகியிருக்க வேண்டிய கண்கள் தீப்பந்தத்தைப் பார்த்துப் பார்த்து மீண்டும் அரைகுறையாகவே பார்த்தன. எதிர் பிரகாரத்தில் இருந்த கூட்டம் புகைப் படலம் போல் காட்சி அளித்த போதிலும் அவர்கள் ஒருமித்த நோக்கோடு அந்த நிகழ்ச்சிக்காக காத்திருந்தது அவர்கள் காத்த அமைதியில் தெரிந்தது.
யாரோ ஒரு சிலர் கை கால்களை அசைக்கும் சப்தம், யாரோ ஓரிருவர் இருமும் சப்தம் என்று இரண்டு நிமிடம் கடந்தது.
திடீரென்று பிரதான கோவிலின் இணைப்பு வாயிலில் இரண்டு பேர் தோன்றினார்கள். அவர்கள் கையில் தீப்பந்தம் இருந்த போதிலும் அவர்கள் சரித்திர கால சிப்பாய்களைப் போல ஆடை அணிந்திருந்தார்கள் என்பது தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.
அவர்கள் ஒரு சங்கீத தாள கதியில் மண்டபத்தை நோக்கி நகர்ந்தார்கள். “ராஜா ராஜா ராஜா” என்ற மெல்லிய ஆனால் கசகசப்பான பல குரல்களும், கால்களை எம்பிப் பார்க்கும் சப்தமும் கூட ஒரு கட்டுப்பாட்டுடன் கேட்டன.
இரண்டு சிப்பாய்களைத் தொடர்ந்து அவர்களே போன்று உடையணிந்த மூன்று ஜோடி சிப்பாய்கள் தோன்றினர். அவர்களுக்கு இரண்டடி தள்ளி பூசாரியைப் போன்ற இருவர் முன்னாலும், வெண்பட்டுக் குடையையும், சாமரங்களையும் ஏந்திய நான்கு பேர் பின்னாலும் வர தலையில் ஜரிகைத்தலைப்பாகை அணிந்த ஒருவர் வந்தார்.
“அதோ ராஜா ! அதோ ராஜா !” என்ற ஏக காலக் குரல்கள்.
சுகுமார் ஒருகணம் ஆஜானுபாகுவான வெண்பட்டுக் குடை தாங்கிய சிப்பாய் ஒருவனை அவனது ஆகிருதி கருதி ராஜாவோ என்று நினைத்தான். ஆனால் அவன் சம்பிரதாயமாய் நினைத்ததற்கு மாறாக ராஜா ஒரு பட்டு வேட்டி மட்டுமே தரித்து இருந்தார். மிகவும் சிறுகூடாக சிவப்பாக ஒல்லியாக குள்ளமாக
இருந்தார். தலையில் பட்டோ ஜரிகையோ ஒரு துணியை முண்டாசு மாதிரி கட்டியிருந்தார். தலைப்பாகையைச் சுற்றிப் பூச்சரங்கள் வேறு தொங்கிக் கொண்டிருந்தன. மிக மெதுவாக வியாதியஸ்தரைப் போல ஆனால் கூட இருந்த யார் பற்றியும் சிந்தனை அற்றவர் போல் நடந்தார்.
இருந்தார். தலையில் பட்டோ ஜரிகையோ ஒரு துணியை முண்டாசு மாதிரி கட்டியிருந்தார். தலைப்பாகையைச் சுற்றிப் பூச்சரங்கள் வேறு தொங்கிக் கொண்டிருந்தன. மிக மெதுவாக வியாதியஸ்தரைப் போல ஆனால் கூட இருந்த யார் பற்றியும் சிந்தனை அற்றவர் போல் நடந்தார்.
சுகுமார் ஏமாற்றமே அடைந்தான். இந்த குட்டி ராஜாவை பொம்மை ராஜாவைப் பார்ப்பதற்கா வந்தோம் என்று இருந்தது. தானும் அறையில் தூங்கியிருக்கலாம் என்று தோன்றியது. என்றாலும் ராஜாவின் படாடோபமும் அகந்தையும் அற்ற அமைதி அவனுக்குக் கொஞ்சம் ஆறுதல் அளித்தது.
முன்னால் வந்த சிப்பாய்களும், பின்னால் வந்த வெண்குடை, சாமரம் ஏந்தியவர்களும் மண்டபத்தினைச் சுற்றி நிற்க ராஜாவும், இரண்டு பூசாரிகளும் மண்டபத்தின் படிகளில் ஏறி நான்காவது படியில் நின்றனர்.
பூசாரிகள் மெல்லிய ஆனால் துல்லியமான குரலில் சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகம் ஏதோ சொன்னார்கள். ராஜா மேலும் இரண்டு படியேறி மண்டபத்தின் மத்தியில் போய் நின்று கொண்டார். சன்னதியின் புறமாகத் திரும்பி நெடுஞ்சாண்கிடையாக ஒரு முறை விழுந்து வணங்கினார். சுகுமார், எப்படி எழுந்திருப்பாரோ என்று நினைக்கையிலேயே மிகுந்த சிரமத்துடன் தானே எழுந்தார்.
இப்போது மண்டபத்தின் மத்தியில் சன்னதியை நோக்கியவாறு கூப்பிய கரங்களோடு ராஜா நின்றார். இரண்டு படி கீழே ராஜாவைப் பார்த்தவாறு பூசாரிகள் இருவரும் நின்றனர். இன்னும் சன்னதி திறக்கவில்லை. சில சடங்குகள் முடிந்ததும்தான் திறப்பார்கள் போலும். ஒரு பூசாரியின் கையில் இருந்த தட்டில் பன்முக விளக்கும் கற்பூரமும் எரிந்தன. மற்றொருவர் தட்டில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. எதிர் பிரகாரத்தில் இருந்தவர்கள் தாமே ஒருவர் பின் ஒருவராக சீரான வரிசையில் முற்றத்தில் இறங்கி மண்டபம் நோக்கி நகர்ந்தனர். ஒவ்வொருவராக ராஜாவை விழுந்து வணங்கிவிட்டு கற்பூரத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டு மற்றொரு தட்டில் இருந்ததை கழுத்திலும், நெற்றியிலும் இட்டுக்கொண்டு திரும்பி கோயிலின் இணைப்பு வாயிலை நோக்கி முற்றத்தின் மத்தியில் இருந்த ராஜா வந்த பாதை வழியே நடந்தனர்.
அந்தக் கூட்டத்தின் வரிசை கிட்டத் தட்ட முடிந்துவிட்ட போது வந்ததற்கு தானும் ராஜாவை வணங்கிவிட்டுப் போவோம் என்று சுகுமாரன் முற்றத்தில் இறங்கினான்.
மன்னரை நெருங்கி மண்டபப் படிகளில் கால் வைக்கும்போது அவரது தோற்றம் இன்னும் அவன் ஏமாற்றத்தை அதிகமாக்கியது. ராஜா தொண்ணூறு வயதுக் கிழவராக தோலெல்லாம் சுருங்கி இருந்ததோடு மட்டுமின்றி அவர் உடம்பு லேசாக நடுங்கிக் கொண்டும் இருந்தது. அடுத்த இரண்டு படிகளைக் கடந்த போதுதான் அதை எதேச்சையாகக் கவனித்தான். தலைப்பாகையிலிருந்து தொங்கி ஆடிய மலர்ச் சரங்களுக்கூடாக அவருக்கு ஒரே ஒரு கண்தான் இருப்பது தெரியவந்தது. இன்னொரு கண் மூடிக் கொண்டு குழிந்து காணப் பட்டது. மேலே செல்லாமல் அதிர்ச்சியுடன் வேகமாய்த் திரும்புகையில் கற்பூரத்தட்டை பூசாரி அவன் பக்கமாய் இடிப்பது போல் நீட்ட அவன் விதிர்திர்த்து பூசாரியைப் பார்த்தான். அவன் பயந்த மாதிரியே பூசாரிக்கும் ஒரே ஒரு கண்தான் இருந்தது. இடது கண் மூடிக் குழிந்து இருந்தது. தன் ஒற்றைக் கண்ணால் பூசாரி அவனைப் பார்த்ததில் அடக்க முடியாத வெறுப்பை சுகுமாரன் துல்லியமாக உணர்ந்தான். தொண்டையிலிருந்து எழுந்த சப்தம் வாயிலேயே நிற்க தான் முதலில் நின்ற பிரகாரத்தை நோக்கி நகர்ந்து பிறகு ஓடினான். கோயிலின் வாயிலை நோக்கி ஓடுகையில் குளிர் வாடைக் காற்றினிடையே அவன் மார்பும், கழுத்தும், முகமும், முதுகும் வியர்த்துக்
கொட்டின. வாய் கைத்துப் போனமாதிரி அருவருப்பாக இருந்தது. ஒரு நேரம் அவனையும் அறியாமல் திரும்பிப் பார்க்கையில் அவன் நடந்து கொண்டது ஒரு பாதிப்பையுமே ஏற்படுத்தாது பிராகரங்களும், முற்றமும், மண்டபமும் அரவமற்று தீர்க்கமான நிசப்தத்தில் ஆழ்ந்து இருந்தது தெரிந்தது.
கொட்டின. வாய் கைத்துப் போனமாதிரி அருவருப்பாக இருந்தது. ஒரு நேரம் அவனையும் அறியாமல் திரும்பிப் பார்க்கையில் அவன் நடந்து கொண்டது ஒரு பாதிப்பையுமே ஏற்படுத்தாது பிராகரங்களும், முற்றமும், மண்டபமும் அரவமற்று தீர்க்கமான நிசப்தத்தில் ஆழ்ந்து இருந்தது தெரிந்தது.
வேகமான பெருமூச்சுகளோடு வீதியை அடைந்து இடுப்புத் துண்டால் முகத்தையும், உடம்பையும் துடைத்துக் கொண்டு திரும்பி லாட்ஜ் அருகில் வந்தபோதுதான் கம்பிக் கதவையோ அதனருகில் படுத்திருந்த ஆளையோ தான் கவனிக்கவேயில்லை என்ற எண்ணம் தலை தூக்கியது.
லாட்ஜுக்குள் மங்கலான விளக்குகள் வராந்தாவில் எரிந்தன. வரவேற்பு மேசையில் ஒருவன் தலையைச் சாய்த்து லேசாக வாயைத் திறந்து கண்களைக் கையால் மூடித் தூங்கிக் கொண்டிருந்தான்.
சுகுமார் தன் அறையை அடைந்து கதவை உட்புறமாகத் தாள் போட்டுக் கொண்டான். இன்னும் படபடப்பு இருந்தது. மேஜையிலிருந்த தம்ப்ளர் தண்ணீரை குடித்தான். “தூங்கு மூஞ்சி !” என்று தன் மனைவியைத் திட்டினான். தாளிடாத கதவைத் திறந்து யாராவது வந்திருந்தால்தான் தெரியும் என்று நினைத்தவாறே அவளை எழுப்பி தான் பார்த்ததைச் சொல்ல எண்ணியவன் படுக்கையில் குப்புற விழுந்து ஒருமுறை விம்மிவிட்டு உறங்கிப் போனான்.
-o00o-
டெலிஃபோன் பல முறை அடித்து விட்டது. ஆழ்ந்த தூக்கத்திலிருந்து இவன் எழுந்து ரிசீவரை எடுத்ததும் “கோவிலுக்குப் போக வேண்டும் என்று எழுப்பச் சொன்னீர்களே” என்ற குரல் வந்தது.
-o00o-
No comments:
Post a Comment