எதைப் பற்றியும் (அல்லது) இது மாதிரியும் தெரிகிறது (6) பிரசுரம் : வார்த்தை செப்டம்பர், 2008
வ.ஸ்ரீனிவாசன்.
1978 டிலிருந்து சேலத்தில் பணியாற்றிய நான்கு வருடங்களில் மூன்று கிளை மேலாளர்கள், மூன்று உதவி மேலாளர்கள், என் போன்ற சுமார் பத்து அதிகாரிகள், முப்பதுக்கும் மேற்பட்ட குமாஸ்தாக்கள், ஒரு டஜன் கடை நிலை ஊழியர்கள், இன்ன பிறர் மற்றும் நூற்றுக் கணக்கான வாடிக்கையாளர்கள் என்று பற்பல மனிதர்களோடும் நெருங்கியோ, ஓரளவோ பழகும் சந்தர்பம் வாய்த்தது. ஒரு புத்தகத்தில், விற்பனைப் பிரிவில் பணியாற்றிய ஒருவர், ஒவ்வொரு நாளும் 'ஓராயிரம் உண்மைக் கணங்கள்' (one thousand moments of truth) என எழுதியது உண்மைதான் என்று தெரிந்து கொள்ள ஆரம்பித்த வருடங்கள்.
மேனேஜ்மென்ட், தொழிற்சங்கம் இரண்டும் வலுவாக இருந்ததால் தினந்தோறும் சின்னதாகவாவது தகறாறுகள் நடக்கும். அதே காரணத்தினால் வேலையும் ஜரூராக முழுத் திறமையுடன் நடக்கும். பல ஜாதிகள், மொழிகள், சில மதங்களின் கலவையில் ஊழியர்கள் இருந்தபொதிலும் கொஞ்சம் கூட பிரிவினை உணர்வோ வேற்றுமையோ இல்லாத, பத்ரிகைகள், கேரம் போர்ட், கிரிக்கட் போன்ற பொழுது போக்கு அம்சங்களும் இருந்த கிளை. அதிகாரிகளின் வயது முப்பதைத் தாண்டாத, மேலாளர்களே நாற்பது வயதில் இருந்த காலம். இப்போது ஐம்பதுக்கு குறைவான வயதுள்ள மேலாளர்களை அரசு வங்கிக் கிளைகளில் காண்பது அரிது.
ஐந்து மணிக்கு அதிகாரிகளைத் தவிர பிற ஊழியர் பணி நேரம் முடிந்துவிடும். ஐந்தரை மணிக்கு அதிகாரிகளும், ஏற்கனவே வெளியில் சென்ற ஊழியர்களும் அருகில் இருந்த பள்ளி மைதானத்துக்கு கிரிக்கட் உபகரணங்களுடன் சென்று சுமார் ஒரு மணி நேரம் விளையாடிவிட்டு, திரும்பி கிளைக்கு வந்து வேலை செய்வோம். இது கிளை மேலாளருக்குப் பிடிக்கவில்லை. அவர் மிகக் கடுமையான விதத்தில் அதைத் தடுத்தார். மனப் புழுக்கத்துடன் கிரிக்கட்டுக்கு முழுக்குப் போட்டோம்.
ஒரு வருடத்தில் அவர் மாற்றலாகி சந்திரமௌளி என்கிற ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருந்த கோவையைச் சேர்ந்தவர் கிளை மேலாளராக வந்தார். ஒரு வாரம் பொறுத்த பின் ஒரு நாள் மாலை பேட்கள், க்ளவ்கள், ஸ்டம்ப்புகள், மட்டைகள், பந்துகள் எல்லாம் வெளியில் வந்தன. கிளைக் கட்டிடத்தின் பின்புற வழியாக சுற்றிக் கொண்டு ஒவ்வொருவராக சுற்றுச் சுவரின் பெரிய கேட்டை அடைந்தோம். கட்டிட முன் வாயிலுக்கும் வெளி கதவுகளுக்கும் சுமார் ஐம்பது அடி இருக்கும். நாங்கள் வெளியே சென்றிருப்போம். கைதட்டி எங்களை அழைப்பது கேட்டது. கட்டிட வாசலில் புது கிளை மேலாளர். 'திரும்பி வாங்க' என்று சைகையில் அவசர அவசரமாகக் காட்டினார். நாங்கள் மனம்நொந்து மெல்ல உள்ளே வந்தோம்.
'என்ன கிரிக்கட்டா?'
'ஆமாம் சார்'
'எங்கே '
'பக்கத்து ஸ்கூல் மைதானத்துலே'
'வேலை முடிஞ்சுடுத்தா?'
'வந்து முடிச்சுடுவோம் சார்'
அடுத்த வாக்கியம் என்னவென்று தெரியுமாதலால் ஓவ்வொருவராக கிளைக்குள் நுழைய ஆரம்பித்தோம்.
'என்னைக் கூப்பிடறதில்லையா" என்று அவர் கேட்டது முதலில் எங்களுக்குப் புரியவில்லை. 'நானும் கிரிக்கட் ஆடுவேன்பா, நானும் வர்ரேன்.' அவர் கோவை மாவட்ட கிரிக்கட் அணியின் தலைவராக இருந்தவர் என்பது பிறகுதான் தெரிய வந்தது.
நாங்கள் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனோம். எங்கள் அலுவலக வாழ்க்கையே முற்றிலும் மாறிப் போனது. வேலை முன்பு போலவே மளமளவென்று மட்டுமன்றி கூடுதலாக மகிழ்ச்சியோடும் நடந்தது. எங்களுக்காக தன் கார் நிறுத்த இருந்த போர்ட்டிகோவில் பேட்மின்டன் விளையாட ஏற்பாடுகள் செய்து கொடுத்தார். இரவில் வெகு நேரம் இருந்து வேலை செய்கையில், அவர் வீட்டிலிருந்து (மாடிதான்) அனைவருக்கும் பலகாரம் வரும். 'நம்ப குழந்தைகள்தானே நீங்க' என்பார். அனைவரும் மிகுந்த உரிமையோடு, அச்சமின்றி, அவரை ஒரு துரும்பைக் கூட நகர்த்த விடாமல் எல்லா வேலைகளையும் செய்து விடுவோம்.
முதலில் இருந்த கிளை மேலாளர் காலத்தில் ஒரு சம்பவம் நடந்தது. எம்.ஆர்.கிருஷ்ணன் என்று ஒரு இளைஞன் வேலைக்கு சேர்ந்தான். துடிப்பான, சுறுசுறுப்பானவன். மலையாளம் பேசும் நான்கைந்து இளைஞர்களாக ஒரு அறையில் தங்கி இருந்தார்கள்.அவனுக்கு ஒரு காதலி இருந்தாள் என்று அவன் நண்பர்கள் சொல்லக் கேள்வி. அதே சமயம் ஒரு உதவி மேலாளர் (கிளை மேலாளருக்கு அடுத்த ஸ்தானம்.) பீஹாரிலிருந்து நான்கு வருடங்களுக்குப் பின் தமிழ் நாட்டுக்குத் திரும்பி வந்தார். அவர் தாய் மொழி கன்னடம். கோவையில் அவர் காதலித்து கலப்புமணம் புரிந்து கொண்ட மனைவியும், குழந்தைகளும் இருந்தனர். கோவைக்குத்தான் அவர் மாற்றல் கேட்டிருந்தார். அவர்கள் சேலத்துக்கு அனுப்பி விட்டார்கள். அதிகாரியாகி மேலாளரான பின்பும் அவர் ஊழியர் தொழிற்சங்கத்திலேயே இருந்தார். அவருக்கு சொந்த ஊருக்கு மாற்றல் கிடைக்காததற்கு இதுவும் ஒரு காரணம். சில சமயம் கிளையின் கடை நிலை ஊழியர் 'இங்குலாப்' என்கையில் இவரும் கூட்டத்தில் கையை உயர்த்திக் கொண்டு 'ஜிந்தாபாத்' சொல்லுவது வாடிக்கையாளர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.
சேலத்தில் தங்கி சனிக்கிழமை (அரை நாள்) மதியம் இரண்டு மணிக்கு கிளை முடிந்ததும் கிளம்பி கோவைக்கு சென்றுவிட்டு திங்கள் காலை அங்கிருந்து கிளம்பி சேலம் வருவார். சனிக் கிழமை காலையிலிருந்தே, பாக்கி நாட்களில் அன்பின் திரு உருவாக, அமைதியின் மறு உருவாக இருப்பவர், கொடூரனாகி விடுவார். (மாலையிலிருந்து காமக் கொடூரனாவதற்கோ என்னவோ) எல்லோரையும் விரட்டி வேலையை முடிக்கச் சொல்வார். கிளையின் சாவி, இரும்புப் பெட்டகங்களின் சாவிகள் எல்லாம் அவரிடம் இருப்பதால் வேலைகளை ஓரளவாவது முடித்து விட்டு, எங்கள் யாரிடமாவது சாவிகளை கொடுத்துவிட்டு ஒன்று ஒன்றரைக்குக் கிளம்பிவிடுவார். அப்போதுதான் ரஜினிகாந்தின் 'தர்ம யுத்தம்' வந்திருந்தது. அதில் பௌர்ணமி ஆனால் ரஜினிக்கு வெறி வந்து விடும். சங்கிலியில் பிணைத்துக் கட்டிப் போட்டுவிடுவார்கள். சனிகிழமையானால் நாங்கள் உதவி மேலாளரை 'தர்ம யுத்தம் ரஜினிகாந்த்' என்று அழைப்போம்.
அவர் வேலையிலும் சுமாராகத்தான் ஈடுபடுவார். சில வேலைகளை, குறிப்பாக அந்நியச் செலாவணி சம்பந்தப் பட்ட வேலைகளைத் தவிர்ப்பார். ஒரு முறை, ஏற்றுமதி சம்பந்தமாக சென்னைக்கு ஒரு தொலைபேசி தொடர்பு கொள்ளவேண்டி இருந்தது. இவருக்கு இருந்த தயக்கத்தில் இவர் எம்.ஆர். கிருஷ்ணனை அழைத்து 'இதைக் கொஞ்சம் பார்' என்றார். ஊழியர்கள் அத்தகு வேலைகளைச் செய்யக் கூடாது. அவர் சொல்லியதால் அவனும் ஆர்வமாக அதைச் செய்தான்.
சில வாரங்களில் எம்.ஆர். கிருஷ்ணனுக்கு வேறொரு தேசியமயமாக்கப் பட்ட வங்கியில் பம்பாயில் அதிகாரி வேலை கிடைத்தது. அவன் புறப்பட வேண்டும். அப்போது முன்பு அவன் செய்த அந்நிய செலாவணி விஷயத்தில் ஒரு தவறு நடந்து வாடிக்கையாளருக்கு ஒரு பெரிய தொகை நஷ்டம் ஆகிவிட்டது தெரிய வந்தது. அவர் கிளை மெலாளரிடம் முறையிட்டார். முக்கியமான ஏற்றுமதியாளர் அவர். கிளை மேலாளர் எம்.ஆர். கிருஷ்ணனை வேலையிலிருந்து விடுவிக்க முடியாது என்று சொல்லி விட்டார். தன் மிக நல்ல எதிர்காலத்துக்கு அவர் தடை விதிப்பது பெரிய கஷ்டத்தை அவனுக்கும், அதற்குக் காரணமாயிருந்த உதவி மேலாளர் மேல் கோபம் கலந்த வெறுப்பை பலருக்கும் ஏற்படுத்தியது. கிளை மேலாளர் எல்லார் வெறுப்பையும் பல விதங்களில் ஏற்கனவே பெற்றிருந்தமையால் இது தனியாக ஒன்றையும் செய்யவில்லை. நாள் நெருங்கிற்று. இன்னும் இரண்டு நாட்களில் புறப்படவில்லையென்றால் அந்த நல்ல வெலையை கிருஷ்ணன் இழக்க வேண்டியிருக்கும். மன உளைச்சல். வாடிக்கையாளரின் நஷ்டத்துக்கு பணம் கட்டி ஈடு செய்ய வேண்டிய தண்டனையும் தூரத்தில் காத்திருந்தது.
நாளை இரவுக்கு அவன் பயணம் செய்ய டிக்கட் வாங்கி இருந்தானென்றால் இன்று காலை கிளை திறந்ததும், உதவி மேலாளர் கிளை மேலாளரின் அறைக்குச் சென்றார். மெல்ல பேச ஆரம்பித்தவர்கள் இரைய ஆரம்பித்தார்கள். மென்மையானவரான உதவி மேலாளர் கத்தி ஏதோ சொல்லிவிட்டு கண்ணாடி அறைக்குள் இருந்து வெளியே வந்தார். க்ருஷ்ணனைக் கூப்பிட்டு "நீ கிளம்பலாம். உன் மேல் ஒரு 'சார்ஜ்'ஜும் இல்லை." என்று கிளையின் மத்தியில் இருந்து ஒரு அறிவிப்பு மாதிரி சொன்னார். எல்லோரும் அவரைச் சூழ்ந்து கொண்டோம். "நடந்த எல்லாவற்றுக்கும் நான் பொறுப்பு. வாடிக்கையாளர் பண நஷ்ட ஈடு கெட்டால் நான் தருகிறேன். கிருஷ்ணனை ரிலீவ் செய்து, புதிய வேலைக்குச் செல்ல அனுமதியுங்கள் என்று சொல்லிவிட்டேன்." என்றார். அதை எழுதி கொடுக்கவும் தயார் என்று சொன்ன அக்கணமே அவர் ஒரு 'ஹீரோ'வாகி விட்டார். கிருஷ்ணனும் கிளம்பிச் சென்றான். அந்த வாடிக்கையாளரும் பின் தனக்குக் கிடைத்த பெரும் லாபங்களின் காரணமாகவோ என்னவோ இந்த நஷ்டத்தைப் பொருட்படுத்தவில்லை. கதைகளில் வருவது போல் எல்லாம் சுபமாக முடிந்தது.
இருபது வருடங்கள் கழித்து விருப்ப ஓய்வுக்குப் பின் நான் கோவையில் இருக்க நேர்ந்தது. கோவையைச் சேர்ந்த, சேலத்தில் என்னுடன் பணியாற்றிய, என் வங்கி நண்பனுடன் பல வருடங்களுக்கு முன்பே ஓய்வு பெற்று ஒரு வழியாக தன் குடும்பத்துடன் செட்டில் ஆன உதவி மேலாளரைப் பார்க்கச் சென்றேன். பேரக் குழந்தையோடு மகிழ்ச்சியாக இருந்தார். அவர் மனைவியார் உபசரிப்பும், இருபது வருடங்களுக்குப் பின்னான சந்திப்பும் மிகுந்த மன நிறைவைத் தந்தன. பற்பல விஷயங்களைப் பற்றி பெசிவிட்டுத் திரும்பினோம். கிருஷ்ணனைப் பற்றியும், கிளை மேலாளர் பற்றியும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
பம்பாய் சென்ற கிருஷ்ணன் ஆறே மாதத்தில் மின்சார வண்டியில் செல்கையில் கம்பத்தில் அடிபட்டு இறந்து விட்டான். உத்யோக உயர்வில் தன் சொந்த ஊரான கேரளவுக்குச் சென்ற கிளை மேலாளர் மாரடைப்பில் இறந்து விட்டார்.
****************
விளையாட்டும் மரணமும் ஒன்றாய் நினைவுக்கு வந்து விட்டன. மரணமே இறைவனின் திருவிளையாடல் அல்லது விதியின் விளையாட்டு என்றும் லீலை என்றும் சொல்கிறவர்கள் உண்டு. இதனால்தானோ என்னவோ ஹிந்து பத்ரிகையில் விளையாட்டுச் செய்திகளுக்கான பக்கத்தில்தான் மரண அறிவிப்புகளையும் போடுகிறார்கள்.
ஹிந்து என்றதும் 'வார்த்தை' முதல் இதழில் நான் அதன் ஏகபோகம் டைம்ஸ் ஆஃப் இந்தியா வருகையால் என்ன ஆகும் என்று எழுதியிருந்தது ஞாபகம் வருகிறது.. நான் எழுதியதைப் பார்த்து ஹிந்துவின் விலையை ஒரு ரூபாய் குறைத்து விட்டார்கள். ஆனாலும் என்னை ஒருவர் கூட பாராட்டவில்லை. நானும் அக்கட்டுரையில் குறிப்பிட்டதைப் போன்றே இரண்டு பத்ரிகைகளையும் வாங்குகிறேன். பேப்பர் போடுபவர் 'அண்ணாச்சி, இந்தியன் எக்ஸ்ப்ரஸ் டைம்ஸை விட சல்லிசாக வருகிறது அதையும் போடவா' என்று கேட்டார். இப்போதே வீடு பத்ரிகைகளால் நிறைந்து இருக்கிறது என்பதால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
'டைம்ஸ்' தினத்தந்தி, தினமலர் போடுகின்ற அத்தனை சினிமா செய்திகளையும் போடுகின்றது. என் நண்பன் ஒருவன் அதற்காகவே அதைப் புகழ்கிறான். குமுதம், ஆனந்த விகடன் போல் அரை, முக்கால் நிர்வாணப் பெண்களின் படங்களைப் போடுகிறது. எப்படியும் தூக்கலாக ஒரு செக்ஸ் செய்தி சர்வே, உடல் நலம், பீச் வாலிபால் மங்கைகளின் ஃபோட்டோக்கள் என்கிற பிரமேயங்களில் வந்துவிடுகிறது. பெரிய கறுப்புக் கண்ணாடி அணிந்த நடிகைகளின் புகைப் படத்திற்கு 'சைஸ் டஸ் மேட்டர்' என்கிற தலைப்பு ஆரம்ப இதழ் ஒன்றிலேயே வந்ததும் பத்ரிகை எதை நம்பி வியாபாரம் செய்யப் போகிறது என்பது தெரிந்து விட்டது. இந்த நான்கு மாத அனுபவத்தில், இப்போதைக்கு, எவ்வளவோ குறைகள் இருந்தாலும் கண்ணியத் தன்மை ஒன்றுக்காகவே சிகப்புச் சட்டையுடனும் அழிந்த ஸ்ரீ சூர்ணத்தின் தடத்துடனும் காட்சி அளிக்கும் ஹிந்துவுக்கே என் ஓட்டு.
***********
'வாழ்க்கையின் நோக்கம் என்ன?' என்று கேட்டதற்கு ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒருமுறை 'கையிலிருக்கும் வேலை' என்று பதிலுரைத்தார்.
'கையில் உள்ளது மிகச் சிறிய வேலையாக இருந்தாலும் அதைச் செய். இல்லாவிட்டால் மனம் வேறு பல திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கும். வாழ்க்கை முழுவதுமே அவ்வாறு வீணாகிவிடும்.' - சுவாமி கல்யாணானந்தர் (சுவாமி விவேகாநந்தரின் சீடர்) கங்கல், இராமகிருஷ்ண சேவாஸ்ரமம்.
**************
No comments:
Post a Comment