FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Friday, March 12, 2010

எதைப் பற்றியும் அல்லது இது மாதிரியும் தெரிகிறது (2)

எதைப் பற்றியும் அல்லது இது மாதிரியும் தெரிகிறது (2) பிரசுரம் : வார்த்தை மே 2008

வ.ஸ்ரீநிவாஸன்.



அப்போது எனக்கு 27 வயது (1978). நாங்கள் முதன் முறையாக சென்னை விட்டு வெளியூர் வந்தோம். சேலம். சேலத்தில் கேஸ் அடுப்பு வைத்துக்கொள்ள முடியுமா என்று என் அலுவலக நண்பரிடம் (அவர் ஊர் சேலம்) கேட்டு அவர் கோபத்தை சம்பாதித்துக் கொண்டேன். அவ்வளவு விஷய ஞானம். சேலம் போய் இரண்டு நாளில் கேஸ் கனெக்ஷனுக்காக ஐ.ஓ.சி. அலுவலக மேலதிகாரி வீட்டுக்குச் சென்றேன். அப்போதெல்லாம் அப்படித்தான். என் ஸைக்கிளில் சென்றேன். 4,5 கி.மீ. தூரம் இருக்கும். காலை 8 மணி சுமார். அவர் வீடு கதவு திறக்காமல் இருந்தது. வாசலில் 'தின தந்தி'யும் 'முரசொலி'யும் இருந்தன. கொஞ்சம் காத்திருந்த பின் கதவைத் தட்டினேன். அவரே வந்து திறந்தார். 45-50 வயது இருக்கலாம். பனியனும் லுங்கியும் அணிந்து இருந்தார். குனிந்து பேப்பர்களை எடுத்து கொண்டு உள்ளே சென்றார். என்னையும் உள்ளே வரச் சொன்னார். நான் சென்னையிலிருந்து வந்திருப்பதையும் கேஸ் வேண்டும் என்பதையும் சொன்னேன். நான் என்ன வேலை பார்கிறேன் என் தகப்பனார் என்ன செய்கிறார் என்று கேட்டார். என் வேலையையும் தகப்பனார் இல்லை என்பதையும் கூறினேன். நான் நீட்டிய பேப்பர்களில் கையப்பம் இட்டார். பிறகு என் கைகளைப் பிடித்துக் கொண்டு ' கடவுள் இருக்கிறார் தம்பி. எப்பவும் கடவுள் நம்பிக்கையோடு இரு. அவர் காப்பாற்றுவார் ' என்றார். நான் நன்றி சொல்லி விட்டு கிளம்பினேன். அவர் எதற்கு அப்படி மனம் நெகிழ்ந்து பேசினார் என்று தெரியவில்லை. தகப்பனார் இல்லை என்ற விஷயம் அவருக்கு என்ன உணர்வுகளை உண்டாக்கியதோ? அல்லது வேறு ஏதாவதாகக் கூட இருக்கலாம். அவர் என்ன ஜாதி என்று எனக்கு அந்த சந்திப்பு இன்று நடந்து இருந்தால் கூட தெரியாது. (30 வருடங்கள்) அப்படி தெரிந்து கொள்ளும் திறமை இல்லாதது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் அவர் வீட்டு வாயிலில் இருந்த பத்திரிகைகள் எனக்கு அவர் பற்றி ஓர் அனுமானத்தை ஏற்படுத்தி இருந்தன. அவர் பேசியது அந்த அனுமானத்திற்கு முற்றிலும் மாறான ஒன்றாக இருந்தது. இடைப்பட்ட மர்மத்தில்தான் தமிழ்நாடு தொடர்ந்த பிரசாரங்களை மீறி கலவரங்களும், ரத்தக் களரியும் இன்றி நாகரிகத்தோடு வாழ்ந்து கொண்டு இருக்கிறது.


*****

திரு அ. முத்து லிங்கத்தின் 'மகாராஜாவின் ரயில் வண்டி' யில், 'பூர்விகம்' என்ற சிறுகதை ஓரிடத்தில் முடிந்து " இந்தக் கதை இங்கே முடிந்திருக்க வேண்டும். ஆறு மாதம் சென்ற பிறகு நடந்த ஒரு சம்பவத்தால் இன்னொரு பத்தி எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது." என்ற ஆசிரியரின் கூற்றோடு கொஞ்சம் தொடர்ந்து மீண்டும் முடிகிறது. இது ஆசிரியரின் தெளிவைக் காட்டுகிறது.

ஒரு கதை சரியான இடத்தில் முடிய வேண்டும். புதுமைப் பித்தனின் 'பொன்னகரம்' கடைசி இரண்டு வாக்கியங்களுக்கு முன்பே முடிந்து போனதாக ஜெயகாந்தன் முப்பது, முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பாக ஒரு மேடையில் கூறினார்.

' Words ' நூலில் சார்த்தர் ஒவ்வொரு மனிதனும் சரியான வயதில் சாக வேண்டும் என்கிறார். அதிகம் வாழ்பவனென்னாவான் என்பதையுமல்லவா அடூர் கோபால க்ருஷ்ணனின் 'முகா முகம்' காட்டியது.

மாமேதைகள் குமாஸ்தாக்களாகவும், ப்ஃபூன்களாகவும் இறக்கிறார்கள். சினிமாவிலும், அரசியலிலும் கொடி கட்டிப் பறந்த சிலர் அவர்கள் காலத்திலேயே மறக்கப் படுகிறார்கள்.

சரி ஒரு கதை எப்போது முடிகிறது என்ற விவரம் ஆசிரியனுக்குத் தெரியாதா என்ன?

ஒவ்வொரு கதைக்கும் அதன் பௌதிக அளவைச் சாராத ஒரு ரிதம் (சந்தம்/கதி/லயம் என்று சொல்லலாமா?) இருக்கிறது. அது பிடி படாதவர்கள் கதையை நீட்டி விடுகிறார்கள் அல்லது வெட்டிச் சாய்த்து விடுகிறார்கள்.

நாஞ்சில் நாடனின் 'மாமிசப் படைப்பு' கங்கை வெள்ளம் திடீரென்று காலமும் இடமும் ஸ்தம்பிக்க உறைந்து இமயப் பனிமலையாக பிரம்மாண்டமாக உங்கள் முன் மிகச் சரியாக முடிந்து நிற்கும்.

இந்தக் காலப் பிரமாணம் சங்கீதத்தில் வருவதைப் போல. இது கதை, கவிதை, கட்டுரைகளிலும் (ஜெயகாந்தனுடைய எத்தனை கட்டுரைகள்) மஹா வித்வான்களுக்குக் கை கூடி வருகிறது.

அப்படியா?

கதைகளல்லவோ (கவிதைகளும், கட்டுரைகளும், சினிமாவும் கூடத்தான்) சரியான நபர்கள் மூலம் தங்களை சரியாக நிறுவிக் கொள்கின்றன.

*******

இந்தியவின் உலக(ரஷ்ய)ப் புகழ் பெற்ற நடிகர் ராஜ் கபூர் தமிழகப் 'பெண்' வைஜெயந்திமாலாவையும் மலையாள 'மங்கையர் திலகம்' பத்மினியையும் இன்னபிற பாரதீய நாரீகளையும் தன் படங்களில் ரொம்ப டெக்னிகலாகத் துகிலுறித்தார். இவர் மனைவி க்ருஷ்ணா கபூர் (அத்தை முறை) பேரழகி. ஒரு முறை ஒரு நிருபர் அவரை ஏன் நடிக்க வைக்கவில்லை என்று கேட்ட போது, "மனைவி மனைவிதான், நடிகை நடிகைதான்" என்றார் ராஜ் கபூர். இந்தப் பாவத்தின் சம்பளமாக ராஜ் கபூரின் பேத்திகள் கரிஷ்மா மற்றும் கரீனா முடிந்த அளவு நிர்வாணம் எய்து பணம் சம்பாதிக்கிறார்கள். என் அபிப்பிராயத்தில் ராஜ் கபூர் ஒரு சாதாரண நடிகர். அவரது வெற்றி சுமார் ஐம்பது சதவீதம் சார்லி சாப்ளினுக்கும், ஐம்பது சதவீதம் முகேஷ§க்கும் ஏதாவது சொச்சம் இருந்தால் ப்ரித்வி ராஜ் கபூருக்கும் சொந்தம். அவர் தம்பி ஷம்மி கபூர் அவரை விட திறமை சாலி. அண்ணனுக்குக் கிடைத்த ப்ரகாசத்தில் மங்கலாகத் தெரிந்தவர். லலிதா, ராகினியின் நடிப்புத் திறமை பத்மினியின் முக வசீகரத்துக்கு முன் மங்கியதைப் போல.

மேலே சொன்னது ராஜ் கபூரின் மனோ பாவம் மட்டும் இல்லை. நமது தமிழகத்தின் வெற்றிகரமான தயாரிப்பாளர்கள், நடிகர்கள், டைரக்டர்கள் முதலிய அனைவரதுமே. அதனால்தான் அவர்களால் தன் மகனை வைத்து பிற நடிகைகளோடு செமி போர்னோ படங்களைத் தயாரிக்க, சேர்ந்து நடிக்க, இயக்க முடிகிறது. இவர்களில் ஒருவர் கூட தன் வயது வந்த மகள்களை நிர்வாணமாக்கி நடிக்க வைப்பதில்லை. (பாவம், அந்தப் பெண்களாவது பிழைத்துப் போகட்டும்.) அவர்களுக்கு சகல சௌபாக்யங்களோடு அமெரிக்க மாப்பிள்ளைகள் காத்திருக்கிறார்கள். ஒருகால் அவர்களின் பேத்திகள் காலத்தில் கணக்குத் தீரலாம்.

*******

திரு. பாலு மஹேந்திராவின் படங்களைப் பற்றிய உரையாடல் ஒன்றில் ஒருவர்" பாலு மஹேந்திரா படங்களில் வரும் எல்லாப் பெண்களுமே அழகுதான்" என்றார். "Beauty is in the eye of the beholder" என்பது நினைவுக்கு வந்தது. "Beauty can save the world" என்கிறான் தாஸ்தயெவ்ஸ்கி. என் நண்பர் காலஞ்சென்ற திரு. டேவிடுடைய சிநேகிதர் திரு. ஜெயபாலன் என்பவர் 'இந்த இடத்தில் பர்ஃபெக்ஷனத்தான் ப்யூட்டி என்கிறான் தாஸ்தயெவ்ஸ்கி' என்றாராம். "Heaven is being perfect" இது ஜொனாதன் லிவிங்ஸ்டன் ஸிகல்.

அழகு மட்டுமில்லை வாழ்க்கையே பார்ப்பவரின் கண்களின்படியேதான் இருக்கிறது.
ஒவ்வொரு விஷயமும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொன்றாய்த் தெரிகிறது. காஃப்காவின் 'மெடாமார்ஃபாஸிஸ்' அவர்கள் ஊரில் ஒரு காமெடியாக வாசிக்கப் படுகிறதாம். ஒவ்வொரு விஷயம் வேறொன்றை நினைவு படுத்துகிறது. ஒருவரைப் பார்க்கையில் இன்னொருவர் ஞாபகம் வருகிறது. சாயல். ஹிட்லரின் மீசை தன் தகப்பனாரினுடையதைப் போல் இருந்தது என்கிறார் ஜே.கே. ஜி.கே. மூப்பனாரின் படத்தைப் பார்க்கையில் எனக்கு டென்னிஸ் கிருஷ்ணன் முகம் போல் இருக்கிறது. இசை விமர்சகர் சுப்புடுவிற்கும் படத் தயாரிப்பாளர் சின்னப்பா தேவருக்கும் எவ்வளவு ஒற்றுமை. பழைய காமெடி நடிகர்கள் மாலி, டைபிஸ்ட் கோபு, நீலூ ஆகியோரிடையே முக ஒற்றுமை இல்லை எனினும் பலருக்கு அவர்கள் பற்றி ஒரு சின்னக் குழப்பமிருந்தது. இவர்கள் எல்லோருமாவது தமிழர்கள். தமிழ் நாட்டின் உலகத் தர நகைச்சுவை நடிகர் நாகேஷின் முகச் சாயல் எப்படி ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாரூக் கானுக்கு வந்தது. நாகேஷிடம் ஆயிரம் முக பாவம் உண்டு. கானிடம் ஐந்தாறுதான். அவருக்கும் அது தெரியும். மக்களும் வேறெதையும் அவரிடம் எதிர் பார்ப்பதில்லை. அதே போல் ஹிந்தி நடிகை ராக்கிக்கும் ஜெயலலிதாவுக்கும் இருந்த சாயல். சாயல் களைப் பற்றிப் பேசுகையில் நான் பாதி வேடிக்கையாக சொல்வதுண்டு. த்ரிஷா - கமலா காமேஷ் + ஈ.வி.சரோஜா; நயன்தாரா - சௌகாரின் சகோதரி கிருஷ்ண குமாரி; அசின் - எல்.விஜயலட்சுமி (முகம் மட்டும்). பல வருடங்களுக்கு முன்னால் என் பெரியப்பா ஊரிலிருந்து வந்தவர், ஒரு சினிமா போஸ்டரைப் பார்த்து விட்டு ஆச்சர்யமாய் 'என்ன நாகையா இன்னுமா ஹீரோவாக நடிக்கிறார்' என்று கேட்டார். அந்த போஸ்டர் 'பஞ்ச வர்ணக் கிளி'. இப்போது ஜெய்சங்கரையே இளைய தலைமுறையினருக்கு தெரிவது கஷ்டம். அவர் போலவே இருந்த விஜய் அரோராவை ஹிந்திக்காரர்களும் மறந்து இருப்பார்கள். நம்பியார் போலவே இருந்த பிஸ்வஜித்தை அப்போதே பலருக்குத் தெரியாது.
சிலர் வேண்டுமென்றே இன்னொருவர் போல் இருக்க முயற்சி செய்வார்கள். மோகன் - கமல்ஹாஸன்; ஆரம்ப கால விஜய காந்த் - ரஜினி காந்த்.

************


சாயல் மட்டுமா என்னவெல்லாமோ ஒற்றுமைகள் தென்படுகின்றன. இங்க்மர் பெர்க்மனும், மைக்கேலேஞ்சலோ அன்டோனியோனியும் ஒரே நாளில் இறந்து போனார்கள். (30-7-2007). சினிமா கலை உலகில் மறக்க முடியாத கலைஞர்கள்.

பெர்க்மன் எண்பத்து ஒன்பது ஆண்டுகளும், அன்டோனியோனி தொண்ணுற்று நான்கு ஆண்டுகளும் வாழ்ந்து இருக்கிறார்கள். குரொஸாவாவும் தான் பல்லாண்டு (எண்பத்து எட்டு ஆண்டுகள்) வாழ்ந்தவர். ரே இவர்களை ஒப்பிட்டால் கம்மியாக (எழுபத்து ஓரு ஆண்டுகள்) வாழ்ந்தவர். பெர்க்மனின் பிரமிப்பைப் பெற்ற டார்க்காவ்ஸ்கி ஐம்பத்து நான்கு ஆண்டுகளே வாழ்ந்தார்.
பெர்க்மன் என்றதும் நினைவுக்கு வருபவை:

"காலமும், இடமும், நிஜம் என்னும் அற்ப விஷயத்தின் மேல் இருப்பவையல்ல. கற்பனை அவற்றை தினுசு தினுசாக நூற்று நெய்து கொள்கிறது." (ஃபேன்னி அண்ட் அலக்ஸாண்ட்ரா)

"மனிதன் கண்டிப்பாக அவனது தேவைகளின் படி மட்டுமே வாழ்கிறான் என்கிற பயங்கர விஷயத்தைக் கற்றுக் கொண்டேன்" (சுய சரிதை மேஜிக் லான்டர்ன்)

அவர் படங்களைப் பார்க்கையில் கிறிஸ்து அந்த ஊரிலெல்லாம் இருக்கும் கிறிஸ்துவர்களையும் சிலுவையில் அறைந்து விட்டாரோ என்று தோன்றும். பெர்க்மன் மற்றும் அவர் பாத்திரங்கள் படும் ஆத்ம அவஸ்தைகளை ஒரே தாண்டாக தாண்டிச் சென்று விடுகிறார்கள் ரேயும், குரொஸாவாவும். இந்தப் பகுதியில் வாழும் எந்த மதத்தைச் சேர்ந்த மக்களும்தான்.

மைக்கேலேஞ்சலோ அன்டோனியோனியின் மறக்க முடியாத கூற்று:

"மனிதனிடம் உள்ள ஒரு ரகசிய வெறி தன்னை அழித்து கொள்வது".

அவரது 'ரெட் டெஸர்ட்' டில் வரும் பெண் கடலில் நீந்தும் காட்சி பெர்க்மன் பல முறை முயன்று தோற்ற சிருஷ்டியின் உச்சங்களில் ஒன்று.

*******

உலக் சுதந்திரத்துக்கு / சமத்துவத்திற்கு அமெரிக்கா எவ்வளவு உத்தரவாதமோ அதே அளவு உலக சமத்துவத்துக்கு / சுதந்திரத்துக்கு சோவியத் யூனியனும், சீனாவும்.

********

உண்மையையே பேசுவது கலியுகத்திற்கான தவமாகும். - இராமகிருஷ்ணர்.
அன்பிற் சிறந்த தவமில்லை - பாரதியார்.
தென்னாப்பிரிக்காவுக்கு என் தபஸ் போதுமாயிருந்தது. இந்தியாவுக்கு இன்னும் போதவில்லை. - காந்திஜி.

No comments: