FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Friday, March 12, 2010

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது (8)

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது (8) பிரசுரம் : வார்த்தை நவம்பர், 2008.

வ.ஸ்ரீநிவாசன்


'அடுத்தவருக்கு ஐடியலிசம்' என்பது நம்மில் பலரது மனோபாவம். அரசையும், தலைவர்களையும், அலுவலகங்களையும் குறை கூறும் பலர் தனிப்பட்ட வாழ்க்கையில் சட்டத்தைத் தன்னளவில் சமயம் கிடைத்தால் மீறுவதையோ, தவறு செய்வதையோ தவிர்ப்பவர்கள் அல்லர். வேலை நேரத்தில் சொந்த வேலை செய்பவர்கள், பங்குச் சந்தை, கோவில், சினிமா, இலக்கியம், வம்பு, கொடுக்கல் வாங்கல், காதல், வீட்டுக்குப் பொருள் வாங்குவது, இன்னபிற செய்யும் பலர் உள்ளோம். இதில் 'அன்புள்ள ஆசிரியருக்கு' என்று குறைகளை, விமர்சனங்களை வீசும் பலர், அவர்கள் அலுவலில் முழு கவனத்தையும், நேர்மையையும் காட்டிய, காட்டுகிற மனிதர்கள்தானா? இதனால் அவர்கள் சுட்டும் விஷயங்கள் கவனிக்கப் பட வேண்டியவையல்ல என்று பொருள் அல்ல.

நமது நண்பர்கள், உறவினர்கள், உடன் வசிப்பவர்கள் ஆகிய பிறருக்கு நாம் வைக்கும் அளவுகோல்களில், நமக்கு என்கையில் வேண்டுமென்ற அளவு விலக்கு அளித்துக் கொள்வது பெரும்பான்மை வழக்கம். 'எல்லாப் பழியும் எனக்கே' என்று இருப்பவர்கள் சிறுபான்மையினர். அதுவும் தவறுதான். 'பிறருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தையும், சலுகையையும் உனக்கும் கொடுத்துக் கொள்' என்கிறார் புத்தர்.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது என்று புலம்புகிறவர்களில் கருப்புச் சந்தையில் பொருள் வாங்காதவர்கள், வேறு வழியில்லாத / இருக்கிற இடங்களில் லஞ்சம் கொடுக்காதவர்கள் எத்தனை பேர்? ஜாதி வெறி / பற்று / அபிமானம் என்று பிறர் செயல்களுக்கு அர்த்தம் கற்பிப்பவர்களில் ஜாதி பார்க்காதவர்கள், அனுசரிக்காதவர்கள் எத்தனை பேர்?

ஒரு காலத்தில் சில அரசு இலாகாக்களில் காலையில் வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இட்டு பின் வெளியே போய் சொந்த வேலைகளை முடித்து விட்டு வீட்டுக்குப் போய் விடுவார்களாம். வங்கிகளில் எல்லோருக்கும் அது வாய்த்ததில்லை. 'some are more equal' என்பதை கறாராகக் கடை பிடித்த தொழிற்சங்கத் தலைவர்கள் மட்டுமே அதைச் செய்தார்கள். இப்போது நிலைமை எப்படி என்பதை நீங்கள் நேரடியாக அணுகி அறிந்து கொள்ளுங்கள்.

ஒரு விஷயம். அரசு அலுவலங்கள், அதாவது வெளியே தெரியும் அரசின் முகங்கள், ஏன் இத்தனை விகாரமாக இருக்கின்றன, குறிப்பாக பொது மக்களை நடத்துவதில்? மத்ய அரசு அலுவலகம் ஒன்றில் வைகுண்ட ஏகாதசியில் 'சொர்க்க வாசல் திறப்பு' கூட்டத்திற்கு இணையாக கூட்டம் நெரிகிறதைப் பார்த்திருக்கிறேன். மாநில அரசு அலுவலகங்களில் ஒரு மின் விசிறி வசதி கூட இல்லாமல், வரிசையும் இல்லாமல் மனுக்களோடு வியர்த்து கால் கடுக்க பசியோடு நிற்கும் மனிதர்களில் ஒருவராகவோ, அல்லது அவர்களைப் பார்த்தோ இருந்த அனுபவமும் உண்டு. நடைமுறையில் தலைவர்கள் வேறு, குடிகள் வேறு என்றுதானே இருக்கிறது. 'எல்லோரும் ஓர் நிறை' என்பதும் ஒர் ஆதர்சம்தானே?


***************

'எல்லோரும் ஒன்று' என்பதும் 'நாமெல்லோரும் ஒன்று, அவன் வேறு' என்பதும் முற்றிலும் எதிர் மறையானவை.

எல்லோரும் ஒன்றுதான் என்பது உண்மையா, கற்பனையா?

எல்லோரும் பிறக்கிறோம், நிச்சயம் இறக்கிறோம். ஐம்புலன்கள், மனம் என்னும் ஆறாவது அறிவு, பசி, தூக்கம் அதைத் தவிர பயம், துக்கம், சந்தோஷம், காமம், கோபம் எல்லாம் அனைவரிடமும் உள்ளன.

உலகின் எல்லா பாகங்களிலும் மனிதர்கள் கடவுள் கோட்பாடுகளை உடையவர்களாக இருக்கிறார்கள். திருமணம் என்கிற ஆதி 'சோசலிச' தீர்வால் கிட்டத் தட்ட அனைவருக்கும் பாலுறவு சாத்தியமாகிறது. காசு, தலைவன், தாயரின் கற்பை முன்வைத்த வசவு, யுத்தம், சித்ரவதை போன்ற பிந்தைய விளைவுகள் அனைத்தும் உள்ளன. இன்னும் பிறகு கலை, மொழி, இலக்கியம், சொத்துரிமை, ஆண்டான் அடிமை முதலியன.

ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடியாத தூரங்களில், உலகின் வேறு வேறு பாகங்களில் வசித்த வேறு வேறு குழுக்கள் எப்படி பரவலாக ஒரே மாதிரி சிந்தித்துள்ளன, செயல் பட்டுள்ளன. அப்போது தினசரிகளோ, வானொலியோ, தொலைக் காட்சியோ கூட கிடையாது.

ஒருவருக்கு ஊசி பொடும்போது நாம் பல்லைக் கடித்துக் கொள்கிறோமே? செக்ஸ் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அதனால்தான் சினிமாவிலும், டிவிடியிலும் பிற ஊடகங்களிலும் அனைவரும் பார்வையால் பங்கு பெறும் 'பொதுப் பாலுறவு'க்கு (public sex) இத்தனை முக்கியத்துவம் இருக்கிறது.

'எல்லோரும்' என்று கூட அல்ல, 'எல்லாமும் ஒன்று' என்பதால்தான் ஒருவர் 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்' வாடினார். ஒருவர் 'வானில் பறக்கும் புள்ளெலாம் நான்' என்று பாடினார்.

பாரதியைப் பற்றி சொல்கையில் அவனுக்கு ஏன் இவையெல்லாம் நடக்காது. நம்மில் பலருக்கு இருக்குமெந்தப் பாதுகாப்பும் அவனுக்குக் கிடையாது. சிறு வயதிலேயே தாயையும், தந்தையையும் இழந்தவன். அனாதைக்கு தெய்வம் துணையோ என்னவோ அனாதைக்குத் துணை (யாரோ அவரே) தெய்வம் என்பதை உணர்ந்தவன். அவன் இன்னும் பல காலம் வாழ்ந்திருப்பான், தனக்குத் தானே அறம் பாடிக் கொள்ளாமலிருந்தால். "நரை கூடி கிழப் பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இரையாகி" மாயமாட்டேன் என்று ஏன் பாடினான். பாவி. புகழுடம்பை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இன்னும் ஒரு நாள் அவனது 'சின்னஞ்சிறு கிளியோடு, செல்வக் களஞ்சியத்தோடு' வாழ்வதற்கு அது ஈடாகுமா? அதற்கு அது வகை செய்யுமா? தெய்வம் நமக்குத் துணை என்ற கூற்றின் பின் ஒரு கேள்விக் குறியைப் போட்டுவிட்டு நரை கூடும் முன் அல்பாயுசில் போய் விட்டான். (அறம் பாடுவது என்கையில் ராஜீவ் காந்திக்கு தமிழ் அறிஞர் ஒருவர் பாடிய அறம் தவறாமல் நினைவுக்கு வருகிறது)

ஜெயகாந்தனிடம் தமிழ் இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும் என்றதற்கு "அதனால் எனக்கு என்ன?" என்றாராம். ராஜாஜியை 'சுய சரிதை' எழுதச் சொன்ன போது 'இன்னும் இருபத்தைந்து வருடங்கள் கழித்து யாருக்கும் ஞாபகம் இருக்கப் போவதில்லை பிறகெதற்கு' என்று மறுத்து விட்டாராம்.

****************

வீட்டருகில் இருக்கும் சிறிய பூங்காவிற்கு எப்போதாவது செல்வதுண்டு. போகும்போதெல்லாம் குரோசாவாவின் 'இகுரு' ஞாபகம் வரும். மிகச் சிறிய பூங்கா. மாலை வேளைகளில் அங்கு எத்தனை குழந்தைகள் விளையாடுகின்றன. கசடற நிற்கக் கூட கற்காத ஒரு வயதுக் குழந்தகளிலிருந்து, குழந்தைமைக் குள்ளிருந்து அவசரமாய், ஆர்வமாய், புதிராய் எட்டிப் பார்க்கும் எதிர்காலம் புரிந்தும், பெரும்பாலும் புரியாமலும் இருக்கும் குழந்தைகள் வரை. இவற்றோடு அம்மா மற்றும் சில அப்பா குழந்தைகள் வேறு. பாட்டி, தாத்தா குழந்தைகளும் உண்டு. ஒரு ராட்சஸத் (நண்பர் சுகா வார்த்தைகளில்) தாத்தா சின்னஞ்சிறு குழந்தையை 7 அடி உயரத்தில் இருக்கும் பார் கம்பிகளில் நடக்க வைக்கும். பாட்டி குழந்தை கவலையே படாமல், காத்து நிற்கும் குழந்தைகளையோ தன் உடல் பாரத்தையோ கிஞ்சித்தும் லட்சியம் பண்ணாமல், ஊஞ்சலில் ஆடும். இவை விதி விலக்குகளே.

நான் சுகாவிடம் சொன்னேன். "சரித்திரம் என்ற பாடமே கூடாது. இங்கிருக்கும் எந்தக் குழந்தைக்கும் அது என்ன ஜாதி என்ன மதம் என்பது தெரியாது. அப்படியே பெயரளவில் தெரிந்திருந்தாலும் பகைமையும், துவேஷமும், தாழ்வு மனப்பான்மையும், உயர்வு மனப்பான்மையும் அவர்களிடம் இன்னமும் இல்லை. சரித்திரங்களை, புராணங்களை வெறும் கற்பனை கதை என்ற அளவில் சொல்லினால் போதும். புராணங்கள் கற்பனை என்று சுலபமாக ஒப்புக்கொள்ள வாய்ப்பு உண்டு. சரித்திரம்? சரித்திரம் கற்பனைதானே? சில வருடங்களுக்கு முன்பு எண்பது வயது முதியவர் ஒருவர் நள்ளிரவில் கைது செய்யப் பட்ட போது என்ன நடந்தது. ஒவ்வொரு தொலைகாட்சிக்கு ஒவ்வொரு கதை. அதற்கு சில வருடங்களுக்கு முன்பு ஓரு பெண் சட்ட சபையில் மான பங்கப் படுத்தப் பட்டாரா, இல்லையா? சமீபத்தில் நடந்ததே இப்படி என்றால் இருநூறு, இரண்டாயிரம், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதுதான் நடந்தது என்கிற சரித்திரம் எவ்வளவு சரியாக இருக்கும்? அதனால் பயனும் என்ன? கண்ணெதிரே ஏழைக்கும், சோற்றுக்கும் இடையே முக்காலமும் நின்று, பகாசூரப் பசியோடு கொள்ளையடிப்பவர் யார் என்பதை அறிய சரித்திரம் தேவையா?

எவ்வளவு சரித்திர ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு எவ்வளவு விஷயங்கள் நம்பப் படுகின்றன? மேக்ஸ் முல்லர் முதலியோர் எத்தனை கண்டு பிடித்து நம்மைப் பற்றி நமக்கே நம் முன்னோர்கள் எங்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை குறிப்பிடாதவற்றைச் சொன்னார்கள். மேக்ஸ் முல்லர் பின் அவற்றைத் தவறு என்றும் கூறிவிட்டார் என்கிறார்கள். எவ்வளவு ஆராய்ச்சி செய்து பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்கிறார்கள்.

'இதனாலெல்லாம்தான் நான் 'தாஸ் கேபிடல்' படித்ததில்லை' என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் உண்மையான காரணம் சோம்பெறித் தனம். தாஸ் கேபிடல் என்ன வேதம், உபநிஷத், கீதை, பைபிள்,குரான் எதையுமே படித்ததில்லை. திருக்குறள் படிக்கக் காரணம் அது பாட திட்டத்தில் இருந்தது; மேலும் தமிழில் இருந்தது. அதிலும் ஒரு குறளைப் படித்தபின் மீதியை படிக்காமல் எப்படி இருக்க முடியும்? எனினும் அதையும் முறையாக முழுவதுமாகப் படிக்கவில்லை.


சரித்திர ஆராய்ச்சிகளைப் பற்றி சொன்னேன். என் பங்குக்கு ஒரு ஆராய்ச்சி. இராமர் ஒரு கற்பனை பாத்திரம் என்று வைத்துக் கொண்டாலும் இராமர் நிச்சயம் திராவிடர். இதோ நான் முன் வைக்கும் வாதங்கள்: 1. இராமர் திருமாலின் அவதாரம். திருமாலும் இராமரும் கரிய நிறத்தவர். சிவன் போல் சிவந்த நிறத்தவர் அல்ல. 2. இராவணன் என்கிற பிராமணனை வென்றவர். (பிராமணர் ஆரியர் என்று எனக்கு சில நூற்றாண்டுகளாக சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளது.) 3. மிகச் சமீபத்திய சான்று. காந்திஜி இந்தியா முழுமைக்கும் 'இராம இராஜ்யம்' வேண்டுமென்று சொல்லியிருந்தாலும் ஒரு சமயம் இன்ப திராவிடத்தில் மட்டுமே இராம ராஜ்யம் நடந்தது. தமிழகம்: (–ம்.ஜி.) இராமச் சந்திரன்; கர்நாடகம்: இராமக்ருஷ்ண ஹெக்டே; ஆந்திரம்: (–ன்.டி.) இராமராவ்; கேரளம்: (ஆளுனர் ஆட்சி) (பா.) இராமச்சந்திரன்.

இதற்கு மேலும் என் ஆராய்ச்சி செல்லும். திராவிடரிலும் இராமர் எந்த மொழியினர். தெலுங்கர். 'ஒக பாணா, ஒக பத்னி, ஒக மாடா' என்றுதானே சொல்கிறார்கள். மேலும் சந்தேகம் இருப்பவர்கள் என்.டி.இராமராவ் இராமராக நடித்த எந்த படத்தை வேண்டுமானலும் பார்த்துக் கொள்ளுங்கள்.

பொதுப் பாலுறவு பற்றி கொஞ்சம் முன்னால் சொன்னேன். 'சரோஜா' என்கிற திரைப் படத்தில் ஒரு பெண் பல ஆண்கள் நடன காட்சிக்கு எத்தனை விசில், கைதட்டல், வரவேற்பு. அதில் ஆடும் நிகிதாவின் பின்புறம் 'கோடானுகோடி' பேர்களின் மூக்கை உரசுவதற்கு படத்தை எடுத்தவர்கள் எத்தனை பிரயாசைப் பட்டுள்ளனர். சுஜாதாவுக்கு அந்தக் காலத்தில் நவ தமிழ் சினிமாவின் உதயத்தின் முகமாகத் தெரிந்த கமல் 'சிங்கார வேலன்' படத்தில் குஷ்புவின் உடல் மூலமாக அதை நிரூபித்தார். அது போன்ற பத்து முகங்களாவது இன்றைய நவ தமிழ் சினிமாவுக்கு உண்டல்லவா? அதில் இதுவும் ஒன்று. அப்படக் குழுவினர் பங்கேற்ற தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் "உலகிலேயே முதல் 'காமடி த்ரில்லர்' இந்தப் படம்" என்று கூறப்பட்டது. எனக்கு உடனே நினைவுக்கு வந்து, தேடி எடுத்து, நான் பார்த்த படம் 'மர்டர் பை டெத்', நீல் சைமன் எழுதி, ராபர்ட் மூர் டைரக்ட் செய்தது. "Whodunit? You'll die laughing figuring it out!" ('அதை செய்தது யார் என்பதை யோசித்துக் கண்டுபிடிக்க நீங்கள் முயலுகையில் சிரித்தே செத்துப் போவீர்கள்') என்ற வாசகம் டிவிடியின் அட்டையை அலங்கரிக்கும் அப்படத்தில் 'ட்ரூமன் கபோடெ, அலெக் கின்னஸ், பீடர் செல்லர்ஸ், டேவிட் நிவன் முதலிய தலை சிறந்த நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

இரண்டு கேள்விகள்:

1. மக்களுக்காகவே வாழ்கிறேன், அனவரதமும் உழைக்கிறேனென்கிற மத்திய, மாநில அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற, இதர ஜனநாயக அமைப்பு உறுப்பினர்களுக்கு எதற்கு இவ்வளவு அபரிமிதமான வசதிகள்? அடிப்படை வசதிகள் உள்ள வீடு, வாகனம் போன்றவை போதாதா?

2. கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் இருப்பவர்களுடைய வரவு, செலவு, சொத்துக் கணக்குகளை ஏன் பொது மக்கள் பார்வைக்கு வலையில் இடக் கூடாது?

************

"குருட்டு மத நம்பிக்கைகளையும், நீதிக் கோட்பாடுகளையும் கடந்த நிலைக்கு வழிகாட்டத்தான் எல்லா மதங்களும் ஏற்பட்டிருக்கின்றன." ரமண மகர்ஷி.

***********

No comments: