எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது (12) பிரசுரம் : வார்த்தை மார்ச், 2009
"இன்பமே வடிவு"
வ.ஸ்ரீநிவாசன்.
முதன்முதலாக பள்ளிக்கு அனுப்ப ஒரு விஜயதசமி தினத்தன்று என்னை 'வாசிக்க வைத்தா'ர்கள். புதுத் துணியும், கார் சவாரியும் பின்னால் நிகழ இருந்த பயங்கரத்தை சூசகமாகக் கூடத் தெரிவிக்கவில்லை. சுமார் ஒரு மாத காலம் பள்ளியிலிருந்து வீட்டுக்கு ஓடி வந்திருக்கிறேன். என் தாயார், அவர் தாய் மாமன், என் அண்ணன் என்று யார் கொண்டு போய் தெருக்கோடியில் இருக்கும் பள்ளியில் விட்டாலும் அவர்கள் திரும்புகையில் அவர்கள் பின்போ சில சமயம் முன்போ வீட்டுக்குத் திரும்பி வந்திருக்கிறேன்.
நெல்லில் 'அ' வை எழுத வைத்தவர் ஸ்ரீரமுலு நாயுடு. அவர் பற்றி எனக்கு பயம் இல்லை. அவர் என் பக்கத்து வீட்டுக்காரர் என்பதை விட அவர் மனைவி என் தாயாரின் சிநேகிதி.
'அ', எழுத்துக் கூட்டிப் படிப்பு, சரளமான வாசிப்பு என்று முன்னேறுகையில் யாரோ ஒருவர் வீட்டிலிருந்து கிடைத்த கதிர் என்ற பத்ரிகையில் முயல் கார்ட்டூன் படக் கதை புதிய உலகைக் காட்டி தாங்கொணா பரவசத்தைத் தந்தது. பின்னர் அப்போது 'பாலர் அரங்கம்' என்று அழைக்கப்பட்ட தற்போதைய 'கலைவாணர் அரங்க'த்தில் ஒரு குழந்தைகள் படத்தில் (அதுவும் கார்ட்டூன் படம்தான்) ஒரு சிறுவன் ஒரு திரைச்சீலையில் கடலையும், ஓர் ஓடத்தையும் வரைவான். பின் அந்தக் கடலலைகள் நகர ஆரம்பிக்கும். ஓடம் ஆடும். அந்தச் சிறுவன் அதில் ஏறிக் கொண்டு பயணிப்பான். அன்று அந்தக் குழந்தை அடைந்த பரவசத்துக்கு ஈடே கிடையாது.
உயர் நிலைப் பள்ளி காலத்தில் வீட்டருகே இருந்த நூல் நிலையமாய் மாற்றப் பட்டிருந்த கார் ஷெட்டில் இருந்த நூல்களில் 'சக்ரவர்த்தித் திருமகன்' என்கிற புத்தகம் அதுவரை துண்டு துண்டாகக் கேட்டிருந்த இராமாயண கதை முழுவதையும் எனக்குக் காட்டியது. அதை ஒரு ஏழெட்டு முறை படித்திருப்பேன். பின் 'வியாசர் விருந்து'. அவ்விரண்டும் அதே அளவு மன மகிழ்வைத் தந்தன. இப்பொது புரிகிறது, வாழ்வில் மகத்தான காரியங்களைச் செய்த ராஜாஜி அவர்கள் இவ்விரு நூல்களையும் எழுதியதே அவர் வாழ்வின் முக்கிய காரியங்கள் என்று சொன்னதன் பொருள்.
பத்தாம் வகுப்பு படிக்கையில் என்.எஸ். ரகுநாதன் என்னும் விஞ்ஞான ஆசிரியர் 'ஜெயகாந்தன்' படியுங்கள் என்று வகுப்பு மாணவர்களிடம் சொல்லுவார். 'கே.எஸ்.கோபால க்ருஷ்ணன், கே.பாலச்சந்தர் என்று பேசுகிறீர்களே, இவரைப் படியுங்கள்' என்று மறுபடி மறுபடி சொல்லுவார். பின்னர் ஆனந்த விகடன் வருகை ஒரு வாரந்திர முக்கிய நிகழ்ச்சி ஆயிற்று. அவர் கதைகள் மட்டுமின்றி, கட்டுரைகளும், 'அனுபவங்களு'ம், மேடைப் பேச்சுகளும், அவை மூலம் அறியாமையிலும், துவேஷத்திலும் மூழ்கி இருக்க வேண்டிய தமிழர்களை பாரதியைப் போல் தடுத்தாட்கொண்ட பெருஞ்செயலும் என்றென்றும் மறக்க முடியாதவை.
புகுமுக வகுப்பில் துணைப் பாட திட்டத்தில் ஒரு கதை. அரசன், அரசியின் இருப்பிடத்தில் வேறு யாரோ ஒருவனும் இருப்பதாகக் கருதி ஒரு அறையின் உள்ளேயே செல்லாமல் கதவை சுவரெழுப்பி மூடி விடுவான். "வெகு நாட்களுக்கு உள்ளிருந்து யாரோ குரலெழுப்புகிற, தட்டுகிற ஒலி கேட்டுக் கொண்டிருந்தது" என்று முடியும். அந்தக் கதை என்னவோ செய்தது.
பட்டப் படிப்பு படிக்கையில் மாநிலக் கல்லூரி நூல் நிலையத்தில் ஜானகிராமனின் 'மோக முள்" கிடைத்தது. அதன் அட்டையில் "படு போர். படிக்காதீர்கள்" என்று எழுதி இருந்தது. வீட்டுக்கு எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தேன். முடிக்கும் வரை வேறு உலகத்தில் பாபு, யமுனாவோடு இருந்தேன். தி.ஜா.வின் கதைகள் காமத்தின் பீறிடல்கள் என்கிறார் ஜெயமோகன். எனக்கு அவை 'பொருந்தாக் காதல்' பற்றியவை என்றே படுகின்றது. மனித குலம் தர்மமாக்கியுள்ள திட்டங்கள் இயற்கையின் நியதிகளின் முன் குப்புறக் கவிழ்தல்தான் தி.ஜா.வின் தத்துவ தரிசனம். அப்பொதெல்லாம் புத்தகக் கடைகளில் ஜே.கே. மற்றும் ஜானகிராமன் புத்தகங்களே அதிகம் விற்பனை ஆயின.
படிப்பு முடிந்து வேலைக்கு சென்ற காலத்தில் தெரிந்தவர் ஒருவரிடமிருந்து சால் பெல்லோவின் 'ஹேண்டர்ஸன் தெ ரெய்ன் கிங்' வாங்கிப் படித்தேன். நான் படித்த முதல் ஆங்கில நாவல் அதுதான். அதே பரவசம். திரு. டேவிட் சந்திரசேகர் நண்பரானதும் அவர் ஆல்பர்ட் காம்யூவின் 'ப்ளேக்' கையும் தாஸ்தயெவ்ஸ்கியின் 'க்ரைம் அண்ட் பனிஷ்மென்ட்' டையும் கொடுத்தார். ப்ளேக் மீண்டும் உந்நத பரவசத்தைத் தந்தது. "there are pestilences and victims; it is upto you not to join forces with pestilences" என்கிற காம்யூ "True healers" பற்றியும் குறிப்பிடுகிறார்.
ஆனால் க்ரைம் அண்ட் பனிஷ்மென்ட் முன்னிரு புத்தகங்களையும் சாதாரணமானவைகளாக்கி விட்டது. அதைப் படித்தபின் வாழ்க்கை எக்காலத்துக்குமாக மாறிவிட்டது. உண்மையில் நான் வேறாளாகி விட்டேன். வாழ்க்கையை நான் பார்க்கும் பார்வை மேலும் துல்லியமானதாக ஆகிவிட்டது. டேவிடிடம் கேட்டேன்: இந்தப் புத்தகத்தில் தாஸ்தயெவ்ஸ்கியின் ஆதர்ஸ பாத்திரம் யார்?" டேவிட் சொன்னார் "ரஸ்கால்நிகோவ்". நான் சொன்னேன் "இல்லை சோனியா". அவர் இரண்டொரு தினங்களில் கூறினார்: "ஆமாம் சோனியாதான்". சோனியாதான் காம்யூ குறிப்பிட்ட அந்த ட்ரூ ஹீலர். அவர்கள் வெகு அரிதானவர்கள். அந்நாவலைப் படிக்கையில், விழித்திருக்கும் வேளையில் எல்லாம், அலுவலக நேரம் போக, அதைப் படித்தபடியே இருந்தேன். நாவலின் வாக்யங்களும், கனவுகளும், சம்பவங்களும் அவர் கடவுளைப் போல ஒரு முழு உலகை சிருஷ்டி செய்துள்ளதைக் காட்டின. அவ்வுலகம் நாம் வாழும் இவ்வுலகம்தான் என்பதும் தெரிந்தது.
அப்போதெல்லாம் அரசு நூல் நிலையங்ககளில் நல்ல புத்தகங்கள் கிடைக்கும். தாஸ்தயெவ்ஸ்கி, தாமஸ் மன், டென்னஸி வில்லியம்ஸ், டி.எஸ். எலியட், மற்றும் "ஆர்ட் ஆஃப் தி தியேட்டர்' என்னும் அற்புதமான நாடக நூல் எல்லாம் மாவட்ட மைய நூலகத்திலிருந்துதான் படித்தேன். (பல ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாண்டுகளுக்கு முன்பு அங்கே நுழைந்தபோது கண்ணீர் வந்தது. புத்தகக் குப்பைகளும், குப்பையான புத்தகங்களும்தான் இருக்கின்றன. சமூகம் என்னவாய் மாறியிருக்கிறது என்பதற்கு காரணமாகவும் அதைவிட அடையாளமாகவும் அவ்விடம் (no pun intended) இருக்கிறது.) நூலகத்துக்கு வெளியே அசோக மித்திரன் என்கிற மகத்தான எழுத்தாளரைப் படிக்கும் காலமும் அப்பொதே வந்தது. வண்ண நிலவனையும்தான்.
திருவல்லிக் கேணியில் இருந்த கஸ்தூரி ஸ்ரீநிவாசன் நூலகத்தில் இருந்துதான் புதுமைப் பித்தனையும் தேவனையும் படித்தேன். பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, மௌனி, கு.ப.ரா., லா.ச.ரா., என்று நெடியதொரு பொக்கிஷம் எங்கிருந்தெல்லாமோ கிடைத்தது.
சேலம் சென்றதும் அங்கிருந்த விஜயராகவச்சாரியார் நினவு நூலகத்தில் கிடைத்த ரீடர்ஸ் டைஜஸ்டின் 'ஃபேரி டேல்ஸ்' புத்தகமும், அந்நூலகத்துக்கு எதிரில் இருந்த மாவட்ட நூலகத்தில் கிடைத்த காப்காவின் 'தி ட்ரயல்'லும் இவ்வுலகின் தீராத பொக்கிஷங்களை எங்கும் பெறலாம் என்று எனக்கு உணர்த்தின.
குடும்பம், வேலை, ஆசாபாசங்களின் அலைக் கழிப்புக்கு நடுவே இரகசிய காதலைப் போல் இந்தப் பிரேமை, இதுதான் இதுதான் என்கிற தாபம், ஒட்டு, உறவு இலக்கியத்தோடு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பட்டியலிடமுடியாத மகானுபாவர்களோடு நூற்றாண்டுகளைக் கடந்து தொடர்பும், நட்பும், உறவும் கொள்ள முடிந்தது; முடிகிறது.
இது கற்பனையூரில் நிதர்சனம் மறந்து வாழும் கனவு வாழ்க்கையல்ல.
எல்லா இடங்களிலும் என்றில்லா விட்டாலும் ஓரிரு இடங்களில் சரியான சத் சங்கங்கள் அமைந்தன. பள்ளி கல்லூரி நாட்களில், சென்னையில் உத்யோகம் பார்த்த ஆரம்ப நாட்களில் அமைந்த நட்புலகில் இலக்கியம் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. பின்னர் திருச்சியில் குறிப்பிடும்படியான நட்புகள் கிடைத்தன. ஒரு நாள் என் மேலதிகாரியுடன் 'புக் க்ளப்' மீட்டிங்குக்கு சென்றேன். நல்ல ஆஜானுபாகுவான வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்த நாகரிகத் தோற்றம் கொண்ட ஒருவர் வந்திருந்தார். உள்ளூர் பிரமுகர் என்று எண்ணினேன். மீட்டிங் முடிந்ததும் என் மேலதிகாரி "இவர்தான் திரு மோதி ராஜகோபால், நம் முக்கியமான வாடிக்கையாளர். இவரது கல்லூரியில் நம் வங்கியின் விரிவாக்கக் கிளை இருக்கிறது" என்று அறிமுகம்
செய்து வைத்தார். பேச ஆரம்பித்த இரண்டாவது நிமிடம் எதேச்சையாக திரு மோதி, "ஜெயகாந்தனுடைய ஜெய ஜெய சங்கரா' வெளியிட்டது அவருடைய மோதி பிரசுரம் என்றதும் நான் மேலதிகாரியிடம், "சார். நீங்கள் கிளம்புங்கள். நான் இவருடன் பேசிவிட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு இருவரும் பேச ஆரம்பித்தோம். பல்வேறு விஷயங்களில் ஆர்வமாயும், விஷய ஞானத்துடனும் இருந்த சுவாரஸ்யமான பரந்த வாசிப்புக்கு சொந்தமான திரு மோதி அவர்கள் நட்பு பத்தாண்டுகளாக வாழ்வுக்குச் செழுமை சேர்க்கும் ஒன்று. அவரால் அறிமுகமானவர்களில் மிக முக்கியமானவர்கள் இருவர். ஒருவர் காலஞ்சென்ற திருலோக சீதாராம் (இலக்கிய படகு படித்ததின் வாயிலாக). மற்றொருவர் திரு பத்மனாபன். உலக இலக்கியங்களை எல்லாம் தமிழிலேயே படித்த எளிமையான, நற்குணங்கள், நல்ல வாசிப்பு ருசி உள்ள பெரியவர். பத்மனாபன் மூலமாக கிடைத்த நண்பர் திரு நாஞ்சில் நாடன். அதாவது 'எட்டு திக்கும் மத யானை'யை படித்து விட்டு 'இதை அவசியம் படியுங்கள்' என்று பத்மனாபன்தான் கொடுத்தார். விஷ்ணுபுரம் படித்த கையோடு 'எட்டு திக்கும் மத யானை'. தீபாவளிக்கு வீட்டிலும், நண்பர்கள் இல்லங்களிலும் இனிப்புகளாக உண்டு இருந்தவனுக்கு, தினசரி சாப்பாடு சுவையாகக் கிடைத்தது போல் இருந்தது. இரண்டுமே எனக்குப் பிடித்திருந்தன. வெகு சில நாட்களிலேயே எனக்கு சிறிதும் சம்பந்தமே இல்லாத (என் பெற்றோர் திருமண வாழ்கையைத் தொடங்கிய) கோவைக்கு சென்றதும் நாஞ்சிலோடு நேரில் பழகக் கிடைத்தது. நான், மோதி, பத்மனாபன் ஆகிய எங்கள் மூவருக்கும் பொய்கையாழ்வார், பேயாழ்வர், பூததாழ்வாரோடு கூடவே இருக்கும் பெருமாள் போலாகி விட்டார் நாஞ்சில். நாஞ்சில் மூலமாக ஜி.நாகராஜனும், நகுலனும் மீள் அறிமுகம் ஆனார்கள். கோவை 'Thiagu Book Centre' வாடகை நூல் நிலையத்தில் கிடைத்தது அழகிய பெரியவனின் 'தீட்டு'.
புத்தகங்களை வாங்கி விட்டு படிக்காமல் இருப்பதுதான் புத்தகங்களை 'அப்யூஸ்' பண்ணுவது என்கிறார் ஜே.கே. படிக்க இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. நான் வாங்கிய புத்தகங்கள் பலதையும் படித்தவர் என் சகோதரிதான். நானல்ல.
வாசிப்பு ஒரு சுகம். நெகிழ்ச்சியான மகிழ்ச்சி. அட ஜஸ்ட் டைம் பாஸ். எழுத்தாளன் ஒரு விஷயத்தை ஃபோகஸ் செய்கிறான் என்றே நான் நினைக்கிறேன். படைப்பு என்பதெல்லாம் அதிகபட்ச வார்த்தைகள். அவனைப் படிக்கையில் அவனையும், வாழ்க்கையையும், அதாவது என்னையும் நான் படிக்கிறேன். சுந்தர ராமசாமியின் எழுத்துகளையும் கேள்விப் பட்ட ஆளுமைக் குணங்களையும் வைத்துப் பார்க்கையில் அவர் கதைத் தொகுப்பு 'இல்லாத ஒன்று' என்ற தலைப்பில் வருவதும், அசோக மித்திரனின் நூல் தலைப்பு 'அழிவற்றது' என்று வருவதும் பொருத்தமாகத் தெரிந்தது. காம்யூவால் 'ப்ளேக்' என்றுதான் எழுத முடியும். அ.மி. "தண்ணீர்' என்றுதான் எழுதுவார்.
மனவெழுச்சி என்கிற வார்த்தையை ஜெயமோகன், பிரமிள் போன்றவர்கள் கையாளுகிறார்கள். இந்த பரவசம், சிருஷ்டி உணர்வு, எனக்கு மனநிறவு என்றே படுகிறது. அது மனம் என்கிற கொள்கலனின் நிறைவு அல்ல. இல்லாத ஒன்றை எப்படி அடக்குவது என்று ரமண மர்ஷி கேட்டது போல், இல்லாத ஒன்று எழுவதும், நிரம்புவதும் அப்பொய்யின் கபட நாடகங்களே என்று தோன்றுகின்றது. இது மனம் என்று அறியப்பட்டது நிறைவுறுவது. கலையும், இலக்கியமும் ஆன்மீக சாதனங்களாகவே எனக்குப் படுகின்றன. எளிமையாகவும், சுலபமாகவும் இருப்பது உயர்வானதாகவும் இருக்கிறது. சைக்கிள் ஓட்டுவதைப் போல கற்பனையால் அறிந்து கொள்ள முடியாத உணர்வு இலக்கியானுபவம். தனிமையில் தாஸ்தயெவெஸ்கி எனக்கு ரஸுமுக்கினையும், துனியாவையும், நஸ்டாசியா ஃப்லிப்பொவோனாவையும், ப்ரின்ஸ் முஷ்கினையும் பற்றிச் சொல்கையில் அது ஏற்ற தாழ்வுகள், தர்க்கச் சிக்கல்கள் இல்லாத பிறர் பற்றிய கவலை இல்லாத நேரடித் தொடர்பு. இரண்டறக் கலப்பு. வாசகனுக்கும் அவனின்றி இருக்க முடியாத எழுத்தாளனுக்கும் பிரத்யேகமானது.
ஒவ்வொரு இலக்கியவாதியும் ட்ரூ ஹீலராக இருக்கிறான். அஹங்காரமற்ற அவர்களது கலை வெளிப்பாடுகள் உலகை அதன் துக்கங்களிலிருந்து சொஸ்தப் படுத்துகின்றன. அதுவே ஆனந்தம்.
மொத்தத்தில் இலக்கியம் என்னதான்? நம் வாழ்வின் தமிழ் மண்டலத்தின் பிதாமகனான பாரதி சொல்வதைப் போல் 'எழிலிடை உறுவதும் இன்பமே வடிவாகிடப் பெறுவதும்தான்.
***************
John Scotus Eriugena (9ம் நூற்றாண்டு மெய்ப்பொருளியலாளர்): "கடவுள் இயற்கையில் உள்ள தன் படைப்புகளின் படைப்பில் தன்னைப் படைத்துக் கொள்கிறார்."
"If a poet has any obligation towards society, it is to write well" ஜோசஃப் ப்ராட்ஸ்கி (1987 நோபல் பரிசு பெற்றவர்.)
***************
No comments:
Post a Comment