எதைப் பற்றியும் (அல்லது) இது மாதிரியும் தெரிகிறது - (1) பிரசுரம்: வார்த்தை ஏப்ரல் 2008
வ.ஸ்ரீநிவாஸன்.
'ஹிந்து' பத்திரிகை 1978 வரை மாலைதான் எங்களுக்குக் கிடைக்கும். என் தகப்பனாரும் அவர் அலுவலகத்தில் பணி புரிந்த அவரினும் பெரியவரான திரு. அனந்தன் நாயர் என்பவரும் நான் பிறப்பதற்கு முன்பிருந்தே பத்திரிகையை சேர்ந்து வாங்கிக் கொண்டிருந்தார்கள். காலையில் இரண்டு மைல் தூரத்தில் இருந்த அவர் வீட்டிற்குப் போய் விட்டு மாலையில்தான் எங்கள் வீட்டிற்கு வரும். நான் செய்திகளைச் சுடச் சுட படித்ததே இல்லை. ஹிந்துவிலேயே ஆறி அவலாய்த்தான் போடுவார்கள். இப்போது அனந்தன் நாயரைப் பற்றி எண்ணுகையில் நகுலன் அவர்களின் ஞாபகம் வருகிறது. இவரும் திருமணம் செய்து கொள்ளாதவர். இவருக்கு உதவியாக ஒரு பெண்மணி இருந்தார். அவர் காலையில் அனந்தன் நாயர் வீட்டிற்குச் சென்று மாலை வரை சமையல் முதலிய உதவிகளைச் செய்து விட்டு வீட்டுக்குத் திரும்பிப் போகையில் எங்கள் வீட்டில் அன்றைய காலைப் பேப்பரைக் கொடுத்து விட்டுப் போவார். அனந்தன் நாயர் ஓய்வு பெற்ற பின்னரும் இந்த ஏற்பாடு தொடர்ந்தது. ஆனால் அப்போதிலிருந்து 'ஹிந்து'வுக்கான பாதிப் பணம் அவர் தர வேண்டாம் என்று அப்பா சொல்லி விட்டார். என் அப்பா 1969ல், என் 18 வயதில் இறந்த பின்னரும், அவர் நினைவாக, இதில் மாற்றம் ஏதும் இல்லை.
அனந்தன் நாயர் காலையிலிருந்து மாலை வரை வெகு நேரம் ஹிந்து படிப்பார் என்று நினைக்கிறேன். ஏனென்றால் த்¤னமும் கசங்காது புதியது போல் வரும் பேப்பரில் எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளை ஒரு பென்சிலால் திருத்தி அனுப்பி இருப்பார். தவறுதலாக இரண்டு இடங்களில் இடம் பெறும் ஒரே செய்தி நிச்சயமாக அவரால் கண்டுபிடிக்கப் பட்டிருக்கும். சமீப காலமாக 'ஹிந்து'வில் 'ரீடர்ஸ் எடிடர்' செய்து வரும் வேலையை அவர் செய்து வந்தார், என் ஒருவனுக்காக. நான் 1978ல் சென்னையிலிருந்து மாற்றல் ஆகி சேலம் சென்றதும் ஒரு மாற்று ஏற்பாடு செய்துவிட்டுச் சென்றேன். வெகு சில நாட்களில் அவர் இறந்து விட்டார்.
கல்கத்தாவில் இருந்த மூன்று வருடங்கள் (டெலிக்ராஃப்) தவிர பாக்கி எல்லா நாட்களும் ஹிந்துதான். சென்னையில் முன்பெல்லாம் காலையில் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' மற்றும் மாலையில் 'மெயில்' பத்திரிகைகள் வரும். முந்தையதின் சந்தைப் பங்கு இப்போது எவ்வளவு என்று தெரியவில்லை. பின்னது எப்பவோ நின்றே போய் விட்டது. பல தமிழர்களுக்கு 'ஹிந்து' காப்பி மாதிரி. அது வந்தால்தான் விடியும். 'சன் டி.வி.' எல்லா கேபிள் டி.வி.க்களையும், 'கோத்ரெஜ்' எல்லா இரும்பு அலமாரிகளையும், 'டால்டா' எல்லா வனஸ்பதிகளையும் குறிப்பது போல் 'ஹிந்து' எல்லா ஆங்கில பேப்பர்களுக்கும் குறியீடு.
'ஹிந்து' வில் வரும் வரி விளம்பரங்கள், 'மணமகன்/மணமகள் தேவை' 'வீடுகள் வாங்க/விற்க' 'வாடகைக்கு', வேலை வாய்ப்பு, சினிமா விளம்பரங்கள் தவிர படிப்பதற்கு என்ன இருக்கிறது என்பது தெரியவில்லை. எனக்கு இவையும் அவசியம் இல்லை. என் கோபம் எல்லாம் இத்தனை வருடங்களில் புதுமைப்பித்தன் பற்றி ஒரு ஆழமான கட்டுரை வந்திருக்கிறதா? ஒரு சுவாரஸ்யமான சினிமா விமர்சனம் வந்திருக்கிறதா? போன்றவைதான். இதில் வரும் செய்திகள் நம்பகத் தன்மை கொண்டவை என்பது பிரஸித்தம். முக்கிய செய்திகள் நம்மைத் தேடி வரும் என்கிற ஜெயகாந்தன் அவர்களின் பாலிசிதான் எனதும். அதனால் நான் பல நாட்கள் பேப்பரே படிப்பதில்லை. அப்படிப் படித்தாலும் என் மனைவி கண்ணில் படும் 'மின் வெட்டு' 'பொருட்காட்சி' செய்திகளை நான் தவற விட்டு விடுவேன். என் நண்பன் கண்ணில் படும் 'தள்ளுபடி' விளம்பரங்களையும்தான்.
தலையங்கத்திலும், கருத்துப் படங்களிலும், செய்திகளிலும் இருக்கும் பாரபட்சம் வேறு எரிச்சல் படுத்தும். ஹிந்துவின் தலைமை எடிட்டர் திரு. என். ராம் ஒரு கம்யூனிஸ்ட் (அனுதாபி). ஆர்.கே நாராயண் ரசிகரான இவர் அவரது நினைவாக அவர் வீட்டின் கதவுகளை வாங்கினார் என்று படித்த செய்தி ஞாபகம் வருகிறது. இவரைப் போன்றே நிதி அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதல்வர் கலைஞர் எல்லோருமே 'நான் கம்யூனிஸ்ட்' அல்லது 'கம்யூனிஸ்ட்டாகத்தான் இருந்திருப்பேன்' என்பவர்கள். கம்யூனிஸத்தின் பரிணாம வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது. அதே போல் நம் பாரளுமன்றத்தில் மிகப் பெரும்பான்மை உறுப்பினர்கள் கடவுளின் பெயரால் பதவிப் பிராமணம் எடுத்துக் கொள்ளும் துர்பாக்கிய நிலை இருக்கிறதே என்று என்.ராம் ஒருமுறை வருத்தப் பட்டிருந்தார். இவ்வளவு முற்போக்காக இருக்கிறாரே பத்ரிகை பெயரை 'செக்யூலர்' என்று மாற்றி விடுவார் என்று எண்ணினேன். இன்னமும் 'ஹிந்து' தான்.
'ஹிந்து'வை 'மௌன்ட் ரோட் மஹா விஷ்ணு' என்று அழைத்தவர் யார் தெரியுமா? நீங்கள் நினைப்பவர் அல்ல. நான் கேள்விப்பட்டவரின் பெயரை கடைசியில்* தந்திருக்கிறேன்.
சமீபத்தில் 'டெக்கான் க்ரானிக்கிள்' வந்தது. ஹிந்து விற்பனையில் இதன் தாக்கம் சென்னை நகரில் அதிகம் என்று ஒரு சாராரும், இல்லை என்று மறு சாராரும் சொல்கிறார்கள். 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' வின் சென்னைப் பதிப்பு தமிழ்ப் (பழைய) புத்தாண்டிலிருந்து தொடங்குவதாக செய்தி வந்துள்ளது. 365 நாட்களுக்கான சந்தா 299/- ரூபாய். தவிர ஒரு ட்ராலி பேக் அல்லது ஃப்ளாஸ்க் பரிசு. 'ஹிந்து'வின் ஏகபோக விற்பனையும், செல்வாக்கும் என்ன ஆகின்றன என்று பார்க்க வேண்டும். நான் கொஞ்ச நாட்களுக்காவது இரண்டையும் வாங்குவேன். இரண்டுமுறை விடிந்தாலும் சரி.
****
திரு.செழியன் ஆனந்த விகடனில் 'சில்ரன் ஆஃப் ஹெவன்' படத்தைப் பற்றி எழுதுகையில் படத்தின் இறுதிப் பகுதியில் சில நொடிகளே வரும் ஒரு காட்சியைப் பற்றி எழுதாமல் விட்டிருந்தார். அதை மட்டும் எழுதியிருந்தால் படத்தை எடுத்தவருக்கும், ரசிகனுக்கும் துரோகம் இழைத்திருப்பார். இவர் எழுதியிருப்பதைப் படித்து விட்டு படத்தைப் பார்த்தாலும் சுவாரஸ்யம் ஒரு விதத்திலும் குன்றாது. இது எழுதியவரின் கவனத்தையும் கண்யத்தையும் காட்டுகிறது.
'க்ரைம் அண்ட் பனிஷ்மென்ட்' ஒரு ஆங்கில மொழி பெயர்ப்பின் முன்னுரையில் கதையின் எல்லாவற்றையும் சொல்லி கெடுத்திருப்பார்கள். ஆனால் நல்ல வேளையாக நான் முதலில் படித்த மொழி ஆக்கத்தில், முன்னுரை, புத்தகத்தைப் படிக்கையில் வாசகனின் சுவாரஸ்யத்தை எவ்விதத்திலும் பாதிக்காதவாறு எழுதப் பட்டிருந்தது. நானுமே கூடிய வரை எந்த நூலையும் படித்த பிறகே முன்னுரையைப் படிக்கிறேன். 'வோர்ட்ஸ்வொர்த் க்ளாஸிக்ஸி'ன் ஜெனரல் இன்ட்ரடக்ஷனில் கூறுகிறார்கள்:-
"Because the pleasures of reading are inseparable from the surprises, secrets and revelations that all narratives contain, we strongly advise you to enjoy this book before turning to the introduction"
**********
சொல்லும் கதையில் / எழுத்தில் இருக்கும் ஆச்சர்யங்கள், இரகசியங்கள், வெளிச்சங்கள் என்கையில் சுஜாதா ஞாபகத்தில் வருகிறார். தமிழின் நவீன முகத்தை மேலும் மேன்மைப் படுத்திய மகானுபாவர்களில் ஒருவர். ஒரு ஜெயகாந்தனோடும், அசோகமித்திரனோடும் சம காலத்தில் ஒளிர்ந்தவர். பத்திரிகை எழுத்துலகின் சூப்பர் ஸ்டார். அவரளவு தாக்கத்தை ஏற்படுத்திய முன்னோடிகள் (pioneer) யாருமில்லை. எனக்கு (ம், என் மனைவிக்கும் மிகவும்) பிடித்த எழுத்தாளர். புதுமைப்பித்தனுக்குப் பின் மனதின் பல பிராந்தியங்களை எழுதிப் பார்த்தவர். அவரைப் பற்றி அசோக மித்திரன் ஒரு முறை 'இத்தனை திறமைகள் இருந்தும் அவருக்கு ஒரு அலட்சியம்.... சமூகத்தின் மீது, வாழ்க்கையின் மிது, எழுத்தின் மீது..... ஏன் தன் மீதே' என்று எழுதி அவரை 'ஹெமிங்க்வே' யுடன் ஒப்பிட்டிருந்தார்.
கணையாழியின் கடைசிப் பக்கங்களிலிருந்து, நைலான் கயிறில் ஆரம்பித்து எவ்வளவு கதைகள், கட்டுரைகள், எவ்வளவு நகைச்சுவை, சோகம் ... அடியில் ஒரு அலட்சியம் கலந்த கோணல் சிரிப்பு.
எவ்வளவு நூல்களைப் படித்தவர்? எவ்வளவு ரசிகர்கள்? அவரை குருவாய் வரித்த எவ்வளவு எழுத்தளர்கள், வாசகர்கள்? எழுத்தின் காரணமாகவும், பிராபல்யத்தின் காரணமாகவும், வெற்றியின் காரணமாகவும், தமிழ் நாட்டிற்கே உரிய பிரத்யேகக் காரணமாகவும் எவ்வளவு வசைகள்?
அவர் இறந்த அன்று மாலைதான், அவர் உடல் நலம் இன்றி இருப்பது கூட அறியாமல் நானும் சுகாவும் பேசினோம்." சுஜாதாவிற்கு பொருத்தமில்லாத ஒரு பாபுலாரிடி இருக்கிறது. ஆனால் பொருத்தமான பாபுலாரிடி மறுக்கப் படுகிறது. ஜெயமோகன் ஒருவர்தான் அவர் பற்றி சீரியஸ் தளங்களில் எழுதுகிறார்." குரலெழும்பாத ஒரு நோஞ்சான் மனிதன் எழுத்துக்களால் வண்ண மயமாக வாழ்ந்து மறைந்து விட்டான்.
அவர் மரணத்திற்கு அடுத்த வாரம் மரணத்தைப் பற்றி ஒரு ஆழமான, புன்னகையைத் தருவிக்கிற, விஞ்ஞான, செட்டான சொற்களால் ஆன கட்டுரையோ, கதையோ ஆ.வியிலோ, குமுதத்திலோ வந்தாலும் வரலாம் என்று எதிர் பார்த்தேன்.
அவர் ஓரிடத்தில் கூறியிருந்தார்: "எனக்கு மறு பிறவியில் நம்பிக்கையில்லை. அப்படி ஒன்று இருந்தால் இதே தமிழ் நாட்டில் இதே முதுகு வலியுடன் பிறக்க வேண்டும். இதே போல் தமிழில் எழுத வேண்டும். அப்படியின்றி வேறு நாட்டில், வேறு பாஷை பேசுமிடத்தில் பிறந்தால் அது வேறுபிறவி; மறு பிறவி அல்ல. நான் ஸ்விஸ் நாட்டில் பிறந்தேன் என்றால் பாஷை தெரியாமல் கஷ்டப் படுவேன்."
எழுத்தில் பல பரிசோதனைகளைச் செய்த ஸ்ரீரங்கத்து தேவதை மறைந்து விட்டது. ஒரு முறை போய் பார்த்திருக்கலாம்.
********
நண்பர்கள் நாஞ்சில் நாடன் அவர்கள் மற்றும் பார்த்தசாரதி ஆகியோரின் தொடர்ந்த ப்ரயத்தனத்திற்குப் பின், சங்கீதத்தில் ஒளரங்கஸீப்பாக இருந்த நான் 'அது ஒரு சமுத்திரம் சார்' என்ற நாஞ்சிலின் வார்த்தைகள் உண்மைதான் போலும் என்று இப்போதுதான் உணர்கிறேன். கடற்கரையிலிருந்து வெகு தூரத்தில் இருக்கும் என் காதில், எப்போது கேட்டாலும் கண்களில் நீரை வர வழைக்கும் சிந்து பைரவியையும், ரஞ்சனியையும் தவிர, மேலும் சில ராகங்களும் கடலோசையாய் சற்றே வந்து காதில் பட ஆரம்பித்திருக்கின்றன.
ஓவிய விஷயம் முழுக்க முழுக்க உணர்வு அடிப்படையிலேயே உள்ளது. இது குறித்த பரிச்சயம் ரொம்பக் கம்மி. ப்ரிட்டிஷ் கவுன்சிலில் ஒரு ஓவியப் புத்தகத்தில் நிர்வாணமான ஒரு ஆணும், பெண்ணும் கையைக் கோர்த்தபடி எதிரில் தெரியும் முழு நிலவைப் பார்த்து நிற்கும் கானகத்தில், அவர்களின் பின்னே நாமும் நிற்போம். (35 வருடங்களாக அதை நினைக்கும் போதெல்லாம் நான் அங்கேதான் நிற்கிறேன்) கொஞ்சம் வான்கோ, கொஞ்சம் டாலி, கொஞ்சம் கொஞ்சம் மைக்கெலாஞ்சலோ, டாவின்ஸி, வெகு சமீபத்தில் ரோடின் (நன்றி திரு மோதி ராஜகோபால்) - கிட்டத்தட்ட எல்லாம் 'நேம் ட்ராப்பிங்' அளவில்தான். ஆதி மூலம் அவர்கள் மறைவு பற்றி நாஞ்சில்தான் தெரிவித்தார். ஆதிமூலம் வரைந்த காந்தியின் கோட்டொவியமும் எனக்கு நாஞ்சில் கொடுத்ததே.
ஆதிமூலம், சுஜாதா......துரதிருஷ்ட வசமாக சமீபத்தில் நிறைய அஞ்சலிக் கட்டுரைகளைப் பார்க்க வேண்டி உள்ளது. அசோகமித்திரன் எழுதிய 'சர்ம ஸ்லோகங்கள்' பற்றிய கட்டுரை நினைவுக்கு வருகிறது. தனக்கே பலர் சர்ம ஸ்லொகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். கண்ணதாசன்(தானே) எழுதி, டி.எம்.எஸ். "எழுதுங்கள் என் கல்லறையில்" என்று சிவாஜி ரத்தம் கக்குமாறு வசந்த மாளிகையில் கதறுகின்றார். தனக்கு என்று எழுதிக் கொண்டவற்றில் உணர்ச்சி குவியல்களுக்கும், மெலோ டிராமாக்களுக்கும் இடையில் போர்ஹே யுடைய (அதில் நம்முடையதையும் எழுதியிருக்கிறார்) 'elegy' அற்புதம்.
******
நான் சென்ற வருடம் விரும்பிச் சென்று பார்த்த தமிழ்ப்படம் 'சித்திரம் பேசுதடி'. இரண்டு காரணங்கள். இயக்குனர் (புனைப்)பெயர் 'மிஷ்கின்' என்றிருந்தது. தாஸ்த்தயெவ்ஸ்கியின் 'இடியட்' ப்ரின்ஸ் மிஷ்கின் பெயரை ஒருவர் வைத்துக் கொண்டால் அவர் எப்படி நல்ல படம் எடுக்காமல் இருக்க முடியும் என்கிற நம்பிக்கை. ஏமாற்றவில்லை. இரண்டாவது 'வாள மீனுக்கும்' பாட்டு. சென்னைக் காரனான என்னை எப்போதும் கவர்பவை கானா பாடல்கள். மிஷ்கினின் அடுத்த படம் 'அஞ்சாதே' வந்திருக்கிறது. 'கத்தாழை கண்ணாலே குத்தாதே' யும், அதில் சிறிது வரும் பாண்டியராஜனும் அழைக்கிறார்கள்.
********
*திரு.காமராஜ்.
*******
No comments:
Post a Comment