க. நா. சு. வின் ஆட்கொல்லி - ஒரு வாசிப்பு
வ.ஸ்ரீநிவாசன் 
க. நா. சு. பலவிதமான பரிசோதனைகளை எழுத்தில் செய்து பார்த்தவர். அதில் ஒன்று ஆட்கொல்லி. மிகச்சிறிய நாவல். சரியாகச் சொன்னால் ரேடியோ நாவல்; நண்பருக்காக அவர் ரேடியோவில் வாராவாரம் வாசிக்க எழுதிய நாவல்.
ஒரே அமர்வில் இலக்கிய வாசகர்கள் இந் நாவலை படித்து விட முடியும். படிக்கையில் மிக நுணுக்கமான கவனிப்புகள், மனித சுபாவத்தின் விவரணைகள், வாழ்க்கை  பற்றிய கருத்துகள் நாவல் நெடுக இருப்பதைப் பார்க்க முடியும். இத்தகைய நுட்பங்கள் உள்ள நாவல் அதன் நேர்த்திக்கு கொஞ்சம் விலகிய மாதிரியான ஒரு முடிவை கொண்டிருக்கிறது என்றும் தோன்றலாம். அது க.நா.சு. வுக்கே தோன்றி  முன்னுரையிலும் அதை அவர் குறிப்பிடுகிறார். “அப்படித்தான் வந்தது. போகட்டும் என்று விட்டு விட்டேன்” என்கிறார்.
 அப்போதுதான் ’ஜேம்ஸ் ஜாய்ஸ்’ கூறியதை* மேற்கோளக்கி இலக்கிய உலகில் பலரும் நிகழ்த்தும் ’கண்ணீர் துளி வர  உள்ளுருக்குதல்’  ஒரு கோடியில் என்றால்  நாலைந்து பேர்களுக்கே கைவந்த ’ஒதுங்கி நிற்றல்’ என்கிற மறு கோடியை நமக்கு அறிமுகம் செய்கிறார்.
நாவலில் காணப்படும் சம்பவங்களும், பாத்திரங்களின் குணமும் மிக நுட்பமான கவனிப்புகளோடு விவரிக்கப்படுகின்றன.
      ரயிலில் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்துகொண்டு வெளியே எதிர்ப்பக்கமாக ஓடிய மரங்களின் ஒரு வரிசையை கண்களை விரலால் அமுக்கி இரண்டாக பண்ணிக் கொண்டிருக்கும் சிறுவன்,
     பேரன், தாய் மாமனின் வீட்டில் சாப்பிடுவதற்கு, அதுவும் பாலும் சோறும் கலந்து தின்பதற்கு வெள்ளிக் கிண்ணம் கிடைக்கும் என்கிற பாட்டி,
     தலையில் டர்பனுடன், மூடிய கோட்டுப் பையில் பேனாவுடன் சாட்சாத் பள்ளிக்கூட உபாத்தியாயரின் நிரந்தர உருவமாக நிற்கிற மாமா,
     கலைத் தேவிக்கு போட்டியாக தோன்றிய ஒரு கேலித்தேவியின் படைப்பாகிய அம்மாமி, 
     பெற்றோரின் குணங்களின் சாரலோ, சாயலோ விழாத ஸ்ரீனிவாஸன்…..
என்று இன்னும் பலர்  ஒற்றைப் பரிமாணமாக இல்லாமல்  நாம் வாழ்வில் இருப்பது போலவே நல்லதும் கெட்டதும் கலந்தே வருகிறார்கள்.   
தன் ஆளுமையின் கீழ் அனைத்தையும்   முழுமையாக வைத்திருக்கும்  மாமி, ராஜா குழந்தையில் சோறுண்ண மாமா செய்த வெள்ளிக் கிண்ணத்தைப் பின்னாட்களில், “ராஜாவின் வெள்ளிக் கிண்ணம்” என்று குறிப்பிட்டுக் கொண்டே தன் பெட்டிக்குள் பூட்டி வைத்துக்கொள்பவள், குழந்தைக்காக ஏங்குபவளாகவும் இருக்கிறாள். ராஜாவிடம் அன்பாகவும் இருக்கிறாள்.
மேற்படி வெள்ளிக் கிண்ணம் விஷயம் பற்றி சொல்கையில் ”இது சின்ன விஷயம் தான்” என்று முடித்துவிடுகிறார்; முடித்த கையோடு “ஆனால் காற்று எந்தப் பக்கம் அடிக்கிறது என்பதை சிறு துரும்பு தானே காட்டும்? கற்பாறையா காட்டும்?” என்று நம்மை மேலும் ஆழமான கவனிப்புக்கு சர்வசாதாரணமாக இட்டுச் செல்கிறார். 
இன்னொரு இடத்தில் ‘குளிக்க இழுத்துக்கொண்டு போகும் நாய்க்குட்டியை போல பின்னங்கால்களை ஊன்றி கொண்டு அசைய மறுத்து விடும்’ என்று மனதைப் பற்றி சொல்கிறார்.
நாவல் முழுதும் ஒரு அலட்சியத்துடன்  கூடிய, லேசான கேலி இழையோடும் கைத்த நகைச்சுவை விரவிக் கிடக்கிறது.
     ”காய்கறி வாங்கக் கொடுத்த எட்டணாவை முழுக்க தொலைத்துவிட்ட விஷயத்தைத் ’தொட்டுக்கொண்டே’ ஒரு வாரம் பூராவும் சாப்பாடு நடந்தது.”
     ”மனிதனுக்கு இன்பம் பெற வழிகள் கணக்கற்றவை இருக்கின்றன. வைக்கோலை சுவைத்து சாப்பிடுவதில் கூட இன்பம் கண்டு விடுவான் மனிதன்.”
     ”அந்த நாட்களில், நான் சொல்கின்ற காலத்தில், பையன்களின் பகிரங்க உபயோகத்துக்கும், உபாத்தியாயர்களின் அந்தரங்க உபயோகத்துக்கும் என்று நோட்ஸ் என்று சொல்லப்படுகிற புஸ்தகங்கள் கிடையாது.”
வாழ்க்கை, வாழ்க்கையில் வெற்றி, பணம், பணம் செய்யும் வழி, அந்தப் பணம் என்னவெல்லாம் செய்யும்?, அதனால் என்னவெல்லாம் செய்ய முடியாது?, கடவுள், தர்மம், அதர்மம், நியாயம், அநியாயம், நம்பிக்கை, மூடநம்பிக்கை,  உலகத்தோடு ஒத்து வாழத்தெரியாதவன், அவன் அனுபவங்கள் ஆகிய எல்லாவற்றைப் பற்றியும் ஆசிரியரின் கூற்றுகள் அந்தந்த சந்தர்ப்பத்துக்கு ஏற்றார்போல் வந்துகொண்டே இருக்கின்றன; என்ற போதிலும் இவை தனியாக, கதை போக்கிலிருந்து விலகி நில்லாமல் இருக்கின்றன. காரணம் இவை அனைத்தும், குறிப்பாக பணம் பற்றிய விஷயங்கள்  அவ்விஷயங்களில் ”ஆசை, பேராசை என்றில்லாமல் நிராசையையே இருபது முப்பது வருடங்களாக பயின்று வந்தேன் நான்” என்று சொல்லிக் கொள்ளும் ராஜா என்கிற கதாபாத்திரத்தால் சொல்லப்படுபவை. அக்கதாபாத்திரத்தின் மனோ தர்மத்துக்கும், மனோ தத்துவத்துக்கும், அவன் வாழ்க்கைக்கும் பொருந்தி வருதவதாலும், நாவலே ’தன்மை’யில்  (first person) அக்கதா பாத்திரம் சொல்வது போன்றே எழுதப்பட்டிருப்பதாலும் இவை மிக அழகாக நாவலோடு இரண்டறக் கலந்து நிற்கின்றன.
இந்நாவல், ஒருவர் பணத்தின் மூலம், அப்பணத்தை தன் சுற்றத்தாரிடம் வட்டிக்குக் கடன் கொடுப்பதன் மூலம் பெரும் பொருள் ஈட்டி விடக் கூடும் என்றாலும் பணம் சேரும் அதே நேரத்தில் அந்தச் சுற்றத்தை அவர் அப்படியே இழந்து விடுவார், அந்தப் பணம் உண்மையில் ஓர் ’ஆட்கொல்லி’ என்ற பார்வையை முன்னால் வைக்கிறது.
நிதர்சன வாழ்வில் பணம் சேர்ந்தவரிடம் உலகம் நடந்துகொள்ளும் விதம் வேறு மாதிரி எல்லாம் கூட இருக்கிறது. ஒரு கூட்டம் கரையும் அதே நேரத்தில் புதுக் கூட்டம் ஒன்று மாலைகள், பெரும் கைதட்டல்கள், சாஷ்டாங்க நமஸ்காரங்கள், புகழுரைகள், ’ஆஹா’க்களோடு  பணம் படைத்த அவருடைய கடைக்கண் பார்வை தன் மீது பட்டு விடாதா என்கிற ஆவலில் தயாராக நிற்கிறதையும் நாம் பார்க்கிறோம்.
க.நா.சு. என்கிற மேதை வாழ்க்கையில் பணத்தின் இடம் பற்றிய குறுக்குவெட்டுத் தோற்றத்தை நமக்கு விவரிக்கும் இந்நாவலில் மனித மன விவரணைகளோடு, வாழ்க்கையின் கணிக்க முடியாத் தன்மையும் மிகத் துல்லியமாக அமைந்திருக்கின்றது
இத்தகைய தன்மை களுக்காகவே தொடர்ந்து நல்ல எழுத்துகளையே வாசர்களுக்கு எடுத்துச் செல்லும் சிறுவாணி வாசகர் மையம் தங்கள் இலக்கியப் பணியில் இந்நாவலையும் வெளியிட்டு வாசகர்களின் வாசிப்பனுபவத்தில் செழுமையை சேர்த்துள்ளார்கள். அவர்கள் பணி மேன் மேலும் சிறக்க வாழ்த்துகள்.
***
- “The artist, like the God of the creation, remains within, behind or beyond or above his handiwork, invisible, refined out of existence, indifferent, paring his fingernails” - James Joyce.
 
 
 
No comments:
Post a Comment