‘திரு. நாஞ்சில் நாடன் வாழ்த்தரங்கி’ல் ஓர் உரை
வ.ஸ்ரீநிவாசன் | சொல்வனம் இதழ் 133 | 01-08-2015|
(18-07-2015 அன்று கோவையில் ‘மாலதி பதிப்பகத்தார்’ திரு. ரா. பத்மநாபன் எழுதிய ‘ஸ்ரீமத் பகவத் கீதை’ (மூலம் – தமிழாக்கம்) நூல் அறிமுகத்தையும், திரு நாஞ்சில் நாடன் அவர்களின் 40 ஆண்டு எழுத்துப் பணிக்குப் பாராட்டு விழாவையும் ஒரு சேர நிகழ்த்தினார்கள். அதில் திரு. வ. ஸ்ரீநிவாசன் பேசியது.
அனைவருக்கும் வணக்கம்.
நான் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் அருளிய பகவத் கீதையை வாசித்ததில்லை. பொதுவாக, பரவலாக ஒரு சராசரி தமிழனுக்கு கீதையைப் பற்றி எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் – ஒருவேளை அதற்கும் குறைவாகத்தான் – எனக்குத் தெரியும். ஒருகால் கண்ணன் அதை தமிழிலே இசைத்திருந்தால் ‘காற்றினிலே வரும் அந்த கீத’த்தை நான் கேட்டிருந்திருக்கக் கூடும்; படித்திருந்திருக்கக் கூடும். இல்லாது போனாலும் திரு நாஞ்சில் நாடன் அவர்கள் அதைப் பற்றி நிச்சயமாக எழுதியிருப்பார்கள். அப்போது நானும் நிச்சயமாக அதைப் படித்திருப்பேன், ‘சிற்றிலக்கியங்களை’யும், ‘கம்பனின் அம்பறாத் தூணி’யையும் படித்த மாதிரி.
1975 அவர் எழுத்து முதன் முதலில் பிரசுரம் ஆகியிருக்கிறது. 2001ல்தான் நான் அவரை முதன் முதலில் படித்தேன். 26 ஆண்டுகால நீண்ட இடைவெளி. காரணம் அந்தப் பெயர். ஒருவேளை அவர் எழுத்தில் அரசியல் நெடி அடிக்குமோ என்கிற தயக்கம். படித்தபின் தான் தெரிந்தது அந்த எழுத்து தரமற்ற அரசியலை, அறமற்ற அரசியலைத்தான் அடிக்குமேயன்றி அதிலிருந்து எந்த நெடியும், வாடையும் அடிக்காது என்பது; மேலும் அதில் தமிழ் மணமே கமழுமென்பதும்.
முதலில் படித்தது அவரது ஆறாவது நாவலான ‘எட்டு திக்கும் மத யானை’. என்னவொரு தலைப்பு ! எவ்வளவு அழகான, கவித்துவமான அனைத்தையும் விட முக்கியமாக, பொருத்தமான தலைப்பு ! நாவலைப் படித்ததும் அதன் செறிவு, செழுமை, நுட்பம், சுவாராஸ்யம், அந்தத் தமிழ்.. .. இவற்றில் மனதைக் கொடுத்தேன். உடனே அதுவரை என் வாழ்நாளில் செய்யாத ஒரு வேலையை முதன் முதலில் செய்தேன். ஓர் எழுத்தாளரை நானே நேரடியாகத் தொடர்பு கொண்டேன். திருச்சியில் இருந்த நான் கோவையில் இருந்த அவரோடு தொலைபேசியில் பேசினேன். நாவலில் நான் ரசித்த இடங்களை, விஷயங்களைப் பற்றிச் சொன்னேன். என் புகழ் வார்த்தைகள் அவரிடம் எந்த ஒரு புளகாங்கிதத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது தெரிந்தது. அதனால் எனக்கு அவர் மீதான மதிப்பு வளர்ந்தது. கொஞ்சம் பிறகு W. H. ப்ராடியின் விற்பனைப் பிரிவு உயர் அதிகாரியாக அவரும், கனராவங்கியிலிருந்து சமீபத்தில்தான் விருப்ப ஓய்வு பெற்ற முதுநிலை மேலாளராக நானும் பேசத் துவங்கினோம்.
“என் மகள் +2 எழுதியிருக்கிறாள். அவளுக்கு எந்த ஊரில் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கிறதோ அந்த ஊருக்குப் போக வேண்டும்” என்று சொன்னேன். அவர் உடனே சொன்னார் “கோயம்புத்தூருக்கே வந்துடுங்க. நாங்கள்ளாம் இருக்கோம்ல”.
கவி வாக்கு பலித்தது. ஓரிரு மாதங்களில் என் மகளுக்கு கோவை ஜிசிடியில் இடம் கிடைத்து நாங்கள் கோவை வந்தோம்.
அவரை முதன் முதலில் நேரடியாக சந்தித்தது ‘மண்ணுள்ளிப் பாம்பு’ நூல் வெளியீட்டு விழாவில்தான். மேடையில் பேசுகையில் அவர் சொன்னார் : ” இந்தக் கவிதைகள் குறித்து உங்கள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன விமர்சனங்கள் உள்ளனவோ அவை அனைத்தும் எனக்கும் இருக்கின்றன.” தன் நூல் பற்றி தனக்கே விமர்சனமாம். அதுவும் ஒன்றிரண்டு இல்லை. ஒவ்வொருவருக்கும் இருக்கும் அத்தனை விமர்சங்களுமாம். எழுதியவரே சொல்கிறார். அவருக்கு அகந்தை என்பதே கிடையாது. அகந்தை இல்லாத இடத்தில் கண்ணன் இருக்கிறான். அவன் ‘மதுர மோஹன கீத’மும் இருக்கிறது.
அதே ஆண்டு விஜயதசமி தினத்தன்று அவருக்கு இதய சிகிச்சை நடந்தது. அந்த சமயத்தில்தான் அவரது இல்லத்தில் சென்று அவரைச் சந்தித்தேன். அப்புறம் சில ஆண்டுகள் கோவை, 4 ஆண்டுகள் சென்னை, மீண்டும் கோவை, மீண்டும் 2 1/2 ஆண்டுகள் திருச்சி மீண்டும் இப்போது கோவை என்று இருந்த போதிலும் எங்கள் நட்பு தொடர்ந்து வருகிறது.
26 ஆண்டுகளாக இவரைப் படிக்காமல் விட்டோமே என்கிற குறை இருந்த போதிலும் அதில் ஒரு பெரும் அனுகூலமும் இருந்தது. படிக்க அவர் ஏற்கனவே எழுதியவை எத்தனை இருந்தன? அது தவிர அவர் ‘கரென்டாக’ எழுதுவதும்.
எத்தனை விஷயங்கள் எழுதுகிறார். எவ்வளவு தகவல்கள், தாவரங்கள், மரங்கள், மனிதர்கள், சூழல்கள், மண்கள், குணங்கள், க்ரோதங்கள், த்ரோகங்கள், தயை, அன்பு, கருணை…எத்தனை? எப்படி இவ்வளவும் அவருக்கு எழுத முடிகிறது? அந்தக் ‘கொள்கலன்’ மிகவும் பெரியது. அதில் மிகப் பெரிய இடத்தை அடைத்துக் கொள்ளும் தன் முனைப்பு என்பகிற பொருளும் வேறு அடைத்துக் கொண்டிருக்கவில்லை. தகவல்கள், தமிழ், கிரஹிப்பு மட்டுமல்ல அந்தக் கொள்கலன் மிகப் பெரியதாய் இருப்பதால்தான் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், வாசகர்கள் என்கிற மிகப் பெரிய எண்ணிக்கையிலான மனிதர்களையும் அது கொள்கிறது. அதனால்தான் எல்லோருக்கும் ஒதுக்க நேரமும், கொடுக்க இடமும் அவரிடம் இருக்கிறது. அது ஒரு கனிந்த பரந்த தமிழ் இதயம்.
இவ்வளவு வாசகர்கள் இருந்த போதிலும் அவரது முதல் வாசகன், முதன்மை வாசகன் நான்தான். என்னடா இது இப்போதுதான் அகந்தையை, தன்முனைப்பைத் தாக்கி விட்டு இவ்வளவு தன் முனைப்பு கொப்புளிக்கும் ஒரு கூற்று என்று நீங்கள் நினைக்கலாம். நான் உண்மையைத்தான் சொல்கிறேன். சொல்வனத்துக்கு அவர் எழுதுபவற்றின் கையெழுத்துப் பிரதியை முதலில் வாசிப்பது நான்தான். பின்னர்தான் அவை தட்டச்சு செய்யப் பட்டு பிரசுரமாகும். ஆக ஒரு சில எழுத்துக்களுக்காவது நான் முதல் வாசகன். இந்த மாதிரி ‘ ப்ரொடெக்டிவ் க்ளாஸஸ்’ ‘டிஸ்க்ளெய்மர்ஸ்’ இல்லாமல் அவரது முதன்மை வாசகன் நான் தான். ஏன் என்று இதோ சொல்கிறேன்.
2001 ல் அவருக்கு அவர் இதயத்தில் எந்த ரத்தக் குழாயில் எந்த இடத்தில் அடைப்பு ஏற்பட்டதோ 2011ல் எனக்கு என் இதயத்தில் அதே ரத்தக் குழாயில் அதே இடத்தில் அடைப்பு ஏற்பட்டது. அவர் மேற்கொண்ட அதே சிகிச்சையை மேற்கொண்டு நானும் குணமடைந்தேன். மறு நாள் சிகிச்சை நடக்கப் போகிறது. இன்று ‘டயக்னோஸிஸ் ரிபோர்ட்’ வந்து விட்டது. அதை நாஞ்சிலின் மகள் டாக்டர் சங்கீதாவிடம் காட்டினேன். அவங்க உடனே சொன்னாங்க “அங்கிள், அப்பாவுக்கும் இதே இடத்தில் இதே மாதிரிதான் வந்தது” நான் உடனே சொன்னேன் “பாத்தியாம்மா ! உங்கப்பா வோட பெஸ்ட் வாசகன் நான்தான் என்பதற்கு இதை விட ப்ரூஃப் வேண்டுமா?”
நான் மருத்துவ மனையில் இருந்த அந்த நாட்களில் என்னோடு இருந்த இருவர் : ஒன்று திரு. நாஞ்சில் நாடன் இரண்டாவது : அவர் மகள் டாக்டர் சங்கீதா (அவர் எனக்கும் மகள்தான்)
“கோயம்புத்தூருக்கே வந்துடுங்க. நாங்கள்ளாம் இருக்கொம்ல”. சொன்னாரில்லையா முதன் முதலில் பேசியபோது. இருந்தார். இடுக்கண் களைவதுதானே நட்பு?
ஆனால் இது பற்றி அவர் ஒருவரிடமும் சொல்லியிருக்க மாட்டார். அவருக்கு இது நினைவில் இருந்தால்தானே சொல்வதற்கு. அவர் இது போல் பலருக்கும் உதவியிருக்கிறார். அவருக்கு இருக்கும் தன்னலம் மிக மிகக் கம்மிதான்.
இப்போது கூட மாலதி பதிப்பகத்தார் இந்த விழா எடுக்கவேண்டும் என்று பிரஸ்தாபித்தபோது அவர் என்னிடன் தொலைபேசியில் சொன்னார் “ஆடிட்டர் தப்பா நினைச்சுக்கப் போறார். அவர்ட்ட சொல்லிடுங்க. பெரிய விழாவெல்லாம் வேண்டாம். எப்படியும் பகவத் கீதை அறிமுக விழா இருக்கு. அதில் என்னைக் கூப்பிட்டு ஒரு ஷால் போட்டாப் போறும்”
பயன் கருதாது, பலன் கருதாது தங்கள் பணி செய்பவர்களுக்கு சரியான விஷயங்கள், சரியான நேரத்தில், சரியாக, பொருத்தமாக நடக்கும். அதற்கு உதாரணம் இந்த விழா. எப்படி நடக்கிறது பாருங்கள். அவரது ஆசிரியர்களில் ஒருவரான ‘கீதை தமிழ் செய்த மாறன்’ திரு. ரா. பத்மநாபன் அவர்களின் நூல் அறிமுக விழாவோடு சேர்ந்து நடக்கிறது. முது பெரும் அறிஞரான திரு. வைத்யநாதன் க்ருஷ்ணன் மற்றும் புவியரசு ஐயா முன்னிலையில் நடக்கிறது. அதுவும் எங்கே? ‘சிருஷ்டி’ மஹாலில். உங்களைப் போன்ற இலக்கிய ஆர்வம் மிக்க வாசக நண்பர்களின் மத்தியில் நடக்கிறது. சேவை மனப்பான்மையோடு இயங்கி வரும் ‘மாலதி பதிப்பகத்தார்’ இதை முன்னின்று நிகழ்த்துகிறார்கள்.
அவர் மேலும் கேட்டார் : ” இப்போ எதுக்கு ? 50 ஆண்டு ஆகட்டுமே. 50 ஆண்டுகள் நாம எழுத மாட்டோமா என்ன?”
அதற்கான பதிலை இந்த மேடையில் தருகிறேன் ” நிச்சயம் எழுதுவீர்கள் நாஞ்சில் சார். 50 ஆண்டுகள் நிச்சயம் எழுதுவீர்கள். அதற்கு மேலும் பல்லாண்டுகள் நிச்சயம் எழுதுவீர்கள். உங்கள் வாசகர்களாகிய நாங்களும் அவற்றையெல்லாம் படித்து இன்புற்று இதே போல் பொருத்தமாக, சிறப்பாக ஒவ்வொரு முறையும் விழா எடுத்து எங்கள் மகிழ்ச்சியை நிச்சயமாகக் கொண்டாடுவோம் என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.”
1 comment:
என் மனதில் ஒரு சின்ன நிறைவு, எனக்கும் ஒரு "நாஞ்சில் நாடன்" கிடைத்துள்ளார் என்று.. படித்தது மிகக் குறைவு, உங்களைப் பற்றி, ஆனால் இன்னும் நிறையப் படிக்க வேண்டும் என்ற அவா...எங்கோ படித்தது...சில நட்புகள் ஏன் ஆரம்பித்தன என நாம் என்னும் முன்னரே இவர் சரியான தேர்வு சில நேரங்களில் தோன்றும், இடையில் இந்த நட்பு இப்படியே நிலைத்திருக்கக் கூடாதா என்ற ஏக்கமும் வளரும். பார்க்காத நட்பு என நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் பேசா நட்பு என நமது நட்பைச் சொல்ல முடியாது...பேசினோம், பேசுகிறோம், பேசுவோம்.....ஸ்ரீதரன்
Post a Comment