FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Friday, May 8, 2009

ஓம் நமோ நாராயணா !

பிறந்ததிலிருந்தே ஜென்ம ஜென்மமாய்
‘ப்ளூ பேபி’. பிறர் கை பட்டு
அறுந்த வில்லை உடைத்தோர்
திருமணம். சாதா வனக் குரங்கை
மறைந்து கொன்ற மாவீரம். பின்னொரு நாள்
நீர்ப் பாம்பின் சிரசில் நடனம். என்றென்றும்
அறிதுயில் என்ற பெயரில்
அசையாதுறங்கும் பரந்தாமா ! பலஹீனம் நீங்கி
பிறிதெம்மைக் காப்பது எப்போது?

ஓம் நமோ நாராயணா !

10-4-09

ஓம் நமசிவாய !

ஓம் நமசிவாய !


பாம்பை கயிறென்று எண்ணி
கழுத்தில் விட்டாச்சு.
அமுதென்ற நினைப்பில் கொல்லும்
விடத்தை குடிச்சுமாச்சு.
வாயால் அருந்த வேண்டிய நீரை
தலையில் வச்சாச்சு.
ஆக்குவதாய் எண்ணி
அனைத்தையும் அழிச்சாச்சு.
முக்கண்ணில் ஒன்று கூட
‘ஒர்க்’ பண்ணா பரமசிவனே!
ஓம் நமசிவாய !

10-4-09

Tuesday, May 5, 2009

ஜே.க்ருஷ்ணமூர்த்தி.

ஜே.க்ருஷ்ணமூர்த்தி.

வ.ஸ்ரீநிவாசன்.

(க்ருஷ்ணமூர்த்தியைப் பற்றி எழுதுவது காற்றை கையில் பிடிப்பதைப் போல.)

1895 மே 12ம் தேதி ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், மதனபள்ளியில் தம் பெற்றோருக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தவர் ஜே.க்ருஷ்ணமூர்த்தி (‘கே’).

1875ல் ஆரம்பிக்கப் பட்ட ப்ரம்ம ஞான சபையின் (Theosophical Society) உறுப்பினர்கள் புதிய ‘ஜகத்குரு’ (world teacher) வின் வருகையை எதிர் நோக்கியிருந்தனர். குறிப்பாக டாக்டர் அன்னி பெசன்ட் அம்மையாரும், சி. டபிள்யூ. லெட்பீட்டரும். 1909 ல் லெட்பீட்டர் ‘கே’யை அடயாறு கடற்கரையில் கண்டு பிடிக்கிறார். கேயின் ‘ஒளிவட்டத்’தில் சிறிதும் ‘சுயநலம்’ இல்லாது இருப்பது அவரைக் கவருகிறது. இவரே ‘உலக ஆசான்’ என்ற முடிவில் அன்னி பெஸன்ட்டால் கேயும் அவர் இளைய சகோதரர் நித்யாவும் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயே வளர்க்கப் படுகிறார்கள்.

‘ஆர்டர் ஆஃப் த ஸ்டார் இன் தி ஈஸ்ட்’ என்னும் புதிய ‘உலக ரட்சகரு’ (messiah)க்காக தோற்றுவிக்கப் பட்ட ஸ்தாபனத்தின் உறுப்பினர்களான, உலகெங்கும் பரவியுள்ள பிரம்ம ஞான சபையினர் சொத்துகளையும், செல்வங்களையும் வாரி வழங்குகிறார்கள். 1925ல் நித்யாவின் அகால மரணத்துக்குப் பின் கே பெரும் துக்கத்துக்கு உள்ளாகிறார். 1929 ஆகஸ்ட் 3ம் நாள் ஆர்டர் ஆஃப் த ஸ்டாரைக் கலைத்துவிட்டு அதற்கு வந்த கோடிக் கணக்கான சொத்துகளையும், செல்வங்களையும் திருப்பிக் கொடுத்துவிட்டு ‘உண்மை பாதையற்றது; எந்த ஸ்தாபனத்தின் மூலமாகவும், மதத்தின் மூலமாகவும், இனக்குழுவின் மூலமாகவும் அதனை அடைய முடியாது; என்னுடைய ஒரே அக்கறை மனிதனை நிபந்தனையின்றி, முழுமையாக விடுதலை அடையச் செய்வது மட்டுமே’ என்று அனைத்தையும் விட்டு விட்டு தனியாளாகிறார். பிறகு உலகம் முழுவதும், ஓரிடத்தில் நிரந்தரமாக தங்காது, சென்று பலதரப் பட்ட மக்களையும் சந்தித்து அவர்களோடு உரையாடுகிறார். தனிப்பட்ட உரையாடல்கள், பலர் பங்கேற்கும் சம்பாஷணைகள், பொதுக் கூட்டங்கள் என்று இறக்கும் காலம் வரை மனிதர்களோடு உரையாடிக் கொண்டே இருந்தார்.

‘இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு அனைத்தையும் துறந்தவர் கே’ என்கிறார் ஹென்றி மில்லர். உலகிலேயே மிக அதிகமான மனிதர்களோடு தனிப்பட்ட உரையாடல்களை மேற்கொண்டவரும் இவரே. இவரது பேச்சுகளால், போதனைகளால் ஈர்க்கப் பட்டவர்கள் பலர். இவர் ‘அறைக்குள் வந்தபோது அன்புக் கடவுளே வந்ததாக உணர்ந்தேன்’ என்று கலீல் கிப்ரான் சொல்கிறர். ‘நான் சந்தித்த மனிதர்களிலேயே அழகானவர்’ என்கிறர் பெர்னார்ட் ஷா.

இவரது பேச்சுகளைக் கேட்ட (இவரைக் கேட்பது புத்தரைக் கேட்பதைப் போல் இருக்கிறது) ஆல்டஸ் ஹக்ஸ்லி இவர் எழுதலாம் என்றார். அதன் பின் இவர் எழுதிய போதிலும், எழுதியவை சொற்பமே. பாக்கி எல்லாம் இவரது பொது மேடைப் பேச்சுகள், சம்பாஷணைகள். நேர்காணல்கள் ஆகியவற்றின் திரிபில்லாத எழுத்து வடிவங்களே.

அவ்வப்போது இவர் பற்றிய உலக கவனம் அதிகமாகும். எழுபதுகளில் அப்படி ஒரு சந்தர்ப்பம் நேர்ந்தது. தமிழ் இலக்கிய உலகில் அவரது தாக்கம் பெரிதும் இருந்தது. அசோகமித்திரன், பிரமிள், லா.ச.ரா., ஜெயகாந்தன் முதலியவர்கள் இவர் பற்றி பலதும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அதே காலகட்டத்தில் இருந்த ஒஷோ இவர் பற்றி பலபக்கங்களுக்கு கூறி இருக்கிறார். ரமண மகர்ஷியும் இவர் பற்றிய கேள்விகளுக்குப் பதில் தந்துள்ளார். இப்போது பிரபலமாக உள்ள ஜக்கி வாசுதேவ், ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் முதலியோரிடம் இவரது தாக்கம் பெரிதும் தெரிகிறது.
ஓஷோ தானும் கேயும் மஹாவீரரையும் புத்தரையும் போல ஒரே காலத்தில் உலகின் மீது சஞ்சாரம் செய்வதாகக் கூறியதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். யோகி ராம்சூரத் குமார் இவர் கை தன் சிரசில் பட்டதும் தன்னுடைய ‘நான்’ கழன்று விட்டதாகக் கூறினார் என்பார்கள். மேலும் ‘கடவுளை நம்பாதவர்க்கும் ஒரு குரு வேண்டுமல்லவா அவர்தான் கே’ என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் கே ‘நான் உங்கள் குருவல்ல’ என்று கறாராக ஆரம்பத்திலிருந்தே தெளிவுபடுத்தி இருக்கிறார். மேலும் குரு சிஷ்யனையும், சிஷ்யன் குருவையும் சிதைத்து விடுவார்கள் என்பது போன்று குரு சிஷ்ய மனோபாவத்தை வெகு வலுவாக எதிர்த்துள்ளார்.

ஓஷோ, ரமணர், சாய்பாபா, ஜக்கி வாசுதேவ், ரவிஷங்கர் போன்றவர்களில் ரமணர் ஒரு ஏழை கிராமத்து மனிதர் போலவே உடை (ஒரே ஒரு கோவணம் மட்டுமே) அணிந்து வாழ்ந்தவர். பாக்கிப் பேருக்கு என்று ஒரு பிரத்யேக உடை அலங்காரம் உண்டு. ஆனால் ‘பார்த்தால் பிறர் போலிருந்த’ ஆன்மிகர் கே. முழு சூட்டிலிருந்து, வேட்டி ஜிப்பா , ஜீன்ஸ், டீ ஷர்ட் வரை அந்தந்த ஊர்களில் மக்கள் அணியும் ஆடைகளையே அவர் அணிந்து வந்தார்.

சோதித்துப் பார்க்க முடியாதவற்றை எற்றுக் கொள்ள வேண்டாம் என்று கூறும் அவர் பற்றிய மஹாத்மியங்கள் அவரது போதனைகளுக்கு நேரெதிராக அமானுஷ்யமாக இருக்கும்.

பிரம்ம ஞான சபையின் உலக ஆசானாக இருந்த காலத்தில் சென்றவிடங்களிலெல்லாம் ஊடகங்களின் கேலிக்கு ஆளானவர். எந்த சர்வகலா சாலையும் இவரை மாணவராக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனால் பின்னர் உலகமே இவர் பேசியதைக் கெட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான உலக சமாதான சங்கத்தில் தொண்ணூறு வயதில் பேசுகையில் இவர் சொல்கிறார்: ‘என்னிடம் எல்லாக் கேள்விகளும் கேட்கப் பட்டுள்ளன.’

கேயின் போதனையை, தத்துவத்தை சுருக்கமாக சொல்லுங்கள் என்றால் சொல்ல முடியாது. இவர் எந்த தியரியையும், சூத்திரத்தையும், வழிமுறையையும் தரவில்லை. ‘வாழ்க்கை என்ன என்று சுருக்கமாக சொல்லுங்கள்’ என்றால் சொல்ல முடியுமா?

‘வாழ்க்கை உறவுகளில் ஓர் இயக்கம்’. ‘வாழ்க்கை செயல்களில் ஓர் இயக்கம்’ என்கிற கே உறவு பற்றியும் செயல் பற்றியும் மிக விரிவாக, மிகப் புதிதாகப் பேசி இருக்கிறார். நமக்கு யாருடனாவது உண்மையிலேயே உறவு இருக்கிறதா? என்று வினவும் அவர் ‘மிக நெருக்கமானதாக கருதப் படும் கணவன், மனைவிக்கு இடையில் உள்ள உறவு கூட இரண்டு பிம்பங்களுக்கு இடையில்தான் உள்ளது என்னும் துக்கத்தை எடுத்துக் காட்டுகிறார். இந்த பிம்பம் செய்தல் மனிதர் பற்றி மட்டுமல்ல, பொருட்கள் பற்றி, கருத்துகள் பற்றியும் நமக்கு உள்ளது. ‘பிம்பங்கள் இன்றி வாழ்வதே சுதந்திரம்’ என்கிறார் கே. பிம்பங்கள் இல்லை எனில் நிஜத்தை நேரிடையாக திரிபு இன்றி பார்க்க முடிகிறது. அப்போது உண்மையான உறவு மலர்கிறது. ‘உங்கள் மனைவி (கணவன்) பேசுவதை என்றாவது நீங்கள் செவி மடுத்து இருகிறீர்களா என்கிற கேள்விக்கு நம் நேர்மையான பதில் என்ன?

அதே போல் செயல். பயம், இன்பம், இலாபம், பாதுகாப்பு, நமது பிரத்யேக கட்டுப்பாடுகள் முதலியவற்றால் நிர்ணயிக்கப் படும் நமது செயல்கள் பின்னப் பட்டவையாக, சவால்களுக்கு சமமில்லாத பதில்களாகவே உள்ளன. எண்ணத்தின் அடிப்படையில் எழும் இந்த செயல்களால் எப்படி நன்மை விளைய முடியும். ‘சரியானதைச் செய்யுங்கள், சரியானது நடக்கும்’ என்கிற கே ‘நிஜங்கள் (Facts) சரியான செயலை உண்டுபண்ணும்’ என்று கூறுகிறார். மேலும் ‘நிஜம் என்பது உண்மையிலேயே நடந்து கொண்டிருப்பது’ என்றும் சொல்கிறார்.


‘கலை’ என்பது ஒவ்வொன்றையும் அதன் சரியான இடத்தில் வைப்பது’ என்கிறார். கவிதை வரிகளோ, ஓவியங்களோ, சிற்பமோ, இசையோ கலை அல்ல, அதைச் செய்யும் மனிதனது வாழ்க்கை பிரிவை, துயரத்தை, அழிவை உற்பத்திப் பண்ணுவதாய் இருந்தால் என்னும் கே வாழும் கலை பற்றி சொல்கிறார். ‘வாழும்கலை என்பது பயமின்றி, துக்கமின்றி, பிரச்னை இன்றி, சச்சரவு இன்றி வாழுதல்’ என்கிறார்.

‘செவி மடுத்தல்’ வாழ்வின் அனைத்தையும் விட முக்கியமான செயல். செவிமடுக்கும் கலை, நோக்கும் கலை, கவனிக்கும் கலை பற்றி விரிவாகப் பேசுகிறார். நாம் வாழ்வில் இடையூறு இன்றி எதையாவது கவனிக்கிறோமா என்பது நமக்கு புலனாகிறது. எதைக் கேட்கையிலும் நம் அபிப்பிராயம், நம் கட்டுண்ட நிலை அதைக் கேட்கவொண்ணாமல் செய்வதை நாம் உணருகிறோம். ஒரு மரத்தைக் கூட நாம் எண்ணத்தின் இடைஞ்சல் இன்றி காண முடியாமல் இருப்பதை உணருகிறோம்.

இயற்கையோடு உறவு இல்லாத மனிதன் ஏற்கனவே இறந்தவன் என்னும் இவரது இயற்கை பற்றிய வர்ணணைகள் ‘ரொமேன்டிக்’ ஆனவையல்ல.

மதங்கள், தேசியம், ஆகியவை எப்படி மனிதனைப் பிரித்துள்ளன என்று கூறும் கே ‘ஒருவன் இந்துவாக இருக்கும் வரை, இசுலாமியனாக இருக்கும்வரை, அரேபியனாக இருக்கும் வரை யூதனாக இருக்கும் வரை இந்து-முஸ்லிம் பிரச்னையோ, அரபு-இஸ்ரேல் பிரச்னையோ தீர வழியே இல்லை என்பதை தெளிவு படுத்துகிறர். தேசங்களாய்ப் பிரிந்து, போருக்கான தளவாடங்களைக் கூட்டிக் கொண்டே இருக்கும் மனிதக் குழுக்கள் ஐக்கிய நாடுகள் சபையையும் வைத்திருக்கும் விநோதத்தில் உள்ள அபத்ததை எடுத்துக் காட்டுகிறார். தேசியம் என்பது ஒளியூட்டப்பட்ட காட்டுமிராண்டித் தனம் (glorified tribalism) என்கிறார். இப்போதுள்ள விஞ்ஞான வளர்ச்சியால் ஒரே நாளில் உலகின் பசியையெல்லம் துடைத்து எறிந்து விட முடியும், ஆனால் நாம் தேசிய பிரிவுகளுக்குள் சிக்கி இருப்பதால்தான் அது சாத்தியமாகவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார்.



இவரால் கிறிஸ்தவர்களுக்கு நடுவே பேசுகையில் ‘உலகின் பாதி கத்தோலிக்கர்கள் இனி ஆயுதம் ஏந்துவதில்லை என்று முடிவு செய்தால் உலகில் யுத்தம் என்பதே இருக்காது’ என்று சொல்ல முடிகிகிறது. சென்னையில் பேசுகையில் பக்கத்திலிருக்கும் மலைக் கோவிலுக்கு (திருப்பதி) இரண்டு நாளைக்கு ஒருமுறை ஒரு மில்லியன் டாலர் காணிக்கை குமிவதில் இருக்கும் அபத்தம் பற்றி பேச முடிகிறது. ‘ஹரிஜனங்கள் கோவில் பிரவேசம் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்ட நிருபர்களிடம் ‘ கோவில்களே கூடாது’ என்று சொல்ல முடிகிறது.


வாழ்க்கையை கவனிக்கச் சொல்லும் இவர் உண்மை என்பது வாழ்க்கைதான், மாறிக் கொண்டேயிருக்கும் வாழ்க்கையை தேங்கிப் போன கருத்துகளால் நிறைந்த மனதால் புரிந்து கொள்ள முடியாது, உண்மை உங்களுக்குப் புரிதலைக் கொடுக்கும், சௌகர்யத்தை அல்ல என்கிறார். வாழ்வை மீறிய தத்துவ விசாரங்களில் இவர் ஈடுபடுவது கிடையது. மறை நூல்களிலிருந்தோ வேறெவற்றிலிருந்தோ ‘மேற்கோள்கள் காட்டுவது கிடையாது.

சிஷ்ய கோடிகளும், மடங்களும், இவருக்கு இல்லை. கூடாது என்று மறுத்தவர். இவரது மையங்கள் வெறும் நிர்வாக மையங்களேயன்றி பராம்பர்ய ஆதீனங்கள் இல்லை. இவருக்கு அபாஸ்ல்கள் (apostle) கிடையாது. உனக்கு நீயே ஒளியாய் இரு என்கிற இவர் தான் யாருக்கும் குருவல்ல என்பதில் கடைசிவரை மாறாமல் இருந்தார்.


இவரது போதனைகள் குணரூபமாக (abstract) இருப்பதாகவும் புரிந்து கொள்ள கடினமானவையாக இருப்பதாகவும், கடைபிடிக்க முடியாத விஷயங்கள் என்றும் விமரிசனங்கள் உண்டு. கூர்ந்து பார்த்தால் மோட்சம், கடவுள், சொர்கம், நரகம், மறு பிறவி, கம்யூனிசம், பூஜை புனஸ்காரம் ஆகிய அனைத்து கருத்துகளின் அவசியமின்மை பற்றியும், வாழ்வின் ஒற்றை அவசியமான தினசரி வாழ்க்கை பற்றியும்தான் இவரது பேச்சுகளும் போதனைகளும் அமைந்துள்ளன. ‘தினசரி வாழ்வில் ஒழுங்கைக் கொண்டு வாருங்கள். அதுதான் முதற்படி (first step) முதற்படியே கடைசிப் படி’ என்று கற்பனைகளில் தப்பிக்க விடாமல் நம்மை நாமே காணும்படி செய்கிறார். காயம், குற்றவுணர்வு, பயம், இன்பம், ஆசை, காலம், எண்ணம், மரணம், அன்பு, தியானம் முதலிய நாம் வாழ்வில் தினசரி சந்திக்கும் மிக முக்கியமான விஷயங்களைப் பற்றி இவர் கூறிய சொற்கள் அப்போதே கவனித்து அப்போதே சொன்னவை. நினைவில் கோர்த்து வைத்திருந்து மறுபடி கூர்ந்து சொன்னவையல்ல.

இவரது மரண காலம் வரை இவர் உரையாற்றிக் கொண்டு இருந்தார். 1986 ஜனவரி 4ம் தேதி வாழ்நாளில் இவர் கடைசியாக உரையாற்றிய பொதுக் கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது ‘உங்கள் வாழ்க்கையை குளறுபடியாக நீங்கள் ஆக்கியிருந்தால் அதை மாற்றுங்கள், இன்றே மாற்றுங்கள்’ என்றவர், ‘நீங்கள் நிச்சயமற்று இருந்தால் ஏன் என்று கண்டு பிடியுங்கள், நிச்சயத்தோடு இருங்கள். உங்களால் நேராக சிந்திக்க முடியவில்லை என்றால் அது ஏன் என்று கண்டுணர்ந்து நேராக, தர்க்க ரீதியாக சிந்தியுங்கள்’ என்றார்.

அவ்வருடம் பிப்ரவரி 17 அன்று பைன் காட்டெஜில், ஓஹாய், கலிஃபோர்னியாவில் இறந்தார். வெஞ்சுரா, கலிஃபோர்னியாவில் இவர் உடல் தகனம் செய்யப் பட்டது. மரணத்துக்குப் பின் எந்தச் சடங்கும் செய்யப் படவில்லை. பிரார்த்தனைகளோ, ஊர்வலங்களோ இல்லை.

கேயின் போதனைகள் என்றும் மனிதரின் பிரக்ஞையில் இருக்கும், அவை மனித வாழ்வைப் பற்றி, மனிதனைப் பற்றி, மனித மனம் பற்றி அன்போடு, அக்கறையோடு, உண்மையை மட்டுமே சார்ந்து பேசுவதால்.

**************

“ஆனால் உங்களை எப்படிப் புதைப்பது?”
‘எப்படி வேண்டுமென்றாலும், உங்கள் விருப்பப்படி” என்றார் சாக்ரடீஸ், “அதாவது உங்களால் என்னைப் பிடிக்க முடிந்தால், நான் உங்கள் விரல்களின் நடுவே நழுவாதிருந்தால்” - PHAEDO ‘சாக்ரடீஸின் கடைசி நாட்கள்’.

Monday, May 4, 2009

மானசரோவர் - அசோகமித்திரன்.

காணக் கிடைத்தவை.

வ.ஸ்ரீநிவாசன்.


மானசரோவர் - அசோகமித்திரன்.

ஏற்கனவே படித்து விட்டேன் என்று நினைத்திருந்த புத்தகம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘சாவி’யில் தொடராக வந்தது என்று 2006ல் அசோகமித்திரன் குறிப்பிடுகிறார். ஒரு நண்பரோடு பேசுகையில் ‘படிக்கவில்லை’ என்று தோன்றியது. இந்த முறை புத்தகக் கண்காட்சியில் ஞாபகமாக வாங்கி இப்போதுதான் படித்தேன். மொத்தமும் புதிதாக இருந்தது. ஆனாலும் முன்பு படித்திருக்கவில்லை என்று நிச்சயமாக சொல்ல முடியாது.

கடைசி பாகத்தின் கடைசிப் பகுதியில் கோபால் சத்யன்குமாரிடம் சொல்கிறான்: “இந்தப் பக்கம் வா சத்யன் குமார். இது ஒரு மரமா இரண்டா, ஆலமரமா அரச மரமா என்று சொல்ல முடியாதபடி போய்விட்டது. நிஜம் பொய் கூட இப்படித்தான் பிரித்து சொல்ல முடியாதபடி போய் விடுகிறது”

கோபால், சினிமா தொழிலில் இருக்கும் எழுத்தாளன். சத்யன் குமார் என்கிற இந்திப் படவுலக சூப்பர் ஸ்டாரின் மொழியில் “மதறாஸி ஸ்கிரிப்ட் ரைட்டர்”. சினிமாவுக்குக் கதை சுருக்கங்கள் எழுதி கதை எழுதுவதென்பதே வரவில்லை என்று நினைப்பவன். தன் தொழில் வாய்ப்புக்காக மனைவியையே பலி கொடுப்பவன் என்கிற பயங்கரமான பழிச் சொல் சொல்லும் அவன் மனைவி ஜம்பகம், குடும்பப் பெரியவர்கள் வற்புறுத்தலால் ஒரு சோதாப் பயலை பள்ளிப் பருவத்திலேயே கல்யாணம் செய்து கொண்டு மாமியார்ப் பேயும், வாழ்க்கைப் பேயும் அறைந்து சிரிப்பையே தொலைத்த செல்லம் காட்டப் படாத மகள் காமாட்சி, “தானும் நடிகனாக வர வேண்டும்” என்று ஆசைப்பட்ட, செல்வ மகனாக இருந்தாலும் பல நாட்கள் வயிறார உணவு கிடைக்காத பதினைந்து வயது மகன் ராஜா, இன்னும் கதைச் சம்பவங்களில் நேரடியாக வராத தாயார், மாமனார், மாமியார் என்கிற குடும்பம். நத்தானியெல் வெஸ்ட், டக்டர் ஜிவாகோ என்று படிக்கும், ஒரே வார்த்தை இரண்டு இடங்களில் வராதவாறு வசனம் எழுதும் அழகும் அகந்தையும் உள்ளவன்.

பிரிவினைக்கு முன்பே பெஷாவரிலிருந்து பம்பாய் வந்த பஞ்சாபி இசுலாமியன் சத்யன் குமார். பெற்றோரையும், உறவினரையும் ஒரேயடியாகப் பிரிந்து பல சம்பந்தமில்லாதவர்களோடு சம்பந்தம் கொண்டு வாழ்பவன். இசை அமைப்பாளர் நௌஷாத் போன்றவர்களின் மேதைமை, பட முதலாளிகளின் வியாபார யுக்திகள், தகவல் உறிஞ்சும் நிருபர்களின் விடா முயற்சிகள், துரத்தல்கள், இவன் கேட்கிறான் என்று எதையும் செய்ய தயாராயிருக்கும் வாய்ப்பு ஆசையில், தேவையிலிருக்கும் பெண்கள், அவர்தம் அன்னையர், முகமோ முகவரியோ இல்லாத பற்பல திரைத் துறை மனிதர்கள் இவர்கள் மத்தியில் கோபால்ஜி (கோபாலை அவன் அப்படித்தான் கூப்பிடுகிறான்.) என்னும் மெஹர் பாபாவை நினைவு படுத்துபவனின் நட்பு என்று அவன் வாழ்க்கையின் ஒரு துண்டம்.

இதற்கிடையே சினிமாவில் கதாநாயகியின் தோழியாக வரும், பத்து வயதிலிருந்து தன் சோற்றுக்கு பிறர் கையை நம்பி வாழாமல், குழந்தை கருவில் உதித்த உடனே வாய்ப்புகளைக் குறைத்துக் கொண்ட துணை நடிகை சியாமளா, அவளை அடித்துக் கொன்றிருக்கக் கூடிய கணவனிடமிருந்து கூட்டி வந்து தன்னுடன் வைத்துக் கொள்ளும் வம்பு பேசும் சவுண்ட் ரிகார்டிஸ்ட் ராமநாதன், வேலைக்கரி, பால்காரர் எல்லோரும் நாவலில் வருகிறார்கள்.

ஒரு நாள் கோபால் வாழ்க்கையில் பல விபரீதங்கள் நடந்து விடுகின்றன. மகன் ராஜா இறந்து விடுகிறான். அவன் இறந்தது கூட சரியாகத் தெரியுமா என்கிற ஸ்திதியில் ஆடைகள் கூட இல்லாமல் இருக்கும், கணவனின் கண்களைப் பிடுங்கப் பாயும் ஜம்பகம் என்று ஆகி விடுகிறது.

இது தெரிந்து அங்கு வரும் சத்யன்குமார் தன் துக்கங்களை எண்ணி கோபாலின் தோளில் சாய்ந்து ஒரு பெண்ணைப் போல் கண்ணீர் உகுக்கிறான். அவனிடம் மட்டும் கோபால், தான் டாக்டரை அழைத்துவர போன சமயம் வீட்டில் ராஜாவும் ஜம்பகமும் மட்டும்தான் இருந்தார்கள். தான் திரும்பி வருகையில் ராஜா செத்துப் போயிருந்தான். அவன் முகத்தில் தலையணை வைத்து அழுத்தப் பட்டிருந்தது, என்று சொல்கிறான்.

சத்யன்குமாரின் அடுத்த மதறாஸ் வருகையின்போது கோபால்ஜி அங்கு இல்லை. அவனைத் தேடுகிறான். பம்பாய்க்கும் மதறாஸுக்குமான தொழில் நிமித்தமான அலைச்சல்களுகிடையே தேடல் தொடர்கிறது. சவுண்ட் ரிகார்டிஸ்ட் ராமநாதன் மற்றும் அவனுடன் வாழும், ராஜா இறந்த அன்று கோபால் வீட்டில் பார்த்த, சியாமளா மூலமும் கோபாலைக் கண்டு பிடிக்க முயற்சிக்கிறான். இந்தப் பழக்கத்தில் சியாமளாவை தன்னோடு வீட்டுக்காரியாக இருக்க முடியுமாவென்று பம்பாய்க்கு அழைத்துச் செல்கிறான். தன்னால் மேலும் ஒளியமுடியாது என்ற நிலையில், உயிர்பயம் தரும் வயிற்று உபாதையுடன் மதறாஸ் வந்து ராமனாதனைக் கூட்டிக் கொண்டு கோபால் இருக்கக் கூடிய இடத்திற்கு விரைகிறான்.

சித்தர். நாட்டின் பிரதம மந்திரியே வந்து போகும் இல்லத்துப் பெண்மணிக்கு வினோதமான கஷ்டங்கள். அமானுஷ்யமான நிகழ்வுகளும், இறந்தவர் தோன்றிப் பேசுவதுமாயிருக்கும் சிதைந்து கொண்டேயிருக்கும் வீட்டில் சித்தர் காலடி வைத்ததிலிருந்து எல்லாம் சரியாகி விட்டது. கும்பகோணத்திலிருந்து திருவாரூர் போகும் வழியில் உள்ள வீர ஆஞ்சனேயர் கோவிலைக் கட்டியவர். கோயில் என்றால் ஒரு சிறு கட்டிடம். அவர் எல்லா இடத்திலும் இருக்கிறார். கோபாலிடம் அவர் எதையும் கேட்பதில்லை. புகையிலையைத் தவிர. அதற்கான காசையும் அவர் கொடுத்து விடுகிறார். நடு நிசியிலும் அவருக்காக புகையிலை தரும் வெற்றிலை பாக்குக் கடை திறந்திருக்கிறது, அதற்காகவே என்பது போல.

ஜம்பகத்தை அவள் பெற்றோர் அழைத்துச் சென்ற சில நாட்களில் கோபாலும் புறப்படுகிறான். ரயிலில் ஜெயச்சந்திரிகா என்ற நடிகை (இவள் தாயார் பால்யத்தில் கோபாலுடன் கொஞ்சம் பழகி இருக்கிறாள்) தன்னுடன் முதல் வகுப்பில் வருமாறும் பின் தன்னுடனேயே இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறாள்.

கும்பகோணத்தில் இறங்கி, மாமனார் வீட்டிற்கோ, மகளைக் கொடுத்திருக்கும் வீட்டுக்கோ அல்லது சித்தர் இருக்குமிடத்திறகோ போகக் கூடிய ஒரு புள்ளியில் கோபால் சித்தர் இடத்திற்கே போகிறான்.

சத்யன் குமார் அங்கு வந்து சேர்கிறான்.

நீங்கள் ‘மானசரோவர்’ இனிமேல்தான் படிக்கப் போகிறீர்கள் என்றால் மேற்கொண்டு இக்கட்டுரையைப் படிக்காதீர்கள். ஏற்கனவே படித்து விட்டீர்கள் என்றால் அல்லது படிக்கப் போவதில்லை என்றால் தயவுசெய்து தொடருங்கள்.

அங்கு தன்னை சித்ரவதை செய்து கொண்டிருக்கும் பாவச்சுமையை கோபாலிடம் இறக்கிவைக்க சத்யன்குமார் முயலுகையில், கோபால் ‘ஒன்றும் சொல்ல வேண்டாம்’ என்கிறான். சித்தரும் அப்படியே சொல்கிறார். மேற்கொண்டு, “என் பளு குறைய நான் இன்று சொல்லியே ஆக வேண்டும்...” என்கிற சத்யன் குமாரிடம், சித்தர், “என்ன சொல்ல வேண்டும்? கோபால் வீட்டிலில்லாத போது நீ அவன் பெண்டாட்டி கையைப் பிடித்திழுத்தாய் அல்லது அவள் உன் கையைப் பிடித்திழுத்தாள். இதை அவன் பெண்ணும் பிள்ளையும் பார்த்து விட்டார்கள். இதை விட வேறன்ன இருக்க முடியும்?” என்கிறார்.

‘அவள் மட்டும் வேண்டுமென்று அப்படிச் செய்தாளா?’ ‘நான் ஆமாம் அல்லது இல்லை என்று சொன்னால் உன்னால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியுமா’ ‘மெஹர் பாபா சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? முடிந்ததா?’ என்கிறார்.

‘சுவாமிஜி’ என்கிறவனிடம் ‘இங்கே யாரும் சாமி கிடையாது, பூதம்தான்’ என்றவர், அருகில் ஓடும் கொஞ்சமே தண்ணீர் இருக்கும் ஆற்றில் சத்யன்குமாரை குளித்துப் போகும்படி சொல் என்று கோபாலிடம் சொல்கிறார். அதுதான் அவன் மானசரோவர் என்றும் சொல்கிறார்.

மானசரோவர் என்றால் என்ன என்கிற சத்யன்குமாருக்கு “ வடக்கே பனி சூழ்ந்த ஹிமாலய மலைகளுக்கு நடுவே ஓர் ஏரி. அங்கே குளித்துவந்தால் மனம் சுத்தமாகி விடும். மனம் சுத்தமானால் யோகம் சித்திக்கும். யோகமெல்லாம் நமக்கெதற்கு? மனம் கொஞ்சமாவது சுத்தமானால் போதாதா? என்கிறான் கோபால்.

மேலும் சத்யன்குமார் “ நான் பாபிஜி பாபிஜி என்று பதறினேன். பாபிஜியை உதறித் தள்ளிவிட்டு ஓடி வந்தேன்” என்கிறான்.

‘உனக்கு ஆற்றில் குளிக்கத் தெரியுமில்லையா? தெரியாமலென்ன? நீதான் எவ்வளவோ சினிமாக்களில் குளித்திருக்கிறாயே’

சத்யன் குமார் சிரிக்கிறான். இத்துடன் நாவல் முடிகிறது.

ஒரு பார்வையில் இந்நாவல் குற்ற உணர்வின் பல்வேறு தளங்களையும், தாக்கங்களையும், மனித மனம் அதனால் உருவாக்கிக் கொள்ளும் சித்ரவதைகளையும் கூறுகிறது. சத்யன்குமார் முப்பத்தெட்டு வயதாகியும் மணம் செய்து கொள்ளாதவன். ஆஸ்பத்ரியில் கிடக்கையிலும் நர்ஸை கட்டி அணைப்பவன், கூட நடிக்கும் நடிகையும் அவள் அன்னையும் நாணம் கொள்ளக் காரணமாய் இருப்பவன். அதன் மூலம் ஆண் பெண் உறவின் பல பரிமாணங்களையும் காண்பவன். அவனுக்கு ஜம்பகமும் இன்னொரு கிளர்ச்சிதரக்கூடிய பெண்தான்.

கோபாலைப் பற்றி ஜம்பகம் எழுப்பும் குற்றசாட்டுகள் நெருப்பில்லாமல் புகையாது குறைந்த பட்சம் பத்து சதவீதமாவது உண்மையாய் இருக்கும் என்று கொள்கையில் அதுவும் சென்னையை விட்டு கும்பகோணம் போகையில் ஜெயசந்திரிகா அன்று இரவு அவனைத் தூங்க விடவில்லை என்கையில் ஒரு சமயம் கோபாலே நினைப்பது போல் அவன்தான் அவன் மகனைக் கொன்று விட்டானோ?

அவன் மறைமுகமாக அவன் குடும்பத்தை சிதைத்து விடுகிற விஷயங்களுக்குத் துணை போனவன்; அவனால் அதுகுறித்து அதிகம் எதுவும் செய்ய முடியது என்றாலும். இறுதியில் ஒருபக்கம் பத்து மைல் போனால் இருக்கும் மனைவியையோ இன்னொரு பக்கம் போனால் இருக்கும் மகளையோ பார்க்கப் போகாமல் (அவர்களும் இவனைப் பார்க்க வரவில்லை) சித்தர் இருக்கும் இடத்தில் தங்கி விடுகிறான். கையலாகாதவன்?

ஜம்பகம் சத்யன்குமார் கையைப் பிடித்து இழுத்தாள் அல்லது சத்யன்குமார் ஜம்பகம் கையைப் பிடித்து இழுத்தான் (அதை குழந்தைகள் பார்த்து விட்டன) என்கிற ஒரு ambiguity வருகிறது. நிஜமும் பொய்யும் கலந்து விடுகிறது. இரண்டுக்கும் முகாந்திரம் இருக்கிறது. முகாந்திரம் இல்லாமலும் காரியங்கள் நடப்பதில்லையா என்ன? பார்த்த ஒரு குழந்தையை சித்த சுவாதீனமில்லாத, கற்பனையிலாவது தொடர்ந்து கணவனால் வஞ்சிக்கப் பட்ட, என்ன நடக்கிறது என்றே தெரியாத, ஆடை இல்லாமல் போவதைக் கூட அறியாத, துணியை நனைத்துக் கொள்கிற, ஆங்காரமாய் அடாத சொற்களில் கணவனை ஏசுகிற ஜம்பகம் குற்ற உணர்வில் கொன்று அதனால் தாங்க முடியாத எல்லையற்ற குற்ற உணர்வில் சித்த சுவாதீனத்தை முற்றிலுமாக இழந்திருக்கலாம்.

குற்றத்தை ஒப்புக் கொண்டு பளுவை இறக்க வரும் சத்யன் குமார், “நான் பாபிஜி பாபிஜி என்று பதறினேன். பாபிஜியை உதறித் தள்ளிவிட்டு ஓடி வந்தேன்” என்று தான் அந்த அளவுக்காவது குற்றமற்றவன் என்று இப்போதும் சொல்லக் காரணம் என்ன?

மகனின் மரணமும், விபரீதமான நிலையில் இருக்கும் மனைவியும் என்று கோபாலைப் பார்க்கும் சத்யன் குமார் மனதில் முதலில் வந்திருக்க வேண்டிய எண்ணமே அந்த சம்பவம்தானே? பின்னர் தன் பெற்றோரிலிருந்து அனைவரையும் நினைத்துப் பார்க்கும் அவன் பிரக்ஞையில் ஜம்பகம் வராதது ஏன்? அது எப்படி சாத்தியம்?


ஜம்பகம் தொட்டாளா சத்யன்குமார் தொட்டானா என்கிற இரண்டையும் தாண்டி மூன்றாவதாக ஒருவேளை ஒன்றுமே நடக்கவில்லையோ? அப்போது ஜம்பகம் ஏன் ஒருநாள் சத்யன்குமார் வந்து சென்றதை கோபாலிடம் சொல்லவில்லை? இரண்டு குறைப் பிரசவங்கள், மேலும் தவழும் முன்பே இறந்த இரண்டு குழந்தைகள். குடித்து கும்மாளம் போடுவதாக அவள் கற்பனை பண்ணும் அல்லது சந்தேகிக்கும் கணவன், சோதாப் பயலுக்கு வாழ்க்கைப் பட்ட மகள் இவற்றாலோ அல்லது இவையன்றியோ சித்தம் கலங்கிய நிலை காரணமா? அல்லது வேண்டுமென்றா?

சரி கோபால்? அதாவது ஒரு வார்த்தையில் இருக்கும் உதாசீனத்தைக் கூட தாங்காது பதில் வார்த்தை பேசுகிறவன் இதைத் தெரிந்து அல்லது யூகித்துக் கொண்ட பிறகு நடந்து கொள்வது விசித்திரமாக இல்லை? சித்தர் ஓரிடத்தில் சொல்வதைப் போல் சம்சாரம் பண்ணி சாகரத்தை எப்படிக் கடக்கப் போகிறவன்? பொறுப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்கிற அறிவுஜீவி?

ஒன்றுமே நடக்காத போது சத்யன்குமார் இவ்வளவு பிராயாசை எடுத்துக் கொண்டு வருவது எதற்கு? அவ்வளவு துன்மார்க்கனா அவன்?

அனுமன் என்னும் பிரம்மச்சாரி கோபால்களுக்கும் சத்யன்குமார்களுக்கும் எதிரில் நிற்கும் ஆதர்சம் போல் தெரிகிறார். அந்த ஆதர்சத்தைத் தேடி கோபால் கொஞ்ச நாட்களாகவே நகர்ந்து கொண்டிருக்கிறான். நாவலின் முதல் பத்தியிலேயே பவுர்ணமிக்கு வீர ஆஞ்சனேயர் கோவிலுக்குப் போவதைப் பற்றி வருகிறது.

கதை மொத்தமுமே கோபால் மற்றும் சத்யன்குமாரால் ‘தன்மை’ (First Person) யில் சொல்லப் படுகிறது. தன்மையில் சொல்லப் படும் கதைகளில் எப்படி ஒரு சில நினைவுகளை, எண்ண ஓட்டங்களை கடைசி வரை வாசகனிடமிருந்து மறைப்பதற்காக தன்னிடமிருந்தும் மறைக்க முடியும்? சத்யன்குமார் ஜம்பகத்தையோ அவள் வீட்டில் நடந்தாகக் கூறப்படும் அசம்பாவிதத்தையோ மிக நெருக்கடியான தருணங்களில் கூட ஏன் நினைக்கவில்லை?

‘தன்மை’ யில் எழுதப் படும் கதைகளில் இந்த சிக்கல் இருக்கிறது. ஜெயமோகனின் “காடு’ நாவலிலும் வருகிறது. அதைப் பிறிதொரு சமயம் பார்ப்போம்.

அசோகமித்திரனின் கூர்மையான பார்வை புற வாழ்வின் சகல நுணுக்கங்களையும் அகத்தின் சகல மடிப்புகளையும் காட்டிக் கொண்டே செல்கிறது. ஒரு வார்த்தையைக் கூட எடுக்க முடியாதபடிக்கு இருக்கும் எளிய செறிவு, இரு வேறு மனிதர்களின் பிரக்ஞையிலிருந்து பீறிடும் தனித் தனி நினைவுகள், உணர்வுகள் மீது முழுமையான கட்டுப்பாடு, ஒழுங்கு, வாழ்வில் எதுவும் எப்பேற்பட்ட அவலமும் நடக்கலாம் என்பதை குரலெழுப்பாமல் உயர்வு நவிற்சி துளியும் இல்லாமல் கூறும் தனித் திறமை இவையெல்லாம் நாவல் ஏற்படுத்தும் பாதிப்பை சிதறடிக்காமல் ஒருமுகப் படுத்துகின்றன.

ஜம்பகம், காமட்சி, சியாமளா, சுந்தரம், அத்தை, ஜெயசந்திரிகா என்ற - மற்றும் தேசப்பிரிவினையின் போது தாங்க முடியாத அவலங்களுக்கு ஆளான, உலகின் எல்லாக் காலங்களிலும் எல்லா பாகங்களிலும் இன்றும் துயரங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் ஆனால் உலகம் மீண்டும் உயிர்த்தெழ காரணமாயிருக்கும் - பெண்கள் பற்றிய கதையாகவும் இது உள்ளது.

மானசரோவர் ஒரு ஆன்மீக நாவல், சினிமா பற்றின நாவல் அல்லது சித்தர் பற்றின நாவல், பாவச் சுமையை முற்றிலும் கழுவ முயன்று கொண்டேயிருக்கும் இந்திய மனம் பற்றிய நாவல், நகர்வாழ் மத்தியதர, கீழ் மத்தியதர மனிதர்களையும் மேல்தட்டு மக்களோடு அவர்களுக்கு நேரும் அனுபவங்களைப் பற்றியுமான நாவல் - இன்னும் என்னவெல்லாமோவாக அறியப்படலாம். எனக்கு இது ஒரு உளவியல் த்ரில்லர் என்றும் பட்டது. இந்த த்ரில்லரில் முடிவில் எந்தப் புதிரும் அவிழ்க்கப் படவில்லை. துன்மார்க்கத்தைப் (wickedness) பற்றிய நாவல் என்றும் தோன்றுகிறது. (டாக்டர் ஜிவாகோ படத்தில் ராட் ஸ்டீகரின் பாத்திரம் சாத்தானை நினைவுறுத்தும்)

இந்நூலைப் பற்றி இன்னும் விரிவாக எழுதலாம்தான். இவ்வளவு சாத்தியங்களை எழுப்பும் இவ்வளவு ஆழங்களுக்குச் சென்றிருக்கும் புத்தகத்துக்கு இது கொஞ்சமும் போதாது. எனினும் படித்த மாத்திரத்தில் தோன்றியவை இவை.

மொத்ததில் மானசரோவர் முக்கியமாக எதைப் பற்றிய நாவல்? ‘நிஜம் பொய் கூட இப்படித்தான் பிரித்து சொல்லமுடியாதபடி போய் விடுகிறது’ என்பதுதான் இதன் ரசமாக எனக்குத் தென்படுகிறது.