FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Wednesday, June 27, 2012

வார்த்தையும், செம்மையும்


வார்த்தையும், செம்மையும்

வ.ஸ்ரீநிவாசன் | பிரசுரம் :  சொல்வனம் : இதழ் 72 | 20-06-2012

“The sublime is rare in any vocation or art. And Pavlova was one of those rare artists who had it. She never failed to affect me profoundly…..As she danced, every move was the center of gravity. The moment she made her entrance no matter how gay or winsome she was, I wanted to weep, for she personified the tragedy of perfection” - Charles Chaplin, My Autobiography (1964)
(எந்த வேலையிலும், கலையிலும் உந்நதம் அரிதானதாகவே இருக்கிறது. அவ்வுந்நதத்தைக் கொண்டிருந்த அத்தகு அரிதான கலைஞர்களில் பாவ்லோவா ஒருவர். என்னுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்த அவர் தவறியதே இல்லை…. அவர் நடனமாடுகையில் ஒவ்வொரு அசைவும் புவி ஈர்ப்பு மையம் குலையாத சமநிலை. ஆட்டத்தில் நுழையும் கணத்தில் அவர் எத்தனைதான் உல்லாசமாக, இனிமையாக, கவருபவராக இருந்தாலும் நான் அழவே விரும்புவேன், ஏனெனில் அவர் பூரணத்துவத்துடைய துக்கத்தின் உருவகமாக இருப்பார். - சார்லி சாப்ளின், என் சரிதை (1964)
சார்லி சாப்ளினின் பிறந்த நாளன்று இதைப் படித்தேன். “I wanted to weep, for she personified the tragedy of perfection” என்கிற வாக்யம் இதை மறக்க முடியாததாக ஆக்கி விட்டது. அதே போல் முதலில் வரும் “The sublime is rare in any vocation or art” என்கிற வார்த்தைகளும்.
நா.பார்த்தசாரதியின் மிகப் பிரபலமான “பொன் விலங்கு” தொடர் கதையாக கல்கியில் வரும்போது ஒவ்வொரு வாரமும் அக்கதையில் வரும் சில சொற்றொடர்களை பொன்மொழியாகக் கட்டம் கட்டிப் போடுவார்கள். சத்திய தாகம் பற்றிச் சொன்னது பிடித்திருந்தது.
அது இலட்சிய வாத காலம். இலட்சியத்தின் சடத்தன்மைக்கு ஆன்ம பலம் உயிரூட்டிய மாயம்தான் காந்தியடிகள் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு ‘சப்லைம்’. ஓர் ஆச்சர்யம். ஒரு அசாத்யம், சாத்யமான விந்தை. மாய வாழ்க்கையின் தொப்பியிலிருந்து வெளிவந்த உயிருள்ள உண்மைப் புறா.
சாப்ளினும் காந்தியும் சந்தித்து இருக்கிறார்கள். டால்ஸ்டாயும் காந்தியும் தொடர்பில் இருந்திருக்கிறார்கள்.
இலட்சியம் மனதின் பொருளாக இருக்கையில் கானல் நீர். சில சமயம் பொழுதுபோக்கு மற்றும் வணிக முதலீடு. அதைச் சொல்லி மக்களைத் திரட்டலாம். நினைத்த இலாபத்தை அடைந்த பிறகு உதறி விடலாம். சில நேரம் ரோஜாவை மட்டும் கற்பனை செய்து முட்களை மறந்த அல்லது மறைத்த கதை. அந்த இலட்சியம் நிறைவேறினாலும் அதனால் பெருத்த துயரே மிஞ்சும். கண்கூடாக இத்தகைய இயக்கங்களை நாம் சென்ற நூற்றாண்டில் பார்த்திருக்கிறோம் இல்லையா? இலட்சியம் வரட்டுத் தியரியாக, மனிதரைப் பிரிப்பதாக, ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்துவதாக இல்லாமல் இதயத்தின் வெளிப்பாடாக இருக்கையில் உலகும், வாழ்வும் அதற்கிசைந்து போகின்றன. அது நிகழ காத்து நின்று சகாயம் செய்கின்றன.
இலட்சியம் அதனளவில் ஓர் அபாயமான, பொய். எட்ட இருப்பது. நாம் உடனடியாகக் காரியம் செய்யும் அவசியத்தை தள்ளிப் போடும் சால்ஜாப்பு. அருவருப்பானது கூட. ஆனால் அன்பின் பாற்பட்ட ஆதர்சம் நிகழ்கையில் அது உயிருள்ள, துடிப்புள்ளதான (vibrant) நேர்மறை நனவாகிறது.
இப்போதைய காலம், சட்டம் ஒழுங்கை யார் கடை பிடிக்கப் பார்க்கிறார்களோ அவர்கள் முட்டாள்கள் எனக் கருதப்படும் காலம். போக்குவரத்து சிகப்பு விளக்கில் காரை நிறுத்தி பச்சைக்காகக் காத்திருந்த இளைஞரை கெட்ட வார்த்தையால் திட்டிக் கடந்து போன காரோட்டியை சாலிகிராமத்தில் பார்த்திருக்கிறேன். இன்றைய இந்தியா இதுதான் என்பதற்கான ‘பர்ஃபெக்ட்’டான குறியீடு அது.
‘பர்ஃபெக்ஷனு’க்கு தமிழ் வார்த்தையைத் தேடியபோது பூரணத்துவம், பூரணம், உத்தமம், முழுமை ஆகியன தோன்றின. ஒரு தமிழறிஞர் ‘செந்தண்மை’ என்கிற வார்த்தையைப் பரிந்துரைத்திருந்தார். அதுவும் எனக்குப் பிடித்தது. “அந்தணர் என்போர் அறவோர் மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்” என்கிற குறள் நினைவுக்கு வந்தது.
செந்தண்மையில் உள்ள “தண்’ என்கிற வார்த்தை குளுமையைக் குறிக்கிறது. எனவே தண்ணீர் என்றால் குளிர்ந்த நீர்தான். சுடு தண்ணீர், பச்சைத் தண்ணீர், குளிர்ந்த தண்ணீர் போன்ற வார்த்தைகள் மிகவும் புழக்கத்தில் உள்ளன.
இந்த ‘செம்மை’ எனும் சொல்லே பர்ஃபெக்ஷன் என்கிற வார்த்தைக்கு ஏற்ற தமிழ்ச் சொல் என்று தோன்றுகிறது. வறுமையில் செம்மை. செந்தமிழ். செம்மையான தமிழ். முழுமையான, குறையற்ற, பிழையற்ற தமிழ். பாரதி வெகு சரியாக “செந்தமிழை”ப் புகழ்கிறான். தொலைக் காட்சி, பண்பலைத் தமி’லை’ அல்ல. இன்னும் ஒருபடி மேலே போய் “நற்றமிழரை” வாழ்த்துகிறான். ‘ரவுடி’த் தமிழரை அல்ல. ‘செம்மை’ சிகப்பைக் குறிப்பது அல்ல. செம்மை பூரணத்துவத்தைக் குறிக்கிறது. இன்றைய ‘செம கட்டை’ வரையிலும். எனவே செம்மையே போதும்.
‘வறுமையின் நிறம் சிகப்பு’ என்றார் கே. பாலசந்தர். ஆனால் ரஷ்யாவின் ஸ்டாலினும், சீனாவின்
மாவோவும் கொலைகளின் நிறம் மற்றும் கொடுமையின் நிறம் சிகப்பு என்பதையும் சரித்திரமாக்கி விட்டார்கள். செம்மை நிறங்களுக்கு அப்பாற்பட்டது. இந்தியாவில் சிகப்பு, காவி என்பனவெல்லாம் ஒவ்வொரு கொள்கைகளின் குறியீடுகள். எல்லா குறியீடுகளையும் (திருநீறு, நாமம்) எதிர்த்த இயக்கம் கூட கறுப்புக் குறியீட்டுக்குள் சிக்கி தானும் இம்மனித சுபாவத்திற்கு விதிவிலக்கல்ல என்பதை பட்டவர்த்தனமாக்கியது.
இந்த செம்மைத் தன்மை வரமா சாபமா? தி ட்ராஜிடி ஆஃப் பர்ஃபெக்ஷன் என்கிறாரே சாப்ளின். அது அவர் பார்வை. ஹெவன் ஈஸ் பீயிங் பர்ஃபெக்ட் என்கிறார் ரிச்சர்ட் பாஃக். அது அவர் பார்வை. அந்தச் சூழ் நிலை.
ஒரு சரியான சொல்லை சொல்வது எழுதுவது எண்ணுவது எல்லாமே செம்மைத் தன்மைதான். அவ்வார்த்தை கிடைத்ததும் வரும் சுகம் அமைதியானது. அசோகமித்திரன் சொல்லியது போல் பள்ளியில் தமிழ் வகுப்பில் வியாசம் என்று ஒரு பயிற்சி இருந்தது. அவ்வகுப்புகள் மிக இனிமையானவை. நம் கற்பனையின் சுவையை பள்ளி நேரத்திலேயே சுதந்திரமாக அனுபவிக்கலாம். அப்போதே தமிழ் மீதான
காதல் செழித்துப் படர ஆரம்பித்தது. உணருவது எல்லாவற்றையும் துல்லியமாகச் சொல்ல முடிகிற ஒரு மொழி நம் உதவிக்கு இருக்கிறது. அதிலுள்ள இசைவும், தெளிவும் ஆனந்தம். ஆங்கிலம் பயின்றதும் அதே போல் ஆனந்தங்கள் அதிலும் நிகழ ஆரம்பித்தன.
சரியான சொல் ஒரு தொடர் வேட்கையானது. இதில் பிரக்ஞை (சொல்வனம்) ரவி சங்கர் மிகவும் கவனம் செலுத்துபவர். உச்சரிப்பும் இவர் கவனம் பெறும். எம்மொழியானாலும் எழுதப்படுவது சரியான சொல்லா, எழுதப்படும் உச்சரிப்பு சரியான உச்சரிப்பா என்பதில் இவர் காட்டும் அக்கறை பிறருக்கும், தலைமுறைகளுக்கும் மிகவும் பயனுள்ளது. இவ்வேட்கை இருந்தால் வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்கலாம்.
ரவிசங்கரிடமிருந்துதான் நான் ‘முதலியம்’ என்கிற வார்த்தையைக் கற்றுக் கொண்டேன். ‘கேபிடலிஸம்’ முதலாளித்துவம் என எப்படி மொழிபெயர்ப்பானது? எத்தனை பத்தாண்டுகளாக உபயோகத்தில் இருக்கிறது. ‘கேபிடல் என்றால் முதல். கேபிடலிஸம் முதலியம். எவ்வளவு சரியாக இருக்கிறது. இதே போல் ஒளிப்படம் என்கிற சொல்லையும் அவரிடமிருந்துதான் தெரிந்துகொண்டேன். ஃபோட்டோ என்பதற்கு தமிழில் சாதாரணமாக புகைப்படம் என்றே சொல்கிறோம். ‘ஃபோட்டான்’ என்பதே ‘ஒளித் துகள் என்கையில் ‘ஃபோட்டோவை ஒளிப்படம் என்பது எத்தனை சரியாய் இருக்கிறது. சென்ற முறை ஓட்டுநர் உரிமம் வாங்கச் சென்ற இடத்தில் ஃபோட்டோ எடுக்கும் இடத்தில் “நிழற்படம்” என்று குறிப்பிட்டிருந்தார்கள். இதன் அறிவியல் தெரிந்த ஒருவர் இதில் எது சரி என்று கேட்டபோது ஒளிப்படமே சரி என்கிறார்.
‘ஹோட்டல்’ என்பதை சிவாஜி மூன்றாம்தரப் படங்களில் கூட ‘ஹொடேல்’ என்பார். பாரதி மணி சார் ‘ஸ்வீட்’ எனபதை ‘ஸூட்’ என்றால் சூட் ஃபைல் பண்ணி விடுவார்.
பிரசுரம் என்கிற வார்த்தைக்குப் பதிலாக சிலர் பதிப்பு என்கிற வார்த்தையை உபயோகிக்கிறார்கள். இந்தக் கதையை பிரசுரிக்கலாம் என்பதும் பதிப்பிக்கலாம் என்பதும் ஒரே பொருளில் பயன் படுத்தப் படுகின்றன. பதிப்பு என்கிற வார்த்தை பலரால் ப்ரின்ட் என்கிற ஆங்கில வார்த்தைக்கு மொழிபெயர்ப்பாக
உபயோக்கிக்கப் பட்டு வருவதால் பிரசுரம் என்றால் வெளியிடுவது என்றும் பதிப்பு என்றால் அச்சிடுவது என்றும் தோன்றுகின்றது.
Thread என்கிற இணைய வார்த்தை ‘திரி’ என்று குழுமங்களில் பெயர்க்கப் படுகிறது. திரி என்றதுமே வெடி நினைவு வருகிறது, தீபத்தின் திரியை விட. அதனால் இழை என்கிற சொல் இன்னும் பொருத்தமானதாகப் படுகிறது.
அதே போல் புனைவு, அ-புனைவு. ஃபிக்ஷனுக்கும் நான் ஃபிக்ஷனுக்கும். இவற்றைவிட ‘கற்பனை’ மற்றும் ‘கட்டுரை’ உவப்பானவையாக இருகின்றன. கட்டுரையிலும் ஓரளவு கற்பனைக்கு இடம் உண்டு. விஷுவலைஸேஷன். அ-புனைவு அந்தப் பொருளைத் தருவதில்லை.
படைப்பு என்பது பெரிய வார்த்தை. எழுத்து என்பதுதான் சரியானது. இது அடிப்படையில் re-creation தான், என்றும் creation இல்லை. வேறொரு கட்டுரையில் இது பற்றி கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.
படைப்பாளி! அப்பாடி எவ்வளவு பெரிய வார்த்தை. நாம் அதிக பட்சம் துணையிருக்கலாம், கவனத்தைக் குவிக்கலாம், ஒளி பாய்ச்சலாம் அவ்வளவுதான். ஒரு விவசாயி எழுதுகிறவர்களை விட சிறந்த படைப்பாளி. வில்லியம் ஃபாக்னர் அதனால்தான் தன்னை ஓர் எழுத்தாளர் என்பதைவிட தொழில் முறை விவசாயி என்று சொல்லிக் கொள்வதையே விரும்பினார் போலும்.

இதேபோல் திராவிட இயக்கம் என்கிற வார்த்தை. ஜவஹர்லால் நேரு சொன்னது போல் பாக்கி மூன்று மாநிலங்களிலும் ஒரு முணுமுணுப்பு கூட இது குறித்து இல்லாத போது இது திராவிட என்கிற அடை மொழிக்குச் சற்றும் பொருந்தாது. தமிழ் இயக்கம் என்றால் அது தொல்காப்பியருக்கும் முன்பிருந்தல்லவா ஆரம்பிக்கிறது? தமிழர் இயக்கம் என்றால் என்றால் அரசர்கள், மாமன்னர்கள், சேர சோழ பாண்டியர்கள், புலவர்கள், கவிஞர்கள், எண்ணிலடங்கா சுதந்திரப் போராட்டத் தியாகிகள், தமிழ் அறிஞர்கள், இலக்கிய வாதிகள், சமூக சேவகர்கள், ஸ்தபதிகள், வணிகர்கள், ஆசான்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சித்தர்கள், கலைஞர்கள், தர்மத்தையும், நியாயத்தையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றி வரும் கோடிக்கணக்கான சாமன்யர்கள் முதலிய அனைவரையும் கொண்டதல்லவா அவ்வியக்கம்? சமூக, தத்துவ, பொருளாதார, ராஜரீக, அரசியல், கலாச்சார, பண்பாட்டு, கலை, இலக்கிய, ஆன்மீக ஜீவ நதிகள் சேர்ந்த அநாதியான கடலல்லவா அவ்வியக்கம்? நாம் கேபிடலிஸத்தை முதலாளித்துவம் என்பது போல் திராவிட இயக்கம் என்பதையும் ஒரு நோக்கத்தோடு, சரியான பார்வையின்றி சின்னஞ்சிறியதாய் சுருக்கி விட்டோம். இது ஆயிரக் கணக்கான ஆண்டுகளை உள்ளடக்கிய தமிழக அரசியல் இயக்கத்தில் ஒரு கால கட்டத்தில் ஒரு பிரிவினரின் இயக்கம். இதை கழக அரசியல் இயக்கம் என்று சொல்லலாம். ”திராவிட’ என்கிற சொல் வேண்டுமென்றால் திராவிடர் கழக அரசியல் இயக்கம் என்று சொல்லலாம்.
‘கல்சர்’ என்பதற்கும் ‘கலாச்சாரம்’ என்பதற்கும் தமிழ்ச் சொல் ‘பண்பாடு’ என்பதை சரியல்ல என்று ஜெயமோகன் சொல்லியிருக்கிறார். இது டி.கே.சி. போன்ற மாபெரும் தமிழறிஞர் புழக்கத்துக்குக் கொண்டு வந்த வார்த்தை எனினும் பண்பாடு எப்போதுமே ஒரு நேர்மறையான சொல்லாகவும், கன் கல்சர் அல்லது துப்பாக்கிக் கலாசாரம் என்பன போன்ற எதிர்மறை இடங்களில் பண்பாடு என்கிற வார்த்தை சரியாக வருவதில்லை என்பதையும் அவர் எடுத்துக் காட்டியிருப்பார்.
‘பாப் ம்யூசிக்’ என்பதை பரப்பிசை என்று மொழிபெயர்த்து உலவ விட்டிருக்கிறார்கள். அடிப்படையிலேயே தவறு என்று தெரிகிறது. (இதை முதலில் ஏற்ற ஜெயமோகன் பின் மாற்றிக் கொண்டார் என்று நினைக்கிறேன்) பரப்புதலுக்கும் பாபுலர் என்பதற்கும் என்ன சம்பந்தம். பாபுலர் என்பது பீபிள் என்பதிலிருந்து வருகிறது. இது ஜனங்கள், மக்கள் சம்பந்தப் பட்டது. அதே சமயம் மக்களிசையும் இல்லை. எனக்கு சம்ஸ்க்ருதம் உட்பட பிற மொழிகளின் மீது மேல் வெறுப்பு ஏதும் இல்லாமையால் ஜனரஞ்சகம் எனக்கு மனரஞ்சகமாக இருக்கிறது. அதற்காக நாள், மலர், காசு, பிறப்பு போன்ற நற்றமிழ்ச் சொற்களுக்கு அடாவடியாக வலிந்து டே. புஷ்பம், கேஷ், ஜனனம் என்கையில் துன்பமாக இருக்கிறது.
ஸ்வாமிநாதன், சுவாமிநாதன், சாமிநாதன். இவை வகுப்புகளையும் சாதி அடுக்குகளையும், வர்க்கத்தையும் குறிப்பவை என்று ஓர் எண்ணம் பரவலாக இருக்கிறது. உ.வெ.சாமிநாதையர், வெங்கட் சாமிநாதன், ந.முத்துசாமி, சுந்தர ராமசாமி, ஆர்க்காட் வீராஸ்வாமி இதைப் பொய்ப்பிக்கிறார்கள், ஒருவேளை இக்காலத்துக்கு மெய்ப்பிக்கிறார்கள். வீராஸ்வாமிக்கு பகுத்தறிவு எண் ஜோதிடம் காரணமோ என்னவோ? ஜெயலலிதாஆ சசிகலாஆ வுக்கும் அஃதே துணை.
சரியான சொல் ஒரு பெரு மகிழ்ச்சி. Survival of the fittest என்றுதான் டார்வின் தியரியைச் சொல்கிறோம். ஃபிட்டஸ்ட் என்பதுதான் சரியான வார்த்தை. ஸ்ட்ராங்கெஸ்ட் டோ, பிக்கெஸ்ட்டோ (biggest) இல்லை. ஜெயகாந்தன் ஒரு சமயம் “சுகமாய் இருப்பதுதான் ஞானம்” என்றார். கூட இருந்தவர் “ஆமாம் ஜே.கே. நல்லவனாய் இருப்பதுதான் ஞானம்” என்றார். “நான் சொன்னது சுகமாய் இருப்பது” என்று ஜெயகாந்தன் அதைச் சரி செய்தார். சுகமாய் இருப்பது சாதாரண விஷயம் இல்லை. மனம் அடங்கிய வேளையில்தான் ஒருவர் சுகமாய் இருக்க முடியும். கடன்கள் முடிந்து, பணிகள் ஓய்ந்து, எண்ண அலைச்சல்கள் இல்லாதபோதுதான் உண்மைச் சுகம். உண்மையிலேயே ‘சும்மா இருப்பது மட்டும்தான் சுகம்’. சும்மா இருக்கப் பார்க்கையில் தெரியும். சும்மா இருக்க முடியாது என்பது. பாக்கி கொஞ்ச நேர சந்தோஷங்கள். காலி ஆனதும் தலை வலிக்கும்.
சொல்லின்பம் மந்திரம் போல் வேண்டுமென்றான் மகாகவி பாரதி. மந்திரம் என்ற சொல்லின் பொருளை ஓர் உரையாடலில் ஜே. கிருஷ்ணமூர்த்தி இப்படி விளக்கியிருப்பார். : ‘மன்’ என்றால் எதுவாகவுமே ஆகாதிருப்பதை தியானித்தல். (meditate on not becoming) ‘த்ரா’ சுய லாபத்தை அடியோடு விட்டுவிடுதல். (abandon self-interest altogether).
முன் காலத்திலெல்லாம் பத்திரம் போன்ற எழுத்து சான்றுகள் கிடையாது. வாய்
வார்த்தையே அப்படிப் பேணி காப்பாற்றப் பட்டது என்று படிக்கிறோம். அது
எத்தனை தூரம் உண்மை என்பது தெரியாது. ஆனால் அரசன் ஒருவனைத் தவிர
சொத்துரிமை இல்லாத அனைத்து குடிகளும் வாய் வார்த்தையாலேயே எல்லாவற்றையும்
செய்திருக்கக் கூடும். அதை பெரும்பாலானவர்கள் உயிர் போல்
காப்பாற்றியிருக்கவும் கூடும். வெகு சிலர் ஏமாற்றியிருக்கவும் கூடும். ஜானகிராமனின் ஒரு கதையில் கொடுத்த கடனை முதல் நாள் இரவு திருப்பி வாங்கிக்கொண்டு விட்டு பத்திரத்தை மறுநாள் காலை தராமல் ‘எங்கே பணம் கொடுத்தே? கனவு ஏதவது கண்டாயா” என்று ஒரு விதவையின் சகோதரனை
ஏமாற்றுபவரும், அவர் பாவமும் களையட்டும் என்று கங்கையில் முழுக்குப்
போடும் அவ்விதவையும், அச்சகோதரனும், வருவார்கள். ஜானகிராமன் எழுத்து
உரத்துப் பேசாத தர்மத்தின் குரல்.
ஒரு வார்த்தை செய்திருக்கும் பூகம்பங்களை நாம் புராணத்தில் படிக்கிறோம்.
ஒரு வார்த்தையைச் சேர்த்து துரோணரை வீழ்த்துகிறான் தருமன். அவன் தேரும்
தரைக்கு வீழ்கிறது. வரம் வேண்டும் பக்தனின் ஒரு வார்த்தையைத் திரித்து
அருள் மிகு கடவுளர் (!)அவனை வருடத்தில் ஆறு மாத காலம் உறக்கத்தில்
ஆழ்த்துகிறார். கும்பகர்ணன். தசரதனின் வார்த்தையை அவனே விரும்பாத போதும்
சிரமேற்கொண்டு காப்பாற்ற கானகம் செல்கிறான் இராமன்.
ஒரு நோக்கில் செம்மையான வார்த்தை முடிவான முக்கியமான விஷயம் இல்லை. கனிவான செயல்களுக்கும், கனிந்த இதயத்திலிருந்து எழும் செயல்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறதல்லவா? கை கூப்புவது, புன்னகைப்பது, இன்சொல் பேசுவது, மரியாதை காட்டுவது எல்லோருக்கும் பழக்கத்தால் வந்துவிடும். ஒப்பனை நேயம் நமக்குத் தெரியாததா என்ன? ஆனால் நேயத்தில் ஆழ்ந்த இதயம் கலையின் உந்நதத்தைப் போல் அரிதான விஷயம். அது செய்வதெல்லாம், சொல்வதெல்லாம் சரியே. இதே மாதிரி பயிற்சியால் வரும் செம்மையான வார்த்தையை காட்டிலும் செம்மையின் ஊற்றாக, மூலமாக, அமைதியாக இருக்கிற புனித சுரபி அதி முக்யமானது.
நான் ஒரு சினிமாக் கதையைப் படித்தேன். பெயர் நினைவில்லை. ஓர் இராணுவ அதிகாரியை தண்டனைக்குள்ளாக்க ஒரு விலைமாதுவை பொய் சாட்சியாக ஏற்பாடு செய்கிறார்கள். அந்த இராணுவ அதிகாரி தன் வழக்கமான வாடிக்கையாளர்தான் என்று அவள் சொல்ல வேண்டும். அவள் ‘நான் எதற்குச் சொல்லவேண்டும்? அவர் என் வாடிக்கையாளர் இல்லையே” என்கிறாள். அவளுக்கு அது புரியவேயில்லை. எப்படிச் சொல்வது எப்படிச் சொல்வது என்றபடியே இருக்கிறாள். துன்புறுத்துதல்களும் அவளை மாற்றுவதில்லை. எதற்காக பொய் சொல்லவேண்டும் என்பதுதான் அவள் நிலை. அது லட்சியமெல்லாம் இல்லை. அவளுக்கு அது புரியவேயில்லை. இறுதியில் உயிரையும் விடுகிறாள்.
கவர்னர் ஜெனரல் ராஜாஜியை அவராது நெடு நாளைய நண்பர் பெரியார் ஒரு இரயில்
நிலையத்தில் ரயில் கம்பார்ட்மென்டில் சந்திக்கிறார். அச்சந்திப்புக்குப் பிறகு தன்னை விட 46 வயது இளைய மணியம்மையை மணம் செய்து கொள்கிறார். இயக்கம் உடைகிறது. காலம் பூர இந்த இழிவிற்கும், பிளவிற்கும் ராஜாஜிதான் காரணம் என்று தூற்றுகிறார்கள். 1949ல் இது நடக்கிறது. 1972ல் ராஜாஜியும், 1973ல் பெரியாரும் காலமாகிறார்கள். இரு தலைவர்களின் மறைவுக்குப் பின் உண்மை நிலை திராவிடர் கழகம் வெளியிட்ட 21.2.1949ல் ராஜாஜி பெரியாருக்கு எழுதிய கடிதம் மூலமாக வெளியாகிறது. அதில் ராஜாஜி எழுதியுள்ள வரிகள் : “தங்களுடைய வயதையும், நான் தங்கள்பால் வைத்திருக்கும் அன்பையும் கருதி ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த வயதில் விவாக எண்ணம் வேண்டாம் என்பது என் அபிப்பிராயம்”. தன் நண்பரின் பிரச்னைக்கு தான் சொன்ன தீர்வு பற்றிய தகவல் எங்கள் இருவருக்கு மட்டுமே ஆனது. பிறர் பார்வைக்கல்ல. உலகம் எத்தனை அபாண்டமாகத் தூற்றியபோதும் இந்த மற்றொருவரின் தனிப்பட்ட விஷயம் பகிரங்கப்படுத்தப்பட மாட்டது என்பதுதான் சொல்லப் படாத செம்மையின் புனிதம். (திரு சுப்பு அவர்கள் துக்ளக் பத்ரிகையில் எழுதி வரும் ‘திராவிட மாயை’ தொடரில் இதைக் குறிப்பிடுகிறார். திரு. பழ. கருப்பையா அவர்களும் அவர் எழுதிய தொடரில் விவரமாக இது பற்றி எழுதியிருக்கிறார்)
இந்தப் புனிதம் சத்யஜித் ராயின் பதேர் பாஞ்சாலியில் சோகக் கடலிடையில் மலரும். இறந்து போன அக்கா ஒரு செல்வந்தர் வீட்டிலிருந்து (யாருமறியாது ஆனால் சந்தேகத்துக்கு இடமாகி) எடுத்து வந்த ராக்கொடி பரணில் அகப்படுகையில் அதை யாரிடமும் சொல்லாமல் ஒரு குட்டையில் விட்டெறிந்து விடுவான் சிறுவன் அப்பு. ஒரு வர்த்தைப் பேசப் பட மாட்டாது. அவனுக்கும் அவன் அக்காவுக்குமான உறவு எனபதையும் மீறி ஓர் உயிர் இன்னொன்றுக்கு செய்யும் அன்பு. பதேர் பாஞ்சாலியின் ஆன்மா இந்தக் காட்சி என்று நான் நினைக்கிறேன்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு முறை ஒருவர் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி விட்டு மறந்து விடுகிறார். இரவு நினைவுக்கு வந்ததும் எழுந்து அவர் வீடுவரை சென்று வாசற்படிக்கு அப்புறம் உட்புறமாக அடியெடுத்து வைத்து விட்டு திரும்புகிறார் ( நண்பர் திரு. மோதி ராஜகோபால் சொன்ன கதை)
கோவையில் நண்பர்களோடு பேசுகையில் வளர்ந்த மேலை நாடு ஒன்று பற்றி ஒருவர்
சொன்னார் “அங்கு சிகப்பு விளக்கு சாலையில் எரிகையில் கண்ணுக்கெட்டிய
தூரத்துக்கு யாருமே தென் படவில்லை என்றாலும் வாகன ஓட்டிகள் வண்டியை
நிறுத்திவிட்டு பச்சை விளக்கு வந்ததும் தான் போவார்களாம், எவ்வளவு
முட்டாள் தனம்.” முட்டாள்தனமா இல்லையா என்பதை முடிவு செய்யும் உரிமையை
படிக்கும் உங்களுக்கே அளிக்கிறேன்.
சொல் ஒரு தெரிதொடர்புக் கருவி. கம்யூனிகேஷனை தொடர்பு என்கிறார்கள்.
கான்டாக்ட் என்பதற்கும் அதுவே (இன்னமும்) சரியாக இருக்கிறது. தெரியப்
படுத்துதல் என்னும் சொல் இன்ஃபார்ம் என்பதற்கும் சரியாக இருக்கிறது. ஏன் ‘தெரிதொடர்பு’
என்று சொல்லக் கூடாது? சொல் சரியாக இருக்க இருக்க தெரிதொடர்பு சரியாக
ஆகும்.
சொல் வெறும் தோற்றம்தான். குறியீடுதான். உள்ளிருந்து பெருகும் ஊற்று
செம்மை எனின், கருவி தானே அமையும். ‘உள்ளத்தில் உண்மை ஓளி உண்டாயின்’
என்று பாரதி இதைத்தான் சொல்கிறான்.
“கற்பெனப்படுவது சொல் திறம்பாமை” யும் இதுதான். கற்பு என்பது
செந்தில் ஒரு படத்தில் வந்து சொல்வதைப் போல் “ரப்பர் வைத்து (அல்லது
வைக்காமல்) அழிப்பது” போன்ற வஸ்துவாக கிட்டத்தட்ட hymen னுக்கு இணையான
தமிழ்ச் சொல்லாக இருக்கிறது. ஏதோ ஒரு குடத்து நீரில் ஒரு குவளை எடுத்தால்
அது மட்டுப் படுவது போன்றும் ஒரு சித்திரம்.
மனம் தான் தொட்ட முழுமை அனைத்தையும் மூளியாக்கிவிட்டு பூரணத்துக்கு
பொய்யாய் ஏங்கும் விசித்திர மாயை. அது அமைதியாகி இதயம் மூலம் வாழ்வு
நேரிடுகையில் பூரணத்துவம் அங்கே எதேச்சையாய் நிலவும். “As you live
deeper in the heart the mirror gets clearer and cleaner” - ரூமி.
முழுமையென்னும் கரைகள் அற்ற கடலில் முகர்வதும், நுகர்வதும் அதைக் குறைவு
செய்வதே இல்லை.
“அங்கிருப்பதும் பூரணம்; இங்கிருப்பதும் பூரணம். பூரணத்திலிருந்து பூரணம் உண்டாகி யுள்ளது. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்த பின்பும் மிஞ்சி நிற்பதும் பூரணமே’ - ஈசோபநிடதம். முதல் ஸ்லோகம்.
ஆக இந்த செம்மை, பூரணத்துவம் ஒரு இலட்சியம் அல்ல. இலட்சியமாக இருக்கலாம்.
ஆனால் இது இவ்வுலகில் காலூன்றி இருப்பது. இதன் ஊற்று இவ்வாழ்வின்,
சுழலும் இப்பூமியின், இப்பிரபஞ்சத் துளியின் சிருஷ்டியின் தூய்மை.

No comments: