FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Friday, November 16, 2012

சரஸ்வதி வந்தனம்

சரஸ்வதி வந்தனம்
Photo: சரஸ்வதி வந்தனம்
 
தன்னைக் கற்ற லன்றிக் கல்வி 
பின்னை ஒன்றுண்டோ வேறு - ஞானத் 
தாமரையி லெழுந்தருளும் தாயே ! சரஸ்வதி ! 
மாமதுரி ! தன்னைக் கற்றுணர எமக்கருள்வாய்.
 
அன்பெழி லுண்மையுருவா யிலங்கும் 
உன்னில் எமைக் கண்டு ஒன்றின்றி வேறு 
ஒன்றென்றும் இல்லை என உள் உணர்ந்து 
நின்றிருக்க நீயருள்வாய்.
 
அருள்கின்ற நீயும் 
திரள்கின்ற அருளும் 
பெறுகின்ற யாமும் வெவ்வேறா? 
பொருளின் பொருள் பொருளே !
 
நெற்றிக்கண் பரமனும் சக்தியும், 
நெடுமாலுமி லக்குமியும் போல் 
கலைமகளே நான்முகன். 
கற்றலே சிருஷ்டி!
 தன்னைக் கற்ற லன்றிக் கல்வி 
 பின்னை ஒன்றுண்டோ வேறு - ஞானத்                                     
 தாமரையி லெழுந்தருளும் தாயே ! சரஸ்வதி ! 
 மாமதுரி ! தன்னைக் கற்றுணர எமக்கருள்வாய்.

அன்பெழி லுண்மையுருவா யிலங்கும் 
உன்னில் எமைக் கண்டு ஒன்றின்றி வேறு 
ஒன்றென்றும் இல்லை என உள் உணர்ந்து 
நின்றிருக்க நீயருள்வாய்.

அருள்கின்ற நீயும் 
திரள்கின்ற அருளும் 
பெறுகின்ற யாமும் வெவ்வேறா?    
பொருளின் பொருள் பொருளே !

நெற்றிக்கண் பரமனும் சக்தியும், 
நெடுமாலுமி லக்குமியும் போல் 
கலைமகளே நான்முகன். 
கற்றலே சிருஷ்டி!23-10-2012
ஸ்ரீரங்கம்
திருச்சி - 6

Monday, August 27, 2012


கவிதைகள்

வ.ஸ்ரீநிவாசன்  பிரசுரம் : சொல்வனம் | இதழ் 74 | 16-08-2012
1. மனிதத் துன்பவியல்
தம்மை முழுதாய்க் கொடுத்து,
-காற்றைத்
தழுவும் மரங்கள்.
எதன் மேலும் ஏறி
விளையாடும் அணில்கள்
இசைக்கும் புட்கள்
வானம் பெற்றுப் பிழைத்த கோள்கள், விண்மீன்கள்
வந்து போகும் விருந்தாளி மேகங்கள்
ஒளி, வெளி, வளி,
சிந்தாத கடல், புல் மலரும் பூமி.
எங்கும் என்றும் குறைவுறா அமுதம்
பருகாத மனம்.

2. எல்லா இதயங்களிலும் இவ்வடைப்பு
உலகை - அதாவது பிரபஞ்சத்தை -
அதாவது உம்மையும், என்னையும்
எனப் பொய்யாய்ப் பிரிந்திருக்கும் நம்மை -
உருவாக்கி இயக்கும் சக்தியென்று
ஒன்று தனியாய்
உள்ளதென்ற எண்ணம்.
அதில் பிறந்த அவ்விருமை
அடைத்து விடுகிறது இதயத்தை.
மொத்த உலகத்தின் - அதாவது பிரபஞ்சத்தின் -
அதாவது நீரும், நானும் எனத் தோன்றும் நம்மின் -
உள்ளிரைச்சல் ஓய்கையில்
அஹம் பிரம்மாஸ்மி
தத் த்வம் அஸி,
தௌ ஆர்ட் தட்
அன் அல் ஹக்
நானே உண்மை
என்றெல்லாம்
வார்த்தைகளற்று
மூச்சொவ்வொன்றிலும்
முறுவல்
கேட்கலியோ?
– கேட்டு
மூடி திறக்கலியோ?

3. ஆதாரக் கேள்வி அல்லது பதில்
அர்த்த நாரியாவது?                                  
அதுதானே முழுமை.
அரனும், அம்மையும்தானே
இருமை ?
-o00o-

செம்மை (Perfection) பற்றி மேலும் சில வார்த்தைகள்


வ.ஸ்ரீநிவாசன் : பிரசுரம் : சொல்வனம் : இதழ் 74 | 16-08-2012
“Heaven is not a place, and it is not a time. Heaven is being perfect. -And that isn’t flying a thousand miles an hour, or a million, or flying at the speed of light. Because any number is a limit, and perfection doesn’t have limits. Perfect speed, my son, is being there.”
― Richard Bach, Jonathan Livingston Seagull
தமிழில் : சொர்க்கம் ஓர் இடமல்ல அது ஒரு காலமுமல்ல. சொர்க்கம் என்பது செம்மையாய் (முழுமையாய்) இருத்தல். அது ஒரு மணி நேரத்தில் ஆயிரம் மைல்கள் அல்லது மில்லியன் மைல்கள் பறப்பதல்ல. அல்லது ஒளியின் வேகத்தில் பறப்பதுமல்ல. ஏனெனில் எண்ணிக்கை என்பதில் ஓர் எல்லை உள்ளது. செம்மைக்கு எல்லை இல்லை. செம்மையான வேகம் என்பது, மகனே, இருக்க வேண்டிய இடத்தில் சரியாக இருப்பது.
ஒரு விஷயத்தில் செம்மை என்பது அவ்விஷயத்தின் ஒவ்வொன்றும் அதனதன் சரியான இடத்தில் இருப்பது. சரியான இடம் என்பது என்ன? இது ஒரு சப்ஜெக்டிவ்வான விஷயமாக இருக்கையில் செம்மை ஆளாளுக்கு, ஒவ்வொரு காலத்துக்கு, ஒவ்வொரு இடத்துக்கு மாறுபடும்.
செம்மை, ஒரு கைக்குட்டையை மடிப்பதில் இருக்கிறது. இலையில் அல்லது தட்டில் எப்படி சாப்பிட வேண்டும் என்பதில் இருக்கிறது. பரிமாறும் உணவுப் பொருட்களின் வரிசையில், கீழே விழுந்து வணங்குவதில், வேட்டி கட்டுவதில், வெற்றிலை போடுவதில், கை கழுவுவதில், கால் அலம்புவதில், தலை வாரிக் கொள்வதில், உழுவதில், நாற்று நடுவதில், முடி திருத்துவதில், துணி துவைப்பதில், காப்பி போடுவதில், குடிப்பதில், ஜனாதிபதி கையால் பத்ம விருது வாங்குவதில் இலக்கணம் இருக்கிறது. வாழைத் தண்டை ஆய்வதற்கு செம்மையான வழி இருக்கிறது. சொல்லித் தெரிய வேண்டா கலைக்குக் கூட வாத்ஸ்யாயனரின் சூத்திரங்கள் இருக்கின்றன. Etiquettes and manners பற்றி எத்தனையோ புத்தகங்கள் மேலை நாடுகளில் உள்ளன. மேடை நாகரிகம் முதல் மேசை நாகரிகம் வரை சொல்லிக் கொடுக்க நூல்கள் இருக்கின்றன. இவற்றின் அடிப்படை, நம்பிக்கைகளாக இருக்கலாம். விஞ்ஞான காரணங்கள் கூட இருக்கலாம். ஒரு மொழியை எழுதுவதில், பேசுவதில் சரியான வழி இதுதான் என்று உள்ளது. இவை எல்லாமே மரபு, இலக்கணம் சார்ந்தவை. இடத்திற்கு இடம் கலாச்சாரத்துக்குக் கலாச்சாரம், குழுவிற்குக் குழு இது மாறுபடும்.
ஒரு விஷயம் ஒருவருக்கு செம்மை என்று தெரியலாம். இன்னொருவருக்கு அது பற்றி அத்தகைய அபிப்பிராயம் இராமல் போகலாம். ஒரு நடிகர் தோன்றும் காட்சிகளில் மெய் மறக்கும் ரசிகர் அதுவே, அவர் நடிப்பே, அவர் போடும் சண்டையே பர்ஃபெக்ட் என்று உளமார நம்பலாம். ஓர் அரசியல் தலைவரின் பேச்சில், ஒரு நடிகையின் நடனத்தில், ஓர் இயக்குனரின் படத்தில் என்று அவரவர்கள் ரசிகர்கள் மனதைப் பறிகொடுக்கலாம். அவர் அனுபவிப்பவையே செம்மையானது என்று சொல்லலாம். இவை முழுக்க முழுக்க முன் முடிவுகளால், பாரபட்சத்தால், விருப்பு வெறுப்புகளால் ஒருவர் பற்றிய பிரேமையால் நிகழ்வதாக இருக்கக் கூடும். இது மனித மனதின் விசித்திரங்களில் ஒன்று.
இம்மாதிரி மரபு சார்ந்த, முன் முடிவு சார்ந்த, சார்பு சார்ந்த செம்மை தவிர சரியான இடத்தில், சரியான காலத்தில் அமைந்த ஒரு விஷயமும் செம்மையானதாக ஆகிறது. சுவரின் சரி மத்தியில் அடிக்கப் பட்ட ஆணியிலிருந்து, சாயாமல் தொங்கும் காலண்டரிலிருந்து, மிகச் சரியாக விரிக்கப் பட்ட மேஜை விரிப்பு, ஒழுங்காக அடுக்கப் பட்ட புத்தகங்கள், சரியாக துடைக்கப் பட்ட வாகனம், பாலிஷ் செய்யப் பட்ட ஜோடு, நேரத்துக்கு வரும் ரயில் வண்டி வரை இடம் மற்றும் காலத்தால் நிர்ணயிக்கப்படும் பர்ஃபெக்ஷன் ஒன்று உள்ளது.
மேலும், மேலும் இன்னமும், இன்னமும் என்று ஏற்றிக் கொண்டே போய் அதிக பட்சத்தை செம்மை என்று நினைப்பவர்களும் இருக்கிறோம். ப்ரையன் லாரா 375 ரன்களை டெஸ்ட் க்ரிக்கெட் போட்டிகளில் அடித்து ஓர் உச்சத்தை எட்டினார். விரைவிலேயே ஆஸ்திரேலியாவின் மேத்யூ ஹேய்டன் 380 ரன்களை அடித்து அதைத் தாண்டினார். ஆனால் ப்ரையன் லாரா என்கிற மேதை 400 ரன்களை எடுத்து மீண்டும் அந்த சாதனையை தனதாக்கிக் கொண்டார். இதில் பர்ஃபெக்ஷன் 375, 380, 400ல் இல்லை. (ஒரு விதத்தில் பார்த்தால் ப்ரையன் லாராவின் ஆட்டத்தில் இருக்கிறது.) அதிக பட்சம் என்பது செம்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அதிக பட்ச உயரமோ, எடையோ, சிவப்போ, கறுப்போ, வேகமோ செம்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
எட்கர் ஆலன் போ
“I have no faith in human perfectibility. I think that human exertion will have no appreciable effect upon humanity. Man is now only more active - not more happy - nor more wise, than he was 6000 years ago.”
(எனக்கு மனித செம்மைத்தனத்தில் நம்பிக்கையில்லை. மனித யத்தனங்களால் மனித குலத்தின் மீது கணிசமான தாக்கம் இருக்காது என்றே நான் நினைக்கிறேன். 6000 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட இப்போது மனிதன் அதிக செயல் வேகத்தோடு மட்டுமே - அதிக சந்தோஷத்தோடோ, அதிக விவேகத்தோடோ அன்றி - இருக்கிறான்.)
என்று அதிக செயல்பாடுகள் மற்றும் செயல்பாட்டுத் திறன் அதிக மகிழ்வையோ, விவேகத்தையோ தரவில்லை என்று சுமார் ஒன்றே முக்கால் நூற்றாண்டுகளுக்கு முன் சொன்னது உண்மைதானே? அதற்கு ஒரு நூற்றாண்டுக்குப் பின் தானே இரண்டு உலக மகா யுத்தங்களும் பல கோடிப் பேர்களின் மரணமும், இதர, மனிதன் சம்பாதித்துக் கொண்ட துக்கங்களும் நிகழ்ந்துள்ளன?
இன்னும் அதிகம், இன்னும் துரிதம், இன்னும் வெண்மை, இன்னும் அடர்த்தியும் செம்மையாக வேண்டிய அவசியம் இல்லை. விஷயங்களை சேர்த்துக் கொண்டே போவதாலும் செம்மையை அடைய முடியும் என்றோர் ஆழ்மன அனுமானம் உண்டு. பணமோ, புகழோ, அதிகாரமோ அதிகரித்துக் கொண்டே போவதுதான் செம்மை என்கிற சிந்தனை சரியா? செயின் ட் எக்யூபரி சொல்கிறார்.
“Perfection is achieved, not when there is nothing more to add, but when there is nothing left to take away.”
― Antoine de Saint-Exupéry, (Airman’s Odyssey: Night Flight/Wind Sand & Stars/Flight to Arras)
(சேர்ப்பதற்கு மேலும் ஒன்றும் இல்லாதபோதன்றி, எடுப்பதற்கு எதுவும் இல்லாத போதே செம்மை அடையப்படுகிறது.)
ஆர்னால்ட் ஷ்வார்ட்ஸநெகரை அவர் உடலை வைத்து “மோஸ்ட் பர்ஃபெக்ட்லி டெவலப்ட் ஹ்யூமன் பீயிங்” என்கிறார்கள். அதற்கெல்லாம் ஓர் அளவு இருக்கிறது. அளவு என்பது தமிழில் அளவிடல் மற்றும் எல்லை இரண்டுக்குமாக வருகிறது. அளவிட முடிந்த எதற்கும் எல்லை உண்டு. மேலே ரிசர்ட் பாக் சொன்னதைப் போல்.
மனிதர்கள் மேன்மையெனக் கருதுபவை மட்டுமின்றி மிகக் கீழானவையும் இந்த செம்மையில் உள்ளடங்கியவையே. தீர்க்கப் படாத எத்தனை பர்ஃபெக்ட் கொலைகள், திருட்டுகள் உள்ளன? இவையனைத்தும் மனதின் கணக்குப் போடும் திறமையினாலும், இதர மனித பலவீனங்களாலும் அனைத்தையும் மீறி அதிருஷ்டத்தாலும் நிகழ்பவை.
***********
எல்லா விஷயங்களையும் போலவே செம்மை பற்றியும் விசித்திரமான கருத்துகள் இருக்கின்றன. வடிவேலு ஒரு படத்தில் சொல்வது போல் “வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்” என்பது போல். அழகு, அறிவு பற்றிய நேர்மறை, எதிர்மறை கருத்துகள் உண்மையோடு சம்பந்தப்பட்டவையல்ல. கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு பாட்டில் சூப்பர் ஸ்டாரைச் சொன்னால், விவேக் ஒரு மேடையில் வெள்ளைதான் எனக்குப் பிடிச்ச கலரு என்று எம்ஜியாரைத் துணைக்கழைத்தார்.
audrey-hepburn
மர்லின் மன்ரோ, இளவரசி டயானா, க்ரேஸ் கெல்லி,ஆஞ்சலீனா ஜோலீ போன்றவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு சமீபத்திய தொலைக்காட்சி சர்வேக்களில் கடந்த நூறு ஆண்டுகளில் மிக அழகானவராக பெண்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அவர் காலத்திலேயே ‘செம்மை அழகு’ என்று கருதப் பட்ட ஆட்ரி ஹெப்பர்ன் சொல்கிறார்:
“There must be something wrong with those people who think Audrey Hepburn doesn’t perspire, hiccup or sneeze, because they know that’s not true. I n fact, I hiccup more than most.”
(“ஆட்ரி ஹெபர்னுக்கு வியர்ப்பதில்லை, விக்கலோ தும்மலோ வருவதில்லை என்று நினைக்கும் பேரிடம் ஏதோ சரியில்லை என்று நான் நினைக்கிறேன்.ஏனெனில் அவர்களுக்குத் தெரியும் அது உண்மையில்லை என்று. உண்மையில், சொல்லப் போனால் நிறையப் பேரை விட எனக்கு அதிகம் விக்கல் வரும்.” - ஆட்ரி ஹெபர்ன்.)
ஆக மரபு, இலக்கணப் படி அமைந்த செம்மை, இச்சைப்படி அமைந்த செம்மை, அதிக பட்சம் என்பதாலும் வேறு விதங்களிலும் பௌதீகமாக அளக்கப் படும் செம்மை என்பன போல் இன்னும் பல வரையறைகளை நாம் காணக் கூடும். இவை அனைத்தும் இடம், காலத்தால் நிர்ணயிக்கப் படுவன.
இவற்றை மீறி ஒரு செம்மை, இடம் காலத்தால் கட்டுப் படுத்தப் படாத ஆனால் அவற்றின் தர்க்க நியாயங்களையும் திருப்தி செய்கிற ஒரு செம்மை உண்டா? மனித யத்தனத்தால் அது கூடுமா? அதைத்தான் மனிதன் கால காலமாக நாடுகிறான். அது அவனறியாத போது நேரிட்டு அவனை ஆட்கொள்கிறது.
ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் அரங்கில் ஆடுபவர் சித்தரிக்கும் இன்பமோ, துன்பமோ, சிருங்காரமோ, பக்தியோ திடீரென்று தாளம், பாவம், இடம், காலம் அனைத்தையும் மீறி மிகச் சரியாக சென்ஸிடிவான பார்வையாளனையும் ஆடுபவரோடு வேறு தளத்துக்கு அழைத்துச் சென்று விடும்.
ஜே.க்ருஷ்ணமூர்த்தி ஐரோப்பாவில் ஒரு கதீட்ரலைப் பார்த்ததும் தானாக மண்டியிட்டு மெய் மறக்கிறார். அதன் செம்மையான சீரான அழகில் செந்தண்மையில் தன்னைப் பறிகொடுத்து.
ஜாகிர் ஹுசைனை இந்தியாவின் அழகான ஆண்களில் முதன்மையானவராக தேர்ந்தெடுத்ததும் அவர் சொல்கிறார் : “நான் அழகெல்லாம் இல்லை. தபேலாவை வாசிக்கையில் ஒரு கணத்தில் நான் அதன் இலக்கண, நனவு நிலைகளையெல்லாம் மீறி எங்கோ சென்று விடுகிறேன். அந்நிலையில் என்னைப் பார்த்தவர்கள் நான் அழகானவன் என்று தெர்ந்தெடுத்திருக்கிறார்கள்.”
இசை மேதை எம்.டி.இராமநாதன் அவர்களைப் பற்றிய ஒரு கட்டுரையில் இப்படி வருகிறது.
“I wish to quote Prince Rama Varma here: ‘When M.D. Ramanathan sang Amba Kamakshi, Syama Sastri’s immortal Bhairavi swarajati for instance, he would seem to metamorphose into Syama Sastri to begin with. The transformation would continue magically till he became the song too… and Bhairavi itself. And finally things would come to a state where M.D. Ramanathan, his accompanists, the sruti, Syama Sastri, the Swarajati, Bhairavi ragam, Goddess Kamakshi herself and the sensitive listener, all fused together to become one single entity, brimming with music, completeness and perfection. It is this experience that I had in mind when I talked about seeing God and showing God to others.’
(ராஜா ராம வர்மாவை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்: ‘உதாரணத்திற்கு, எம்.டி.இராமநாதன் சியாமா சாஸ்திரிகளின் காலத்தால் அழியாத பைரவி ஸ்வரஜதியான அம்பா காமாக்ஷியைப் பாடுகையில் முதலில் அவர் சியாமா சாஸ்திரிகளாக உருவெடுப்பதாய்த் தோன்றும். இந்த மாற்றம் அவர் அப்பாடலாகவே, பின்னர் பைரைவி ராகமாகவே மாறும் வரை மயமாய்த் தொடரும். . . இறுதியில் எம்.டி.இராமநாதன், பக்க வாத்தியக்காரர்கள், ஸ்ருதி, சியாமா சஸ்திரிகள், ஸ்வரஜதி, பைரவி ராகம், நுண்ணுணர்வு மிக்க ரசிகர், ஸ்ரீ காமக்ஷியம்பாள் - எல்லாம் சேர்ந்து இரண்டறக் கலந்து இசையும், முழுமையும், செம்மையும் பொங்கித் ததும்பும் ஒற்றை விஷயமாய்,  ஆகும். நான் கடவுளைப் பார்ப்பதையும், கடவுளைப் பிறருக்குக் காட்டுவதையும் பற்றிப் பேசினபோது இந்த அனுபவம்தான் என் மனதில் இருந்தது.’)
mdr-class
நாட்டியத்தில், இசையில் ஓவியங்களில், சிற்பங்களில், சினிமாவில், நாடகத்தில், ஒரு நாவலில், கதையில், கவிதையில் இந்த விட்டு விடுதலையான நிலை ஒருவர் பர்ஃபார்ம் பண்ணுகையிலும், பார்த்து ரசிக்கையிலும் / அனுபவிக்கையிலும் நிகழலாம். அது கால தேச வர்த்தமானங்களுக்கு அப்பாற்பட்டது. இது வாழ்வின் ஒவ்வொரு துளியிலும், கணத்திலும் இயல்பாக இருப்பதும் ஆகும்.
பெரியவர்களை பரிபாலனம் செய்யும் சின்னஞ்சிறு குழந்தைகளிடம், இளம் காலையில் கேட்கும் பட்சி ஜாலத்தில், வினை சரியாய் முடிந்த தருணத்தில், சொல்லுக்குச் செவி சாய்க்கும் ஒருவரிடம், பிராணிகளின், தாவரங்களின், பூச்சிகளின், நட்சத்திரங்களின், கடலின், சந்திர சூரியரின், பனித்துளியில், பூவிதழில், அதன் ஜியோமிதித் துல்லிய அசாதாரண ஆனால் எளிய ஒழுங்கில், உதிர்ந்த சருகில், திடுமென முழுதாய் ஆக்கிரமிக்கும் இருப்பில் அது இருக்கிறது. கடவுளைக் கோயிலில் அடைத்த மாதிரி, இந்த தூய பர்ஃபெக்ஷனையும் இலக்கணத்துக்குள் அடைத்துவிட முயலும் மனிதன் தோற்றுக் கொண்டே இருக்கிறான். ஒரு கட்டுரையில் சொன்னேன் நண்பர் ஜெயபாலன் சொன்னதை: “ப்யூடி கேன் சேவ் தி வொர்ல்ட்” என்கையில் தாஸ்தாய்வ்ஸ்கி ப்யூட்டி என்றது பர்ஃபெக்ஷனைத்தான்.
*********
பர்ஃபெக்ஷன், செம்மை என்பது ஒரு நிலை.  நிலை என்பது பர்மனென்ட் என்றும், நிரந்தரம் என்றும் கூடப் பொருளாகிறது. மனிதக் கணிப்பில் நிலையாமை தான் வாழ்வின் நிலை. இது காலாதீதம். இதில் பெருங்கணம் என்றும் சிறு கணமென்றும் தோன்றுவது மனது எனும் தராசு எடை போடுவதால் ஏற்படுகிறது. வழக்கம் போல் ‘ஃபால்ஸ் வெய்ட்’.
பர்ஃபெக்ஷனை மறுபடி மறுபடி செய்ய முடியாது. அதில் திரும்பச் செய்தல் (Repetition) கிடையாது. எவ்வளவு முறை செய்தாலும் அது புதிதாகவே செய்யப் படும். திரும்பத் திரும்ப யாந்த்ரீகமாக (மெகானிகல்) செய்யப் படுவது ப்ரொடக்ஷன். உற்பத்தி. ராஜரத்தினம் பிள்ளை நூறு முறை தோடி வாசித்தாலும் நன்றாக அமைந்த ஒவ்வொரு முறையும் அது புதிதாக உருவாகிறது. அது க்ரியேஷன். சிருஷ்டி. அசல்.
டெண்டுல்கரின் ஒரு ட்ரைவ் முழுமையாக அமைகிறது. கால்களின் பொஸிஷன், கைகளின் லாகவம், முதுகு, தலை ஆகியவற்றின் சரியான கோணம், பந்து, பாட், அவரது கண்கள் கால்கள் ஒரு சீரான கோட்டில் அமைவது. பந்தை ஒரு நொடி முன்போ, பின்போ மட்டையில் ஒரு மில்லிமீடர் மேலோ, கீழோ, இடவலமாகவோ அன்றி சரியான நேரத்தில் சரியான இடத்தில் சந்தித்து சரியான சக்தியைப் பிரயோகித்து அடிக்கப் பட்ட ஷாட். அந்த கணம் ஓர் உயிருள்ள உறைந்த கணம். இன்னும் எத்தனையோ முறை அதே ஷாட்டை அவர் வேறு வேறு மாட்ச்களில் அடித்திருக்கக் கூடும். ஜிம்னாஸ்டிக்ஸில் பர்ஃபெக்ட் ஸ்கோரை திரும்பத் திரும்ப எட்டுவது போல. ரோஜர் ஃபெடரரோ, பீட் சாம்பிராஸோ, மீலாஸ்லோவ் மெஸிரோ ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பவா செய்தார்கள்? ஒரே விஷயம் என்று நாம் குழுமப் படுத்துவது ஒவ்வொரு முறையும் புதிதானது.
இராமாயணமும், மகாபாரதமும் பழைய இதிஹாசங்கள். ஒவ்வொரு முறை சரியாகப் படிக்கையிலும், சரியானவரிடமிருந்து கேட்கையிலும் நவீனமாகவே இருக்கின்றன. திருக்குறள் இரண்டாயிரம் வருடம் பழையது. இன்று படிக்கையிலும் புதிது புதிதாக மலர்கிறது. ‘காதலிக்க நேரமில்லை’யை எத்தனயாவது முறை பார்த்ததலும் ஒரு புதிய நளினம், நகைச்சுவை, அசைவு, நேர்த்தியைக் கண்டுபிடிக்கிறோமல்லவா? ‘சோஃபீ’ஸ் சாய்ஸ்’ என்றும் ஒரு பூரணமான சோகப் படம். இவையெல்லாம்தான் ‘க்ளாஸிக்ஸ்’. க்ளாஸிக் என்பதே என்றென்றைக்கும் நவீனமான புராதனம். இன்றைய க்ளாஸிக், புராதனமான பின்னரும் நவீனமாகவே இருக்கும். கர்நாடக சங்கீதமும், ஹிந்துஸ்தானியும், பீதோவனும், மொஸார்ட்டும் எவ்வளவு பழையவை? எவ்வளவு புதியவை? செம்மை இங்கு பர்ஃபெக்ட் ஆகவும் க்ளாஸிக் ஆகவும் இருக்கிறது. தமிழில் இராண்டுக்கும் செம்மை என்கிற வார்த்தையைப் பயன் படுத்துகிறோம்.
புத்தம் புதியதாய்த் தோன்றினால்தான் சிருஷ்டி. சிருஷ்டி என்றால் அது முன்னர் இல்லாதது. புதியது. புதியது என்கையில் நிச்சயமாக அது பழையது இல்லை என்றாகிறது. அதே யுகயுகாந்திரமாய் உதிக்கும் சூரியன்தான். இன்று புதிதாய் உதிக்கிறது. அதே 20,30, 60,80, 90, 100 வயது உடல்தான். இன்று புதிதாய்க் கண் விழிக்கிறது. இக்கணம். அதில் இடமும் காலமும் எனவே நானும் இல்லை. அதுவே செம்மை. அதை வாழவொட்டாமல் மனம் தடுக்கிறது.
உற்பத்திக்கும் சிருஷ்டிக்கும் ஆன வேறுபாடு. மனதால் செய்வன எல்லாம் உற்பத்திதான். அது பௌதீக உலகுக்கு ஒரு கருவியாய் அந்த அளவுக்கு அவசியம்.
சென்ஸ் ஆஃப் டூயர்ஷிப் இருக்கும் இடத்தில் அது வெறும் உற்பத்திதான்.
**********
செம்மையை முழுமை என்கிற பொருளிலும் பயன்படுத்துகிறோம். ஒருவர் பற்றிய கட்டுரையில் அவர் தன் வாழ்வை முழுமையாக வாழ்ந்தவர் என்று இருந்தது. He lived his life to the full. முழுமையாக வாழ்வது. இதன் பொருள் என்ன? முழுமையாக வாழ்வது என்பது எல்லா உணவு வகைகளையும் உண்டு, மதுவகைகளைப் பருகி, பிற எல்லா இன்பங்களையும் துய்ப்பதா? இது சாத்தியமா? இதற்கு எல்லை உண்டா? உண்மையில் முழுமையான வாழ்தல் என்றால் அனைத்துப் புலன்களும் முழு விழிப்போடு, இதயமும், மூளையும் ஒன்றை ஒன்று அடக்கி ஆளாமல் சரியாக இயல்பாக இணைந்து, முழு கவனத்தோடு வாழ்வது, இல்லையா? கவனத்தின் அடிப்படைகள் : பௌதீகமாக, கருவியின் (மனதையும் சேர்த்து புலன்களின்) துல்லியம். உளவியலாக பின் புலமற்ற கவனிப்பு.
இதன் க்ளிம்ப்ஸ் ‘பனித்துளியின் நிரந்தரம்’ என்கிற ஜெயமோகன் அவர்களின் கட்டுரையில் கிடைக்கிறது.
To see a World in a Grain of Sand
And a Heaven in a Wild Flower
Hold Infinity in the palm of your hand
And Eternity in an hour
(William blake’s famous lines from his Auguries of Innocence written in 1794
(ஒரு துகள் மணலில் ஓருலகம்
ஒரு காட்டுப்பூவில் காணும் சொர்க்கம்
உள்ளங்கையில் எல்லையின்மையை ஏந்த
ஒரு நாழிகையில் காலாதீதம்)
************
Perfection ஏன் தேவை? மூளை உட்பட இந்த உடல் ஓர் ஒழுங்கு (Order) நிலவும் சூழலில் மட்டுமே சீராக செயல்பட முடியும். மன உளைச்சல், அல்லது மூளையில் பாதிப்பு, உறங்காமை, நோவு இத்யாதி. சுற்றுப் புற ஒவ்வாத சூழ்நிலை, சப்தம், ஒரே சமயத்தில் பல வேலைகள். இப்படியெல்லாம் இருக்கையில் வேலை சிறக்காது. பலசமயம் முடியவே முடியாது.
ஒழுங்கு இருக்கும்போதுதான் யாராலும், எதனாலும் செயல்பட முடியும். ஒழுங்கு இல்லாத இடத்தில் சச்சரவுகள், ஏற்ற தாழ்வுகள், குறை பாடுகள், பின்னங்கள் இருக்கும். நமது உடலாலும், மூளையாலும் ஒழுங்கில்தான் சீராக செயல்பட முடியும். இதில் உள் ஒழுங்கு, வெளி ஒழுங்கு இரண்டும் அடங்கும். இரவு முழுவதும் விழித்திருந்து விட்டு, மூளை சோர்ந்த நிலையில் மறு நாள் வேலை செய்தால் அது சீராக வராது. உடல் நோவுடன் காரியங்கள் செய்வது மிகவும் கடினம்.
இந்தப் பிரபஞ்சமே ஓர் ஒழுங்கில் இயங்குகிறது. மனித மூளையின் உற்பத்தி விஷயங்களைத் தவிர எங்குமே ஒழுங்கீனம் இல்லை. சூரியன் ஒரு நாள் கூட இது வரை மக்கர் செய்ததில்லை. க்ருத யுகம் தொட்டு. ஒழுங்கான உணவு, மனநிலை, பழக்க வழக்கங்கள், சுகாதாரம் எல்லாம் செயல்திறனை அதிகரிக்கின்றன.
கழைக் கூத்துக் கலைஞர்களுக்கு ஒரு நொடியின் துகளில் வாழ்வு ஊசலாடுகிறது. சர்க்கஸில் ட்ரபீஸ் கலைஞர்களுக்கு அதே துகள் நொடியில் அவர்கள் கௌரவத்தின் வாழ்வும். (பாதுகாப்பு வலை கட்டி யிருந்தால் கௌரவத்தின் வாழ்வு மட்டும்) அவர்கள் செயல்பாடுகளின் துல்லியத்தில், சீரில், தீர்க்கத்தில், precisionல், accuracyயில், ஒழுங்கில் அவர்கள் நமக்குத் தரும் உள மகிழ்வும், அத்தோடு அவர்கள் உயிரும் இருக்கின்றன.
கவனித்துப் பார்த்தால் வாழ்வின், உலகின் அச்சாக இவ்வொழுங்கு இருக்கிறது. இவ்வொழுங்கின் உயிர்த் தீயினிலே வளர்ச் சோதியாக செம்மை இருக்கிறது.
*****
வார்த்தையும், செம்மையும் கட்டுரையின்  துவக்க வாக்கியமான சார்லி சாப்ளினின் மேற்கோள் : Charlie Chaplin with ballerina Anna Pavlova.
tumblr_lwog1gvxhs1qke3bko1_r8_500
“The sublime is rare in any vocation or art. And Pavlova was one of those rare artists who had it. She never failed to affect me profoundly …. As she danced, every move was the center of gravity. The moment she made her entrance no matter how gay or winsome she was, I wanted to weep, for she personified the tragedy of perfection”— Charles Chaplin, My Autobiography (1964)
(எந்த வேலையிலும், கலையிலும் உந்நதம் அரிதானதாகவே இருக்கிறது. அவ்வுந்நதத்தைக் கொண்டிருந்த அத்தகு அரிதான கலைஞர்களில் பாவ்லோவா ஒருவர். என்னுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்த அவர் தவறியதே இல்லை…. அவர் நடனமாடுகையில் ஒவ்வொரு அசைவும் புவி ஈர்ப்பு மையம் குலையாத சமநிலை. ஆட்டத்தில் நுழையும் கணத்தில் அவர் எத்தனைதான் உல்லாசமாக, இனிமையாக, கவருபவராக இருந்தாலும் நான் அழவே விரும்புவேன், ஏனெனில் அவர் பூரணத்துவத்துடைய துக்கத்தின் உருவகமாக இருப்பார். - சார்லி சாப்ளின், என் சரிதை (1964))
இந்த செம்மை ஏன் சாப்ளினுக்கு ‘ட்ராஜடி’ ஆகிறது?
ஒரு தெய்வச்சிலை முன், மகான்கள் முன், தாஜ்மஹால் முன், ஒருவர் வெறும் உணர்ச்சிப் பெருக்கால் (sentimental) கண் கலங்கலாம். அவரது அப்போதைய மனநிலையின் விளைவாக இது இருக்கலாம்.
இதுவன்றி, மற்றொன்று தான், தன் பிரச்னைகள், அல்லது நேர்மறை (பாஸிடிவ்) எதிர்மறை (நெகடிவ்) உணர்வுகள் ஏதுமற்று இருக்கும்போது ஒரு சங்கீத கச்சேரியில் திடீரென்று கண்களில் நீர் மல்கலாம். ஒரு நாவலின் / கதையின் / கட்டுரையின் / கவிதையின் ஒரு வரியில் / வார்த்தையில் கூட இது நிகழலாம். ஒரு சினிமா காட்சியில் இந்தத் தன்னை மீறிய மெய் மறந்த எக்ஸ்டசி அல்லது இன்னும் சரியாக ப்ளிஸ் (Bliss) என்கிற ஆனந்த நிலை நேரலாம்.
அவ்வானந்த நிலை பர்ஃபெஷனை நேரடியாக தரிசிப்பதால், இன்னும் சொல்லப் போனால் வாழ்வதால், தானும் அதில் ஓர் அங்கம் ஆவதால், அனுபவிப்பதால் நிகழ்கிறது. அப்போது வடியும் கண்ணீர் ஆனந்த பாஷ்பம் என்கிறார்களே அதுதான் . தேவர்கள் பூமாரி பொழிவதும் கூட. இதில் ட்ராஜடி எங்கே வந்தது. பார்ப்போம்.
அந்த செம்மையின் பூரணம் ப்ரத்யச்ட்சம் ஆகையில் ‘நான்’ காணாமல் போய் விடுகிறது. அதன் துல்லியத்தில், அதன் ப்ரம்மாண்டத்தில், அதன் சத்தியத்தில். இந்த உடலால் அதைத் தாங்க முடிவதில்லை. அதனால்தான் அந்த ஓவர்வெல்மிங் உணர்வால்தான் கண்ணீர் பெருகுகிறது. இந்த உடலுக்கு அதைத் தாங்கும் திராணியில்லை. அது அவ்வுடல் அனுபவித்தறியாதது.
சாப்ளின் இந்த நிகழ்கண பிரத்யட்சம் பற்றி சொல்லியிருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அது துன்பவியல் (டிராஜடி) அல்ல. மனமே அதைத் துன்பவியலாக ஜோடிக்கிறது.
இது நிகழ்ந்த நேரத்தில், ‘காலம்’ இல்லை. ஆனால் அடுத்த கணம் அதாவது காலம் இறங்கி அக்கணத்தைக் கவரும் கணத்தில் இந்த செத்த மனம், மறந்த ‘நான்’ மெல்ல விழித்து பாவ்லோவாவின் ஆட்டமோ வெறெதோ, எதுவாயினும் அந்த பர்ஃபெக்ஷன் எனும் ஆனந்தம் நிலைப்பதை, அதை என்றென்றைக்குமாகத் தன் பிடியில் வைத்துக் கொள்வதை, அப்பேரானந்தத்தை எப்போதைக்குமாக இருத்தி வைத்துக் கொள்வதைப் பற்றி யோசிக்கிறது. அதைத் தன் உடைமைப் பொருளாக்கிக் கொள்ள விழைகிறது.  அதே சமயம் தன் சாவை தன் அநித்யத்தின் போதாமையை, தான் பொய்தான் என்னும் மெய்யை உணரும் கணமாகவும் அது இருப்பதால் அது மரணத்தின் நினைவுறுத்தலாக, அதன் முடிவின் நிச்சயத்தன்மையாக ஆவதால் அது அந்த ‘நானு’க்கு சோகமாகிறது. நானெனும் கமண்டலத்தில் அப்பேரானந்தத்தை பிடித்து வைத்துக் கொள்ளும் அப்பேராசையையும் நிறைவேறாது என்றறிந்து கொண்டு, நானே மனதின் புனைவு என்னும் பிரத்யட்சத்தின் கூர்மையையும் தாங்க முடியாமல் நல்ல பிள்ளையாக எதிர்முனையில் செம்மை என்கிற நிலை மேலும் நேர்த்தியாக ஆக முடியாததாக இருப்பதையெல்லம் எண்ணி சீச்சீ இந்த பழம் புளிக்கும் என்றும் பொய் அக்கறையோடு துக்கிக்கிறது. இது வழக்கம் போல் மனம் கற்பிக்கும் கானல் நீர்தான். உண்மை உணர்வு, பர்ஃபெக்ஷ்ன் முன் மெய் மறப்பது மட்டும்தான். இது பெரிய அனுபூதியோ அல்லது புறச் செயல்களால், விஷயங்களால், நிர்ணயிக்கப் படுவதோ, நேரிடுவதோ அல்ல. ‘நான்’ இல்லாதபோதெல்லாம் இது நடக்கிறது. நான் இல்லாத போது ஒவ்வொன்றும் அதனதன் இடத்தில் இருக்கின்றன. திரிக்க ஆசாமி யாரும் இல்லை. எல்லாம் அதனதன் சரியான இடத்தில் இருப்பதுதான் பர்ஃபெக்ஷன். அவை வேறிடத்தில் இருப்பதாக அல்லது வேறிடத்தில் இருக்கக் கூடாதா என்று கற்பனை செய்வது, அங்கலாய்ப்பது ‘’நான்’தான். அது கழன்று விழுந்த இடத்தில், இருப்பது மட்டுமே இருக்கிறது. அதுவே சரி. அல்லவா?
எல்லா நாகரிகங்களிலும், எல்லாக் காலங்களிலும் இருக்கும் இறுதியான செம்மைத் தன்மை இயல்பாக, சகஜமாக, சாச்வதமாக இருக்கிறது. அகங்காரமும், பற்றும் அறவே அற்ற நிஷ்காம்ய கர்மத்தில் விளையும் எவ்வினையிலும் அது திரைகள் அற்றதாய் ஒளிர்கிறது.
இது உடோபியாவா? அல்லது ராம ராஜ்யமா? தினசரி வாழ்வில் சோதனை செய்து பார்த்து கண்டடையலாம்.
*******
ஒரு பின் குறிப்பு :
கட்டுரை ரொம்ப சீரியஸாக, நீளமாகத் தோன்றுகிறதா?
இன்று என் வீட்டில் நடந்தது :
நான் : யார் பேப்பரைப் படிச்சது. இப்படியா கசக்கி மசக்கி வைப்பது. மத்தவங்க படிக்க வேண்டாம்?
என் மனைவி : இத்தனை வருஷமா இதேதான்…. இந்த மனுஷனோட…
என் மகள் : “டிராஜடி ஆஃப் பர்ஃபெக்ஷன் ப்பா”

Wednesday, June 27, 2012

வார்த்தையும், செம்மையும்


வார்த்தையும், செம்மையும்

வ.ஸ்ரீநிவாசன் | பிரசுரம் :  சொல்வனம் : இதழ் 72 | 20-06-2012

“The sublime is rare in any vocation or art. And Pavlova was one of those rare artists who had it. She never failed to affect me profoundly…..As she danced, every move was the center of gravity. The moment she made her entrance no matter how gay or winsome she was, I wanted to weep, for she personified the tragedy of perfection” - Charles Chaplin, My Autobiography (1964)
(எந்த வேலையிலும், கலையிலும் உந்நதம் அரிதானதாகவே இருக்கிறது. அவ்வுந்நதத்தைக் கொண்டிருந்த அத்தகு அரிதான கலைஞர்களில் பாவ்லோவா ஒருவர். என்னுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்த அவர் தவறியதே இல்லை…. அவர் நடனமாடுகையில் ஒவ்வொரு அசைவும் புவி ஈர்ப்பு மையம் குலையாத சமநிலை. ஆட்டத்தில் நுழையும் கணத்தில் அவர் எத்தனைதான் உல்லாசமாக, இனிமையாக, கவருபவராக இருந்தாலும் நான் அழவே விரும்புவேன், ஏனெனில் அவர் பூரணத்துவத்துடைய துக்கத்தின் உருவகமாக இருப்பார். - சார்லி சாப்ளின், என் சரிதை (1964)
சார்லி சாப்ளினின் பிறந்த நாளன்று இதைப் படித்தேன். “I wanted to weep, for she personified the tragedy of perfection” என்கிற வாக்யம் இதை மறக்க முடியாததாக ஆக்கி விட்டது. அதே போல் முதலில் வரும் “The sublime is rare in any vocation or art” என்கிற வார்த்தைகளும்.
நா.பார்த்தசாரதியின் மிகப் பிரபலமான “பொன் விலங்கு” தொடர் கதையாக கல்கியில் வரும்போது ஒவ்வொரு வாரமும் அக்கதையில் வரும் சில சொற்றொடர்களை பொன்மொழியாகக் கட்டம் கட்டிப் போடுவார்கள். சத்திய தாகம் பற்றிச் சொன்னது பிடித்திருந்தது.
அது இலட்சிய வாத காலம். இலட்சியத்தின் சடத்தன்மைக்கு ஆன்ம பலம் உயிரூட்டிய மாயம்தான் காந்தியடிகள் என்று நான் நினைக்கிறேன். அவர் ஒரு ‘சப்லைம்’. ஓர் ஆச்சர்யம். ஒரு அசாத்யம், சாத்யமான விந்தை. மாய வாழ்க்கையின் தொப்பியிலிருந்து வெளிவந்த உயிருள்ள உண்மைப் புறா.
சாப்ளினும் காந்தியும் சந்தித்து இருக்கிறார்கள். டால்ஸ்டாயும் காந்தியும் தொடர்பில் இருந்திருக்கிறார்கள்.
இலட்சியம் மனதின் பொருளாக இருக்கையில் கானல் நீர். சில சமயம் பொழுதுபோக்கு மற்றும் வணிக முதலீடு. அதைச் சொல்லி மக்களைத் திரட்டலாம். நினைத்த இலாபத்தை அடைந்த பிறகு உதறி விடலாம். சில நேரம் ரோஜாவை மட்டும் கற்பனை செய்து முட்களை மறந்த அல்லது மறைத்த கதை. அந்த இலட்சியம் நிறைவேறினாலும் அதனால் பெருத்த துயரே மிஞ்சும். கண்கூடாக இத்தகைய இயக்கங்களை நாம் சென்ற நூற்றாண்டில் பார்த்திருக்கிறோம் இல்லையா? இலட்சியம் வரட்டுத் தியரியாக, மனிதரைப் பிரிப்பதாக, ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்துவதாக இல்லாமல் இதயத்தின் வெளிப்பாடாக இருக்கையில் உலகும், வாழ்வும் அதற்கிசைந்து போகின்றன. அது நிகழ காத்து நின்று சகாயம் செய்கின்றன.
இலட்சியம் அதனளவில் ஓர் அபாயமான, பொய். எட்ட இருப்பது. நாம் உடனடியாகக் காரியம் செய்யும் அவசியத்தை தள்ளிப் போடும் சால்ஜாப்பு. அருவருப்பானது கூட. ஆனால் அன்பின் பாற்பட்ட ஆதர்சம் நிகழ்கையில் அது உயிருள்ள, துடிப்புள்ளதான (vibrant) நேர்மறை நனவாகிறது.
இப்போதைய காலம், சட்டம் ஒழுங்கை யார் கடை பிடிக்கப் பார்க்கிறார்களோ அவர்கள் முட்டாள்கள் எனக் கருதப்படும் காலம். போக்குவரத்து சிகப்பு விளக்கில் காரை நிறுத்தி பச்சைக்காகக் காத்திருந்த இளைஞரை கெட்ட வார்த்தையால் திட்டிக் கடந்து போன காரோட்டியை சாலிகிராமத்தில் பார்த்திருக்கிறேன். இன்றைய இந்தியா இதுதான் என்பதற்கான ‘பர்ஃபெக்ட்’டான குறியீடு அது.
‘பர்ஃபெக்ஷனு’க்கு தமிழ் வார்த்தையைத் தேடியபோது பூரணத்துவம், பூரணம், உத்தமம், முழுமை ஆகியன தோன்றின. ஒரு தமிழறிஞர் ‘செந்தண்மை’ என்கிற வார்த்தையைப் பரிந்துரைத்திருந்தார். அதுவும் எனக்குப் பிடித்தது. “அந்தணர் என்போர் அறவோர் மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலான்” என்கிற குறள் நினைவுக்கு வந்தது.
செந்தண்மையில் உள்ள “தண்’ என்கிற வார்த்தை குளுமையைக் குறிக்கிறது. எனவே தண்ணீர் என்றால் குளிர்ந்த நீர்தான். சுடு தண்ணீர், பச்சைத் தண்ணீர், குளிர்ந்த தண்ணீர் போன்ற வார்த்தைகள் மிகவும் புழக்கத்தில் உள்ளன.
இந்த ‘செம்மை’ எனும் சொல்லே பர்ஃபெக்ஷன் என்கிற வார்த்தைக்கு ஏற்ற தமிழ்ச் சொல் என்று தோன்றுகிறது. வறுமையில் செம்மை. செந்தமிழ். செம்மையான தமிழ். முழுமையான, குறையற்ற, பிழையற்ற தமிழ். பாரதி வெகு சரியாக “செந்தமிழை”ப் புகழ்கிறான். தொலைக் காட்சி, பண்பலைத் தமி’லை’ அல்ல. இன்னும் ஒருபடி மேலே போய் “நற்றமிழரை” வாழ்த்துகிறான். ‘ரவுடி’த் தமிழரை அல்ல. ‘செம்மை’ சிகப்பைக் குறிப்பது அல்ல. செம்மை பூரணத்துவத்தைக் குறிக்கிறது. இன்றைய ‘செம கட்டை’ வரையிலும். எனவே செம்மையே போதும்.
‘வறுமையின் நிறம் சிகப்பு’ என்றார் கே. பாலசந்தர். ஆனால் ரஷ்யாவின் ஸ்டாலினும், சீனாவின்
மாவோவும் கொலைகளின் நிறம் மற்றும் கொடுமையின் நிறம் சிகப்பு என்பதையும் சரித்திரமாக்கி விட்டார்கள். செம்மை நிறங்களுக்கு அப்பாற்பட்டது. இந்தியாவில் சிகப்பு, காவி என்பனவெல்லாம் ஒவ்வொரு கொள்கைகளின் குறியீடுகள். எல்லா குறியீடுகளையும் (திருநீறு, நாமம்) எதிர்த்த இயக்கம் கூட கறுப்புக் குறியீட்டுக்குள் சிக்கி தானும் இம்மனித சுபாவத்திற்கு விதிவிலக்கல்ல என்பதை பட்டவர்த்தனமாக்கியது.
இந்த செம்மைத் தன்மை வரமா சாபமா? தி ட்ராஜிடி ஆஃப் பர்ஃபெக்ஷன் என்கிறாரே சாப்ளின். அது அவர் பார்வை. ஹெவன் ஈஸ் பீயிங் பர்ஃபெக்ட் என்கிறார் ரிச்சர்ட் பாஃக். அது அவர் பார்வை. அந்தச் சூழ் நிலை.
ஒரு சரியான சொல்லை சொல்வது எழுதுவது எண்ணுவது எல்லாமே செம்மைத் தன்மைதான். அவ்வார்த்தை கிடைத்ததும் வரும் சுகம் அமைதியானது. அசோகமித்திரன் சொல்லியது போல் பள்ளியில் தமிழ் வகுப்பில் வியாசம் என்று ஒரு பயிற்சி இருந்தது. அவ்வகுப்புகள் மிக இனிமையானவை. நம் கற்பனையின் சுவையை பள்ளி நேரத்திலேயே சுதந்திரமாக அனுபவிக்கலாம். அப்போதே தமிழ் மீதான
காதல் செழித்துப் படர ஆரம்பித்தது. உணருவது எல்லாவற்றையும் துல்லியமாகச் சொல்ல முடிகிற ஒரு மொழி நம் உதவிக்கு இருக்கிறது. அதிலுள்ள இசைவும், தெளிவும் ஆனந்தம். ஆங்கிலம் பயின்றதும் அதே போல் ஆனந்தங்கள் அதிலும் நிகழ ஆரம்பித்தன.
சரியான சொல் ஒரு தொடர் வேட்கையானது. இதில் பிரக்ஞை (சொல்வனம்) ரவி சங்கர் மிகவும் கவனம் செலுத்துபவர். உச்சரிப்பும் இவர் கவனம் பெறும். எம்மொழியானாலும் எழுதப்படுவது சரியான சொல்லா, எழுதப்படும் உச்சரிப்பு சரியான உச்சரிப்பா என்பதில் இவர் காட்டும் அக்கறை பிறருக்கும், தலைமுறைகளுக்கும் மிகவும் பயனுள்ளது. இவ்வேட்கை இருந்தால் வாழ்நாள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்கலாம்.
ரவிசங்கரிடமிருந்துதான் நான் ‘முதலியம்’ என்கிற வார்த்தையைக் கற்றுக் கொண்டேன். ‘கேபிடலிஸம்’ முதலாளித்துவம் என எப்படி மொழிபெயர்ப்பானது? எத்தனை பத்தாண்டுகளாக உபயோகத்தில் இருக்கிறது. ‘கேபிடல் என்றால் முதல். கேபிடலிஸம் முதலியம். எவ்வளவு சரியாக இருக்கிறது. இதே போல் ஒளிப்படம் என்கிற சொல்லையும் அவரிடமிருந்துதான் தெரிந்துகொண்டேன். ஃபோட்டோ என்பதற்கு தமிழில் சாதாரணமாக புகைப்படம் என்றே சொல்கிறோம். ‘ஃபோட்டான்’ என்பதே ‘ஒளித் துகள் என்கையில் ‘ஃபோட்டோவை ஒளிப்படம் என்பது எத்தனை சரியாய் இருக்கிறது. சென்ற முறை ஓட்டுநர் உரிமம் வாங்கச் சென்ற இடத்தில் ஃபோட்டோ எடுக்கும் இடத்தில் “நிழற்படம்” என்று குறிப்பிட்டிருந்தார்கள். இதன் அறிவியல் தெரிந்த ஒருவர் இதில் எது சரி என்று கேட்டபோது ஒளிப்படமே சரி என்கிறார்.
‘ஹோட்டல்’ என்பதை சிவாஜி மூன்றாம்தரப் படங்களில் கூட ‘ஹொடேல்’ என்பார். பாரதி மணி சார் ‘ஸ்வீட்’ எனபதை ‘ஸூட்’ என்றால் சூட் ஃபைல் பண்ணி விடுவார்.
பிரசுரம் என்கிற வார்த்தைக்குப் பதிலாக சிலர் பதிப்பு என்கிற வார்த்தையை உபயோகிக்கிறார்கள். இந்தக் கதையை பிரசுரிக்கலாம் என்பதும் பதிப்பிக்கலாம் என்பதும் ஒரே பொருளில் பயன் படுத்தப் படுகின்றன. பதிப்பு என்கிற வார்த்தை பலரால் ப்ரின்ட் என்கிற ஆங்கில வார்த்தைக்கு மொழிபெயர்ப்பாக
உபயோக்கிக்கப் பட்டு வருவதால் பிரசுரம் என்றால் வெளியிடுவது என்றும் பதிப்பு என்றால் அச்சிடுவது என்றும் தோன்றுகின்றது.
Thread என்கிற இணைய வார்த்தை ‘திரி’ என்று குழுமங்களில் பெயர்க்கப் படுகிறது. திரி என்றதுமே வெடி நினைவு வருகிறது, தீபத்தின் திரியை விட. அதனால் இழை என்கிற சொல் இன்னும் பொருத்தமானதாகப் படுகிறது.
அதே போல் புனைவு, அ-புனைவு. ஃபிக்ஷனுக்கும் நான் ஃபிக்ஷனுக்கும். இவற்றைவிட ‘கற்பனை’ மற்றும் ‘கட்டுரை’ உவப்பானவையாக இருகின்றன. கட்டுரையிலும் ஓரளவு கற்பனைக்கு இடம் உண்டு. விஷுவலைஸேஷன். அ-புனைவு அந்தப் பொருளைத் தருவதில்லை.
படைப்பு என்பது பெரிய வார்த்தை. எழுத்து என்பதுதான் சரியானது. இது அடிப்படையில் re-creation தான், என்றும் creation இல்லை. வேறொரு கட்டுரையில் இது பற்றி கொஞ்சம் விரிவாகச் சொல்லியிருக்கிறேன்.
படைப்பாளி! அப்பாடி எவ்வளவு பெரிய வார்த்தை. நாம் அதிக பட்சம் துணையிருக்கலாம், கவனத்தைக் குவிக்கலாம், ஒளி பாய்ச்சலாம் அவ்வளவுதான். ஒரு விவசாயி எழுதுகிறவர்களை விட சிறந்த படைப்பாளி. வில்லியம் ஃபாக்னர் அதனால்தான் தன்னை ஓர் எழுத்தாளர் என்பதைவிட தொழில் முறை விவசாயி என்று சொல்லிக் கொள்வதையே விரும்பினார் போலும்.

இதேபோல் திராவிட இயக்கம் என்கிற வார்த்தை. ஜவஹர்லால் நேரு சொன்னது போல் பாக்கி மூன்று மாநிலங்களிலும் ஒரு முணுமுணுப்பு கூட இது குறித்து இல்லாத போது இது திராவிட என்கிற அடை மொழிக்குச் சற்றும் பொருந்தாது. தமிழ் இயக்கம் என்றால் அது தொல்காப்பியருக்கும் முன்பிருந்தல்லவா ஆரம்பிக்கிறது? தமிழர் இயக்கம் என்றால் என்றால் அரசர்கள், மாமன்னர்கள், சேர சோழ பாண்டியர்கள், புலவர்கள், கவிஞர்கள், எண்ணிலடங்கா சுதந்திரப் போராட்டத் தியாகிகள், தமிழ் அறிஞர்கள், இலக்கிய வாதிகள், சமூக சேவகர்கள், ஸ்தபதிகள், வணிகர்கள், ஆசான்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சித்தர்கள், கலைஞர்கள், தர்மத்தையும், நியாயத்தையும் கலாச்சாரத்தையும் காப்பாற்றி வரும் கோடிக்கணக்கான சாமன்யர்கள் முதலிய அனைவரையும் கொண்டதல்லவா அவ்வியக்கம்? சமூக, தத்துவ, பொருளாதார, ராஜரீக, அரசியல், கலாச்சார, பண்பாட்டு, கலை, இலக்கிய, ஆன்மீக ஜீவ நதிகள் சேர்ந்த அநாதியான கடலல்லவா அவ்வியக்கம்? நாம் கேபிடலிஸத்தை முதலாளித்துவம் என்பது போல் திராவிட இயக்கம் என்பதையும் ஒரு நோக்கத்தோடு, சரியான பார்வையின்றி சின்னஞ்சிறியதாய் சுருக்கி விட்டோம். இது ஆயிரக் கணக்கான ஆண்டுகளை உள்ளடக்கிய தமிழக அரசியல் இயக்கத்தில் ஒரு கால கட்டத்தில் ஒரு பிரிவினரின் இயக்கம். இதை கழக அரசியல் இயக்கம் என்று சொல்லலாம். ”திராவிட’ என்கிற சொல் வேண்டுமென்றால் திராவிடர் கழக அரசியல் இயக்கம் என்று சொல்லலாம்.
‘கல்சர்’ என்பதற்கும் ‘கலாச்சாரம்’ என்பதற்கும் தமிழ்ச் சொல் ‘பண்பாடு’ என்பதை சரியல்ல என்று ஜெயமோகன் சொல்லியிருக்கிறார். இது டி.கே.சி. போன்ற மாபெரும் தமிழறிஞர் புழக்கத்துக்குக் கொண்டு வந்த வார்த்தை எனினும் பண்பாடு எப்போதுமே ஒரு நேர்மறையான சொல்லாகவும், கன் கல்சர் அல்லது துப்பாக்கிக் கலாசாரம் என்பன போன்ற எதிர்மறை இடங்களில் பண்பாடு என்கிற வார்த்தை சரியாக வருவதில்லை என்பதையும் அவர் எடுத்துக் காட்டியிருப்பார்.
‘பாப் ம்யூசிக்’ என்பதை பரப்பிசை என்று மொழிபெயர்த்து உலவ விட்டிருக்கிறார்கள். அடிப்படையிலேயே தவறு என்று தெரிகிறது. (இதை முதலில் ஏற்ற ஜெயமோகன் பின் மாற்றிக் கொண்டார் என்று நினைக்கிறேன்) பரப்புதலுக்கும் பாபுலர் என்பதற்கும் என்ன சம்பந்தம். பாபுலர் என்பது பீபிள் என்பதிலிருந்து வருகிறது. இது ஜனங்கள், மக்கள் சம்பந்தப் பட்டது. அதே சமயம் மக்களிசையும் இல்லை. எனக்கு சம்ஸ்க்ருதம் உட்பட பிற மொழிகளின் மீது மேல் வெறுப்பு ஏதும் இல்லாமையால் ஜனரஞ்சகம் எனக்கு மனரஞ்சகமாக இருக்கிறது. அதற்காக நாள், மலர், காசு, பிறப்பு போன்ற நற்றமிழ்ச் சொற்களுக்கு அடாவடியாக வலிந்து டே. புஷ்பம், கேஷ், ஜனனம் என்கையில் துன்பமாக இருக்கிறது.
ஸ்வாமிநாதன், சுவாமிநாதன், சாமிநாதன். இவை வகுப்புகளையும் சாதி அடுக்குகளையும், வர்க்கத்தையும் குறிப்பவை என்று ஓர் எண்ணம் பரவலாக இருக்கிறது. உ.வெ.சாமிநாதையர், வெங்கட் சாமிநாதன், ந.முத்துசாமி, சுந்தர ராமசாமி, ஆர்க்காட் வீராஸ்வாமி இதைப் பொய்ப்பிக்கிறார்கள், ஒருவேளை இக்காலத்துக்கு மெய்ப்பிக்கிறார்கள். வீராஸ்வாமிக்கு பகுத்தறிவு எண் ஜோதிடம் காரணமோ என்னவோ? ஜெயலலிதாஆ சசிகலாஆ வுக்கும் அஃதே துணை.
சரியான சொல் ஒரு பெரு மகிழ்ச்சி. Survival of the fittest என்றுதான் டார்வின் தியரியைச் சொல்கிறோம். ஃபிட்டஸ்ட் என்பதுதான் சரியான வார்த்தை. ஸ்ட்ராங்கெஸ்ட் டோ, பிக்கெஸ்ட்டோ (biggest) இல்லை. ஜெயகாந்தன் ஒரு சமயம் “சுகமாய் இருப்பதுதான் ஞானம்” என்றார். கூட இருந்தவர் “ஆமாம் ஜே.கே. நல்லவனாய் இருப்பதுதான் ஞானம்” என்றார். “நான் சொன்னது சுகமாய் இருப்பது” என்று ஜெயகாந்தன் அதைச் சரி செய்தார். சுகமாய் இருப்பது சாதாரண விஷயம் இல்லை. மனம் அடங்கிய வேளையில்தான் ஒருவர் சுகமாய் இருக்க முடியும். கடன்கள் முடிந்து, பணிகள் ஓய்ந்து, எண்ண அலைச்சல்கள் இல்லாதபோதுதான் உண்மைச் சுகம். உண்மையிலேயே ‘சும்மா இருப்பது மட்டும்தான் சுகம்’. சும்மா இருக்கப் பார்க்கையில் தெரியும். சும்மா இருக்க முடியாது என்பது. பாக்கி கொஞ்ச நேர சந்தோஷங்கள். காலி ஆனதும் தலை வலிக்கும்.
சொல்லின்பம் மந்திரம் போல் வேண்டுமென்றான் மகாகவி பாரதி. மந்திரம் என்ற சொல்லின் பொருளை ஓர் உரையாடலில் ஜே. கிருஷ்ணமூர்த்தி இப்படி விளக்கியிருப்பார். : ‘மன்’ என்றால் எதுவாகவுமே ஆகாதிருப்பதை தியானித்தல். (meditate on not becoming) ‘த்ரா’ சுய லாபத்தை அடியோடு விட்டுவிடுதல். (abandon self-interest altogether).
முன் காலத்திலெல்லாம் பத்திரம் போன்ற எழுத்து சான்றுகள் கிடையாது. வாய்
வார்த்தையே அப்படிப் பேணி காப்பாற்றப் பட்டது என்று படிக்கிறோம். அது
எத்தனை தூரம் உண்மை என்பது தெரியாது. ஆனால் அரசன் ஒருவனைத் தவிர
சொத்துரிமை இல்லாத அனைத்து குடிகளும் வாய் வார்த்தையாலேயே எல்லாவற்றையும்
செய்திருக்கக் கூடும். அதை பெரும்பாலானவர்கள் உயிர் போல்
காப்பாற்றியிருக்கவும் கூடும். வெகு சிலர் ஏமாற்றியிருக்கவும் கூடும். ஜானகிராமனின் ஒரு கதையில் கொடுத்த கடனை முதல் நாள் இரவு திருப்பி வாங்கிக்கொண்டு விட்டு பத்திரத்தை மறுநாள் காலை தராமல் ‘எங்கே பணம் கொடுத்தே? கனவு ஏதவது கண்டாயா” என்று ஒரு விதவையின் சகோதரனை
ஏமாற்றுபவரும், அவர் பாவமும் களையட்டும் என்று கங்கையில் முழுக்குப்
போடும் அவ்விதவையும், அச்சகோதரனும், வருவார்கள். ஜானகிராமன் எழுத்து
உரத்துப் பேசாத தர்மத்தின் குரல்.
ஒரு வார்த்தை செய்திருக்கும் பூகம்பங்களை நாம் புராணத்தில் படிக்கிறோம்.
ஒரு வார்த்தையைச் சேர்த்து துரோணரை வீழ்த்துகிறான் தருமன். அவன் தேரும்
தரைக்கு வீழ்கிறது. வரம் வேண்டும் பக்தனின் ஒரு வார்த்தையைத் திரித்து
அருள் மிகு கடவுளர் (!)அவனை வருடத்தில் ஆறு மாத காலம் உறக்கத்தில்
ஆழ்த்துகிறார். கும்பகர்ணன். தசரதனின் வார்த்தையை அவனே விரும்பாத போதும்
சிரமேற்கொண்டு காப்பாற்ற கானகம் செல்கிறான் இராமன்.
ஒரு நோக்கில் செம்மையான வார்த்தை முடிவான முக்கியமான விஷயம் இல்லை. கனிவான செயல்களுக்கும், கனிந்த இதயத்திலிருந்து எழும் செயல்களுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறதல்லவா? கை கூப்புவது, புன்னகைப்பது, இன்சொல் பேசுவது, மரியாதை காட்டுவது எல்லோருக்கும் பழக்கத்தால் வந்துவிடும். ஒப்பனை நேயம் நமக்குத் தெரியாததா என்ன? ஆனால் நேயத்தில் ஆழ்ந்த இதயம் கலையின் உந்நதத்தைப் போல் அரிதான விஷயம். அது செய்வதெல்லாம், சொல்வதெல்லாம் சரியே. இதே மாதிரி பயிற்சியால் வரும் செம்மையான வார்த்தையை காட்டிலும் செம்மையின் ஊற்றாக, மூலமாக, அமைதியாக இருக்கிற புனித சுரபி அதி முக்யமானது.
நான் ஒரு சினிமாக் கதையைப் படித்தேன். பெயர் நினைவில்லை. ஓர் இராணுவ அதிகாரியை தண்டனைக்குள்ளாக்க ஒரு விலைமாதுவை பொய் சாட்சியாக ஏற்பாடு செய்கிறார்கள். அந்த இராணுவ அதிகாரி தன் வழக்கமான வாடிக்கையாளர்தான் என்று அவள் சொல்ல வேண்டும். அவள் ‘நான் எதற்குச் சொல்லவேண்டும்? அவர் என் வாடிக்கையாளர் இல்லையே” என்கிறாள். அவளுக்கு அது புரியவேயில்லை. எப்படிச் சொல்வது எப்படிச் சொல்வது என்றபடியே இருக்கிறாள். துன்புறுத்துதல்களும் அவளை மாற்றுவதில்லை. எதற்காக பொய் சொல்லவேண்டும் என்பதுதான் அவள் நிலை. அது லட்சியமெல்லாம் இல்லை. அவளுக்கு அது புரியவேயில்லை. இறுதியில் உயிரையும் விடுகிறாள்.
கவர்னர் ஜெனரல் ராஜாஜியை அவராது நெடு நாளைய நண்பர் பெரியார் ஒரு இரயில்
நிலையத்தில் ரயில் கம்பார்ட்மென்டில் சந்திக்கிறார். அச்சந்திப்புக்குப் பிறகு தன்னை விட 46 வயது இளைய மணியம்மையை மணம் செய்து கொள்கிறார். இயக்கம் உடைகிறது. காலம் பூர இந்த இழிவிற்கும், பிளவிற்கும் ராஜாஜிதான் காரணம் என்று தூற்றுகிறார்கள். 1949ல் இது நடக்கிறது. 1972ல் ராஜாஜியும், 1973ல் பெரியாரும் காலமாகிறார்கள். இரு தலைவர்களின் மறைவுக்குப் பின் உண்மை நிலை திராவிடர் கழகம் வெளியிட்ட 21.2.1949ல் ராஜாஜி பெரியாருக்கு எழுதிய கடிதம் மூலமாக வெளியாகிறது. அதில் ராஜாஜி எழுதியுள்ள வரிகள் : “தங்களுடைய வயதையும், நான் தங்கள்பால் வைத்திருக்கும் அன்பையும் கருதி ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்த வயதில் விவாக எண்ணம் வேண்டாம் என்பது என் அபிப்பிராயம்”. தன் நண்பரின் பிரச்னைக்கு தான் சொன்ன தீர்வு பற்றிய தகவல் எங்கள் இருவருக்கு மட்டுமே ஆனது. பிறர் பார்வைக்கல்ல. உலகம் எத்தனை அபாண்டமாகத் தூற்றியபோதும் இந்த மற்றொருவரின் தனிப்பட்ட விஷயம் பகிரங்கப்படுத்தப்பட மாட்டது என்பதுதான் சொல்லப் படாத செம்மையின் புனிதம். (திரு சுப்பு அவர்கள் துக்ளக் பத்ரிகையில் எழுதி வரும் ‘திராவிட மாயை’ தொடரில் இதைக் குறிப்பிடுகிறார். திரு. பழ. கருப்பையா அவர்களும் அவர் எழுதிய தொடரில் விவரமாக இது பற்றி எழுதியிருக்கிறார்)
இந்தப் புனிதம் சத்யஜித் ராயின் பதேர் பாஞ்சாலியில் சோகக் கடலிடையில் மலரும். இறந்து போன அக்கா ஒரு செல்வந்தர் வீட்டிலிருந்து (யாருமறியாது ஆனால் சந்தேகத்துக்கு இடமாகி) எடுத்து வந்த ராக்கொடி பரணில் அகப்படுகையில் அதை யாரிடமும் சொல்லாமல் ஒரு குட்டையில் விட்டெறிந்து விடுவான் சிறுவன் அப்பு. ஒரு வர்த்தைப் பேசப் பட மாட்டாது. அவனுக்கும் அவன் அக்காவுக்குமான உறவு எனபதையும் மீறி ஓர் உயிர் இன்னொன்றுக்கு செய்யும் அன்பு. பதேர் பாஞ்சாலியின் ஆன்மா இந்தக் காட்சி என்று நான் நினைக்கிறேன்.
இராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு முறை ஒருவர் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி விட்டு மறந்து விடுகிறார். இரவு நினைவுக்கு வந்ததும் எழுந்து அவர் வீடுவரை சென்று வாசற்படிக்கு அப்புறம் உட்புறமாக அடியெடுத்து வைத்து விட்டு திரும்புகிறார் ( நண்பர் திரு. மோதி ராஜகோபால் சொன்ன கதை)
கோவையில் நண்பர்களோடு பேசுகையில் வளர்ந்த மேலை நாடு ஒன்று பற்றி ஒருவர்
சொன்னார் “அங்கு சிகப்பு விளக்கு சாலையில் எரிகையில் கண்ணுக்கெட்டிய
தூரத்துக்கு யாருமே தென் படவில்லை என்றாலும் வாகன ஓட்டிகள் வண்டியை
நிறுத்திவிட்டு பச்சை விளக்கு வந்ததும் தான் போவார்களாம், எவ்வளவு
முட்டாள் தனம்.” முட்டாள்தனமா இல்லையா என்பதை முடிவு செய்யும் உரிமையை
படிக்கும் உங்களுக்கே அளிக்கிறேன்.
சொல் ஒரு தெரிதொடர்புக் கருவி. கம்யூனிகேஷனை தொடர்பு என்கிறார்கள்.
கான்டாக்ட் என்பதற்கும் அதுவே (இன்னமும்) சரியாக இருக்கிறது. தெரியப்
படுத்துதல் என்னும் சொல் இன்ஃபார்ம் என்பதற்கும் சரியாக இருக்கிறது. ஏன் ‘தெரிதொடர்பு’
என்று சொல்லக் கூடாது? சொல் சரியாக இருக்க இருக்க தெரிதொடர்பு சரியாக
ஆகும்.
சொல் வெறும் தோற்றம்தான். குறியீடுதான். உள்ளிருந்து பெருகும் ஊற்று
செம்மை எனின், கருவி தானே அமையும். ‘உள்ளத்தில் உண்மை ஓளி உண்டாயின்’
என்று பாரதி இதைத்தான் சொல்கிறான்.
“கற்பெனப்படுவது சொல் திறம்பாமை” யும் இதுதான். கற்பு என்பது
செந்தில் ஒரு படத்தில் வந்து சொல்வதைப் போல் “ரப்பர் வைத்து (அல்லது
வைக்காமல்) அழிப்பது” போன்ற வஸ்துவாக கிட்டத்தட்ட hymen னுக்கு இணையான
தமிழ்ச் சொல்லாக இருக்கிறது. ஏதோ ஒரு குடத்து நீரில் ஒரு குவளை எடுத்தால்
அது மட்டுப் படுவது போன்றும் ஒரு சித்திரம்.
மனம் தான் தொட்ட முழுமை அனைத்தையும் மூளியாக்கிவிட்டு பூரணத்துக்கு
பொய்யாய் ஏங்கும் விசித்திர மாயை. அது அமைதியாகி இதயம் மூலம் வாழ்வு
நேரிடுகையில் பூரணத்துவம் அங்கே எதேச்சையாய் நிலவும். “As you live
deeper in the heart the mirror gets clearer and cleaner” - ரூமி.
முழுமையென்னும் கரைகள் அற்ற கடலில் முகர்வதும், நுகர்வதும் அதைக் குறைவு
செய்வதே இல்லை.
“அங்கிருப்பதும் பூரணம்; இங்கிருப்பதும் பூரணம். பூரணத்திலிருந்து பூரணம் உண்டாகி யுள்ளது. பூரணத்திலிருந்து பூரணத்தை எடுத்த பின்பும் மிஞ்சி நிற்பதும் பூரணமே’ - ஈசோபநிடதம். முதல் ஸ்லோகம்.
ஆக இந்த செம்மை, பூரணத்துவம் ஒரு இலட்சியம் அல்ல. இலட்சியமாக இருக்கலாம்.
ஆனால் இது இவ்வுலகில் காலூன்றி இருப்பது. இதன் ஊற்று இவ்வாழ்வின்,
சுழலும் இப்பூமியின், இப்பிரபஞ்சத் துளியின் சிருஷ்டியின் தூய்மை.