FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Sunday, May 29, 2011

தி.ஜானகிராமன் குறித்து அசோகமித்திரனுடன் ஒரு பேட்டி


தி.ஜானகிராமன் குறித்து அசோகமித்திரனுடன் ஒரு பேட்டி

வ.ஸ்ரீநிவாசன் | பிரசுரம்: சொல்வனம் : இதழ் 50 | 24-05-2011 
ami2
தி.ஜானகிராமன் சிறப்பிதழ் பற்றிச் சொல்லி ஏதாவது எழுதித்தர முடியுமா என்று தொலைபேசியில் கேட்ட போது அசோகமித்திரன் தனக்கு இருக்கும் ஆரோக்யக் குறைவில் (கை வலி, மற்றும் கண் தொந்திரவு) அது சாத்யமில்லை என்றார். பேச்சு வாக்கில் இரண்டொரு கருத்துகளைச் சொன்னார். அப்போதுதான் ஒரு பேட்டியே எடுத்துவிடலாமே என்ற எண்ணம் தோன்றியது. நான்கைந்து நாட்களில் மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது நிகழ்ந்த உரையாடலில் பெற்ற பேட்டி இது.
சொல்வனம்: தி.ஜா. பற்றி, அவரது நாவல்கள், சிறுகதை பற்றிச் சொன்னீர்கள். இன்னும் விரிவாக ஒரு பேட்டியாக இதை அமைத்துக் கொள்ளலாமா? உங்களுக்கு அது முடியுமா?
அசோகமித்திரன்: அது கொஞ்சம் கஷ்டம். ஜானகிராமனைப் பற்றி அதற்குள் என்ன சொல்லிவிட முடியும். இப்போ என் கையில் ஒரு நண்பர் அனுப்பிய ‘நதானியல் வெஸ்ட்’ பற்றிய கருத்துரை இருக்கிறது. அவர் 1940களிலேயே இறந்து விட்டார். சினிமாவுக்கெல்லாம் எழுதி இருக்கிறார். இப்போது அவர் எழுதிய இரண்டு நாவல்களை ‘க்ளாஸிக்ஸ்’ என்கிறார்கள். 70 வருடங்களுக்குப் பிறகு. ஜானகிராமன் மறைந்து எத்தனை ஆண்டுகள் ஆகி இருக்கும்?
சொ.வ.: 30 வருடங்கள்.
அ.மி.: இது ரொம்ப சீக்கிரம் இல்லையா? அவர் பற்றிய உணர்ச்சிப் பூர்வமான கணிப்புகள் அடங்கிய பிறகுதான் சொல்ல முடியும்.
சொ.வ.: அது சரி, உங்களுக்கு அவர் எழுத்துகள் எப்போது எப்படி அறிமுகம்?
அ.மி.: என் நண்பர் ராஜாமணிதான் 1950 களில் தி.ஜா.வின் ‘சிகப்பு ரிக்‌ஷா’ வை மிகவும் சிலாகித்து என்னிடம் படிக்கக் கொடுத்தார். என்னமோ எனக்கு அது அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால் அவர் எழுதிய ‘அடுத்த..’ என்கிற கதை ரொம்பப் பிடித்தது. பிறகு இல்லஸ்ட்ரேடட் வீக்லியில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டு வந்த கதைகளை அந்த நண்பர் மூலமாக படித்தேன். எனக்குப் பிடித்தது.
சொ.வ.: அவரோடு எப்படி பரிச்சயம்?
அ.மி.: எஸ்.வி.சகஸ்ரநாமம் வீட்டில்தான் அவரைப் பார்த்தேன். அவருடைய ‘நாலு வேலி நிலம்’, ‘வடிவேலு வாத்தியார்’ முதலிய நாடகங்களை சகஸ்ரநாமம்தான் மேடையேற்றினார். நாலு வேலி நிலம் திரைப்படமாகக் கூட வந்தது. அதில் சகஸ்ரநாமத்துக்குப் பெரிய நஷ்டம். நாலு வேலி நிலத்தை சாதாரணமா ஆயிடக் கூடிய கதையை, ரொம்ப நன்னா, தளுக்கா எழுதியிருந்தார். வடிவேலு வாத்தியார் சகஸ்ரநாமத்துக்கு அவ்வளவா பிடிக்கலை. அப்புறம் ‘மோகமுள்’ நாவல் வந்தது. அப்போவெல்லாம் ஆயிரத்து நூறு காப்பிகள் போடுவார்கள். மொத்தமா ஸ்டாக் பண்ணி வைப்பார்கள். தயாரான புத்தகங்களை விற்க முடியாதபடி ஒரு சிக்கல் வந்தது. அப்போ என்னிடம் தி.ஜா. “இது கொஞ்சம் ‘unwieldy’ யா இருக்கு, ‘streamline’ பண்ணு,”ன்னார். நானும் அதை எடுத்துக் கொண்டேன். ஆனால் அதை செய்து முடிக்க முடியலை. ஒண்ணு அவர் வயசிலே பெரியவர். அப்புறம் ஒரு அட்மைரரால அந்த வேலையைச் செய்ய முடியாது. ஆனா அந்த மாதி எடிட் டெல்லாம் பண்ணாமலே அந்த நாவல் வெளி வந்து பேரும் புகழும் பெற்றது. சில இடங்கள் அதுலெ பிரமாதமா வந்திருக்கும்.
சொ.வ.: மோகமுள், மற்ற நாவல்கள் பற்றி என்ன நினைக்கிறீங்க?
அ.மி.: மோகமுள்ளில் யமுனாவைப் பெண் பார்க்க வர்ர இடம் பிரமாதமா எழுதியிருப்பார். அதே மாதிரி ‘க்ளைமாக்ஸ்’ஸும் ரொம்ப நன்னா இருக்கும். சில இடங்கள் சரியா வந்திருக்காது. அவர் நாவல்களில் இந்த ‘inconsistencies’ இருந்தது. பின்னாடி அம்மா வந்தாள் வரச்சே ஃபார்ம் அவருக்கு கை வந்துடுத்து. ஆனா அந்த நாவல்லே எல்லாருக்கும், அவனோட அப்பாவுக்கு, அந்தப் பெண்ணுக்கு (இந்துவுக்கு), எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் அவனுக்கு மாத்திரம் தெரிந்திருக்காது. அந்த மாதிரி வரும். பின்னாடி மரப்பசு, நளபாகமெல்லாம் சரியா வரல. நளபாகத்துலேயாவது சில இடங்கள் நன்னா இருக்கும். ரெண்டு நாவலும் கணையாழிலதான் வந்தது. மரப்பசுவைப் படித்து விட்டு நா.மகாலிங்கம் கணையாழி சந்தாவையே கேன்சல் செய்துவிட்டார். அவரது புகழ் பெற்ற நாவல்களை விட உயிர்த்தேன், மலர் மஞ்சம், செம்பருத்தியெல்லாம் நன்னாருக்கும்.
சொ.வ.: அவர் சிறுகதைகள்?
thija-logo4அ.மி.: “Essentially a far better short story writer than a novelist.” நிறைய கதைகள் நன்னாருக்கும். ஜானகிராமனுடைய நாவல்களை விட சிறுகதைகள்தான் மிகவும் சிறப்பானவை என்பது என் அபிப்ராயம். அவர் சிறுகதைகளில் பெரிய master. தமிழின் மிகச்சிறப்பான சிறுகதைகளை எழுதியிருக்கிறார். பாயசம், கண்டாமணி ஆகியவை மிகவும் சிறந்தவை. ஜானகிராமன் கதைகள் கருணையை மட்டுமே சொல்பவை என்று பொதுமைப் படுத்திவிட்டார்கள். ஜானகிராமனின் எத்தனையோ சிறுகதைகளில் - பாயசம் கதையில் வரும் பெரியவரைப் போல - மனித மனத்தின் வேறு குணங்களையும் பதிவு செய்திருக்கார். ‘அடுத்த…’ என்றொரு சிறுகதை பற்றி சொன்னேனே. அது ரொம்பவும் ஏழ்மையில் கஷ்டப்படும் ஒரு குடும்பத்தைப் பத்தின கதை. பல குழந்தைகள் ஏற்கனவே. பிரசவ வேதனையில் அந்தப் பெண் துடிச்சிண்டிருப்பா. ஆம்புலன்ஸுக்குச் சொல்லி அது வந்து சேர தாமதமாயிடும். ஆம்புலன்ஸ் வருவதற்குள் வீட்டிலேயே பிரசவமாயிடும். அப்போ அந்தப் பெண்ணோட கணவன் சொல்வான் “அடுத்த முறை ஆம்புலன்ஸுக்குக் கொஞ்சம் சீக்கிரமே சொல்லி வச்சுடணும்.” ஏழ்மையை ரொமாண்டிசைஸ் செய்யாமலும், இழிவு செய்யாமலும் - அவங்களோட சந்தோஷம், துக்கம் எல்லாவற்றையும் உள்ளது உள்ளபடி ஜானகிராமனால பதிவு செய்ய முடிஞ்சுது.
சொ.வ.: உங்கள் கதைகளை அப்போதே அவர் படிச்சிருந்தாரா?
அ.மி.: சொல்லப் போனால் அவர் என் கதைகள் எல்லவற்றையுமே அப்போது படிச்சிருந்தார். ‘கலைமகள்’லெ எழுதறதுல அதுதான் அட்வான்டேஜ். அவர் கலைமகளை விடாம படிச்சிருந்தார். ஒரு வாட்டி நான் மதிய உணவுக்குப் பின் அலுவலகத்துக்குப் போயிண்டிருந்தேன். ஆள்வார்பெட் சந்திப்பில் அப்போ அங்கே அவரை எதேச்சையாக சந்தித்தேன். நல்ல வெயில். ஆனால் ரொம்ப நேரம் நின்னு என் கதைகளை ரொம்ப சிலாகிச்சுப் பேசினார்.
சொ.வ.: ஓய்வுக்குப் பின் அவர் சென்னை வந்த பிறகு தொடர்பு இருந்ததா?
அ.மி.: இருந்தது.
சொ.வ.: அவர் கணையாழி எடிடராக இருந்தார் இல்லையா? சேர்ந்து பணியாற்றி இருக்கிரீர்களா?
அ.மி.: அவர் ரிடயர் ஆன பின்னால்தான் கணையாழி எடிடராக இருந்தார். அப்போ கூட கணையாழி ஆபீஸுக்கு எப்பவாவதுதான் வருவார். அவருக்கு ‘மேனுஸ்க்ரிப்ட்’ களைப் படிக்கப் பிடிக்காது. நான் எல்லா மேனுஸ்க்ரிப்ட்களையும் படிப்பேன். நானும் 1983ல் கணையாழியை விட்டு வெளியேறி விட்டேன்.
சொ.வ.: சங்கீதம் பற்றி பேசுவாரா?
அ.மி.: பேசவே மாட்டார். ஒருவேளை எனக்கு சங்கீதம் தெரியாது என்பது அவருடைய அபிப்பிராயமா இருந்திருக்கலாம். மதுரை மணி ஐயர் அவருக்கும் சிட்டி சுந்தரராஜனுக்கும் ஃபேவரைட் என்பது மட்டும் தெரியும்.
சொ.வ.: பிற இலக்கிய நண்பர்கள் பற்றி..
அ.மி.: அவருக்கு ‘ஸ்ட்ராங் லைக்ஸ் அண்ட் டிஸ்லைக்ஸ்’ இருந்தது. அது எழுத்துகளை எடை போடுவதையும் ‘இன்ஃப்ளூயன்ஸ்’ பண்ணித்து. தீபத்தில் எழுதச் சொல்லி பார்த்தசாரதியும், நானும் நிறையக் கேட்டோம். அவர் எழுதவில்லை. க.நா.சு வைப் பிடிக்காது. ‘ஆல்பெர்டோ மொராவியா’ ரொம்ப ஹாட்டா இருந்த நேரம். ‘கன்ஃப்ர்மிஸ்ட்’ னு நினைக்கிறேன், அவருடையது, அது எனக்குப் பிடிக்கும். தி.ஜா.விடம் கேட்ட போது ‘எனக்கு சப்ஜெக்டிவ் ரைட்டிங் பிடிக்காது,’ என்றார். இத்தனைக்கும் மொராவியா சப்ஜெக்டிவ் ரைட்டரே கிடையாது. எம்.வி.வி அவருக்கு ரொம்ப நெருக்கம். ஆனால் ரெண்டு பேரும் வித்யாசமானவங்க. எம்.வி.வி.க்கு நிறைய ‘ஆஸ்பிரேஷன்’கள் இருந்தன. தி.ஜா.வுக்கு அதெல்லாம் கிடையாது. எம்.வி.வி.’நான் தான்யா மௌனி படத்தை முதலில் போஸ்டரில் போட்டேன்’ என்றெல்லாம் சொல்வார். எம்.வி.வி.பற்றிய செமினார் ஒன்றில் நான் பேசியபோது எம்.வி.வி. கண் கலங்கி விட்டார்.
சொ.வ.: உங்கள் கதைகள் பற்றி குறிப்பா ஏதாவது சொல்லியிருக்காரா?
அ.மி.: ‘விபத்து’ ‘நாடகத்தின் முடிவு’ இல்லஸ்ட்ரேடட் வீக்லியில் வந்த ‘ பாஸ்போர்ட் சைஸ் ஃபோட்டோ’ வெல்லாம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது.
சொ.வ.: ஓய்வு பெற்றதும் சென்னையில் ஏன் செட்டில் ஆனார்?
அ.மி.: அவருக்கு ஹவுசிங் போர்ட் ஃப்ளாட் ஒண்ணு அலாட் ஆகி இருந்தது. அப்போவெல்லாம் ஃப்ளாட்டுக்கு அவ்வளவு டிமாண்ட் இல்லை. திருவான்மியூரில் அவர் ஃப்ளாட் இருந்தது. அங்கு வந்து இருந்தார்.
சொ.வ.: பொருளாதார ரீதியாக சௌகர்யமானவர்தானே?
அ.மி.: ரிடயர் ஆயிட்டார். ரொம்ப சௌகர்யம் என்றெல்லாம் சொல்ல முடியாது. கடைசி மூன்று, நாலு வருஷம் எழுதவேயில்லை.
சொ.வ.: இன்றைய காலகட்டத்துல தி.ஜா.வின் இடம் என்னன்னு நினைக்கிறீங்க.
அ.மி.: அதான் சொன்னேனே ‘இட் இஸ் டூ ஏர்லி’. அவரை ‘அப்ஜெக்டிவ்’ வா பார்க்க நாளாகும். அவரை இப்போ ‘டிஸ்ஸ்க்ட்’ பண்ணக் கூடாது. இப்போ எல்லாம் தி.ஜா. தி.ஜா. ன்னு சொல்லலாம். ஒரு பத்து வருஷத்துலே எல்லாம் மாறிப் போயிடலாம். அவரை மறந்து போயிடலாம். கா.ந.சு. செல்லப்பா, எம்.வி.வி. எல்லோரையும்தான். எனக்கும் அதுதான்.
பேட்டி நாள்: 18-5-2011.

4 comments:

natbas said...

சுவையான பேட்டி ஐயா.

அசோகமித்திரன் இவ்வளவு வெளிப்படையாக பேசக்கூடியவர் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை.

// ‘இட் இஸ் டூ ஏர்லி’. அவரை ‘அப்ஜெக்டிவ்’ வா பார்க்க நாளாகும். அவரை இப்போ ‘டிஸ்ஸ்க்ட்’ பண்ணக் கூடாது. இப்போ எல்லாம் தி.ஜா. தி.ஜா. ன்னு சொல்லலாம். ஒரு பத்து வருஷத்துலே எல்லாம் மாறிப் போயிடலாம். அவரை மறந்து போயிடலாம். கா.ந.சு. செல்லப்பா, எம்.வி.வி. எல்லோரையும்தான். எனக்கும் அதுதான். //


உண்மைதான், இதைப் படிக்கும் எந்த ஒரு எழுத்தாளனுக்கும், அவன் எவ்வளவு பெரிய மேதாவியாக இருந்தாலும் தண்டு வடம் சில்லிட்டுவிடும் என்று நினைக்கிறேன்.

அருமையான பேட்டி. நன்றி ஐயா.

V.Srinivasan./வ.ஸ்ரீநிவாசன் said...

மிக்க நன்றி. அசோக மித்திரன் சொல்வதை, கூர்ந்து, முழு கவனத்தோடு கவனித்தால் அவர் தெளிவான அபிப்பிராயங்களை வைத்துள்ளவர் என்பது தெரியும். அவற்றை அவர் உரத்தோ, கவனம் ஈர்க்க வேண்டுமென்றோ சொல்பவரல்ல.

natbas said...

அசோகமித்திரன் சர்ச்சைக்குரிய கருத்துகளை கவனமாகத் தவிர்த்து மத்யமமான விஷயங்களை மட்டுமே சொல்கிறார் என்று பிழையாக நினைத்துக் கொண்டிருந்தேன்.

இனி நான் அவர் கட்டுரைகளைப் படிக்கும் விதம் வேறாக இருக்கும். நன்றி.

V.Srinivasan./வ.ஸ்ரீநிவாசன் said...

அவர் மத்யமமான கருத்துகளைக் கொண்டிருப்பவர் அல்ல. ஆனால் அவரது பாணி மிகவும் வெளிப்படையானது அல்ல. (உ-ம்) சாருவின் ஒரு புத்தகத்துக்கு முன்னுரை அவர்தான். அதில் பல கதைகளை தன் புரிதலுக்கு மீறியவை என்கிற மாதிரி சொல்லியிருப்பார். அவர் அக்கதைகளை ரசிக்கவில்லை என்று நாம் புரிந்து கொள்ளலாம்.