FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Sunday, July 25, 2010

சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரம்

வ.ஸ்ரீநிவாசன் |                                                                           சொல்வனம் : இதழ் 30 23-07-2010 

சடகோபன் இருபத்து மூன்று வயது வரையிலும் தீவிர முருக பக்தனாக இருந்தான். வைணவக் குடும்பத்தில் இது அரிது என்றாலும் அவன் தகப்பனாரிடமிருந்து தொத்திய நம்பிக்கை. அவன் அண்ணன்கள் இருவரும், அக்காக்கள் மூவரும், அம்மாவும் இதற்கென்றே அவனைக் கேலி பேசுவார்கள். பக்கத்திலிருந்த சிவன் கோவிலில் சுப்ரமண்யர் சந்நிதியில் தினம் பனிரெண்டு முறை பிரதட்சணம் செய்வான். அப்போது டி.எம்.சௌந்தரராஜன் பாடிய அருணகிரி நாதர் படப்பாடல்கள் ரொம்பப் பிரசித்தம். அதிலும் ‘முத்தைத் தரு பத்தித் திரு நகை’யைக் கேட்கும் போதெல்லாம் அவனுக்கு அந்தத் தமிழும், குரலும், சந்தமும், கந்தனுமாகச் சேர்ந்து கண்களில் நீர் தளும்பி விடும். அந்தப் பாட்டு கேட்கும் நேரங்களை அவன் நல்ல சகுனங்களாக எடுத்துக் கொண்டான்.
ஒருமுறை பழனி சென்று அதிகாலை பஸ்ஸில் வந்திறங்கி வீடு நோக்கி நடக்கையில் அந்தத் தெருவில் அவனுடைய நெடுநாள் பிரேமையான சகுந்தலா அவள் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து விட்டான். அவள் இவனைக் கவனிக்கவில்லை. அப்போது ஏதோ கோவில் ஒலிபெருக்கியில் ‘முத்தைத் தரு’ வந்தது. அவன் அவளுக்கும் தனக்கும் கல்யாணம் நடந்து விடும் என்பதன் சூசகமான அறிவிப்பாகவே அதை எடுத்துக் கொண்டு அக மகிழ்ந்தான்.
முதலில் மூன்று அக்காக்கள். பிறகு அண்ணன்கள். கடைசி அண்ணனுக்கும் அவனுக்கும் பத்து வயது இடைவெளி. வீட்டில் கடைக் குட்டி என்றால் எல்லோருக்கும் செல்லம் என்பார்கள். அவனளவில் நேர் எதிரிடை. வீட்டில் எல்லோரும் அம்மாவைப் போல் ஒல்லியாக உயரமாக இருக்கையில் இவன் மட்டும் குள்ளமாக குண்டாக. பெரியம்மா அம்மாவிடம் “கடைசி குழந்தையோல்லியோ அதான் உங்க ஆத்துக்காரர் நன்னா அழுந்த சாதிச்சுட்டார். அவர் மாதிரியே அச்சு அசலா அப்படியே இருக்கான்” என்பாள். அதைக் கேட்கையில் சடகோபனுக்கு அவமானமாகவும், கூச்சமாகவும் இருக்கும். வயது ஆக ஆக இவனும் இளைத்துவிட்டான். ஆனால் உயரம் மட்டும் சராசரிதான். அப்பாவின் செல்லப் பிள்ளையாக இருந்தவன் பரம வைரியாக மாறியதற்கு அது மட்டும் காரணமில்லை.
அவனுடைய இருபத்து ஒன்றாம் வயதில் சகுந்தலாவிற்கு கல்யாணமாகிப் போய் விட்டதும் முருகனும் சடகோபனை விட்டுப் போய் விட்டான். இருபத்து ஏழு வயது வரை ஆஞ்சனேய பக்தனாகவும், திருமணத்திற்குப் பின் ராம பக்தனாகவும் ஆனான். வயது நாற்பத்தைந்தில் அவன் பெற்றோர் இருவரும் அவர்கள் சென்ற ஆட்டோவோடு இரயிலில் அரைபட்டு இறந்ததும் யாருடைய பக்தனாக இருப்பது என்று தெரியாமல் போயிற்று.
who-am-i-pic-2வயிற்றுப் பிழைப்பு சகோதர சகோதரிகளை வேறு வேறு ஊர்களில் வாழுமாறு செய்ததும், காசு விஷயத்தில் அப்பா குணம் அப்படியே இறங்கியிருந்ததால் எல்லோரும் அதில் மிகவும் கணக்காக இருந்ததும் அந்தக் குடும்பம் சிதறாமல் இருக்க முக்கிய காரணங்கள் ஆயின. தவிர மாநில அரசு ஊழியரான அப்பாவின் சொற்ப வருமானத்தில் இவர்கள் அடித்துக் கொள்ளவோ, பிரித்துக் கொள்ளவோ ஒன்றும் மிச்சம் இல்லை. பெற்றோரும் ஒவ்வொரு பிள்ளை வீட்டிலும் கொஞ்ச கொஞ்ச நாட்கள் இருந்து சாகும் வரை காலம் தள்ளினர். சென்னையில் இருந்ததாலும், சடகோபனின் மனைவி இருப்பதிலேயே சாதுவாகவும், சீக்காளியாகவும் இருந்ததாலும் அவனோடு அதிக நாட்கள் இருப்பார்கள். எந்த வீட்டில் இருக்கிறார்களோ அப்பாவின் பென்ஷன் பணம் அந்த வீட்டிற்கு.
கோபம் என்ற ஒரே ரசத்தைத்தான் சடகோபனின் அப்பா சதா சர்வ காலமும் அப்யசித்தும் அபிநயித்தும் வந்தார். அதுவும் மகன் ஒல்லியானதோடு அன்றி, முருகனையும் கை விட்டு விட்டான் என்றதும் அவர் கோபத்துக்கு அசைக்க முடியாத காரணம் கிடைத்து விட்டது என்று நம்பினார். பாக்கி மகன்கள் வீட்டிலும் அவர் அப்படித்தான் இருந்தார் என்பது வேறு விஷயம். அம்மாவும் அவருக்கு சளைத்தவளில்லை.
அதனால் அவர்கள் வீட்டில் மாமியார் மருமகள் சண்டையைத் தவிர மாமனார் மருமகள் சண்டைகள் அடிக்கடி நடக்கும். அப்பா அம்மா போனது மிகப் பெரிய அதிர்ச்சியாய் இருந்தது. எனினும் உள்ளூர சடகோபன் இனி வீட்டில் சண்டை குறையும் என்று நம்பினான். வயது நாற்பத்தைந்து ஆகி விட்டது. இனியும் அவன் இவன் ஏன். நம்பினார். அவர் நம்பியதற்கு மாறாக புருஷன் பெண்டாட்டி சண்டையும், வளர்ந்து விட்ட இரு மகன்களோடு இவர்கள் இருவரும் போடும் சண்டைகளும் அதிகரித்தன. மனைவி வேதாவும் முற்றிலும் மாறி விட்டாள் என்பதை அவர் அப்போதுதான் கவனித்தார்.
ஒரு சிலம்பாட்டம் போல் எல்லா சண்டைகளுக்கும் எப்படியோ புயலின் கண்ணாக ஆகி விட முயலும் சடகோபன் எல்லோருக்கும் நல்லவராக நியாயவானாக இருக்க முயன்று எல்லோரோடும் சண்டை போட்டு எல்லாருக்கும் கெட்டவரானார்.
யாருக்கு பக்தனாக இருப்பது என்று தெரியவில்லை என்று சொன்னோமல்லவா. பெற்றோர் விபத்தில் மறைந்தது மற்றும் மகன்கள் இருவர் தந்த நெருக்கடியாலும் அவர் கோவில்களையும், தெய்வங்களையும் விட்டு விட்டார்.
who-am-i-picஇந்த சந்தர்பத்தில்தான் சடகோபனுக்கு ஓஷோ, ஜே.க்ருஷ்ணமூர்த்தி, ராம க்ருஷ்ணர், மற்றும் ஜக்கி வாசுதேவ், ரவி சங்கர் போன்றோர் பரிச்சயமாகி கடைசியில் இப்போது ரமணரிடம் வந்து நிற்கிறார். வயதும் அறுபது ஆகி விட்டது. வாழ்க்கையைத் துவக்கிக் கொண்டே இருக்கிறார். எஃப் டி.வி.யும், ஹிந்தி பாப் ஆல்பங்களும் ஓஷோவும், ரமணரும் அவரை பங்கு போட்டுக் கொண்ட காலத்தில் பையன்கள் இருவரும் திருமணம் முடிந்து வேளியூர்களில் (தனியாகப் போவதற்கென்றே) செட்டிலாகி விட்டார்கள்.
இன்று கூட தூக்கம் வரவில்லை. அவர் என்றுமே தூக்கத்திற்கு தவித்தவரில்லை. மத்யானம் இரண்டு மணி நேரம் தூங்குவதால் இரவு லேட் ஆகிறது. மணி பதினொன்று. எஃப் டி.வி. ஓடிக் கொண்டிருந்தது.
ரமணரின் ‘நான் யார்’ என்ற கேள்வி ஒரு வாரமாகவே சடகோபனைக் குடைந்து கொண்டிருந்தது. ஓஷோ வேறு மேத்ஸ், ம்யூசிக், மெடிடேஷன் என்கிறார். முதலிரண்டோடும் சடகோபனுக்கு சுமுக உறவு இருந்ததே இல்லை. மூன்றாவது என்ன என்று புரியவேயில்லை.
‘நான் என்றால் சடகோபன்.’ இதில் வேறு என்ன இருக்கிறது என்று அவருக்குத் தோன்றியது. ஒரு வேளை ரமணர் ‘தான் யார்’ என்று நம்மிடம் கேட்கிறாரோ என்ற சந்தேகம் வேறு வந்தது. ரமணர் மகான். சடகோபன் மகானில்லை. சடகோபன் ரிடையர்ட் மேனேஜர் - ஃபைனான்ஸ், பாரத் கேபிள்ஸ். கண் பவர் -6. அப்பா அம்மாவின் பிள்ளை. வேதாவின் கணவன். இரண்டு பையன்களின் தந்தை. மூன்று பேத்திகளின் தாத்தா. அக்காக்கள், அண்ணாக்களின் தம்பி. தக்காளி அலர்ஜி. இந்தக் கேள்விக்கு இவ்வளவு தெளிவான பதில் இருக்கையில் என்ன சிக்கல். மேலும் சொல்லப் போனால் பி.பி. சுகர் பேஷன்ட். இப்போ ரத்திரி போட்டுக் கொள்ள வேண்டிய மாத்திரையை மறந்து போன… திடுக்கென்று ஞாபகம் வந்து உள்ளே எழுந்து போனார்.
வேதா தூங்கி இரண்டு ஜாமம் ஆகி இருக்கும். சின்ன லைட்டைப் போட்டு மாத்திரை இருந்த மேஜையை நெருங்குகையில் “என்ன கண்றாவி இது? பாதி ராத்திரியிலே லைட்டைப் போட்டு ஏன் உயிரை வாங்கறேள்” என்று வேதா சீறிப் பாய்ந்தாள். அவள் கண்கள் கூசி திறக்கப் படாமலேயே இருந்தன. இவருக்கு அப்போது கூட ஆத்திரம் வரவில்லை. “மாத்ரை, மாத்ரை” என்று சொல்ல முற்பட்டார். அவள் “நாசகார குடும்பம். கொடுமை செஞ்சுதானே பழக்கம். இன்னும் தீரலையா? அப்பன், ஆயீ, பிள்ளைகள்னு கூட்டம் மொத்தமும் கொலைகாரக் குடும்பம்.” என்று உச்சஸ்தாயியில் கத்தினாள்.
பக்கத்து வீட்டுக்கெல்லாம் அவள் கத்துவது கேட்கும் என்ற பயத்தில் ஆத்திரம் மிக அவர் கட்டில் மீது பாய்ந்து அவள் வாயைப் பொத்தினார்.
“கொலைகாரா கொலைகாரா” என்று அவள் குழறினாள்.
“கத்தாதே” என்று அடங்கிய குரலில் கூறிவிட்டு, இனி கத்த முற்பட மாட்டாள் என்று நிச்சயம் ஆன பிறகே, கையை எடுத்து கட்டிலிலிருந்து இறங்கி மத்திரையை எடுத்துக் கொண்டார். அப்போதுதான் அவருக்கு ஆத்திரம் பொங்கியது. ட்யூப் லைட், அலங்கார விளக்கு, வழி விளக்கு, அட்டாச்ட் பாத் ரூமைத் திறந்து அதனுள் இருந்த விளக்கு எல்லாவற்றையும் போட்டார். போட்டு விட்டு ஒரு நாற்காலியின் மேல் அமர்ந்து கொண்டு மாத்திரையை வாயில் போட்டுக் கொண்டு தண்ணீர் விட்டு விழுங்கினார். இப்போதைக்கு விளக்குகளை அணைக்கப் போவதில்லை என்கிற மாதிரி சாய்ந்து உட்கார்ந்து கொண்டார்.
வேதா ஒரு தலையணையை எடுத்து முகத்தின் மேல் வைத்து அணைத்துக் கொண்டாள்.
அவளுக்கு இரண்டு சிசேரியன்கள். அதைத் தவிர பித்தப் பை மற்றும் கருப்பை எடுத்தல் என்ற இரண்டு ஆபரேஷன்கள் நடந்திருந்தன. அவ்வளவு அறுத்தும் திமிர் அடங்கவில்லை என்று சடகோபனுக்கு வழக்கம் போல் அப்போது தோன்றியது.
எவ்வளவு சண்டைகள். அப்பா, அம்மா, மனைவி, பையன்கள் என்று பங்கேற்பவர்கள் இணை சேர்ந்து, கூடிக் கூடி மாறி, மாறி வந்தாலும் போர்கள் நிற்பதேயில்லை. ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்து கொண்டேதானிருக்கின்றன.
கொஞ்ச நேரம் கழிந்தது. அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கண் வேறு லேசாக எரிந்தது. வேதா அசையவே இல்லை. மெல்ல எழுந்து ஹாலில் டி.வி.யையும் விளக்கையும் அணைத்தார். பிறகு ஒவ்வொரு விளக்காக அணைத்து விட்டு பாத் ரூம் கதவை சாத்தி விட்டு கட்டிலில் ஏறி தன் இடத்தில் படுத்துக் கொண்டார்.
ரொம்ப தூரத்தில் கேட்ட நாய்களின் ஊளைகளையும், குரைப்புகளையும், மின் விசிறியின் சுழற்சியையும் தவிர வேறு சப்தமே இல்லை. ஆத்திரம் மிதமாகி அடங்கிக் கொண்டிருந்தது.
வேதா தலையணையை முகத்திலிருந்து எடுத்து விட்டு “இத்தனை வயசாயும் உனக்கு புத்தியில்லையே. நீ சேவிக்கிற அந்த ரமணர்தான் உனக்கு சொல்லணும். அவர்தான் உனக்குப் புரிய வைப்பார்” என்றாள்.
ஆத்திரம் மீண்டும் உயிர் பெற, படுக்கையில் அவள் பக்கம் திரும்பி எழுந்தவாறே பல்லைக் கடித்துக் கொண்டு “என்னடி சொல்லுவார்” என்றார் சடகோபன்.
“நீ ஒரு எச்சக்கலை நாயின்னு”.

Thursday, July 1, 2010

மூடிய கதவுகள்

மூடிய கதவுகள்

வ.ஸ்ரீநிவாசன் |                                                        பிரசுரம் : சொல்வனம் : இதழ் 28 | 25-06-2010 


                                                                                             - 1 -
dsc_4519இன்றைக்கு சுமார் நூற்றுப் பத்து, நூற்றிருபது வருடங்களுக்கு முன்னால் ஆராவமுத ஐயங்காருக்கும், சுந்தரவல்லிக்கும் ஒரு பெண் குழந்தை சீமந்தப் புத்ரியாகப் பிறந்தது. அதற்கு ருக்மிணி என்று பெயர் சூட்டினார்கள். கருவிழிகளும், சுருள் முடியும், சிவந்த நிறமுமாக குழந்தை அழகாக இருந்தது. பள்ளிக் கூட ஆசிரியராக ஒரு பொழுது போக்குக்காக வேலை செய்து வந்த ஆராவமுதன் நில புலன்களோடு சௌகர்யமாக வாழ்ந்து வந்தார். தம்பதிகள் குழந்தையின் பேரில் பேரன்பு செலுத்தி அதை வளர்த்து வந்தனர். ஒரு வயதிற்குள் பேசவும் நடக்கவும் தொடங்கிய குழந்தை அன்பு, செல்வ சூழ்நிலையால் அழகாக, சமர்த்தாகவே வளர்ந்தது. அவளுக்கு நான்கு வயது நிறைந்ததும் அவளுக்குத்  திருமணம் செய்துவிட முடிவு செய்தார்கள்.
அதே ஊரில் இருந்த செல்வந்தரும் வேத விற்பன்னருமான நம்பி ஐயங்காரின் எட்டு வயதுப் பையன் நாராயணனை வரன் பேசி நிச்சயம் செய்தார்கள். கல்யாணம் பக்கத்து கிராமங்களும் வியக்குமாறு ஐந்து நாள் சகல கிரமங்களோடும், உல்லாஸங்களோடும் நடந்தது. பணமும் பணமும், வித்தையும் வித்தையும் சேர்ந்ததாக அனைவரும் கூறினார்கள்.
திருமணத்திற்குப் பின்னரும் குழந்தை தகப்பனார் வீட்டிலேயே இருந்தாள். மாதாந்திர சீர்களும், பண்டிகை, கொண்டாட்டங்களும் சரிவர  நிகழ்ந்தன. குழந்தை பெரியவளான பின்பே புக்ககம் செல்வாள் என்ற நிலையில் அப்பா அம்மா செல்லமாக, பிறந்த அகத்திலேயே வளந்து வந்தாள்.
அவளுக்கு ஆறு வயதானபோது, ஒரு நாள் ஆராவமுதன் பள்ளிக் கூடத்தில் இருக்கையில் நம்பி ஐயங்காரின் மைத்துனன் மாட்டு வண்டியில் கண் மண் தெரியாத வேகத்தில் வந்து அவரிடம் “அண்ணா ! மோசம் போய்ட்டோம்ணா. நாராயணனை பாம்பு கடிச்சுடுத்துண்ணா. “ என்று அலறினான். அந்த இடிக்கப்புறம் அவர் எப்படி வீட்டுக்குப் போனார், எப்படி அவர்கள் சம்பந்தி வீட்டிற்குப் போனார்கள், என்ன நடந்தது என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் வீட்டுக்குத் திரும்பி வந்து கதவைச் சாத்திக் கொண்டவர்கள்தான். அந்தக் கதவுகள் அப்புறம் திறக்கப் படவேயில்லை.
-   2 -
இப்படி மூன்று மாசம் கழிந்த பின்னர் மெதுவாக நிலப்பண்ணைக் காரரும், நாவிதரும், ஜோசியரும், சில சொந்தக்காரர்களும், ஊர்ப் பெரியவர்களும் கொல்லைப் புற வழியாக உள்ளே போய் வந்தனர். கோலமும் மாவிலையும் இல்லாது போன முன் வாயில் மட்டும் திறக்கப் படவேயில்லை.
இடுகாட்டில் மலரும் புஷ்பத்தைப் போல ஒன்றரை வருடங்கள் கழித்து ஒருக்களித்த பின் வாசல் கதவுகளின் வழியாக,  ருக்மிணிக்கு சேஷி என்கிற தங்கை பிறந்திருக்கிறாள், என்கிற சேதி வந்தது. முன் வாசல் குப்பைகளும் அகன்றன. ஒவ்வொரு பிரளயத்துக்குப் பின்னும் புது யுகம் தோன்றவும், ஒவ்வொரு யுத்தத்துக்கும், மரண ஓலங்களுக்கும் பின்னர் ஒரு ராஜ்யம் மலர்வதற்கும் மூல காரணமான ஆண், பெண் என்று மனித குலம் தொடர வேண்டுவதற்கான அடிப்படை அவசர ஆதி உணர்வு  சேஷியைக் கொண்டு வந்தது.
சிரிப்பும், கும்மாளமும் இல்லையென்றாலும், ருக்மிணியின் அன்பும், ஆதரவும் சேஷிக்குக் கூடுதலாகக் கிடைத்து அவளும் வளர்ந்தாள். இரண்டு குழந்தைகளும் பெருமாள் போட்ட பிச்சையாக எங்கோ தீர்க்காயுசாக இருந்தால் போதும் என்று பெற்றோர் உருகி வேண்டியபடி இருந்தாலும் சேஷிக்கு ஆறு வயதானதும் கலயாணம் என்கிற நிர்பந்தம் தோன்றியது.
ஆனால் இந்த முறை ஆராவமுதன் தவறு செய்ய தயாராக இல்லை. செல்வமும், வித்தையும், ஊரார் திருஷ்டியும் வேண்டாம் என்பதில் கணவனும் மனைவியும் திடமாக இருந்தார்கள். ஆனால் பெண் குழந்தைக்கு கல்யாணம் பண்ணாமல் எப்படி? சென்ற முறை செய்த தவறை அப்படியே செய்யாமல் சிறிது மாற்றிச் செய்யவாவது விழைந்தார்கள். வாசலில் உஞ்ச வ்ருத்திக்கு வரும் பதினெட்டு வயது ராகவனுக்கு சேஷியை வைதீகக் கிரமப்படி மட்டும் ஆரவாரம் ஏதுமின்றி குடும்ப உறவினரிலும் முக்கியமானவர்களையும் இரண்டொரு நண்பர்களையும் வைத்துக் கொண்டு கல்யாணம் பண்ணி, ராகவனை  தங்கள் வீட்டருகிலேயே ஒரு வீடு பார்த்து குடி அமர்த்தி வைத்துக் கொண்டார்கள். ராகவன் தன் விதவைத் தாயோடு, இரண்டு இளைய சகோதரர்களோடு அங்கு குடியேறினான். படிப்பறிவோ, பணமோ, குல பலமோ, அந்தஸ்தோ இல்லாத ராகவன் தன் மாமனாரின் விருப்பப் படியே நல்லவனாக இருந்தான்.
ருக்மிணியும், சில வருடங்களில் சேஷியும் பெரிய பெண்களாயினர். தங்கையையே தன் குழந்தையாக, அவள் குதூகலமே தனதாக, அவள் மங்கலங்களே தனக்குரியவையாக இருக்கும் தலை சிரைக்கப் பட்ட, முரட்டுப் புடவை அணிந்த குழந்தை ருக்மிணி சோகம் அறியாமல் பொறாமை அறியாமல் குழந்தைகளுக்கே சொந்தமான குதூகலத்தோடும், வெகுளித்தனத்தோடும் இருந்தாள்.
சேஷியும் காலப்போக்கில் அருகிலேயே இருந்த கணவன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். லக்ஷிய நோக்கங்களோ, அசூயையோ என்னவென்றே அறியாத குழந்தையாயும், தாய், தந்தை, தமக்கையின் அன்பை மட்டுமே உண்டு வளர்ந்த சிறுமியாகவும், ஒரு சோகக் கடலின் உக்கிரத்தில் உதித்ததாலோ என்னவோ அமைதியான மனப் பாங்குடைய மனுஷியாகவும் இருந்தாள்.
சேஷிக்கு லட்சுமி, குஞ்சம்மா என்கிற இரண்டு பெண்களும் செல்லம், அப்பன் என்கிற இரண்டு ஆண்களும் பிறந்தார்கள். நான்கு பிரசவங்களையும் பார்த்ததோடன்றி குழந்தைகளை வளர்ப்பதிலும் ருக்மிணி காட்டிய அக்கறையில், அவள் உடனிருப்பில் இக்கால கட்டத்தில் ஒருவர் பின் ஒருவராக பெற்றோரும், மாமியாரும் இறந்ததைக் கூட சேஷி பெரிய இழப்பாக உணரவில்லை. ருக்மிணி சேஷிக்கு மட்டுமின்றி, அவளது நான்கு குழந்தைகளுக்கும் ‘அக்கா’ வானாள். அம்மா அழைப்பதைப் பார்த்து குழந்தைகளும் அக்காவென்றே அவளை அழைத்தன. ராகவன் கூட அவளைக் குறிப்பிடும்போது ‘அக்கா’விடம் சொல், ‘அக்கா’வைக் கேள் என்றே கூறினான். அந்தத் தெருவாசிகளுக்கும், ஊர்க்காரர்களுக்குமே அவள் அக்காவானாள். சிறிய பெண்கள் ‘அக்கா மாமி’ என்றனர். மொட்டைத்தலையும், விதவைப் புடவையும், புருவ மத்தியையும் கீழ் நெற்றியையும்  இணைக்கும் சிறிய திருமண்ணும் சில சின்னக் குழந்தைகள் அவளை ‘அக்கா பாட்டி’ என்று அழைக்கவும் காரணமாயின.
உட்கார்ந்து சப்பிட்ட சொத்து கரைந்தது. உஞ்சவ்ருத்திக்கார ராகவனுக்கு சொத்தின் மேல் ஆசையும் இல்லை. ருக்மிணி தலையிட்டு மெற்பார்வை செய்ய ஆரம்பித்ததும்தான் சரிவு நின்றது. சாப்பாட்டுக்குக் குறைவில்லை. பழைய பெருங்காய சொப்பிலிருந்து பலத்த வாசனை மட்டும் வீசியது. சொப்பும் போயிருக்க வேண்டிய சமயத்தில் ருக்மிணி எல்லா பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டாள். வரவு செலவு, எஞ்சிய நிலபுலன்களை பராமரிப்பது, குழந்தைகளின் வளர்ப்பு, சுப அசுப காரியங்கள் எல்லாவற்றையும் தேர்ந்த ஞானத்தோடும், சீரிய புத்தி கூர்மையோடும், அதிகாரம் வெளியேயும் தெரியும் வண்ணமும் செய்தாள்.
நிலைமை சீராகி மேல் நோக்க ஆரம்பித்ததும் உறவினர் மீண்டும் அண்டத் துவங்கினர். சேஷியின் மைத்துனர்களுக்குக் கல்யாணம் செய்வித்து அவர்கள் குடும்பங்களையும் அரவணைத்து அக்காவும் தங்கையும் சிறியதொரு சாம்ராஜ்யத்தை சிக்கல் அதிகமின்றி நிர்வகித்து வந்தனர். மொட்டைத் தலையும், விதவைச் சேலையும் நெற்றி நாமமும் அவ்வீடுகளின் மங்கலச் சின்னங்கள் ஆகின.
ஆனால் நாராயணனைப் பற்றிய நினைப்பை அவள் மறக்கவில்லை. அவன் எப்படி இருந்தான் என்று அவளறியாள். ஆனால் மானசீகமாக ஒரு நாராயணன் அடிக்கடி அவள் நினைவுக்கு வந்தான்.
சேஷியின் மூத்த பெண் லட்சுமிக்குத் திருமணம் நடந்தபோது  அவள் வயது பத்து. பனிரெண்டாவது வயதில் அவள் பெரியவள் ஆன பிறகு ருக்மிணியும் சேஷியும் ராகவனும் அவளை புக்ககத்தில் கொண்டு போய் விட்டார்கள். அங்கு பெரியம்மாவை லட்சுமி ‘அக்கா’ என்று அழைத்ததைப் பார்த்து எல்லோரும் ஆச்சர்யப்பட்டார்கள். ஆனால் லட்சுமியின் கணவன் சுந்தரத்தின் அண்ணன் ராஜனையும் அவன் பெண்டாட்டியையும் பார்த்து இவர்கள் ஆச்சர்யத்தோடு பயமும் பட்டார்கள். ராஜன் இவர்கள் இருந்த பத்து நாட்களிலேயே இவர்களை கதி கலங்க அடித்து விட்டான். ஒரு நாள் இவர்கள் முன்னாலேயே தன் பெண்டாட்டியை அடி அடி என்று அடித்தான். மறு நாளே கிளப்புக் கடை பலகாரம், பூ, புடவை என்று வாங்கி வந்து கொட்டமடித்தான். லட்சுமியின் மாமனார் இது எதையும் கண்டு கொள்ளவே இல்லை. மாமியார் அதிருஷ்டக்காரி. அவள் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இதையெல்லாம் பார்த்து லட்சுமி பயந்தே போய் விட்டாள். ஒரு நிம்மதியற்ற மனதோடேயே ருக்மிணியும், சேஷியும், ராகவனும் ஊர் திரும்பி வந்து சேர்ந்தனர். “என்ன இப்பிடி பண்ணிட்டேள். நல்ல குடும்பமா லட்சுமிக்குக் கொண்டு வந்திருக்கபடாதா” என்று தனியாக இருக்கையில் ருக்மிணி தன் நினவில் வராத, நினைவை விட்டு அகலாத கணவனிடம் முறையிட்டாள்.
ஆனால் சில நாட்களில் அவர்களுக்கு நல்ல சேதியே வந்தது. குழந்தை லட்சுமியும் பேறு காலத்துக்காக பிறந்தகம் வந்தாள். சேஷியை விட ருக்மிணியிடமே வளர்ந்தவளாகையால் அவளிடம் தன் புது வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டாள். தமையன் ராஜனைப் போலன்றி தன் கணவன் சுந்தரம் ஸ்திர புத்திக்காரனாகவும், பிரியமானவனாகவும் இருப்பதைச் சொன்னாள். ராஜன் அடிக்கும் அசட்டுக் கூத்துகளின் கொடுமைகளையும் சொன்னாள். அவன் குடிக்க வேறு குடிப்பானாம். இன்னும் குழந்தை பெற்றுத் தரவில்லை என்று மனைவியிடம் சண்டை வேறு போட்டிருக்கிறான். ஆனால் இவள் வம்புக்கு அவர்கள் வருவதில்லையாம்.
லட்சுமிக்கு ‘அக்கா’ ருக்மிணி ஒன்றையுமே அனுபவிக்கவில்லையே என்று சில சமயம் தோன்றும். ருக்மிணியோ இன்னொரு குழந்தை வீட்டில் பிறக்கப் போகிறது என்று பரபரவென்ற சந்தோஷத்தில் இருந்தாள். வேலைக்காரர்கள் ‘அக்காம்மா’ அவர்களிடமும் சிரித்து மட்டும் பேசுவதைக் கண்டு நிம்மதி பெருமூச்சு விட்டார்கள்.
சுந்தரம் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போனான். அவன் சிரிக்க சிரிக்க பேசியதையும், மாமியாருக்கும், பெரிய மாமியாருக்கும் சோடா வாங்கிக் கொடுத்ததையும், தாயற்ற தனக்கு லட்சுமியின் தாயார்தான் தாய் என்று சொன்னதையும் எண்ணி, பேசி சேஷியும் ருக்மிணியும் மகிழ்ந்தனர். லட்சுமி அனாயாசமாக ஒரு நட்சத்திரத்தைக் கொய்தவளைப் போல அமைதியான மகிழ்ச்சியில் இருந்தாள். தம்பிகளுக்கும், தங்கைக்கும் மீண்டும் லட்சுமி வந்து தங்களுடன் இருப்பது பெரிய சந்தோஷம்.
சீமந்தத்துக்குப் போக வேண்டும் என்ற ஆயத்தங்களில் இருந்த போது விஞ்ஞான வளர்ச்சியால் தோன்றிய துரித தொடர்பு சாதனமாகிய தந்தி சுந்தரத்தின் அகால மரணத்தை செய்தியாகத் தாங்கி வந்தது. அந்த செய்தி கேட்ட அடுத்த நிமிஷம் சேஷி நினைவிழந்து போனாள். அவள் விழித்த போது யார் பேசியதும் அவள் காதில் விழவில்லை. புயலடித்து விழுந்த கூடாரத்தை நிமிர்த்த ருக்மிணி படாத பாடு பட்டாள். கண்ணிலும் நினைவிலும் தென்படாமலே போன கணவனிடம் முறையிடுவதைக் கூட நிறுத்தி விட்டாள். தெய்வமற்றுப் போனாள். தான் எதெற்கெடுத்தாலும் முன்னே நிற்பதுதான்  எல்லா உற்பாதங்களுக்கும் காரணம் என்று  யாருமில்லாத போது மார்பில் அறைந்து கொண்டாள். வெளியே அவளே தைரியம் இழந்தால் குடும்பம் என்னாவது. அவள் குழந்தை சேஷி, அதன் குழந்தை லட்சுமி, இவர்களை யார் காப்பாறுவார்கள்.
லட்சுமியின் அப்பா ராகவன் ‘ அக்கா, நான் இருக்கேன், எம்பொண்ணுக்கு, நான் பாத்துக்கறேன். என் ஆயுசுக்கும் நான் அவளைப் பாத்துக்கறேன்” என்று அழுதார். அழுத கையோடு மயக்கமானவர்தான். தெளிய ஒரு நாள் ஆயிற்று.
ருக்மிணியே லட்சுமியைக் கூட்டிக் கொண்டு லட்சுமியின் புக்ககம் இருந்த ஊருக்குப் போனாள். துணைக்கு லட்சுமியின் மூத்த தம்பி செல்லம். சேஷியும், ராகவனும் பிரயாணம் செய்யும் நிலையில் இல்லை. இவர்களை விட்டு விட்டு செல்லம் திரும்பி விட்டான்.
இவர்கள் போன போதே ரெண்டு நாளாகி விட்டது. தகனம் எல்லாம் சில மணிகளிலேயே நடந்து விட்டதாம். அரசல் புரசலாகக் கேள்விப் பட்ட செய்திகள் இவர்களை திடுக்கிட வைத்தன.
ஒரு வாரமாகவே சுந்தரத்துக்கு உடம்பு சரியில்லாமல் ஜுரமாக இருந்ததாம். அண்ணன் ராஜன் மற்றும் அவர்கள் தகப்பனார் எல்லாம் சரியாகிவிடும், வைத்தியமெல்லாம் வேண்டாம் என்று இருந்தார்களாம். அவன் மதனி, ராஜனின் மனைவி வைத்துக் கொடுத்த வேகாத கஞ்சிதான் கடைசியில் அவனுக்கு யமனாக வந்ததாம். அதை சாப்பிட்ட கொஞ்ச நேரத்தில் வலியில் துடித்து மயக்கமானவன்தானாம். எழுந்திருக்காமலே உயிர் போய் விட்டதாம். மதனியைத் தவிர யாரும் வீட்டிலில்லையாம். அவளும் பயத்தில் அக்கம் பக்கத்தில் சொல்லவில்லையாம். ஆண்கள் இருவரும் ஊர் சுற்றி விட்டு வந்த போது வெகு நேரம் ஆகி விட்டதாம்.
சுந்தரம் வீட்டில் யாரும் இவர்களோடு பேசவில்லை. முதல் நாள் இவர்கள் பசி மறந்த துக்கத்தில் அழுகையையே உணவாகக் கொண்டு இருந்தார்கள். மொட்டை மாடியில் மூலையில் முடங்கிக் கிடந்த இவர்களை யாரும் என்ன ஏது என்று கூட கேட்கவில்லை.
இரண்டாம் நாள் காலையில் ருக்மிணியும், லட்சுமியும் மாடியிலிருந்து இறங்கி வந்து வாசல் கதவைத் திறந்து வெளியே வந்து தெருக் குழாயில் முகத்தை அலம்பிக் கொண்டிருந்தனர். அப்போது ராஜன் வீட்டு வாசலுக்கு வந்தான். இவர்களை எரிப்பது போல் பார்த்தான். கோவில் கதவுகளைப் போல் இருந்த வீட்டின் பெரிய கதவுகளை இழுத்து மடாரென்று சாத்திக் கொண்டான். இவர்கள் திக் பிரமை பிடித்த மாதிரி இருந்தார்கள். பிள்ளைத் தாய்ச்சியும், விதவையுமாய் பெண்களின் சகல துக்கங்களுக்கும் உதாரணமாக நின்று கொண்டிருந்த குழந்தையை  அணைத்துப் பிடித்த ருக்மிணி அப்படிக் கத்துவாள் என்று லட்சுமி கூட எதிர் பார்க்கவில்லை. அந்தக் குடும்பத்தை சபித்தபடியே  மண்ணை வாரி அந்தக் கதவுகளின் மேல் ருக்மிணி எறிந்தாள். இவர்கள் கொண்டு வந்த துணி மூட்டை மொட்டை மாடியிலிருந்து எறியப் பட்டு இவர்கள் அருகே மண்ணில் பிரிந்து விழுந்தது. ஒரு கணம் மொட்டை மாடியில் தோன்றிய சுந்தரத்தின் தகப்பனார் முகம் அடுத்த கணமே மறைந்தது. இரண்டு நிமிடம் காத்திருந்த ருக்மிணி கதவுகளைத் தன் கைகளால் குத்தினாள். மீண்டும் மண்னை வாரித் தூற்றினாள். தரையில் புரண்ட துணிகளை எடுத்துக் கொண்டு லட்சுமியையும் அணைத்துக் கொண்டு அவள் அரற்றி அழுது மீண்டும் மீண்டும் சபித்த போது தெரு கூடியதே தவிர அந்தக் கதவுகள் திறக்கவில்லை.
- 3 -
dsc_4519கோதை வாசலில் போட்டிருந்த கோலத்தின் மத்தியில் நின்று கொண்டிருந்ததாள். உறவுக்கார குழந்தைகளும் பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் அங்கிருந்தார்கள். “ ஏய் ! இங்கே வதாதே அங்கே போ. இத மிதிக்காதே, சும்மா இது” என்று கோதை எல்லோரையும் விரட்டிக் கொண்டிருந்தாள். வாசற்படியில் ஒரு சாரி எறும்புக் கூட்டம். கோலத்தின் மத்தியில் இருந்து வெளியே வந்த குழந்தை அந்த எறும்புகளை வேடிக்கைப் பார்க்க சென்றது. ஒரு எறும்பை யாரோ மிதித்து விட்டார்கள். உடனே தரையில் இருந்த அதை உள்ளங்கையால் பொத்திக் கொண்டு ‘கிஷ்ணா கிஷ்ணா” என்று பல முறை சொல்லியது. அப்படிச் சொன்னால் அது மறுபடியும் ஓட ஆரம்பித்துவிடும் என்று ‘அக்கா பாட்டி’ அவளுக்குச் சொல்லியிருந்தாள். வீட்டில் இருந்த மூன்று பெண்களில் சேஷிப் பாட்டிக்கு காது கேட்காது. அம்மா லட்சுமி உள்ளை விட்டே வெளியே வர மாட்டாள். அக்காபாட்டிதான் ஜாலி. வெளியே கூட்டிப் போவாள். டாக்டர் வீட்டுக்குக் கூட்டிப் போவாள். கோவில், கடைத்தெரு, சந்தை எல்லாவற்றையும் அக்காப்பாட்டிதான் காட்டுவாள். கதை சொல்லுவாள்.
கையை எடுத்துப் பார்த்தது குழந்தை. எறும்பு நகரவேயில்லை. அதற்குள் வீட்டை ஒட்டியிருந்த மர வேலியைத்தாண்டி புதிதாக இடப்பட்ட இருப்புப் பாதையில் ஒரு ரயில் ‘கூ’ என்று ஓடியது. குழந்தை அதைப் பார்க்கத் திரும்பி நின்று கொண்டது. எல்லாக் குழந்தைகளும் ரயில் போகும்வரை அதையே பார்த்துக் கொண்டு இருந்தன. அதன் கடைசிப் பெட்டி போனவுடன் கையைத் தட்டி குதித்தன.கோதையும் குதித்தாள். அவளுக்கு அவள் பிறப்பதற்கு முன்பே அப்பா போய் விட்டரென்பதோ, அவள் பெரியப்பன்  அவள் தாயாரை  தெருவில் நிறுத்தி கதவைச் சாத்திவிட்டான் என்பதோ, அக்காபாட்டி இட்ட சாபம் பலித்ததே போல் ஆறே மதத்தில் அந்தப் பெரியப்பாவும், அவன் மனைவியும் போய் விட்டார்கள் என்பதோ தெரியாது; தெரியக் கூடிய வயதில்லை.
அவளை அரவணைக்க பாட்டிகளும், அம்மாவும், தாத்தாவும், மாமாக்களும், சித்தியும் இருந்தார்கள். அவள் குழந்தைகளின் தலைவியாக, வீட்டு ராணி அக்காபாட்டியின் செல்ல இளவரசியாக இருந்தாள். யாரோடும் அதிகம் பேசாத லட்சுமி கூட அவளிடம் அன்பை வாரிப் பொழிகிறாள். தங்க அரைஞாணும், சங்கிலியும், மோதிரமும், வளையலும் அணிந்த அவற்றை மீறிய அவள் சௌந்தர்யமும், சுறுசுறுப்பும் மீண்டும் அந்தப் பட்டுப்போன குடும்பத்திற்கு உயிர் தந்தன.
இப்போது குழந்தைகள் தாமே ரயில் விட ஆரம்பித்தன. கோதைதான் எல்லோருக்கும் முதலில் வழக்கம்போல் நின்று கொண்டிருந்தாள். அவள் தெருக் கோடி வரை போய் விட்டு திரும்புகையில் அவள் முன் தாடியும், மீசையும் பரட்டை முடியும் அழுக்குப் பஞ்ச கச்சமுமாக ஒரு கிழவர் தோன்றினார். குழந்தை நிமிர்ந்து பார்த்தது. அவர் அதை வாரி அணைத்துத் தூக்கிக் கொண்டார். கண்களில் நீர் பெருக அதை இறுக்க அணைத்துக் கொண்டார். ‘உம்பேரு கோதையாம்மா’ என்று கேட்டார். “என்னை விது, என்னை விது” என்று குழந்தை எக்கியது. அதற்குள் ‘குழந்தை எங்கேடா சனியன்களா” என்று கத்தியபடி வந்த அக்காபாட்டி அந்தக் கிழவனார் கையில் குழந்தையைப் பார்த்ததும் திகைத்து நின்றாள். அவர் அவளை ஒரு பிச்சைக்காரனைப் போல் பார்த்தார். “நான் குழந்தையை கூட்டிண்டு போயிட்டு சாயந்தரம் கொண்டு வந்து விடறேனே” என்றார். இதற்குள் அக்கா பாட்டி சுதாரித்துக் கொண்டு விட்டாள். “ஆஹா ! பேஷா ! “ என்றாள். அவர் தைரியம் வரப் பெற்றவராக “ அப்படியே லட்சுமி மாதிரியே இருக்கா” என்றார். அக்கா பாட்டி “குழந்தைக்குப் பால் தர்ற நேரம். குடுத்ததுக்கு அப்புறம் நீங்க அழச்சுண்டு போங்கோ” என்று கோதையின் பக்கமாக கையை நீட்டினாள். குழந்தை அவளிடம் தவ்வியது. குழந்தையை வாங்கிக் கொண்டாள். விறுவிறுவென்று வீட்டை நோக்கி நடந்தாள். அவரும் அவள் பின்னால் தயக்கத்தோடு நடந்தார்.
அவள் உள்ளே போனதும் இவர் வாசலிலேயே நின்றார். வாசப்படியில் உட்காரலாமா, உள்ளே போகலாமா, தெருவிலேயே நிற்கலாமா என்ற குழப்பத்தில் அவர் நின்ற போது, அக்கா பாட்டி உள்ளேயிருந்து வந்தாள்.  “பேத்தி, தாத்தா உறவெல்லாம் வேண்டாம். இத்தனை நாள் இல்லாத கரிசனம் வேண்டாம். நீங்க போகலாம்’ என்று வாசக்கதவை சாத்திக் கொண்டு போய்விட்டாள். பிரமை பிடித்தாற்போல அந்தக் கிழவர் நின்று கொண்டிருந்தார். நடுப்பகல் போய் மாலை மங்கும் வரைக்கும் நின்று பார்த்தார். இனி அந்த கதவுகள் திறக்க வாய்ப்பே இல்லை. அதை சில வருடங்களுக்கு முன்பே என்றென்றைக்குமாக மூடியது தான்தான் என்பது அவருக்குத் தெரிந்தது. ஊருக்குத் திரும்பிப் போக ராத்திரி ஒரு ரயில் இருந்தது.