FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Tuesday, February 16, 2010

கவிதைகள் 1970-79

1. இழந்த சொர்க்கம்

நெருப்புக் கதிர்கள்
அணைத்த அணைப்பில்
சுருண்ட உடம்பும்
வரண்ட குடலும்
வீட்டில் நுழைந்து
மூலைக்குச் சென்று
ஏலக்காய் வெட்டி வேர்
கடையில் வாங்கின ஒரணா ஐஸ்
எல்லாம் மணத்த
பானை ஜலத்தை
டம்ளரில் மொண்டு
அடுத்த வீட்டுப் பெண்ணை
மெல்ல நினைத்து கண்ணை மூடி
குடிக்க எடுக்கையில்
டம்ளரின் உள்ளே
ஜலத்தில் மிதந்த
வெள்ளைப் பல்லி
வயிற்றைப் பிசைந்தது.

ஏப்ரல் 1971 கணையாழி.

2. விசாரங்கள்

எனக்குள்ளேதான் எத்தனை பயங்கள்?
இந்தப்
படிப்பை எப்படி முடிப்பேன்?

முடித்ததும் முளைக்கும் உத்யோகத்தில்
எப்படி நிலைப்பேன்?

எவன் மேலேயிருந்து
என்னை இயக்குவான்?
கடுகா?
கல்கண்டா?

வேலையில் நிலைத்ததும்(தான்)
விவாஹம் !
[ஹ்ம் ! எத்தனை யுகங்கள் இடையில் !]

வியாபிக்கப் போபவள் பிணைப்பால்
விளையப் போவது
விஷமா?
சுகமா?
நாலே நாட்களில் நான் வெறுக்கும்
நம்மூர்ப் படம் பார்க்க
நச்சரிப்பாளோ?
அவள்
என்னை அணைத்து யாரை நினைப்பாள்?
யாரை அணைக்கையில் என்னை நினைப்பாள்?

பிறக்கும் பிள்ளை
[பெண்ணோ?]
கறுப்போ, சிவப்போ?
மேதையோ, முட்டாளோ?
பொறுக்கியோ, கோழையோ?

பிந்தின நாட்களில் வாசத் திண்ணையில்
(கொல்லைப் புறமோ?)
பார்வை மங்கி உட்காருவேனோ?
எழுபது வயதில் - என் இருபதில்
இறந்த
அப்பா அருகில் அமர்வது போன்ற
இனிய நினைவும் மங்கிப் போகுமோ?
அவர்
முகம்
நினைப்பில் வருமோ?

என்
பதினைந்தில் அணைத்து இறுக்கின
அத்தையின் பெண்
என் மனைவி அறியாமல்
இடையில் இடையில்
புதிதாய் என்னைப் பாவியாய்
மாற்றும்
சந்தர்ப்பம் (சந்தோஷமோ?)
வருமோ?

எத்தனை ஏக்கம்? எத்தனை பயங்கள்?
இத்தனையும்
"இன்றைக்கிரவே எல்லாம் முடிந்தால்"
என்ற பயத்தில்
சுட்டுப்
பொசுங்கி
உருகிக்
கருக.........
ஹா !

ஜூலை 1971 - கணையாழி.


3. மாறும் மதிப்பீடுகள் (OR) வளர்ச்சி


சின்ன வயசில் ஊர்
'அசிங்கம்' என அரற்றியது
'அற்புதம்' ஆனதாலும்
'அற்புதம்' என சிலிர்த்தவைகள்
'அசிங்கமா'ய்ப் போனதாலும்
இன்று
லிங்கங்கள்
இடம் மாறினவோ?

செப்டம்பர் 1971 - கணையாழி.4. அலகுகளும் அளவைகளும்

நடிப்புத் திறமையை
நன்கொடை, கத்தல்களாலும்
எழுத்தின் மஹிமையை
எழுதியவன் பாரம்பர்யத்தாலும்
மொழியின் வளமையை
முச்சந்திச் சிலைகளாலும்
நிர்ணயிக்கும்
எங்கள் - தமிழ்ச் சாதியின் -
அறிவை
எம் செயல்களால்
அளக்கிறீரே !
மூடர்களே ! சம்பந்தம் இருக்கலாமோ?

செப்டம்பர் 1971 - கணையாழி


5. பழி

குதிரைகள் வண்டியேறி
சாட்டையைச் சொடுக்க வேண்டும் !
கொள் பைகள் கழுத்தில் தொங்க
மனிதர்கள் ஓட வேண்டும் !
கோழிகள் பெரியதாகி
குற்றுயிர் மானுடரை
தலைகீழாய்த் தொங்க விட்டு
சைக்கிளில் பறக்க வேண்டும் !
மாடுகள் மனிதன் காலில்
கயிறுகள் கட்டி விட்டு
பிள்ளையைக் கொன்றருகில்
பிதுங்கு வைக்கோலாக்கி
மார்பினில் இருந்து ரத்த
மாரியைப் பெறுதல் வேண்டும் !
எருதுகள் மனிதன் தோளில்
இமயத்தை ஏற்ற வேண்டும் !
நாய்களின் வீட்டையெல்லாம்
மானுடர் காக்க வேண்டும் !
சேவல்கள் திருநீறோடு
சிலிர்க்கும் பொய் பக்தியோடு
கூவிடும் மனிதர் சிரஸை
கோவில் முன் கொய்தல் வேண்டும் !
[புண்ணியம் (!) எய்தல் வேண்டும் !]

ஹே ! மனிதா !
உன் ஆறறிவுச் சூதும்
அளவடங்கா சுய நலமும்
காற்றினில் கரைந்து போக.......

செப்டம்பர் 1971 - கணையாழி.
எஸ்.பி.சி.ஏ. தங்கள் மலரில் பிரசுரித்தது.


6. நாம்


மழைத்துளிகள்
வான் பிரிந்து
உலகில் உதிர்வது
சில - மரங்களில்
சில - தரை முரட்டில்
சில - கடல் பரப்பில்
எங்கெங்கெல்லாமோ
தெறித்து
மறைவதற்காக.

மே 1976, கணையாழி


7. சித்தாந்தங்கள்


நாங்கள் புலிகள் !
வாழ்க்கையை அறிந்து
அறிந்ததை
வாயில் அடக்கினோம்.
பல்லின் கூர்மை
பொய்யைக் கிழிக்கும்.
உடம்பை விதிர்த்து
உலகை மறுப்போம்.
வாழ்க்கை வேட்டை
எமைத்
தரையில் விரித்து
சப்பணமிட்டு
சொகுசாய் அமர்கையில்
எங்கள் தியரிகள்
முதுகில்
முகத்தில்
வாலில்
கோடுகள்.

மே 1976, கணையாழி.


8. தாங்கிச் சுமைகள்

அவரவர் குதிரையில்
அவரவர் குடை நிழல்.
அவரவர் குதிரையை
அவரவர் சுமப்பர்.
சுமந்திட வேறோர்
குதிரையைத் தேடுவர்.
தேடிக் கிடைத்ததும்
குளம்புகள் தலையில்.
வாலில் ஜடாமுடி
வகையாய்த் திரித்திட
வாலும் அறுந்திடும்.
மூளிக் குதிரையை
முதுகில் சுமப்பதே
முழு முதற் வேலை.
முதுகுக் கலைவது
அடுத்த சோலி.

மே 1976 கணையாழி.


9. ஜீவிதம்

தளிட்ட அறையில்
தனியனாய் இருக்கையில் - இங்கு
எனைத் தவிர யாரும்
ஜீவிப்பதில்லை.
எங்கோ ஒரு சப்தம்.
என் நிச்சயம் நடுங்கும்.
என் மன விதைகளில்
விளைந்த
விருக்ஷங்கள்
எப்போதும்
என்னைப்
பகிர்ந்து
கொள்கையில்
தாளிட்ட அறையிலும்
நான்
தனியனாய் இல்லை.
தனித் தனித் தனித்........
அப்போது
கழுத்திற்காய்
நூல்
இழையில்
கத்தி
காத்திருக்கும்
அவனாக, அதுவாக, அவளாக.
கருப்பு பூதமொன்று
எனை நசுக்கும்.
எப்போதும்
மனசுக்குள்
ஆயிரம்
பேச்சு.
ஏதோ சில பாட்டு.
தீராத குழப்பங்கள்
தீனி.
நாம்
எல்லோரும்
சேர்ந்து காணும்
கனவா
வாழ்க்கை?
தூக்கமே விழிப்போ
-என்
சொப்பனமே
நிஜமோ.
இங்கு
இறப்புக்கும்
இருப்புக்கும்
இடையே
இல்லாத கோட்டை
இழுத்தவர் யார்?
நான்?
மரணம்
உதிப்பதற்காய்
இருளும்
வாழ்வில்
எது கவலை? பயம்?
எது துயரம்? சந்தோஷம்?
என் மீது
விழும் எச்சில்
துப்பியவன் மேலும்.
என் மீது
பாய் கத்தி
எடுப்பது எவர் உயிரை?
மரணக் கடல் கலக்க
எல்லாம் விரைகையில்
எதுவும் நிகழலாம்
இல்லையா?
நிகழட்டும்
நிகழட்டும்
பாதகமில்லை.
இது
விளைவிப்பது
ஒழுங்கீனம்? (Disorder)
அலட்சியம்? (Indifference)
குழப்பம்? (Confusion)
இல்லை.
பற்றின்மை.
அமைதி.

10. ஜனவரி 1977 கணையாழி.


மோட்சம் தேடாத எருமைகள்

குருவிகள் உள்ளே வந்து - மின்
விசிறியில் அடிபடும் என்று
ஜன்னலைச் சாத்தியாச்சு.
வியர்வை.
விலாவும் தரையும் பிசுபிசுக்க
வலிய வரவழைக்கும் தூக்கம்.
வேலை ஒன்றும் பளுவானதில்லை
ஆனால் ஒரு இடைவேளையையும்
விடுவதற்கு மனசில்லை.
ராப்பூரத் தூக்கம். பகல்பூரத் தூக்கம்.
பிரச்னைகளைத் தீர்க்கக்
காலையில் திடச் சித்தம் பூண்ட காலம்
மலையேறிப் போச்சு.
எது பற்றிப் பேசினலும் ரெண்டு
பக்கமும் சரியோ என்ற
தீராத சந்தேகம்.
இன்று சேற்றிலிருந்து
எழுந்து விட வேண்டும் என்று
உடம்பின் எல்லா மூலைக்கும்
ஆணைகள் விடுத்த மூளைக்கு
அப்பவே தெரியும்
இது 'சும்மா' ஒரு அலண்டாத விளையாட்டு.
யார் எந்த அரசியல் பேசினால் என்ன?
ஆபீஸ§ சம்பளம் குமாஸ்தா மூளையை
யார் என்ன ஏசினால் என்ன?
மூளையைக் காட்டிலும்
அதில் படரும் பாசி
சக்தியுள்ளது.
இதில் ஒரு துக்கமும் இல்லை.
பதட்டமும் படபடப்பும் குறைந்தாலும்
அதற்குத் தெளிவைக் காட்டிலும்
சோம்பலே காரணம்.
சும்மா இருப்பது
சுகமோ இல்லையோ
அதில் தொந்தரவில்லை !
ஒருகால் -
ஒரு நாள் -
புத்து வைக்கலாம்.
இல்லே ! புல் முளைக்கலாம்.

ஜூன் 1979 கணையாழி.


11. வாழ்க்கை


வெறுங்கையால் போட்ட முழம்.
அடியற்ற பாத்திரம்;
காற்று.
துளி நிஜ விஷம் கரைந்த
கற்பனைப் பாலாறு.
விரலிடுக்கால் வழிந்த த்ரவம்.
வார்த்தைகள் சிதைத்த அர்த்தம்.
யாரும் பாராத மரமுச்சிப் பேய்.
இருட்டின் புகைப் படம்
பயத்தின் ஆகாரம்.
மரணம் வடித்த சிலை.

அக்-நவம்பர் 1979 கணையாழி.

2 comments:

பாரதி மணி said...

வ.ஸ்ரீ., கவிதைகளை இப்போது படிக்கும்போது, தில்லி வாசத்தில் கணையாழியில் படித்த ஞாபகம் வருகிறது. என்ன அழகான வார்த்தைப் பிரயோகங்கள்!

உண்மையிலேயே நீங்கள் நிறைகுடம். உங்கள் நட்பு என் பாக்கியம்.

அன்புடன்,

பாரதி மணி

V.Srinivasan./வ.ஸ்ரீநிவாசன் said...

Away from home. No internet access. just now seen your comments (bowsing centre). So nice of you Sir.