FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Tuesday, May 5, 2009

ஜே.க்ருஷ்ணமூர்த்தி.

ஜே.க்ருஷ்ணமூர்த்தி.

வ.ஸ்ரீநிவாசன்.

(க்ருஷ்ணமூர்த்தியைப் பற்றி எழுதுவது காற்றை கையில் பிடிப்பதைப் போல.)

1895 மே 12ம் தேதி ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், மதனபள்ளியில் தம் பெற்றோருக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தவர் ஜே.க்ருஷ்ணமூர்த்தி (‘கே’).

1875ல் ஆரம்பிக்கப் பட்ட ப்ரம்ம ஞான சபையின் (Theosophical Society) உறுப்பினர்கள் புதிய ‘ஜகத்குரு’ (world teacher) வின் வருகையை எதிர் நோக்கியிருந்தனர். குறிப்பாக டாக்டர் அன்னி பெசன்ட் அம்மையாரும், சி. டபிள்யூ. லெட்பீட்டரும். 1909 ல் லெட்பீட்டர் ‘கே’யை அடயாறு கடற்கரையில் கண்டு பிடிக்கிறார். கேயின் ‘ஒளிவட்டத்’தில் சிறிதும் ‘சுயநலம்’ இல்லாது இருப்பது அவரைக் கவருகிறது. இவரே ‘உலக ஆசான்’ என்ற முடிவில் அன்னி பெஸன்ட்டால் கேயும் அவர் இளைய சகோதரர் நித்யாவும் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயே வளர்க்கப் படுகிறார்கள்.

‘ஆர்டர் ஆஃப் த ஸ்டார் இன் தி ஈஸ்ட்’ என்னும் புதிய ‘உலக ரட்சகரு’ (messiah)க்காக தோற்றுவிக்கப் பட்ட ஸ்தாபனத்தின் உறுப்பினர்களான, உலகெங்கும் பரவியுள்ள பிரம்ம ஞான சபையினர் சொத்துகளையும், செல்வங்களையும் வாரி வழங்குகிறார்கள். 1925ல் நித்யாவின் அகால மரணத்துக்குப் பின் கே பெரும் துக்கத்துக்கு உள்ளாகிறார். 1929 ஆகஸ்ட் 3ம் நாள் ஆர்டர் ஆஃப் த ஸ்டாரைக் கலைத்துவிட்டு அதற்கு வந்த கோடிக் கணக்கான சொத்துகளையும், செல்வங்களையும் திருப்பிக் கொடுத்துவிட்டு ‘உண்மை பாதையற்றது; எந்த ஸ்தாபனத்தின் மூலமாகவும், மதத்தின் மூலமாகவும், இனக்குழுவின் மூலமாகவும் அதனை அடைய முடியாது; என்னுடைய ஒரே அக்கறை மனிதனை நிபந்தனையின்றி, முழுமையாக விடுதலை அடையச் செய்வது மட்டுமே’ என்று அனைத்தையும் விட்டு விட்டு தனியாளாகிறார். பிறகு உலகம் முழுவதும், ஓரிடத்தில் நிரந்தரமாக தங்காது, சென்று பலதரப் பட்ட மக்களையும் சந்தித்து அவர்களோடு உரையாடுகிறார். தனிப்பட்ட உரையாடல்கள், பலர் பங்கேற்கும் சம்பாஷணைகள், பொதுக் கூட்டங்கள் என்று இறக்கும் காலம் வரை மனிதர்களோடு உரையாடிக் கொண்டே இருந்தார்.

‘இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு அனைத்தையும் துறந்தவர் கே’ என்கிறார் ஹென்றி மில்லர். உலகிலேயே மிக அதிகமான மனிதர்களோடு தனிப்பட்ட உரையாடல்களை மேற்கொண்டவரும் இவரே. இவரது பேச்சுகளால், போதனைகளால் ஈர்க்கப் பட்டவர்கள் பலர். இவர் ‘அறைக்குள் வந்தபோது அன்புக் கடவுளே வந்ததாக உணர்ந்தேன்’ என்று கலீல் கிப்ரான் சொல்கிறர். ‘நான் சந்தித்த மனிதர்களிலேயே அழகானவர்’ என்கிறர் பெர்னார்ட் ஷா.

இவரது பேச்சுகளைக் கேட்ட (இவரைக் கேட்பது புத்தரைக் கேட்பதைப் போல் இருக்கிறது) ஆல்டஸ் ஹக்ஸ்லி இவர் எழுதலாம் என்றார். அதன் பின் இவர் எழுதிய போதிலும், எழுதியவை சொற்பமே. பாக்கி எல்லாம் இவரது பொது மேடைப் பேச்சுகள், சம்பாஷணைகள். நேர்காணல்கள் ஆகியவற்றின் திரிபில்லாத எழுத்து வடிவங்களே.

அவ்வப்போது இவர் பற்றிய உலக கவனம் அதிகமாகும். எழுபதுகளில் அப்படி ஒரு சந்தர்ப்பம் நேர்ந்தது. தமிழ் இலக்கிய உலகில் அவரது தாக்கம் பெரிதும் இருந்தது. அசோகமித்திரன், பிரமிள், லா.ச.ரா., ஜெயகாந்தன் முதலியவர்கள் இவர் பற்றி பலதும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அதே காலகட்டத்தில் இருந்த ஒஷோ இவர் பற்றி பலபக்கங்களுக்கு கூறி இருக்கிறார். ரமண மகர்ஷியும் இவர் பற்றிய கேள்விகளுக்குப் பதில் தந்துள்ளார். இப்போது பிரபலமாக உள்ள ஜக்கி வாசுதேவ், ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் முதலியோரிடம் இவரது தாக்கம் பெரிதும் தெரிகிறது.
ஓஷோ தானும் கேயும் மஹாவீரரையும் புத்தரையும் போல ஒரே காலத்தில் உலகின் மீது சஞ்சாரம் செய்வதாகக் கூறியதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். யோகி ராம்சூரத் குமார் இவர் கை தன் சிரசில் பட்டதும் தன்னுடைய ‘நான்’ கழன்று விட்டதாகக் கூறினார் என்பார்கள். மேலும் ‘கடவுளை நம்பாதவர்க்கும் ஒரு குரு வேண்டுமல்லவா அவர்தான் கே’ என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் கே ‘நான் உங்கள் குருவல்ல’ என்று கறாராக ஆரம்பத்திலிருந்தே தெளிவுபடுத்தி இருக்கிறார். மேலும் குரு சிஷ்யனையும், சிஷ்யன் குருவையும் சிதைத்து விடுவார்கள் என்பது போன்று குரு சிஷ்ய மனோபாவத்தை வெகு வலுவாக எதிர்த்துள்ளார்.

ஓஷோ, ரமணர், சாய்பாபா, ஜக்கி வாசுதேவ், ரவிஷங்கர் போன்றவர்களில் ரமணர் ஒரு ஏழை கிராமத்து மனிதர் போலவே உடை (ஒரே ஒரு கோவணம் மட்டுமே) அணிந்து வாழ்ந்தவர். பாக்கிப் பேருக்கு என்று ஒரு பிரத்யேக உடை அலங்காரம் உண்டு. ஆனால் ‘பார்த்தால் பிறர் போலிருந்த’ ஆன்மிகர் கே. முழு சூட்டிலிருந்து, வேட்டி ஜிப்பா , ஜீன்ஸ், டீ ஷர்ட் வரை அந்தந்த ஊர்களில் மக்கள் அணியும் ஆடைகளையே அவர் அணிந்து வந்தார்.

சோதித்துப் பார்க்க முடியாதவற்றை எற்றுக் கொள்ள வேண்டாம் என்று கூறும் அவர் பற்றிய மஹாத்மியங்கள் அவரது போதனைகளுக்கு நேரெதிராக அமானுஷ்யமாக இருக்கும்.

பிரம்ம ஞான சபையின் உலக ஆசானாக இருந்த காலத்தில் சென்றவிடங்களிலெல்லாம் ஊடகங்களின் கேலிக்கு ஆளானவர். எந்த சர்வகலா சாலையும் இவரை மாணவராக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனால் பின்னர் உலகமே இவர் பேசியதைக் கெட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான உலக சமாதான சங்கத்தில் தொண்ணூறு வயதில் பேசுகையில் இவர் சொல்கிறார்: ‘என்னிடம் எல்லாக் கேள்விகளும் கேட்கப் பட்டுள்ளன.’

கேயின் போதனையை, தத்துவத்தை சுருக்கமாக சொல்லுங்கள் என்றால் சொல்ல முடியாது. இவர் எந்த தியரியையும், சூத்திரத்தையும், வழிமுறையையும் தரவில்லை. ‘வாழ்க்கை என்ன என்று சுருக்கமாக சொல்லுங்கள்’ என்றால் சொல்ல முடியுமா?

‘வாழ்க்கை உறவுகளில் ஓர் இயக்கம்’. ‘வாழ்க்கை செயல்களில் ஓர் இயக்கம்’ என்கிற கே உறவு பற்றியும் செயல் பற்றியும் மிக விரிவாக, மிகப் புதிதாகப் பேசி இருக்கிறார். நமக்கு யாருடனாவது உண்மையிலேயே உறவு இருக்கிறதா? என்று வினவும் அவர் ‘மிக நெருக்கமானதாக கருதப் படும் கணவன், மனைவிக்கு இடையில் உள்ள உறவு கூட இரண்டு பிம்பங்களுக்கு இடையில்தான் உள்ளது என்னும் துக்கத்தை எடுத்துக் காட்டுகிறார். இந்த பிம்பம் செய்தல் மனிதர் பற்றி மட்டுமல்ல, பொருட்கள் பற்றி, கருத்துகள் பற்றியும் நமக்கு உள்ளது. ‘பிம்பங்கள் இன்றி வாழ்வதே சுதந்திரம்’ என்கிறார் கே. பிம்பங்கள் இல்லை எனில் நிஜத்தை நேரிடையாக திரிபு இன்றி பார்க்க முடிகிறது. அப்போது உண்மையான உறவு மலர்கிறது. ‘உங்கள் மனைவி (கணவன்) பேசுவதை என்றாவது நீங்கள் செவி மடுத்து இருகிறீர்களா என்கிற கேள்விக்கு நம் நேர்மையான பதில் என்ன?

அதே போல் செயல். பயம், இன்பம், இலாபம், பாதுகாப்பு, நமது பிரத்யேக கட்டுப்பாடுகள் முதலியவற்றால் நிர்ணயிக்கப் படும் நமது செயல்கள் பின்னப் பட்டவையாக, சவால்களுக்கு சமமில்லாத பதில்களாகவே உள்ளன. எண்ணத்தின் அடிப்படையில் எழும் இந்த செயல்களால் எப்படி நன்மை விளைய முடியும். ‘சரியானதைச் செய்யுங்கள், சரியானது நடக்கும்’ என்கிற கே ‘நிஜங்கள் (Facts) சரியான செயலை உண்டுபண்ணும்’ என்று கூறுகிறார். மேலும் ‘நிஜம் என்பது உண்மையிலேயே நடந்து கொண்டிருப்பது’ என்றும் சொல்கிறார்.


‘கலை’ என்பது ஒவ்வொன்றையும் அதன் சரியான இடத்தில் வைப்பது’ என்கிறார். கவிதை வரிகளோ, ஓவியங்களோ, சிற்பமோ, இசையோ கலை அல்ல, அதைச் செய்யும் மனிதனது வாழ்க்கை பிரிவை, துயரத்தை, அழிவை உற்பத்திப் பண்ணுவதாய் இருந்தால் என்னும் கே வாழும் கலை பற்றி சொல்கிறார். ‘வாழும்கலை என்பது பயமின்றி, துக்கமின்றி, பிரச்னை இன்றி, சச்சரவு இன்றி வாழுதல்’ என்கிறார்.

‘செவி மடுத்தல்’ வாழ்வின் அனைத்தையும் விட முக்கியமான செயல். செவிமடுக்கும் கலை, நோக்கும் கலை, கவனிக்கும் கலை பற்றி விரிவாகப் பேசுகிறார். நாம் வாழ்வில் இடையூறு இன்றி எதையாவது கவனிக்கிறோமா என்பது நமக்கு புலனாகிறது. எதைக் கேட்கையிலும் நம் அபிப்பிராயம், நம் கட்டுண்ட நிலை அதைக் கேட்கவொண்ணாமல் செய்வதை நாம் உணருகிறோம். ஒரு மரத்தைக் கூட நாம் எண்ணத்தின் இடைஞ்சல் இன்றி காண முடியாமல் இருப்பதை உணருகிறோம்.

இயற்கையோடு உறவு இல்லாத மனிதன் ஏற்கனவே இறந்தவன் என்னும் இவரது இயற்கை பற்றிய வர்ணணைகள் ‘ரொமேன்டிக்’ ஆனவையல்ல.

மதங்கள், தேசியம், ஆகியவை எப்படி மனிதனைப் பிரித்துள்ளன என்று கூறும் கே ‘ஒருவன் இந்துவாக இருக்கும் வரை, இசுலாமியனாக இருக்கும்வரை, அரேபியனாக இருக்கும் வரை யூதனாக இருக்கும் வரை இந்து-முஸ்லிம் பிரச்னையோ, அரபு-இஸ்ரேல் பிரச்னையோ தீர வழியே இல்லை என்பதை தெளிவு படுத்துகிறர். தேசங்களாய்ப் பிரிந்து, போருக்கான தளவாடங்களைக் கூட்டிக் கொண்டே இருக்கும் மனிதக் குழுக்கள் ஐக்கிய நாடுகள் சபையையும் வைத்திருக்கும் விநோதத்தில் உள்ள அபத்ததை எடுத்துக் காட்டுகிறார். தேசியம் என்பது ஒளியூட்டப்பட்ட காட்டுமிராண்டித் தனம் (glorified tribalism) என்கிறார். இப்போதுள்ள விஞ்ஞான வளர்ச்சியால் ஒரே நாளில் உலகின் பசியையெல்லம் துடைத்து எறிந்து விட முடியும், ஆனால் நாம் தேசிய பிரிவுகளுக்குள் சிக்கி இருப்பதால்தான் அது சாத்தியமாகவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார்.இவரால் கிறிஸ்தவர்களுக்கு நடுவே பேசுகையில் ‘உலகின் பாதி கத்தோலிக்கர்கள் இனி ஆயுதம் ஏந்துவதில்லை என்று முடிவு செய்தால் உலகில் யுத்தம் என்பதே இருக்காது’ என்று சொல்ல முடிகிகிறது. சென்னையில் பேசுகையில் பக்கத்திலிருக்கும் மலைக் கோவிலுக்கு (திருப்பதி) இரண்டு நாளைக்கு ஒருமுறை ஒரு மில்லியன் டாலர் காணிக்கை குமிவதில் இருக்கும் அபத்தம் பற்றி பேச முடிகிறது. ‘ஹரிஜனங்கள் கோவில் பிரவேசம் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்ட நிருபர்களிடம் ‘ கோவில்களே கூடாது’ என்று சொல்ல முடிகிறது.


வாழ்க்கையை கவனிக்கச் சொல்லும் இவர் உண்மை என்பது வாழ்க்கைதான், மாறிக் கொண்டேயிருக்கும் வாழ்க்கையை தேங்கிப் போன கருத்துகளால் நிறைந்த மனதால் புரிந்து கொள்ள முடியாது, உண்மை உங்களுக்குப் புரிதலைக் கொடுக்கும், சௌகர்யத்தை அல்ல என்கிறார். வாழ்வை மீறிய தத்துவ விசாரங்களில் இவர் ஈடுபடுவது கிடையது. மறை நூல்களிலிருந்தோ வேறெவற்றிலிருந்தோ ‘மேற்கோள்கள் காட்டுவது கிடையாது.

சிஷ்ய கோடிகளும், மடங்களும், இவருக்கு இல்லை. கூடாது என்று மறுத்தவர். இவரது மையங்கள் வெறும் நிர்வாக மையங்களேயன்றி பராம்பர்ய ஆதீனங்கள் இல்லை. இவருக்கு அபாஸ்ல்கள் (apostle) கிடையாது. உனக்கு நீயே ஒளியாய் இரு என்கிற இவர் தான் யாருக்கும் குருவல்ல என்பதில் கடைசிவரை மாறாமல் இருந்தார்.


இவரது போதனைகள் குணரூபமாக (abstract) இருப்பதாகவும் புரிந்து கொள்ள கடினமானவையாக இருப்பதாகவும், கடைபிடிக்க முடியாத விஷயங்கள் என்றும் விமரிசனங்கள் உண்டு. கூர்ந்து பார்த்தால் மோட்சம், கடவுள், சொர்கம், நரகம், மறு பிறவி, கம்யூனிசம், பூஜை புனஸ்காரம் ஆகிய அனைத்து கருத்துகளின் அவசியமின்மை பற்றியும், வாழ்வின் ஒற்றை அவசியமான தினசரி வாழ்க்கை பற்றியும்தான் இவரது பேச்சுகளும் போதனைகளும் அமைந்துள்ளன. ‘தினசரி வாழ்வில் ஒழுங்கைக் கொண்டு வாருங்கள். அதுதான் முதற்படி (first step) முதற்படியே கடைசிப் படி’ என்று கற்பனைகளில் தப்பிக்க விடாமல் நம்மை நாமே காணும்படி செய்கிறார். காயம், குற்றவுணர்வு, பயம், இன்பம், ஆசை, காலம், எண்ணம், மரணம், அன்பு, தியானம் முதலிய நாம் வாழ்வில் தினசரி சந்திக்கும் மிக முக்கியமான விஷயங்களைப் பற்றி இவர் கூறிய சொற்கள் அப்போதே கவனித்து அப்போதே சொன்னவை. நினைவில் கோர்த்து வைத்திருந்து மறுபடி கூர்ந்து சொன்னவையல்ல.

இவரது மரண காலம் வரை இவர் உரையாற்றிக் கொண்டு இருந்தார். 1986 ஜனவரி 4ம் தேதி வாழ்நாளில் இவர் கடைசியாக உரையாற்றிய பொதுக் கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது ‘உங்கள் வாழ்க்கையை குளறுபடியாக நீங்கள் ஆக்கியிருந்தால் அதை மாற்றுங்கள், இன்றே மாற்றுங்கள்’ என்றவர், ‘நீங்கள் நிச்சயமற்று இருந்தால் ஏன் என்று கண்டு பிடியுங்கள், நிச்சயத்தோடு இருங்கள். உங்களால் நேராக சிந்திக்க முடியவில்லை என்றால் அது ஏன் என்று கண்டுணர்ந்து நேராக, தர்க்க ரீதியாக சிந்தியுங்கள்’ என்றார்.

அவ்வருடம் பிப்ரவரி 17 அன்று பைன் காட்டெஜில், ஓஹாய், கலிஃபோர்னியாவில் இறந்தார். வெஞ்சுரா, கலிஃபோர்னியாவில் இவர் உடல் தகனம் செய்யப் பட்டது. மரணத்துக்குப் பின் எந்தச் சடங்கும் செய்யப் படவில்லை. பிரார்த்தனைகளோ, ஊர்வலங்களோ இல்லை.

கேயின் போதனைகள் என்றும் மனிதரின் பிரக்ஞையில் இருக்கும், அவை மனித வாழ்வைப் பற்றி, மனிதனைப் பற்றி, மனித மனம் பற்றி அன்போடு, அக்கறையோடு, உண்மையை மட்டுமே சார்ந்து பேசுவதால்.

**************

“ஆனால் உங்களை எப்படிப் புதைப்பது?”
‘எப்படி வேண்டுமென்றாலும், உங்கள் விருப்பப்படி” என்றார் சாக்ரடீஸ், “அதாவது உங்களால் என்னைப் பிடிக்க முடிந்தால், நான் உங்கள் விரல்களின் நடுவே நழுவாதிருந்தால்” - PHAEDO ‘சாக்ரடீஸின் கடைசி நாட்கள்’.

No comments: