FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Sunday, February 2, 2014

கூறுகிறேன்… முடிந்தால் கேளுங்கள் – 4 - சிங்கப்பூரில் இட்லி – பயணக் கட்டுரை

கூறுகிறேன்… முடிந்தால் கேளுங்கள் – 4


பிரசுரம் : சொல்வனம் : இதழ் 99 | 18-01-2014|

சிங்கப்பூரில் இட்லி – பயணக் கட்டுரை

விட்டு விட்டு வரும் இந்தத் தொடரின் ஆரம்ப இரண்டு கட்டுரைகளில் சிங்கப்பூர் பற்றி வந்தது. எப்பாடு பட்டாவது எல்லாக் கட்டுரைகளிலும் சிங்கப்பூர் வருமாறு பார்த்துக் கொண்டால் இக்கட்டுரைகள் ஒரு நாள் நூல்வடிவம் பெறுகையில் இதை ஒரு பயண நூலாக்கி விடலாம் என்று தோன்றியது. அப்போது கதை, கவிதை, கட்டுரை, விமர்சனம் தவிர பயண நூல் எழுதிய பெருமையும் வரும். அப்புறம் பாக்கி இருப்பது நாடகம், சினிமா, காவியம், இதிஹாசம்தான். அவற்றைச் சுலபமாகச் செய்துவிடும் நம்பிக்கையும் வந்துவிடும். Success begets success இல்லையா? கற்பனை பாரதியின் ஞானரதமாக இல்லாவிட்டாலும் ஒரு ஆட்டோ ரிக்ஷா அளவுக்காவது இருந்தது தெரிந்தது. கற்பனைதான் பண்ணுகிறோம் என்று தெரிந்தபின் கடிவாளம் இல்லாமல் அதைச் செய்தால் என்ன என்று எண்ணுகையில் எண்ணிலடங்கா வண்ணச் சோலைகள் விரிந்தன. பயண நூல். எக்கச் சக்க விற்பனை. அதில் வரும் பணத்தைக் கொண்டு இன்னும் பயணங்கள். எனவே மேலும் பயண நூல்கள். சமையற்காரர் முன் குபேரன் தோன்றி செல்வச் செழிப்பாகக் கனவு காண் அல்லது கற்பனை செய் அதில் காண்பதெல்லாம் உனக்குத் தருகிறேன் என்று வரம் அருளினால் ஒரு வேளை அதில் சந்தன விறகும், தங்க அண்டாவும், வைரக் கரண்டியும் வரலாம்.
இந்த குறைந்த விட்ட வட்டத்தை விட்டு விஷயத்துக்கு வருவோம்.
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். என்னை விட 7,8 வயது இளையவர். நிறையப் படித்தவர். பல பட்டங்கள் வாங்கியவர். கதை, கவிதை தவிர கட்டுரை நூல்களையும் படிப்பவர். கல்லூரிகளில் மேலாண்மை வகுப்புகள் எடுப்பவர். ஃபிஷன், நான் – ஃபிக்ஷன், தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் படிக்கும் ஆச்சர்யமானவர். அவர் ஒரு முறை சொன்னார். “சாண்டில்யன் கதைகள் நல்ல கதைகள். அவர் பல ஆராய்ச்சிகள் செய்து நிறைய வரலாற்றுத் தகவல்களின் பேரில் கதைகளை எழுதியிருக்கிறார். இன்றைக்கும் அவரது நூல்கள் பெரிதும் விற்பனை ஆகின்றன.” சாண்டில்யனின் கதா நாயகி, ஏதோ ராஜகுமாரி, அழகிய மஞ்சத்தில் குப்புறப் படுத்துக் கொண்டு சாளரத்தின் வழியே வழியும் நிலவொளியில் மயங்கி மையல் வசப்பட்டு இருப்பதை ஒரு கதா நாயகன் அவளறியாமல் பார்த்து, அவளது பின்னம் பக்கங்களில் வைத்த தன் கண்களை எடுக்கவொண்ணாமல் தவிப்பது போன்ற வர்ணனைகளை முதலில் சில தடவை விறுவிறுப்போடு படித்து விட்டு அவர்கள் இருவரும் அடுத்த அத்யாயத்தில் அதற்கு மேல் ஒன்றும் செய்யாமல் இருந்ததால் சாண்டில்யனைப் படிப்பதையே விட்டு விட்ட எனக்கு இதில் உடன்பாடு இல்லையெனினும் நாகரிகம் கருதியும் மேலும் படிக்காமலேயே ஒருவரை விமர்சிக்க நானென்ன தமிழ் நாட்டின் புகழ் பெற்ற அறிவு சீவிகளிலொருவனா என்கிற ஆத்ம ஞானத்தின் காரணமாகவும் மறுக்கவில்லை. அப்புறம் தொடர்ந்தவர் “பயணக் கட்டுரைகள் என்றால் மணியன்தான் சார்” என்றார். அவர் அப்படி சொன்னதும் பல பயணக் கட்டுரைகளை தீவிர இலக்கிய வாசகர்கள் ‘எங்கே இட்லி கிடைக்கும்’ எனபதை எழுதுவதா பயணக் கட்டுரை என்று வாங்கு வாங்கென்று விளாசியிருப்பது நினைவுக்கு வந்தது. அப்புறம் சாண்டில்யன் மாதிரி மணியனை விட்டு விடக் கூடாது இதுபற்றி ஒரு ஆய்வு செய்ய வேண்டும் என்று துணிந்தேன். அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. நானும் சாண்டில்யனும் ஒரே சாதி. மணியன் வேறு சாதி. சாண்டில்யனைப் பற்றி எழுதினால் பின்னால் ‘வரலாறு’ என்னைப் பற்றி என்ன சொல்லும்? வரலாற்றில் இடம் பெறும் எண்ணம் இருப்பவர்கள் ஜாக்ரதையாக இருக்க வேண்டும். நாளைய ‘வரலாறு’ நம்மை ‘முற்போக்கு’, ‘ஜாதி பேதமற்றவர்’, ‘சுயஜாதி அபிமானம் இல்லாதவர்’, சமுதாயத்தின் கீழ் தட்டு மக்களை மதித்தவர், அவர்களுக்காக துக்கம் அனுஷ்டித்தவர், ‘மதசார்பற்றவர்’ என்றேல்லாம் பேச வேண்டுமா இல்லையா? வரலாற்றில் இடம் பெறும் எண்ணம் கொண்டவர்கள் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக நடந்து கொள்வதை நாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? அதிலிருந்து பாடம் கற்கா விட்டால் எப்படி. எனவே மணியனை ஆதரிக்க முடிவு செய்தேன்.
மணியனின் பயணக் கட்டுரைகளையோ, வேறு எழுத்துகளையோ நான் படித்ததில்லை. ஆனால் அவர் ‘எங்கே என்ன சாப்பிடக் கிடைக்கும்’ என்று எழுதியிருந்தால் அதில் என்ன தவறு என்பது எனக்கு உண்மையாகவே தெரியவில்லை. பலர் பயணக் கட்டுரை எழுதுபவர்களை ‘நல்ல வேளை, சாப்பாடு பற்றி எழுதிவிடுவீர்களோ’ என்று பயந்தேன் என்று புகழ்வதை அடிக்கடி கண்டிருக்கிறேன். சாப்பாடு என்ன மேலை நாட்டினரைப் போல நமக்கு கைகளால் தீண்டத் தகாததா? அதிலும் இட்லி.
சரி, ‘எப்படி இப்படி ஒரு விஷயம் பற்றி எழுத வந்து பலதும் பற்றி சொல்கிறீர்கள்’ என்று நீங்கள் வியப்பது எனக்குத் தெரிகிறது. அந்த இரகசியத்தை இப்போது சொல்கிறேன். இதற்கு சிறுவயதில் எனக்குக் கிடைத்த பயிற்சியே காரணம். எங்கள் திருவல்லிக்கேணியில் நான் கேட்காத மேடைப் பேசாளர்களே கிடையாது. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, நாவலர் நெடுஞ்செழியன், சொல்லின் செல்வர் சம்பத், கவியரசு கண்ணதாசன், தீபம் நா. பார்த்தசாரதி என்று ஒரு பெரிய லிஸ்ட். அதிலும் நடமாடும் பல்கலைக் கழகமாகிய நாவலர் நெடுஞ்செழியன் எங்கள் தொகுதிக்காரர். அதனால் எந்த தி.மு.க. மீட்டிங்கில் யார் வரவில்லையென்றாலும் அவரை அழைத்து வந்து விடுவார்கள். அவரே தன்னைப் பற்றி ‘ஸ்டெப்னி’ மாதிரி என்னப் பயன்படுத்திக்கிறாங்க என்று வேடிக்கையாகச் சொல்லுவார். அண்ணா முதற்கொண்டு பெரும் பேச்சாளர்கள் எந்தத் தலைப்பிலும் நொடி அறிவிப்பில் பேசுவார்கள் என்பதும் வரலாறு. அதிலும் நாவலர் நெடு நேரம் பேசுவார். அப்பேச்சுகளையெல்லாம் கேட்ட எனக்கு அதுவே பயிற்சி. சில பத்திகளுக்கு முன் வந்த ஒரு நீண்ட வாக்கியத்தை விட வேறு சான்று வேண்டுமா?
என்னிடம் எந்த தலைப்பு பற்றியும் கேளுங்கள் உடனே நெடு நேரம் பேச என்னால் முடியும். தவிர சில பேச்சாளர்கள் மாதிரி தலைப்பையே தொடாமல் ஏதேதோ பேசி முடித்துவிடும் ஞான சூன்யமோ, மறதிக்காரனோ நானில்லை.
Idly_Road_Vendor_Paatti_Street_Eat_Tiffin_South_India_Tamil_Nadu_TN_Breakfast
சரி இப்போ விஷயத்துக்கு. இட்லி சாப்பிடாத தமிழன் உண்டா? இன்னும் கேட்டால் இட்லி பிடிக்காத தமிழன் உண்டா? ஒவ்வொரு உணவு விடுதி அறிவிப்பிலும் பிள்ளையார் சுழிக்கு அப்புறம் இருக்கும் வஸ்து இட்லிதானே?
குழந்தைகள், வியாதியஸ்தர்கள், வயதானவர்கள் அனைவருமே கூட உண்ணக் கூடிய அதி சாதுவான பண்டம் இட்லிதானே?
நான் கடந்த இரண்டு மாதங்களாக பல்வலியால் மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். தாடைகள் பூட்டுப் போட்டுக் கொண்டு வாயைத் திறக்கவோ, பேசவோ, பல் துலக்கவோ படு சிரமம். ஒரு புறம் கன்னம் ஒரு முழு இட்லியை அடக்கிக் கொண்ட மாதிரி வீக்கம் வேறு. அப்போது என் ஆபத்வாந்தவனாக கை கொடுத்தவை இட்லிகள்தாம். அதற்கு முன்னரும் நான் இட்லிதாசன் என்பது உண்மைதான். ஆனால் வீட்டம்மாவின் விருப்பம், எப்போதும்போல், எதிரிடையான தோசை என்பதால் வீட்டில் இட்லி நடமாட்டம் குறைவு.
ம.பொ.சி., கி.ஆ.பெ.விஸ்வநாதம் ஆகிய முழு வாழ்வு வாழ்ந்தவர்கள் மிகக் கட்டுப்பாடான உணவுப் பழக்கம் கொண்டவர்கள். அவர்கள் வெளி ஊர் சென்றல் அவர்களுக்கு முன்பே அவர்களது உணவு விருப்பம் / பழக்கம் பற்றிய தகவல் போய் விடும். அதில் இட்லி நிச்சயம் இருக்கும்.
இன்னும் இட்லி பற்றி எவ்வளவோ சொல்லலாம். நம் வழக்கத்துக்கும் மரபுக்கும், நம் குருமார்களுக்கும் ஏற்ப ஓர் ஆராய்ச்சி. இட்லி என்கிற மூன்றேழுத்தில் ஓர் உயிர் எழுத்து, ஒரு மெய்யெழுத்து, ஓர் உயிர் மெய் எழுத்து இருக்கிறது. இதிலிருந்தே இது தமிழன் உணவு என்பது புலனாகவில்லையா?
இல்லை இட்லி வெளி மாநிலத்திலிருந்து நமக்குக் கிட்டிய ‘வந்தேறி’ என்பவர்கள் உண்டு. விநாயகரே ‘வந்தேறி’ பட்டம் வாங்கிய பிறகு இட்லி அந்தக் குழுவில் இருந்தால் அதற்கென்ன குறைச்சல். வந்தேறிய விநாயகரிடம் ஔவைக் கிழவி ‘சங்கத் தமிழ் மூன்றும் தா’ என்கிறாள். எனவே ஔவை பற்றியும் டவுட்டாக இருக்கிறது. இப்போதுதானே ஆராய்ச்சியாளனானேன். அதன்படிக்கு எப்படி சங்கத் தமிழ் மூன்றையும் வந்தேறி விநாயகர் பதுக்கி வைக்க அதை ஔவை என்கிற பச்சைத் தமிழச்சி மீட்கிறாள் என்கிற வரலாற்றின் நுட்பத் தகவலாகவும் இதைக் கொள்ளலாம். வரலாறு பற்றிய இரு வேறு கட்டுரைகள் இவ்விதழில் வந்துள்ளன. அவற்றோடு சேர்த்து இதைப் புரிந்து கொள்ளவும்.
விநாயகரும் இட்லியும் பிரிக்க முடியாத இரட்டையர்கள் மாதிரி மேலே இரண்டு இடங்களில் சேர்ந்து வந்து விட்டார்கள். எனவே ஆராய்ச்சி மனம் மேலும் சொல்கிறது : ஏழைகளுக்கும், பணக்காரர்களுக்கும், மாபெரும் கோவில்களிலும், மரத்தடி, குளக்கரைகளிலும் இருப்பவர்  பிள்ளையார். அதே போல் இட்லியும் எங்கும் எவருக்கும் எளிதில் அருள் பாலிப்பது.
ஒரு ஊருக்குப் போபவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யாமல் இருக்க முடியும். ஆனால் சாப்பிடாமல் இருக்க முடியுமா? எல்லோருக்கும் சொந்தக் காரர்களோ நண்பர்களோ எல்லா ஊர்களிலும் இருப்பார்களா? “அந்த ஊர் சாப்பாடைச் சாப்பிடுங்களேன். ஏன் எல்லா இடத்திலும் இட்லி தோசை என்று அலைகிறீர்கள்?” என்று நாஞ்சில் நாடன் போன்ற கலை மனமும், தேர்ச்சி மிகு ருசியுணர்வும் கொண்ட அறிஞர்கள் கேட்கலாம். ஆனால் தாம்பரத்தை இதுகாறும் தாண்டாத சென்னை வாசிகளுக்கு அது முடியுமா? போன இடத்தில் படுத்துவிட்டால் என்ன செய்வது என்று பெரிய லக்கேஜாக மாத்திரைகளை எடுத்துச் செல்லும் முத்தண்ணாக்களுக்கு? எனவே எங்கே நம்ம ஊர் சாப்பாடு கிடைக்கும் என்பது அவசியம் தெரிய வேண்டும். அது இணையத்தில் கிடைக்கும், பத்ரிகைகளில் கிடைக்கும் என்பீர்கள். அதையெல்லாம் எல்லாராலும் தேட முடியுமா? பயன்படுத்தத் தெரியாதவர்களுக்கென்றுதான் பயணக் கட்டுரைகள், பயண நூல்கள். அதில் அவசியம் பதிவாக வேண்டியது ‘எங்கே இட்லி கிடைக்கும்’ என்பதுதான். பின் கொசுறாகக் காஃபி, சாம்பார், வேண்டுமென்றால் தோசை இத்யாதி. ஆனால் மன்னர் வந்தால் கூடவே ரத,கஜ,துரக, பாதாதிகள் வரும் என்பது போல் இட்லிக் கடைகளில் இவையும் இருக்கும்.
மேலும் ஒரு நாட்டின் பொருளாதாரம், அரசியல், சரித்திரம், பூகோளம், பண்பாடு, கலாச்சாரம், இசை, தலைவர்கள், கலைஞர்கள் பற்றியெல்லாம் எழுத கொஞ்சமாவது சரக்கு வேண்டும். ‘சரக்கு’ பற்றி எழுத அனுபவம் வேண்டும்.
உலகத்தில் எது அதி முக்கியமானதோ அது இகழப்படும் என்பது வழக்கு. பெண்கள். நமக்கு உணவைப் பயிறிட்டுத் தரும் விவசாயக் கூலிகள். துப்புரவுத் தொழிலாளர்கள் – இவர்களெல்லாம் இல்லாமல் அமையாது உலகு. ஆனால் காலம் காலமாக ஏச்சுக்கும், பேச்சுக்கும், சுரண்டலுக்கும் ஆட்பட்டு வருபவர்கள் இவர்கள். அதே மாதிரி இட்லியின்றியும் அமையாது உலகு. ஆனாலும் தமிழ் ‘ரைம்’ களில், சொலவடைகளில் ‘தோசை’ க்கு இருக்கும் இடம் இட்லிக்கு இல்லை. திட்டும் போது மட்டும் இவர்களுக்கு ‘இட்லி’ வேண்டும். அதுதான் உலகம்.
ஆசிரியர் குழுவினரின் பின் குறிப்பு:
இந்தக் கட்டுரை பதிப்புக்குத் தயாரனதும்தான் இதில் சிங்கப்பூரில் இட்லி கிடைக்கும் இடம் பற்றி கட்டுரையாளர் குறிப்பிடவேயில்லை என்பதைக் கவனித்தோம். கட்டுரையாளரைத் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. எனவே எங்களுக்குத் தெரிந்தவரையில் சிங்கப்பூரில் இட்லி கிடைக்கும் சில இடங்கள்: கோமள விலாஸ், கோமளாஸ், முருகன் இட்லி கடை, எம்.டி.ஆர்., பிக் பைட்ஸ், ஹோட்டல் ராஜ், சரவண பவன், ஆனந்த பவன், இதைத் தவிர எண்ணற்ற சிறு சிறு கடைகள் மற்றும் அனைத்துத் தமிழர், தென்னிந்தியர் இல்லங்களிலும். லிட்டில் இந்தியாவில் இருக்கும் ஸ்ரீநிவாஸ பெருமாள் கோவிலில் வெஜிடபிள் பிரியாணி கூட கிடைக்கிறது என்பது கொசுறு செய்தி.

கூறுகிறேன்… முடிந்தால் கேளுங்கள் – 3 - கிரிக்கெட்டின் ஆனந்தமும், சதுரங்கத்தின் ரசமும்.


கூறுகிறேன்… முடிந்தால் கேளுங்கள் – 3


பிரசுரம் : சொல்வனம் : இதழ் 97 | 15-12-2013|

கிரிக்கெட்டின் ஆனந்தமும், சதுரங்கத்தின் ரசமும்.

ஒருவிதத்தில் மனித வாழ்க்கை, பௌதிக விதிகளின், குறிப்பாக இந்த மூளையை உள்ளடக்கிய உடல் என்னும் பௌதிக விஷயத்தின் எல்லைகளையும், அவ்வெல்லைகளைக் கடக்கக் கூடிய சாத்தியங்களையும் கண்டடைவதற்காகத்தான் போலும். குப்புறக் கவிழும் கைக்குழந்தை. ஒற்றைக் கழியின் மேல் இரு கால்களையும் வைத்து விறுவிறுவென்று போகும் சிறுமி. சைக்கிளில் கைகளை விட்டுவிட்டு எவ்வளவு தூரம் போக முடிகிறது என்று போய் விழும் சிறுவன். நூறாவது பிறந்த நாளை சென்ற வருடம் கொண்டாடிய 1952ம் வருட மிஸ்டர் யுனிவர்ஸ் மனோஹர் ஐச்.
மொஸார்ட்டும், பீதோவனும், லியனார்டோ தாவின்ஸியும், வான்கோவும், ‘மதுரை மணி ஐயரும், கே.பி. சுந்தராம்பாளும், பிரமிக்க வைக்கும் கதீட்ரல்களும், கற்கோவில்களும், மசூதிகளும், பொற்கோவில்களும், புலியையும், யானையையும், சிங்கத்தையும், சுறாவையும், காளையையும், கரடியையும் அடக்கும் வீரர்களும், எண்ண முடியா உணவு வகைகளை உண்கிற, சம்போகங்களில் திளைக்கிற, மதுவில் நீந்துகிற மனிதர்களும், ‘ட்ரக்ஸு’ம், ‘பங்கி ஜம்ப்களும்’… கண்ணைத் திறந்தால் கண்ணை மூடி செய்த கனவை நனவாக்கும் செயல்களும் இந்த எல்லையைப் பரீட்சிக்கத்தானோ?
விளையாட்டும், கலையும் குலோப் ஜாமுனும், ரஸகுல்லாவும், சேவையும், இடியாப்பமும், ஜாங்கிரியும், ஜிலேபியும் போல் ரொம்ப ரொம்ப நெருங்கிய ஆனால் சூட்சுமமான வித்தியாசம் உள்ள மனித கேளிக்கைகள். விளையாட்டு எந்த சீரியஸ் வேஷமும் போட்டுக் கொள்ளாத கேளிக்கை.
விளையாட்டு உலகில் பத்து செகண்ட் முத்தம், முகமது அலி, ஒலிம்பிக்ஸில் 10க்கு 10 வாங்கும் குழந்தைகளாகிய இளம் சிறுமிகள், பீலி, பீட் சாம்பிராஸ் பின்னாலேயே ரோஜர் ஃபெடரர் முதலிய அதி மனிதர்கள்.
அதில் ஒரு மனிதர் சமீபத்தில் ஓய்வு பெற்றது மிகப் பெரிய நிகழ்வாக இருந்தது. அவர்தான் 16 வயதில் சர்வ தேச அளவில் இந்தியாவுக்காக கிரிக்கட் ஆடிய சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்.
ST_Cricketers_Young-sachin-tendulkar_Indian_Sports_Youth_Child_Teen_Sensations
இவரது சாதனைகள் பற்றி பெரும்பாலான இந்தியர்களுக்குத் தோராயமாகவாவது தெரியும். இவர் ஆட்டத்தையும், இவர் தன்மையையும் இரண்டு விதமாக அணுகலாம்.
அளவு என்று பார்த்தால் ஓட்டங்களின் எண்ணிக்கை. சமீபத்தில் யாரும் நெருங்க முடியாத எண்ணிக்கை அளவில் உயர எங்கோ இவர் இருக்கிறார் என்பது குழந்தைக்குக் கூடத் தெரியும். அடுத்தது இவர் ஆட்டத்தின் தரம். க்வாலிடி. ஒவ்வொரு ஆட்டக் காரருக்கும் / கலைஞருக்கும் ஒன்றோ இரண்டோ பலஹீனங்கள் இருக்கும். ஸ்டெஃபி க்ராஃபுக்கு பேக் ஹேண்ட். ஆனாலும் அவரது மீதத் திறமை அபரிமிதமாக இருந்ததினால் அவர் முதன்மை ஆட்டக்காரராகவும், உலகின் மிகச் சிறந்த டென்னிஸ் வீராங்கனை (இது என்ன வார்த்தை?) யாகவும் திகழ்ந்தார்/. சஞ்சய் சுப்ரமண்யத்தின் குரல் வளம் அவரது பலம் அல்ல. அவரது அசராத திறமையே நமக்கு அந்த பலஹீனத்தை உணர முடியாமல் செய்கிறது. கங்கூலிக்கும், ஸ்ரீகாந்த்துக்கும் இன்னும் பல இந்திய வீரர்களுக்கும் (மறுபடி இது என்ன வார்த்தை?) ஷார்ட் பிட்ச் பந்துகள். சிலருக்கு ஆஃப் சைடும், சிலருக்கு ஆன் சைடும் வலு அதிகம். சிலர் தரையோடு அடிக்கும் ஷாட்களிலும் (விஜய் மஞ்ச்ரேகர்), சிலர் தூக்கி அடிக்கும் ஷாட்களிலும் (நவாப் ஆஃப் படௌடி ஜூனியர்) வல்லவர்கள். சிலர் மெதுவாகவும், சிலர் வேகமாகவும் ஆடுவார்கள். இந்த மாதிரி எந்த ஒரு சிமிழிலும் அடைபடாமல் எல்லா விதங்களிலும் ஆடத் தெரிந்த பேட்ஸ்மேன் களில் சச்சினும் ஒருவர்; முதன்மையானவர். அவர் காலத்தின் ப்ரயன் லாரா என்னும் இடது கை ஆட்டக்கார மாமேதையும் அப்பேற்பட்டவரே. கிரிக்கட் வரலாறில் பலர் இருந்திருக்கிறார்கள். ப்ராட்மன், சோபர்ஸ், கன்ஹாய், ரிசர்ட்ஸ், லாய்ட், க்ரெக் சேப்பல், பாய்காட், கவஸ்கர், பான்டிங், டிராவிட், விஸ்வநாத், லக்ஷ்மண், டர்னர், கால்லிஸ் என்பது மிகச் சிறிய பட்டியல். இந்தப் பட்டியலில் முதன்மையில் சச்சின் இருப்பதற்குக் காரணம் அளவு, தரம் இரண்டிலும் அவரது சாதனைகள்.
ஊடகங்களின் பெருக்கத்தால் ஹீரோக்கள் அருகி விட்ட காலத்தில், அதன் காரணமாக இல்லாமல், பழைய அளவுகோல்களின் படியும் இவர் ஒரு ஹீரோவாக திகழ்கிறார். மனிதர் மனம் எதை விரும்பும் என்பது முன்கூட்டியே அனுமானிக்க முடியாத விஷயம். மரபார்ந்த அணுகுமுறை ஒரு மினிமம் காரண்டியைத் தரலாம்; ஆனால் அது உச்சியில் கொண்டு போய் சேர்க்கும் என்கிற நிச்சயம் இல்லை. பரவலாகச் சொன்னால் இரண்டு விதமான மனிதர்களுக்கு உலகம் இதயத்தில் இடம் தருகிறது. இந்திய மனதுக்கு இது அமைதியையும், செம்மையையும் வாழ்வாகக் கொண்ட இராமனாகவும், குதூகலத்தையும், சாகசத்தையும் வாழ்வுமுறையாகக் கொண்ட க்ருஷ்ணனாகவும் அமைந்திருக்கிறது. தமிழகத்தின் சமீபத்திய சரித்திரத்தை எடுத்துக் கொண்டாலே சிவந்த நிறமும், நல்லதனங்கள் அனைத்தின் உருவகமாகவும் படங்களில் நடித்த எம்ஜியாரைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ஆனவர் கருப்பான, புகைபிடிப்பதையும், குடிப்பதையும் திரையில் செய்யும் ரஜினிகாந்த்.
Rama_Krishna_MGR_Rajni_Heroes_Ethics_Morality_Role_Models_Tamil_India_Sports_Cinema_Icons_Famous_Worship_Religion
இதில் ஆட்டக்களத்தில் க்ருஷ்ணனைப் போல் சாகசங்கள் செய்த டெண்டுல்கர், பொது வாழ்வில் இராமனைப் போன்ற பிம்பமே படைத்து இருக்கிறார். தகப்பனார் மீது பக்தியும், தாயாரின்பால் மட்டற்ற பாசமும், ஆச்சார்யர்களிடமும், மூத்தோரிடமும் மிகுந்த மரியாதையும், மனைவி, மக்களோடும், சகோதரர்களோடும், சகோதரியோடும்  அன்பும், பற்றும் நிறைந்த மனிதரகவும், குடும்பஸ்தராகவும் இருக்கிறார். அதிருஷ்டவசமாக பெரும்பாலான இந்திய கிரிக்கட் ஹீரோக்கள் தன்மையும், கண்ணியமும் மிக்கவர்களாகவே இருந்து வருகிறார்கள். டிராவிட், லக்ஷ்மண், விஸ்வநாத், கும்ப்ளே, பிரசன்னா, வெங்கட்ராகவன், ஸ்ரீநாத், கபில்தேவ் என்று நீண்டதொரு பட்டியல் இருக்கிறது. கவாஸ்கர் போன்று தன்மானத்தோடு இந்தியாவின் நிலைப்பாட்டை உறுதியாக எடுத்துரைத்தவர்கள், பேடி போல் அரசியல் செய்தவர்கள், நவீன காலத்துக்கேற்ப மரபிற்கு எதிரான காரியங்களைச் செய்யத் தயங்காத கங்குலி போன்றவர்களும் உண்டு.
தன் துறையில் முதல் ஸ்தானம் கிடைத்ததும் பலர் திக்குமுக்காடிப் போய்விடுவார்கள். பகுத்தறிவு அல்லது ஆன்மீகப் பைத்தியமாகவும் ஆகிவிடுவதுண்டு. சிலருக்கு முதல் ஸ்தானம் கூட வேண்டாம் ஒரு அங்கீகாரம் கிடைத்து விட்டாலே போதும். எல்லாவற்றையும் பற்றி ஆணித்தரமாகப் பேச ஆரம்பித்து விடுவார்கள். சச்சினுக்கு இது நிகழவில்லை.
மேலும் வென்றவர்களுக்கு வலைபோடும் கேளிக்கைகளுக்கும், அரசியலாருக்கும், சமூக எதிரிகளுக்கும் ஏகப்பட்ட ஆயுதங்கள் கைவசம் உண்டு. அண்டர் க்ரௌண்ட் தாதாக்கள் கோடி கோடியாய் புழங்கும் இவ்விளையாட்டில் பொன் முட்டையிடும் சச்சினை சும்மாவா விட்டு வைத்திருப்பார்கள்? ஓய்வு பெறும் நாள் வரை பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருந்து விட்டார்.
இது பழக்கப்படுத்திக் கொள்வதால் வந்த நல்லதனம் இல்லை. அவருக்கு அரணாக இருந்தது கிரிக்கட்டின் பால் அவருக்கு இருக்கும் தாபம். சீதையை இரவணனிடமிருந்து காத்தது கற்புதான் (கற்பின் கனலி – கம்பன்) ஆனால் அது கனல் மட்டுமல்ல காதலின் புனல்.
ஆட்டத்தின் மத்தியில் இருக்கையில் ஒவ்வொரு சிறுதகவல்களையும் பற்றிய பிரக்ஞை முழுதாக வேண்டும் என்பார் சச்சின். அந்த வழுவாத பிரக்ஞைதான் அவரது ‘ஸோன்’ (Zone) ஐம்பது அறுபதினாயிரம் ரசிகர்கள் எழுப்பும் ஆரவார ஒலிகளோடு, இலட்சோபலட்சம் மக்களின் எதிர்பார்ப்புகளோடு தன் பிராபல்யம் அதன் நீடிப்பு ஆகிய அனைத்தையும் விட்டுவிட்டு அந்தப் பந்தையே காணும் ஏகாக்ரக சிந்தை. தலை சிறந்த பேட்ஸ்மன் என்றாலும் பௌலிங்கிலும், ஃபீல்டிங்கிலும் கற்றுக் கொண்டே, புதியனவற்றைச் செய்துகொண்டே இருந்தது இவருக்கு இந்த விளையாட்டின் சகல துறைகளிலும் உள்ள ஆர்வத்தைக் காட்டுகின்றது.
இத்தனை மக்கள் கவனத்துக்குப் பின்னும் இவர் இயல்பாக இருந்ததுதான் அதிசயம். ஒரு பேட்டியில் ப்ராட்மனை (ரன்கள் சராசரி 99.9)ச் சந்தித்ததைப் பற்றி சொன்னார். “இந்நாளில் கிரிக்கெட் ஆடினால் உங்கள் சராசரி எவ்வளவு இருக்கும்” என்று சச்சின் கேட்டதற்கு ப்ராட்மன் “என்ன ஒரு 70 இருந்திருக்கும்” என்றாராம். “அப்போ கிரிக்கெட் இப்போது அதிகக் கடினமாகி விட்டது இல்லையா” என்ற சச்சினின் கேள்விக்கு “அப்படியில்லை, ஒரு 90 வயது மனிதனால் அவ்வளவுதானே அடிக்க முடியும்” என்றாராம். இதைச் சச்சின் சொல்லியபோது ‘அந்தப் பையனின் சிரிப்பில் அந்தக் கிழவரின் குறும்பையும்’ காண முடிந்தது.
சச்சினின் கடைசி டெஸ்ட் மாட்ச் பல முறை சிரத்தையோடு பயிற்சி செய்யப்பட்ட ஒரு மாபெரும் இசை நிகழ்ச்சி போல் அமைந்தது. கொல்கொத்தாவிலோ, சென்னையிலோ அல்லது இந்தியாவில் வேறெங்கோ அவர் ஓய்வு பெற்றிருந்தால் கூட இதே போன்ற இறுதி மேட்சாக, ரசிகர்களின் உணர்வுப் பூர்வ ‘விடைகொடல்’ நடந்திருக்கும். மிகப் பொடுத்தமாக அவரது சொந்த மாநிலத்தில் அவரது ஊரான மும்பையில் நடந்தது. 74 ஓட்டங்களை எடுத்தார். இந்தியா வென்றது. ஒரு பத்ரிகையில் எழுதியிருந்த மாதிரி இத்தனை வருடங்கள் ரசிகர்களைத் தன் மட்டையால் மயக்கி வைத்திருந்த டெண்டுல்கர் கடைசிப் போட்டியின் முடிவிலும் அதையே செய்தார், இம்முறை ‘மைக்’ மூலம். ஒரு நிதானமான, தெளிவான, உணர்ச்சி பிரவாகம் இல்லாத, உண்மை உணர்வுகளும், திருப்தியும் உள்ள ஒரு மனிதனின் மனமார்ந்த வார்த்தைகளால் ஆன பேச்சு அது. பிரியாவிடை கொடுத்த மைதானத்தில் இருந்த ஆயிரக் கணக்கானவர்களும், தொலைக் காட்சிகளில் பார்த்துக் கொண்டிருந்த கோடிக்கணக்கானவர்களும் அமைதியாய், நிறைந்த மனதோடு அந்த அர்ப்பணிப்பில் இரண்டறக் கலந்தனர்.
பாலைவனத்தில் மட்டுமல்ல, பூங்காக்களால் நிரம்பிய பிரதேசத்திலும் அவர் ஒரு பூத்துக் குலுங்கும் சோலை. வெற்றியின் போதையில் தம்பட்டம் அடிக்கும் பலஹீன இதயம் கொண்டவரல்ல. கிரிக்கெட்டை இசைத்த, அதில் மையல் கொண்ட விளையாட்டுக்காரர். ஏதேச்சையாக புகழும், செல்வமும் பெற்றாலும் அவற்றால் பந்தமுறாதவர். அதே சமயம் சமர்த்து.
tendulkar_and_Visvanathan_anand
கிரிக்கெட் போலவே இன்னொரு விளையாட்டு சதுரங்கம். இந்தியாவில் தோன்றிய இதற்கென்று இந்தியப் பெயர் இருக்கிறது. இந்தியர்களுக்கு மிகவும் பரிச்சயமான, புராண காலத்திலிருந்தே புழங்கி வரும் விளையாட்டு. அதனால்தானோ என்னவோ இது மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறவில்லை. மேலும் இதன் சட்ட திட்டங்கள் கொஞ்சம் சிக்கலானவை. மன்னர்கள், ஆசிரியர்கள், அரசவைப் பிரமுகர்களின் விளையாட்டாக இது இருந்ததும் ஒரு காரணம்.
ஒரு காலத்தில் கிரிக்கெட் சதுரங்கத்தைப் போலவே விளையாடப் பெற்றது. டெஸ்ட் போட்டிகளில் ஆறு அல்லது ஐந்தரை மணி நேரங்களில் 200 ரன்களுக்கும் கீழே கூட அடிக்கப்பட்டதுண்டு. ஒவ்வொரு பந்தும் வீசப்பட்ட முறை அதில் இருந்த நுணுக்கம், அதில் இருந்த ஃபீல்ட் ப்லேஸ்மென்டின் வியூகம், அதை பேட்ஸ்மன் எதிர்கொண்ட விதம், பந்து வீச்சளரை மாற்றுவது எல்லாம் துல்லியமாக கவனிக்கப் பட்டு விமர்சிக்கப்பட்ட காலம் அது. ஃபீல்டிங் ஒடுக்கப்பட்ட மக்களைப் போல் அதிக கவனம் பெறாத ஒன்றாக இருந்தது. ஆட்டத்துக்கு கவனம் கூடக் கூட இதிலும் இந்தியர்கள் முன்னேற்றம் காட்டினார்கள். பின் ஒரு நாள் போட்டி, இப்போது ‘ஒருநாள் போட்டி சினிமாவின் க்ளைமேக்ஸ்’ மட்டும் போன்ற டீ 20. பின்னால் ‘டென் டென்’ வரவும் வாய்ப்புண்டு.
சதுரங்கத்திலும் இதே போன்ற வேக ஆட்டங்கள், ஒருவர் பலரோடு ஆடுவது என்றெல்லாம் பல வித்தியாசமான ஆட்டங்கள் உண்டு. எனினும் பரந்த மைதானமும் அதை விட பல்லாயிரக்கணக்கான மடங்கு சுருங்கிப் போன 64 சதுர ஆட்டமும் ஒரே மாதிரி புகழைப் பெறுவது, கிரிக்கெட்டைப் போன்ற பார்வையாளர்களின் கூட்டமான பங்களிப்பை சதுரங்கம் பெறுவது சாத்தியமில்லை.
கிரிக்கெட் சினிமா மாதிரி ஒரு மக்கள் கேளிக்கை எனில், செஸ் எழுதுவது, படிப்பது மாதிரி தனிப்பட்ட பிரத்யேக கேளிக்கை. அதுவும் சோடா புட்டிக் கண்ணாடியோடு, முகவாய்க் கட்டையை தேய்த்துத் தேய்த்து இல்லாமல் செய்ய தளரா முயற்சியில் ஈடுபட்டுள்ள இருவரது ஆட்டம்.
இந்த விளையாட்டு ரஷ்யர்களின் சட்டைப் பைக்குள் இருந்த சின்னஞ்சிறு செல்லக் குருவி. அதை அதிலிருந்து எடுத்து தன் அமெரிக்கத் தோட்டத்தில் பறக்க விட்டவர் பாபி ஃபிஷர். பின் கார்போவ், காஸ்பரோவ் என்கிற ருஷ்ய மாமேதைகளிடம் மீண்டும் பறந்தது. ஓர் இந்தியன், தமிழன், நினைவு வையுங்கள் எந்தவித அரசு, அமைப்பு, மக்கள் விருப்பம் என்கிற ஆதரவும், துணையும், இல்லாத ஒரு இளைஞன் தன்னந்தனியே தவமிருந்து வரமாக அக்குருவியை மீண்டும் இந்திய வானில் – சதுரங்கத்தின் தாய் வானத்தில் – பறக்க விட்டான். ஒருமுறை விபத்தாய் அல்ல. பலமுறை.
கலை, விஞ்ஞானம் போல் விளையாட்டுக்கும் தேசமில்லை. எப்போதும் இந்தியாதான் ஜெயிக்க வேண்டும் என்று வெறி கொண்டு திரியும் விவரமறியா ரசிகருக்கும், விளையாட்டின் மேன்மைக்கும் சம்பந்தம் கிடையாது. அவர்களே இப்போது பெரும்பான்மை. எனினும் ஒரு வரலாற்றுப் பதிவிற்காகவும், சமுக சூழலில் அனுசரணையற்ற ஒரு நாட்டிலிருந்து ஒருவர் உச்சியைத் தொடுகையில் அதன் ஆச்சர்யம் அளவிடற்கரியது என்பதற்காகவும் இந்த நாடுகளைப் பற்றிய குறிப்புகளைச் சொன்னேன். மேலும் ரஷ்யர்கள் செஸ் தங்களுகே தங்களுக்கானது என்பதில் அசைக்க முடியா பிடிவாத நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தார்கள். உலகமும் அதை ஆமோதித்தது. ஆனந்தின் சாதனை அந்தச் சூழலில் இன்ன்மும் முக்கியத்துவம் பெறுகிறது. தாழ்த்தப்பட்ட, கல்வி மறுக்கப்பட்ட சமூகத்திலிருந்து உச்சிக்கு வந்த அண்ணல் அம்பேத்கரின் சாதனை கல்வியோ, செல்வமோ அல்லது இரண்டுமோ இருந்த சமூகங்களிலிருந்து மேலே வந்து தேசப்பணி செய்தவர்களின் தொண்டை விட பன்மடங்கு ஒளிர்வதும் இதனால்தான்.
Vishwanathan_Anand_chess_Sports_Champions_Players_World_Best
விஸ்வநாதன் ஆனந்த், மஹாகவி பாரதி பிறந்த அதே டிஸம்பர் 11ல் 1969ல் மயிலாடுதுறையில் பிறந்தவர். 1988ல் க்ரண்ட் மாஸ்டர் ஆனவர். 2000ல் எஃப்.ஐ.டி.ஈ. உலகச் சாம்பியனாகவும், பின் 2007ல் அகில உலக சாம்பியனாகவும் ஆனார். 2008, 2010, 2012 உலகப் போட்டிகளில் மீண்டும், மீண்டும் வென்று இப்பட்டதைத் தக்கவைத்துக் கொண்டார். இப்போட்டிகளில் இவர் வென்ற வீரர்கள் முறையே ரஷ்யாவின் க்ராம்னிக், (Vladimir Borisovich Kramnik), பல்கேரியாவின் டொபலாஃப், (Veselin Aleksandrov Topalov, (pronounced [vɛsɛˈlin toˈpɑlof]) இஸ்ரேலின் கெல்ஃபேண்ட் (Boris Abramovich Gelfand)
2013ல் சென்னையில் அதாவது அவரது சொந்த ஊரில் நடந்த உலகப் போட்டியில் இவருக்கு 21 வயது இளைய மேக்னஸ் கார்ல்செனிடம் தோல்வியடைந்ததால் உலகச் சாம்பியன் பட்டத்தை இழந்தார்.
மக்களிடையே கவனமும், அரசாங்கம் மற்றும் இதர அமைப்புகளின் ஆதரவும் இனி சதுரங்கத்துக்கு ஓரளவு அதிகமாகலாம். அப்படி ஆனால் அதற்குக் காரணம் ஆனந்த்தான். ஒரு கபில்தேவ் வந்த பிறகுதான் இந்திய இளைஞர்களுக்கு வேகப் பந்து வீசும் ஆசையும், ஆர்வமும் நம்பிக்கையும் துளிர்த்தன. டெண்டுல்கரால் கிரிக்கெட்டும், கிரிக்கெட்டால் அவரும் பிரம்மாண்டமான கவனம் பெற்றபின் பல பேட்ஸ்மன்கள் அவரது பாணியிலேயே ஆட முயல்கிறார்கள். இதைப் ‘புதிய இந்தியாவின் பிம்பம்’ என்று சில விமர்சகர்கள் கணிக்கிறார்கள். அது ஓரளவு உண்மைதான் என்பதை ஐபிஎல் கிரிக்கட்களில் நடந்த ‘ஊழல்கள்’ நிரூபித்துவிட்டன.
ஆனந்தும் அமைதியானவர். போலி அடக்கம் இல்லாதவர். இயல்பாகவே அதிர்ந்து பேசாதவர். ஒரு பேட்டியில் சதுரங்க ஆட்டத்தைப் போலவே இந்தியாவில் பிறந்து அவ்விளையாட்டு உலகெங்கும் பரவி ரஷ்யாவில் மையம் கொண்டதைப் போல் அவரது வாழ்க்கையும் அமைந்ததை விளையாட்டாய்க் குறிப்பிட்டிருப்பார்.
சச்சினைப் போலவே இவரும் குடும்ப மனிதர். தன் தாயிடம் செஸ் கற்றுக் கொண்டதாகச் சொல்வார். இவரது பாட்டி ராவணன் செஸ்ஸைக் கண்டுபிடித்த புராணக் கதையை இவரிடம் சொல்லியிருக்கிறார். மனைவி, குழந்தை என்று அமைதியான வாழ்வை வாழ்பவர். தேவையற்ற முரண்பாடுகளில் சிக்கிக் கொள்ளாதவர். கர்வம், அகம்பாவம் அற்றவர். இந்திய விளையாட்டு வீரர்களின் சாதனைகளிலேயே மிக உயர்ந்ததைச் செய்திருப்பவர். இதுதான் உண்மை.
அரசு கௌரவித்தாலும், கௌரவிக்காவிட்டாலும் இவரும் ஒரு ‘பாரதத்தின் இரத்தினம்.’
மன்னராட்சியும், அந்நியராட்சியும் முடிவுக்கு வந்தபின் ஜனநாயகம் மலர்ந்ததால் இந்திய விளையாட்டின் குரல் வெளியுலகுக்குக் கேட்க ஆரம்பித்திருக்கிறது. அவற்றில் இனிமையான, பிசிறுகள் அற்ற, குரல்கள் ஆனந்துடையதும், சச்சினுடையதும். அவை மாசற்ற ஆர்வத்தின், ஒருமுகப்பட்ட கவனத்தின், சிதறாத பயிற்சியின், ஆதரவையோ, துணையையோ, புகழையோ, பணத்தையோ கருதி செய்யப்படாத, விளையாட்டின் பால் இருக்கும் தாங்கொணா பிரேமையால் எழுந்த குரல்கள். அதனாலேயே அவை உலகம் மரியாதையுடனும், அன்புடனும் கேட்கும் குரல்களாக ஆகின்றன.
நம் காலத்தின் இரு அதிமனிதர்கள் சச்சினும், ஆனந்தும்.
oOo
பி.கு. (‘சசின்’ என்கிற இந்தி வார்த்தையின் பொருள் ரசம், இருப்பு என்கிறது ஆன்லைன் அகராதி; ‘ஆனந்து’க்கு அகராதி வேண்டாம்.).

கூறுகிறேன்…. முடிந்தால் கேளுங்கள் – 2 - நூல் நிலையங்களும், வாசக சாலைகளும்.

கூறுகிறேன்…. முடிந்தால் கேளுங்கள் – 2


பிரசுரம் : சொல்வனம் : இதழ் 95 | 17-11-2013|

நூல் நிலையங்களும், வாசக சாலைகளும்.

2010ல் சிங்கப்பூர் சென்றிருந்த இரண்டு மாதங்களில் நான் அடிக்கடி சென்ற இடம் சிங்கப்பூரின் தேசிய நூல் நிலையம். வீட்டிலிருந்து ஒன்றேகால் மணி நேரம் பயணித்துப் போகவேண்டி இருந்தும், வீட்டு வேலைகள், ஊர் சுற்றிப் பார்த்தல், பிற இடங்களுக்குச் செல்லுதல் இவற்றுக்கிடையே பத்து முறைகளுக்கு மேல் போனேன். அது அப்படி ஈர்த்தது. புத்தகப் பிரியர்கள் பல பத்தாண்டுகளையோ, வாழ்நாளையோ கூட அங்கே கழிக்கலாம். பகல் முழுவதும் நூல் நிலையத்திலேயே இருந்து படிக்கலாம்.
பல அடுக்குகளைக் கொண்ட பிரம்மாண்டக் கட்டிடம். மிக அழகான முழுவதும் குளிர்பதனம் செய்யப்பட்ட உட்புறம். “ வா ! வந்து என் நிழலில் உட்கார்” என்று கி.ரா.விடம் சொல்கிற மரங்களைப் போல “உட்கார்ந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் படி” என்கிற சௌகர்யமான ஏராளமான இருக்கைகள். எண்ணற்ற நூல்கள். ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ் மொழி நூல்கள் கவனமாக வகைப்படுத்தப்பட்டு, தெளிவான வரிசையில், சுலபமாகக் கண்டுபிடிக்கக் கூடிய விதத்தில் எண்கள் தரப்பட்டு, திறந்த அலமாரிகளில் வைக்கப்பட்டிருக்கும். பல நூல்களை வீட்டிற்கு எடுத்து வந்தும் படிக்க முடிந்தது. டிவிடிக்கள், சிடிரோம்கள், கணினி வசதி, இதர பிரதியெடுக்கிற, ப்ரின்ட் செய்துகொள்கிற எல்லா வசதிகளும் உண்டு.
the-national-library-singapore
2013ல் சிங்கப்பூர் சென்று இருந்த இரண்டு மாதங்களில் ஒருமுறைகூட அங்கு போக முடியவில்லை. ஆனால் வீட்டிலிருந்து 10 நிமிட நடையில் ஒரு ரீஜனல் நூல் நிலையம் இருந்தது. ஒரு பகுதியின் நூலகம்தானே என்று பார்த்தால் நான்கு மாடிக் கட்டிடம். மற்றபடி வசதிகள் எல்லாம் தேசிய நூலகம் போன்றே. நூல்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்தது.
Art (‘கலை’) என்கிற தலைப்பின் கீழ் மட்டும் பல அலமாரிகளில் நூல்கள். அமெரிக்கன் லைப்ரரியின் அன்பளிப்பாக பல அலமாரிகளில் அமெரிக்க எழுத்தாளர்களின் நூல்கள். ஃபிக்ஷன்னுக்காக ஒரு பெரிய கூடம் நிறைய நூல்கள். சத்யஜித் ராயின் கதைகள், இந்துயிஸம் பற்றிய நூல்கள் கூட கிடைத்தன. காலை 9 மணிக்குத் திறக்கும் நூலகத்தின் வாசலில் 8 மணிக்கே வரிசையில் 50, 100 இளைஞர்கள் நிற்கிறார்கள். தூங்க வருகிறார்களா, படிக்க வருகிறார்களா, ரொமான்ஸுக்கு வருகிறார்களா என்று தெரியாவிட்டாலும் நூல் நிலையத்தின் வாயிலில் திறப்பதற்கு முன்பே க்யூ என்பது நம்ப முடியாத நற்செய்தி. அந்த நூலகத்துக்குப் பலமுறை சென்றேன்.
இந்த ரீஜனல் லைப்ரரியைப் போலவே மேலும் இரண்டு உள்ளன. தவிர பதினெட்டு கிளை நூலககங்கள். இவற்றில் ‘எஸ்ப்ளனேட்’ கிளையில் முழுக்க முழுக்க சினிமா, நாடகம் போன்ற  பர்ஃபார்மிங் கலைகளுக்காக. டிவிடிக்கள் மற்றும் புத்தகங்கள். ஆந்த்ராய் தார்க்கொவ்ஸ்கியின் ‘ஸ்டாக்கர்’ படம் பற்றி ‘ஜியாஃப் டயர்’ (இவரது பேட்டியை இங்கே காணலாம்) எழுதிய ஜோனா (zona) புத்தகம் பற்றி சொல்வனம் ரவிசங்கர் எழுதியதிலிருந்தே நான் அந்தப் புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அந்நூல் சிங்கப்பூர் நூல் நிலயங்களில் இருப்பது ‘காடலாக்’ கில் தெரிந்தது. அது எஸ்ப்ளனேட் கிளையில் இருப்பதாகவும் தற்போது வேறொரு கிளையிலிருந்து அங்கு திரும்பப் போய்க் கொண்டிருப்பதாகவும் (in transit) தகவல் இருந்தது.
நான் இரண்டு நாட்கள் கழித்து எஸ்ப்ளனேட் கிளைக்குப் போனேன். அங்கிருந்த அலமாரிகளில் அது இல்லை. நூல்கள் எண்களின் வரிசையில் மிகச் சரியாக வைக்கப் பட்டிருக்கும் என்பதால் ஐந்து நிமிடங்களில் அது இல்லை என்பது தெரிந்து விட்டது. நூல் நிலையத்தில் இருந்த கணினியில் மீண்டும் ‘கேடலாக்’கை சரி பார்த்த போது பழைய செய்தியே வந்தது. ‘இது என்னடா ஊருக்குள்ளேயே இருக்கும் வேறொரு கிளையிலிருந்து இங்கு வர இரண்டு நாட்களுக்கு மேலா ஆகும்’ என்று நினைத்தேன். நான் ஐந்து நிமிடங்களாகத் தேடுவதைப் பார்த்த நூலக உதவியாளர்களில் ஒரு பெண்மணி என்னிடம் வந்து “ஏதாவது உதவி வேண்டுமா?” என்று கேட்டார். நான் நூலின் பெயரையும், ஆசிரியர் பெயரையும் சொன்னதும் அவரும் கேடலாக்கில் தேடினார். இன்னொரு நூலகத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறது என்றார்.  நான் மூன்று நாட்களாக இதே தகவல்தான் வந்துகொண்டிருக்கிறது என்றேன். லைப்ரரியனைக் கேளுங்கள் என்று ஆலோசனை சொல்லி அவர் இருக்கும் இடத்தைக் காட்டினார். என்னிடம் நூல்களை எடுப்பதற்கான அட்டை இல்லாததால் நான் கேட்கவில்லை.
ஒரு வாரம் கழித்து வீட்டில் கணினியில் ‘கேடலாக்’ கைப் பர்த்தபோது மீண்டும் அதே தகவல்தான் இருந்தது. அதை அப்படியே காப்பி செய்து 10 நாட்களாக இப்படியே வருகிறது என்று ஒரு மின்னஞ்சலாக தேசிய நூலகத்துக்கு அனுப்பினேன். மதியம் ஒரு பதில்  வந்துவிட்டது: “ இரண்டு நூலகங்களிலும் இது பற்றி சொல்லியிருக்கிறோம். விரைவில் தகவல் சொல்கிறோம்.”என்று. அன்று மாலையே மின்னொரு மடல் : “நூல் எஸ்ப்ளனேட் கிளைக்கு வந்து விட்டது. உங்களுக்காக ஒரு நாள் வைத்திருக்கிறோம். மறுநாள் அலமாரிக்குப் போய்விடும்” என்றிருந்தது.
என்னால் 15 நாட்கள் அங்கு போக முடியவில்லை. பின் போனபோது ‘கேடலாக்’கில் அந்த நூலின் பெயரே இல்லை. அலமாரியிலும் அந்நூல் இல்லை. அது இருந்ததற்கான சுவடே இல்லாமல் காணாமல் போய்விட்டது. இம்முறை என் மாப்பிள்ளையின் லைப்ரரி அட்டையை எடுத்துச் சென்றிருந்தேன். அதனால் தைரியமாக லைப்ரரியனிடம் சென்று இந்நூலின் பெயரைச் சொல்லி அது கிடைக்குமா என்று கேட்டேன். அவர் சம்பந்தமே இல்லாமல் என் பெயரைக் கேட்டார். அவர் ஒரு மலாய் பெண்மணி. ‘ஸ்ரீநிவாசன்’ என்கிற பெயரை அவர் இதற்கு முன் வாழ்நாளில் கேட்டிருப்பாரா என்பது சந்தேகமே.  இருந்தாலும் நான் என் பெயரைச் சொன்னதும், இருக்கையிலிருந்து எழுந்து தன் பின்னால் இருந்த மூடிய அலமாரியைத் திறந்து அதிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தார். அதன் மேல் என் பெயர் எழுதிய ஒரு ஸ்டிக்கர் இருந்தது. அதை எடுத்துவிட்டு நூலை என்னிடம் கொடுத்துவிட்டு புன்னகைத்தார்.  15 நாட்களாக அந்தப் புத்தகத்தை எனக்குக் கொடுப்பதற்காக அவர்கள் காத்திருந்திருக்கிறார்கள். நான் அசந்து போய் விட்டேன். ‘ஸ்டாக்கர்’ படம் பார்த்தவர்களுக்கு, இச்சம்பவம் மேலும் பல உணர்வுகளைத் தூண்டும். அவரிடம் நன்றி சொல்லிவிட்டு நூலை வீட்டுக்கு எடுத்து வந்தேன்.
1960களில் என் பள்ளியின் அருகில் இருந்த காற்றோட்டமான திருவல்லிக்கேணிக் கிளை நூலகத்தில் நான் நிறையlibrary நூல்களைப் படித்திருக்கிறேன். 1970களில் ஆயிரம் விளக்குப் பகுதியில் ஆனந்த் தியேட்டருக்கு அருகிலிருந்த மாவட்ட மத்திய நுலகத்திலிருந்துதான் பல ருஷ்ய, ஜெர்மானிய, பிரஞ்சு செவ்விலக்கியங்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் படித்திருக்கிறேன். 1980 களில் சேலம் கிளை நூலகத்தில் கூட எனக்கு நல்ல பல நூல்கள் கிடைத்தன. 90களில் வேலூரிலும், பின் 2000த்தில் கோவையிலும் கூட ஏதோ சில நல்ல தமிழ் நூல்களாவது கிட்டின. 90களில் திருச்சி நூலகம் குப்பையாக இருந்தது. இப்போது புதுப்பித்திருக்கிறார்கள். புதுக் கட்டிடம். I A S படிப்பவர்களுக்கு என்றெல்லாம் தனியான கூடங்கள் உள்ளன. ஆங்கிலப் பகுதிக்குச் செல்ல முடியாதபடிக்கு தடுப்பு போட்டு பூட்டி வைத்திருந்தது. ஆனால் இலக்கிய உலகில் நான் படித்த எனக்குப் புதிய புதிய கதவுகளையும், சன்னல்களையும் திறந்து கொண்டே போன, கிடைத்தற்கரிய அனுபவங்களை சாத்தியமாக்கிய நூல்களை மேற்சொன்ன நூலகங்கள் எவற்றிலும் சமீப வருடங்களில் காணவே காணோம்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஒரு நூலகம் உள்ளதென்று மிக்க ஆவலுடன் ஓலைச் சுவடிகளெல்லாம் இருக்குமோவென்று சென்ற வருடம் அதற்குப் போனேன். அங்கு ஒரு நூல் கூட இல்லை. வெற்றிடம்தான் இருந்தது. திருச்சியில் இன்னொரு நூலகத்தில் ஆங்கில நூல்களை அலமாரிகளில் ஒரு பூட்டிய அறையில் வைத்திருக்கிறார்கள். அவற்றிலிருந்து நூலைக் கொடுக்கக் கேட்ட போது ‘எடுத்துக் கொள்ளுங்கள் சார் ஆனால் நான் இருக்கும்போது வந்து திருப்பிக் கொடுங்கள். பெரிய லைப்ரரியன் இதையெல்லாம் படிக்கக் கொடுத்தால் கோபித்துக் கொள்வார்” என்கிறார் உதவியாளர். அங்கும் முத்தும் ரத்தினமும் இல்லை. ஏதோ ஓரிரண்டு நல்ல நூல்கள் இருந்தன.
1967க்குப் பின் தமிழ் மீது உணர்ச்சி பொங்கும் பற்றைப் பறை சாற்றிக் கொண்டிருக்கும் அரசுகள்தான் நடக்கின்றன. ஆனால் இலக்கிய, கலை, அறிவு சீவி உலகில் ஏதோ ஒன்று பரவி விட்டது. அதை திராவிட கழக அரசியல் இயக்கத்தவர்கள் ‘விழிப்புணர்வு’ என்றும் முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் போன்ற தேசியவாதிகள் விஷக் கிருமி என்றும் கூறுவர். அதன் பிடியில், அரசு இயந்திரத்தின் ராட்சத உதவியோடான திட்டமிட்ட பரப்பலில், இருள் நீங்கி விட்டது என்றும் விழிப்புணர்வு இப்போதுதான் வந்துகொண்டிருக்கிறது என்றும் வலு மிக்க ஒரு சாரரின் அழுத்தமான கூற்றுக்கிடையே ஒளி அழிந்து விட்டது என்றும் உலக இலக்கியங்களையும், கலைகளையும் பழந்தமிழ், பக்தி மற்றும் நவீன தீவிர தமிழ் இலக்கியங்களையும் தெரிந்து கொள்ளவே முடியாதபடிக்கு அரசியல் வாதிகள் மற்றும் ஒற்றை சார்பு அறிஞர்களின் நூல்களால் நூலகங்கள் நிரம்பி விட்டனவே என்றும் ஒரு சின்னஞ்சிறிய கூட்டத்தினரின் மெல்லிய குரல் கேட்கும்.
இந்த சந்தர்ப்பத்தில் தீவிர இலக்கியத்தை கேளிக்கை இலக்கியம் மூலம் முன்பு அணுக முடிந்தது; இப்போது பின்னதற்கு பத்ரிகைகளில் இடம் இல்லை என்பதால் முன்னதற்கு வாசகர்கள் இல்லை என்று ஜெயமோகன் ‘தி இந்துவில்’ சொன்னதைப் பற்றிப் பார்ப்போம்.
Notable_Tamil_Writers_80_Year_2000_Authors_Creative_Fiction_columnists_Published_Read_Books_India_South_Asia_Famous
தனிப்பட்ட முறையில் என் அனுபவத்தில் நான் அவர் சொன்ன கல்கி, ஆர்வி முதலிய யாரையும் படித்ததே இல்லை. நா.பா. தவிர அகிலன் பக்கம் எல்லாம் போனதே இல்லை. நா.பா. வும் மு.வ.வும் மிகப் பெரிய பெயர்களாக உலவுகையில், அவர்களது எழுத்து மனதைக் கவரவில்லை. இது நடந்த அதே சமயத்தில் என் பள்ளி ஆசிரியர் ‘ஜெயகாந்தன் படி’ என்று சிபாரிசு செய்ததும், ஜெயகாந்தன் ஆனந்த விகடன் மூலம் பரவலாகக் கிடைத்ததும் அவர் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக அவர் சொன்ன பாரதியையும், புதுமைப் பித்தனையும் தேடி அடைந்ததும் நடந்தன. பின்னர் ஜானகிராமனையும், கு. அழகிரிசாமியையும், அசோக மித்திரனையும்,  இன்னும் ஏராளமான மகானுபாவர்களையும் கண்டடைந்தேன். என் நண்பர்கள் அனுபவமும் அவ்வாறே.
அதே போல் சுஜாதா, பாலகுமாரன், இந்துமதி, சிவசங்கரி, வாசந்தி என்று கேளிக்கை எழுத்தாளர்களாக ஜெயமோகன் வகைப் படுத்தியிருந்தவர்களில் சுஜாதா ஒருவரை மட்டுமே ஆரம்பத்திலிருந்து அவர் இறுதியாக எழுதியவை வரை அவ்வப்போது படிக்க முடிந்தது. வாசந்தி சில மிக நல்ல சிறுகதைகளை எழுதியுள்ளார். பாக்கி மூவரும் பிரபலமான எழுத்தாளர்கள்தான். ஆனால் என்னால் அவர்களைப் படிக்க முடிந்ததில்லை.
ஆக ஜனரஞ்சக பத்ரிகைகளில் வரும் கேளிக்கை எழுத்துகள் தீவிர இலக்கியத்துக்கு இட்டுச் செல்லும் என்பது என்னளவில் சரியில்லை. மேலும் வாசகர்கள் இந்த நடுவாந்திர எழுத்துகளில் மயங்கி அதிலேயே சிக்கி நின்றுவிடுவதும் பெரும்பான்மையாக நடப்பதுதான்.
எது என்னைத் தீவிர இலக்கியத்திடம் இட்டுச் சென்றது? உயர் சங்கீதம் கேட்க தனியான செவி வேண்டும். இது வெறும் யாந்த்ரீகமான பயிற்சியால் மட்டும் வருவதில்லை. எனக்கு எல்லா ராகமும் சிந்து பைரவியாகத் தெரிகிறது என்றால் என் செவிமனம் அவ்வளவுதான் என்று பொருள். ஓவியத்துக்கு தனிக் கண்கள் வேண்டும். அதே போல் ஓர் உயர் எழுத்தை எழுத்தாளன் எழுத அவனுக்கு எத்தகைய உளம் வேண்டுமோ அதற்கு சற்றும் குறையாத தீவிரமும், வளமும் உள்ள உளம் வாசகனுக்கும் வேண்டும். அது இருந்தால் சென்னையோ, நாகர்கோவிலோ, கம்மவான் பேட்டையோ, ஆரணியோ, டில்லியோ, சிங்கப்பூரோ எங்கிருந்தும் வாசகன் தான் தேடுவதைக் கண்டடைவான். வாசகன் தயாரானதும், அவன் எங்கிருந்தாலும் எழுத்தாளன் தென்படுவான்.
வாசகனைப் போலவே தீவிர இலக்கியத்துக்கு முதல் தேவை நூல்கள். உலக இலக்கியம் தமிழிலோ, அல்லது குறைந்த பட்சம் ஆங்கிலத்திலோ பரவலாகக் கிடைக்கவேண்டும். சிதம்பரத்தில் வாழ்ந்து வந்த மௌனி சொல்லித்தான் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த பிரமிளுக்கு போனஸ் ஐரஸின் போர்ஹே அறிமுகம் ஆகிறார். பிரமிள் சொல்லித்தான் எங்களுக்கு ‘நபகோவ்’ அறிமுகம் ஆனார்.
ஆக பத்ரிகைகளில் கேளிக்கை எழுத்து வருவதும் வராததும் ஓரளவே தீவிர இலக்கிய தேடலுக்கு வழி வகுக்கும். கல்கியோடும், பாலகுமாரனோடும் திருப்தியடைந்து அதிலேயே நின்று விடுகிற வாசகர்களும் அதிகம். அவர்களுக்கு அது பிடிக்கிறது. போதுமானதாய் இருக்கிறது. நிறைவு தருகிறது. அது போதும். அதில் ‘தீர்ப்பு’ சொல்ல பிறர் யார்? உலகில் எல்லாவற்றுக்கும் இடம் உண்டு; தீமை பயக்காதவரை குற்றம் சொல்ல என்ன இருக்கிறது? ஆபாசங்களையும், பிரிவினைகளையும், ஏற்றத் தாழ்வுகளையும், துவேஷத்தையும் வளர்க்கிற, பரப்புகிற எழுத்துகளே முதலில் எதிர்க்கப்பட வேண்டியவை.
மேலும் ஆனந்த விகடனும், குமுதமும், கல்கியும் அப்போதே ஜெயகாந்தனையும் ஜானகிராமனையும் (ஆ.வி.) இன்ன பிற தீவிர எழுத்துகளையும் அவ்வப்போது பிரசுரம் செய்தன. அதில் ருசி கண்ட வாசகர்கள் அவ்வாசிரியர்கள் எழுதும் பிற பத்ரிகைகளை அதாவது சிற்றேடுகளை வாங்கிப் படிக்க ஆரம்பித்தனர். தீவிர இலக்கியத்தின் வாசகர்கள் அதை எந்தச் சூழலிலும் அடையாமல் விட மாட்டர்கள்.
இப்பொழுதும் பிரபல பத்ரிகைகள் நாஞ்சில் நாடன், ஜெயமோகன் எஸ். ராமகிருஷ்ணன், சுகா முதலியோரின் எழுத்துகளை அவ்வப்போது பிரசுரிக்கின்றன. ஆனால் வாசகர்களால் இந்த வேகமான சூழலில் இரண்டு நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்த முடியவில்லை என்கிற காரணம் காட்டி ஒரு நிமிட அரை நிமிடக் கதைகளையே அதிகம் போடுகிறார்கள்.
இவ்வளவு மக்கட்தொகை பெருகியிருக்கிறது. படித்தவர்கள் சதவீதமும் வெகுவாக அதிகரித்திருக்கிறது. ஒரு இலக்கிய நூல் ஆயிரம் பிரதிகள் கூட விற்பதில்லை என்கிறார்களே அது ஏன்?
நிச்சயம் தீவிர இலக்கியம், தூய, மூட நம்பிக்கைகள் அற்ற, ஆன்மீகம், துவேஷமும் பொய்யும் அற்ற நல்லரசியல், உயர் கலை போன்றவை கூட்டம் சர்ந்தவை அல்ல. அதே போல் ஓடாத படமெல்லாம் கலைப்படம் அல்ல என்பதைப் போல் மக்களாதரவு இல்லை என்பதாலேயே ஒரு நூல் தீவிர இலக்கியம் ஆகி விடாது.
Chennai_Book_Fair_Exhibition_Read_Madras_Visit_Tour
புத்தகக் கண்காட்சிகளில் விற்பனை அதிகரித்துள்ளது என்றும் சொல்கிறார்கள். சமையல், ஜோசியம், சுய முன்னேற்றம் மற்றும் படிப்பு சம்பந்தமான புத்தகங்கள் அதிகம் விற்கின்றன. கதைப் புத்தகங்கள் என்றால் தீவிர இலக்கிய நூல்கள் அதில் இடம் பெறுவதில்லை. ஏன்?
ஒரு காரணம் : நம்மிடம் உலக இலக்கியங்களையும், செழுமை மிகுந்த பண்டை மற்றும் நவீனத் தமிழ் இலக்கியங்களையும் படிக்கத் தரும் நூல் நிலயங்கள் இல்லை. உலக சினிமா டிவிடிக்கள் சல்லிசாக பரவலாகக் கிடைப்பதால் பெரிய மாற்றம் தமிழ் சினிமாவில் உடனடியாக நடக்கவில்லை என்றாலும் இன்னும் சில வருடங்களில் அது வருவதற்கான வாய்ப்பாவது உள்ளது. இது தள்ளிப் போவதற்கும் ஒரு காரணம் சினிமாவுக்கு அனுசரணையாக தீவிர உலக இலக்கியம் பரவலாக சல்லிசாகக் கிடைக்காததுதான் என்று நினைக்கிறேன். உலக இசை, நாடகம், ஓவியம் முதலிய கலைகளும் பல சமூக, பொருளாதார, அரசியல் காரணங்களால் மக்களிடம் இருந்து விலக்கி வைக்கப்பட்டு  இருப்பதும் ஒரு காரணம். மேலும் இப்படியெல்லாம் உலகில் உண்டு என்பதை தமிழர்கள் தெரிந்து கொள்ளக் கூட வாய்ப்பு இன்றி இருக்கிறது. இதில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களான அறிஞர்கள் எனப்படுவோர், துணை வேந்தர்கள், அதிகாரிகள் மத்தியில் கூட பெரும் அறியாமை நிலவி வருவதும் ஒரு காரணம்.
சினிமா உலக மறுமலர்ச்சிக்கு உலக சினிமா பரவலாகக் கிடைப்பது வழி செய்யலாம்.  அத்தகைய வாய்ப்பு இலக்கிய உலகில் நிகழ நூல் நிலையங்கள் சிங்கப்பூர் மாதிரி கூட ஆக வேண்டாம். நாற்பது, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்தது போல ஆனாலே கூடப் போதும். உலக இலக்கியங்கள், இதிஹாசங்கள், நாடகங்கள், கட்டுரை நூல்கள் அனைத்தின் மொழிபெயர்ப்புகளும் மற்றும் ஆதியிலிருந்து இன்று வரையான தமிழ் நூல்கள் அனைத்தும் நூல் நிலையங்களில் சாமானிய வாசகனுக்குக் கிட்டுமாறு செய்ய வேண்டும். பிற மொழி இந்திய நூலகளும் இவ்வாறே கிடைக்கும்படி செய்ய வேண்டும். ‘இந்திய நூலக இயக்கத்தின் தந்தை’ ஒரு தமிழர் என்கையில் வழக்கம் போல் கோஷங்களோடு நிறுத்திக் கொள்ளாமல் செயலிலும் ஏதாவது உருப்படியாகச் செய்யவேண்டும்.
மற்ற காரணங்கள் : வில்லியம் ப்ளேக் வேறொரு சந்தர்ப்பத்தில் சொன்னது போல்
“Degrade first the Arts if you would mankind degrade,
Hire idiots to paint with cold light and hot shade,
Give high price for the worst, leave the best in disgrace,
And with labours of ignorance fill every place”
செய்து விட்டோமோ?
நாம் சிகரங்களாக உயர்த்திப் பிரசாரிப்பது எவர்களை என்று பார்த்தால் இது ஒரு காரணமா என்பது தெரியும்.
இன்னொன்று: மிலன் குந்தேரா கலை பற்றிச் சொன்னது போல் ‘ இலக்கியத்துக்கான தேவையும்  அது பற்றிய நுண்புலனுணர்வும் (Sensitivity) அதன் மீதான மையலும் இறந்து கொண்டிருப்பதால்தானோ இலக்கியமும் இறந்து கொண்டிருக்கிறது?
நிலவரம் என்னவென்றால் வாசகர்கள் தம் நல் வாழ்வுக்கு, பொழுதுபோக்குக்கு, நம்பிக்கைக்கு தேர்ந்தெடுத்துள்ள சாலைகள் – வாசக சாலைகள் – வாஸ்து, ஜோசியம், சைவ அசைவ சமையல், உடல் நலம், மூலிகை, ஆன்மிகம், தன்னம்பிக்கை முதலியவை. அதில் தீவிர இலக்கிய வாசிப்பு என்கிற சாலை இல்லை. அந்த குறுகலான சாலை ஒற்றையடிப்பாதையாகி அதிலும் தடுப்பு விழுந்து தூர்ந்து விட்டது. ஒருவேளை  இதற்கு தீவிர இலக்கியம் என்பதே தூர்ந்து விட்டதுதான் காரணமோ?
********