FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Friday, September 30, 2011


தர்ப்பணம்

வ.ஸ்ரீநிவாசன்                      பிரசுரம் : சொல்வனம் : இதழ் 56 | 19-9-2011
வாத்தியார் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்ததும் மனசு விச்ராந்தியாக இருப்பதை ஸ்ரீதரன் உணர்ந்தான். மணி ஏழு. மாதம் பிறக்கும்போதும், அமாவாசையன்றும் அவன் அதிகாலையில் எழுந்திருக்கிறான். குளிக்கிறான். நெற்றிக்கு இட்டுக் கொள்கிறான். அம்மா கொடுக்கும் எள், வெற்றிலை பாக்குப் பொட்டலத்தோடு கிளம்பி இதுபோல் வாத்தியார் வீட்டுக்கு சைகிளில் வருகிறான். இன்றைக்கு கல்லூரி இல்லை. அவசரம் இல்லை.
திண்ணை நன்றாக வழவழவென்று இருந்தது. சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். சிம்மாசனம் மாதிரி சிகப்பு சிமின்டில் திரட்சியாக ஒரு வளைசல். அது திண்டு மாதிரியும் இருந்தது. கையை அதன் மேல் அணைவாகப் போட்டுக் கொண்டு காலை வேளைக் குளத்தையும், அதற்கப்பால் தெரிந்த பார்த்தசாரதி பெருமாள் கோவிலையும் பார்த்தான். அதற்குள்ளாகவே ஜன நடமாட்டம் இருந்தது. நிறையப் பேர் கோவிலுக்குள்ளேயும், கோவிலிலிருந்தும் போய்க்கொண்டு இருந்தார்கள்.
வாத்தியார் வர இன்னும் அரை மணியாகலாம். ஒரு பேட்ச் முடிந்து எல்லோரும் போய் விட்டார்களாம். வாத்தியார் யார் வீட்டுக்கோ போய் இருக்கிறார். அப்பா இருந்தபோது இது மாதிரி இடைவெளிகளில் வீட்டிற்கே வந்து பண்ணி வைப்பார். வாத்தியார் அவன் முதல் பிறந்த நாளின் போதும் வந்தவர். அவன் பிறப்பதற்கு பத்து வருடங்களுக்கு முன்பாகவே அதாவது சுமார் 28 வருடங்களாகவே அவன் வீட்டுக்கு வைதீகக் காரியங்கள் செய்பவராக இருப்பவர். அவன் அத்தை பாஷையில் சத்தான மனுஷர். எழுபது வயதுக்கு மேல் இருக்கும். வெள்ளை முடி படர்ந்த முகம், மார்பு. சிகப்புத் தோல். உள்ளடங்கின, வெளியில் எங்குமே சாப்பிடாத வயிறு. இளையாளோடு இந்த வீட்டில் ஒரு போர்ஷனில் குடியிருக்கிறார்.
உள்ளேயிருந்து வாத்தியாருடைய பெண் வந்தாள். சிகப்பாக, சுருட்டை மயிரோடு இருக்கிற தன்னைப் பார்ப்பதற்குத்தான் வருகிறாளோ என்ற சந்தேகத்தோடு அவன் தீவிரமாக வெளியில் பார்க்க ஆரம்பித்தான். அப்புறம் “ஸ்ப்ச். எனக்கென்ன” என்கிற மாதிரி அவளைப் பார்த்தான். அவள் வாசல் கதவருகில் போய் நின்று கொண்டாள். பதினாறு வயதிருக்கும். அழகாக இருந்தாள். அவள் அவன் பக்கம் திரும்பி வெகு இயல்பாக சாதாரணமாக, “ அடுத்த தெருவுக்குத்தான் போயிருக்கார், நான் வேணும்னா போய் சொல்லிட்டு வரவா?“ என்றாள்.
அவளை நேரே பார்க்காமல் “வேணாமே ! நேரமானா பரவாயில்லை,” என்றான் ஸ்ரீதரன்.
“இன்னிக்கு ஒரு பாட்ச்தான். வெளியிலிருந்து வந்ததும் உடனே பண்ணி வச்சுடுவார்,” என்று தகவல் சொன்னாள். ஸ்ரீதரனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.
அவள் உள்ளே போகாமல் கதவு அருகிலேயே நின்றாள். தெருவின் இருபுறமும் திரும்பிப் பார்த்தாள். கணுக்கால் அருகில் பாவாடையில் கிழிசல்; அவள் சுதந்திரமாக தன்னிச்சையாக நின்றாள். அவனை அலட்சியப் படுத்துகிற மாதிரியும் இல்லாமல், அவன் இருப்பால் கஷ்டப் படுகிற மாதிரியும் இல்லாமல் அவள் இந்தக் காலை வெய்யில் மாதிரி, அந்த வீட்டு வாசலில் தெருவில் போட்டிருந்த கோலம் மாதிரி சுபாவமாக நின்றாள். ‘கோலம் அவள் போட்டதுதானோ?’ என்று ஸ்ரீதரன் யோசித்தான்.
‘ஏய்!’ ரோட்டில் போன இன்னொரு பெண்ணைக் கூப்பிட்டாள். அவன் ஆவலோடு அவளைத் தாண்டி தன் பார்வையை செலுத்தினான். பார்த்த கணமே ‘எலி மாதிரின்னா இருக்கா’ என்று மனதில் சொல்லிக் கொண்டான்.
வாத்தியாரின் பெண் வாசற்படியில் லாகவமாக இறங்கி ஸ்ரீதரன் நிறுத்தியிருந்த சைக்கிளைத் தாண்டி, அந்த எலி மாதிரி இருந்த பெண்ணின் கையைக் கோர்த்துக் கொண்டு கோவில் நோக்கி நடக்க ஆரம்பித்தாள். தலை மயிரைத் தூக்கிச் செருகி இருந்ததால் கழுத்தின் செழுமை நன்றாகத் தெரிந்தது. அதில் வளையமிட்ட முடிக்கற்றைகள் அதன் அழகை இன்னும் அதிகப் படுத்தின. அவள் போவதையே அவன் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் நடை அசிங்கமாக இருந்தது. காலை எட்டி எட்டி வைத்தாள். தூரத்தில் போனதும் எதேச்சையாகத் திரும்பிப் பார்த்துவிட்டுப் போனாள். எதேச்சையாகவா என்று ஸ்ரீதரனுக்குத் தோன்றியது.
அவளுடைய மைனஸ் பாயின்டுகள் அவனுக்கு இப்போது தோன்ற ஆரம்பித்தன. அவன் அவளை மறந்துவிட்டு குளத்தைப் பார்த்தான்.
குளத்தின் எதிர்ப்புற படிக்கட்டுகளில் ஒரு இள வயதுப் பெண் நிற்பதை அசுவாரஸ்யமாகப் பார்த்தான். அவள் படியோரமாக நடந்து ஒரு மண்டபத்தின் தூணின் அருகில் நின்றாள். புடவைக் கொசுவத்தை உடம்பிலிருந்து உயர்த்திப் பிடித்துக் கொண்டாள். இவன் புரிந்து கொண்டான். குளத்து நீரின் நினைப்பு குமட்டியது. குளம் மொத்தமுமே மூத்திர ஜலம்தானோ?
அந்தப் பெண் புடவையாலேயே கால்களைத் துடைத்துக் கொண்டாள். அதே குளத்துத் தண்ணீரை எடுத்து முகத்தைக் கழுவிக் கொண்டாள். அப்புறம் புடவைத் தலைப்புக்குள் கைவிட்டு ரவிக்கையை அவிழ்க்கத் துவங்கினாள். காசிப கோத்ர விஜயராகவ சர்மனின் பிள்ளையான ஸ்ரீநிவாச சர்மனின் பிள்ளையான ஸ்ரீதரனுக்குக் குளத்தின் அந்தப் பக்கத்துக்குப் போகவேண்டும் போல் இருந்தது.
“யாருப்பாது? கோபுவா?”
வாத்தியார்.
“இல்லை தாத்தா ! நான்தான் ஸ்ரீதரன்.”
“சீதரனா ! மன்னிச்சுகோடாப்பா. மறந்தே பூட்டேன். வந்து ரொம்ப நாழியாச்சா?”
“இல்லை ! இப்பதான் வந்தேன்.”
“சரி உள்ளே வா!”
மனசே ஆகாமல் உள்ளே போனான்.
“மாடிக்குப் போ ! நான் தாம்பாளம் எடுத்துண்டு வரேன்.”
அவன் மாடிக்குப் போனான். மாடியின் முகப்புப் பகுதியிலிருந்த போர்ஷன் அவன் வீதியைப் பார்க்க வொட்டாமல் தடுத்தது.
அவன் மொட்டை மாடியில் வெறுமே நின்றான். வாத்தியார் மாடியேறி வந்தார். காலைச் சூரியனில் வாத்தியாரின் சிகப்பு நிறம் - தோல் சுருங்கின நிலையிலும் - பிரமாதமாக இருந்தது.
“உக்காந்துக்கோ.”
உட்கார்ந்தான்.
“சட்டையை அவுத்துடு.”
- குளித்துவிட்டு மடி வேஷ்டியைக் கட்டிக்கொண்டு, குருவை சேவித்து. . . .
சட்டையையும் பனியனையும் அவிழ்த்தான். வாட்சைக் கழட்டி சட்டைப் பாக்கட்டில் வைத்தான். தான் சினிமா போகிற மாதிரி வந்ததை நினைத்து வருத்தப் பட்டான். - அப்பா ! மன்னிச்சுக்கோங்கப்பா ! - கையை மாரில் கட்டிக் கொண்டான். தலையைக் குனிந்துகொண்டான்.
வாத்தியார் அவன் காலடியில் இரண்டு தர்ப்பத்தைப் போட்டார். கையில் இருந்த பவித்திரத்தை அவனிடம் கொடுத்தார். முதலில் ஆசமனம் பண்ணச் சொன்னார்.
ஆசமனம். மந்திரமே இவனுக்குத் தெரியாது. கிறிஸ்தவன் மாதிரி புஜங்களையும், முகத்தையும் தொட்டுக் கொண்டன்.
பிராணாயாமம். மந்திரம்? அப்பா பெயரை திரும்பத் திரும்ப மனதுக்குள் சொல்லிக் கொண்டான். இதானா பிராணாயாமம்? அவனுக்குத் திடீரென்று இது ரொம்ப உசத்தி என்று தோன்றியது.
வாத்தியார் மந்திரம் சொன்னார். இவன் தொடர முடியாத வேகத்தில் சொன்னார். படு அவசரம். - இன்னும் எத்தனை வீடுகளுக்குப் போகவேண்டுமோ? வாத்தியார் பெண்ணின் பாவாடை கிழிசல் அவனுக்கு ஞாபகம் வந்தது. - இவன் மந்திரத்தைக் கூடச் சொல்வதாக பாவனை செய்தான். வீட்டிற்கு வந்து அப்பாவுக்கு பண்ணிவைக்கும் போது வாத்தியார் மெதுவாக பவ்யமாக சொல்லுவாரென்பதை நினைத்துக் கொண்டான்.
“ம். ப்ராசீனாவேதம்.”
“ப்ராசீனாவேதம்.”
“கூடச் சொல்றயே ! பூணலை இந்தப் பக்கம் போட்டுக்கோ !”
“ம்.”
“எள் கொண்டு வந்திருக்கியா?”
“சட்டையிலே இருக்கு.”
கஷ்டப் பட்டுக் கொண்டு நுனிவிரலால் சட்டையை நிமிர்த்தி - மடி - பாக்கட்டிலிருந்து அந்தப் பொட்ட்லத்தை எடுத்தான். வெத்தலையெல்லாம் கூட வந்தது.
“சீக்கிரம்ப்பா!”
“இதோ வர்ரேன்.” கடுமை தொனித்தது.
“ஜலத்தை எடுத்துக்கோ !”
அப்புறம் அப்பா,  தாத்தா, கொள்ளுத்தாத்தா, பாட்டி . . . .
கையை நிமிர்த்திண்டு வலது கை கட்டைவிரலை கிண்டி வாய் மாதிரி வச்சுண்டு அதன் வழியாக ஜலத்தை விடறதுக்கு நன்னா இருக்கு. இது மாதிரி பண்ணிண்டே இருக்கலாம் போல இருக்கு. இதே மாதிரி ஹோமத்துல நெய்யை மேலேருந்து - கைய உசத்தி விடு, சுட்டுடப் போறது - விடறதும் ரொம்ப இன்டரஸ்டிங். விட்டுண்டே இருக்கலாம். காடு பத்திண்டு எரியற மாதிரி , ஜ்வலிச்சுண்டு நெருப்பு மேலே கிளம்பும்.
“பாட்டி பேரு என்ன?”
“ம்?”
“அப்பாவோட அம்மா பேரு !”
“கோமளவல்லி.”
“ம். பேரச்சொல்லு.”
சொன்னான்.
மாடியில் இருந்த அந்தப் போர்ஷனிலிருந்து ஒரு பெண் வந்தாள். இவனைப் பார்த்தாள். உதட்டைச் சுழித்து “அப்பா ! வாத்தியார் வந்தாச்சு. யாருக்கோ பண்ணி வச்சுண்டு இருக்கார். குளிக்கப் போங்கோ,” என்றாள்.
இவனைவிட இரண்டு அங்குலமும், இரண்டு வயதும் ஜாஸ்தியாய் இருக்கும்.
இவன் கூச்சப்பட்டான். மேல் கையால் உடம்பை மூட முடியவில்லை. நான் எதுக்கு வெக்கப் படணும்? பொம்ம்னாட்டியா என்ன? ஆனா கையை தாம்பாளத்துங்கிட்டே வச்சுண்டு மேல் கையால் நெஞ்சை மூடிக்கறச்சே மார் பொம்ம்னாட்டி மாதிரிதான் இருக்கு.
சிரித்தான். தீவிரமாக மந்திரம் சொல்ல ஆரம்பித்தான்.
அந்தப் பெண் அங்கே நின்றவாறு அவன் தர்ப்பணம் செய்வதையே பார்த்தாள். அவனுக்கு ரொம்பக் கூச்சமாக இருந்தது. தன் உடம்பின் குறைகள் எல்லாம் அவளுக்குத் தெரிவதாய் உணர்ந்தான். மேலே பார்த்தான்.
வாத்தியார் அவனை எழுந்துகொண்டு தாம்பாளத்தை வலம் வரச் சொன்னார். இவன் எழுந்ததும், நழுவுவது போல் இருந்த வேஷ்டியை இறுகப் பற்றிக் கொண்டான். அவள் உள்ளே போய்விட்டாள்.
“ம். சேவி !”
சேவித்தான்.
“அபிவாதயே !….”
“அபிவாதயே,” - காதுல கையை வச்சுண்டதுக்கப்புறம் சேவிக்கணுமா? சேவிச்சதுக்கப்புறம் காதுல கைய வச்சுக்கணுமா? -
“உக்காந்து ஆசமனம் பண்ணு.”
ஆசமனம். கிறிஸ்தவம். சர்வம் க்ருஷ்ணார்ப்பணம்.
எழுந்து அம்மா கொடுத்த வெத்தலை பாக்கையும், சட்டை பாக்கட்டிலிருந்த ரூபாயையும் வாத்தியாரிடம் கொடுத்து சேவித்தான்.
“இரு வரேன்!” என்று சொல்லிவிட்டு வாத்தியார் கீழே போனார்.
வாட்சைக் கட்டிக் கொண்டான். பனியனை எடுத்துப் போட்டுக் கொண்டான். தலை கீழாகப் போட்டுக் கொண்டதால் அவிழ்த்து மீண்டும் மாட்டிக் கொண்டான். சட்டையைப் போட்டுக் கொண்டான். ஜன்னல் வழியாக அந்தப் போர்ஷனுக்குள் பார்த்தான். அந்தப் பெண் இருக்கும் இடம் தெரியவில்லை.
“சீதரா ! இங்கே வாடாப்பா !” வாத்தியாரின் குரல்.
குளக்கரை ஞாபகம் அப்போதுதான் வந்தது. அவன் விறுவிறுவென்று கீழே போனான்.
வாத்தியார் அவனிடம் நோன்பு சரட்டைக் கொடுத்து “அக்காவாத்துல கொடுத்துடு. நான் அப்பறமா போய் பாக்கறேன்”
“சரி.”
கிளம்பினான்.
“அடுத்ததரம் இனிமே அமாவாசைதான். இதே மாதிரி வந்துடு. ரெண்டு நிமிஷத்துல பண்ணி வச்சுடறேன்.”
“சரி. நான் வரட்டுமா?”
அவன் வேகமாக வெளியே போனான். அந்தப் பெண் ஜாக்கட்டை படிக்கட்டின் மேல் உலர்த்திவிட்டு அருகில் உட்கார்ந்துகொண்டிருந்தாள்.
அவன் சைக்கிளை மிதித்தான். அப்பாவுடைய சைக்கிள்தான். அவன் பிறப்பதற்கெல்லாம் முன்பே வாங்கியது. கனமாக, ஒரு துருவில்லாமல் இருந்தது. முனகாமல், மிருதுவாக ஓடியது. கையிலுள்ள வாட்ச் அப்பாவுடையதுதான். அவர் கல்யாணத்துக்குப் போட்டது. ஜரிகை மற்றும் சாதாரண எட்டு முழ வேஷ்டிகள், சட்டைகள், பான்ட்கள், அவர் காலேஜில் படிக்கையில் போட்டுக் கொண்டவை கூட கிழிசல் இல்லாமல். அப்பா எல்லாவற்றையும் அப்படி பத்திரமாக வைத்துக் கொள்வார். அதில் டென்ஷனும் இருக்காது. தன் உடம்பைத்தான் பார்த்துக் கொள்ள முடியவில்லை. அது அவரோட அப்பா அம்மா கொடுத்தது. சின்ன வயசில் கால் முட்டி வலியோடு ஜுரமும் வந்திருக்கிறது. யாரும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ‘முட்டியை நக்கிய கிருமி இதயத்தை கடித்து’ விடுமாம். பின்னால் ‘ருமாடிசம்’ என்கிற அந்த வியாதி பற்றி எங்கோ படிக்கையில் தெரிந்துகொண்டான்.
சாவதற்கு சில நாட்கள் முன்பு கூட ஆபீஸிலிருந்து திரும்பி வந்து நாற்காலியில் உட்கார்ந்துகொண்ட அப்பா எதற்கோ அவர் பர்ஸை எடுக்கச் சொன்னார். அவன் நல்ல லெதர் வாசனை இப்போதும் அடிக்கும் அந்த பழங்காலத்துப் பர்ஸை எடுத்து அவரிடம் கொடுத்தான். “என் கிட்டே ஏன் கொடுக்கற. இனிமேல் நீதான் பர்ஸ் பணம் எல்லாம் வச்சுக்கணும்; அப்பாவையும், அம்மாவையும் பாத்துக்கணும்.காலேஜ் சேர்ந்தாச்சு,” என்று புன் முறுவல் பூத்தவாறே சொன்னார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. வெறுமனே தலையை ஆட்டினான். அந்த முறுவல் அவனுக்கு ஏதாவது கற்றுக் கொடுக்கும் போது மட்டும் விசேஷமாக வரும். சப்தரிஷி கணங்களை பீச்சில் படுத்தவாறே முதன்முறையாகக் காட்டியபோது, டிக்ஷனரி பார்க்க, டைரக்டரி பார்க்க, பாங்க்குக்குப் போக, சிரசாசனம் போட, ஆஃப் ஸ்பின் எது, லெக் ஸ்பின் எது என்று கற்றுக் கொடுத்தபோதெல்லாம் அந்த முறுவல் கூடவே இருக்கும். ப்ளஸ் டூ முடிந்து காலேஜ் சேர்ந்ததும் “ஹௌ டு வின் ஃப்ரெண்ட்ஸ் அண்ட் இன்ஃப்லூயன்ஸ் பீபிள்” புத்தகமும், ‘எ மாரேஜ் மானுவல்” புத்தகமும் வாங்கிக் கொடுத்து ‘படிச்சுக்கோ, உபயோகமா இருக்கும்’ என்றபோதும் இருந்தது. ஹ ! என்ன மாதிரி அப்பா ! இந்த மாதிரி அப்பா கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும். அவர் போய்ட்டாதான் என்ன? அவர் ப்ரியம்? அவரிடம் நான் வளந்த இந்த பதினெட்டு வருஷங்களின் நினைப்பு? இதுக்கு நான் என்ன செய்வேன்? என்ன செய்ய முடியும்? அட் லீஸ்ட் இனிமேல் தர்ப்பணம் பண்ணாமலாவது இருக்கலாம். -
சைக்கிளை ‘டக்’ கென்று நிறுத்தினான். மனம் தெளிவாக இருந்தது. முகத்தில் ஒரு முறுவல் பூத்தது. இன்றுதான் காலேஜ் இல்லையே, என்ன அவசரம்? மெதுவாக சைக்கிளை தள்ளியவாறு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

2 comments:

RVS said...

அற்புதமான சிறுகதை!!

V.Srinivasan./வ.ஸ்ரீநிவாசன் said...

நன்றி திரு. RVS.