FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Saturday, December 25, 2010

அம்மா





அம்மா   பிரசுரம்:சொல்வனம்-2-11-2010 இதழ்-37

இருள் உதிரும். ஒழுகும்.
சிம்னி விளக்கு சுவரில் ஒட்டியபடி
உயரத்தில்.
அப்பா அம்மா மத்தியில்
இன்னும் யோசித்துத் தனியாகாத
பத்திரக் குழந்தை.
தரையில் மெத்தென்ற,
புடவை, வெள்ளை வேட்டியால்
புனைந்த படுக்கை.
-o00o-
காலணி தயார். தேய்த்த உடை தயார்.
பசி அறியாத வயிற்றுக்கும் வாய்க்கும்
ருசியான உணவு தயார். எல்லோரும்
சினிமா போய் வந்த நாலு மணி
நேரத்திற்குப் பின்பும் உடை மாற்றும் முன்
சூடான சாப்பாடு தயார்.
குமிட்டிதான்.
ஃபிரிட்ஜ், ஓவன் என்ற பெயரெல்லாமே
தெரியாது.
-o00o-
பண்டிகை நாள், பலகாரம், பட்சணம்
புதுத் துணி, மஞ்சள் குங்குமம்,
எண்ணெய் ஸ்நானம்
‘லட்சுமி கல்யாணம் வைபோகமே’
எல்லாம் சரியாய் இளைப்பின்றி
எப்படி நடந்தது.
அப்பாவுக்குத் தண்ணீர் தம்ப்ளரில்
கையில் தர வேண்டும்
அருமையை விட கடுமை அதிகம்.
முள்ளில் ரோஜா.
-o00o-


கிணற்று மேடையில்
குடம் வைக்க அமைத்த குழியில்
தேங்கிய தண்ணிரைக் காகம் பருகும்.
துணி காயப் போடும் கம்பிகளில்
சென்ற நிமிடம் என்பது இருந்தது
என்னும் சாட்சியாய் நீர் முத்துகள்.
ஓடுகள் குளிரும்.
துவைக்கும் கல் கழுதையை விட பொறுமை.
பொதியோடு அடி சுமக்கும்.
அதன் முகமெங்கும் அம்மை வடு.
நாற்புறமும் இறங்கிக் குமிழும் ஓடு.
நடுவில் சிறு முற்றம்.
ஒரு பக்கம் தாழ்வாரம்.
ஒரு பக்கம் கிணறு.
குட்டிச் சுவர் தடுத்த குளியலறை ஒரு பக்கம்.
நடுவில் ஆட்டுக் கல். துவைக்கும் கல்.
வெந்நீர் அறையில் அண்டாவும்
விறகும் போய் பாய்லரும் கரியும்.
சமையல் அறையில் மூலைகளில்
மண் அடுப்புகள், விறகு மறைந்து
குமிட்டியும் போய் மண்ணெண்ணெய்
ஸ்டவ்.
தரை வெறும் தரை.
தினம் பெருக்கித் துடைக்கும் வேலைக்காரப்
பெண்மணி, காய்க்கார, பால்கார, கரிக்கார,
பழக்கார பெண்கள் எல்லாரும்
அவள் பேச்சுக்காய் காத்திருப்பர்.
எல்லோருக்கும் கொடுப்பதற்கு
ஏதாவது வைத்திருப்பாள்,
அதைவிட நிச்சயம் அன்பு.
-o00o-

அம்மா (மீண்டும்)

இப்போதெல்லாம்
நான் நிறைய நேரம்
ஒதுக்குகிறேன், உனக்காக.
அலுவலக பகாசூரன்
விழுங்கியது போக,
அகமுடையாள், குழந்தை.
அம்மாவுக்கு ஏது நேரம்?
தொலைக் காட்சி, பத்திரிகை,
தூக்கம், ஆசை.
தின்னவும் குளிக்கவும் கூட
நேரம் இல்லை.
சோம்பல், மயக்கம்
தூக்கக் கலக்கம்.
இடையில் வள்ளல் நினைப்பில்
உன் அறைக்குள் நுழைகையில்
அலுவல், இலக்கியம், அரசியல்
நினைவு வரும்.
‘உம்’ கொட்டல் பேச்சா?
கொஞ்ச நேரம் - இன்னும்
கொஞ்ச நேரம் - இருந்திருக்கலாம்.
ஆனால் ஆபீஸ், ஆசை, யோசனைப் பேய்
தூக்க வெறி.
இப்போ அப்படியில்லை.
ஆபீஸில், மோட்டார் சைக்கிளில்,
பொண்டாட்டி, பெண், டி.வி.யோடு
போது போகையில்
உன்னோடு (மட்டுமே) இருக்க
முடிகிறது.
நீ போன பிறகு.
-o00o-

அம்மா (3)

அவள் ஒரு மந்திரவாதி.
இப்படித்தான் ஒரு சமயம்
தன் வளையை
சைக்கிளாய் மாற்றினாள்.
அப்பா ஆபீஸ் போனது அதில்தான்.
தங்கை பிறந்த போது
வெய்யிலைத் தணிக்க
வளையலை மின் விசிறியாக்கினாள்.
மருத்துவர் செலவு, மருந்து
என்றெல்லாம் ஆக்கியிருக்கிறாள்.
ஒருநாள் கூட அயர்ந்து படுத்ததில்லை.
அலண்டு போனதில்லை.
சோம்பல், சுணக்கம் இல்லை.
கசங்கின புடைவையோ, கலைந்த
தலையோ, தூசித் தரையோ
பத்தான பாத்திரமோ
பார்த்தில்லை.
பிறக்கும் முன் தகப்பனை
பின் பதினைந்தில் தாயை,
முப்பதுகளில்கணவனை
இழந்த துக்கத்தை
எவர் மீதும் ஏற்றியதில்லை.
எங்கும் காட்டியதில்லை.
எட்டு நாள்
ஐ.சி.யூ.வின்
கண்ணாடி மௌனத்தில்
இரும்பு இதய நர்ஸ்களின்
அசட்டு சுத்த அலட்சியத்தில்
தனிமை வாசம்.
ஒரு நாள் கூட
அதற்கு முன்
தனியாய் இருந்ததில்லை,
முழு வாழ்நாளிலும்.



அம்மா (4)

எவ்வளவோ எண்ணங்கள்
எதையுமே சொல்லவில்லை.
எவ்வளவோ வண்ணங்கள்
எதையுமே பார்க்கவில்லை.
பிறந்தவுடனேயே தொப்புள் கொடியைத்
துண்டித்து விட்டார்கள்.
பிள்ளை தனி. தாய் தனி.
இது புரியாமல்……..
அவனுக்கு அவன் ஆசை,
ஆபீஸ். அவ்வளவுதான்.
அவளுக்கு இன்னமும் அவன்
குழந்தைதான், மடி மேல்.
அவன் பசி அவளது.
அவன் சட்டை கசங்கல்
அவள் மனத்தது.
அவன் வெற்றி யார் கண்ணும்
படாமல் அமைதியாய் பருக, நிறைய.
அவன் பயத்தை கவலையை
அவள் வாங்கித் துடைத்து எறிவாள்.
அவனுக்குத் துக்கமே இல்லை
எப்பவும்
நேற்றுவரை.
அவள் இருக்கிறாள்
எதையும் தீர்க்க.
ஒரு வேளை சோறு ஆறியதில்லை.
காப்பி கசந்ததில்லை.
பசி வந்ததில்லை, தாகம்
எடுத்ததில்லை.
உப்போ சர்க்கரையோ
தூக்கலாய் இருந்ததில்லை
வெளியில் இருந்து திரும்புகையில்
கதவில் பூட்டு தொங்கியதில்லை.
வெற்றி வெளியே தெரிவதற்கில்லை.
அது அவள் வாழ்வின் உள்ளே.
வீண் உணர்ச்சி, உயர்வு நவிற்சி
கிடையவே கிடையாது.
அவள் என்றும் ராணிதான்.
பயந்தோ கெஞ்சியோ
பழக்கம் இல்லை.
வீட்டின் சகல
பொறுப்புகளையும், பிள்ளைகளின்
வாழ்வின் சகல நிகழ்ச்சிகளையும்
தினசரியின் சகல காரியங்களையும்
அன்பால், ஆளுமையால்
தொப்புள் கொடி அறுந்ததையே
தெரிந்து கொள்ளாமல் அசடாய்
நிகழ்த்தியவள்.
ஒருநாள் இரண்டு நாள் அல்ல.
நாற்பத்தைந்து வருடங்கள், ஐந்து
மாதங்கள், மூன்று நாட்கள்
அவளைப் பொறுத்தவரை
அன்றுதான்
தொப்புள் கொடி
எரிக்கப் பட்டது.
அதுவரை அவன்
அவளில் ஒரு
அங்கம்தான்.
அவள் அவன்
வாழ்க்கையை வாழ்ந்த
அஞ்ஞானத்தில்
தன் வாழ்க்கையை
வாழத் தவறி விட்டாள்.

No comments: