FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Friday, March 12, 2010

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது (12)

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது (12) பிரசுரம் : வார்த்தை மார்ச், 2009

"இன்பமே வடிவு"

வ.ஸ்ரீநிவாசன்.


முதன்முதலாக பள்ளிக்கு அனுப்ப ஒரு விஜயதசமி தினத்தன்று என்னை 'வாசிக்க வைத்தா'ர்கள். புதுத் துணியும், கார் சவாரியும் பின்னால் நிகழ இருந்த பயங்கரத்தை சூசகமாகக் கூடத் தெரிவிக்கவில்லை. சுமார் ஒரு மாத காலம் பள்ளியிலிருந்து வீட்டுக்கு ஓடி வந்திருக்கிறேன். என் தாயார், அவர் தாய் மாமன், என் அண்ணன் என்று யார் கொண்டு போய் தெருக்கோடியில் இருக்கும் பள்ளியில் விட்டாலும் அவர்கள் திரும்புகையில் அவர்கள் பின்போ சில சமயம் முன்போ வீட்டுக்குத் திரும்பி வந்திருக்கிறேன்.

நெல்லில் 'அ' வை எழுத வைத்தவர் ஸ்ரீரமுலு நாயுடு. அவர் பற்றி எனக்கு பயம் இல்லை. அவர் என் பக்கத்து வீட்டுக்காரர் என்பதை விட அவர் மனைவி என் தாயாரின் சிநேகிதி.

'அ', எழுத்துக் கூட்டிப் படிப்பு, சரளமான வாசிப்பு என்று முன்னேறுகையில் யாரோ ஒருவர் வீட்டிலிருந்து கிடைத்த கதிர் என்ற பத்ரிகையில் முயல் கார்ட்டூன் படக் கதை புதிய உலகைக் காட்டி தாங்கொணா பரவசத்தைத் தந்தது. பின்னர் அப்போது 'பாலர் அரங்கம்' என்று அழைக்கப்பட்ட தற்போதைய 'கலைவாணர் அரங்க'த்தில் ஒரு குழந்தைகள் படத்தில் (அதுவும் கார்ட்டூன் படம்தான்) ஒரு சிறுவன் ஒரு திரைச்சீலையில் கடலையும், ஓர் ஓடத்தையும் வரைவான். பின் அந்தக் கடலலைகள் நகர ஆரம்பிக்கும். ஓடம் ஆடும். அந்தச் சிறுவன் அதில் ஏறிக் கொண்டு பயணிப்பான். அன்று அந்தக் குழந்தை அடைந்த பரவசத்துக்கு ஈடே கிடையாது.

உயர் நிலைப் பள்ளி காலத்தில் வீட்டருகே இருந்த நூல் நிலையமாய் மாற்றப் பட்டிருந்த கார் ஷெட்டில் இருந்த நூல்களில் 'சக்ரவர்த்தித் திருமகன்' என்கிற புத்தகம் அதுவரை துண்டு துண்டாகக் கேட்டிருந்த இராமாயண கதை முழுவதையும் எனக்குக் காட்டியது. அதை ஒரு ஏழெட்டு முறை படித்திருப்பேன். பின் 'வியாசர் விருந்து'. அவ்விரண்டும் அதே அளவு மன மகிழ்வைத் தந்தன. இப்பொது புரிகிறது, வாழ்வில் மகத்தான காரியங்களைச் செய்த ராஜாஜி அவர்கள் இவ்விரு நூல்களையும் எழுதியதே அவர் வாழ்வின் முக்கிய காரியங்கள் என்று சொன்னதன் பொருள்.

பத்தாம் வகுப்பு படிக்கையில் என்.எஸ். ரகுநாதன் என்னும் விஞ்ஞான ஆசிரியர் 'ஜெயகாந்தன்' படியுங்கள் என்று வகுப்பு மாணவர்களிடம் சொல்லுவார். 'கே.எஸ்.கோபால க்ருஷ்ணன், கே.பாலச்சந்தர் என்று பேசுகிறீர்களே, இவரைப் படியுங்கள்' என்று மறுபடி மறுபடி சொல்லுவார். பின்னர் ஆனந்த விகடன் வருகை ஒரு வாரந்திர முக்கிய நிகழ்ச்சி ஆயிற்று. அவர் கதைகள் மட்டுமின்றி, கட்டுரைகளும், 'அனுபவங்களு'ம், மேடைப் பேச்சுகளும், அவை மூலம் அறியாமையிலும், துவேஷத்திலும் மூழ்கி இருக்க வேண்டிய தமிழர்களை பாரதியைப் போல் தடுத்தாட்கொண்ட பெருஞ்செயலும் என்றென்றும் மறக்க முடியாதவை.

புகுமுக வகுப்பில் துணைப் பாட திட்டத்தில் ஒரு கதை. அரசன், அரசியின் இருப்பிடத்தில் வேறு யாரோ ஒருவனும் இருப்பதாகக் கருதி ஒரு அறையின் உள்ளேயே செல்லாமல் கதவை சுவரெழுப்பி மூடி விடுவான். "வெகு நாட்களுக்கு உள்ளிருந்து யாரோ குரலெழுப்புகிற, தட்டுகிற ஒலி கேட்டுக் கொண்டிருந்தது" என்று முடியும். அந்தக் கதை என்னவோ செய்தது.

பட்டப் படிப்பு படிக்கையில் மாநிலக் கல்லூரி நூல் நிலையத்தில் ஜானகிராமனின் 'மோக முள்" கிடைத்தது. அதன் அட்டையில் "படு போர். படிக்காதீர்கள்" என்று எழுதி இருந்தது. வீட்டுக்கு எடுத்து வந்து படிக்க ஆரம்பித்தேன். முடிக்கும் வரை வேறு உலகத்தில் பாபு, யமுனாவோடு இருந்தேன். தி.ஜா.வின் கதைகள் காமத்தின் பீறிடல்கள் என்கிறார் ஜெயமோகன். எனக்கு அவை 'பொருந்தாக் காதல்' பற்றியவை என்றே படுகின்றது. மனித குலம் தர்மமாக்கியுள்ள திட்டங்கள் இயற்கையின் நியதிகளின் முன் குப்புறக் கவிழ்தல்தான் தி.ஜா.வின் தத்துவ தரிசனம். அப்பொதெல்லாம் புத்தகக் கடைகளில் ஜே.கே. மற்றும் ஜானகிராமன் புத்தகங்களே அதிகம் விற்பனை ஆயின.


படிப்பு முடிந்து வேலைக்கு சென்ற காலத்தில் தெரிந்தவர் ஒருவரிடமிருந்து சால் பெல்லோவின் 'ஹேண்டர்ஸன் தெ ரெய்ன் கிங்' வாங்கிப் படித்தேன். நான் படித்த முதல் ஆங்கில நாவல் அதுதான். அதே பரவசம். திரு. டேவிட் சந்திரசேகர் நண்பரானதும் அவர் ஆல்பர்ட் காம்யூவின் 'ப்ளேக்' கையும் தாஸ்தயெவ்ஸ்கியின் 'க்ரைம் அண்ட் பனிஷ்மென்ட்' டையும் கொடுத்தார். ப்ளேக் மீண்டும் உந்நத பரவசத்தைத் தந்தது. "there are pestilences and victims; it is upto you not to join forces with pestilences" என்கிற காம்யூ "True healers" பற்றியும் குறிப்பிடுகிறார்.

ஆனால் க்ரைம் அண்ட் பனிஷ்மென்ட் முன்னிரு புத்தகங்களையும் சாதாரணமானவைகளாக்கி விட்டது. அதைப் படித்தபின் வாழ்க்கை எக்காலத்துக்குமாக மாறிவிட்டது. உண்மையில் நான் வேறாளாகி விட்டேன். வாழ்க்கையை நான் பார்க்கும் பார்வை மேலும் துல்லியமானதாக ஆகிவிட்டது. டேவிடிடம் கேட்டேன்: இந்தப் புத்தகத்தில் தாஸ்தயெவ்ஸ்கியின் ஆதர்ஸ பாத்திரம் யார்?" டேவிட் சொன்னார் "ரஸ்கால்நிகோவ்". நான் சொன்னேன் "இல்லை சோனியா". அவர் இரண்டொரு தினங்களில் கூறினார்: "ஆமாம் சோனியாதான்". சோனியாதான் காம்யூ குறிப்பிட்ட அந்த ட்ரூ ஹீலர். அவர்கள் வெகு அரிதானவர்கள். அந்நாவலைப் படிக்கையில், விழித்திருக்கும் வேளையில் எல்லாம், அலுவலக நேரம் போக, அதைப் படித்தபடியே இருந்தேன். நாவலின் வாக்யங்களும், கனவுகளும், சம்பவங்களும் அவர் கடவுளைப் போல ஒரு முழு உலகை சிருஷ்டி செய்துள்ளதைக் காட்டின. அவ்வுலகம் நாம் வாழும் இவ்வுலகம்தான் என்பதும் தெரிந்தது.

அப்போதெல்லாம் அரசு நூல் நிலையங்ககளில் நல்ல புத்தகங்கள் கிடைக்கும். தாஸ்தயெவ்ஸ்கி, தாமஸ் மன், டென்னஸி வில்லியம்ஸ், டி.எஸ். எலியட், மற்றும் "ஆர்ட் ஆஃப் தி தியேட்டர்' என்னும் அற்புதமான நாடக நூல் எல்லாம் மாவட்ட மைய நூலகத்திலிருந்துதான் படித்தேன். (பல ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றாண்டுகளுக்கு முன்பு அங்கே நுழைந்தபோது கண்ணீர் வந்தது. புத்தகக் குப்பைகளும், குப்பையான புத்தகங்களும்தான் இருக்கின்றன. சமூகம் என்னவாய் மாறியிருக்கிறது என்பதற்கு காரணமாகவும் அதைவிட அடையாளமாகவும் அவ்விடம் (no pun intended) இருக்கிறது.) நூலகத்துக்கு வெளியே அசோக மித்திரன் என்கிற மகத்தான எழுத்தாளரைப் படிக்கும் காலமும் அப்பொதே வந்தது. வண்ண நிலவனையும்தான்.

திருவல்லிக் கேணியில் இருந்த கஸ்தூரி ஸ்ரீநிவாசன் நூலகத்தில் இருந்துதான் புதுமைப் பித்தனையும் தேவனையும் படித்தேன். பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, மௌனி, கு.ப.ரா., லா.ச.ரா., என்று நெடியதொரு பொக்கிஷம் எங்கிருந்தெல்லாமோ கிடைத்தது.

சேலம் சென்றதும் அங்கிருந்த விஜயராகவச்சாரியார் நினவு நூலகத்தில் கிடைத்த ரீடர்ஸ் டைஜஸ்டின் 'ஃபேரி டேல்ஸ்' புத்தகமும், அந்நூலகத்துக்கு எதிரில் இருந்த மாவட்ட நூலகத்தில் கிடைத்த காப்காவின் 'தி ட்ரயல்'லும் இவ்வுலகின் தீராத பொக்கிஷங்களை எங்கும் பெறலாம் என்று எனக்கு உணர்த்தின.

குடும்பம், வேலை, ஆசாபாசங்களின் அலைக் கழிப்புக்கு நடுவே இரகசிய காதலைப் போல் இந்தப் பிரேமை, இதுதான் இதுதான் என்கிற தாபம், ஒட்டு, உறவு இலக்கியத்தோடு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பட்டியலிடமுடியாத மகானுபாவர்களோடு நூற்றாண்டுகளைக் கடந்து தொடர்பும், நட்பும், உறவும் கொள்ள முடிந்தது; முடிகிறது.

இது கற்பனையூரில் நிதர்சனம் மறந்து வாழும் கனவு வாழ்க்கையல்ல.

எல்லா இடங்களிலும் என்றில்லா விட்டாலும் ஓரிரு இடங்களில் சரியான சத் சங்கங்கள் அமைந்தன. பள்ளி கல்லூரி நாட்களில், சென்னையில் உத்யோகம் பார்த்த ஆரம்ப நாட்களில் அமைந்த நட்புலகில் இலக்கியம் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தது. பின்னர் திருச்சியில் குறிப்பிடும்படியான நட்புகள் கிடைத்தன. ஒரு நாள் என் மேலதிகாரியுடன் 'புக் க்ளப்' மீட்டிங்குக்கு சென்றேன். நல்ல ஆஜானுபாகுவான வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்த நாகரிகத் தோற்றம் கொண்ட ஒருவர் வந்திருந்தார். உள்ளூர் பிரமுகர் என்று எண்ணினேன். மீட்டிங் முடிந்ததும் என் மேலதிகாரி "இவர்தான் திரு மோதி ராஜகோபால், நம் முக்கியமான வாடிக்கையாளர். இவரது கல்லூரியில் நம் வங்கியின் விரிவாக்கக் கிளை இருக்கிறது" என்று அறிமுகம்
செய்து வைத்தார். பேச ஆரம்பித்த இரண்டாவது நிமிடம் எதேச்சையாக திரு மோதி, "ஜெயகாந்தனுடைய ஜெய ஜெய சங்கரா' வெளியிட்டது அவருடைய மோதி பிரசுரம் என்றதும் நான் மேலதிகாரியிடம், "சார். நீங்கள் கிளம்புங்கள். நான் இவருடன் பேசிவிட்டு வருகிறேன்" என்று சொல்லிவிட்டு இருவரும் பேச ஆரம்பித்தோம். பல்வேறு விஷயங்களில் ஆர்வமாயும், விஷய ஞானத்துடனும் இருந்த சுவாரஸ்யமான பரந்த வாசிப்புக்கு சொந்தமான திரு மோதி அவர்கள் நட்பு பத்தாண்டுகளாக வாழ்வுக்குச் செழுமை சேர்க்கும் ஒன்று. அவரால் அறிமுகமானவர்களில் மிக முக்கியமானவர்கள் இருவர். ஒருவர் காலஞ்சென்ற திருலோக சீதாராம் (இலக்கிய படகு படித்ததின் வாயிலாக). மற்றொருவர் திரு பத்மனாபன். உலக இலக்கியங்களை எல்லாம் தமிழிலேயே படித்த எளிமையான, நற்குணங்கள், நல்ல வாசிப்பு ருசி உள்ள பெரியவர். பத்மனாபன் மூலமாக கிடைத்த நண்பர் திரு நாஞ்சில் நாடன். அதாவது 'எட்டு திக்கும் மத யானை'யை படித்து விட்டு 'இதை அவசியம் படியுங்கள்' என்று பத்மனாபன்தான் கொடுத்தார். விஷ்ணுபுரம் படித்த கையோடு 'எட்டு திக்கும் மத யானை'. தீபாவளிக்கு வீட்டிலும், நண்பர்கள் இல்லங்களிலும் இனிப்புகளாக உண்டு இருந்தவனுக்கு, தினசரி சாப்பாடு சுவையாகக் கிடைத்தது போல் இருந்தது. இரண்டுமே எனக்குப் பிடித்திருந்தன. வெகு சில நாட்களிலேயே எனக்கு சிறிதும் சம்பந்தமே இல்லாத (என் பெற்றோர் திருமண வாழ்கையைத் தொடங்கிய) கோவைக்கு சென்றதும் நாஞ்சிலோடு நேரில் பழகக் கிடைத்தது. நான், மோதி, பத்மனாபன் ஆகிய எங்கள் மூவருக்கும் பொய்கையாழ்வார், பேயாழ்வர், பூததாழ்வாரோடு கூடவே இருக்கும் பெருமாள் போலாகி விட்டார் நாஞ்சில். நாஞ்சில் மூலமாக ஜி.நாகராஜனும், நகுலனும் மீள் அறிமுகம் ஆனார்கள். கோவை 'Thiagu Book Centre' வாடகை நூல் நிலையத்தில் கிடைத்தது அழகிய பெரியவனின் 'தீட்டு'.

புத்தகங்களை வாங்கி விட்டு படிக்காமல் இருப்பதுதான் புத்தகங்களை 'அப்யூஸ்' பண்ணுவது என்கிறார் ஜே.கே. படிக்க இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. நான் வாங்கிய புத்தகங்கள் பலதையும் படித்தவர் என் சகோதரிதான். நானல்ல.


வாசிப்பு ஒரு சுகம். நெகிழ்ச்சியான மகிழ்ச்சி. அட ஜஸ்ட் டைம் பாஸ். எழுத்தாளன் ஒரு விஷயத்தை ஃபோகஸ் செய்கிறான் என்றே நான் நினைக்கிறேன். படைப்பு என்பதெல்லாம் அதிகபட்ச வார்த்தைகள். அவனைப் படிக்கையில் அவனையும், வாழ்க்கையையும், அதாவது என்னையும் நான் படிக்கிறேன். சுந்தர ராமசாமியின் எழுத்துகளையும் கேள்விப் பட்ட ஆளுமைக் குணங்களையும் வைத்துப் பார்க்கையில் அவர் கதைத் தொகுப்பு 'இல்லாத ஒன்று' என்ற தலைப்பில் வருவதும், அசோக மித்திரனின் நூல் தலைப்பு 'அழிவற்றது' என்று வருவதும் பொருத்தமாகத் தெரிந்தது. காம்யூவால் 'ப்ளேக்' என்றுதான் எழுத முடியும். அ.மி. "தண்ணீர்' என்றுதான் எழுதுவார்.

மனவெழுச்சி என்கிற வார்த்தையை ஜெயமோகன், பிரமிள் போன்றவர்கள் கையாளுகிறார்கள். இந்த பரவசம், சிருஷ்டி உணர்வு, எனக்கு மனநிறவு என்றே படுகிறது. அது மனம் என்கிற கொள்கலனின் நிறைவு அல்ல. இல்லாத ஒன்றை எப்படி அடக்குவது என்று ரமண மர்ஷி கேட்டது போல், இல்லாத ஒன்று எழுவதும், நிரம்புவதும் அப்பொய்யின் கபட நாடகங்களே என்று தோன்றுகின்றது. இது மனம் என்று அறியப்பட்டது நிறைவுறுவது. கலையும், இலக்கியமும் ஆன்மீக சாதனங்களாகவே எனக்குப் படுகின்றன. எளிமையாகவும், சுலபமாகவும் இருப்பது உயர்வானதாகவும் இருக்கிறது. சைக்கிள் ஓட்டுவதைப் போல கற்பனையால் அறிந்து கொள்ள முடியாத உணர்வு இலக்கியானுபவம். தனிமையில் தாஸ்தயெவெஸ்கி எனக்கு ரஸுமுக்கினையும், துனியாவையும், நஸ்டாசியா ஃப்லிப்பொவோனாவையும், ப்ரின்ஸ் முஷ்கினையும் பற்றிச் சொல்கையில் அது ஏற்ற தாழ்வுகள், தர்க்கச் சிக்கல்கள் இல்லாத பிறர் பற்றிய கவலை இல்லாத நேரடித் தொடர்பு. இரண்டறக் கலப்பு. வாசகனுக்கும் அவனின்றி இருக்க முடியாத எழுத்தாளனுக்கும் பிரத்யேகமானது.

ஒவ்வொரு இலக்கியவாதியும் ட்ரூ ஹீலராக இருக்கிறான். அஹங்காரமற்ற அவர்களது கலை வெளிப்பாடுகள் உலகை அதன் துக்கங்களிலிருந்து சொஸ்தப் படுத்துகின்றன. அதுவே ஆனந்தம்.


மொத்தத்தில் இலக்கியம் என்னதான்? நம் வாழ்வின் தமிழ் மண்டலத்தின் பிதாமகனான பாரதி சொல்வதைப் போல் 'எழிலிடை உறுவதும் இன்பமே வடிவாகிடப் பெறுவதும்தான்.

***************

John Scotus Eriugena (9ம் நூற்றாண்டு மெய்ப்பொருளியலாளர்): "கடவுள் இயற்கையில் உள்ள தன் படைப்புகளின் படைப்பில் தன்னைப் படைத்துக் கொள்கிறார்."

"If a poet has any obligation towards society, it is to write well" ஜோசஃப் ப்ராட்ஸ்கி (1987 நோபல் பரிசு பெற்றவர்.)

***************

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது (11)

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது (11)
'ஒரு துளி கல்கத்தாவும், வேறு சிலவும்' பிரசுரம் : வார்த்தை பிப்ரவரி, 2009.
வ.ஸ்ரீநிவாசன்.

கல்கத்தா (அப்போது அந்நகரத்தின் பெயர் அதுதான்) வில் மூன்று வருடம் (1987-90) உத்யோக நிமித்தமாக இருந்தேன். மிகப்பல அதிசயங்கள் நிறைந்த ஊர் அது. ஜோதி பாசு முதலமைச்சராக இருந்தார். அவரை அடுத்து புத்ததேவ் பட்டாசார்யாதான் முதலமைச்சராவார் என்பது அப்போதே அனைவருக்கும் தெரியும். ஜோதி பாசு அவர்களை யாரும் எப்போதும் சென்று பார்த்துவிடலாம். ஒரு ரூபாய்க்குள் மதிய உணவை முடித்துக் கொள்ளலாம். அதே பணத்துக்குள் டிக்கட் வாங்கி டிராமில் வெகு தூரம் சென்று வரலாம். (டிக்கட் வாங்காமலும்). டாக்ஸி, ஆட்டோ ஓட்டுபவர்கள் மீட்டர் காட்டும் தொகைக்கு மேல் இருபத்தைந்து பைசா கூட வாங்க மாட்டார்கள். அதுதான் உண்மையான சுய மரியாதை. அதே போல் அனைவரின் பெயரின் பின்னாலும் நிச்சயம் ஜாதிப் பெயர் இருக்கும். ஆனால் ஜாதி துவேஷம் இல்லாத மக்கள். மார்வாரிகளை 'எங்கள் மாநிலத்தை விட்டு வெளியே போ' என்று குரலெழுப்பும் குழுக்கள் இருந்தன. அதே சமயம் அத்தகைய ஃபாசிஸப் போக்குக்கு எதிராக நாடகம் நடத்துபவர்களும் இருந்தனர்.

இரண்டே வார்த்தைகளில் அந்நகர் பற்றி சொல்ல வேண்டுமென்றால் 'sweat and sweet' என்று சொல்லலாம். கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் வியர்த்து ஒழுகும். நெடுங்கோடையில் குளித்த அடுத்த நிமிடம் வியர்வை பெருக ஆரம்பித்து விடும். பேருந்துகளில் பயணிக்கையில் மழையில் சொட்ட சொட்ட நனைந்த மாதிரி ஆகிவிடும். காலை முதல் வேலையாக இனிப்பு சாப்பிடுவார்கள். இனிப்புக் கடைகள் திறந்துவிடும். ரசகொல்லாவும், லெயின்சாவும், மிஷ்டி தோயும் மறக்க முடியாதவை. விருந்தோம்பலில் வங்காளிகள் அற்புதமானவார்கள். இனிப்பு, தேனீர், சிகரட் எல்லார் வீடுகளிலும் எப்போதும் கிடைக்கும்.

சராசரி வங்காளிக்கும் தாகூரைத் தெரியும். நீங்கள் வேறு யார் பெயரையும் சொன்னாலும் 'தாகூரிடம் எல்லாம் இருக்கிறது, அது போதும்' என்று சொல்லிவிடுவார்கள். ஹென்றி ஃபோண்டா வாரம், சார்லி சாப்ளின் வாரம் என்று நகரின் ஷகரான சினிமா ஹால்களில் படங்களைப் போடுவார்கள். கூட்டம் அலை மோதும். 'அதிகாரி' என்று என்னுடன் பணியாற்றிய நண்பர் ஒருவர் இருந்தார். அவர் சொல்லுவார். "தெருவில் ஒரு தவளை தத்துகிறது என்றால் அங்கு நூறு வங்காளி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான்." காளீ, கம்யூனிஸம், கால்பந்து மூன்றும் அவர்களது மூச்சு.

சந்தா என்று துர்கா பூஜை சமயம் விரட்டிப் பணம் வாங்குவார்கள். அதே போல் ரயில் நிலையங்ககளில் போர்ட்டர்கள் (கட்சியின் அடையாள அட்டை அணிந்துகொண்டு) மிரட்டிப் பணம் பறிப்பார்கள். செங்கல் தெரிய கட்டப் பட்ட வீடுகளில் குடி இருப்பார்கள். அலுவலகங்களில் பலரும் ஏதோ தர்மத்துக்கு வேலை செய்வது போல் வேலை செய்வார்கள். கிரிக்கட், கால்பந்து போட்டிகளை தொலைக் காட்சி வைத்து அலுவல் நேரத்திலேயே பார்ப்பார்கள்.

நம்மூர் மழை ஒரு மழையே இல்லை. பிரளயம் போல் மழை பெய்யும். ஒரு காலத்தில் தினமும் சாலைகளையும், தெருக்களையும் மாநகராட்சியினர் தண்ணீரால் கழுவி விடுவார்களாம். சிலை வைப்பது, சாலைகள், இடங்களின் பெயரை மாற்றுவது போன்ற கெட்ட பழக்கங்கள் தமிழகத்திற்கு வங்காளத்திடமிருந்துதான் வந்திருக்க வேண்டும். நான் அங்கு இருந்த காலத்தில் யாரும் தமிழ்நாட்டைப் போலவே பழைய பெயர்களை மறக்கவில்லை.

தமிழர்கள், ஏன் தென்னிந்தியர்கள் அதிகம் இருந்த பகுதி தெற்கு கல்கத்தா. 'லேக் மார்க்கட்', 'லேக் கார்டன்ஸ்' போன்ற பகுதிகளில் அதிகம் தமிழர்கள் வசித்து வந்தார்கள். காய்கறி மார்க்கட்டுக்குள் நுழைந்ததும் "கத்தரிக்காய் வேணுமா? சேனைக் கிழங்கு புதுசு" என்று வங்காளி கடைக்காரர்கள் நாம் தமிழர் என்பதை பார்த்தவுடனே தெரிந்துகொண்டு அழைப்பார்கள். என் நண்பர் அதிகாரி "சௌத் கல்கத்தா முழுக்க உங்க ஆட்களாகவே இருக்கிறீர்கள். வெகு விரைவில் 'தனி நாடு' கேட்கப் போகிறீர்கள்" என்று கிண்டல் செய்வார். மிகச் சரியாக உங்கள் மாநில அடுத்த முதல்வர் ஜெயலலிதாதான் என்றும் அவர் சொன்னார்.

ஹோமியோபதி மருத்துவர்கள், அலோபதிக்காரர்களை விடவும் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள். என் வீட்டின் அருகில் மேற்கு வங்காள அரசின் ஆஸ்தான ஓவியர் இருந்தார். அவருக்கு ஹோமியோபதி ஒரு பொழுதுபோக்கு. சிறு சிறு வைத்தியங்களுக்கு அவரிடம் போவோம். ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்துதான் நீக்க வேண்டும் என்று கண்ணருகில் வந்திருந்த பாலுண்ணியை அவர் மூன்றே நாட்களில் வெறும் மருந்துகளாலேயே குணப்படுத்தினார்.

'வ'வும் 'ப'வும் அவர்களிடம் மாறி வருவது குறித்து பல ஜோக்குகள் உண்டு. பிபேகாநொந்தோவின் இயற்பெயர் நரேந்த்ரொ தொத்தோ. பல மகான்களையும், மாமேதைகளையும் வங்கம் நமக்குத் தந்திருக்கிறது. இன்றும் இந்தியாவின் பல துறைகளிலும் வங்காளிகள் பளிச்சென்று தெரிகிறார்கள். ஆனால் ஒன்று, அவர்களைப் பொருத்த வரையில் அவர்கள் அனைவரும் வங்காளிகள். இராமக்ருஷ்ண பரமஹம்சர், இரவீந்திரநாத் தாகூர், சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், உத்தம் குமார், சௌமித்ர சாடர்ஜீ, அஷோக் குமார், கிஷோர் குமார் முதல் இன்றைய புத்த தேவ் பட்டாச்சார்யா, மம்தா பேனர்ஜீ, சோம்நாத் சட்டர்ஜி, பிரணாப் முகர்ஜீ, சவுரவ் கங்கூலி முதலிய பலரும் வங்காளிகளேயன்றி பிராமணர்கள் அல்லர்; சுபாஷ் சந்திர போஸ், ஜக்தீஷ் சந்திர போஸ், ஜ்யோதி பாஸூ, சித்தார்த்த பாசு அனைவரும் வங்காளிகளேயன்றி பாசுக்கள் அல்லர்; ம்ருணாள் சென், அபர்னா சென், அமர்தியா சென், சுசித்ரா சென், சுஷ்மிதா சென் எல்லோரும் வங்காளிகளேயன்றி சென்கள் அல்லர். அதனால்தான் அவர்களுக்கு பாலாறு, காவேரி, முல்லைப் பெரியாறு பிரச்னைகள் வருவதில்லை போலும்.

நோபல் பரிசுக்கும் வங்காளத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தாகூர், அமர்த்தியா சென் இருவரும் வங்காளிகள். அன்னை தெரஸா, சி.வி.இராமன் (தமிழர்) கல்கத்தாவில் வாழ்ந்தவர்கள். ஆஸ்காரின் வாழ்நாள் சாதனையாளர் விருது பேற்ற ஒரே இந்தியர் சத்யஜித் ரே. நானறிந்த பரிபூரணமான கலைஞர்களில் மிக முக்கியமானவர் ரே. எவ்வளவு திறமை, எவ்வளவு மேதமை, எவ்வளவு எளிமை. நுண் தகவல்களுக்கு கடவுளைப் போன்றவர். "We live only once; we can do lot of things which others are not doing" என்று சொன்னவர், அதை வாழ்ந்தும் காட்டி விட்டார். 'தி கான்டம்பொரரி சினிமா' வில் பெனிலொப் ஹூஸ்டன், "வேறு யாரும் வரும் வரைக்கும் சத்யஜித் ரே யின் வங்காளம்தான் சினிமாவின் இந்தியா" என்கிறார். யாருடைய தமிழ்நாடும் இன்னும் சினிமாவின் இந்தியா ஆகவில்லை. விவேகாநந்தரைத் தெரியாத மாநிலம் கிடையாது. நேதாஜியின் பெயரில் சாலை இல்லாத நகரம் தமிழகத்தில் கிடையாது. நமது சுதந்திரப் போராட்டத் தலைவர்களான வ.உ.சி.யையும், ராஜாஜியையும் தமிழகத்திலேயே பலருக்குத் தெரியாது.

என் வீட்டில் 'ராதா' என்கிற பெண் வீட்டு வேலை செய்தார். என் மனைவிக்கும் அவருக்கும் இடையே 'துவிபாஷி', மழலையர் பள்ளியில் சேர இருந்த என் மகள். ராதா எங்கள் வீட்டு உரிமையாளார் வீட்டிலும் வேலை செய்து வந்தார். இருபது இருபத்திரண்டு வயதுக்குள் இருக்கும். அவருக்கு திருமணம் ஆகி குழந்தையும் இருந்தது. அவரது தாயார் முதலில் எங்கள் வீட்டு உரிமையாளர் வீட்டில் வேலை செய்து வந்து இப்பொது இவர். வேலைக்கு வந்து முதல் வாரத்தில் ஒரு சிறு செடி வாங்கி வந்து எங்கள் வீட்டில் வைத்தார். அது 'மணி ப்லான்ட்' என்று பின்பு தெரிந்து கொண்டோம். அவரது வறுமை கண் கூடாகத் தெரியும். எனினும் அவருக்கு ஒரு அழகுணர்ச்சியும், அக்கறையுமிருந்தது. (மத்திய அரசு நிறுவனங்களில் உயர் பதவியிலிருந்த பொறியியலாளரான என் நண்பர் ஒருமுறை கூறினார். "வெயிலும், புழுதியும் நிறைந்த வேலைக் களங்களிலிருந்து மாலை வேலை முடிந்து ஜீப்பில் வரும் உயர் பதவியாளர்கள் சோர்ந்து தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வருவார்கள். நாள் பூரா நேரடியாக வேலை செய்த தொழிலாளர்கள், குறிப்பாக பெண்கள் சந்தோஷமாக சிரித்துப் பேசியபடி உல்லாஸமாக லாரிகளில் வருவார்கள்.")

ஒரு முறை நாங்கள் சென்னை வந்து சில நாட்கள் கழித்துத் திரும்பிப் போகையில் ராதா வேலைக்கு வரவில்லை. வீட்டுக்காரர் வீட்டில் அவரை நிறுத்தி விட்டார்கள். மறுபடி ஒரு நாள் நாங்கள் வெளியே சென்றிருக்கும் போது அவர் வந்து போயிருக்கிறார். பக்கத்து வீட்டுக் காரர் மூலம் அது தெரிந்தது. மறுபடி அவரைப் பார்க்கவேயில்லை. அவ்வளவு பெரிய ஜன சமுத்திரத்தில் ஆயிரக் கணக்கான குடிசைகளின் நடுவே பாஷை தெரியாமல் அவரை எங்கு தேடுவது. இருபது வருடம் கழிந்தும் அவரை நாங்கள் நினைத்துக் கொள்கிறோம்.


அவருக்குப் பின் வீட்டு வேலை செய்ய வந்த பெண்மணி வங்காளிகளைப் போல் சேலை அணிந்து இருந்தார். அவர்களுக்கு யூனியன் உண்டு. அதன்படிதான் சம்பளம். அவர்கள் புடவை கட்டும் விதமும் ஆண்கள் வேட்டி அணியும் விதமும் அவர்களை வங்காளிகள் என்று காட்டிக் கொடுத்துவிடும். பஞ்சகச்சமாக அணிந்த வேட்டியின் ஒரு நுனி ஜிப்பா பைக்குள் இருக்கும். பெரும்பான்மையான வங்காளிகள் கண்ணாடி அணிந்து இருப்பார்கள். சிகரட் பிடிப்பார்கள். ஒல்லியாக இருப்பார்கள். வங்காளியிலேயே பேசுவார்கள். 'இந்தி நீச மொழி' என்பார்கள். அனைவருக்கும் இந்தி நன்றாகத் தெரியும். கல்கத்தாவின் குப்பைக்கும், ஊழல்களுக்கும் பிற மாநிலங்களிலிருந்து (குறிப்பாக பீஹார்) வந்தவர்களே காரணம் என்பார்கள். தமிழர்களைப் போல் அரிசி சோறு சாப்பிட்டாலும் பிராமணர்கள் உள்பட அனைத்து வங்காளிகளுக்கும் அத்தியாவசிய உணவு மீன். வங்காளப் பெண்களின் அழகுக்கும் வங்காளிகளின் அறிவுக்கும் இதுவே காரணம் என்றும் சொல்வதுண்டு. அழகில் பெண்களுக்கு நேர் எதிரிடையாக ஆண்கள் இருப்பார்கள்.

எனக்கு அடுத்த ஜென்மம் பற்றி தெரியாது. நம்பிக்கையும் கிடையாது. ஒருவேளை இருந்தாலும் அது irrelevant. நினைவில் இல்லாத விஷயம் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? ஒருவேளை இருந்தால் வங்காளியாகப் பிறக்க வேண்டும். வங்க மொழியின் இலக்கிய அழகு, கலைச் செழுமை என்று கம்பீரமாக சொல்ல எண்ணினாலும் உண்மையில் அழகு, செழுமை என்று கவனம் செல்வது வேறிடத்திற்குத்தான்.

**************

'ஒருவர் படும் கஷ்டங்களுக்கு அவர்கள் வினைப் பயன் அல்லது கர்ம பலன் காரணம் போன ஜென்மத்தில் செய்த பாவம்' என்று சொல்லுவது வழக்கம். அப்போது முதல் ஜென்மத்தில் நடப்பவைக்கு என்ன காரனம் என்ற ஒற்றைக் கேள்வியில் அந்த கருத்து வலுவிழந்து போகிறது. மேலும் 'law of karma' என்றறியப் படும் கர்ம வினையை நான் இப்படிப் புரிந்து கொள்கிறேன். கிட்டத் தட்ட ந்யூடனின் விதி மாதிரி. நாம் ஒட்டுமொத்தமாக ஒரே உயிர். நமது செயல்கள் நடவடிக்கைகள் அவற்றுக்கான எதிர்வினைகளை ஏற்படுத்துகின்றன. நம் கண்மூடித்தனமான பேராசையால் இயற்கை வளங்களைப் பாழாக்குகையில், தட்டுப் பாடுகள் வருகின்றன. நம் வினைகளின் பயன் ஓஸோன் ஓட்டை. இந்த ரீதியில் நான் கர்ம பலனை கண்கூடாகக் காண்கிறேன்.

கடவுளைக் கூட இப்படித்தான் புரிந்து கொள்ள முடிகிறது. ஸ்டீஃபன் ஹாகின்ஸ் சொன்ன மாதிரி "I take God as a metaphor for Nature's Laws". 'ரிஷி' என்ற சொல்லுக்கு 'seer' என்று பொருள் சொல்கிறார்கள். 'பார்ப்பவர்' பார்த்ததைச் சொல்கையில் பார்க்கப் பட்டது, கூடப் பார்ப்பவர் அல்லது கேட்பவர் மனதில் வேறுரு கொள்ளவே அதிகம் வாய்ப்பு இருக்கிறது. இயற்கையின் விதிகள், தலை முடிக்கும், சதிர்த் தேங்காய்க்கும் பதில் சொல்லும் தெய்வமாய் மாறியதில் வியப்பில்லைதான்.

இந்தப் 'பார்த்தல்' பற்றி ஜே.க்ருஷ்ணமூர்த்தி மிக அதிகம் சொல்லி இருக்கிறார். ஓரிடத்தில் 'observation is love' என்கிறார். "Observation is the unfolding of what is taking place" என்று இன்னோர் இடத்தில் அவர் சொல்கையில் முன்னதும் விளங்குகிறது. நாம் எதையாவது 'அன்ஃபோல்ட்' பண்ண விடுகிறோமா? உடனே திணிக்கத்தான் நம் கருத்து காத்திருக்கிறதே. நாம் எவ்வளவு படித்திருக்கிறோம் அதெல்லாம் வீண் போகலாமா? புதிய தரிசனம் நம் தினசரி வாழ்வில் எங்கேனும் இருக்கிறதா? தன்னிடம் வந்து 'I have come here to learn" என்றவருக்கு, இரமண மகர்ஷியின் மறுமொழி: "This is a place to unlearn". சத்யஜித் ரேயின் மறைவுக்குப் பின் 'பொறுப்பு' இப்போது இவர் கையில் என்று ஷ்யாம் பெனெகல் சுட்டிக் காட்டிய அடூர் கோபாலக்ருஷ்ணன், "Every moment is a moment of discovery" என்கிறார்.

************

ஆப்பிரிக்கப் பழங்குடி மக்களான 'பிக்மி' இன மக்களின் மொழியில் 'பகைமை' 'போர்' இரண்டிற்கும் சொற்கள் இல்லையாம்; அன்புக்கும், பரிவுக்கும் பல சொற்கள் உள்ளனவாம். 'காட்ஸ் மஸ்ட் பி க்ரேஸி' படத்தில் வரும் புஷ்மன் இன மக்களைப் போல.

**********

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. - திருக்குறள்.

*********

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது. (10)

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது. (10) பிரசுரம் : வார்த்தை ஜனவரி, 2009.

வ.ஸ்ரீநிவாசன்.

மும்பை குண்டு வெடிப்பு, சட்டக் கல்லூரி மோதல், சமீபத்திய மழை வெள்ளம் இவற்றில் சென்னை மக்களுக்கு அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியது கடைசி விஷயம்தான். (அடுத்த வீட்டுக் காரரின் மரணத்தை விட தன்னுடைய தலைவலிதான் ஒருவருக்கு முக்கியமானதாக இருக்கும் –ன்கிறார் டேல் கார்னகி). பலர் வீடுகளுக்குள் சாக்கடை தண்ணீர் வந்து விட்டது. கழுத்தளவு, இடுப்பளவு, முழங்கால் அளவு தண்ணீரில் வீதிகளில், சாலைகளில் மக்கள் போக வேண்டி இருந்தது. மேல் தட்டு மக்கள் வீடுகளுக்கும் பால், பிஸ்கட், ரொட்டி முதலியவை போலீசாரால் விநியோகிக்கப் பட்டன. ‘பிரளயம்’ என்ற தலைப்பில் ஜெயகாந்தனுடைய கதை இருக்கிறது. குடிசை வாழ் மக்களுக்கு ஒவ்வொரு மழைக் காலமுமே பிரளயம்தான். மழை வெள்ளத்திற்கு நாற்பது பேர் பலி, அறுபது பேர் பலி என்ற வருடாந்திர செய்திகள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. நிபுணர் குழு வருகை, வெள்ளச் சேத கணக்கு, நிவாரணம், இலவச உணவு, பணம் என்கிற தேர்தல் உத்திகள் எல்லாம் மழை சீசனின் வருடாந்திரக் கச்சேரிகள்.

சட்டக் கல்லூரி மோதல் சில வருடங்களுக்கு முன்பு வரை பள்ளி சென்று வந்த சிறுவர்களின் வெறியின் வெளிப்பாடு. பயங்கரமாக இருந்தது. ‘இவன் நம்ம ஆளா’ என்று கேட்கச் சொல்லி தமிழர்களைப் பிரித்த தலைவர்களின் கேள்வி, கண்ணாடியில் விழுந்த விரிசல் போல், நூறு குடிசையிருக்கும் இடத்தில் ஒரு குடிசையில் பற்ற வைத்த தீ போல், பரவி எவ்வளவு பெரிய துவேஷ விருட்சமாக வளர்ந்திருக்கிறது என்பதைக் காட்டியது.

மும்பை குண்டு வெடிப்பு மீண்டும் சென்னை மழை வெள்ளத்தைப்போல, ‘அனைவரும் சமம்’ என்ற நம் நாட்டின் இலட்சியத்தை நோக்கி நமது அரசுகள், நாம் எல்லோரும் எவ்வளவு தூரம் முன்னேறி யுள்ளோம் என்பதற்கு எடுத்துக் காட்டு. பொது மக்களில் எல்லா வர்க்கத்தினரும் பாதிக்கப் பட்டுள்ளனர். தொலைக் காட்சி சேனல்களுக்கு வேட்டைதான். ஒரே ஒரு சாம்பிள். கையில் குண்டு துளைத்து ஒருவர் ரத்தம் வடிய அங்கும் இங்கும் ஓடுகிறார். இன்னொரு கை அவர் கையை பிடிக்கிறது. துணியைக் கட்டவா? மருந்திடவா? இல்லை அவர்கள் காமிராக்காரருக்கு அந்தக் கை சரியாகத் தெரியும் வண்ணம் திருப்புவதற்காக.

2004ல் மொத்தத் தமிழகமும், இந்தியாவுமே கும்பகோணம் தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்காக அதிர்ச்சியையும் அனுதாபத்தையும் தெரிவித்து, அமைதி ஊர்வலம், பிரார்த்தனைகள் என்று ஏதவது செய்ய வேண்டுமே இந்தத் துயரிலிருந்து மீள என்று செய்தன. ஸ்ரீரங்கம் கல்யாண சத்திரத்தில் தீ விபத்து. மணமகள் தவிர அனைவரும் சாவு. மீண்டும் துக்கம். தர்மபுரியில் பஸ்ஸோடு எரித்து மூன்று மாணவிகள் கொலை. தினகரன் பத்ரிகை அலுவலகத்தில் அமளி. மூன்று ஊழியர்கள் கொலை. எவ்வளவோ குண்டு வெடிப்புகள். பயங்கரவாதத் தாக்குதல்கள். செய்திகள். சூளுரைகள். ஆதியோடந்தமான விமர்சனங்கள். மழையில் மின்சாரம் தாக்கி சாவது முதல் தீ விபத்து வரை, அராஜக அடிதடிகள் முதல் பயங்கரவாதத் தாக்குதல் வரை அனைத்துக்கும் அடிப்படையில் நாம் சரியாக வாழாததுதான் காரணம்.

ஒவ்வொரு உற்பாதத்தின் போதும் இந்த மாபெரும் துயரிலிருந்து தப்ப ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டும் என்று பலரும் முயல்கிறார்கள். இதற்கு பரிகாரம் இருக்கிறது. முடியுமா? போக்குவரத்து விதிகளை ஒழுங்காகக் கடை பிடிக்க முடியுமா? கறுப்புப் பணம் பண்ணாமல் ஒழுங்காக வரி கட்ட முடியுமா? லஞ்சத்தின் இருமுனைகளில் எந்த ஒன்றிலும் இல்லாதவராக நாம் இருக்க முடியுமா? கள்ள சந்தையிலிருந்து நம்மை முற்றாக விடுவித்துக் கொள்ள முடியுமா? எந்த ஒரு ஜாதியையும், மதத்தையும், இனத்தையும் தூஷிக்காமல் துவேஷிக்காமல் இருக்க முடியுமா? தொழிலதிபர்களும், இன்ன பிற பிரபலஸ்தர்களும், மக்களுக்காக மட்டுமே வாழும் தலைவர்களும், நடிகர்களும் உதாரண புருஷர்களாக தங்கள் உண்மையான சொத்துக் கணக்கு, வருமானக் கணக்கு அனைத்தையும் வெளியிட முடியுமா?

இதெல்லாம் செய்யாமல் சும்மா மும்பை குண்டு வெடிப்புக்காக, சட்டக் கல்லூரி அடி உதைக்காக, வெள்ளத்தில் உயிர் விட்டவர்களுக்காக உணர்ச்சிவசப் படுவது பெட்டைப் புலம்பல் மட்டுமில்லை, ஆபாச வேஷம்.


************

1995ல் நான் முதன்முறையாக ஒரு கிராம வங்கிக் கிளையில் மேலாளராகப் பணி ஆற்றினேன். வேலூரிலிருந்து ஆரணி செல்லும் சாலையில் சுமார் 18 கி.மீ. சென்று, அங்கிருந்து உட்புறமாக 4 கி.மீ. சென்று வங்கியை அடைய வேண்டும். மொத்தம் ஐந்து கிராமங்கள் அந்தக் கிளையின் சேவையின் கீழ் வந்தன. வறண்ட மாவட்டத்திலிருந்த அவ்வூரிலேயே கோடையில் கூட ஒரு குளுமை இருந்தது. செப்டம்பருக்குப் பிறகு ஊரே குளிர் பதனம் செய்யப்பட்டது போல் இருக்கும். ஜாதி என்கிற விஷயத்தின் ஸ்தூல இருப்பு, உழைப்பும், ஓய்வும் சரியாக கலந்த வாழ்க்கை, தூய நீர், காற்று, தாவரங்களின் அரவணைப்பு, மனிதர்களிடம் அவர்கள் வெளியே காட்டிய நவரசங்களையும் மீறித் தெரிந்த பிறர் மேல் உள்ள நம்பிக்கை முதலியவை நான் அதுகாறும் இருந்த பெரு நகர, நகரக் கிளைகளில் காணாதவை.

ஒருவருடைய வீட்டின் மாடிப் பகுதியில் கிளை இருந்தது. வீடு, வங்கிக் கிளையானது தெரியும். இரும்பு அறைக்குப் பதிலாக இரும்புப் பெட்டிதான் இருந்தது. மேலாளருக்குத் தனி அறை கிடையாது. ஒரு இரண்டறை அடி மரத் தடுப்புதான். ஒரு அதிகாரி, நான்கு குமாஸ்தாக்கள், ஒரு கடை நிலை ஊழியர், மற்றும் தண்ணீர் கொண்டு வர பெருக்க என்று ஒருவர், வாரத்துக்கு இரு முறை வந்து போகும் விவசாய அதிகாரி, ஒருமுறை வந்துபோகும், தங்க நகைகளை தரம் பார்த்து மதிப்பு சொல்லும் ஒருவர் என்று சொற்பமானவர்களே அங்கு இருந்தோம்.

தலித், வன்னியர், முதலியார், ஆசாரி, இசுலாமியர், பிராமணர், நாடார் என்ற பிரிவுகளில் பிறந்தவர்களாக நாங்கள் இருந்தோம். நான் கிளையில் சேர்ந்த முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரை நாங்கள் அனைவரும் ஒன்றாகவே உணவு இடைவேளையின் போது உணவருந்தினோம். அப்போது வங்கி மற்றும் குடும்ப விஷயங்களை மனம் விட்டு பேச முடிந்தது. இந்து, இசுலாமிய கிறித்தவ பண்டிகைகளுக்கு அவ்வூர் மக்களிடமிருந்து சாப்பிட ஏதாவது வந்து விடும். சர்க்கரைப் பொங்கலிலிருந்து, பிரியாணி வரை.

கிளைக்குச் சென்ற முதல் நாள் ஒருவர் கடன் கேட்டார். குடித்திருந்தார். அவருக்கு ஏற்கனவே கடன் பாக்கி இருக்கிறது என்று ஊழியர்கள் சொன்னார்கள். கொடுக்க முடியாது பழைய கடனைக் கட்டுங்கள் என்று சொன்னதும் கோபம் வந்து “ மெயின் ரோட்டுக்கு வருவேயில்லே, பார்த்துக் கொள்கிறேன்”” என்று கத்தி விட்டுப் போனார். அப்போது பயமாகவே இருந்தது. ஒன்றும் நடக்கவில்லை. அது போன்ற சம்பவம் வேறெதுவும் பின்னர் நிகழவில்லை.

அந்த கிராமங்களில் பலரும் இராணுவத்தில் இருந்தனர். ஒரு குடும்பத்தில் குறைந்தது ஒருவர். மர்ச்சன்ட் நேவியில் இருந்த ஒருவர் எப்போதாவது விடுமுறையில் வருவார். வங்கியின் ஆங்கில தினசரியைப் படிப்பார். ஆங்கிலத்தில் பேசுவார். அவர் ஊர் திரும்பியதும் அவர் மனைவியோடு தொலைபேசியில் பேச எங்கள் கிளை தொலைபேசியில்தான் அழைப்பார். செல்போன்கள் வராத காலம். பல குடும்பங்களில் தகப்பன் மகனுக்கு இடையே பண விஷயங்களில் இரகசியமுண்டு.


வாழை, மாம்பழ பிஸினஸ் செய்து வந்த சகோதரர்களில் தம்பி ஒரு அரசியல் கட்சியில் இருந்தார். பின் தன் ஜாதிக் கட்சியில் இணைந்தார். வங்கிக்கு வந்தாலே தன் பெரியமனிதத் தோரணையைக் காட்டுவார். மரியாதையாக இருப்பார். தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பற்றிச் சொல்லுவார். பலரிடம் இருந்த குடிப் பழக்கமும் உண்டு. என்ன வேண்டும் செய்கிறேனென்பார். பந்தா காட்டினாலும் அப்பாவி என்று தெரியும். அண்ணன் அவ்வப் போது வங்கிக்கு வருவார். மிக தன்மையான, ஸ்திரபுத்தி உள்ள மனிதர். அவர் பெயர் முதலில் கேட்டபோது வேடிக்கையாக இருந்தது. “பெரியப்பா”. ஒரு நாள் அவர் வங்கிக்கு வந்தபோது, “என்ன பெரியப்பா, நீங்கள் அரசியலில் சேரவில்லையா” என்று கெட்டதற்கு “அதெல்லாம் நமக்கு எதுக்குங்க. நாம சும்மா மனுஷன்” என்றார்.

இந்த வாழ்க்கையில் நான் பல சும்மா மனுஷர்களை சந்தித்து இருக்கிறேன். கொஞ்சம் கவனக் குறைவாக இருந்தால் நம் கண்களிலிருந்து தப்பிவிடுவார்கள். நம்புங்கள். அவர்களால் மட்டுமே இந்த உலகம் சுழல்கிறது. அவர்களைத் தெரிந்து கொள்ள:- அவர்கள் பெரும்பாலும் பிரபலமானவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு இலட்சியம், கொள்கை, துவேஷம் கருத்தாக்கம், முதலிய எந்த எழவும் இருக்காது. அவர்களுக்கு ஜாதி, மதம், நிறம், இனம் பற்றி பிணைப்பு இருக்காது. குடும்பத்துக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் உழைத்துக் கொண்டு இருப்பார்கள். ஆசிரியரோ, ஆடு மேய்ப்பவரோ, வியாபாரியோ, பூசாரியோ, ஆணோ, பெண்ணோ வாழ்வோடு இரண்டறக் கலந்து, எங்கும் துருத்திக் கொண்டு நிற்காமல் ‘பார்த்தால் பிறர் போல் இருப்பர்’.

ஒரு நாள், நானும் என் அதிகாரியும் இனி மாலையில் கிளையிலிருந்து நான்கு கி.மீ. ஏன் நடக்கக் கூடாது; உடற்பயிற்சி ஆயிற்று. மனதுக்கும் இதமாக இருக்கும். என்று முடிவு செய்து மோட்டார் சைக்கிள்களை இதர ஊழியர்களிடம் கொடுத்து அவற்றை வைக்க வேண்டிய இடத்தில் வைக்க ஏற்பாடு செய்து விட்டு கிளம்பினோம். ஒரே நாளுடன் அந்த தேகப்பியாசம் முடிந்து விட்டது.

காரணம் 1: வழியில் பார்த்த சுமார் ஒரு டஜன் பேர் “என்ன மேனேஜர் சார். வண்டி ரிப்பேரா? நான் கொண்டு போய் விடட்டுமா என்று அன்புடன் கரிசனத்துடன் கேட்டார்கள். காரணம் 2: நான்கு இடங்களில் வெவ்வேறு விதமான பாம்புகள் சாலையைக் குறுக்காக கடந்து சென்றன. அதில் இரண்டு இடங்களில் கடந்தவை விஷப் பாம்புகள் என்று என் உடன் வந்த அதிகாரி பயத்துடன் சொன்னார்.

மிகச் சிறப்பாக பணியாற்றிய கடை நிலைஊழியர் ஒருவர் இருந்தார். பின்னர் நான் திருச்சி கிளையில் இருக்கையில் சுமார் நான்கு வருடங்கள் கழித்து ஒருநாள் அவர் அங்கு தன் மனைவி மகன்களுடன் வந்தார். ‘கன்யாகுமரி போகிறோம். இங்கு கிளையில் உங்களைப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தோம்’ என்றார். கிளையின் வேலை நேரம் முடிந்து விட்டது. கைகால் கழுவிக் கொண்டு, சிறிது சிற்றுண்டியும், காஃபியும் அருந்தி விட்டு புறப்பட்டார்கள். ‘வருகிறேன்’ என்று எழுந்தவர் மேஜையைச் சுற்றிக் கொண்டு வந்து என்னருகில் நின்றார். எழுந்த என்னை ஆரத்தழுவிக் கொண்டார். மிகத் திடமான இரண்டு கரங்கள் என்னைப் பற்றிக் கொண்டிருந்தன. (முன்னாள் இராணுவ வீரர்) அவர் இதயம் துடிப்பதை என் நெஞ்சு உணர்ந்தது. இரண்டு முறை விம்மினார். இரண்டு நிமிடங்கள் அப்படியே இருந்தவர் விலகி பின்னால் சென்று “வருகிறேன் சார்” என்று புன் முறுவல் செய்துவிட்டுப் புறப்பட்டுப் போனார். அவரது குடும்பத்தினரும் புன்னகையோடு கிளம்பினார்கள். நாம் கைம்மாறு செய்யவே முடியாத, நாம் தகுதியாகவே முடியாத விஷயம் அன்பு. அது நிகழ்கையில் நாம் ஆட்பட மட்டும்தான் முடியும்.

**************

ஒரு படத்தில் இடம் பெற்ற “இந்த நாட்டுல சைலன்ஸ் என்கிற வார்த்தையைக் கூட சத்தம் போட்டுதான் சொல்ல வேண்டியிருக்கிறது”. என்கிற வசனம் பலராலும் புகழப் பட்டது. “சைலன்ஸ்’ என்கிற வார்த்தையை எங்கு சொல்லப் போகிறோம். பெரும்பாலும் கூச்சல், சப்தம் இருக்கும் இடங்களில்தான். அதை சத்தம் போட்டு சொல்லாமல் மெதுவாகச் சொன்னால் யார் காதில் விழும்?

வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்கிறார்கள். சூரன் வீழ்ந்தான், முருகன் வாழ்ந்தான். இராவணன் வீழ்ந்தான், இராமன் வாழ்ந்தான். எனவே ஜென்மப் பகைவர்களில் ஒருவர் வீழ்ந்தால் மற்றவர் வாழ்வார்தான்.

படிப்பது இராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் அப்போது சிவன் கோவிலை இடிக்கலாமா?

************
‘திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது” - கவிஞர் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம். கம்யூனிஸத்திற்கு எதிரான ஒரு கம்யூனிஸ்ட்டின் உண்மைப் பாடல்.

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது. ( 9 )

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது. ( 9 ) பிரசுரம் : வார்த்தை டிசம்பர், 2008.

வ.ஸ்ரீநிவாசன்.

போக்குவரத்து விதிகள் சம்பந்தமான வாசகங்கள் அடங்கிய தட்டிகளைப் பிடித்துக் கொண்டு, சென்ற மாதம் எங்கள் வீட்டருகே இருக்கும் பள்ளியின் குழந்தைகள், வீதியில் நின்றார்கள். அப்பள்ளியில் கிழ் மத்திய தர வர்க்கத்துப் பிள்ளைகள் படிக்கிறார்கள். அவர்கள் பைகளிலும் தண்ணீர் குடுவைகளிலும் அவர்களது பொருளாதார நிலைமை தெரியும். பல பெற்றோர்கள் சிறு குழந்தைகளை கொண்டுவந்து விட்டு பின் பள்ளி முடிந்ததும் கூட்டிச் செல்வார்கள். எப்பொழுதும் பள்ளியிலிருந்து ஆரவாரம் கேட்டுக் கொண்டே இருக்கும். காலையில் 'தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து தலைமை ஆசிரியையின் அறிவுரைகள் கேட்கும். பள்ளி முடிந்ததும் தெருவில் இருக்கும் ஈ மொய்க்கும் தின்பண்ட கூடைகளைச் சுற்றி குழந்தைகளின் கூட்டம் நிற்கும்.

போக்குவரத்து விதிகள் பற்றி ஆரம்பித்தோம். ஒரு தொலைக் காட்சி நேர்காணலில் ஒரு நடிகர், நஸிருத்தீன் ஷா என்று நினைக்கிறேன், கூறினார். "போக்குவரத்து விதிகளை ஒழுங்காக அமல் படுத்தினால் இந்தியாவே மாறிவிடும்". பல வருடங்களுக்கு முன் ஒரு கட்டுரையில் 'சாவரின்" "sovereign" என்கிற சொல்லுக்கு 'மன்னருக்கு விசுவாசமான' என்றும் பொருள் என்று படித்தேன். மன்னராட்சியில்லாத நம் ஜனநாயகத்தில் அது 'அரசியலமைப்பு சட்டத்திற்கு விசுவாசமான' என்றே பொருள் படும் என்றும் அக்கட்டுரையில் குறிப்பிடப் பட்டிருந்தது. சட்டம் சரியாக நடைமுறைப் படுத்தப் படுவதே சாவரின் என்பதன் பொருளாகும். அதை போக்கு வரத்து விதிகளிலிருந்து ஆரம்பிக்கலாம். வீட்டை விட்டு வெளியே வந்தால் நாம் சட்டப்படிதான் நடக்க வேண்டும். மீறினால் தண்டனை நிச்சயம் என்பது வந்துவிட்டால் ஒரு ஒழுங்கு மனதில் வர சாத்தியம் உள்ளது. அரசு 'திறமை'யான 'நேர்மை'யான ஒன்று என்பதை அதன் இலாகாக்களின் நடவடிக்கைகள்தான் நிறுவ வேண்டும். நாமோ நல்லவேளையாக ஜனநாயக நாடாய் இருக்கிறோம். சட்டம் சரியில்லை என்றால் அதை மாற்றவும் நமக்கு வழி உள்ளது.


***************

சென்ற கட்டுரையில் 'இகுரு' மற்றும் 'மர்டர் பை டெத்' திரைப் படங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இகுரு பற்றி ஒரு வாக்கியமும், மர்டர் பை டெத் பற்றி அரைப் பத்தியும்தான் கட்டுரையில் இருந்தன. இப்படங்கள் ஒவ்வொன்றையும் பற்றி ஒரு தனிக் கட்டுரையே எழுதலாம். சில படங்களைப் பற்றி கட்டுரையோ, புத்தகமோ கூட எழுதலாம். (உ-ம்) அமேடியஸ், ஃபிட்லர் ஆன் தி ரூஃப், சிடிஸன் கேன், லிபரேஷன் ஆஃப் எல். பி. ஜோன்ஸ், தே ஷூட் ஹார்ஸஸ் டோண்ட் தே, ஸ்லூத் முதலியன; லூயி புனுவெல், ராபர்ட் ப்ரெஸ்ஸான், டார்க்கவ்ஸ்கி முதலியவர்களின் படங்கள்; இந்த வட்டத்துக்குள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் பெர்க்மன், குரோசாவா, ரே முதலியோரது என்று எவ்வளவோ இருக்கின்றன. எவ்வளவோ பேர் எழுதவும் செய்கிறார்கள். மிகுந்த உழைப்பும், கூர்மையும் உள்ள கட்டுரைகள் வந்துள்ளன. யார் எவ்வளவு எழுதினாலும் நம் உண்மையான பார்வையில் நமக்குப் பட்டதை எழுதினால் அது பழைய விஷயமே என்றலும் புதியதாக இருக்கும். ஒவ்வொரு படத்தில் ஓர் உயிர் நாடி ரசிகனுக்குத் தென்படும். (உ-ம்) தேவதாஸில் (நாகேஸ்வர ராவ்) அவன் குடிப்பதை விடச் சொல்லி மன்றாடும் (சாவித்திரி) பாருவிடம் தேவதாஸ் பேசும் காட்சி. தன் வீட்டிற்கு அவன் அவசியம் வரவேண்டும் என்கிற அவளிடம் தேவதாஸ், 'வருகிறேன் பாரு,.... உயிர் போவதற்குள்' என்கையில் அக்காட்சியும், நடிப்பும், உரையாடலும், பின்னணியும் நம் இதயங்களை பின்னால் வர இருக்கும் மீட்சி இல்லாத சோக சாம்ராஜ்யத்துக்குத் தயார் செய்துவிடும். சிடிஸன் கேனில் ஒருவேளை அவனிடம் மனம் மாறி திரும்பியிருக்கக் கூடிய மனைவியிடம், (ஆர்ஸன் வெல்ஸ்) கேன் 'You can't do this to me' என்றதும் ஒரு vengeance சுடன் 'ஏன் முடியாது இதோ செய்கிறேன்' என்கிற மாதிரி திரும்பி அவள் அவரிடமிருந்து முற்றுமாகப் பிரிந்து செல்வது, வாழ்க்கை நொடியிலும் சிறிய கால அளவில் எப்படி தலைகீழாகி விடுகிறது என்பதைக் காட்டிச் செல்லும். பதேர் பாஞ்சாலியில் இறந்து போன அக்கா ஒரு செல்வந்தர் வீட்டிலிருந்து (யாருமறியாது ஆனால் சந்தேகத்துக்கு இடமாகி) எடுத்து வந்த ராக்கொடி பரணில் அகப்படுகையில் அதை யாரிடமும் சொல்லாமல் குட்டையில் எறிவான் சிறுவன் அப்பு. ரே காட்டும் Human Dignity. இதைத் தவிர இயக்குனர்களின் மேஜிக். புனுவல் 'that obscure object of desire' ரில் ஒரே பெண் பாத்திரத்துக்கு இரண்டு நடிகைகளைப் பயன்படுத்தியிருப்பார். (அறைக்குள் நுழைகையில் ஒரு நடிகையும் வெளியே போகையில் வெறொருவரும் என்கிற அளவில் பல காட்சிகளில் முதலில் ஒருவரும் பிறகு மற்றொருவரும் நடித்திருப்பார்கள்.)

திரைப் படம் இசை, ஓவியம், சிற்பம், இலக்கியம் எல்லாம் சேர்ந்த விசித்திர கலவை. தமிழ் நாட்டில், ஒரு வேளை இந்தியாவில் அது பணக்காரர்களிடமும், லாட்டரி சீட்டு மாதிரி அதிருஷ்டம் அடிப்பவர்களிடமும் மாட்டிக் கொண்டு இருக்கிறது. மூன்று நிமிட சங்கீத கவிதை முயற்சிகளின் அராஜக வியாபாரத்தில் தமிழ் சினிமா பாடல்களில் எப்போதாவது உயர் கலை தென்படுகிறது.

இசை நேரடி அனுபவம். இசை புறப்படும் இடம் மனிதக் குரல் முதலியன. சேரும் செவிகள். அவ்வளவுதான். எளிமையான செயல்பாடு. ஒரே ஒரு படி. (step).

ஓவியம்: காகம், அதைப் பார்த்த ஓவியர் நேரடியாகப் பார்த்தோ, நினைவிலிருந்தோ வரைந்த காகத்தின் பிம்பம், பிம்பத்தைப் பார்த்தவர் நினைவில் அதை ரெஃபர் செய்து காகம் என்று உணர்தல். இரண்டு படிகள். சிற்பமும் இப்படித்தான். பார்ப்பவரின் கற்பனையின் எல்லைகளை ஓவியரும், சிற்பியும் வரையறுத்து விடுகிறார்கள். நவீன ஓவியம் இந்த எல்லைகளை மீறியது.

இலக்கியம் : காகம். அதை பார்த்தவர் அதை வர்ணணை செய்வது. அதை சொல்லில் ஏற்றுவது. சொல்லைப் புரிந்து வர்ணணையைப் புரிந்து நினைவை ரெஃபர் செய்து காகத்தை புரிந்து கொள்வது. முதல் காகத்துக்கும் கடைசி காகத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கலாம். குறைந்தது மூன்று படிகள்.

சினிமா இந்த அத்தனை படிகளும் கொண்டது. ரபர்ட் ப்ரெஸ்ஸான் சொன்ன மாதிரி "சினிமாவில் நிஜமான இசை , ஓசை, ஒலிகள் காதில் விழுகின்றன. பொய்யான பிம்பங்கள் கண்ணில் தெரிகின்றன." ஒரே நேரத்தில் நிஜத்தையும் பொய்யையும் புலன்கள் அனுபவிக்கும். பெர்க்மன் சினிமாவை 'இரட்டைப் பொய்' என்கிறார். 'அதனால்தான் சினிமாவை விட்டேன்' என்கிறார். நாடகத்தில் அரிச்சந்திரனின் பிம்பம் அவ்வேடம் போடும் நடிகன். ஒற்றைப் பொய். சினிமாவில் திரைமேல் தெரியும் அப்பிம்பத்தின் பிம்பம், இரட்டைப் பொய்.


திரைஅரங்குகளின் இருளில் கோடானுகோடிப் பேர் தங்கள் ஆதார நரம்பு மீட்டப் படுவதை உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் அதற்கு இத்தனை மவுசு. எம்ஜியார் அம்மாவை வணங்குகையில் கலங்கிய தாய்மார்கள். (இவர்களுக்குக் குழந்தை இல்லாமல் கூட இருக்கலாம்) அவர் வில்லனை வீழ்த்துகையில் தங்களுக்கு கெடுதல் செய்த, தாங்கள் கனவிலும் வீழ்த்த முடியாதவனை வென்ற உணர்வில் த்ருப்தி கொள்பவர்கள். சிவாஜியோடு அழுபவர்கள், ரஜினி, கமல், விஜயோடு காதல் செய்பவர்கள். எஸ்.வி.ரங்காராவையும், ஜே.பி.சந்திரபாபுவையும், தாய் நாகேஷையும் பார்த்து பரவசமடைபவர்களும் இதனிடையே உண்டு.

****************
இக்கட்டுரை எழுதுகையில் ஆஸ்திரேலிய அணியுடனான கிரிக்கட் பந்தயங்கள் முடிந்து விட்டன. ஆஸ்திரேலியா பெரிய தோல்வியை சந்தித்தது. அதற்கு காரணம் பான்டிங்குடைய தலைமை என்றெல்லாம் சொல்கிறார்கள். விளையாட்டு வீரர்களின் காயமும் (அதாவது கும்ப்ளேயின் காயம்) என்று ஒரு ஜோக் உலா வந்தது.. அதனால்தான் அவருக்கு பதிலாக விளையாடிய அமித் மிஷ்ரா அபாரமாக பந்து போட முடிந்தது, தோனி தலைமை ஏற்க முடிந்தது. வழக்கம் போல் என் மனைவி கண்டு பிடித்த உண்மையான காரணம்: உலகக் கோப்பை போட்டிகளில் டிராவிட் தலைமையில் இந்தியா அடைந்த அவமானகரமான தோல்விக்கு முக்கிய காரணமாயிருந்த அப்போதைய இந்திய அணியின் பயிற்சியாளர் க்ரெக் சேப்பல்தான் இப்போது ஆஸி அணியின் தலைமைப் பயிற்சியாளர்.

கும்ப்ளே மற்றும் கங்கூலி இனி விளையாட மாட்டார்கள். கும்ப்ளேயைப் பற்றி என்ன சொல்வது? இரண்டே வார்த்தைகளில் சொல்வதானால், ஒரு ஆங்கில தினசரியில் சொன்னதைப் போல அவருடைய 'enormous dignity' பற்றி சொல்லலாம். கங்கூலி போன இதழ் வார்த்தை தலையங்கத்தில் திரு சிவகுமார் எழுதியதைப் போல புறக்கணிக்கப் பட முடியாதவர். இதுவரை ஆடிய இந்திய அணித் தலைவர்களில் அதிக வெற்றிகளைக் கொணர்ந்தவர். எனக்கு (டெண்டுல்கருக்குப் பின்) மிகவும் பிடித்த ஆட்டக்காரர். ஓய்வு பெற்ற நாளில் அவருக்கு உகந்த, தகுந்த பிரிவு உபசாரம் பிரமாதமாக நடந்தது. He left on a high note and with grace.

************

நவம்பரின் இலேசான குளிரும், இதமான வருடி விடும் காற்றும், மிதமான உஷ்ணமும் உடலை மகிழ்ச்சிக்குள்ளாக்குகின்றன. நாமும் ஒருவித மரம், செடி, கொடி தான் என்பது மீண்டும் புலனாகிறது. இந்த வானிலையில் மரங்கள் சந்தோஷமாயிருப்பதற்கு முக்கிய காரணம் அவற்றுக்கு எண்ணம் இல்லை என்பதே. மிக ரம்மியமான வேளைகளில் அதி காலையில், அந்திப் பொழுதுகளில் வறண்ட சென்னையில் கூட பறவைகளின் கீதம் கேட்கிறது. இத்தகு தருணங்களில் மனிதன் பாட மறந்து வெகு காலமாகி விட்டது. அவனுக்கு இசையையும் சுகத்தையும் விட இன்பமும், இனமும், மொழியும், நிறமும், மதமும் மிக முக்கியமானவைகளாகி எத்தனை காலமானதோ அத்தனை காலமாகி விட்டது.

சென்னை அபூர்வமாகவே வெயிலின் காய்ச்சல் இல்லாமல் இருக்கும். நவம்பரிலிருந்து பிப்ரவரி முடிய நடுவில் கொட்டும் மழை, தோன்றும் புயற்சின்னங்கள் இவை தொடர்பான இடர்பாடுகளுக்கு இடையில் சில நாட்கள் ஓரளவு ரம்யமாகவேகூட இருக்கும். இங்கிருக்கும் லட்சக் கணக்கான மக்கள் இதைக் கவனிகிறார்களோ இல்லையோ அவர்களது உடல் இதை கவனிக்கும்; அனுபவிக்கும். உடல் பொய் சொல்வதே இல்லை. வலிக்கும் போது வலி இல்லையே என்று அதனால் ஏமாற்ற முடியாது. தவிர உடல் எப்போதும் நிகழ் காலத்திலேயே இருக்கிறது. நேற்று வரை கண் தெரிந்தது இன்று மங்கலாக இருக்கிறது என்றால், நேற்று வரை காய்ச்சல் அடித்தது இன்று சுகமாகி விட்டது என்றால், விபத்தில் போன கை அல்லது கால் ஃபான்டம் வலியில் துடிக்கிறது என்றால் இப்பொது இருப்பதை மட்டும்தான் உடல் சொல்லும். (எழுபது வயது ஆகப் போகிற நண்பர் ஒருவர் செக்ஸையும் ஃபான்டம் உணர்ச்சி என்பார்.) உடலுக்கு உண்மையில் உண்டென்றால் உண்டு இல்லையென்றால் இல்லை. அவ்வளவுதான். ஆனால் உடல் பேசுவதை நாம் பெரும்பாலும் கேட்பதில்லை.

யோகம் என்றால் உடலும் மனமும் ஒன்றாவது என்கிறார்கள். உடம்பு உண்மையிலேயே, நிகழ்காலத்திலேயே இருக்கும் இப்பொதைய வாழ்வை மட்டுமே வாழ்கிறது. யோகம் உடலைப் போன்றே மனமும் ஆவதுதான் போலும். யோகக்காரர் என்பதை அதிருஷ்டசாலி என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். உண்மையுடன் இசைந்த மன, உடல் வாழ்க்கையை வாழ்பவர்கள் யோகக்காரர்கள். இல்லையா?

மனம், வாக்கு, செயல் மூன்றும் ஒன்றாய் இருப்பதைக் குறிக்கும் வார்த்தைதான் 'திரிகரண சுத்தி' என்றார் என் நண்பர். ஜே.க்ருஷ்ணமூர்த்தி 'when you say something, do it' என்று கூறிய கையோடு 'always say what you mean' என்று இதைத்தான் சொல்கிறார்.

'ஒரே நான் (self) தான் எல்லா உயிர்களிலும் (beings) நிலவுகிறது', 'இரண்டென்று எதுவும் இல்லை, எல்லாம் ஒன்றுதான்' என்ற ஸ்லோகங்களைக் கூறியவாறே அடுத்தவரை குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்வது. 'லவ் தை நெய்பர்' என்பதைப் பரப்ப உலகெங்கிலும் யுத்தம் செய்வது; 'சமாதான' மதத்திற்காக அப்பாவி உயிர்களை பலி கொள்வது. இவையெல்லாம் மனம், வாக்கு, காயங்கள் எவ்வளவு பின்னப் பட்டு இருக்கின்றன என்பதற்கு கண்ணெதிரில் இருக்கும் நிதரிசனங்கள்.

எல்லாம் வாக்குச் சுரைக்காய். எண்ணை வாழைக்காய் கறி என்பது எண்ணையே இல்லாமல் செய்யப் படுவதாம். தன் படங்களில்தான் இருப்பதே இல்லையே என்று தலைப்பிலாவது இருக்கட்டும் என்று 'உயிரே' என்று ஒரு படத்திற்கு பெரும் புகழ் பெற்ற இயக்குனர் பெயர் வைக்கவில்லையா?

****************
'பிரம்மத்தை உணர்ந்தவன் பிராமணன் என்கிறார்கள். பிரம்மத்தை உணர்ந்த பிறகு பிராமணனாவது, பிள்ளையாவது' - இளையராஜா.

*****************

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது (8)

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது (8) பிரசுரம் : வார்த்தை நவம்பர், 2008.

வ.ஸ்ரீநிவாசன்


'அடுத்தவருக்கு ஐடியலிசம்' என்பது நம்மில் பலரது மனோபாவம். அரசையும், தலைவர்களையும், அலுவலகங்களையும் குறை கூறும் பலர் தனிப்பட்ட வாழ்க்கையில் சட்டத்தைத் தன்னளவில் சமயம் கிடைத்தால் மீறுவதையோ, தவறு செய்வதையோ தவிர்ப்பவர்கள் அல்லர். வேலை நேரத்தில் சொந்த வேலை செய்பவர்கள், பங்குச் சந்தை, கோவில், சினிமா, இலக்கியம், வம்பு, கொடுக்கல் வாங்கல், காதல், வீட்டுக்குப் பொருள் வாங்குவது, இன்னபிற செய்யும் பலர் உள்ளோம். இதில் 'அன்புள்ள ஆசிரியருக்கு' என்று குறைகளை, விமர்சனங்களை வீசும் பலர், அவர்கள் அலுவலில் முழு கவனத்தையும், நேர்மையையும் காட்டிய, காட்டுகிற மனிதர்கள்தானா? இதனால் அவர்கள் சுட்டும் விஷயங்கள் கவனிக்கப் பட வேண்டியவையல்ல என்று பொருள் அல்ல.

நமது நண்பர்கள், உறவினர்கள், உடன் வசிப்பவர்கள் ஆகிய பிறருக்கு நாம் வைக்கும் அளவுகோல்களில், நமக்கு என்கையில் வேண்டுமென்ற அளவு விலக்கு அளித்துக் கொள்வது பெரும்பான்மை வழக்கம். 'எல்லாப் பழியும் எனக்கே' என்று இருப்பவர்கள் சிறுபான்மையினர். அதுவும் தவறுதான். 'பிறருக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தையும், சலுகையையும் உனக்கும் கொடுத்துக் கொள்' என்கிறார் புத்தர்.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது என்று புலம்புகிறவர்களில் கருப்புச் சந்தையில் பொருள் வாங்காதவர்கள், வேறு வழியில்லாத / இருக்கிற இடங்களில் லஞ்சம் கொடுக்காதவர்கள் எத்தனை பேர்? ஜாதி வெறி / பற்று / அபிமானம் என்று பிறர் செயல்களுக்கு அர்த்தம் கற்பிப்பவர்களில் ஜாதி பார்க்காதவர்கள், அனுசரிக்காதவர்கள் எத்தனை பேர்?

ஒரு காலத்தில் சில அரசு இலாகாக்களில் காலையில் வந்து வருகைப் பதிவேட்டில் கையெழுத்து இட்டு பின் வெளியே போய் சொந்த வேலைகளை முடித்து விட்டு வீட்டுக்குப் போய் விடுவார்களாம். வங்கிகளில் எல்லோருக்கும் அது வாய்த்ததில்லை. 'some are more equal' என்பதை கறாராகக் கடை பிடித்த தொழிற்சங்கத் தலைவர்கள் மட்டுமே அதைச் செய்தார்கள். இப்போது நிலைமை எப்படி என்பதை நீங்கள் நேரடியாக அணுகி அறிந்து கொள்ளுங்கள்.

ஒரு விஷயம். அரசு அலுவலங்கள், அதாவது வெளியே தெரியும் அரசின் முகங்கள், ஏன் இத்தனை விகாரமாக இருக்கின்றன, குறிப்பாக பொது மக்களை நடத்துவதில்? மத்ய அரசு அலுவலகம் ஒன்றில் வைகுண்ட ஏகாதசியில் 'சொர்க்க வாசல் திறப்பு' கூட்டத்திற்கு இணையாக கூட்டம் நெரிகிறதைப் பார்த்திருக்கிறேன். மாநில அரசு அலுவலகங்களில் ஒரு மின் விசிறி வசதி கூட இல்லாமல், வரிசையும் இல்லாமல் மனுக்களோடு வியர்த்து கால் கடுக்க பசியோடு நிற்கும் மனிதர்களில் ஒருவராகவோ, அல்லது அவர்களைப் பார்த்தோ இருந்த அனுபவமும் உண்டு. நடைமுறையில் தலைவர்கள் வேறு, குடிகள் வேறு என்றுதானே இருக்கிறது. 'எல்லோரும் ஓர் நிறை' என்பதும் ஒர் ஆதர்சம்தானே?


***************

'எல்லோரும் ஒன்று' என்பதும் 'நாமெல்லோரும் ஒன்று, அவன் வேறு' என்பதும் முற்றிலும் எதிர் மறையானவை.

எல்லோரும் ஒன்றுதான் என்பது உண்மையா, கற்பனையா?

எல்லோரும் பிறக்கிறோம், நிச்சயம் இறக்கிறோம். ஐம்புலன்கள், மனம் என்னும் ஆறாவது அறிவு, பசி, தூக்கம் அதைத் தவிர பயம், துக்கம், சந்தோஷம், காமம், கோபம் எல்லாம் அனைவரிடமும் உள்ளன.

உலகின் எல்லா பாகங்களிலும் மனிதர்கள் கடவுள் கோட்பாடுகளை உடையவர்களாக இருக்கிறார்கள். திருமணம் என்கிற ஆதி 'சோசலிச' தீர்வால் கிட்டத் தட்ட அனைவருக்கும் பாலுறவு சாத்தியமாகிறது. காசு, தலைவன், தாயரின் கற்பை முன்வைத்த வசவு, யுத்தம், சித்ரவதை போன்ற பிந்தைய விளைவுகள் அனைத்தும் உள்ளன. இன்னும் பிறகு கலை, மொழி, இலக்கியம், சொத்துரிமை, ஆண்டான் அடிமை முதலியன.

ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்ள முடியாத தூரங்களில், உலகின் வேறு வேறு பாகங்களில் வசித்த வேறு வேறு குழுக்கள் எப்படி பரவலாக ஒரே மாதிரி சிந்தித்துள்ளன, செயல் பட்டுள்ளன. அப்போது தினசரிகளோ, வானொலியோ, தொலைக் காட்சியோ கூட கிடையாது.

ஒருவருக்கு ஊசி பொடும்போது நாம் பல்லைக் கடித்துக் கொள்கிறோமே? செக்ஸ் பற்றி சொல்ல வேண்டியதில்லை. அதனால்தான் சினிமாவிலும், டிவிடியிலும் பிற ஊடகங்களிலும் அனைவரும் பார்வையால் பங்கு பெறும் 'பொதுப் பாலுறவு'க்கு (public sex) இத்தனை முக்கியத்துவம் இருக்கிறது.

'எல்லோரும்' என்று கூட அல்ல, 'எல்லாமும் ஒன்று' என்பதால்தான் ஒருவர் 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்' வாடினார். ஒருவர் 'வானில் பறக்கும் புள்ளெலாம் நான்' என்று பாடினார்.

பாரதியைப் பற்றி சொல்கையில் அவனுக்கு ஏன் இவையெல்லாம் நடக்காது. நம்மில் பலருக்கு இருக்குமெந்தப் பாதுகாப்பும் அவனுக்குக் கிடையாது. சிறு வயதிலேயே தாயையும், தந்தையையும் இழந்தவன். அனாதைக்கு தெய்வம் துணையோ என்னவோ அனாதைக்குத் துணை (யாரோ அவரே) தெய்வம் என்பதை உணர்ந்தவன். அவன் இன்னும் பல காலம் வாழ்ந்திருப்பான், தனக்குத் தானே அறம் பாடிக் கொள்ளாமலிருந்தால். "நரை கூடி கிழப் பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இரையாகி" மாயமாட்டேன் என்று ஏன் பாடினான். பாவி. புகழுடம்பை வைத்துக் கொண்டு என்ன செய்வது? இன்னும் ஒரு நாள் அவனது 'சின்னஞ்சிறு கிளியோடு, செல்வக் களஞ்சியத்தோடு' வாழ்வதற்கு அது ஈடாகுமா? அதற்கு அது வகை செய்யுமா? தெய்வம் நமக்குத் துணை என்ற கூற்றின் பின் ஒரு கேள்விக் குறியைப் போட்டுவிட்டு நரை கூடும் முன் அல்பாயுசில் போய் விட்டான். (அறம் பாடுவது என்கையில் ராஜீவ் காந்திக்கு தமிழ் அறிஞர் ஒருவர் பாடிய அறம் தவறாமல் நினைவுக்கு வருகிறது)

ஜெயகாந்தனிடம் தமிழ் இருக்கும் வரை உங்கள் புகழ் இருக்கும் என்றதற்கு "அதனால் எனக்கு என்ன?" என்றாராம். ராஜாஜியை 'சுய சரிதை' எழுதச் சொன்ன போது 'இன்னும் இருபத்தைந்து வருடங்கள் கழித்து யாருக்கும் ஞாபகம் இருக்கப் போவதில்லை பிறகெதற்கு' என்று மறுத்து விட்டாராம்.

****************

வீட்டருகில் இருக்கும் சிறிய பூங்காவிற்கு எப்போதாவது செல்வதுண்டு. போகும்போதெல்லாம் குரோசாவாவின் 'இகுரு' ஞாபகம் வரும். மிகச் சிறிய பூங்கா. மாலை வேளைகளில் அங்கு எத்தனை குழந்தைகள் விளையாடுகின்றன. கசடற நிற்கக் கூட கற்காத ஒரு வயதுக் குழந்தகளிலிருந்து, குழந்தைமைக் குள்ளிருந்து அவசரமாய், ஆர்வமாய், புதிராய் எட்டிப் பார்க்கும் எதிர்காலம் புரிந்தும், பெரும்பாலும் புரியாமலும் இருக்கும் குழந்தைகள் வரை. இவற்றோடு அம்மா மற்றும் சில அப்பா குழந்தைகள் வேறு. பாட்டி, தாத்தா குழந்தைகளும் உண்டு. ஒரு ராட்சஸத் (நண்பர் சுகா வார்த்தைகளில்) தாத்தா சின்னஞ்சிறு குழந்தையை 7 அடி உயரத்தில் இருக்கும் பார் கம்பிகளில் நடக்க வைக்கும். பாட்டி குழந்தை கவலையே படாமல், காத்து நிற்கும் குழந்தைகளையோ தன் உடல் பாரத்தையோ கிஞ்சித்தும் லட்சியம் பண்ணாமல், ஊஞ்சலில் ஆடும். இவை விதி விலக்குகளே.

நான் சுகாவிடம் சொன்னேன். "சரித்திரம் என்ற பாடமே கூடாது. இங்கிருக்கும் எந்தக் குழந்தைக்கும் அது என்ன ஜாதி என்ன மதம் என்பது தெரியாது. அப்படியே பெயரளவில் தெரிந்திருந்தாலும் பகைமையும், துவேஷமும், தாழ்வு மனப்பான்மையும், உயர்வு மனப்பான்மையும் அவர்களிடம் இன்னமும் இல்லை. சரித்திரங்களை, புராணங்களை வெறும் கற்பனை கதை என்ற அளவில் சொல்லினால் போதும். புராணங்கள் கற்பனை என்று சுலபமாக ஒப்புக்கொள்ள வாய்ப்பு உண்டு. சரித்திரம்? சரித்திரம் கற்பனைதானே? சில வருடங்களுக்கு முன்பு எண்பது வயது முதியவர் ஒருவர் நள்ளிரவில் கைது செய்யப் பட்ட போது என்ன நடந்தது. ஒவ்வொரு தொலைகாட்சிக்கு ஒவ்வொரு கதை. அதற்கு சில வருடங்களுக்கு முன்பு ஓரு பெண் சட்ட சபையில் மான பங்கப் படுத்தப் பட்டாரா, இல்லையா? சமீபத்தில் நடந்ததே இப்படி என்றால் இருநூறு, இரண்டாயிரம், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதுதான் நடந்தது என்கிற சரித்திரம் எவ்வளவு சரியாக இருக்கும்? அதனால் பயனும் என்ன? கண்ணெதிரே ஏழைக்கும், சோற்றுக்கும் இடையே முக்காலமும் நின்று, பகாசூரப் பசியோடு கொள்ளையடிப்பவர் யார் என்பதை அறிய சரித்திரம் தேவையா?

எவ்வளவு சரித்திர ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு எவ்வளவு விஷயங்கள் நம்பப் படுகின்றன? மேக்ஸ் முல்லர் முதலியோர் எத்தனை கண்டு பிடித்து நம்மைப் பற்றி நமக்கே நம் முன்னோர்கள் எங்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை குறிப்பிடாதவற்றைச் சொன்னார்கள். மேக்ஸ் முல்லர் பின் அவற்றைத் தவறு என்றும் கூறிவிட்டார் என்கிறார்கள். எவ்வளவு ஆராய்ச்சி செய்து பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்கிறார்கள்.

'இதனாலெல்லாம்தான் நான் 'தாஸ் கேபிடல்' படித்ததில்லை' என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் உண்மையான காரணம் சோம்பெறித் தனம். தாஸ் கேபிடல் என்ன வேதம், உபநிஷத், கீதை, பைபிள்,குரான் எதையுமே படித்ததில்லை. திருக்குறள் படிக்கக் காரணம் அது பாட திட்டத்தில் இருந்தது; மேலும் தமிழில் இருந்தது. அதிலும் ஒரு குறளைப் படித்தபின் மீதியை படிக்காமல் எப்படி இருக்க முடியும்? எனினும் அதையும் முறையாக முழுவதுமாகப் படிக்கவில்லை.


சரித்திர ஆராய்ச்சிகளைப் பற்றி சொன்னேன். என் பங்குக்கு ஒரு ஆராய்ச்சி. இராமர் ஒரு கற்பனை பாத்திரம் என்று வைத்துக் கொண்டாலும் இராமர் நிச்சயம் திராவிடர். இதோ நான் முன் வைக்கும் வாதங்கள்: 1. இராமர் திருமாலின் அவதாரம். திருமாலும் இராமரும் கரிய நிறத்தவர். சிவன் போல் சிவந்த நிறத்தவர் அல்ல. 2. இராவணன் என்கிற பிராமணனை வென்றவர். (பிராமணர் ஆரியர் என்று எனக்கு சில நூற்றாண்டுகளாக சொல்லிக் கொடுக்கப் பட்டுள்ளது.) 3. மிகச் சமீபத்திய சான்று. காந்திஜி இந்தியா முழுமைக்கும் 'இராம இராஜ்யம்' வேண்டுமென்று சொல்லியிருந்தாலும் ஒரு சமயம் இன்ப திராவிடத்தில் மட்டுமே இராம ராஜ்யம் நடந்தது. தமிழகம்: (–ம்.ஜி.) இராமச் சந்திரன்; கர்நாடகம்: இராமக்ருஷ்ண ஹெக்டே; ஆந்திரம்: (–ன்.டி.) இராமராவ்; கேரளம்: (ஆளுனர் ஆட்சி) (பா.) இராமச்சந்திரன்.

இதற்கு மேலும் என் ஆராய்ச்சி செல்லும். திராவிடரிலும் இராமர் எந்த மொழியினர். தெலுங்கர். 'ஒக பாணா, ஒக பத்னி, ஒக மாடா' என்றுதானே சொல்கிறார்கள். மேலும் சந்தேகம் இருப்பவர்கள் என்.டி.இராமராவ் இராமராக நடித்த எந்த படத்தை வேண்டுமானலும் பார்த்துக் கொள்ளுங்கள்.

பொதுப் பாலுறவு பற்றி கொஞ்சம் முன்னால் சொன்னேன். 'சரோஜா' என்கிற திரைப் படத்தில் ஒரு பெண் பல ஆண்கள் நடன காட்சிக்கு எத்தனை விசில், கைதட்டல், வரவேற்பு. அதில் ஆடும் நிகிதாவின் பின்புறம் 'கோடானுகோடி' பேர்களின் மூக்கை உரசுவதற்கு படத்தை எடுத்தவர்கள் எத்தனை பிரயாசைப் பட்டுள்ளனர். சுஜாதாவுக்கு அந்தக் காலத்தில் நவ தமிழ் சினிமாவின் உதயத்தின் முகமாகத் தெரிந்த கமல் 'சிங்கார வேலன்' படத்தில் குஷ்புவின் உடல் மூலமாக அதை நிரூபித்தார். அது போன்ற பத்து முகங்களாவது இன்றைய நவ தமிழ் சினிமாவுக்கு உண்டல்லவா? அதில் இதுவும் ஒன்று. அப்படக் குழுவினர் பங்கேற்ற தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் "உலகிலேயே முதல் 'காமடி த்ரில்லர்' இந்தப் படம்" என்று கூறப்பட்டது. எனக்கு உடனே நினைவுக்கு வந்து, தேடி எடுத்து, நான் பார்த்த படம் 'மர்டர் பை டெத்', நீல் சைமன் எழுதி, ராபர்ட் மூர் டைரக்ட் செய்தது. "Whodunit? You'll die laughing figuring it out!" ('அதை செய்தது யார் என்பதை யோசித்துக் கண்டுபிடிக்க நீங்கள் முயலுகையில் சிரித்தே செத்துப் போவீர்கள்') என்ற வாசகம் டிவிடியின் அட்டையை அலங்கரிக்கும் அப்படத்தில் 'ட்ரூமன் கபோடெ, அலெக் கின்னஸ், பீடர் செல்லர்ஸ், டேவிட் நிவன் முதலிய தலை சிறந்த நடிகர்கள் நடித்துள்ளார்கள்.

இரண்டு கேள்விகள்:

1. மக்களுக்காகவே வாழ்கிறேன், அனவரதமும் உழைக்கிறேனென்கிற மத்திய, மாநில அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற, இதர ஜனநாயக அமைப்பு உறுப்பினர்களுக்கு எதற்கு இவ்வளவு அபரிமிதமான வசதிகள்? அடிப்படை வசதிகள் உள்ள வீடு, வாகனம் போன்றவை போதாதா?

2. கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் இருப்பவர்களுடைய வரவு, செலவு, சொத்துக் கணக்குகளை ஏன் பொது மக்கள் பார்வைக்கு வலையில் இடக் கூடாது?

************

"குருட்டு மத நம்பிக்கைகளையும், நீதிக் கோட்பாடுகளையும் கடந்த நிலைக்கு வழிகாட்டத்தான் எல்லா மதங்களும் ஏற்பட்டிருக்கின்றன." ரமண மகர்ஷி.

***********

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது (7)

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது (7) பிரசுரம் : வார்த்தை அக்டோபர், 2008.

வ.ஸ்ரீநிவாசன்.

நிர்வாகக் காரணங்களுக்காக இந்த மாதம் எழுதுவதைச் சற்று முன்னதாகவே அனுப்பி வைக்குமாறு 'வார்த்தை' ஆசிரியர் குழுவில் கூறினார்கள். சீக்கிரம் அனுப்புவதால் தவறுகள் வராமல் இருக்க வேண்டுமே என்று இருந்தது.

"There is a kind of "perfectionism' which leads some scholars to publish nothing, because they know that nothing can be perfect. I don't respect this." என்று ஆனந்த குமாரஸ்வாமி அவர்கள் எழுதியுள்ளதை நினைத்துக் கொண்டேன். வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, அறிவும், தெளிவும், erudition னும் insight டும் பொங்கிப் ப்ரவஹிக்கும் எழுத்துக்களை அளித்த அவரே சொல்லும்போது, 'எதைப் பற்றியும் ' எழுதும் நான் பெர்ஃபெக்ஷனுக்குக் காத்திருக்க வேண்டுமா? இப்படியெல்லாம் யோசித்து யோசித்து வழக்கமாக அனுப்பும் நாளிலேயே அனுப்பி விட்டேன்.

கூடிய வரை தவறுகள் இல்லாமல் எழுத வேண்டும். நாம் அறிந்ததை, நமக்குப் புரிந்ததை, நாம் உணர்ந்ததை எழுத வேண்டும். நம் வார்த்தையில் எழுத வேண்டும். மேற்கோள்கள் காட்டுவது நாம் சொல்ல வருவதை முன்பே யாராவது மிகச் சரியாக, 'அதைவிட சிறப்பாக சொல்வது சாத்தியமில்லை' என்கிற மாதிரி சொல்லியிருக்கும் போது எடுத்தாளுவதுதான். அல்லது அந்த மேற்கோளில் தாங்க முடியாத கவர்ச்சி இருக்க வேண்டும். அழகு ஒளிர்ந்திட வேண்டும். உண்மைக்கென்றே அதில் நிலவும் அழகு இருக்கிறது. அலங்காரமாக அழகாக, நெகிழ்வாக பேசவேண்டும், எழுத வேண்டும் என்று செய்கையில் அது என்றும் அதிக பட்சம் இரண்டாம் தரமாகத்தான் இருக்கிறது.


மேற்கோள்கள் என்கையில் இவற்றைப் பாருங்கள், எப்படி இருக்கின்றன?.

"Life's but a walking shadow, a poor player
That struts and frets his hour upon the stage
And then is heard no more. It is a tale
Told by an idiot, full of sound and fury,
Signifying nothing" - ஷேக்ஸ்பியர்.

"காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" - கணியன் பூங்குன்றனார்.

எனக்கு இவையெல்லாம் உண்மையும், அழகும் நிரம்பித் ததும்புவனவாக 'பர்ஃபெக்ட்'டாக இருப்பதாகத் தோன்றுகிறது.

எல்லாம் பர்ஃபெக்ட்டாக இருந்தால் நடிகர் டஸ்டின் ஹாஃப்மன்னுக்கு பயம் வந்து விடுமாம்; "இப்படி இருக்கக் கூடாதே, முடியாதே; இப்படி இருந்தால் ஏதாவது கெடுதல், தாங்க முடியாத கஷ்டம் வந்து விடுமே" என்று எண்ணுவாராம்.

காம்யூவின் 'ப்ளேக்'கில் ஒரு பாத்திரம் ஒரே ஒரு பத்தியை (para) நாவல் முழுவதும் மெருகேற்றிக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு முறை எழுதிக் காட்டும் போதும் சிறு மாற்றங்கள், மேலும் சிறப்பாக்கும் முயற்சி.

தாஸ்தயெவ்ஸ்கியின் 'எ ஃபெயின்ட் ஹார்ட்' கதையில் நாயகன் வாழ்வில் எல்லாம் சரியாக இருக்கும். காதலிக்கும் இவனுக்கும் எல்லாம் பொருத்தமாக இருக்கும். கல்யாணத்துக்கு எந்தத் தடையும் இல்லை. இவன் ஆவணங்களைப் பிரதி எடுத்துக் கொடுப்பவன். ஒரு வேலையை இவன் செய்து முடிக்க வேண்டி இருக்கும். நன்பனிடம் வேலை இதோ முடிந்து விடும், அதோ முடிந்துவிடும் என்று பொய் சொல்லிக் கொண்டிருப்பான். முதலாளியைப் பார்ப்பது, காதலியை வாழ்த்துவது என்று எல்லாம் நடக்கும். நண்பனும் ஆதரவாக நம்பிக்கையோடு இருப்பான். திங்கள் கிழமை காலையில் முடித்துத் தரவேண்டிய வேலை. சனி இரவு, ஞாயிறு என்று வேலை செய்வான். இரவில் பாதியில் எழுந்த நண்பன் இவன் பேய் அடித்த மாதிரி எழுதிக் கொண்டிருப்பதைப் பார்ப்பான். அருகில் சென்று எவ்வளவு முடிந்தது என்று பார்க்கையில், வெள்ளைத் தாளில் மசியற்ற பேனா 'எழுதி எழுதி மேற்செல்லும்'. காதல் மணத்தில் முடியாது. அவன் முடிக்க முடியாமல் போன வேலை முக்கியமான வேலை இல்லை, காதலிக்கு அவனிடம் வேறு எதிர்பார்ப்பு இல்லை. ஒரு பிரச்னையும் இல்லை. அவனுக்கு, அவன் சந்தோஷம் தாங்க முடியாத ஒன்றாகி, அவனே அதை சிதைத்து விடுகிறான்.

எனவேதான் 'நான் சந்தோஷமாயிருப்பதற்கு அஞ்ச மாட்டேன்' என்று புரிந்து கொள்ளச் சொல்கிறார் டேல் கார்னகி. மனித குலம்தான் எவ்வளவு சபிக்கப் பட்டது !

முதல் நாளே எளிதாகச் செய்துவிடக் கூடிய வேலையை கடைசி நாள் கடைசி மணியில் கடைசி நிமிடத்தில் அவசரமாகச் செய்யும் மனோபாவத்தை என்ன சொல்வது?

காரம் போர்டில் எதிராளி போட ஒரே ஒரு காயையும் நாம் போட ஒன்பது (எல்லாக்) காய்களையும் வைத்து விளையாட விழைவதை? அதீத சுய நம்பிக்கை? வேண்டுமென்றே மரணக் குழியிறங்கும் மனித மனம்?

நகுலன் இதையெல்லாம் அனாயாசமாகச் சொல்லி விடுகிறார்.

தன்மிதப்பு

யார் தலையையோ சீவுகிற
மாதிரி அவன் பென்சிலை
சீவிக் கொண்டிருந்தான்.
அவனைப் போல் பென்சிலும்
பேசாமல் இருந்தது - அது
கூடத் தவறு, அந்த நிலையில்
அவன் தன் கழுத்தை
இன்னும் இவனுக்குச்
சௌகர்யமாகச் சாய்த்துக்
கொடுத்திருப்பான் - இந்த
நிலைமையையும் தன்னு
டைய வெளித் தெரியாத
ஆற்றலால் சமாளிக்க
முடியுமென்ற தன் மிதப்பில்.

இந்தத் தன்மிதப்பும் சஞ்சலமும் ஏன்? தேவதாஸ் கதையையே எடுத்துக் கொள்ளுங்களேன். அது காதல் கதை என்கிறார்கள். எனக்கு அது சஞ்சலத்தின் கதை. தேவதாஸ் மட்டும் சஞ்சலப் படாமல் 'சரி' என்று முதலிலேயே திடமாக சொல்லியிருந்தால் பார்வதியை மணந்து கொண்டு, காவியமாகாமல், யார் நினைவிலும் தங்காது, கோடானு கோடி புண்யவான்களைப் போல சந்தோஷமாகவோ, கவலைப் பட்டோ, முட்டாளாகவாவது வாழ்ந்திருப்பான். அது சஞ்சலம் பற்றிய கதை என்பது ஒரு பாட்டில் கோடி காட்டப் பட்டிருக்கும். "சஞ்சலப்பேய் வசமானாய்' என்ற வரியின் மூலம். கிடைக்காமல் போனதும் தேவதாஸின் வாழ்க்கையே பார்வதிதான் என்று பின்னால் ஆகி விடுகிறது.


வாழ்க்கையே இதற்காகத்தான் என்று எனக்கு எதுவுமே இல்லை என்கிறார் ஜெயகாந்தன். உண்மைதானே. 'அபேத வாதம்' எழுதி சோசலிசத்தை இங்கு கொண்டு வந்த ராஜாஜி தர்க்கத்தோடும், தத்துவார்த்தமாகவும் அதனை முற்றிலும் எதிர்ப்பவராக மாறிப் போய் தாராள மயமாக்கலுக்கு (ஆனால் ஏழைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளும்) அக்னாலட்ஜ்மெண்ட் இல்லாத மூலகர்த்தா ஆகிறார்.. 'காந்தியம், காங்கிரஸ், கள்ளுண்ணாமை'யை ஆதரித்த பெரியார் இவை அனைத்தையும் முழுக்க முழுக்க எதிர்ப்பவராக ஆகிறார். 'திண்ணையில் படுத்தாவது திராவிட நாடு அடைவோம்' என்ற அண்ணா இந்திய அரசியல் சாசனத்தின்படி தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆகிறார். தீவிர நாத்திகர்கள் மேல் மருவத்தூரிலும், புட்டபர்த்தியிலும் அடைக்கலம் புகுகிறார்கள். கடவுளர் மேல் கீர்த்தனைகளையும், ஸ்லோகங்களையும் கனிந்துருகப் பாடிய கர்நாடக மாமேதை எம்.டி.ராமநாதன் 'ராமனாவது, கிருஷ்ணனாவது, அம்பாளாவது எல்லாம் பொய்" என்று கசந்து போகிறார். வாழ்க்கை எனும் ரோலர் கோஸ்டர் ஒவ்வொருவரையும் எங்கெங்கோ கொண்டு போய் நிறுத்தி விடுகிறது.

சார்த்தரின் 'ஏஜ் ஆஃப் ரீஸன்' முடிந்து டபிள்யூ.ஹெச். ஆடனின் 'ஏஜ் ஆஃப் ஆங்க்ஸைடி' யும் தீர்ந்து 'ஏஜ் ஆஃப் அன்சர்டனிடி'யிலிருந்து 'ஏஜ் ஆஃப் ஆம்பிக்யுடி'க்கு வந்து விட்டோம் என்று தோன்றுகிறது. எங்கே நமது அரசு, தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களின் தொலைபேசி, கைபேசி கட்டணப் பட்டியல், வேறு வேறு வங்கிகளின் வட்டி விகிதம், நம் அரசியல் தலைவர்கள் யார் யார், யார் யாரை எதிர்த்தார்கள், ஆதரித்தார்கள், அதிமுக ஆட்சியில் யார் யார் எதெதற்கு அமைச்சர்களாக இருந்தார்கள், ஆற்காட்டார் ஆட்சியில் தமிழகத்தில் எந்த எந்த ஊர்களில் எந்த எந்த நேரங்களில் மின்சாரம் இருப்பதில்லை, அல்லது (கேள்வியை சுலபமாக்கினால்) இருக்கிறது என்கிற தகவல் பட்டியலை கொஞ்சம் யோசித்த பிறகாவது கூறுங்கள் பார்க்கலாம்.


'செம்பருத்தி' என்ற எப்போதோ பார்த்த மலையாளப் படத்தில் ஐயப்ப பஜனை அதி சிரத்தையாக, தீவிரமாக நடந்துகொண்டிருக்கும் வேளையில் அங்கிருப்பவரின் மகள் ரோஜா ரமணி (?) வன்புணர்ச்சிக்குள்ளாக்கப் படுவார். மரங்கள் நிறைந்த வேலூர் சிஎம்சி ஆஸ்பத்ரியில், பறவைகளின் ஒலி விசும்பை நிறைக்கும் மாலை வேளைகளில் , அவ்வொலிகளோடு மரண ஓலங்கள் கலப்பதை கண்டிருக்கிறேன்.

இத்தகைய சிக்கலான வாழ்க்கையில் எது ஒருவரது சரிதை? பஜனையில் நெக்குருகும் மனமா? வன்புணர்ச்சியின் அதிர்ச்சியில் செத்து அல்லது மீண்டும் மீண்டும் சாகப் போகும் உயிரா? பட்சி ஜாலமா, மரண ஓலமா?

அதனால்தான் ஆனந்த குமாரஸ்வாமி 'பிரமுகர்களின் வாழ்க்கை மற்றும் ஆளுமைகளைப் பற்றிய தகவல்களை வெளியிடும் நவீன வழக்கத்தை அநியாயமான ஆவலுக்கு போடப்படும் ஆபாசத் தீனி' என்கிறார். ராஜாஜி தன் சரிதையை எழுத வந்த பலரிடம் ' நிறைய பொய் சொல்ல வேண்டி வரும். வேண்டாம்' என்கிறார். அவருக்கு சிலை வைக்க அணுகியபோது அவர் அனுமதியோ, போஸோ கொடுக்கவில்லை. ஜவஹர்லால் நேருவும் தனக்கு சிலை வேண்டாம் என்கிற விஷயத்தில் வழ்நாள் முழுதும் பிடிவாதமாக இருந்தார்.

மீண்டும் தாஸ்தயெவ்ஸ்கி வந்து உட்கார்ந்து கொண்டு நம்மைப் பார்த்து ரஷ்யனில் கேட்கிறார். நாம் ஆங்கிலத்தில் கேட்டுக் கொள்வோம்.
'How can a man of perception respect himself?"

**************

ரோஜர் ஃபெடரர் பதிமூன்றாவது டென்னிஸின் மகா போட்டியில் வென்றுள்ளார். இன்னும் ஒரு வெற்றி அவரை பீட் சாம்பிராஸுக்கு இணையாக்கும், இரண்டு வெற்றிகள் உலக சாதனையாளராக ஆக்கும். இன்னும் வெகு சில ஓட்டங்ககளில் சச்சின் லாரவின் உலகசாதனையை மிஞ்சுவார். முரளிதரனை ஆஸ்திரேலியாவில் உலக சாதனை செய்ய விடமாட்டோம் என்று ஆஸ்திரேலியர்கள் செய்தது போலவே இலங்கையில் சச்சினை செய்ய விடமாட்டோமென்ற ஸ்ரீலங்கா அணியினர் அதை நடத்தியும் காட்டினார்கள். தனி தங்கப் பதக்கம்பெற்ற முதல் இந்தியர் என்பது அபிநவ் பிந்த்ராவின் சாதனை.

வேறு சில மகத்தான சாதனைகளைச் சொல்லாவிட்டால் அது அறமாகாது. பத்து வேடமிட்டு தசாவதாரம் எடுத்த கமல், இருபத்திரண்டு வேடமிட்ட ( கர்நாடகாவுக்கும், தமிழ் நாட்டுக்கும் தலா ஒன்றென ப்ளஸ் டூ அவதாரம் எடுத்த) ரஜினி போன்றவர்களைப் பற்றியே ஒட்டியும் வெட்டியும் பேசிக் கொண்டிருக்கும் தமிழர்கள் செய்யும் சாதனை, 'கோலங்கள் என்ற தொலைக் காட்சித் தொடரை மின்வெட்டின் காரணமாகப் பார்க்க முடியாமல் போய் , வெளியாகாத போது பால் கட்டிக் கொள்வது போல் கண்ணீர் கட்டிக் கொண்ட பெண்மணிகள் மற்றும் அவர்கள் கடிதங்கள் கண்டு அவர்கள் 'வாழ்வா சாவா' பிரச்னையைப் புரிந்து கொண்டு அப்பகுதிக் கதையை வெளியிட்டுள்ள பத்ரிகை (அத்தொடரின் தயாரிப்பும் அவர்களே) ஆகியோர் செய்துள்ள சாதனை, குடியரசுத் தலைவர், உப தலைவர், ஆளுனர்களின் சம்பளத்தையும் (முன்னூறு சதவீதம்) ஓய்வூதியத்தையும் உயர்த்திய இந்திய அரசின் சாதனை, கொசுக்களுக்கும், இருளுக்கும், மாசிற்கும், வியர்வைக்கும், அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஊழலுக்கும் மத்தியில் மனிதர் வாழலாம் என்று நிரூபித்து வரும் இந்தியர்களின் உலக சாதனை. அனைவருக்கும் வாழ்த்துகள்.

****************


இரண்டு கேள்விகள்:

1. 'மொராலிடி'யே இல்லாத உலகம் என்று சொல்லப் படும் சினிமா உலகில் இங்கோ, வட நாட்டிலோ, மேல் நாடுகளிலோ ஏன் (எனக்குத் தெரிந்தவரை) ஒரு எய்ட்ஸ் மரணம் கூட இல்லை?

2. ஒரு வேளை டீ செலவுக்கு லட்சங்களிலும், கோடிகளிலும் செலவு செய்யும் அரசியல் கட்சிகளின் வருமானத்திற்கு ஏன் தணிக்கையோ வரி விதிப்போ இல்லை.

இவற்றை எழுதும் போது மொத்த வட இந்தியாவும், கொஞ்சம் தென்னிந்தியாவும் 'பப்புவுக்கு டான்ஸ் ஆட வராது' என்று ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் மச்சானிடம் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

***************

The one who is doing the truth is coming to the light (III chapter of St.John's gospel)

************

எதைப் பற்றியும் (அல்லது) இது மாதிரியும் தெரிகிறது (6)

எதைப் பற்றியும் (அல்லது) இது மாதிரியும் தெரிகிறது (6) பிரசுரம் : வார்த்தை செப்டம்பர், 2008

வ.ஸ்ரீனிவாசன்.
1978 டிலிருந்து சேலத்தில் பணியாற்றிய நான்கு வருடங்களில் மூன்று கிளை மேலாளர்கள், மூன்று உதவி மேலாளர்கள், என் போன்ற சுமார் பத்து அதிகாரிகள், முப்பதுக்கும் மேற்பட்ட குமாஸ்தாக்கள், ஒரு டஜன் கடை நிலை ஊழியர்கள், இன்ன பிறர் மற்றும் நூற்றுக் கணக்கான வாடிக்கையாளர்கள் என்று பற்பல மனிதர்களோடும் நெருங்கியோ, ஓரளவோ பழகும் சந்தர்பம் வாய்த்தது. ஒரு புத்தகத்தில், விற்பனைப் பிரிவில் பணியாற்றிய ஒருவர், ஒவ்வொரு நாளும் 'ஓராயிரம் உண்மைக் கணங்கள்' (one thousand moments of truth) என எழுதியது உண்மைதான் என்று தெரிந்து கொள்ள ஆரம்பித்த வருடங்கள்.

மேனேஜ்மென்ட், தொழிற்சங்கம் இரண்டும் வலுவாக இருந்ததால் தினந்தோறும் சின்னதாகவாவது தகறாறுகள் நடக்கும். அதே காரணத்தினால் வேலையும் ஜரூராக முழுத் திறமையுடன் நடக்கும். பல ஜாதிகள், மொழிகள், சில மதங்களின் கலவையில் ஊழியர்கள் இருந்தபொதிலும் கொஞ்சம் கூட பிரிவினை உணர்வோ வேற்றுமையோ இல்லாத, பத்ரிகைகள், கேரம் போர்ட், கிரிக்கட் போன்ற பொழுது போக்கு அம்சங்களும் இருந்த கிளை. அதிகாரிகளின் வயது முப்பதைத் தாண்டாத, மேலாளர்களே நாற்பது வயதில் இருந்த காலம். இப்போது ஐம்பதுக்கு குறைவான வயதுள்ள மேலாளர்களை அரசு வங்கிக் கிளைகளில் காண்பது அரிது.

ஐந்து மணிக்கு அதிகாரிகளைத் தவிர பிற ஊழியர் பணி நேரம் முடிந்துவிடும். ஐந்தரை மணிக்கு அதிகாரிகளும், ஏற்கனவே வெளியில் சென்ற ஊழியர்களும் அருகில் இருந்த பள்ளி மைதானத்துக்கு கிரிக்கட் உபகரணங்களுடன் சென்று சுமார் ஒரு மணி நேரம் விளையாடிவிட்டு, திரும்பி கிளைக்கு வந்து வேலை செய்வோம். இது கிளை மேலாளருக்குப் பிடிக்கவில்லை. அவர் மிகக் கடுமையான விதத்தில் அதைத் தடுத்தார். மனப் புழுக்கத்துடன் கிரிக்கட்டுக்கு முழுக்குப் போட்டோம்.

ஒரு வருடத்தில் அவர் மாற்றலாகி சந்திரமௌளி என்கிற ஓய்வு பெறும் வயதை நெருங்கிக் கொண்டிருந்த கோவையைச் சேர்ந்தவர் கிளை மேலாளராக வந்தார். ஒரு வாரம் பொறுத்த பின் ஒரு நாள் மாலை பேட்கள், க்ளவ்கள், ஸ்டம்ப்புகள், மட்டைகள், பந்துகள் எல்லாம் வெளியில் வந்தன. கிளைக் கட்டிடத்தின் பின்புற வழியாக சுற்றிக் கொண்டு ஒவ்வொருவராக சுற்றுச் சுவரின் பெரிய கேட்டை அடைந்தோம். கட்டிட முன் வாயிலுக்கும் வெளி கதவுகளுக்கும் சுமார் ஐம்பது அடி இருக்கும். நாங்கள் வெளியே சென்றிருப்போம். கைதட்டி எங்களை அழைப்பது கேட்டது. கட்டிட வாசலில் புது கிளை மேலாளர். 'திரும்பி வாங்க' என்று சைகையில் அவசர அவசரமாகக் காட்டினார். நாங்கள் மனம்நொந்து மெல்ல உள்ளே வந்தோம்.

'என்ன கிரிக்கட்டா?'

'ஆமாம் சார்'

'எங்கே '

'பக்கத்து ஸ்கூல் மைதானத்துலே'

'வேலை முடிஞ்சுடுத்தா?'

'வந்து முடிச்சுடுவோம் சார்'

அடுத்த வாக்கியம் என்னவென்று தெரியுமாதலால் ஓவ்வொருவராக கிளைக்குள் நுழைய ஆரம்பித்தோம்.

'என்னைக் கூப்பிடறதில்லையா" என்று அவர் கேட்டது முதலில் எங்களுக்குப் புரியவில்லை. 'நானும் கிரிக்கட் ஆடுவேன்பா, நானும் வர்ரேன்.' அவர் கோவை மாவட்ட கிரிக்கட் அணியின் தலைவராக இருந்தவர் என்பது பிறகுதான் தெரிய வந்தது.

நாங்கள் மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போனோம். எங்கள் அலுவலக வாழ்க்கையே முற்றிலும் மாறிப் போனது. வேலை முன்பு போலவே மளமளவென்று மட்டுமன்றி கூடுதலாக மகிழ்ச்சியோடும் நடந்தது. எங்களுக்காக தன் கார் நிறுத்த இருந்த போர்ட்டிகோவில் பேட்மின்டன் விளையாட ஏற்பாடுகள் செய்து கொடுத்தார். இரவில் வெகு நேரம் இருந்து வேலை செய்கையில், அவர் வீட்டிலிருந்து (மாடிதான்) அனைவருக்கும் பலகாரம் வரும். 'நம்ப குழந்தைகள்தானே நீங்க' என்பார். அனைவரும் மிகுந்த உரிமையோடு, அச்சமின்றி, அவரை ஒரு துரும்பைக் கூட நகர்த்த விடாமல் எல்லா வேலைகளையும் செய்து விடுவோம்.

முதலில் இருந்த கிளை மேலாளர் காலத்தில் ஒரு சம்பவம் நடந்தது. எம்.ஆர்.கிருஷ்ணன் என்று ஒரு இளைஞன் வேலைக்கு சேர்ந்தான். துடிப்பான, சுறுசுறுப்பானவன். மலையாளம் பேசும் நான்கைந்து இளைஞர்களாக ஒரு அறையில் தங்கி இருந்தார்கள்.அவனுக்கு ஒரு காதலி இருந்தாள் என்று அவன் நண்பர்கள் சொல்லக் கேள்வி. அதே சமயம் ஒரு உதவி மேலாளர் (கிளை மேலாளருக்கு அடுத்த ஸ்தானம்.) பீஹாரிலிருந்து நான்கு வருடங்களுக்குப் பின் தமிழ் நாட்டுக்குத் திரும்பி வந்தார். அவர் தாய் மொழி கன்னடம். கோவையில் அவர் காதலித்து கலப்புமணம் புரிந்து கொண்ட மனைவியும், குழந்தைகளும் இருந்தனர். கோவைக்குத்தான் அவர் மாற்றல் கேட்டிருந்தார். அவர்கள் சேலத்துக்கு அனுப்பி விட்டார்கள். அதிகாரியாகி மேலாளரான பின்பும் அவர் ஊழியர் தொழிற்சங்கத்திலேயே இருந்தார். அவருக்கு சொந்த ஊருக்கு மாற்றல் கிடைக்காததற்கு இதுவும் ஒரு காரணம். சில சமயம் கிளையின் கடை நிலை ஊழியர் 'இங்குலாப்' என்கையில் இவரும் கூட்டத்தில் கையை உயர்த்திக் கொண்டு 'ஜிந்தாபாத்' சொல்லுவது வாடிக்கையாளர்களுக்கு வேடிக்கையாக இருந்தது.

சேலத்தில் தங்கி சனிக்கிழமை (அரை நாள்) மதியம் இரண்டு மணிக்கு கிளை முடிந்ததும் கிளம்பி கோவைக்கு சென்றுவிட்டு திங்கள் காலை அங்கிருந்து கிளம்பி சேலம் வருவார். சனிக் கிழமை காலையிலிருந்தே, பாக்கி நாட்களில் அன்பின் திரு உருவாக, அமைதியின் மறு உருவாக இருப்பவர், கொடூரனாகி விடுவார். (மாலையிலிருந்து காமக் கொடூரனாவதற்கோ என்னவோ) எல்லோரையும் விரட்டி வேலையை முடிக்கச் சொல்வார். கிளையின் சாவி, இரும்புப் பெட்டகங்களின் சாவிகள் எல்லாம் அவரிடம் இருப்பதால் வேலைகளை ஓரளவாவது முடித்து விட்டு, எங்கள் யாரிடமாவது சாவிகளை கொடுத்துவிட்டு ஒன்று ஒன்றரைக்குக் கிளம்பிவிடுவார். அப்போதுதான் ரஜினிகாந்தின் 'தர்ம யுத்தம்' வந்திருந்தது. அதில் பௌர்ணமி ஆனால் ரஜினிக்கு வெறி வந்து விடும். சங்கிலியில் பிணைத்துக் கட்டிப் போட்டுவிடுவார்கள். சனிகிழமையானால் நாங்கள் உதவி மேலாளரை 'தர்ம யுத்தம் ரஜினிகாந்த்' என்று அழைப்போம்.

அவர் வேலையிலும் சுமாராகத்தான் ஈடுபடுவார். சில வேலைகளை, குறிப்பாக அந்நியச் செலாவணி சம்பந்தப் பட்ட வேலைகளைத் தவிர்ப்பார். ஒரு முறை, ஏற்றுமதி சம்பந்தமாக சென்னைக்கு ஒரு தொலைபேசி தொடர்பு கொள்ளவேண்டி இருந்தது. இவருக்கு இருந்த தயக்கத்தில் இவர் எம்.ஆர். கிருஷ்ணனை அழைத்து 'இதைக் கொஞ்சம் பார்' என்றார். ஊழியர்கள் அத்தகு வேலைகளைச் செய்யக் கூடாது. அவர் சொல்லியதால் அவனும் ஆர்வமாக அதைச் செய்தான்.

சில வாரங்களில் எம்.ஆர். கிருஷ்ணனுக்கு வேறொரு தேசியமயமாக்கப் பட்ட வங்கியில் பம்பாயில் அதிகாரி வேலை கிடைத்தது. அவன் புறப்பட வேண்டும். அப்போது முன்பு அவன் செய்த அந்நிய செலாவணி விஷயத்தில் ஒரு தவறு நடந்து வாடிக்கையாளருக்கு ஒரு பெரிய தொகை நஷ்டம் ஆகிவிட்டது தெரிய வந்தது. அவர் கிளை மெலாளரிடம் முறையிட்டார். முக்கியமான ஏற்றுமதியாளர் அவர். கிளை மேலாளர் எம்.ஆர். கிருஷ்ணனை வேலையிலிருந்து விடுவிக்க முடியாது என்று சொல்லி விட்டார். தன் மிக நல்ல எதிர்காலத்துக்கு அவர் தடை விதிப்பது பெரிய கஷ்டத்தை அவனுக்கும், அதற்குக் காரணமாயிருந்த உதவி மேலாளர் மேல் கோபம் கலந்த வெறுப்பை பலருக்கும் ஏற்படுத்தியது. கிளை மேலாளர் எல்லார் வெறுப்பையும் பல விதங்களில் ஏற்கனவே பெற்றிருந்தமையால் இது தனியாக ஒன்றையும் செய்யவில்லை. நாள் நெருங்கிற்று. இன்னும் இரண்டு நாட்களில் புறப்படவில்லையென்றால் அந்த நல்ல வெலையை கிருஷ்ணன் இழக்க வேண்டியிருக்கும். மன உளைச்சல். வாடிக்கையாளரின் நஷ்டத்துக்கு பணம் கட்டி ஈடு செய்ய வேண்டிய தண்டனையும் தூரத்தில் காத்திருந்தது.

நாளை இரவுக்கு அவன் பயணம் செய்ய டிக்கட் வாங்கி இருந்தானென்றால் இன்று காலை கிளை திறந்ததும், உதவி மேலாளர் கிளை மேலாளரின் அறைக்குச் சென்றார். மெல்ல பேச ஆரம்பித்தவர்கள் இரைய ஆரம்பித்தார்கள். மென்மையானவரான உதவி மேலாளர் கத்தி ஏதோ சொல்லிவிட்டு கண்ணாடி அறைக்குள் இருந்து வெளியே வந்தார். க்ருஷ்ணனைக் கூப்பிட்டு "நீ கிளம்பலாம். உன் மேல் ஒரு 'சார்ஜ்'ஜும் இல்லை." என்று கிளையின் மத்தியில் இருந்து ஒரு அறிவிப்பு மாதிரி சொன்னார். எல்லோரும் அவரைச் சூழ்ந்து கொண்டோம். "நடந்த எல்லாவற்றுக்கும் நான் பொறுப்பு. வாடிக்கையாளர் பண நஷ்ட ஈடு கெட்டால் நான் தருகிறேன். கிருஷ்ணனை ரிலீவ் செய்து, புதிய வேலைக்குச் செல்ல அனுமதியுங்கள் என்று சொல்லிவிட்டேன்." என்றார். அதை எழுதி கொடுக்கவும் தயார் என்று சொன்ன அக்கணமே அவர் ஒரு 'ஹீரோ'வாகி விட்டார். கிருஷ்ணனும் கிளம்பிச் சென்றான். அந்த வாடிக்கையாளரும் பின் தனக்குக் கிடைத்த பெரும் லாபங்களின் காரணமாகவோ என்னவோ இந்த நஷ்டத்தைப் பொருட்படுத்தவில்லை. கதைகளில் வருவது போல் எல்லாம் சுபமாக முடிந்தது.

இருபது வருடங்கள் கழித்து விருப்ப ஓய்வுக்குப் பின் நான் கோவையில் இருக்க நேர்ந்தது. கோவையைச் சேர்ந்த, சேலத்தில் என்னுடன் பணியாற்றிய, என் வங்கி நண்பனுடன் பல வருடங்களுக்கு முன்பே ஓய்வு பெற்று ஒரு வழியாக தன் குடும்பத்துடன் செட்டில் ஆன உதவி மேலாளரைப் பார்க்கச் சென்றேன். பேரக் குழந்தையோடு மகிழ்ச்சியாக இருந்தார். அவர் மனைவியார் உபசரிப்பும், இருபது வருடங்களுக்குப் பின்னான சந்திப்பும் மிகுந்த மன நிறைவைத் தந்தன. பற்பல விஷயங்களைப் பற்றி பெசிவிட்டுத் திரும்பினோம். கிருஷ்ணனைப் பற்றியும், கிளை மேலாளர் பற்றியும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

பம்பாய் சென்ற கிருஷ்ணன் ஆறே மாதத்தில் மின்சார வண்டியில் செல்கையில் கம்பத்தில் அடிபட்டு இறந்து விட்டான். உத்யோக உயர்வில் தன் சொந்த ஊரான கேரளவுக்குச் சென்ற கிளை மேலாளர் மாரடைப்பில் இறந்து விட்டார்.


****************

விளையாட்டும் மரணமும் ஒன்றாய் நினைவுக்கு வந்து விட்டன. மரணமே இறைவனின் திருவிளையாடல் அல்லது விதியின் விளையாட்டு என்றும் லீலை என்றும் சொல்கிறவர்கள் உண்டு. இதனால்தானோ என்னவோ ஹிந்து பத்ரிகையில் விளையாட்டுச் செய்திகளுக்கான பக்கத்தில்தான் மரண அறிவிப்புகளையும் போடுகிறார்கள்.

ஹிந்து என்றதும் 'வார்த்தை' முதல் இதழில் நான் அதன் ஏகபோகம் டைம்ஸ் ஆஃப் இந்தியா வருகையால் என்ன ஆகும் என்று எழுதியிருந்தது ஞாபகம் வருகிறது.. நான் எழுதியதைப் பார்த்து ஹிந்துவின் விலையை ஒரு ரூபாய் குறைத்து விட்டார்கள். ஆனாலும் என்னை ஒருவர் கூட பாராட்டவில்லை. நானும் அக்கட்டுரையில் குறிப்பிட்டதைப் போன்றே இரண்டு பத்ரிகைகளையும் வாங்குகிறேன். பேப்பர் போடுபவர் 'அண்ணாச்சி, இந்தியன் எக்ஸ்ப்ரஸ் டைம்ஸை விட சல்லிசாக வருகிறது அதையும் போடவா' என்று கேட்டார். இப்போதே வீடு பத்ரிகைகளால் நிறைந்து இருக்கிறது என்பதால் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

'டைம்ஸ்' தினத்தந்தி, தினமலர் போடுகின்ற அத்தனை சினிமா செய்திகளையும் போடுகின்றது. என் நண்பன் ஒருவன் அதற்காகவே அதைப் புகழ்கிறான். குமுதம், ஆனந்த விகடன் போல் அரை, முக்கால் நிர்வாணப் பெண்களின் படங்களைப் போடுகிறது. எப்படியும் தூக்கலாக ஒரு செக்ஸ் செய்தி சர்வே, உடல் நலம், பீச் வாலிபால் மங்கைகளின் ஃபோட்டோக்கள் என்கிற பிரமேயங்களில் வந்துவிடுகிறது. பெரிய கறுப்புக் கண்ணாடி அணிந்த நடிகைகளின் புகைப் படத்திற்கு 'சைஸ் டஸ் மேட்டர்' என்கிற தலைப்பு ஆரம்ப இதழ் ஒன்றிலேயே வந்ததும் பத்ரிகை எதை நம்பி வியாபாரம் செய்யப் போகிறது என்பது தெரிந்து விட்டது. இந்த நான்கு மாத அனுபவத்தில், இப்போதைக்கு, எவ்வளவோ குறைகள் இருந்தாலும் கண்ணியத் தன்மை ஒன்றுக்காகவே சிகப்புச் சட்டையுடனும் அழிந்த ஸ்ரீ சூர்ணத்தின் தடத்துடனும் காட்சி அளிக்கும் ஹிந்துவுக்கே என் ஓட்டு.

***********

'வாழ்க்கையின் நோக்கம் என்ன?' என்று கேட்டதற்கு ஜே.கிருஷ்ணமூர்த்தி ஒருமுறை 'கையிலிருக்கும் வேலை' என்று பதிலுரைத்தார்.

'கையில் உள்ளது மிகச் சிறிய வேலையாக இருந்தாலும் அதைச் செய். இல்லாவிட்டால் மனம் வேறு பல திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கும். வாழ்க்கை முழுவதுமே அவ்வாறு வீணாகிவிடும்.' - சுவாமி கல்யாணானந்தர் (சுவாமி விவேகாநந்தரின் சீடர்) கங்கல், இராமகிருஷ்ண சேவாஸ்ரமம்.

**************

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது. (5)

எதைப் பற்றியும் (அ) இது மாதிரியும் தெரிகிறது. (5) பிரசுரம் : வார்த்தை ஆகஸ்ட், 2008.
வ.ஸ்ரீநிவாசன்.

சில நாட்களுக்கு முன் 'தாரே ஜமீன் பர்' படம் பார்த்தேன். ஆமீர் கான் இயக்கி நடித்துள்ள படம். என்னைப் பொருத்தவரையில் இது ஒரு 'ஃபீல் குட்' படம். அந்தக் கால ரீடர்ஸ் டைஜெஸ்ட் மாதிரி. 'லகானோ'டு சிறந்த வெளி நாட்டு பட பரிசுக்கு ஆஸ்காரில் போட்டியிட்டு 'நோ மேன்ஸ் லேண்டி'டம் பரிசை இழந்த 'அமேலி' மாதிரி.

'தாரே' யில் குறைகள் உண்டு. அதன் நோக்கம் பரிசாகக்கூட இருக்கலாம். ஆனல் நம் வாழ்க்கை முறை பற்றி சில அடிப்படை கேள்விகளை ஆமீர் கேட்கிறார். பொது கவனத்தை சில முக்கிய விஷயங்களை நோக்கி திருப்புகிறார். தானே தயாரித்து தானே இயக்கி உள்ள இப்படத்தில் இந்த ஹிந்தி சூப்பர் ஸ்டார் இடைவேளைக்கு நொடிகள் முன்புதான் தலைகாட்டுகிறார். ஹே ராம் !

இந்திப் படவுலகில் ஆரம்பத்திலிருந்தே நல்ல முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பழைய காலத்திய கே.ஏ. அப்பாஸ், குரு தத், (நான் இவர்கள் படம் பார்த்ததில்லை) பிமல் ராய் (மது மதி ஒரு காவியம்) பிறகு ரிஷிகேஷ் முகர்ஜி, பாசு சாட்டர்ஜி போன்றவர்களின் ஃபீல் குட் படங்கள், பாசு பட்டாச்சார்யா, அப்போது வந்த புது வெள்ளத்தில் ஷ்யாம் பெனெகல், மணி கவுல், கிரீஷ் கார்நாட், அமோல் பாலேகர், கொவிந்த் நிஹல்னி, கேதன் மேத்தா, விஜய மேத்தா, சாய் பரஞ்ச்பயி முதலியோர், எக்ஸிஸ்டென்ஷியல் '27 டௌன்', பின் நவீனத்துவ 'ஜானே பீ தோயாரோ', தஸ்தாயெவெஸ்கியன் 'பெஸ்டோன்ஜி' என்று எவ்வளவு முயற்சிகள், சாதனைகள். நஸ்ருத்தின் ஷா, ஓம் புரி, ஷப்னா ஆஸ்மி முதலிய மகத்தான நடிகர்கள்.

இதில் விசேஷம் என்னவென்றால் எனக்கு இந்தி மிக சுமாராகத்தான் புரியும். என் பள்ளிக் காலங்களில் இந்தி எதிர்ப்பு உச்சத்தில் இருந்தது. பல நாட்கள் விடுமுறை கிடைத்தது. ஊர்வலங்களும், கோஷங்களும் போலிஸ் லாரிகளுமாய் நாட்கள் கழிந்தன. மாணவர்கள் லாரிகளில் ஏற்றப்பட்டு ஊருக்கு வெளியே கொண்டு விடப் பட்டார்கள். என் நண்பன் குலசேகரன் போலிஸிடம் மாட்டிக் கொண்டன். நாங்கள் எல்லாம் அந்தப் பக்கமே போக வில்லை. அரை மணி கழித்து எங்கள் முன் வந்து நின்றான். 'எப்படிடா?" என்று கேட்டால், 'நழுவி ஓடி விட்டேன். பிறகு தலை வகிடை மாற்றி எடுத்துக் கொண்டு, சர்ட்டை திருப்பி போட்டுக் கொண்டு அதே போலிஸிடம் போய் குட் மார்னிங் வைத்தேன்' என்ற கதையைச் சொன்னான். எங்களுக்கு அவனிடத்தில் எந்த மாறுதலும் தெரியவில்லை. மராத்தியை தாய் மொழியாகக் கொண்ட என் ஆருயிர் நண்பன் ஆனந்த ராவ் "இந்தி எனும் மந்தியை செந்தீ கொண்டு விரட்டுவோம்" என்று பல இடங்களில் பேசி கைதட்டல் பெற்றான். நாங்கள் இந்திப் பரீட்சையில் வெத்துப் பேப்பரைக் கொடுத்து எங்கள் எதிர்ப்பையும், வீரத்தையும் நிலை நாட்டினோம். பிறகு 20 வருடம் கழித்து கொல்கொத்தாவில் மூன்று வருடங்கள் பணி புரிந்த போது ஆந்திரா, கர்நாடாகா, கேரளாவிலிருந்து வந்த சக ஊழியர்கள் சுலபமாக இந்தியில் புழங்குகையில் நான் திண்டாடும் போதெல்லாம் குலசேகரனை நினைத்துக் கொள்வேன். என்னதான் வகிடை மாற்றி, சர்ட்டை திருப்பிப் போட்டாலும் இந்தி மட்டும் வரவில்லை. என் நண்பன் ஆனந்த ராவ் அஹமதாபதிலும், இன்னொரு நண்பன் டெல்லியில் ஒரு பொருளை 'பச்சீஸ்' ரூபாய்க்கு தருகிறேன் என்ற கடைக்காரனிடம் 'ரொம்ப அதிகம், பச்சாஸ் ரூபாய்க்குத் தந்தால் தான் வாங்குவேன்' என்று அடம் பிடித்துக் கொண்டும் இருந்தனர்.

பள்ளி முடிந்து கல்லூரி வந்ததும் அங்கு விடுதி மாணவர்களுக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே பெரிய மோதல் வந்தது. மாநிலக் கல்லூரி விடுதிக்கும், பக்கத்தில் இருக்கும் குப்பத்துக்கும் இடையே சண்டைகள் வந்தன. மாணவர் கலவரம் நீடித்தது. பல நாட்கள் கல்லூரி மூடியே கிடந்தது.

கிட்டத் தட்ட அந்த சமயத்தில் சக்தி சாமந்தாவின் படம் 'ஆராதனா' வெளியிடப் பட்டது. ராஜேஷ் கன்னாவும், ஷர்மிளா டாகூரும், கிஷோர் குமார், எஸ்.டி. பர்மன் என்ற மாமேதைகளும் தமிழர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டார்கள். பின்பு சில வருடங்களில் ஷர்மிளாவைப் போலவே லட்சுமியும், ராஜேஷ் கன்னாவைப் போலவே கீழ்ப் பார்வை பார்த்து கமலஹாஸனும் நடிக்க ஆரம்பித்தனர்.

இந்தி பேசும் கதாநாயகிகளுக்கு எப்போதும் இங்கு ஆதரவு அதிகம். குறிப்பிட்ட நாயகிகள் வேண்டும் என்று தவம் கிடக்கும் கதாநாயக காந்தங்களைப் பற்றி நமக்குத் தெரியும். நூறு பூக்களின் பெயர்களை சடசடவென்று சொல்லி தன் தமிழ் பற்றை எங்கும் பறை சாற்றிக் கொள்ளும், இவ்வருடம் ஃபிலிம் ஃபேரின் வாழ் நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுள்ள, சிவகுமார் கூட இந்தி பேசும் நாயகிக்கு தன் குடும்பத்தில் இடம் தர வேண்டியதாய்ப் போயிற்று. நாம் இந்தி திணிப்பைத்தானே எதிர்த்தோம் !

***********

புதுமைப் பித்தன் ஓரிடத்தில் 'எல்லாம் ஒரு சூத்திரப் படி நடக்கிறது என்பவர்கள் ஆத்திகர்கள் என்றும் அப்படி இல்லை என்பவர்கள் நாத்திகர்கள்' என்றும் சொல்லியிருப்பார். புதுமைப் பித்தனின் பல வாசகங்களைப் போன்றே இக்கூற்றும் ஒரு புதிய வெளிச்சத்தைத் தந்தது. எனினும் வேறொரு கோணத்தில் அல்லது அணுக்கத்தில் தெரிவது: நாத்திகர்கள்தானே எல்லாம் ஒருசூத்திரப்படி, ஒரு காரண காரியப்படி, தர்க்கப்படி, அறிவுக்கு திருப்தி தருவதாக வேண்டும் என்கிறார்கள். அப்படி விளக்க முடியாதவற்றை மூட நம்பிக்கை என்கிறார்கள். ஆத்திகர்கள் கடவுள் சித்தம் என்ற காரண, தர்க்க, சூத்திரங்களை மீறிய நம்பிக்கையின் பாற்பட்டு எல்லாவற்றையும் விளக்கிக் கொள்கிறார்கள், விளக்குகிறார்கள்.

தனது மணி விழாவில் (சுமார் 20, 30 பேர் இருந்த) மைலப்பூர் மாடி ஒன்றில் க.நா.சு. "மறுபடி இந்த அறுபது வருடங்கள் வாழக் கிடைத்தால் அதை அப்படியே இப்போது வாழ்ந்த மாதிரியே வாழ்வேன்." என்று கூறியது (அது போன்ற அர்த்தம் கொண்ட பிரயோகத்தை நான் முதன் முதலாகக் கேட்டேன்) மிகவும் ப்ரொஃபௌண்ட்டாகவும், பிரமிப்பாகவும் இருந்தது. ஆனால் உடனே தோன்றியது, மீண்டும் இப்பொதும் பல்லாண்டுக்குப் பிறகும் தோன்றுகிறது : "எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தால் வேறு மாதிரிதான், வேறு, வேறு மாதிரிதான் வழ்வேன். அதே வாழ்க்கையை அப்படியே வாழ்வதா. எப்பேற்பட்ட தண்டனை? நினைவு இருந்தாலும் இல்லாமல் இருந்தாலும். விட்ட வாய்ப்புகளை விடாது, பெற்ற வாய்ப்புகளைப் பெறாது, சொல்ல மறந்த வார்த்தைகளைச் சொல்லி, தவறிச் சொன்ன வார்த்தைகளைத் தவிர்த்து... அப்பா எவ்வளவு செய்யலாம்..சஸ்பென்ஸ்ஃபுல்லாக.

சம்பத்தின் ஒரு கதையில் (சாமியார் ஜூக்குப் போகிறார்) ஒரு பெண் ஆண்களை 'முப்பத்தைந்து வயதிலும் மாஸ்டர்பேடிங் பாஸ்டர்ட்ஸ்' என்று ஏசுவாள். ஆனால் அறுபது தாண்டிய மனைவியை இழந்த, மனைவியோடு இருக்கிற பலர் அந்தக் கூற்றின் எரிச்சலும், ஏச்சும், இளக்காரமும், இன்விடேஷனும் அர்த்தமற்றவை என்பதை இடுங்கிய கண்களோடும், புதைந்த வெற்று ரகஸ்யங்களோடும், சிலர் சுரத்தின்றியும் சொல்லுவர்.

இப்படி பல விஷயங்கள் ஒவ்வொரு சமயம் முற்றிலும் எதிரிடையாகப் போய் விடுகின்றன. முதன்முறை படித்த மாத்திரத்திலேயே கண்களில் நீர் மல்கச் செய்த பீஷ்மனும், அவனது பிரம்மச்சரியமும் நீர்த்து அர்த்தமற்று போயின; ராமனின் பிடிவாத சத்யங்களைப் போல்.

"Truth in Art is that whose contrary is also true" - என்கிறார் ஆஸ்கார் ஒயில்ட். இதைத்தான் "Comic Truth" என்கிறார் போர்ஹே. எனக்குத் தோன்றுவது "கண்ணாடியின் பிம்பம்".

**********

இந்த வாழ்க்கையை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாத மனிதன் என்னென்னவோ செய்கிறான். எழுதுவதும் அதில் ஒன்று. என்ன செய்வது என்று தெரியாமல் எதையெதையோ செய்வதைப் பற்றி எழுதுவது நல்லிலக்கியமாகவும் 'தெரியும்' என்று எழுதுவது அவ்வளவாக நல்லிலக்கியம் இல்லாததாகவும் ஆகின்றன.

எத்தனை நூல்கள். எல்லா நூலுக்கும் ஒரு வாசகனாவது இருந்து விடுகிறான். ஒவ்வொரு வாசகனுக்கும் ஒரு நூலாவது இருந்து விடுகிறது. ஆனால் நூல்களை வாசிப்பதிலும், வாங்கிச் சேர்ப்பதிலும், புரட்டிப் பார்ப்பதிலும், நுகர்ந்து மகிழ்வதிலும், துசி தட்டி வைப்பதிலும், அட்டை பொடுவதிலும், அட்டையை அவிழ்ப்பதிலும், நூல் நிலையங்களிலும், புத்தகக் கடைகளிலும் மணிக் கணக்காக நின்று புத்தகங்களுக்கு இடையில் காலம் கழிப்பதிலும், அவை பற்றி பேசுவதிலும் சுகம் காணும், இந்தப் புத்தகப் 'பித்த'ர்கள் 'லீவ் அஸ் விதௌட் புக்ஸ், வீ வில் கோ மேட்' என்ற தஸ்த்யெவெஸ்கியின் கூற்றை அப்படியே ஆமோதிப்பார்கள்.

புத்தகம் எழுதுவது, நாவல், சிறுகதை பற்றியெல்லாம் சீரியஸ்ஸாக பாடம் மாதிரி எழுதுவது படிக்க சுவாரஸ்யமாக இருப்பதில்லை. இது எனக்கு பிறவியிலிருந்தே வருகிற பாடம் பற்றிய ஒவ்வாமை. ஆனால் ஒரு கட்டுரையோ நூலோ கூட தெரிவிக்க முடியாதவற்றை சில மாகலைஞர்கள் ஒரு வாக்கியத்தில் சொல்லி விடுகிறார்கள்.

நாவல் பற்றி காஃப்கா சொன்னது என்றென்றும் மறக்க முடியாதது. 'Novel is an ice axe to break the ocean frozen inside us'.

புத்தகப் பித்தர்கள் போல், இசைப் பித்தர்கள், நடனப் பித்தர்கள், ஓவியப் பித்தர்கள், நாடகப் பித்தர்கள், சினிமா பித்தர்கள் இருக்கிறார்கள். இந்தப் பித்து ஏன் பிடிக்கிறது? மைக்கேலாஞ்சலோ சொன்னது போல ஒரு கலை வெளிப்பாட்டின் முன் மனிதன் தன் ஏகாந்தத்தை மீட்டெடுத்து, பிரபஞ்சத்தின் நிசப்தத்தை செவி மடுப்பதால். (Man regains his solitude and listens to the silence of the universe).

*******

ஒரு உரையாடலில் தி.மு.க. வளர்ந்து ஆட்சியைப் பிடித்ததற்கு முக்கிய காரணம் அண்ணாவா, எம்ஜியாரா, கலைஞரா என்ற கேள்வி எழுந்தது. எனக்குத் தோன்றிய பதில்: தாமஸ் ஆல்வா எடிசன். (கெயாஸ் தியரி?)

*********

எதைப் பற்றியும் (அல்லது) இது மாதிரியும் தெரிகிறது - 4.

எதைப் பற்றியும் (அல்லது) இது மாதிரியும் தெரிகிறது - 4. பிரசுரம் : வார்த்தை ஜூலை, 2008.

வ.ஸ்ரீநிவாசன்.

1996ல் நான் ஆரணியில் பணி புரிந்து கொண்டிருக்கும்போது அவ்வூரில் 'கேன்சர் ட்ரீட்மென்ட் சென்டர்' துவங்கப் பெற்றது. ப்ரொஃபஸர் டாக்டர் சேகர் (தமிழ்நாடு ஹாஸ்பிடல்) பேசுகையில் "நம் உடலில் இருக்கும் எண்ணற்ற செல்கள் ஒவ்வொன்றும் இரண்டு வேலைகளைச் செய்ய வேண்டும். ஒன்று அந்தந்த பாகத்துக்கான வேலை. இரண்டாவது இனப் பெருக்கம். எந்த செல்கள் இரண்டாவது வேலையை மட்டும் அளவுக்கு அதிகமாகச் செய்கின்றனவோ அங்கு கேன்சர் வருகிறது" என்று எளிமையாக விளக்கினார்.

ஜீவராசிகள் அனைத்தும் அவ்வாறேதான் செய்கின்றன. அதனதன் பாகத்தைப் பூர்த்தி செய்கின்றன. இன விருத்தி செய்கின்றன.

ஆக இந்த உலகின், பிரபஞ்சத்தின் செல்களாக அனைத்து உயிர்களும் என்று தோன்றியது.

இ.னொரு நோக்கில் இம்மனித உடல் ஒர் உலகம், ஒரு பிரபஞ்சம்.

டாக்டர் ஸாலமன் விக்டர் ஹிந்து ஃபோலியோ நவ.'96 இதழில் 'தி பீட் ஆஃப் லைஃப்' கட்டுரையில் 'it is awesome to realise that the heart beat is governed by the same forces that govern the universe - the influx and efflux of hadrons and leptons which are sub-atomic particles' என்கிறார். எவ்வளவு ஆச்சர்யமான அடிப்படையான விஷயம். நம் இதயம் சுருங்கி விரிவதைப் போன்றே பிரபஞ்சமும்.

ஒரு மனித உடலும் இன்னொரு மனித உடலும் சேர்ந்து பிறக்கும் புது மனித உயிர் எவ்வளவு சிறிய உயிரணுக்களிலிருந்து உருவெடுக்கிறது. வளர்ந்த இறுதி மனித உடல் அந்த உயிரணுக்களை விட எத்தனை மடங்கு பெரியது.

இந்த ஜீவராசிகளை விட இந்தப் பிரபஞ்சம் அதே அளவு பெரியதாக இருக்கலாம்.

நம் உடலில் உள்ள அனந்த கோடி விஷயங்கள், செல்கள், வண்ணங்கள், உரோமங்கள் இத்யாதி அத்தனை சிறிய உயிரணுவில் எவ்வளவு சீராக ப்ரொக்ராம் செய்யப் பட்டு புதைக்கப் பட்டு இருக்கின்றன.

எல்லாம் ஒன்றுதான் போலும். இந்த மனித உடல்தான் அந்த சின்னஞ்சிறிய உயிரணு. அதுவே பிரபஞ்சம். இந்த இதயமும், பிரபஞ்சமும் இயங்குவது ஒரே சக்திகளால்தான்.

*****

'கற்றல்' என்ற சொல் 'learning' என்கிற ஆங்கில சொல் தருகின்ற பொருளிலேயே உள்ளது. இதன் வேர்ச் சொல்லாகிய 'கல்' லிலிருந்தே 'கல்வி' வருகிறது. கல்வி என்பது கற்றல்தான். மனப் பாடம் செய்வதில்லை. கல்விக்கான ஆங்கிலச் சொல்லான 'eucation' ' educare' என்கிற இலத்தீன் வேர்ச்சொல்லிலிருந்து வந்தது என்பார் ஜே. க்ருஷ்ணமூர்த்தி. Educare என்றால் 'to draw from within ' என்று பொருள். வெளியிலிருந்து ரொப்புவதில்லை. அதேபோல் 'school' என்கிற சொல் 'leisure' ரைக் குறிக்கிறது. ரஃபேலின் 'ஸ்கூல் ஆஃப் ஏதன்ஸ்' ஓவியத்தில் படுத்துக் கொண்டும், சாய்ந்து கொண்டும் ஓய்வாக சுகமாக இருக்கும் மாணவர்களைக் காணலாம். நமது 'பள்ளி' எனும் சொல் படுப்பதையும் குறிக்கிறது அல்லவா? இப்போது நமது பள்ளிகளில் leisure க்கு இடம் உண்டா? அதைப் பற்றிப் பேசினால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட மாட்டார்களா?

'அறிவு' எனும் சொல் 'knowledge', 'intelligence' என்கிற இரண்டு பொருளிலும் உபயோகப் படுத்தப் படுகிறது. கூர்ந்து கவனித்தால் knowledge என்பது 'தகவல் அறிவு' மட்டுமே என்பது தெரியும். அறிவு (intelligence) 'அறிதலி'ல் இருந்து வருவது. கற்றல் அறிதல் சார்ந்தது.

தகவல் அறிவு பௌதிக விஷயங்களில் பயன் மிக்கது. ஆனால் உளவியலில் பிரச்னை செய்வது. பூனை பௌதிக அறிவு. பூனை குறுக்கே போனால் அபசகுனம் என்பது உளவியல் சார்ந்தது.

தகவல் அறிவு பூரணமாகும் வாய்ப்பு இல்லாதது. குறை பட்டது. அதனால்தான் தட்டையான உலகம் கலீலியோவுக்குப் பின் உருண்டையாகிறது. தீ விபத்தின் போது கம்பளியின் இடத்தை தண்ணீர் பிடித்துக் கொள்கிறது. நேர்க் கோட்டில் சென்று கொண்டிருந்த ஒளி அலை அலையாகவும் போக ஆரம்பிக்கிறது. ஹார்மோன் மாற்று சிகிச்சையும், கண்களுக்கு ரேசர் சிகிச்சையும் சரியா தவறா என்று குழம்புகிறது.

ஆதாம் ஆப்பிள் பறித்தது 'tree of knowledge' ல் இருந்துதான்.

இஷோபநிஷத்: "அறியாமைப் பாதையைப் பின்பற்றுகிறவர்கள் குருடாக்கும் இருளுக்குள் நுழைகிறார்கள்; அதனினும் மகா இருளுக்குள் நுழைகிறார்கள் அறிவை (knowledge) வாகனமாகக் கொள்கிறவர்கள்"

வேதம் என்பது அறிவாகையில் வேதாந்தம் அறிவின் முடிவாகிறது. அறிவின் பாரம் முற்றாக முடிவுறுவது வேதாந்தம் என இருக்கலாம்.

பகுத்தறிவு பற்றி நமக்குத் தெரியும். பகா அறிவு பற்றி திருலோக சீதாராம் பேசுகிறார்.

எது எப்படியோ கல்வியும் அறிவும் மிகச் சரியான சொற்கள். மிகத் தவறான புரிதலில் நடைமுறை படுத்தப் படுபவையும்.

'புரிதல்' என்பதே தமிழின் மேன்மையை விளக்கும் இன்னொரு சொல். 'புரிந்து கொள்ளுதல்' மற்றும் 'செய்தல்' என்னும் இரண்டு பொருளிலும் வருவது. புரிந்து கொண்ட விஷயத்தைச் செய்யாவிட்டால் புரிந்து கொள்வதில் என்ன பயன் உள்ளது?

'உள்ளது' என்கிற வார்த்தையும்தான். 'இருக்கிறது' எனும் சொல் 'இருந்தது' 'இருக்கப் போவது' என்று ஆகும். ஆனால் உள்ளது என்ற சொல் நிகழ் காலத்தில் மட்டுமே வரும். அது எப்போதும் இப்போது மட்டுமே. உள், உள்ள, ஊள்ளது, உண்மை. உண்மையை உணர்வது உள்ளம். ஆயினும் உள்ளம் பல இடங்களில் மனம் என்ற பொருளில் வருகிறது. மனம் 'இன்மை'யின் பட்டறை. 'அசதோமா சத் கமயா' என்று ஜக்கி வாசுதேவ் முதலிய யோகப் பயிற்சியாளர்கள் சொல்லித் தருகிறார்கள். 'இன்மையிலிருந்து உண்மைக்கு இட்டுச் செல்க' என்பது சுருக்கமாக அருமையாக தமிழில் அதன் பொருள்.

'பொருள்' என்பதே அற்புதமான சொல். 'thing', 'meaning' இரண்டிற்குமாக இருக்கும் ஒரே சொல். 'நாற்காலி' என்ற சொல்லின் பொருள் நாற்காலி என்கிற பொருளே. 'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' (தொல்காப்பியம்).

தமிழில் எண்களும் சுலபமாகவே குறிக்கப் படுகின்றன. பத்து வரை தெரிந்தால் போதும். எண்பத்து ஒன்பது வரை சொல்லி விடலாம். (தொண்ணூறு எப்படி வந்தது என்று தமிழறிஞர்கள் சொல்லி இருப்பார்கள்) லெவன், ட்வெல்வ், க்யாராஹ், பாராஹ் போன்ற புதுச் சொற்கள் இல்லை. பதினொன்று, பனிரெண்டு என்று மட மடவென்று வந்துவிடும். தமிழ் போன்றே சம்ஸ்க்ருதத்திலும் ஏகமும், துவியும் தசத்தோடு சேர்ந்து ஏகாதசி, துவாதசி ஆகும் என்று என் நண்பர்கள் சொல்லி அறிந்தேன். புதுச் சொற்கள் கிடையா.

முழுக்க முழுக்க விடுதலை பற்றிய விஷயமே 'விடுதலை'.

'எனக்கு உடம்பு சரியில்லை என்பது, நான் வேறு உடம்பு வேறு என்று அறிந்த மொழியினரின் பிரயோகம். என்ன ஒரு வேதாந்தமான பாஷை' என்று வியக்கிறார் ஜெயகாந்தன்.

'மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்'. 'நெருப்பென்றால் வாய் வெந்து விட வேண்டும்' என்று லா.ச.ரா (என்னை கேலி செய்வதற்கும் இதை கோட் செய்கிறார்கள் என்று அவர் சொன்ன போதிலும்) கூறுவதும் இதைத்தானே.

'சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே' - தான் தமிழன் என்பதால் கூறிய வார்த்தைகளல்ல. பன்மொழி அறிவும், கவி உளமும் வாய்த்த மகாகவியின் கூற்று.

'ஆரம்பத்தில் அந்த சொல் இருந்தது' (ஜான் 1:1) என்று விவிலியம் கூறுகிறது. 'அது இப்போது எங்கே' என்று தார்க்காவ்ஸ்கி 'சாக்ரிஃபைஸ்'ஸில் குரல் போன பாலகன் எண்ணுவதாகக் கேட்டு படத்தை முடிக்கிறான்.

*******

ஒரு செய்தித் தாளில், சில குழந்தைகள் நடமாடிக் கொண்டிருக்கும் குன்று ஒன்றின் புகைப்படத்தைப் பார்த்தேன். அது குப்பைகளால் ஆன குன்று. தினம் தினம் வளர்வது. அந்தக் குழந்தைகள் காலையிலிருந்து பொழுது சாயும் வரை அதிலேயே இருப்பர். அந்தக் குப்பைகளைக் கிளறி சில குறிப்பிட்ட பொருட்களை பொறுக்கி எடுத்து செல்வர். அப்பொருட்களுக்கான விலை அக்குழந்தைகளின் குடும்பத்தின் வருமானம். தினம் தினம், வாரக் கணக்காக, மாதக் கணக்காக, வருடக் கணக்காக குழந்தைகள் இதைச் செய்து வருகிறார்கள். நம் வீட்டில் உள்ள குப்பை போடும் பையையோ, தொட்டியையோ நாம் கூர்ந்து பார்த்திருக்கிறோமா? தெருவில் உள்ள குப்பைத் தொட்டியை (அப்படி ஒன்று இருந்தால்) ? குப்பை லாரியை? அது தெருவில் நுழைகையிலேயே (அப்படி நுழைந்தால்) அதன் நாற்றம் நமக்குத் தெரிந்து விடுகிறதில்லையா? அது போன்ற பல லாரிகள் கொண்டு வந்து குவித்த குப்பை மலையில் குழந்தைகள். அங்கு ஆளும் கட்சி, எதிர்க் கட்சி, கூட்டணிக் கட்சி பிரமுகர்கள் வீட்டுக் குழந்தைகள் இரா. ஏன் என் வீட்டுக் குழந்தைகளும் உங்கள் வீட்டுக் குழந்தைகளுமே கூடத்தான். அந்தக் குழந்தைகளில் ஒரு குழந்தையின் பெயர் கண்ணகி. ஆமாம் கண்ணகி.

சரி கண்ணகியும் இதர குப்பை மேட்டுக் குழந்தைகளும் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை? க்ரீமி லேயர்?

*********

சமீபத்தில் தொலைக் காட்சியில் பி. ஆர்.பந்துலு அவர்களின் 'கர்ணன்' திரைப்படத்தின் கடைசி காட்சிகள் சிலவற்றைப் பார்த்தேன். குந்தி தேவி (எம்.வி. ராஜம்மா), க்ருஷ்ணர் (என்.டி.ராமராவ்) இருவரின் அற்புதமான நடிப்பு, சீர்காழி அவர்களின் ஸ்பஷ்டமான உச்சரிப்பில் பாடல்கள், ஸ்லோகங்கள், அருமையான எடிடிங் (கர்ணன் மேல் அம்பு பாய்ந்ததும் சூரிய பகவான் அதிர்ச்சி, கர்ணன் இறக்கையில் தர்ம தேவதை ' மகனே' என்று கதறுவது) என பிரமாதமாக இருந்தது. நான் முன்பு எப்போதோ பார்த்தபோதே உருகிய அந்த வசனமும் இறுதியில் வந்தது. "ஐயோ ! கர்ணனைக் கொன்று விட்டேனே, கொன்று விட்டேனே" என்று குமுறும் அருச்சுனனை அலட்சியமாகப் பார்த்து க்ருஷ்ணர் கூறுகிறார்: "நீயெங்கே கொன்றாய்? உனக்கு முன்பே ஆறு பேர் கர்ணனைக் கொன்று விட்டார்கள். கவச குண்டலங்களைக் கவர்ந்து சென்ற இந்திரன்; ப்ரம்மாஸ்திரத்தை செயலிழக்கச் செய்த பரசுராமர்; 'போர்க் களத்தில் தேர் குழியில் இறங்கும்' என்று சாபமிட்ட அந்தணர்; நாகாஸ்திரத்தை ஒரு முறைதான் பிரயோகிக்க வேண்டும் என்று வரம் வாங்கிய குந்தி; போர்க்களத்தில் பாதியில் தேரின் சாரத்யத்தை விட்டுச் சென்ற சல்லியன்; காலால் தேரை அழுத்தி நாகாஸ்திரம் அருச்சுனனைக் கொல்லாமல் காப்பாற்றிய கண்ணன் என ஆறு பேர் அவனை ஏற்கனவே கொன்ற பிறகு, செத்த பாம்பை அடித்துவிட்டு நான் கொன்றேன், நான் கொன்றேன் என்கிறாயே". எப்பேற்பட்ட வசனம், காட்சி.

ஆனால் படத்தில் கர்ணனைக் கொன்றது அந்த ஆறு பேரோ, அருச்சுனனோ அல்ல. கட்டபொம்மன்.

*************

எதைப் பற்றியும் (அல்லது) இது மாதிரியும் தெரிகிறது. - 3.

எதைப் பற்றியும் (அல்லது) இது மாதிரியும் தெரிகிறது. - 3. பிரசுரம் : வார்த்தை ஜூன், 2008.

வ.ஸ்ரீநிவாசன்.

பொதுமைப் படுத்துதல் பெருந்தவறாகவே இருக்கிறது. இதிலும் இரண்டு வகை. ஒன்று: 'இந்த குழுவினன் இப்படித்தான் இருப்பான் ' என்னும் மனோபாவம் பொய்களில் சவாரி செய்து நரகத்துக்கு இட்டுச் செல்கிறது. எவ்வளவோ உதாரணங்களைச் சொல்லலாம். வெள்ளையரை எதிர்த்த வீரரும், அவர்களுக்கு ஆதரவாய் இருந்தவரும் ஒரே நாயக்கர் ஜாதியினரர்தான். கட்டபொம்மன், எட்டப்பன். இந்தியாவில் ரத்தக் களறியை ஏற்படுத்திய ஜெனரல் டயரும், இந்திய சுதந்திர இயக்கத்துக்கு அடிகோலிய அன்னி பெஸன்ட்டும் ஆங்கிலேயர்கள்தான். ஏசுநாதரும், கார்ல் மார்க்ஸ¤ம் யூதர்கள்தான். நீங்களும் உங்கள் அடுத்த வீட்டு அல்லது சீட்டுக்காரரும் ஒரே மொழியினர்தான். எப்பொதும் இயங்கிக் கொண்டே இருக்கிற மனித உயிர்களைப் பொதுமைப் படுத்தவே முடியாது.

இரண்டாவது: ஒருவர் ஒரு விஷயத்தில் ஓர் அடையாளத்தைக் காட்டினால் அவரது மொத்த சுபாவத்தையும் பற்றிய பொது அபிப்பிராயம். (உ-ம்) நாத்திகக் கொள்கைகளையுடைய கட்சியைச் சேர்ந்தவர் எப்பொதும் பகுத்தறிவாளராக இருப்பார் என்று நம்புவது; திருநீறோ, திருமண்ணோ, குல்லா-தாடியோ, சிலுவையோ, வேறு மதச் சின்னத்தையோ அணிந்த ஒருவர், மூட நம்பிக்கைகள் கொண்டவராக இருப்பார் என்று நினைப்பது.

மனிதன் ஒவ்வொரு கணம் ஒவ்வொன்றாக இருக்கிறான். குடும்பம், சமூகம் குறிப்பாக சுய பாதுகாப்பு கருதி பலரும் சட்ட திட்டங்களுக்கோ, தர்மத்துக்கோ உட்பட்டு வாழ்ந்தாலும், மனம் கொலைகளைப் புரிகிறது; வன்புணர்ச்சி செய்கிறது; குமுறுகிறது; விக்கி விக்கி அழுகிறது; பொறாமையால் புழுங்குகிறது. அன்பின் முன் கரைந்தும் போகிறது.

இத்தகைய எப்போதும் சலனித்திருக்கும் மனதை உடைய மனிதனை எப்படி 'இவன் இப்படித்தான்' என்று சொல்ல முடியும். மேலும் வெளியில் தெரிபவனும், உள்ளே இருப்பவனும் எப்போதும் ஒன்றா? இந்த ஜோக்கைப் படித்துவிட்டு சொல்லுங்கள்.

ருஷ்ய விண்வெளி வீரர், வரலாற்றிலேயே முதன்முறையாக, விண்வெளிப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியதும் சோவியத் அதிபர் பிரெஷ்னெவ் அவருக்கு ஒரு விருந்தளிக்கிறார். விருந்து முடிந்து இருவரும் தனியாக இருக்கையில் அதிபர் கேட்கிறார்.
"அங்கு கடவுளைப் பார்த்தீர்களா?"

"ஆமாம். ஆமாம். பார்த்தேன்".

"நானும் அப்படித்தான் நினைத்தேன். யாரிடமும் வெளியில் சொல்லாதீர்கள். இது அரசு உத்தரவு" என்கிறார் அதிபர்.

பிறகு விண்வெளி வீரர் பல நாடுகளுக்கும் அழைக்கப் பெற்று கௌரவிக்கப் படுகிறார். ரோமில் போப்பாண்டவரைச் சந்திக்கிறார். இருவரும் தனியாய் இருக்கையில் போப் கேட்கிறார்.

"அங்கு கடவுளைப் பார்த்தீர்களா?" அதிபரின் உத்தரவு நினைவுக்கு வர விண்வெளி வீரர் சொல்கிறார்:

"இல்லை. இல்லை. பார்க்கவில்லை."

"நானும் அப்படித்தான் நினைத்தேன். யாரிடமும் வெளியில் சொல்லாதீர்கள்".


*******

"சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா' என்று 'ஔவையார்' திரைப்படத்தில் முருகபெருமான் மாறு வேடத்தில் மரத்திலிருந்து ஔவையிடம் கேட்பதை முதன் முறை பார்த்த போது ஆச்சர்யமாய் இருந்தது. பிறகு எப்போதாவது நினைக்கையில் அது ஒரு 'ஜென்' கேள்வி மாதிரியும் தெரிந்தது." என் நண்பர் இப்படிக் கூறியதும் நான் இதையே அவரிடம் ஆறு மாதத்திற்கு முன்பு கூறியிருந்தது நினைவுக்கு வந்தது. 'பேச்சுக்கெல்லாம் காப்பி ரைட் வைத்துக் கொள்ள முடியுமா' என்று இன்னொரு நண்பர் மிகவும் சரியாகக் கேட்டார்.

வார்த்தை இணை ஆசிரியர் தான் தன் வலைப்பதிவில் எழுதுவது சில எழுத்தாளர்களால் எடுத்தாளப் பட்டு அச்சுருவில் வந்துள்ளது குறித்து ஆதங்கத்துடன் ஒருமுறை சொன்னார். எழுத்துலகில் புதுமைப் பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' எதன் காரணமாக வந்தது என்பதை க.நா.சு. சொல்லியிருக்கிறார். தமிழ் நாட்டின் இசை தேவர்கள், மன்னர்கள், ராஜாக்களிடமே கூட ஹிந்தி இசை அமைப்பாளர்கள் நௌஷாத், ஷங்கர்-ஜெய்கிஷன், எஸ்.டி.பர்மன் போன்றவர்களின் தாக்கம் தெரிகிறது. அந்தக் கால 'வேதா' சமீபத்திய "உள்ளத்தை அள்ளித் தா' சிற்பி" போன்றவர்கள் தாக்கம் என்றெல்லாம் குழம்பியதேயில்லை. அப்பட்டம்தான். கே.பாலச்சந்தரின் எந்த எந்த படங்கள் எந்த எந்த மொழியில் முதலில் வந்துள்ளன, கண்ணதாசனின் எந்த எந்த எந்த வரிகள் தமிழிலக்கியத்தில் எங்கெங்கு முன்பே வந்துள்ளன என்பது பற்றி பேசுவது சுவராஸ்யமாக இருக்கும்.

வார்த்தைகளை, வாக்கிய அமைப்புகளை, ட்யூன்களை மட்டுமின்றி பாணியை நகல் செய்வது எப்போதுமே உள்ளது. ஜே.கே., தி.ஜா., முதல் சுஜாதாவரை எழுத்தாளர்களுக்கும், ராஜரத்தினம் பிள்ளை, மாலி முதல் கண்டசாலா வரை இசை வித்வான்களுக்கும் எவ்வளவு வம்சாவளியினர். திரைப் படங்களில் எத்தனை நேரடியான, அரைகுறையான, மேலெழுந்தவாரியான, வக்கிரமான, வெளியில் சொல்லிக் கொள்கிற, பொருத்தமேயில்லாத (வடிவேலு அவர்களின் வசவுகளைப் பெற்ற 'உயிர்' என்ற திரைப் படத்தை 'ரே'யின் 'சாருலதா' என்று விளம்பரப் படுத்தி இருந்தார்கள்) கணக்கில் அடங்காத காப்பிகள்.

எழுபதுகளில் மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேச்சுப் போட்டிகள் மிக பிரபலம். அங்கு பேசிய ஒருவர், 'அரசியல் துறை, சினிமாத் துறை, இலக்கியத் துறை, மேடைப் பேச்சுத் துறை ஆகிய எல்லாத் துறைகளிலும் சிறப்புற்று விளங்குவதால்தான் அவர் பெயர் 'அண்ணாத் துரை'' என்று பேசி கைதட்டல் வாங்கினார். அதே கல்லூரியில் படித்த தி.மு.க. பிரமுகர் ஒருவர் ஒரு பெரிய பொதுக் கூட்டத்தில் இதையே பேசி அனைவரது பாராட்டுக்கும் ஆளானார். பிறகு அமைச்சரும் ஆனார். இப்போதுள்ள பொது இடப் பேச்சாளர்கள் (குறிப்பாக தொலைக் காட்சி, வானொலி) யாரும் 'ர' 'ற' வென்றில்லாமல், 'ழ', 'ய', 'ள', 'ல' வையெல்லாம் ஒன்றாக்கி விட்டார்கள்.


தாஸ்தயெவ்ஸ்கிக்கு சுருக்கெழுத்தாளராகப் போய் பிறகு அவரையே மணந்து கொண்ட அவரை விட இருபத்து ஐந்து வயது இளைய அன்னா ஸ்னிட்கின் 'கேம்ப்ளர்' நாவல் எழுதப் பட்ட வறுமையும், சூழ்ச்சியும், தீவிரமும், கலை உச்சமும் நிரம்பிய நாட்களை பற்றி எழுதியிருக்கிறார். அது 'ரீடர்ஸ் டைஜெஸ்ட்' டில் வந்தது. (சேலத்தில் அதை எங்கள் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் இரவல் வாங்கிக் கொண்டு போய்விட்டு திருப்பியே தரவில்லை. (1980) அவர் எழுத்தாளர் சுஜாதாவின் தமையனார். அவர் புத்தகம் பிரசாதம் - சுந்தர ராமசாமி எழுதியது - என்னிடம் உள்ளது) தாஸ்தயெவ்ஸ்கியின் வாழ்க்கையின் இந்தப் பகுதி மலையாளத்தில் 'ஒரு சங்கீர்த்தனம் போல' என்ற புத்தகமாக வந்து தமிழில் 'ஒரு சங்கீதம் போல' என்று மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. (சங்கீர்த்தனமும், சங்கீதமும் ஒன்றா?) ஜெயகாந்தனின் கதைகளின் தலைப்புகள், அவற்றில் வரும் சம்பவங்கள், பாத்திரங்கள் சர்வ சாதாரணமாக சினிமாக்களில் எடுத்தாளப் பட்டுள்ளன. நாஞ்சில் நாடனின் 'இடலக்குடி ராஜா'வாக விக்ரம் எத்தனை முறை நடிப்பார்?

தமிழிசை தமிழ் நாட்டில் பாடப்படவேண்டும் என்று பெரிதும் முயன்ற டி.கே.சிதம்பரநாத முதலியார்., கல்கி, ராஜாஜி முதலியவர்களின் பெயர்கள் வேறு சிலருக்கு இடம் கொடுத்து விட்டன. மது விலக்கு, தமிழகத்துடன் 'திருத்தணி' சேர்ந்தது, மதறாஸிலிருந்து ஆந்திரா பிரிந்த போது சென்னை மதறாஸ¤க்கு கிடைத்தது, கதர், தீண்டாமை ஒழிப்பு, பெண்களின் முன்னேற்றம் ஆகிய எல்லாவற்றுக்கும் உழைத்தவர்கள் / முன்னோடிகள் யார் யார் என்பது அரசியல், ஜாதி காழ்ப்புகள் காரணமாக கடத்தி மாற்றப்படும் வரலாற்றுத் திரிபுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. எல்லாக் காலங்களிலும் இது நடந்திருக்கலாம். இராவணன் வென்றிருந்தால் அல்லது அவன் எச்சங்கள் அதிகாரம் பெற்றிருந்தால் 'இராவணாயணம்' எழுதப் பெற்றிருக்கும். இராவண சேதுவை வைத்து அரசியல் நிகழும்.

ஒருவர் செய்ததை இன்னொருவர் நகல் செய்வதும், அதன் பலன்களை பெறுவதும் சர்வ சாதாரணமாக தெரிந்தும் தெரியாமலும் நடை பெறுகின்றன. அறிவியல் கண்டுபிடிப்புகளிலும், இலக்கிய உலகிலும் தீராத சர்ச்சைகள் காலம் காலமாக உண்டு. யார் முதலில் செய்தார் என்பதை யார் சொல்ல முடியும். 'முதலில் என்று ஒன்று உள்ளதா?' 'There is not a singla thought, That has not passed through the Roman hat' என்று திருலோக சீதாராம் சொல்வாராம். எல்லாம் சுட்ட பழம்தான்.

*********

ஒரு அறையின் மதிப்பு மூன்று கோடி ரூபாய். அறை என்றால் 'ரூம்' அல்ல. பளார்! ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்துக்குக் கொடுத்தது. ஹர்பஜன் முன்பே பல சிக்கல்களில் மாட்டிக் கொண்டவர். சமீப கால ஆஸ்த்திரேலிய ஆன்ட்ரூ சிம்மன்ட்ஸ் விவகாரம் இரு நாட்டு வாரியங்களின் பொருளாதார சார்புகளால் ஒருவாறாக இப்பொதுதான் கிட்டத்தட்ட சுமுகமாக முடிந்தது. ஸ்ரீசாந்த்துடனான பிரச்னையில் பதினோரு போட்டிகளில் விளையாடத் தடை என்ற தண்டனையால் ஹர்பஜனுக்கு ரூ.மூன்று கோடி நஷ்டம். ஹர்பஜன் ஆ·ப் ஸ்பின் போடுபவர். அவரை விட சிறந்த ஆ·ப் ஸ்பின் போடுபவர்களை கிரிக்கட் கண்டிருக்கிறது. மேற்கிந்தியத் தீவுகளின் லான்ஸ் கிப்ஸ், இந்தியாவிற்கு ஆடிய கர்நாடகாவின் பிரஸன்னா, தமிழரான வெங்கட்ராகவன் இன்னொரு தமிழரான (இலங்கை) உலக சாதனை புரிந்துள்ள முரளீதரன் எல்லோருமே கண்யமான தலை சிறந்த ஆ·ப் ஸ்பின்னர்கள். ஐம்பது அறுபதுகளில் தமிழ் நாட்டின் ஏ.ஜி. கிருபால் சிங் அணியின் தலைவர் மற்றும் இந்தியாவின் முக்கியமான ஆ·ப் ஸ்பின்னர். கிரிக்கட் ரசிகர்கள் மத்தியில் அவர்தான் எம்.ஜி.ஆர். தான் ஆடிய முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தவர். தலைப்பாகையும் தாடியும் இல்லாத சீக்கியர். அவர் சகோதரர் மில்கா சிங்கும் டெஸ்ட் வீரர். இருவரும், அவர்கள் தந்தை ஏ.ஜி.ராம்சிங்கும், சகோதரர் சத்வேந்தர் சிங்கும் மதறாஸில் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்ற கிரிக்கட் வீரர்கள். கிருபால் ஒருமுறை "ஷாப் லி·ப்டிங்" கில் மாட்டிக் கொண்டாரேயன்றி குடும்பமே தமிழர்களால் மைதானத்தில் அவர்கள் நன்னடத்தையால் புகழப் பெற்ற குடும்பம்.

கிரிக்கட்டில் அடிதடியும் நடக்காத விஷயம் அல்ல. சமீபத்தில் பாகிஸ்தானின் ஷோயப் அக்தர் அவர் சகாவான அஸீ·ப்பை மட்டையால் அடித்தார். பல வருடங்கள் முன்பு ஆஸ்திரேலியாவின் லில்லி கையால் அடித்ததும் பாகிஸ்தானின் ஜேவெட் மியண்டாட் அதற்கு மட்டையால் திருப்பிக் கொடுத்ததும் நடந்துள்ளன. 1999 உலகக் கோப்பையில் ஒரு போட்டியின் போது இந்திய ரசிகர் ஒருவர் டிராவிடை அடித்தபோது அவர் 'தேமே' என்று இருந்தார். பக்கத்தில் இருந்த வெங்கடேஷ் பிரஸாத் நடுவில் போய் தடுத்தார்.

அடிப்பது என்பது வேறு வேறு விதமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது. நான் கொல்கொத்தாவிலிருந்து ரயிலில் வந்து கொண்டிருந்த போது வண்டி கிளம்பி சில மணிநேரங்களுக்குப் பின் எதிர் எதிராக இருந்த தனித் தனி இருக்கைகளில் பயணம் செய்த தம்பதிகளில் கணவன் பளாரென்று மனைவியின் கன்னத்தில் அறைந்து விட்டார். அவர்கள் இருவருமே முப்பது வயதுக்குள்ளானவர்கள்தான். கம்ப்பார்ட்மென்டில் இருந்த அனைவரும் 'கப்சிப்' என்று ஆகி விட்டார்கள். இன்னும் இருபது மணி நேர பயணம் பாக்கி இருந்தது. சில நிமிடங்களில் சகஜ நிலை திரும்பி விட்டது. காரணம் அந்த மனைவி. ஒன்றுமே நடக்காதது போல் அவர் இயல்பாக இருந்து விட்டார். கிட்டத் தட்ட அனைத்துப் பெண்களுமே இத்தகைய ஆபாச, அராஜக, அநியாய அவமானங்களை வாழ்வில் சந்தித்தே விடுகிறார்கள். இது மாதிரியே ஆண்கள் நினைத்துப் பார்க்கவும் முடியாத விதத்தில் எதிர் கொள்ளவும் செய்கிறார்கள். எல்லாப் பெண்களுமே தாழ்த்தப் பட்டவர்கள்தான்.

பல வருடங்களாக எங்கள் வீட்டில் வேலை செய்த பெண்மணி அருகிலிருந்த இரண்டு வீடுகளிலும் வேலை செய்து வந்தார். நடு வீட்டு அம்மாவோடு கொஞ்சம் அதிக சகஜமாகவே பழகுவார். 'நீ, வா, போ' என்று ஒருமையில்தான் பேச்செல்லாம். அந்தம்மாவை பெயர் சொல்லித்தான் கூப்பிடுவார். பாக்கி வீடுகளிலும் உரிமையோடு, கொஞசம் அதிகாரமாகத்தான் பழகுவார். ஒரு நாள் என்னமோ கேட்டதற்கு நடு வீட்டம்மா அந்த வேலைக்காரப் பெண்மணியை பளாரென்று கன்னத்தில் அறைந்து விட்டார். மூன்று வீடுகளில் இருந்த அனைவருக்கும் சப்த நாடியும் ஒடுங்கி விட்டன. அந்தம்மாவும் பயந்து போய் விட்டார். பயத்தில் தன் கன்னத்தைக் காட்டி 'இந்தா அடி, அடி' என்றார். வேலைக்கார பெண்மணி ஒன்றும் சொல்லாமல் வேலைகளை முடித்துக் கொண்டு போய் விட்டார். மறுநாளில் இருந்து ஒரே ஒரு மாற்றம் இருந்தது. அந்தம்மாவை வழக்கம் போல் பெயர் சொல்லி ஒருமையில் அழைத்தாலும் பெயரோடு கூட ஒரு 'அம்மா'வைச் சேர்த்துக் கொண்டு அழைத்தார். சில நாட்களுக்குப் பின் அவர்கள் இருவருமே அந்த சம்பவத்தைச் சொல்லி சிரிக்க ஆரம்பித்து விட்டனர். அதற்கு அடுத்த நாளிலிருந்து அனைவரும்.


********

எனக்கு கம்யூனிஸ்ட்களை எப்போதுமே ரொம்பப் பிடிக்கும். வாரிசு அரசியலுக்கு மத்தியில் ஜனநாயக முறையில் உட்கட்சி தேர்தல் நடத்துபவர்கள். ஐந்து கோடி, பத்து கோடி, இருபது கோடி, ஐம்பது கோடி என்று சொத்து விவரம் காட்டும் சாமான்ய எம்.பி. வேட்பாளர்களுக்கு இடையில் இருபத்து மூன்றாயிரம், ஏழாயிரம் என்று சொத்து வைத்திருப்பவர்கள். பிறந்த நாள் பரிசுகளை கோடி ரூபாயாக இருந்தாலும் அதைக் கட்சிக்கு கொடுப்பவர்கள். இந்த எல்லா நற்பண்புகளுக்கும் மேலாக அல்லது எதிராக அனைத்து அராஜகங்களையும் செய்பவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள். தேர்தலில் பங்கேற்கும் அதிசயப் பிறவிகள். 'தமிழன்' சான்றிதழ் வழங்கும் பெரியார் பல்கலை கழகம், 'இந்தியர்' பட்டம் தரும் ஆர்.எஸ்.எஸ். சர்வகலாசாலை மாதிரி 'முற்போக்கு' 'மத சார்பின்மை' என்கிற 'ட்யூயல் டிக்ரி' வழங்கும் யுனிவர்ஸிடி இவர்கள். 'இருபது வயதில் ஒருவன் கம்யூனிஸ்ட் இல்லை என்றால் அவனுக்கு இதயம் இல்லை. நாற்பது வயதிலும் ஒருவன் கம்யூனிஸ்ட்டாக இருந்தால் அவனுக்கு மூளை இல்லை' என்றார் மினு மஸானி. இந்த இருபது, நாற்பது பிரச்னைகள் இல்லாத இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம். வலது, இடது இரண்டிலும் எண்பதுக்குக் குறைந்த பெருந்தலைவர்கள் இல்லை. மேலும் பல விசித்திரங்களையும் பார்க்கலாம். ஹிரேன் முகெர்ஜீ என்கிற வங்காளத்தின் மூத்த கம்யூனிஸ்ட், தினமும் காலையில் சம்பிரதயமான புனஸ்காரங்களை செய்தவாராம். 'நான் ஒரு ஹிந்து கம்யூனிஸ்ட்' என்பாராம். ஹர்கிஷண் சிங் சுர்ஜீத் ஆசாரமான சீக்கிய தோற்றத்திலேயே இருப்பவர். நம்பூதிரிபாடு விடியற்காலையில் பத்மனாபனை தரிசிப்பார் என்று கரிச்சான் குஞ்சு எழுதி உள்ளார். (ராஜாவுக்கும் முன்னால் தரிசிக்கும் 'புரட்சி'.)


பிரெஷ்னேவ் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாளராகவும், சோவியத் யூனியனின் தலைவராகவும் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கையில் அவர் தாயார் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை ஊரிலிருந்து வந்து மகனைப் பார்ப்பாராம். ஒரு முறை அவருக்குப் பிடித்த தின் பண்டங்களைக் கொண்டு வந்து கொடுத்து விட்டு தான் அவரைப் பற்றி மிகவும் கவலையுற்றிருப்பதாக கூறினார். பிரெஷ்னெவ் அவரை அமைதிப் படுத்தி விட்டு "நான் பத்திரமாக, நலமாக இருக்கிறேன். எந்தக் கவலையும் வேண்டாம் அம்மா" என்றார். அவரது தாயார் விடாமல் "இல்லை மகனே, உனக்குத் தெரியாது. நான் உன்னைப் பற்றியும் நாட்டைப் பற்றியும் மிகவும் கவலையுற்று இருக்கிறேன்."என்று சொல்லி விட்டுச் சென்றார். இரண்டு வாரம் கழித்து வருகையில் மகனுக்காக குளிருக்கு இதமான கையுறைகளையும், ம·ப்ளரையும் கொண்டு வந்தார். மகன் தான் அற்புதமாக இருப்பதாகவும் எல்லாம் பிரமாதமாக இருப்பதாகவும் கூறினார். "இல்லை இல்லை அன்பு மகனே, எல்லாம் சரியாக இருப்பதாக சொல்ல முடியாது. எனக்கு கவலையாக இருக்கிறது. என்ன நடக்குமென்று யாரறிவார்." என்றார். பிரெஷ்னெவ், "கவலையே வேண்டாம் அம்மா, எல்லாம் என் கட்டுப்பாட்டில் இருக்கிறது. எல்லோரும் நான் சொல்வதைத்தான் செய்கிறார்கள். என்னைப் பாதுகாக்க காவலர்கள் இருக்கிறார்கள்" என்றார். "இல்லை இல்லை " என்று முனகியபடியே சென்ற தாயார் இரண்டுவாரம் கழித்து வருகையில், வீட்டில் செய்த வோட்காவைக் கொண்டு வந்தார். சிறிது நேரம் கழித்து தன் கவலையை அம்மா சொன்னபோது, பிரெஷ்னெவ், "எந்த ஒரு மனிதரும் விரும்பக் கூடிய எல்லாம் என்னிடம் இருக்கிறது. மேற்கு நாடுகளின் மிக விலை உயர்ந்த கார்கள் என்னிடம் இருக்கின்றன. நான் உலகின் விலை உயர்ந்த உடைகளையே அணிகிறேன். மிகச் சிறந்த உணவையே உண்கிறேன். இந்த நாட்டிலேயே, ஏன் இந்த உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த மனிதன் நான்தான். உன் கவலைதான் என்ன?" என்று கேட்டார். "மகனே, உனக்குத் தெரியாதா? கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சியை எடுத்துக் கொண்டு விட்டால்...?" என்றார் தாயார் கவலையுடன்.

இரண்டு 'பிரெஷ்னெவ்' ஜோக்குகளையும் சொன்னவர் : ஜே. கிருஷ்ணமுர்த்தி.

***********