FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Saturday, December 25, 2010

காஞ்சனை - ஓர் அனுபவம்

காஞ்சனை - ஓர் அனுபவம்

  பிரசுரம்:சொல்வனம் - இதழ் 40 | 17-12-2010
 
புதுமைப்பித்தன் எழுதிய காஞ்சனை சிறுகதை அக்காலத்துக்கே உரித்தான, வாழ்வின் பிரச்னைகளையும், வறுமையையும் மீறிய விச்ராந்தியான தருணங்களில் ஆரம்பிக்கும் கதை. இத்தகு தருணங்களை சத்யஜித் ராயின்படங்களில், தி.ஜா., கதைகளில் காண்கிறோம். படத்தைப் பார்க்கையில், கதைகளைப் படிக்கையில் ஒரு பறவையின் அழைப்பை, தூரத்து ஒலியைத் துல்லியமாகக் கேட்க முடியும். அதுதான் அடிப்படை. இயல்பு. சகஜம். அதன்மேல் இயக்கங்களும், இயக்கம் பற்றிய மாசு படிந்த கவனிப்புகளும், நினைவுப் பதிப்புகளும், அவற்றில் படியும் தூசிகளும் நிகழ்கின்றன. அத்தூசிகளோடு கற்பனை குதிரையும் எழும்பிப் பறக்கின்றது. ‘காஞ்சனை அத்தகு தருணங்கள் மனதளவில் தவிடு பொடியாவதில், வேண்டுமென்றே தவிடு பொடி ஆக்கப் படுவதில் துவங்குகின்றது.

(’காஞ்சனை’யைப் படிக்கையில் ஞாபகம்வைத்துக் கொள்கிறேன்: ‘ புதுமைப்பித்தனின் கதைகளில் மூட்டைப்பூச்சிகள் ‘அபிவாதயே’ சொல்லும்.)

இத்தகைய விச்ரந்தியான தருணங்களில் (கஷ்டமும் இல்லை, அளவுக்கு மிஞ்சிய துன்பமும் இல்லை; புகையிலையைக் கூட கடனெழவே என்றோ, பழக்க தோஷத்தாலோ, அனிச்சையாகவோஅன்றி அனுபவித்து பவித்திரமாக போட்டுக் கொள்ள முடிகிறது) மனதால் சும்மா இருக்க முடியுமா? அதுவும் ஒரு இரண்டாவது பிரம்மாவுடைய மனதால்? Devil’s workshop?

இது எழுத்தாளனின் சரடு - கயிறு - ஆனால் அரவு. இது வாசகனுக்குவிடப்படும் சரடு மட்டுமல்ல. தனக்குமேயானது. முதலில் தான் அனுபவிக்க. இந்த ஒற்றைப் பரிமாண வாழ்வின் சலிப்பை வரவொட்டாமல் அதுபற்றிய குறிப்பைக் கூட அண்டவிடாமல், தன்னை அனுபவிக்க வைக்க விடப்படும் சரடு. அதைத்தான் நாமும் சேர்ந்து அனுபவிக்கிறோம். கலையென்னும் அம்ருத தாரையில் கரங்களை குவித்து எப்போதும் கலைஞனே முதலில் பருகுகிறான். அவன் கை விரலிடுக்குக்ளில் பெருகி வழிவதைதான் நாம் அனுபவிக்கிறோம்.

இது ‘தன்மை’ யில் எழுதப்பட நேர்ந்ததற்குமிதுவே காரணம்.
சரடு.

teimoso 

மனம் ரதம் அல்ல என்றதும் ரதமாகிறது. ‘பேய்’ ஓட்டும் ரதமாகிறது. இது மனதின் இயல்பு. ‘மருந்தை அருந்துகையில் குரங்கை நினைக்காதே’ என்றதும் செய்கிற வேலையைச் செய்கிறது. சாதாரணமாக அநாதி காலந்தொட்டு ஒரே தடங்களில் மீண்டும் மீண்டும் செல்லும் கட்டை வண்டிதான். மனதைப் பற்றி எத்தனை அழகாகச் சொல்கிறார்? இதுதானே மனம்? மனதின் இயல்பு. தினம் தினம் ஒன்றையே, ஒற்றைப் பாதையில்தானே நாம் சிந்திக்கிறோம்?

அதே தடம்தான், வெகு விலகி போவதுபோல் தெரிந்தாலும். (அதே மனிதர்களைப் பற்றி, அதே அபிபிராயங்களைச் சுற்றி, அதே கொள்கைகள், அதே துவேஷங்கள், அதே வார்த்தைகள் - நமமனைவருக்கும் அப்படித்தானே) இந்தப் பிரபஞ்சம் பௌதீகமாக எத்தனை பெரியதோ அத்தனைக்கத்தனை சிறியது இந்த மனவெளிப் பிரதேசம். இதிலும் ஆகாசத்தில் பறப்பதாக பாவித்துக் கொள்ளலாம். அதை நம்பவும் செய்யலாம்.

அதிலும் மூக்கணாங்கயிறை முதுகில் போட்டுவிட்டு கட்டை வண்டி ரதம் தானே போகும்படி செய்தால்?

இனி தன்னிஷ்டம்தான். தூக்க மயக்கம். மயக்கம். விழிப்பு, வேண்டுமென்றே கண்காணா பிரதேசத்தில் வந்து சேர்ப்பித்த கலத்தை தெரிந்தே தொலைத்துவிடும் மயக்கத்தின் இன்பம். எழுத்தாளனின் ‘deliberate’ மனம் சொல்லும் கட்டளைகள் கூட இல்லை. காளையின் கால் போனபடி ரதம் போகிறது. சாதுவான , ஆபத்தில்லாத மயிலைக் காளைப் பாதையாம்! என்ன கொழுப்பு?

அந்தப் பாதையில் காஞ்சனை வருகிறாள். வௌவால், பிச்சைக்காரி, பிணவாடை, ஊதுவத்தி, சாம்பிராணி, சேமக்கல சப்தம், இதில் எது கட்டை வண்டி ரதம் தன்னிசையாக சென்ற பாதை?

என்றாலும் வண்டிக்காரன் முழுதும் தூங்கவில்லை. தினசரி வேலைகள் தம்பாட்டுக்கு. பிரக்ஞை கூர்மையாக இருக்கிறது. புகையிலையை பவித்திரமாக போட்டுக் கொள்கிறான். பிரம்பு நாற்காலி க்றீச்சிட்டு ஆட்சேபிக்கிறது. துல்லிய கவனம் அவ்வபோது, பெருகி போதையேற்றும் கற்பனா சாகரத்தின் மத்தியில்.

தொழில்? பிரம்ம வித்தை. தெரிந்தவன் சும்மா இருக்கலாமா? அங்கீகரிக்கப்படும் பொய்களை உருவாக்க வேண்டாமா? சென்ற தடத்திலேயே எப்படிச் செல்வது? எனவே நிஜந்தோரும் தன் கல்பனா லோக சஞ்சாரத்தைக் கலக்கிறது. எழுத்தாளன் இது உண்மை என்கிறான்.

அவன் கண்ட காஞ்சனை நிஜம். ஆனால் அவன் மனைவி காணவில்லை. அவள் பிரம்ம குலம் இல்லை. மனதைச் சீண்ட வேண்டிய அவசியமும் இல்லை. ஊதுபத்தி வாசனை - அவளும் மெலிதாக ஆமோதிப்பது உண்மையாகவும் இருக்கலாம். ஒப்புக்காக, சமாதானத்துக்காகவும் இருக்கலாம். அவன் படிக்கும் புத்தகத்தின் ஆங்கில வாக்கியங்களை காஞ்சனை தமிழில் சொல்வது அவனுக்கு மட்டுமே தெரியும்.

இவனுக்கு கற்பனையின் எல்லைகளைத் தொட்டுவிட வேண்டும். கஞ்சா அடிப்பத்தைப்போல. அதை நிஜமாக்க வேண்டும். அதற்கு முதலில் அவனே அவற்றை நம்ப வேண்டும். அதனால்தான் ‘இன்னுமின்னும்’ என்பதற்காகத்தான் கண்ணாடி.

கண்ணாடிக்குள் இவனுக்குத் தெரிவது மனைவிக்குத் தெரிவதில்லை. அவள் சிரிப்பைக் கேட்பதில்லை. வாசனையை முன்னறிந்து சொல்வதில்லை. கழுத்துக் காயம் பற்றிக் கவலைப்படுவதில்லை. மூன்று மாத கர்பிணி வேறு.

மூன்று மாத கர்ப்பிணியை பேயோடு யாராவது விடுவார்களா? வெளியாளிடம் வேண்டாம். மனைவியிடம் இதைச் சொல்லலாம் இல்லையா? ‘அந்தப் பிச்சைக்காரி வேண்டாம். பேய் மாதிரி இருக்கிறாள். பேய்தான். அவளால் உனக்கு ஆபத்து’ என்று.

சொல்வதில்லை. ஏன்? அவனுக்கு அந்த எல்லையைக் காண வேண்டும். அடியாழத்தில் மயக்க விழிப்பில் அவனுக்குத் தெரியும், இது சரடு.

மனதின் இயல்புகளிலொன்று. எப்போதும் ஒருபிரச்னையை உண்டு பண்ணி அதைத் தீர்ப்பது. (உ -ம்) ஒரு குழந்தை பள்ளியிலிருந்து வீட்டுக்கு வழக்கமான நேரத்துக்கு வரவில்லை. பயம். கற்பனை. விபத்து பற்றி. கடத்தல் பற்றி. பிரார்த்தனைகள். புலம்பல்கள். குழந்தை வந்ததும் ரிலீஃப். மகிழ்ச்சி. கடவுளுக்கு நன்றி.

இங்கு மனம் விளையாட உற்பத்தி செய்து வினையாகி விட்ட பேய். பெண் பேய். மோக லாகிரியை எழுப்பும் பேய். மனைவிக்கு ஆபத்து வரை போயாகிவிட்டது. விபூதி தடவி பேயும், பேயின் பின் விளைவுகளும் போய் விட்டன.

தனக்குத் தானே, தன்னை மீறி, தன்னை விடுத்து, தன்னை மறந்து, விட்டுக் கொண்ட சரடு.

மீண்டும் புதுமைப் பித்தன்.

காஞ்சனை என்னும் பிசாசு உண்டா இல்லையா?

அதை விடுங்கள். ஆனால் நினைத்தால் பயமாய் இருக்கிறதே.

சிறிது சினிமா - 1

சிறிது சினிமா - 1

பிரசுரம்:சொல்வனம்-இதழ் 39 | 30-11-2010  
 
சுமார் இரண்டு மாதங்கள் சிங்கப்பூரில் மகள் வீட்டில். தங்கை வீடும் இங்குதான். பாதி நாட்கள் கழிந்து விட்டன. சில திரைப்படங்களை வீடியோ / தொலைக்காட்சியில் பார்க்க முடிந்தது. களேபரமான காம்பினேஷன்.

12-angry-men-old-dvdcover 

12 ஆங்ரி மென்’- (12 Angry Men) ஹென்றி ஃபோண்டா தயாரித்து நடித்தது. நான்கு ஆஸ்கர் நாமினேஷன்கள். 1957 வருடப் படம். சேரியில் வாழும் ஒரு ஏழைப் பையன் தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கு. படம் ஆரம்பிக்கையிலேயே நீதிமன்ற விசாரணைகள் மற்றும் குறுக்கு விசாரணைகள் முடிந்து ஜூரர்களின் சிபாரிசுதான் பாக்கி. 12 ஜூரர்கள். விதவிதமான பின் புலம், வயது, வாழ்வு மற்றும் சமூகம் பற்றிய நோக்கம். அனுசரணை, ஆதிக்கம், சமரசம், கூச்சம் என பல்வேறு மனநிலைகள். பூரண ஈடுபாட்டிலிருந்து, கடனெழவே என்கிற பங்கெற்பு வரை தெரியும் விதவிதமான அணுகு முறைகள்.

ஒரே ஒரு சிக்கல். பனிரெண்டு பேரும் ஒருமனதான முடிவை / சிபாரிசை தெரிவிக்க வேண்டும். அந்தப்பையன் குற்றவாளியா இல்லையா என்கிற கேள்விக்கு ‘ஆம்’அல்லது ‘இல்லை’ என்கிற பதில் தான் சிபாரிசு. ஒருவர் மாறுபட்டிருந்தாலும் அது ஜூரர்களின் சிபாரிசாகாது. சாட்சிகளும், பின்புலமும், பின்கதையும் ஏற்கனவே பையன் நள்ளிரவில் தந்தையைக் குத்திக் கொன்றுவிட்டு படிகளில் இறங்கி ஓடியதை நிரூபித்தாயிற்று. ‘ஓபன் அண்ட் ஷட்’ கேஸ். ஐந்து நிமிடங்களில் முடிவைச் சொல்லி விடலாம்.

ஜுரர்களில் தலைமை தாங்கி நடத்திச் செல்பவர் முடிவை ஓட்டுக்கு விடுகிறார். பதினோரு பேர் ‘ஆம்’ என்கையில் ஒரு கை உயராமல் ‘சந்தேகமாக இருக்கிறது’என்கிறது. பிறகு அடுத்த சில மணிகளில் அந்த ‘ஓபன் அண்ட் ஷட்’ கேஸ் என்னவாகிறது என்பதுதான் படம்.

தயாரிப்பாளர் ஹென்றி ஃபோண்டா மட்டுமில்லாமல் வேறு பலரும் சிறப்பாக நடித்திருந்தார்கள். மூன்று நிமிடங்களைத் தவிர முழுப் படமுமே ஒரே அறைக்குள் படமாக்கப் பட்டிருந்தது. அதுவும் நாம் இப்போதைய படங்களில் காணும் சௌகர்யமான அறை இல்லை. ஓடாத ஃபேன், வெளியே கொட்டும் மழையால் இறுக்கமான (கோவையில் இதை உப்புசம் என்பார்கள்) சூழல், வியர்வை. எரிச்சல். ஒரு பெண் கூட நடிக்கவில்லை. கொலை, அதைத் தொடர்ந்து, மற்றும் அதற்கு முன் நடந்தவை எல்லாமே வசனத்தில்தான் வருகின்றன.

பெரிய உணர்ச்சி கொந்தளிப்புகள் இல்லை. ‘உபதேசங்களுக்கு’ வாய்ப்பிருந்தும் இடம் பெறவில்லை. இது வரை எடுக்கப்பட்ட படங்களிலேயே மிகச் சிறந்தவைகளில் ஒன்று’ என்று பெயர் வாங்கியுள்ள படம்.

ஓரிருவரின் நடிப்பு பிறருடையதைப் போல் அமைந்திருந்தால், துளி எட்டிப் பார்க்கும் மேடை நாடகத் தன்மையும், கதை ஓட சிறிதளவு உபயோகப்படுத்தி இருக்கும் உத்தியும் தவிர்க்கப் பட்டிருந்தால் நாமினேஷன்களை தாண்டி ஆஸ்கர் வென்றிருக்கக் கூடும். ஆஸ்கர் இல்லவிட்டால்தான் என்ன?

அடுத்து ‘டிஸ்ட்ரிக்ட் 13’ என்கிற ஃப்ரென்ச் படம். ‘parkour’ சண்டைகளுக்காக புகழ்பெற்ற படம்.http://www.youtube.com/watch?v=bTyWfbvX0xQ&feature=player_embedded
அரசு இயந்திரம் செயலற்றுப்போய் நுழைய முடியாத ஒரு தாதா மாவட்டத்தில் இரண்டு இளைஞர்கள் - ஒருவர் அங்கேயே பிறந்து அதை தூய்மைப் படுத்தவேண்டும் என்கிற முனைப்பில் இருப்பவர்; இன்னொருவர் போலிஸ் இலாகாவில் உள்ள இலட்சியவாதி. முதலிலிருந்து முடிவு வரை ஒரே ஓட்டம்தான், வசனங்களிளும். சாதாரணமாக இப்படி எடுக்கப் படும் படங்களில் ‘உயிர்’ இருக்காது. மறைக்கப்பட்ட சங்கிலிகள், கயிறுகள், ‘கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ்’ போன்ற உபகரணங்களால் அசாதாரணமான சண்டைகள் காட்டப்படும் இக்கால கட்டத்தில் இவை எதுவுமில்லாமல் இயற்கையான சண்டைக் கட்சிகள். மனித உடலின் அதி வேகம், சக்தி, வளையும் தன்மை போன்றவற்றைக் காண நிம்மதியாக இருந்தது. இரண்டு கதாநயகர்களும், பிறரும் சரியாக நடித்திருந்தார்கள். பெரிய தாதாவை இருவரும்போட்டு துகைக்காமல் யாரோ வேறு சிலரால் அவர் கொல்லப் படுவது இன்னொரு நிம்மதி. கூர்மையான வசனங்கள். திருப்பங்கள். அமெரிக்கப் படங்களின் உயிரின்மையும், போலி நெகிழ்வுணர்ச்சிக் காட்சிகளும் இல்லாத மகிழ வைக்கும் படம்.

மூன்றாவதாக ‘இன் கோஸ்ட் ஹவுஸ் இன்’ (In Ghost House Inn) என்கிற மலையாளப் படம். காமெடி த்ரில்லர். நிறைய திருப்பங்களும், சுற்றல்களும். முகெஷ், ஜகதீஷ், சித்திக், அசோகன்,நெடுமுடி வேணு மற்றும் பலர்.  பதினெட்டு வருடங்களுக்கு முன் முதல் நால்வரும் நடித்த இன் ஹரிஹர் நகர் வந்தது. (இது தமிழில் எம்.ஜி.ஆர் நகரில் என்று ஆனந்த் பாபு, விவேக், சின்னி ஜெயந்த், சார்லி நடித்து வந்ததாக நினைவு. ) மீண்டும் சமீபத்தில் அதேகூட்டணியில் ‘2, ஹரிஹர் நகர்’ வந்து உடனே ‘கோஸ்ட் ஹவுஸ்’. படு சுவாரஸ்யமாக நேரம்போவதே தெரியாதபடிக்கு இருந்தது.

‘மர்டர் பை டெத்’ நான் பார்த்ததிலேயே சிறந்த அற்புதமான காமெடி த்ரில்லர். காமெடியும், கொலையும் சேர்ந்து வந்து கலக்கிய தமிழ்ப்படம் 1966-இல் வெளிவந்த ‘சாது மிரண்டால்’. இதில் சில நகைச்சுவை காட்சிகளை மட்டும் மீண்டும் பார்த்தேன். நடிப்பின் சிகரங்களை இப்படத்தில் பார்க்கலாம். நகைச்சுவைக்குப் புகழ் பெற்ற டி.ஆர்.ராமச்சந்திரனின் அற்புதமான சீரியஸ் நடிப்பு. நாகேஷ் கேட்கவே வேண்டாம். மிகக் கச்சிதமான, தரமான ஓ.ஏ.கே. தேவரின் நடிப்பு. மனோரமா. இதில் ஏ.கருணாநிதி வரும் காட்சியைப்பார்த்துவிட்டு யாராலாவது சிரிக்காமல் இருக்க முடியுமென்றால் அவர் வேற்று பிரபஞ்சவாசியாகத்தான் இருக்கக் கூடும். கொஞ்ச நேரத்தில் அந்த சமயங்களில் சீரியஸ் பாத்திரங்களிலேயே நடித்து வந்த டி.எஸ்.பாலையாவின் அதி அற்புத நகைச்சுவை நடிப்பு. அவர் பாடும் கர்நாடக இசைப் பாடல்களை அவர் நடிப்போடு கேட்கையில் எப்பேற்பட்ட மேதை என்கிற எண்ணம் மேலெழுகிறது. மொத்தமாக மாமேதைகள் பலர் சேர்ந்து நடித்திருந்தபடம். நகைச்சுவை த்ரில்லர்.

பிறகு ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’. மேற்சொன்ன த்ரில்லர் படங்களையெல்லாம் விட என்னை திடுக்கிட வைத்த படம். முதல் த்ரில். ஆர்யாவை எனக்குப் பிடிக்கும், அவர் என் நண்பர் சுகா இயக்கும் திரைப்படத்தின் தயரிப்பாளர் என்பதால். மற்ற படி நடிப்பு கிடிப்பு என்றெல்லாம் அவர் என்னை தொந்தரவு செய்ததேயில்லை. ‘பாஸ்’படத்தில் நடித்திருந்தார். நயனதாராவும், சந்தானமும் கூட ஆச்சர்யகரமாக நன்றாக நடித்திருந்தார்கள். பெஸ்ட் பர்ஃபார்மென்ஸ் சரவணனாக நடித்த பஞ்சு அருணாசலத்தின் மகன், ‘பாஸ்’ஸின் தாயாரக நடித்தவர், சித்ரா லட்சுமணன். படம் தொந்தரவு செய்யாமல் போயிற்று. தமிழகத்தில் பெரிய வெற்றியாம்.

 

கொஞ்சம் கொஞ்சம் ‘மதராசப்பட்டினம்’ பார்த்தேன். பீரியட் ஃபிலிம் என்பதால், அந்த ஐரோப்பிய பெண்ணால், மற்றும் ஆர்யா மீதுள்ள அபிமானத்தால் படம் பார்க்கத் தோன்றியது.

கதைக்குக் கையுண்டா காலுண்டா என்பார்கள். ஒரே புருடா. அதுவும் சுதந்திர நாளன்று ரயில்வே ஸ்டேஷனில் வரும் வெற்றி கோஷங்களும், பொதுமக்கள் உரையாடல்களும் அபத்தக் களஞ்சியம். நல்ல வேளை தலைவர்களாக யாரையும் காட்டவில்லை.

வரலாற்றை இப்படியெல்லாமா திரிப்பார்கள்? 1947 ஆகஸ்ட் பதினைந்து சமய்த்தில் காமராஜர் அகில இந்தியத் தலைவர் இல்லை. சரி தமிழ் நாட்டில் வாழ்க கோஷமிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளலாம். ‘ஆச்சாரியார் வாழ்க’ என்கிறர்கள். பொது மக்கள் ‘ராஜாஜி’ என்றே சொல்வார்கள். திராவிட இயக்கத்தினர் முதலில் ‘ஆச்சாரியார்’ என்றும் பின்பு ‘மூதறிஞர்’ என்றும் சொல்வது வழக்கம். இப்போது எல்லோரும் மூதறிஞர் என்றே சொல்கிறர்கள். பெரியாரின் தி.க. சுதந்திர தினத்தை துக்க தினமாகக் கொண்டாடியவர்கள். ப்ரிட்டிஷ் காரர்களை தொடர்ந்து ஆட்சி செய்யுமாறு கோரியவர்கள். அவர்கள் ராஜாஜியை வாழ்த்த வாய்ப்பில்லை.

வரலாற்றுப்படி ராஜாஜி சுதந்திரத்துக்கு முதல் நாளே கல்கத்தா சென்றுவிட்டார், கவர்னராக. ஆகஸ்ட் 15 அன்று கல்கத்தாவில் இருந்தார். ராஜாஜி உத்தரவுப் படி ‘கவர்ன்மென்ட் ஹவுஸ்’ பொது மக்களுக்குத் திறந்து விடப்பட்டது. 2,00,000 சாமானியர்கள் உள்ளே வந்து சுதந்திரத்தைக் கொண்டாடினார்கள். மறு நாள் வங்காளத்தில் முகாம் இட்டிருந்த மகாத்மா காந்தியை சந்திக்கிறார். காந்திஜியின் கரங்களை ராஜாஜி தன் கரங்களில் எடுத்துக் கொள்கிறார். இருவரும் ஒன்றும் பேசாமல் வெகு நேரம் இருக்கிறார்கள். ஆனால் மதறாசப் பட்டினத்தில் ‘ஆசாரியார் வாழ்க’ (என் காதில் விழுந்தது சரி என்றால்) என்று அவரை வரவேற்க ரயில்வே ஸ்டேஷனில் கோஷமிடுவது போல் வருகிறது.

இதற்கெல்லாம் சிகரம் ‘சத்தியமூர்த்தி வாழ்க’ தான். ஆசாரியாரும் சத்தியமூர்த்தியும் வண்டியில் வருவதாக வேறு பேசிக் கொள்கிறார்கள். 28-3-1943ல் இறந்து போன சத்திய மூர்த்தியின் ஆவிதான் அங்கு வந்திருக்கக் கூடும். அந்த அளவில் ம.ப.(மதராசப் பட்டணம்)வும் ஒரு ம.ப. (மர்மப் படம்) ஆகிவிட்டது.

அம்மா

அம்மா   பிரசுரம்:சொல்வனம்-2-11-2010 இதழ்-37

இருள் உதிரும். ஒழுகும்.
சிம்னி விளக்கு சுவரில் ஒட்டியபடி
உயரத்தில்.
அப்பா அம்மா மத்தியில்
இன்னும் யோசித்துத் தனியாகாத
பத்திரக் குழந்தை.
தரையில் மெத்தென்ற,
புடவை, வெள்ளை வேட்டியால்
புனைந்த படுக்கை.
-o00o-
காலணி தயார். தேய்த்த உடை தயார்.
பசி அறியாத வயிற்றுக்கும் வாய்க்கும்
ருசியான உணவு தயார். எல்லோரும்
சினிமா போய் வந்த நாலு மணி
நேரத்திற்குப் பின்பும் உடை மாற்றும் முன்
சூடான சாப்பாடு தயார்.
குமிட்டிதான்.
ஃபிரிட்ஜ், ஓவன் என்ற பெயரெல்லாமே
தெரியாது.
-o00o-
பண்டிகை நாள், பலகாரம், பட்சணம்
புதுத் துணி, மஞ்சள் குங்குமம்,
எண்ணெய் ஸ்நானம்
‘லட்சுமி கல்யாணம் வைபோகமே’
எல்லாம் சரியாய் இளைப்பின்றி
எப்படி நடந்தது.
அப்பாவுக்குத் தண்ணீர் தம்ப்ளரில்
கையில் தர வேண்டும்
அருமையை விட கடுமை அதிகம்.
முள்ளில் ரோஜா.
-o00o-


கிணற்று மேடையில்
குடம் வைக்க அமைத்த குழியில்
தேங்கிய தண்ணிரைக் காகம் பருகும்.
துணி காயப் போடும் கம்பிகளில்
சென்ற நிமிடம் என்பது இருந்தது
என்னும் சாட்சியாய் நீர் முத்துகள்.
ஓடுகள் குளிரும்.
துவைக்கும் கல் கழுதையை விட பொறுமை.
பொதியோடு அடி சுமக்கும்.
அதன் முகமெங்கும் அம்மை வடு.
நாற்புறமும் இறங்கிக் குமிழும் ஓடு.
நடுவில் சிறு முற்றம்.
ஒரு பக்கம் தாழ்வாரம்.
ஒரு பக்கம் கிணறு.
குட்டிச் சுவர் தடுத்த குளியலறை ஒரு பக்கம்.
நடுவில் ஆட்டுக் கல். துவைக்கும் கல்.
வெந்நீர் அறையில் அண்டாவும்
விறகும் போய் பாய்லரும் கரியும்.
சமையல் அறையில் மூலைகளில்
மண் அடுப்புகள், விறகு மறைந்து
குமிட்டியும் போய் மண்ணெண்ணெய்
ஸ்டவ்.
தரை வெறும் தரை.
தினம் பெருக்கித் துடைக்கும் வேலைக்காரப்
பெண்மணி, காய்க்கார, பால்கார, கரிக்கார,
பழக்கார பெண்கள் எல்லாரும்
அவள் பேச்சுக்காய் காத்திருப்பர்.
எல்லோருக்கும் கொடுப்பதற்கு
ஏதாவது வைத்திருப்பாள்,
அதைவிட நிச்சயம் அன்பு.
-o00o-

அம்மா (மீண்டும்)

இப்போதெல்லாம்
நான் நிறைய நேரம்
ஒதுக்குகிறேன், உனக்காக.
அலுவலக பகாசூரன்
விழுங்கியது போக,
அகமுடையாள், குழந்தை.
அம்மாவுக்கு ஏது நேரம்?
தொலைக் காட்சி, பத்திரிகை,
தூக்கம், ஆசை.
தின்னவும் குளிக்கவும் கூட
நேரம் இல்லை.
சோம்பல், மயக்கம்
தூக்கக் கலக்கம்.
இடையில் வள்ளல் நினைப்பில்
உன் அறைக்குள் நுழைகையில்
அலுவல், இலக்கியம், அரசியல்
நினைவு வரும்.
‘உம்’ கொட்டல் பேச்சா?
கொஞ்ச நேரம் - இன்னும்
கொஞ்ச நேரம் - இருந்திருக்கலாம்.
ஆனால் ஆபீஸ், ஆசை, யோசனைப் பேய்
தூக்க வெறி.
இப்போ அப்படியில்லை.
ஆபீஸில், மோட்டார் சைக்கிளில்,
பொண்டாட்டி, பெண், டி.வி.யோடு
போது போகையில்
உன்னோடு (மட்டுமே) இருக்க
முடிகிறது.
நீ போன பிறகு.
-o00o-

அம்மா (3)

அவள் ஒரு மந்திரவாதி.
இப்படித்தான் ஒரு சமயம்
தன் வளையை
சைக்கிளாய் மாற்றினாள்.
அப்பா ஆபீஸ் போனது அதில்தான்.
தங்கை பிறந்த போது
வெய்யிலைத் தணிக்க
வளையலை மின் விசிறியாக்கினாள்.
மருத்துவர் செலவு, மருந்து
என்றெல்லாம் ஆக்கியிருக்கிறாள்.
ஒருநாள் கூட அயர்ந்து படுத்ததில்லை.
அலண்டு போனதில்லை.
சோம்பல், சுணக்கம் இல்லை.
கசங்கின புடைவையோ, கலைந்த
தலையோ, தூசித் தரையோ
பத்தான பாத்திரமோ
பார்த்தில்லை.
பிறக்கும் முன் தகப்பனை
பின் பதினைந்தில் தாயை,
முப்பதுகளில்கணவனை
இழந்த துக்கத்தை
எவர் மீதும் ஏற்றியதில்லை.
எங்கும் காட்டியதில்லை.
எட்டு நாள்
ஐ.சி.யூ.வின்
கண்ணாடி மௌனத்தில்
இரும்பு இதய நர்ஸ்களின்
அசட்டு சுத்த அலட்சியத்தில்
தனிமை வாசம்.
ஒரு நாள் கூட
அதற்கு முன்
தனியாய் இருந்ததில்லை,
முழு வாழ்நாளிலும்.அம்மா (4)

எவ்வளவோ எண்ணங்கள்
எதையுமே சொல்லவில்லை.
எவ்வளவோ வண்ணங்கள்
எதையுமே பார்க்கவில்லை.
பிறந்தவுடனேயே தொப்புள் கொடியைத்
துண்டித்து விட்டார்கள்.
பிள்ளை தனி. தாய் தனி.
இது புரியாமல்……..
அவனுக்கு அவன் ஆசை,
ஆபீஸ். அவ்வளவுதான்.
அவளுக்கு இன்னமும் அவன்
குழந்தைதான், மடி மேல்.
அவன் பசி அவளது.
அவன் சட்டை கசங்கல்
அவள் மனத்தது.
அவன் வெற்றி யார் கண்ணும்
படாமல் அமைதியாய் பருக, நிறைய.
அவன் பயத்தை கவலையை
அவள் வாங்கித் துடைத்து எறிவாள்.
அவனுக்குத் துக்கமே இல்லை
எப்பவும்
நேற்றுவரை.
அவள் இருக்கிறாள்
எதையும் தீர்க்க.
ஒரு வேளை சோறு ஆறியதில்லை.
காப்பி கசந்ததில்லை.
பசி வந்ததில்லை, தாகம்
எடுத்ததில்லை.
உப்போ சர்க்கரையோ
தூக்கலாய் இருந்ததில்லை
வெளியில் இருந்து திரும்புகையில்
கதவில் பூட்டு தொங்கியதில்லை.
வெற்றி வெளியே தெரிவதற்கில்லை.
அது அவள் வாழ்வின் உள்ளே.
வீண் உணர்ச்சி, உயர்வு நவிற்சி
கிடையவே கிடையாது.
அவள் என்றும் ராணிதான்.
பயந்தோ கெஞ்சியோ
பழக்கம் இல்லை.
வீட்டின் சகல
பொறுப்புகளையும், பிள்ளைகளின்
வாழ்வின் சகல நிகழ்ச்சிகளையும்
தினசரியின் சகல காரியங்களையும்
அன்பால், ஆளுமையால்
தொப்புள் கொடி அறுந்ததையே
தெரிந்து கொள்ளாமல் அசடாய்
நிகழ்த்தியவள்.
ஒருநாள் இரண்டு நாள் அல்ல.
நாற்பத்தைந்து வருடங்கள், ஐந்து
மாதங்கள், மூன்று நாட்கள்
அவளைப் பொறுத்தவரை
அன்றுதான்
தொப்புள் கொடி
எரிக்கப் பட்டது.
அதுவரை அவன்
அவளில் ஒரு
அங்கம்தான்.
அவள் அவன்
வாழ்க்கையை வாழ்ந்த
அஞ்ஞானத்தில்
தன் வாழ்க்கையை
வாழத் தவறி விட்டாள்.

Friday, October 15, 2010

காமப் புகை நடுவே…

காமப் புகை நடுவே…

வ.ஸ்ரீநிவாசன் | பிரசுரம் : சொல்வனம் : இதழ் 36 | 15-10-2010 
பழைய ஏற்பாடு
காற்றும் ஒளியும்
ஆகாய வெளியும்
ஆச்சர்யமானவை.
காதல் வேகம்
மரணத்தின் குழந்தை.
மனித குலம்
தீர்ந்து போய்விடுமோ
என்ற பயமே - தீராத
காமமாய்ப் பரிணமிக்கும்girl-o00o-

பெண்
வளைந்த திரி சுடர் புருவம்
சிவந்த விரி சோழியுள்
விளைந்த நல் கரு முத்து விழி
கரையாத அமுதக் கன்னம்
ஆணுக்கு இதில் ஒன்றே ஒன்று போதும்.
இயற்கையின் நம்பிக்கை இன்மையால்
இன்ன பிற பலப் பல.
குரங்கு கைப் பூமாலை.
-o00o-

புணர்ச்சி
தீ தழுவிய
காகிதம்
கட்டிப் புரளும்.
காமப் புகை நடுவே
கரிக் கரு.
girl2
மோட்சம் (அ) தப்பித்தல்
காம நதியின்
கரையில் அமர்ந்து
காலையும் கையையும்
அளைந்தது போக - இப்போ
முழுவதும் அதிலேயே
மூழ்கி ஆயிற்று.
கவலையை மறக்க
காமத்தை மறக்க
கடவுள் இன்மையை சரி செய்ய.
போதையில்
புதைந்துள்ள ரகஸ்யங்கள்
வெளி வரலாம்.
ஈரலும் இருதயமும்
என்னவாகுமோ - எனவே
காமம் பாதுகாப்பானது.
மரண ஜ்வாலைக்கு
ஆஹுதியாய்
மீண்டும் மீண்டும்.
தளர்ச்சி, பறக்கும் உடல்.
உடல் உயிருக்கு விடும் சவால்.
வலியை விவரிக்க முடியாது.
சுகமும் அப்படியே.
வாசனையை வரைய முடியாதது போல.
உருகி உருகி
செயல் ஒரு சடங்காகி
வெறியில் காமம் குளிர்ந்து போய்
வெறும் வெறி மட்டும்தான் மிச்சம்.
கோடி கோடியாய் உயிர்களை
உதிக்க வைத்த இந்த மகாநதியின்
வீச்சையும் பரப்பையும்
வெற்றி கொள்ள விரையும் வெறி.
கரையோர சாக்கடைகளில்
கோவில் மணி ஒலிக்கும்.
அபிமானக் கொடி பறக்கும்.
மரணத்தை முயங்க
மனம் பதைத்து சுருங்க
தளர்ந்த கண்ணும்
அலட்சியத்தால் கோணிய உதடுகளும்
உந்நதம் பற்றிப் பேசும்
பொய் நாக்குகளை மறுதலித்த
உடலேயான உள்ளமும்
புழுவைக் கதிரவனாக்கி
அண்ட வெளியை
கமண்டலத்தில் அடைத்து
இந்திரியமாய்த் தெறிக்க
வைக்கும் நீச்சலும்…
இந்த
முடிவற்ற செயலின்
ஊடே
மூச்சுக் காட்டும்
மோட்சம்.


Sunday, October 10, 2010

தரிசனம்

தரிசனம்

வ.ஸ்ரீநிவாசன் | பிரசுரம் : சொல்வனம் - இதழ் 34 | 19-09-2010
oillamp2சுகுமாரனும், அவன் மனைவி மனோரமாவும், தாயார் பகவதியும் அந்த ஊரை அடைந்து கோவிலை நெருங்கியபோது மணி பத்து ஆகிவிட்டது. நல்ல வேளையாக அவர்கள் எட்டு மணிக்கே வேறொரு ஊரில் சாப்பிட்டுவிட்டார்கள். இந்த ஊருக்குள் நுழைந்த உடன் ஒரு கடையில் நிறுத்தி பாலும் சாப்பிட்டு விட்டார்கள்.
கோவில் இருந்த தெருவின் அடுத்த வீதியிலேயே நல்ல லாட்ஜ் ஒன்று இருந்தது. சுகுமார் தன் ஆபீஸில் இருந்த ஒருத்தரிடமிருந்து அறைக்கு சிபாரிசு கடிதம் கொண்டு வந்திருந்தான். முதல் மாடியில் குளியலறை இணைந்த, மூன்று படுக்கைகளைக் கொண்ட அறை ஒன்று கிடைத்தது.
காரிலேயே பதினைந்து நாள் டூர். ஒரு வாரத்திற்குள்ளாகவே பெண்கள் இருவரும் களைத்து விட்டார்கள். கார் ஓட்டுவது சுகுமார் நினைத்தை விட கடினமான வேலை என்பது தெரிந்து விட்டது. இரண்டு செல்ஃபோன்களின் சார்ஜர்களையும் வீட்டிலேயே மறந்து விட்டு வந்தது துன்பமாய் இருந்தது. இரண்டு செல்லுமே செத்து விட்டன. நாளை முழுதும் இந்த ஊரிலேயே தங்கிவிட்டு மெதுவாகத்தான் டூரைத் தொடரவேண்டும். ஒரு செல்ஃபோன் சார்ஜர் வாங்க வேண்டும்.
ஒரு டெலிஃபோன் இருந்தது. அறையின் அமைப்பு சின்னதாக இருந்த போதிலும் அமைதியாக இருந்தது. லாட்ஜில் அறைகள் தெருவிலிருந்து தள்ளி இருந்ததும், தெரு ஆளரவமற்று இருந்ததும் காரணமாக இருக்கலாம். படுக்கை விரிப்புகள் தலையணைகள் எல்லாம் சுத்தமாக இருந்தன. திரைச் சீலைகள் காற்றில் பம்மிக் கொண்டிருந்தன. மூன்று வழி இசைக்கு அந்த அறையில் வசதி இருந்தது. சுகுமார் அதற்கான பட்டனைத் திருகியபோது ‘கர்புர்’ என்று சப்தம் வந்தது. டி.வி.ரிமோட்டையும் காணோம்.
முகம் கழுவிக் கொள்ளக் கூட சோம்பலாக இருந்ததால் பாத்ரூம் போய்விட்டு அவன் மனைவியும், தாயாரும் படுக்கையில் படுத்துக் கொண்டார்கள். சுகுமாரனும் படுப்பதற்கு ஆயத்தமானான். படுத்தவாறே தலையருகே இருந்த ஃபோன் ரிசீவரை ஒருமுறை எடுத்து காதில் வைத்துக் கொண்டான். டி.வி.ரிமோட் கேட்கலாம் என்ற யோசனை அரைகுறையாக மனதில் உருவான சமயம் “டக்’ என்ற சப்தத்தைத் தொடர்ந்து “யெஸ் ப்ளீஸ்” என்ற ஆண் குரல் கேட்டது. சில நொடி தயங்கிய சுகுமாரன் “கோவில் காலையில் எப்போது திறக்கும்” என்று கேட்டான்.
“காலை நாலு மணிக்கு. தவிர இன்று சனிக்கிழமையில் வரும் அமாவாசையென்றபடியால் இரவு மணி ஒன்றுக்கு ஒரு விசேஷ பூஜை உண்டு. அதில் ராஜா கலந்து கொள்வார்.”
“எந்த ராஜா?”
“இந்த ஊர் ராஜா”
“ஓ அப்படியா! ரொம்ப நன்றி. இரவு 12.30க்கும் மறுபடி காலை 3.30க்கும் எழுப்ப முடியுமா?”
“நிச்சயம்”
“இரண்டு தடவையும் அவசியம் எழுப்புங்கள்”
“நிச்சயம்”
“நன்றி”
இன்று காலையிலிருந்தே பிராயாணம் செய்த களைப்பும், புழுதி படிந்த உடம்பும், தலையும், லேசான ஜலதோஷமும் அவனைத் தொந்தரவு செய்தன. ஒருவேளை தூங்கிப் போய்விட்டால் பூஜைகளைப் பார்க்க முடியாமல் போய்விடுமே என்று தோன்றியது. அதற்கு என்ன செய்ய முடியும், அதிருஷ்டம் இருந்தால் பார்ப்போம் என்று சமாதானமும் செய்து கொண்டான். ஒரு கணம் உடம்பை அலம்பிக் கொள்ள எண்ணியவன் “அப்பா” என்றவாறே படுத்துக் கொண்டு விட்டான். கையருகில் இருந்த ஸ்விட்சை அமுக்கி லைட்டை அணைத்தான். இருட்டில் கண்ணை இடுக்கிக் கொண்டு ரேடியம் வாட்சைப் பார்த்தான். மணி பத்திலேயே நின்று போயிருந்தது. பத்தரை இருக்கும் என்ற எண்ணம் முடிவுறுவதற்குள்ளாகவே தூக்கத்தின் நுழைவாயில் திறந்து விட்டது.
-o00o-
அப்போதுதான் கண் மூடினாற் போல் இருந்தது. டெலிஃபோன் பல முறை அடித்து விட்டது. ஆழ்ந்த தூக்கத்திலிருந்து எழுந்து இவன் ரிசீவரை எடுத்ததும் “கோவிலுக்குப் போக வேண்டும் என்று எழுப்பச் சொன்னீர்களே” என்ற குரல் வந்தது.
“நன்றி”.
ஒரு ஐந்து நிமிடம் கழித்துத்தான் எழுந்தான். மனோரமாவையும், தாயாரையும் எழுப்பினபோது அவர்கள் அசதியோடு சற்று கோபத்தோடே எழுந்தார்கள்.
“கோவிலுக்குப் போகலாம். எழுந்திருங்கள்.”
இருவரும் உடம்பு கெஞ்சுகிறது. காலையில் போகலாம் என்று முனகினார்கள்.
“ராஜா வருகிறாராம். இவ்வளவு ரூபாய் செலவழித்துக் கொண்டு வந்தது இதற்காகவா? தூங்கவா வந்தீர்கள்” என்று எழுப்பினான்.
அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. ஒரு வாரமாகவே அலைச்சல். அலைச்சல். மனோரமா மூன்று மாதங்களுக்கு முன்புதான் டைஃபாய்டிலிருந்து மீண்டிருந்தாள். பகவதி அம்மாளோ கால்வலியால், காலாணியால் அவதிப்படுபவள்.
அவர்களை மேலும் எழுப்ப முற்படுவதில் பிரயோஜனமில்லை, அது சரியுமில்லை, இனி தாமதம் செய்தால் தானும் பார்க்க முடியாமல் போய்விடும் என்று தான் மட்டும் வேஷ்டியும், மேல் துண்டுமாக செருப்புமில்லாமல் சுகுமாரன் கிளம்பினான். “சரி நான் போய்விட்டு வரேன். ரூமை உள்ளே தாள் போட்டுக் கொள்ளுங்கள். பத்திரம்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
கீழிறங்கி வந்தபோது வரவேற்பு மேசையில் யாரையும் காணோம். வெளியில் வந்து திரும்பி கோவில் இருக்கும் வீதியை அடைந்தான். இருட்டில் நிழலைப் போல கோவில் உயர்ந்து பிரும்மாண்டமாக நின்றது. கபந்தன் வயிறைப் போல் திறந்த வாயில் வழியாக எண்ணெய் விளக்குகள் மின்னின. மின்வெட்டோ என்னவோ சாதாரணமாக ஜகத்ஜோதியாக விளங்கும் அந்தப் பிரதேசம் இருளில் ஆழ்ந்திருந்தது.
படிகள் ஏறி கோவிலின் நுழை வாயிலை அடைந்தான். உள்ளே வெகுதூரத்தில் சுமார் ஐம்பது பேர் போல் தெரிந்தனர். மேலும் உள்ளே செல்ல பத்து அடி நடந்திருப்பான். இடுப்பு உயரத்துக்கான கம்பிக் கதவு தடுத்தது. சுவரில் “பர பர”வென்று தீப்பந்தங்கள் எரிந்து கொண்டிருந்தன.
சுகுமார் கதவைத் திறக்க முயன்றான். பூட்டி இருந்தது. காற்றோட்டமாக இருந்த அந்த பிரகாரத்தில் ஆறடிக் கொன்றாக எரிந்த தீப்பந்தங்களைத் தவிர சில கண்ணாடி விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன.
கதவுக்கு அந்தப் பக்கம் ஒரு தூண் ஓரமாக ஒருவர் படுத்து இருப்பது தெரிந்தது.
“ஏங்க” என்று அவரைக் கூப்பிட்டான். அவர் அசைவதாகக் காணோம். ராஜா வருவது இவர்களுக்கெல்லாம் பழகிப் பழகி சாதாரண விஷயமாகி விட்டிருக்கும். மறுபடி குரலை உயர்த்தி “என்னங்க, உங்களைத்தான் ஐயா, இந்தக் கதவைத் திறக்க முடியுமா?” என்று கேட்டான்.
அவர் அசைவது தெரிந்தது. பிறகு தலையை உயர்த்துகையில் சாய்வாய் இருந்த தீப்பந்தத்தின் வெளிச்சம் அவர் முகத்தில் பட்டது. சடையாய்ப் பரந்த தலைமுடியோடு அவன் பால் திரும்பிய அந்த முகத்தில் தாடியும் மீசையும் மண்டி இருந்தன. போறாததற்கு அந்த ஆளுக்கு ஒரே ஒரு கண்தான் இருந்தது.
சுகுமாருக்கு அருவருப்பாக இருந்தது. என்றாலும் “இந்தக் கதவைத் திறக்க முடியுங்களா” என்று கேட்டான். அந்த ஆள் பதிலே சொல்லாமல் மறுபுறம் திரும்பிப் படுத்துக் கொண்டார். மேற்கொண்டு அவரிடமிருந்து ஒரு அசைவும் இல்லை.
“பிச்சைக் காரப் பயலுக்குத் திமிரைப் பார்” என்று தனக்குள் சொல்லிக் கொண்ட சுகுமாரன் ஒருவேளை அந்த ஆள் பயித்தியமோ என்னவோ என்றும் நினைத்துக் கொண்டான்.
கம்பிக் கதவைப் பிடித்தவாறே வலதுபுறமாக நகர்ந்து வேறு வழி இருக்கிறதா என்று பார்த்தான். அவன் நினைத்தபடியே ஓரிடத்தில் ஒரு ஆள் நுழையுமளவுக்கு கம்பிகள் விட்டிருந்தன. அதன் வழியாகப் பிரகரத்துக்குள் நுழைந்தான்.
அவன் நினைத்ததைவிட பெரியதாய் இருந்த கோவிலின் விசாலமும், பிரும்மாண்டமும், இருட்டின் நெருக்கமும் மயக்கம் தந்தன. கோவிலின் தூண்கள் தீப்பந்தங்களின் சப்தத்தில் நிசப்தத்தைப் பெரிதாக்கி விரதம் காப்பது போல் நின்றன. அவற்றினின்றும் விவரம் இன்னதென்று இருளில் தெரியாத சிலைகள் தம்பாட்டுக்கு அவனை நோக்கின.
3166110726_00f270eb0b_b
நிலாக்காலத்தில் பிரகாராமும், திறந்த வெளியும், கோபுரமும், முற்றமும், மின்சாரத்தை லட்சியம் பண்ணாமல் பிரேமையையும், அமைதியையும் கொடுத்திருக்கும். இப்போது பரபரப்பையும் மீறி லேசான குழப்பமும் பயமும் ஏற்பட்டன.
பள்ளம் ஏதாவது இருக்குமோ, கல் ஏதாவது தூக்கிக் கொண்டு இருக்குமோ என்ற கவனிப்போடு அவன் மெதுவாகவே அந்தக் கூட்டத்தை நோக்கி நடந்தான்.
பிரகாரங்கள் மாட வீதிகளைப் போல் அகலமாக இருக்க, இடையில் இருந்த முற்றத்தின் மத்தியில் ஒரு மண்டபம் இருந்தது.
சுகுமாரன் மெள்ளப் போவதற்குள் முற்றத்தைக் கடந்து அந்தக் கூட்டம் முழுவதும் எதிர் பிராகாரத்தை அடைந்து விட்டிருந்தது. அந்தக் கூட்டத்திலிருந்து துளிக்கூட சப் தம் இல்லை. தானும் எதிர்புறம் போகலாம் என்று நினைத்தபோது மண்டபத்திற்கு வலது புறத்தில் சுமார் முப்பதடி தூரத்தில் பிரதான கோயிலை இணைக்கும் வாயிலின் கதவு திறந்தது. அங்கிருந்து மண்டபத்துக்கு மூன்று அடி அகலப் பாதை ஒன்று இருந்தது.
இருட்டுக்குப் பழகியிருக்க வேண்டிய கண்கள் தீப்பந்தத்தைப் பார்த்துப் பார்த்து மீண்டும் அரைகுறையாகவே பார்த்தன. எதிர் பிரகாரத்தில் இருந்த கூட்டம் புகைப் படலம் போல் காட்சி அளித்த போதிலும் அவர்கள் ஒருமித்த நோக்கோடு அந்த நிகழ்ச்சிக்காக காத்திருந்தது அவர்கள் காத்த அமைதியில் தெரிந்தது.
யாரோ ஒரு சிலர் கை கால்களை அசைக்கும் சப்தம், யாரோ ஓரிருவர் இருமும் சப்தம் என்று இரண்டு நிமிடம் கடந்தது.
திடீரென்று பிரதான கோவிலின் இணைப்பு வாயிலில் இரண்டு பேர் தோன்றினார்கள். அவர்கள் கையில் தீப்பந்தம் இருந்த போதிலும் அவர்கள் சரித்திர கால சிப்பாய்களைப் போல ஆடை அணிந்திருந்தார்கள் என்பது தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.
அவர்கள் ஒரு சங்கீத தாள கதியில் மண்டபத்தை நோக்கி நகர்ந்தார்கள். “ராஜா ராஜா ராஜா” என்ற மெல்லிய ஆனால் கசகசப்பான பல குரல்களும், கால்களை எம்பிப் பார்க்கும் சப்தமும் கூட ஒரு கட்டுப்பாட்டுடன் கேட்டன.
இரண்டு சிப்பாய்களைத் தொடர்ந்து அவர்களே போன்று உடையணிந்த மூன்று ஜோடி சிப்பாய்கள் தோன்றினர். அவர்களுக்கு இரண்டடி தள்ளி பூசாரியைப் போன்ற இருவர் முன்னாலும், வெண்பட்டுக் குடையையும், சாமரங்களையும் ஏந்திய நான்கு பேர் பின்னாலும் வர தலையில் ஜரிகைத்தலைப்பாகை அணிந்த ஒருவர் வந்தார்.
“அதோ ராஜா ! அதோ ராஜா !” என்ற ஏக காலக் குரல்கள்.
சுகுமார் ஒருகணம் ஆஜானுபாகுவான வெண்பட்டுக் குடை தாங்கிய சிப்பாய் ஒருவனை அவனது ஆகிருதி கருதி ராஜாவோ என்று நினைத்தான். ஆனால் அவன் சம்பிரதாயமாய் நினைத்ததற்கு மாறாக ராஜா ஒரு பட்டு வேட்டி மட்டுமே தரித்து இருந்தார். மிகவும் சிறுகூடாக சிவப்பாக ஒல்லியாக குள்ளமாக
இருந்தார். தலையில் பட்டோ ஜரிகையோ ஒரு துணியை முண்டாசு மாதிரி கட்டியிருந்தார். தலைப்பாகையைச் சுற்றிப் பூச்சரங்கள் வேறு தொங்கிக் கொண்டிருந்தன. மிக மெதுவாக வியாதியஸ்தரைப் போல ஆனால் கூட இருந்த யார் பற்றியும் சிந்தனை அற்றவர் போல் நடந்தார்.
சுகுமார் ஏமாற்றமே அடைந்தான். இந்த குட்டி ராஜாவை பொம்மை ராஜாவைப் பார்ப்பதற்கா வந்தோம் என்று இருந்தது. தானும் அறையில் தூங்கியிருக்கலாம் என்று தோன்றியது. என்றாலும் ராஜாவின் படாடோபமும் அகந்தையும் அற்ற அமைதி அவனுக்குக் கொஞ்சம் ஆறுதல் அளித்தது.
முன்னால் வந்த சிப்பாய்களும், பின்னால் வந்த வெண்குடை, சாமரம் ஏந்தியவர்களும் மண்டபத்தினைச் சுற்றி நிற்க ராஜாவும், இரண்டு பூசாரிகளும் மண்டபத்தின் படிகளில் ஏறி நான்காவது படியில் நின்றனர்.
பூசாரிகள் மெல்லிய ஆனால் துல்லியமான குரலில் சம்ஸ்க்ருதத்தில் ஸ்லோகம் ஏதோ சொன்னார்கள். ராஜா மேலும் இரண்டு படியேறி மண்டபத்தின் மத்தியில் போய் நின்று கொண்டார். சன்னதியின் புறமாகத் திரும்பி நெடுஞ்சாண்கிடையாக ஒரு முறை விழுந்து வணங்கினார். சுகுமார், எப்படி எழுந்திருப்பாரோ என்று நினைக்கையிலேயே மிகுந்த சிரமத்துடன் தானே எழுந்தார்.
இப்போது மண்டபத்தின் மத்தியில் சன்னதியை நோக்கியவாறு கூப்பிய கரங்களோடு ராஜா நின்றார். இரண்டு படி கீழே ராஜாவைப் பார்த்தவாறு பூசாரிகள் இருவரும் நின்றனர். இன்னும் சன்னதி திறக்கவில்லை. சில சடங்குகள் முடிந்ததும்தான் திறப்பார்கள் போலும். ஒரு பூசாரியின் கையில் இருந்த தட்டில் பன்முக விளக்கும் கற்பூரமும் எரிந்தன. மற்றொருவர் தட்டில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. எதிர் பிரகாரத்தில் இருந்தவர்கள் தாமே ஒருவர் பின் ஒருவராக சீரான வரிசையில் முற்றத்தில் இறங்கி மண்டபம் நோக்கி நகர்ந்தனர். ஒவ்வொருவராக ராஜாவை விழுந்து வணங்கிவிட்டு கற்பூரத்தை கண்ணில் ஒற்றிக் கொண்டு மற்றொரு தட்டில் இருந்ததை கழுத்திலும், நெற்றியிலும் இட்டுக்கொண்டு திரும்பி கோயிலின் இணைப்பு வாயிலை நோக்கி முற்றத்தின் மத்தியில் இருந்த ராஜா வந்த பாதை வழியே நடந்தனர்.
அந்தக் கூட்டத்தின் வரிசை கிட்டத் தட்ட முடிந்துவிட்ட போது வந்ததற்கு தானும் ராஜாவை வணங்கிவிட்டுப் போவோம் என்று சுகுமாரன் முற்றத்தில் இறங்கினான்.
oillamp2மன்னரை நெருங்கி மண்டபப் படிகளில் கால் வைக்கும்போது அவரது தோற்றம் இன்னும் அவன் ஏமாற்றத்தை அதிகமாக்கியது. ராஜா தொண்ணூறு வயதுக் கிழவராக தோலெல்லாம் சுருங்கி இருந்ததோடு மட்டுமின்றி அவர் உடம்பு லேசாக நடுங்கிக் கொண்டும் இருந்தது. அடுத்த இரண்டு படிகளைக் கடந்த போதுதான் அதை எதேச்சையாகக் கவனித்தான். தலைப்பாகையிலிருந்து தொங்கி ஆடிய மலர்ச் சரங்களுக்கூடாக அவருக்கு ஒரே ஒரு கண்தான் இருப்பது தெரியவந்தது. இன்னொரு கண் மூடிக் கொண்டு குழிந்து காணப் பட்டது. மேலே செல்லாமல் அதிர்ச்சியுடன் வேகமாய்த் திரும்புகையில் கற்பூரத்தட்டை பூசாரி அவன் பக்கமாய் இடிப்பது போல் நீட்ட அவன் விதிர்திர்த்து பூசாரியைப் பார்த்தான். அவன் பயந்த மாதிரியே பூசாரிக்கும் ஒரே ஒரு கண்தான் இருந்தது. இடது கண் மூடிக் குழிந்து இருந்தது. தன் ஒற்றைக் கண்ணால் பூசாரி அவனைப் பார்த்ததில் அடக்க முடியாத வெறுப்பை சுகுமாரன் துல்லியமாக உணர்ந்தான். தொண்டையிலிருந்து எழுந்த சப்தம் வாயிலேயே நிற்க தான் முதலில் நின்ற பிரகாரத்தை நோக்கி நகர்ந்து பிறகு ஓடினான். கோயிலின் வாயிலை நோக்கி ஓடுகையில் குளிர் வாடைக் காற்றினிடையே அவன் மார்பும், கழுத்தும், முகமும், முதுகும் வியர்த்துக்
கொட்டின. வாய் கைத்துப் போனமாதிரி அருவருப்பாக இருந்தது. ஒரு நேரம் அவனையும் அறியாமல் திரும்பிப் பார்க்கையில் அவன் நடந்து கொண்டது ஒரு பாதிப்பையுமே ஏற்படுத்தாது பிராகரங்களும், முற்றமும், மண்டபமும் அரவமற்று தீர்க்கமான நிசப்தத்தில் ஆழ்ந்து இருந்தது தெரிந்தது.
வேகமான பெருமூச்சுகளோடு வீதியை அடைந்து இடுப்புத் துண்டால் முகத்தையும், உடம்பையும் துடைத்துக் கொண்டு திரும்பி லாட்ஜ் அருகில் வந்தபோதுதான் கம்பிக் கதவையோ அதனருகில் படுத்திருந்த ஆளையோ தான் கவனிக்கவேயில்லை என்ற எண்ணம் தலை தூக்கியது.
லாட்ஜுக்குள் மங்கலான விளக்குகள் வராந்தாவில் எரிந்தன. வரவேற்பு மேசையில் ஒருவன் தலையைச் சாய்த்து லேசாக வாயைத் திறந்து கண்களைக் கையால் மூடித் தூங்கிக் கொண்டிருந்தான்.
சுகுமார் தன் அறையை அடைந்து கதவை உட்புறமாகத் தாள் போட்டுக் கொண்டான். இன்னும் படபடப்பு இருந்தது. மேஜையிலிருந்த தம்ப்ளர் தண்ணீரை குடித்தான். “தூங்கு மூஞ்சி !” என்று தன் மனைவியைத் திட்டினான். தாளிடாத கதவைத் திறந்து யாராவது வந்திருந்தால்தான் தெரியும் என்று நினைத்தவாறே அவளை எழுப்பி தான் பார்த்ததைச் சொல்ல எண்ணியவன் படுக்கையில் குப்புற விழுந்து ஒருமுறை விம்மிவிட்டு உறங்கிப் போனான்.
-o00o-
டெலிஃபோன் பல முறை அடித்து விட்டது. ஆழ்ந்த தூக்கத்திலிருந்து இவன் எழுந்து ரிசீவரை எடுத்ததும் “கோவிலுக்குப் போக வேண்டும் என்று எழுப்பச் சொன்னீர்களே” என்ற குரல் வந்தது.
-o00o-

Sunday, September 5, 2010

காலம்

காலம்

வ.ஸ்ரீநிவாசன் |               பிரசுரம்: சொல்வனம் : இதழ் 32 | 23-08-2010
அந்த அறை ரொம்பப் பெரியதுமில்லை; மிகவும் சிறியதுமில்லை. பனிரெண்டுக்கு பனிரெண்டு இருக்கலாம். அதன் ஒரு சுவரினருகில் போடப் பட்டிருந்த இரும்புக் கட்டிலில் மெலிந்து போன மெத்தையின் மேல் நாராயணன் படுத்திருந்தான். நல்ல ஜுரம். மத்தியான நேரம். மதறாஸ் வெய்யில். ஃபேன் உஷ்ணக் காற்றை அறையில் சுழல விட்டுக் கொண்டிருந்தது.
அவன் படுக்கையிலிருந்தவாறே அறைக் கதவைப் பார்க்க முடியும். சரியாகச் சொன்னால் அறைக் கதவுகள். இரட்டைக் கதவுகள். அதில் ஒன்று எப்போதும் சாத்தியும் இன்னொன்று திறந்தும் இருக்கும். ராத்திரியில் கூட காற்றுக்காக. திறந்த கதவின் வழியாக மாடிப் போர்ஷனுக்குப் போகும் படிகளும் அதைத் தாண்டி பின் கட்டிற்குப் போகும் வழியை இணைக்கும் முற்றமும் நடுக் கட்டு வரையிலுமான பாதையும் தெரியும்.
அதன் வழியாக அம்மாவின் தலை தெரியாதா என்று நாராயணன் பார்த்துக் கொண்டிருந்தான். ஜுரமும், குளிரும், போர்வையின் இதமும், உறுத்தலும், கண்களின் எரிச்சலும் அவனுக்கு லேசான தலை சுற்றலைத் தந்தன.
அம்மா வருகையில் ஏதாவதுகொண்டு வருவாள். கஞ்சி, நார்த்தங்காய் ஊறுகாய், ஜூஸ்.. .. ஏதாவது. அவர்கள் போர்ஷனுக்கு சமையலறை, நடுக் கட்டையும் தாண்டி, பின் கட்டில் இருந்தது. பின் கட்டிற்கும் முன்னறைக்குமாக அம்மா இத்தனை வருஷமாக நடந்த நடையில் இந்த உலகத்தை எத்தனையோ முறை சுற்றி வந்திருக்கலாம்.
இது மாதிரி அவன் எவ்வளவோ தடவை ஜுரம் வந்து படுத்திருக்கிறான். தரையில், பின்பு அப்பா போன பிறகு அவர் கட்டிலில். அம்மா ந்யூஸ் பேப்பரை பற்ற வைத்து அதில் வெந்நீர் வைத்து எத்தனையோ நாள் பாதி ராத்திரியில் தாகத்திற்கு கொடுத்திருக்கிறாள்.
ஜுரம் வந்ததும் டாக்டர் ராமராவ் டிஸ்பென்ஸரிக்குப் போய் விடுவார்கள். அது நான்கு அறைகள் கொண்ட டிஸ்பென்ஸரி. இரண்டு அறைகளில் பெஞ்சுகள் இருக்கும். மூன்றாவது அறைக்கு முன் ஒரு மரத் தடுப்பு. அதற்குள்ளும் ஒரு பெஞ்சு. பிறகு கடைசி அறையில் மருந்து கலக்கும் பெரிய பியானோவைப் போன்ற மர மேஜை.
டாக்டர் ராமராவ் நாடகங்களில் வரும் டாக்டர்களைப் போல ஓயாமல் பேசிக் கொண்டிருப்பார். அவன் குழந்தையாய் இருந்ததிலிருந்து அவர்தான் குடும்ப டாக்டர். அம்மா அவனைத் தோளில் தூக்கிக் கொண்டு டாக்டர் வீட்டுக்கு வந்திருக்கிறாள். இப்போது அவனுடைய இருபத்தைந்து வயதிலும் அவர்தான் டாக்டர். அவர் டிஸ்பென்ஸரியில் போய் எத்தனை நாள் உட்கார்ந்து கொண்டிருந்திருப்பான். சில சமயம் படுத்துக் கொண்டும். ரொம்ப சில சமயம் டாக்டரே வீட்டிற்கும் வந்திருக்கிறார்.
நாராயணன் ஒருக்களித்துப் படுத்துக் கொள்ள முயன்றான். கைகளையும் கால்களையும் கட்டிப் போட்ட மாதிரி இருந்தது. முகத்தின் மேல் ஒரு பாரம். அவன் இதயம் அடிப்பதோ நுரையீரல் துடிப்போ அவனுக்கே பக் பக் என்று கேட்டது. அதையும் ஃபேனின் கடக் கடக்கையும் தவிர வேறு சப்தமில்லை. கண் கதவின் மேலிருந்து அகலவில்லை. அம்மா இன்னும் வரவில்லை. வருவாள். ஏதாவது பண்ணி கொண்டு வருவாள். இப்போவெல்லாம் மருந்தை அவனே சாப்பிட்டு விடுகிறான். நான்கைந்து வருஷங்களுக்கு முன்பெல்லாம் கூட அம்மாதான் தருவாள். அப்பாவுக்கு எத்தனை விதம் விதமான மத்திரைகளை வேளா வேளைக்கு எடுத்துத் தந்திருப்பாள். மருந்து சாப்பிட சின்னக் குழந்தையைப் போல் அலைக் கழிப்பதில் அவன் அப்பா மாதிரிதான் இருந்தான். இப்போது மாறி விட்டான். கருட மூக்கு ஒன்றைத் தவிர வேறொன்றிலுமே அவன் அப்பா மாதிரி இல்லை.
தலை தெறித்தது. சுற்றலும் நிற்கவில்லை. அவனுக்கு எப்பவுமே ஜுரம் பிடிக்கும். லேசான ஜுரத்தோடு முற்றத்தில் விழும் மழையைப் பார்த்துக் கொண்டே யிருப்பான். அந்தச் சேர்க்கை அவனுக்குப் பிடிக்கும். படித்துப் படித்துத் தலை வலி வந்து ஜுரம் வந்திருக்கிறது. மழையில் நனைந்து. காரணமேயில்லாமல். வாய்க் கசப்பு சில சமயம் தாள முடியாது. முன்பெல்லாம் ஒவ்வொரு முறை மாத்திரையை விழுங்கும் போதும் தொண்டையில் சிக்கிக் கொள்ளுமோ என்ற கலவரம் வரும். அதனாலேயே அதைத் தவிர்க்கப் பார்ப்பான். ஜுரம் தீர்ந்த பிறகும் சூட்டால் உதடுகள் காய்ந்து உலர்ந்து உரிந்து கொண்டிருக்கும். அதைக் கூடப் பிய்த்துப் போடாமல் சும்மா இருப்பான். பிய்த்தால் ரத்தம் வந்துவிடுமோ என்று பயம்.
ஏன் இன்னும் வரவில்லை? அவனுக்கு ஆயாசமாக இருந்தது. இந்த வாட்டி வயிற்று வலியோடு ஜுரம் வந்துவிட்டது. குளிர் வேறு. பனியன், முழுக்கைச் சட்டை, லுங்கி, மேலே போர்வை. எல்லாவற்றையும் மீறி குளிரியது. கையைச் சட்டைக்குள் விட்டுக் கொள்ளலாம் என்றால் அசைக்கவே முடியவில்லை. நடு நெஞ்சில் என்னவோ உறுத்தியது, நீளமான பல்லி மாதிரி. அது ரொம்ப காலமாக நகராமல் அங்கேயே இருந்த மாதிரி தோன்றியது.
ஜுரத்தோடு தலை சுற்றல் வந்தால்தான் ரொம்பப் பிரச்னை. தலையைக்கொஞ்சம் உயர்த்தினால் போதும் அதல பாதளத்துக்குள் சரிவது போல பயங்கரமாக இருக்கும்.
குழந்தையாய் இருக்கையில் ஒரு முறை ஆகாரம் வேண்டாம் என்று மறுத்து அழுதிருக்கிறான். அழுது ஜுரம் ஜாஸ்தியாகப் போகிறதே என்று அம்மாவும் ஒன்றும் தரவில்லை. ‘அய்யோ அம்மா ! பயமா இருக்கே ! பள்ளத்துக்குள்ளே விழறேனே ! பிடிச்சுக்கோ ! பிடிச்சுக்கோ !’ என்று கத்தியிருக்கிறான். அம்மா அலறி அடித்துக் கொண்டு பக்கத்துப் போர்ஷன் மாமியைக் கூப்பிட, அவள், அனுபவஸ்தி, ஆறு குழந்தை பெற்றவள், ‘குழந்தைக்கு ஆகாரம் கொடுத்தியா’ என்று கேட்டிருக்கிறாள். அம்மா இல்லையென்றதும், ‘முதல்லே அதைக் கொடு’ என்று பாலாடையால் புகட்டி, பிறகுதான் தலை சுற்றல் நின்றிருக்கிறது.
ஒரு முறை வேடிக்கைக்காக ஒன்று செய்தான். அப்பா அவனுக்கு ஜுரம் வந்தால் கதை சொல்லிக் கொண்டே இருப்பார். ஒரு தடவை அவர் மடியில் படுத்துக்கொண்டே கண்களை மூடிக் கொண்டு ‘உம்’ கொட்டாமல் இருந்தான். குழந்தை ‘உம் கொட்டவேயில்லையே’ என்று அப்பா பயந்து போய் ‘நாணு ! நாணு !’ என்று அவனை உலுக்கினார். அவன் சும்மா இருந்தான். அம்மாவும் வந்து கலவரத்தோடு அழைத்தாள். சிறிது கழித்து கண்ணைத் திறந்தான். ‘என்னடா என்னடா ‘ என்று அப்பாவும், அம்மாவும் கேட்டார்கள். அவன் வெறுமனே சிரித்து ‘கதை சொல்லுங்கோப்பா’ என்றான். அப்பாவையும் அம்மாவையும் ஏமாற்றினது சந்தோஷமாகவும், பயமாகவும் இருந்தது. நடித்தேன் என்று இன்று வரை சொல்லவில்லை.
முற்றத்தில் வெய்யில் நிரம்பி வழிந்தது. ஆளரவமே இல்லை.
கண்களை மூடிக் கொண்டான்.
ஒரு தடவை ஜுரம் விடவேயில்லை. அம்மை போட்டி விட்டது. ஒரு ஜட்டியை மட்டும் போட்டுக் கொண்டு ஒற்றைத் துணியில் படுக்கை. வாழையிலைக்குப் போகவில்லை. வாய்க் கசப்பு தாளவில்லை. நலைந்து அடி தூரத்தில் இருந்த பீரோ கண்ணாடியில் பார்த்தபோது முகமே தெரியவில்லை. ஏதோ புகைதான் தெரிந்தது.
அன்று இரவு. கதவு வழியாக முற்றத்தில் பெரிய வாண வேடிக்கை நடப்பதைப் பார்த்தான். முற்றத்தில் ஐந்து முகங்களைக் கொண்ட தெரு விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. விர் விர்ரென்று பலரும் சைக்கிளில் பறந்தனர். பிளாஸ்டிக் சாமான்கள் விற்கும் பஜார். தலையில் கர்ச்சீப்பை குல்லா மாதிரி கட்டிக் கொண்டு லுங்கியோடு யார் யாரோ சைக்கிளில் பறந்தனர். கொஞ்ச நேரத்தில் அவன் அவனிலிருந்து கிளம்பி இரண்டு அடி மேலே போய்க் குப்புறத் திரும்பி கீழே பார்த்தான். கோமணம் போன்ற ஜட்டியுடன் உடல் முழுக்க, முகம் முழுக்க வார்த்திருந்த வட்டங்களுடன் கிழித்த நாராக செயலற்றுக் கிடந்த உடம்பைப் பார்த்தான். எத்தனை நேரம் வாண வேடிக்கை, பிளாஸ்டிக் பஜார், சைக்கிள்களின் விர் நடந்ததென்று தெரியாது. அப்போது காலமில்லை. தன்னையே தான் ஒட்டின்றி அனுதாபமின்றி வெறுமனே பார்த்துக் கொண்டிருந்து விட்டு மல்லாந்து மீண்டும் கீழே வந்தான்.
காலையில் அம்மா ‘நாணு நாணு’ என்று மெதுவாக அழைத்தெழுப்புகையில் கண் விழித்த போது எல்லாம் அமைதியாய் இருந்தது. முதல் நாள் கண்ணாடியில் தெரியாமல் மறைந்து போயிருந்த முகம் இப்போது தெரியவாரம்பித்தது. அப்புறம் இருபத்தியோரு நாட்கள் கழித்துதான் தலைக்கு ஜலம் விட்டது, வேப்பிலை மிதக்கும் இதமான வெந்நீர். இது நடந்து ஐந்தாறு வருடங்களாகி விட்டன.
இப்போது கூட ஜுரம் எத்தனை நாளாக இருக்கிறது என்று தெரியவில்லை. அம்மையாய் இருக்குமோ. மனம் சொன்ன உடனே கன்னத்தில் போட்டுக் கொள்வதாய் நினைத்துக் கொண்டான். கையை வெளியே எடுக்க பயமாய் இருந்தது. குளிர். சங்கிலியில் கட்டிய மாதிரி.
ஒரே வலி. எரிச்சல்.
அவன் நெற்றியில் ஒரு கை படர்ந்தது. கை ஜில்லென்று இருந்தது. ஐஸ் மாதிரி இருந்தது. அம்மா. கண்களை அவன் திறக்கவேயில்லை. ஏதாவது சாப்பிடக் கொண்டு வந்திருப்பாள். வாயை மட்டும் திறக்க வேண்டும். மெதுவாக கை நெற்றியிலிருந்து அகன்றது. அம்மா சொல்லட்டும் வாயைத் திறக்கலாம் என்று இருந்தான். அம்மா சொல்லவேயில்லை. சிறிது கழித்து வாயைத் திறக்க எண்ணி, சிறிய கீற்றாக கண்களைத் திறந்து பார்த்தான்.
கண்ணாடி அணிந்து கொண்டு குப்பென்று நரைத்த தலையோடு குண்டாக ஒரு மூதாட்டி நின்று கொண்டிருந்தாள். இது யார் நம்ம வீட்டிற்குள்? அவள் கண்களில் கலவரமும் கண்ணீரும் தெரிந்தன. அவளருகில் வேள்ளை கவுனும், குல்லாயும் அணிந்த ஒரு பெண்ணும், நடு வயது தாண்டிய, லேசான வழுக்கையோடும், நீண்டு வளைந்த மூக்கோடும் இருந்த சிவத்த ஆள் ஒருவரும் நின்று கொண்டிருந்தார்கள். அந்த மூதாட்டி அவரிடம் “ஜுரம் குறையவே இல்லையேடா. அப்பா இது மாதிரி கிடந்ததே இல்லையேடா. எனக்கு பயமா இருக்கேடா” என்றாள். அவர் ‘குறைஞ்சுடும்மா. குறைஞ்சுடும். டாக்டர்லாம் பார்க்கிறாளோல்லியோ. கவலைப் படாதே’ என்றார்.
அம்மாவைத்தான் இன்னும் காணோம்.