FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Tuesday, July 7, 2009

திரும்பிப் பார்த்தலும் திரு அல்லிக் கேணியும்.

திரும்பிப் பார்த்தலும் திரு அல்லிக் கேணியும்.

வ.ஸ்ரீநிவாசன்.

‘நாஸ்டல்ஜியா’. - அகராதிப்படி நாடு / வீடு திரும்புதல் பற்றிய பேரவா, கடந்த காலத்தைப் பற்றிய உணர்ச்சி மிகு ஏக்கம். பழைய அனுபவங்களைத் திரும்பிப் பார்த்தலைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப் படுகிறது. நாஸ்டல்ஜியாவை உணர்ச்சி மிக உபயோகப்படுத்திக் கொண்டதாலேயே வெற்றி பெற்ற திரைப் படங்கள் எங்கும் உண்டு. சமீபத்தில் தமிழில் ‘அழகி, ஆடோகிராஃப்’. குரோசாவாவின் ‘ட்ரீம்ஸ்’ கடந்த காலம் என்னும் கட்டுக்குள் சிக்காமல் எக்காலத்துக்கும் ஏற்றதான க்ளாஸிக். மற்றும் பெர்க்மனின் ‘ஃபேன்னி அண்ட் அலெக்ஸான்ட்ரா’.

சொந்த ஊர் உணர்ச்சிமிகப் பேசுபவர்களை நான் சந்தித்திருக்கிறேன். சொந்த ஊரில் போய்தான் சாக வேண்டும் அல்லது சாவதற்காவது சொந்த ஊர் போய்விட வேண்டும் என்கிற நண்பர்கள் எனக்கு உண்டு. சொந்த ஊர் தண்ணீர், வாசனை, பாஷை பற்றி ஏங்குபவர்களை எனக்குத் தெரியும். அது போன்ற உணர்வுகள் என்னை அலைக்கழித்ததில்லை.

ஏதோ ஒரு ஊரிலிருந்து பல வருட இடைவெளியில் சென்னை சென்டிரல் ஸ்டேஷனில் இறங்குகையில் ஒரு பரிச்சய உணர்வு (ஃபெமிலியர் ஃபீலிங்) சில நொடிகள் இருக்கும். ஏழு மணி ஆகிவிட்டால் சூரியன் உதித்து இத்தகைய உணர்வுகளைச் சுட்டெரித்துவிடும்.


இருபத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு மாலை அசோகமித்திரன் அவர்களின் 75வது வயது ஆரம்ப விழாவிற்காக திருவல்லிக்கேணி சென்றேன். மௌன்ட் ரோடில் (அண்ணா சாலை) இந்து ஆஃபீஸில் இறங்கி எதிர் திசையில் ஒரு பஸ் பிடித்து வாலாஜா சாலை வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இறங்கியதும் ஒரு பாதுகாப்பு உணர்வு, ஒருஅமைதி கலந்த மகிழ்ச்சி சூழ்ந்தது. அப்போது புரிந்தது சொந்த ஊருக்காக ஏங்குபவர்களைப் பற்றி. இந்த ‘நாஸ்டல்ஜியா’ உண்மையில் உடல் சம்பந்தப் பட்டது என்று தோன்றுகிறது; பழகிய இடம், சூழல், காற்று, வானம், வாசம் என்று. புது இடத்தில் தூங்க மறுக்கும் உடலின் நுண்புலனுணர்வு போல். இது வழக்கம் போல் நினைவுகளால் அபகரிக்கப் பட்டு பூதாகாரப் படுத்தப் படுகிறது. காமம், சாப்பாடு போல் கொஞ்சம் உடலாலும், பெரும்பாலும் மனதாலும் பேணப்படுவதாக இருக்கிறது. ‘எடர்னல் ப்ரெஸென்ட்’ புலனாகையில் இவ்வுணர்வுகள் மங்கிவிடுகின்றன.

இவ்விருபத்தெட்டு வருடங்களில், நான் பிறந்ததிலிருந்து இருபத்தேழு வருடங்கள் வாழ்ந்த திருவல்லிக்கேணி சிறியதாகி இருந்தது. ‘பெரிய தெரு’ சிறிய தெருவாகி இருந்தது. மிக அகலமான தெருக்கள் என்று நினைவில் இருந்தவை குறுகி இருந்தன. என் பால்ய பருவத்தில் பதிவாகி இருந்த நினைவுகளில் இருந்த திருவல்லிக்கேணி அப்போதிருந்த என் வளர்ச்சியைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை போலும். மேலும் கட்டடங்கள் பெரும்பாலானவை இப்போது இரண்டு மூன்று மடங்கு உயரம் கூடி இருந்தமையும் ஒரு முக்கிய காரணம். முப்பத்தைந்து வருடங்கள் கழித்து சென்னை திரும்பிய என் நண்பனும் இதே மாதிரி உணர்ந்ததைச் சொன்னான். என்னை விட உயரமான அவனுக்குத் திருவல்லிக்கேணி இன்னும் சிறியதாக ஆகி இருக்கும்.

திருவல்லிகேணியிலிருந்துதான் பார்த்த சாரதி பெருமாள் பரிபாலனம் செய்து வருகிறார். அவரது கோயிலின் குளம்தான் அல்லிக்கேணி எனும் அழகு தமிழ்ப்பெயர் கொண்டது. வைணவத் தமிழின் எழிலுக்கு இணை இருக்கிறதா என்ன? பார்த்தனின் சாரதி பெரிய மீசையுடன், அம்பு பட்ட தழும்புகளோடு ஆஜானுபாகுவாய் நிற்கிறார். கோவிலின் வாயிலிலிருந்தே காணக்கிடைக்கிறார்.



ஒரு காலத்தில் சனிக்கிழமை தோறும் சென்று தரிசித்து வந்த கோயிலுக்கு, கடந்த சுமார் நாற்பது வருடங்களில், நான்கைந்து முறையே சென்றிருக்கிறேன். சமீபத்தில் திரு நாஞ்சில் நாடன் அவர்களோடு நானும் இயக்குனர் சுகாவும் சென்றோம். அந்தக் கோவிலில் எந்த சந்நிதி எங்கே இருக்கும், என்ன சம்பிரதாயம் போன்ற விஷயங்கள் குறித்து ஒன்றும் தெரியாமல் இருந்த என்னை “அய்யங்கார் என்று அபாண்டமாக பழி சுமத்தப் படுகிற’ (உபயம் ‘கவிஞர்’ கனிமொழி பற்றிய ‘சோ’ வின் பிரயோகம்) என்கிற அடைமொழியோடு விளித்து அவருக்கே உரிய நகைச்சுவையோடு கிண்டல் செய்தார் சுகா.

இக்கோவிலில் இருக்கும் மூலவர் சிலை, கடவுளின் குறியீடு எனில் எதிரே கடற்கரைக்குக் கிழக்கே நீண்ட நெடிய நீலக்கடலாய் அவரது ஸ்தூல சரீரம். பைந்நாகங்கள் யுகயுகமாய் கரை சேர்ந்து கடல் மீண்டு கொண்டிருக்கின்றன.

மெரினா கடற்கரை. திருவல்லிக்கேணிவாசிகள் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை என்கிறார்கள்.


கடலெதிரில் சென்னை பல்கலைக் கழகம், மாநிலக் கல்லூரி, இராணி மேரிக் கல்லூரி, விவேகாந்தர் இல்லம் ஆகியவை.

நட்பு யாதெவற்றையும் விட உற்றதாய் இருந்த ஒரு காலத்தில் எங்கள் நண்பர் குழாத்தின் மாலைகள் மற்றும் முன்னிரவுகளெல்லாம் இக்கடற்கரையில்தான் கழிந்தன. கடலின் பின்னணியில் எவ்வளவு யுகங்களாய் மனிதனின் சிரிப்பும், கண்ணீரும், காதலும் இங்கு காற்றில் கலந்து கரைந்து கொண்டிருக்கின்றன. எவ்வளவு பேருக்கு வாழ்வாதாரமாய் கடலும், அதன் கரையும்.

இங்குதான் மகாகவி பாரதி பேசியிருக்கிறார். வ.உ.சியும் அவர் குருநாதர் பால கங்காதர திலகரும், சுப்ரமணிய சிவாவும் பேசியிருக்கிறார்கள். ராஜாஜியும், காமராஜரும் சேர்ந்து பேசியதை நானே கேட்டிருக்கிறேன். சர்வ கட்சி கூட்டம் ஒன்றில் (சீனப் போர் சமயம் என்று நினைக்கிறேன்) கலைஞர் முதலிய பெரும் பேச்சாளர்கள் பேசியவற்றையெல்லாம் விட கவிஞர் கண்ணதாசன் ‘கடலெங்கும் அலை கொண்ட மணல் எங்கும் தலை’ என்று ஆரம்பித்துப் பேசிய பேச்சு அங்கு திரண்டிருந்த மக்களை அக்கணமே போர்க்களத்திற்குச் செல்ல தயாராக்கும் விதத்தில் அமைந்தது. சோ அவர்கள் பேசிய மாபெரும் பொதுக் கூட்டத்தைக் கேட்டிருக்கிறென். பெரியார் அவர்கள் வராததால் அவர் பேச்சை திரு வீரமணி அவர்கள் படிக்கக் கேட்டிருகிறேன்.


கடற்கரை அல்லாத திருவல்லிக்கேணியின் பிற பகுதிகளில் ம.பொ.சி., ஜெயகாந்தன், நா. பார்த்தசாரதி, நெல்லை ஜெபமணி போன்றவர்களின் பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன். 1967ல் அண்ணாவின் தேர்தலுக்கு முந்தைய கடைசிப் பேச்சு திருவெட்டீஸ்வரன் பேட்டையில் மதியம் நடந்தது. அப்பேச்சைக் கேட்டேன். பல பிராமணர்கள் தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்ட தேர்தல் அது. பின்னர் பாலர் அரங்கத்தில் (கலைவாணர் அரங்கம்) ராஜாஜி பிறந்த நாளுக்கு முதலமைச்சர் அண்ணா வந்திருந்து ஆங்கிலத்தில் ஆற்றிய உரையையும் கேட்டிருக்கிறேன். நாவலர் நெடுஞ்செழியன், சின்ன அண்ணாமலை, நாஞ்சில் மனோகரன் முதலியவர்களின் பொதுக் கூட்டங்களுக்கும் போனதுண்டு.

நான் படித்த இந்து உயர் நிலைப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரின் மேன்மையும் இப்போது புரிகிறது. பழுப்பேறிய, பல முறை துவைத்துக் கட்டப் பெற்ற வேட்டிகளோடும், கசங்கிய, சிலசமயம் கிழிந்த சட்டைகளொடும் வந்து பாரபட்சம் இன்றி, அனைத்து மாணவர்களையும் ஒன்றாக பாவித்து பாடம் சொல்லிக் கொடுத்த அவர்களது வறுமையில் செம்மை வாழ்க்கைக்கான உரத்தை இளமையிலேயே எங்களுக்கு அளித்தது.

பிறகு படித்த மாநிலக் கல்லூரி பிரம்மாண்டமானது. சுதந்திரம் மிக்கது. இருபாலரும் படித்தது. ‘ப்ரின்ஸஸ் ஆஃப் ப்ரெஸிடென்சி’ என்பார்கள். வாழ்க்கையின் சிக்கல்கள், பிரிவினைகள் அனத்தும் லேசாக புரிய ஆரம்பித்திருந்த காலம். கல்லூரிக்கு அருகில் இருந்த மாணவர் விடுதி பின் வரும் காலம் எப்படி இருக்கும் என்பதற்கு அடையாளமாய் இருந்தது. இன மற்றும் சாதி உணர்வுகள் நீறு பூத்து இருந்த அந்தக் காலத்தில் ஒரு ‘சிங்’ மாணவர் தலைவராக முடிந்தது.

அம்பு பட்ட மால் தென்கிழக்கில் என்றால் வெட்டுப் பெற்ற ஈஸ்வரன் வட மேற்கில் ஆட்சி செய்கிறார். திருவெட்டீஸ்வரன். அவரைத் தாண்டிப் போனால் இசுலாமியர் வாழும் பகுதிகள்.

திருவல்லிக் கேணியில் ஸ்டார் டாக்கீஸ், பாரகன் தியேட்டர் இருந்தன. வட மேற்குப் பக்கம் வசிப்பவர்களுக்கு தேவி, பிளாசா, சாந்தி, அண்ணா, ஓடியன், க்ளோப், மிட்லேண்ட் மற்றும் கெயிட்டி, கேஸினோ தியேட்டர்கள் நடக்கிற தூரம்தான். கதவுகள் எல்லாம் திறக்கப் பட்ட சினிமாக் கொட்டகைகளில், காற்றாட நடக்கும் இரவுக் காட்சிகளும், சிகரெட் புகையால் சூழப்பெற்று தேவலோகமாகும் அவற்றின் இடைவேளைகளும், காட்சி முடிந்து திரும்புகையில் திறந்திருந்து விருந்தோம்பும் பால் கடைகளும் சுகமானவை.

ஹிந்து உயர் நிலைப் பள்ளியில் கர்நடக சங்கீத கச்சேரிகளும், கதா காலட்சேபங்களும் நடைபெறும். வாரியார் சுவாமிகள், பால க்ருஷ்ண சாஸ்திரிகள் போன்றவர்கள் சுவை குன்றாது கூறிய இராமாயண, மகாபாரதக் கதைகள் இன்னமும் நினைவில் உள்ளன. என்.கே.டி கலா மண்டபத்தில் நாடகங்கள் தொடர்ந்து நடந்தன. கே.பி. சுந்தராம்பாள் போன்றவர்கள் பாடினார்கள்.

‘அவமரியாதை’ வேரூன்றவில்லை. மனிதரிடையே பரஸ்பர நம்பிக்கை இருந்தது. எல்லோருமே பெரும்பாலும் மத்யதர, கீழ் மத்யதரத்தைச் சேர்ந்தவராய் இருந்தார்கள். பொருளாதார ஏற்ற தாழ்வுகளின் இடைவெளி கம்மியாய் இருந்தது. அரசியல்வாதிகளில் கௌரவமானவர்கள், நேர்மையாளர்கள் மதிக்கப் பட்டார்கள்.’ஜென்’னில் கூறுவதைப் போல் ‘A careless trust on the divine occasion of our dust’ இருந்தது.

‘ரத்னா கேஃப்’தான் மிக உயர்ந்த சிற்றுண்டிச் சாலை. அவர்கள் பரிமாறிய சாம்பாரும், கொடுத்த காபியும், ஸ்தல புராணங்களில் இடம்பெறும் தகுதி வாய்ந்தவை. அதை தவிர பைக்ராப்ட்ஸ் ரோடு (பாரதி சாலை) முழுவதும் சிற்றுண்டிசாலைகள் தான். ‘ரோலக்ஸ்’ ‘புஹாரி’ மற்றும் பல அசைவ உணவகங்களும் இருந்தன. தனியார் ‘மெஸ்’கள் பல உண்டு. திருவல்லிகேணியை ‘பிரம்மச்சாரிகளின் சொர்கம்’ என்று இதனால்தான் சொல்வார்கள். அப்போதே சென்னையில் (மதறாஸில்) சில பிரம்மச்சாரிகளின் (மற்றும் அல்லாதவர்களின்) சொர்கம் அல்லது நரகமாக கோடம்பாக்கம்.

சென்னை, நகரமாக மெடாமார்ஃபாஸிஸ் ஆகிக் கொண்டிருந்த ஆரம்ப காலத்திலேயே அதன் முக்கிய குடியிருப்புப் பகுதிகளில் ஒன்று திருவல்லிக்கேணி. 1ம் எண் பேருந்து திருவல்லிக்கேணி யிலிருந்து பாரிமுனை செல்லும். 2 ம் எண் பேருந்து தங்கசாலை செல்லும்.

இப்போது எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் என்று அழைக்கப் படும் ‘கிரிக்கட்’ மைதானம் அப்போது மெட்றாஸ் க்ரிக்கட் க்ளப்’ (எம்.சி.சி.) என்று அழைக்கப் பட்டது. இது சேப்பாக்கம் என்கிற திருவல்லிக்கேணி பகுதியைச் சார்ந்தது. இதைத்தவிர மாநிலக் கல்லூரிக்கு சொந்தமான மெரினா க்ரௌண்ட்ஸிலும் கிரிக்கட் நடக்கும். க்ருபால் சிங், வி.வி.குமார்,வெங்கட்ராகவன் முதலிய சூப்பர் ஸ்டார்களோடு ரசிகர்கள் அருகிலிருந்து அளவளாவி, தொட்டுத் தழுவி மகிழ்ந்திருந்த இடங்கள் இவை.

மகாகவி வாழ்ந்த இடம் பார்த்த சாரதி கோவிலின் மாட வீதிகளில் ஒன்றான துளசிங்கப் பெருமாள் கோவில் தெரு. தமிழ் தாத்தாவின் வீடு திருவெட்டீஸ்வரன் கோவிலின் மாட வீதிகளில் ஒன்றான பிள்ளையார் கோவில் தெருவில் உள்ளது. வீட்டின் பெயர் தியகராஜ விலாசம். சாமிநாதைய்யரின் நண்பர் தியாகராஜ செட்டியாரின் நினைவாக. இதே தெருவில் சி.சு. செல்லப்பா பல காலம் வசித்து வந்தார். எழுத்து பத்ரிகை நடந்தது இங்கிருந்துதான். ‘கசடதபற’ திருவல்லிக்கேணியிலிருந்துதான் வந்தது. நா.பா.வின் ‘தீபம்’ பத்ரிகை ஆஃபீஸ் எல்லீஸ் சாலையில் இருந்தது. ‘கணையாழி’ அலுவலகம் சிலகாலம் பெல்ஸ் சாலையில் இருந்தது.

இந்து உயர் நிலைப் பள்ளியைத் தவிர, கெல்லட் பள்ளி, நேஷனல் பாய்ஸ் ஹை ஸ்கூல், நேஷனல் கேர்ல்ஸ் ஹை ஸ்கூல், முஸ்லிம் உயர் நிலைப் பள்ளி, லேடி வில்லிங்டன் பள்ளி எல்லாம் இங்கிருந்த பெரிய பள்ளிகள். ஜாம்பஜார் முக்கியமான மார்க்கெட். அருகிலேயே பெரிய மசூதியும், ஆற்காட் நவாப் அரண்மனையான ‘அமீர் மஹாலு’ம் இருக்கும்.

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலைதான் நீண்ட பெரிய சாலை. இதில் ஒருகாலத்தில் ட்ராம் வண்டிகள் செல்லுமாம். நான் டிராம் வண்டிகளுக்காக போடப் பட்ட தண்டவாளங்களைப் பார்த்திருக்கிறேன்.

தமிழர் தலைவர்களான காஞ்சிபுரத்து அண்ணாதுரை, இலங்கையில் பிறந்த எம்ஜியார் ஆகியோரது சமாதிகள் அடங்கிய நினைவிடங்கள் திருவல்லிக்கேணிக்கு வட கிழக்கு விளிம்பில் உள்ளன. அதன் தென் கிழக்கில் உள்ள கிருஷ்ணாம்பேட்டையில்தான் - என்னை விட வயதில் மிக மூத்தவர்களான, பசும்பாலூற்றிய யசோதா, கோதண்டம் தம்பதியினரும், எருமைப் பால் ஊற்றிய சகுந்தலாவும், அவரது மகன் பதியும், எதிரில் இருந்த ரிக்ஷா வண்டி நிலையத்தில் கைரிக்ஷா அயராது ஓட்டிய அன்பே வடிவான (சிறுவனான என்னை காசு வாங்காமல் சும்மா மாட வீதிகளைச் சுற்றி ஒரு சுற்று ஓட்டி வருவார்கள். என் அப்பா ஒருவர் வாசலுக்கு வரும்போது மட்டும் எழுந்து நிற்பார்கள். அவர் அவர்களை மரியாதையாக நடத்துவார். மழை வந்தால் வீட்டு வாசற்கதவுகளைத் திறந்து விட்டு விடுவார். அவ்வளவுதான்) முருகேசனும், சக்கரையும், முனுசாமி சகோதர்களும் (அண்ணன் தம்பி இருவர் பெயருமே முனுசாமிதான்) சின்னத் தம்பியும், மதுரையும், அவர்களது மனைவியரும், ராதா என்கிற மதுரையின் மகளும் (“பாவம்டா அவ” என்று அவளுக்கு மட்டும் கொஞ்சம் அதிகமாகவே சாதம் கொடுப்பாள் என் தாயார். அவள் பாவம்டா என்று சொன்னதன் காரணத்தை பால்வினை நோய் என்றால் என்ன என்று படித்து தெரிந்து கொண்ட வயதில் நான் தெரிந்து கொண்டேன்), எதிர்வீட்டு முதலியார் பாட்டியும், என் முதல் ஆசிரியர் நாயுடுவும், மீசைக்கார நாயக்கர் தாத்தாவும், லாலா என்று சகட்டுமேனிக்கு அழைக்கப் பட்ட வட இந்தியர்களும், எங்கள் ஆஸ்தான தையற்காரர்களான இப்ரஹீமும், முஸ்தாபாவும், எல்லோரும் - ஆம் அந்த க்ருஷ்ணாம்பேட்டையில்தான் என் தந்தையைப் போல், எங்கள் பக்கத்து வீட்டுகாரப் பெரியவர்களைப் போல் எரியூட்டவோ புதைக்கவோ பட்டிருப்பார்கள். அங்கிருந்து பின்னர் திருவல்லிகேணியில் முங்கிக் குளித்து தேவதைகளாக அங்குதான் உலவிக் கொண்டு இருப்பார்கள். அதுதான் அந்த பாதுகாப்பு உணர்வு. அவர்கள் அங்கு மட்டும் இல்லை எங்கும், எந்த ஊரிலும், எந்த கண்டத்திலும் கூடவே வரும் சந்திரனைப் போல் கூடவே இருக்கிறார்கள்.

அதனால்தான் ‘எங்கள் ஊர்’ என்று ஒவ்வொரு எழுத்தாளரும் எழுதுகையில் ஜெயகாந்தன் சொல்கிறார்: “என்கதைகளில் மண் வாசனையை விட மனித வாடையே அதிகம் வீசும்”.

****************

1 comment:

Unknown said...

It felt like I walked along with you in Triplicane through the times. Very interesting.

Ramachandran