FUTURE IS NOW - J Krishnamurti.

பிறப்பு, இறப்பு என்பது உண்மையே இல்லை. அத்தகைய பொய்யான தோற்றத்தை நமது மனமே உருவாக்கிக் கொள்கிறது. மனம் தனக்கென்று ஒரு உடலை உருவாக்கிக் கொள்கிறது. அதைக் கனவு மழையில் நனைத்துத் துன்பப் படுத்துகிறது. - ரமண மகர்ஷி.

Search This Blog

Monday, December 21, 2009

அமெடியஸ் - திரைப்படம்.

அமெடியஸ் - திரைப்படம்.


வ.ஸ்ரீநிவாசன்.



(Whether angels play only Bach in praising God, I am not sure. I am sure, however, that en famille they play Mozart.)


‘அமெடியஸ்’ திரைப்படம் இசை மாமேதை மொஸார்ட்டின் (வுல்ஃப்கேங் அமெடியஸ் மொஸார்ட்) கதை.







ஆனால் அவர் காலத்தில் வாழ்ந்த இசை வல்லுனர் அன்டோனியோ சலய்ரியின் மூலமாக ‘ஃப்ளாஷ் பேக்’கில் சொல்லப் பட்டது.


சலய்ரி, இசையில் மெய்மறந்து போகும் சிறுவன். அவன் தந்தைக்கு இசை ஒரு பொருட்டல்ல. அதே காலகட்டத்தில் சலய்ரி, தன் பிள்ளையை பயிற்றுவித்து வெவ்வேறு முக்கிய மனிதர் சபைகளில் இசைக்கச் சொல்லும் அமெடியஸின் தந்தையைப் பற்றியும் கேள்விப் படுகிறான். அமெடியஸ் ஒரு ‘பயிற்றுவிக்கப் பட்ட வித்தை காட்டும் குரங்கு’ என்கிறார் சலய்ரியின் தந்தை.


இசையால் உயிர் கவ்வப் பட்ட சலய்ரி, கடவுளிடம் தனக்கு மகத்தான திறமையைத் தரச் சொல்லி வேண்டுகிறான். அதற்கு காணிக்கையாக தன் எல்லாவற்றையும் தர சித்தமாயிருக்கிறான். ‘ஒவ்வொரு மணிநேரமும் என் இசையால் உன் புகழ் பாடுவேன்’ என்னும் சலய்ரியின் வாழ்வில் உடனே ஓர் அற்புதம் நடக்கிறது. தொண்டையில் உணவு சிக்கி அவன் தகப்பனார் இறக்கிறார். தடை நீங்கி விட்டது. சலய்ரி இசை பயின்று வியன்னாவுக்குச் சென்று அரசரின் ஆஸ்தான இசைக் கலைஞராகிறார்.


மீண்டும் அமெடியஸ். அவன் வருகை தெரிந்து அந்த இடத்துக்கு சலய்ரி போகிறார். இசை கேட்க குழுமி இருக்கும் மனிதர்களிடையே அவனைத் தேடுகிறார். அவன் ஒர் இளம் பெண்ணுடன் விளையாடிக் கொண்டு இருக்கிறான். சலய்ரி ஒளிந்திருப்பது தெரியாத இருவரும் ஓர் அறையில் சல்லாபித்துக் கொண்டே சொல் விளையாட்டு ஒன்றை ஆடுகிறார்கள். கடைசியிலிருந்து ஆரம்பம் வரை எழுத்தொலிகளை தலைகீழாகக் கூறி அப்படி சொல்கையில் ‘கிஸ் மை ஆஸ்’ ‘ஈட் மை ஷிட்’ என்கிற வாக்கியங்கள் வருமாறு விளையாடுகின்ற, அவன் ஆபாசப் பேச்சும், நாசூக்கற்ற நடவடிக்கைகளும் அவரை தாக்குகின்றன. அந்த நிமிஷம் அவன் இல்லாமலேயே அவனது இசை அவையில் வாசிக்கப்படுவதைக் கேட்டு அங்கு ஓடிச் சென்று இசைக்க ஆரம்பிகிறான்.


இசை நர்த்தனம் புரிகிறது. மழையாய்ப் பொழிகிறது. பூக்களைத் தலையாட்டச் செய்கிறது. வருடி விடுகிறது. விம்மிப் பதைக்கிறது. எம்பி குதிக்கிறது. இதயம் நிரம்பி வழிந்து உலகெலாம் நிறைகிறது. என்ன தெய்வீகம் ! எந்த உலகத்தது?


ஆனால் கடவுளின் இவ்விசை உலகை நிரப்புவது இதற்கென்றே சகலத்தையும் துறந்த , சகலத்தையும் உணர்ந்து ரசிக்கிற சலய்ரி மூலம் அல்ல, ஒரு நாசூக்கற்ற, கோமாளித் தனமான, கெக்கெலி கொட்டி இடம் பொருள் ஏவல் தெரியாமல் சிரிக்கிற,











அனாச்சாரமான அமெடியஸின் மூலம். ‘என்ன அநியாயம். இசையை ரசிக்கிற, இசையில் உருகுகிற ரசனையை மட்டும் கொடுத்து மகத்தான சிருஷ்டித் திறனைத் எனக்குத் தராமல் ஒரு ஆபாச, அல்ப, விளையாட்டுப் பிள்ளைக்கு இத்தனை திறமையைக் கொடுத்தாயே, எனக்கு துரோகம் செய்து விட்டாயே, கடவுளே’ என்கிற சலய்ரியின் வாழ்வு மாறிப் போய் விடுகிறது. கடவுளின் எதிரி என்று தன்னைப் பிரகடனப் படுத்திக் கொள்கிறார். கடவுளின் தேர்வான அமெடியஸை அழிப்பதே தன் வேலை என்றும் சூளுரைக்கிறார்.






படம் சலய்ரியின் தற்கொலை முயற்சியில் ஆரம்பிக்கிறது. மன நோய் காப்பகத்தில் அமெடியஸின் மரணத்துக்குப் பின் 32 வருடங்கள் அந்தக் குற்ற உணர்விலேயே பயித்தியமான அவரை ஒரு பாதிரியார் சந்திக்கையில் அவரிடம் தன் கதையைச் சொல்வது போல் படம் நடக்கிறது.



பாதிரியாரிடம், “என்னை யார் என்று தெரியுமா” என்பவரிடம் அவர் ‘ எனக்கு அது அவசியமில்லை. துயர்படும் ஆத்மாக்களுக்கு ஆறுதல் அளிப்பதே என் வேலை.’ என்கிறார். தொடர்ந்து “கடவுளின் படைப்பில் அனைவரும் சமம்” என்கிற பாதிரியாரிடம் சலய்ரியின் கேள்வி”அப்படியா சமமா?” இது மனித வாழ்வின் அடிப்படைக் கேள்வி. பாக்கிப் படம் அப்படி சமம் இல்லை என்பதை சலய்ரியின் கோணத்தில் விவரிக்கின்றது.





***************



அமெடியஸ் அப்பாவியாக இருகிறான். அவனது இசை மேதைமை மட்டுமே அதற்கான அங்கீகாரம் பெறுவதற்கு போதுமான தகுதியாக இவ்வுலகம் இல்லை.


சலய்ரியின் சூதால் அவன் ஆபெராக்கள் ஒன்பது முறைகளும், ஐந்து முறைகளுமே மேடை ஏற்றப் படுகின்றன.


ஆனால் அவன் சலய்ரிதான் தனக்கு அரசில் இருக்கும் நண்பன் எனக் கொள்கிறான். அவனிடம் தன் ஆதங்கங்களைச் சொல்கிறான்.


இது கொஞ்சம் உண்மை வரலாற்றாலும், மிகுந்த கற்பனையாலும் பின்னப் பட்ட திரைக் கதை. அமெடியஸின் தாய், அவன் முதல் காதலி, (மனைவியின் மூத்த சகோதரி) இன்னொரு மகன் பற்றியெல்லாம் இல்லை. சலய்ரி பற்றிய வடிவாக்கமே அவர் குற்றவுணர்வு கொண்டிருந்தார் என்கிற செய்தியின் அடிப்படையில் எழுந்தது.


நாடகமாக பலமுறை மேடை எற்றப்பட்டு மெருகேறி, மெருகேறி கிட்டத்தட்ட ‘பர்ஃபெக்ட்’ டான வடிவத்தில் இத்திரைப்படம் வந்துள்ளது.


சில காட்சிகள்:


ஒரு இசை நாடகத்தை ஜெர்மானிய மொழியில் செய்வதா இத்தாலிய மொழியில் செய்வதா என்கிற பிரச்னை வரும்போது இத்தாலிய மொழியையே பண்டிதர்கள் பரிந்துரை செய்கிறார்கள். அங்கும் நீச பாஷை, தேவ பாஷை உண்டு போலும். அமெடியஸ் ஜெர்மானிய மொழியையே தேர்ந்து எடுக்கிறான். அவனுக்கு நாசூக்கு தெரிவதில்லை. அவனிடம் ‘ஈகோ’ இல்லை. அரசரை அவன் கேட்கிறான். “பெரியவர்களைப் பற்றி மட்டுமே, உயர்ந்தவர்களைப் பற்றி மட்டுமே கடவுளர்களைப் பற்றி மட்டுமே கலைகளைப் படைக்க வேண்டுமா? அவர்கள் மட்டுமென்ன மார்பிளை (marble)யா கழிக்கிறார்கள்? (டு தே ஷிட் மார்பிள்?) என்கிறான். அரசர் முன்னிலையில் பேசக்கூடிய வாசகமா? அவை அசௌகரியமான நிசப்தத்தில் ஆழ்கிறது. அடுத்த நொடி அவனது அப்பாவியான இரைந்த கெக்கெலி கொட்டும் சிரிப்பு. Innocence is ashamed of nothing. Roussau.



அமெடியஸ், அவன் மனைவி, அவன் தந்தை மூவரும் அவர் (தந்தையின்) வருகையை கொண்டாட ஒரு இரவுப் பார்ட்டிக்கு செல்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு முகமூடி கொடுக்கப் படுகிறது. அலங்காரமான, அரை முகத்தை மூடும், முழு முகத்தை மூடும், இரண்டு புறமும் முகமிருக்கும் முகமூடிகள் என்று வித விதமான முகமூடிகள்.; அங்கே சலய்ரியும் வருகிறார். ஒரு முகமூடியுடன். ஒரு விளையாட்டில் தோற்ற அமெடியஸின் மனைவியை மேடையில் ஏற்றி விளையாட்டாக தண்டனை அளிக்கிறார்கள். என்ன தண்டனை தராலாம் என்று கூட்டம் உரக்க யோசிக்கையில் ‘அவளை தன் கால்களைக் காட்டச் சொல்லுங்கள்’ என்று ஒரு சிரிக்கும் குரல் சொல்கிறது. அது அமெடியஸினுடையது. கூட்டம் சிரிக்கிறது. சிரித்தவாறே அவளும் தன் ஆடையைத் தூக்கி ஸ்டாக்கிங்க்ஸால், மறைக்கப் பட்ட தன் கால்களை காட்டுகிறாள். அடுத்து அமெடியஸின் முறை. வேடிக்கையான தண்டனை. அவனை தலைகீழாய்த் தொங்க விட்டு பியானோவை வாசிக்கச் சொல்கிறார்கள். முதுகுப் புறம் பியானோவைப் பார்த்தவாறு கைகளை மாற்றி என்று தொங்கியவாறே வாசிக்கிறான். ஒவ்வொரு இசைக் கலைஞன் மாதிரியும் வாசித்துக் காட்டும் அவன் ஒரு சமயம் சலய்ரியின் இசையை வாசிக்கிறேன் என்று குனிந்து, பின்புறத்தைக் காட்டியவாறே ‘புர்’ரென்ற ஒலியை வாயினால் எழுப்புகிறான். கூட்டம் சிரிக்கிறது. சலய்ரி அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்.





இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கும் அமெடியஸின் தந்தை இதையேல்லாம் ரசிக்கவில்லை. அவர் முகமூடி ஒருபுறம் சிரீயஸாகவும் மறுபுறம் சிரித்துக் கொண்டும் இருக்கும் இருபுறமும் உள்ள முகமூடி..



கொஞ்ச நாட்களில் நிகழும் தந்தையின் மரணம் அமெடியஸைப் பெரிதும் பாதிகிறது. அதன் முலம் பிறந்த இசை நாடகத்தின் மகிமையை சலய்ரி உணர்கிறார். அதுவும் வெற்றியடையாமல் செய்கிறார். அதில் மரணத்திலிருந்து எழுந்து வருவது அமெடியஸின் தந்தையின் உருவகம்தான் என்பது அறிந்த சலய்ரி அத்தந்தையின் ஆளுமையை உபயோகப் படுத்தி அதே இரு புற முகமூடி அணிந்த ஒருவனை அனுப்பி





 ‘இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைவதற்கான ‘தொழுகை பிரலாபம்” (“Mass requiem”) தனக்கு அளிக்குமாறு கேட்கிறார். (மரண கீதத்தை எழுதச் சொல்லும் தந்தையின் தோற்றத்தை அந்த முகமூடியின் மூலம் கொண்டு வரும் உருவம் பண முடிப்பைக் கொடுத்து விட்டு திரும்பிச் செல்கையில் அது இறங்கிச் சென்ற சில நொடிகளுக்குப் பிறகும் அதன் நிழல் சென்று கொண்டிருக்கும், அவரது தாக்கம் என்றும் அவர் இறப்பிற்குப் பின்பும் தொடரும் என்பதாக.)



சிருஷ்டிக்கும் இசையில், இரண்டறக் கலக்கும் அமெடியஸைக் கொல்ல சலய்ரி கையாளும் ஆயுதம் அந்த தொழுகை பிரலாபம்.அதற்கு பெரிய சம்பளமும் கொடுக்கிறார். பணத் தேவை மிகுந்த அமெடியஸ் ( அவன் கொண்டு வந்த ஒன்பது சிமிழ்களில் இருந்த அத்தனை பொற்காசுகளும் தீர்ந்து விட்டன) அந்த வேலையை ஒத்துக் கொள்கிறான்.



மனனவி, குழந்தையுடன் அவனை விட்டு விட்டுப் போய்விட்ட ஒருநாளில் அரங்கிலேயே மயங்கி விழும் அவனை சலய்ரி வீட்டுக்கு கொண்டு வந்து உடனிருக்கிறார். விழித்த அமெடியஸ் ‘நான் ஒரு முட்டாள். நீங்கள் என் இசையைப் பொருட்படுத்தியதில்லை என்று தவறாக எண்ணியிருந்தேன். என்னை மன்னியுங்கள்” என்கிற போது யார் யாரிடம் மன்னிப்பு கேட்பது என்று நமக்கு அழுகையும், கோபமும் வரும். படுக்கையிலிருந்து எழ முடியாது, எழுத முடியாது தொய்ந்து போய் இருக்கும் அவன் ‘மரண இசை’யை சொல்லச் சொல்ல சலய்ரி அதை எழுதிக் கொள்கிறார்.







அமெடியஸின் மனைவியும், மகனும் வருகிறார்கள். களைப்பின் உச்சியில் இருந்த அமெடியஸ் மேல் இருக்கும் மரண இசையின் நொடேஷன்கள் நிரம்பிய காகிதங்களை பார்க்கும் அவன் மனைவி, அதை எழுதினால் அதில் முழுதுமாய் ஈடுபட்டு அமெடியஸே இறக்க நேரிடலாம் என்று உணர்ந்து அதை மேற்கொண்டு எழுதக் கூடாது என்று எடுத்து வைத்து விடுகிறாள். சலய்ரியையும் வெளியே போகச் சொல்கிறாள். ‘அமெடியஸ் சொல்லட்டும், போகிறேன்’ என்று நிற்கும் சலய்ரிக்காக ‘போகச் சொல்’ என்று அமெடியஸின் அருகே செல்லும் அவள் அவன் இறந்து விட்டதை உணருகிறாள்.



அமெடியஸின் உடல் ஒரு வெள்ளைத்துணியில் சுற்றப் பட்டு வேறு பல பிணங்கள் இருக்கும் ஒரு புதைகுழிக்குள் போடப் படுகிறது. அடையாளம் எதுவும், அறிவிப்பு எதுவும் இல்லாமல். தனியாய் அறிவிப்போடு புதைக்கப் பட்டிருந்தால் மட்டுமென்ன? அதனால் அமெடியஸுக்கு என்ன லாபம்? நாம் நம் நெற்றியில் அந்த ஞாபகச் சாம்பலைப் பூசிக் கொள்ளலாம் என்பதை தவிர.





‘பாதிரியாரை ரட்சிகிறேன் , இந்த உலகில் உள்ள நடுவாந்திர ( mediocre) மனிதர்கள் அனைவருக்குமான பிரதிநிதி நான்’ என்று நம்மனைவரின் பிரதிநிதியாய் சலய்ரி கூறிச் செல்கையில் அமெடியஸின் அந்த வெகுளித்தனமான, மரியாதை- அவமரியாதை, புனிதம்-ஆபாசம், கௌரவம்-கீழ்மை அனைத்திற்கும் அப்பாற்பட்ட இவ்வாழ்க்கையின் ஒரே உண்மை முன் நம்மை நிர்தாட்சண்யமாய், ஆனால் நோக்கமற்று நிறுத்துகின்ற கெக்கலி சிரிப்போடு படம் முடிவடைகிறது.





***********





காட்சிகளின் ஆரம்பம், ஒளி அமைப்பு, பின்னணி இசை, கை விரல்களும், பாத்திரத்தின் முழு உடலும், கண்களும் இசைக்க தொடங்குகையிலேயே பின்னால் பொங்கி எழும் இசை பிராவாகம், அது காட்சியாய் மாறுவது, இடையே மீண்டும் சொல்பவர், ஒரு வார்த்தை, ஒரு விரலசைப்பு. மொஸார்ட்டின் ஒரு ஸ்வரத்தைக் கூட மாற்ற முடியாது என்பது போல ஒரு ‘ஷாட்’டைக் கூட மாற்ற முடியாத காட்சிகள்.





குறைகள் எனில், ஒரு காட்சியில் பாதி எரிந்த மெழுவர்த்தி, பின்பு முழுதுமாய்த் தெரிவது முதலியவை மற்றும் சரித்திர திரிபுகள் பற்றி படித்தேன். எனக்குத் தோன்றுவது, ‘ஃப்ளாஷ் பேக்’ உத்தியில், சலய்ரி சொல்லும் கதையில் அவர் இல்லாத காட்சிகள் கூட படத்தில் இடம் பெறுவது.





மகத்தான நடிப்பு. அமெடியஸ் சசின் டெண்டுல்கரை நினைவுறுத்தும் பாலகனுடைய முகம் கொண்ட இளைஞர் டாம் ஹல்ஸ். சலய்ரி ‘ஓம் பூரி’ போல் முகம்கொண்ட முரேஅப்ரஹாம். நாம் வாழும் இருவரைப் பார்க்கிறோம். அந்த இருவர் மட்டுமல்ல, அமெடியஸின் “வுல்ஃபி’ என்று கொஞ்சும், இறுதி நாட்களில், இசை நாடகம் வேண்டும் என்று வருபவர்களிடம் பணம் பற்றி பேசும், சம்பளம் இன்றி வரும் வேலைக்காரியை வேண்டாம் என்று சொல்லும் மாமனாரிடம் நீங்கள் யார் இதைச் சொல்ல என்று கேட்டு அவளை வேலைக்குஅமர்த்திக்கொள்ளும், மொஸார்ட்டோடு விளையாடும், அவனைப் பிரிந்து போயும் தன்னை அணைத்து பார்ட்டியில் ஆடிக் கொண்டிருப்பவனிடம் ‘நான் செய்வது தப்பு’ என்று கணவனிடம் ஓடி வரும், சலய்ரியை மொஸார்ட்டின் அறையில் கண்டதும் ‘போய் விடுங்கள், துரதிருஷ்டவசமாக உங்களை வெளியே அனுப்ப எங்களிடம் வெலையாட்கள் இல்லை’ என்று நிச்சயத்தோடு கூறும், அமெடியஸின் மீது அவன் இன்னொஸென்ஸின் மீது அவன் மகத்தான மேதைமையின் மீது காதலைப் பொழியும் மனைவியாக வரும். எலிஸ்பத் பெர்ரிட்ஜ்... . .கும்மாளம் இடும் மகன், தான் வேண்டாம் என்று சொன்ன பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவன், தன் ‘கனவின் நினைவுருவம்’ அதன் கட்டை மீறி செல்வதைக் காணச் சகிக்காமல், அவன் நன்மைக்காகவே என்று வாழும் கண்டிப்பான தந்தை, சலய்ரியால் ‘ஒற்று’ செய்யவரும் சம்பளமில்லாத வேலைக்காரி, ஆர்ச் பிஷப், மன்னர், அவர் கூடவே இருக்கும் பிரபுக்கள், பிரபலஸ்தர்கள், தனியே அரசின் உதவியின்றி செயல்படும் ஆபெரா குழுக்கள், ஒவ்வொருவரும் வாழ்கிறார்கள் நம்மனைவரின் குறைகளோடு, நிறைகளோடு, குமுறல்களோடு, ஆசாபாசங்களோடு, டாம்பீகத்தோடு.



நீதி, நியாயம், கடவுள், அவர் சித்தமென்று மனித குலம் கற்பித்துக்கொண்டுள்ளவை பற்றி சந்தேகங்களையும், கேள்விகளையும் எழுப்பும் படம்.



வாழ்வில் இசையில் அமெடியஸிடம் ஒட்டு மொத்தமாக தோல்வியுற்ற சலய்ரி ஒரே இடத்தில் வென்றார். சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் பரிசு சலய்ரியாக நடித்த முரே அப்ரஹாமுக்குக் கிடைத்தது. அதே பிரிவில் போட்டி யிட்ட டாம் ஹல்ஸ் தோற்றார். சிறந்த துணை நடிகர் பிரிவில் அவரை சேர்த்திருந்தால் நிச்சயம் அவருக்குத்தான் பரிசு கிடைத்திருக்கும். இரண்டு பேருக்கு பரிசை பிரித்து வழங்கும் வழக்கம் இருந்தால் அவருக்கும் கிடைத்திருக்க வேண்டும். அது போன்ற நடிப்பு எப்பொதாவதுதான் காணக் கிடைக்கிறது.



பீடர் ஷாஃபர், மிலோஸ் ஃபோர்மன் எனும் மேதைகளின் படைப்பு இப்படம். இதன் இசையமைப்பாளர், மொஸார்ட்டின் ஒரு நோட்டைக் கூட மாற்ற அனுமதிக்க மாட்டேன் என்று சொன்னவர். மேடையை விட சினிமாவில் இசையை அதிகம் சேர்க்க முடிந்திருக்கிறது. எட்டு ஆஸ்கார் பரிசுகளை வென்ற படம்.





‘மனிதர்கள் வாழ்வது எதனால்?’ என்ற கேள்வியைக் கேட்டு ‘பிறரின் அன்பால்’ என்று டால்ஸ்டாய் சுலபமாகச் சொல்லிவிட்டார். “பிறர் மேல் உள்ள பொறாமையாலும்தான். ‘Jealousy is as cruel as the grave’ என்கிறது விவிலியம். ‘as powerful as love’ என்பதும் உண்மைதான்.

கம்பனும் ஒட்டக் கூத்தனும் இப்படி வாழ்ந்திருக்கலாம். ராஜாஜி இறந்ததற்கு பெரியார் அடக்க முடியாமல் அழுதது எதனால்?



மனித மனதைப் பற்றிய படங்கள் என்னை கவருகின்றன. வாழ்வைப் போலவே பல தளங்களிலும் இப்படம் இயங்குகிறது. இப்படத்தின் (மொஸார்ட்) இசையைக் கேட்கையில், பாமரனான எனக்கே All art constantly aspires towards the condition of music என்பது புரிகிறது. ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் ஒரு பொருளின், உள், வெளி, விளிம்பு அனைத்தும் தெரிவது போல் இப்படம் மனிதர்களின் அக புற நிகழ்வுகளை அனாயாசமாய்ச் சொல்லிச் செல்கிறது. வைக்கோல் அடைக்கப் பட்ட கன்றுக் குட்டிகளால் ஆன கலைப் படைப்புகள் என்று சொல்லப் படுபவைகளின் நடுவே சில துள்ளி விளையாடும் கன்றுகளைக் காணும் போது தாங்கொணா பரவசம் வருகிறது. அவ்விதத்தில் இது முதல் வரிசைப் படம். இதன் பரவசமே வாழ்வை சின்னாப் பின்னமாக்கும், மாமேதைமையையும் புழுதியில் எறியும் மனிதர்களின் தன்முனைப்பும், பேதமையும், குரூரமும் நிறைந்த, வெறும் கொடுக்கல், வாங்கலாக வாழ்க்கையைச் சுருக்கிவிட்ட இயல்பைக் காட்டும் சோகம்தான்.



The heart of the melody can never be put down on paper. இசையின் இதயத்தை காகிதத்தில் கொண்டு வர முடியாது. அமெடியஸ் படத்தைப் பற்றியும்தான்.





***********************

Sunday, August 23, 2009

உயிரிழை பிரசுரம் : சொல்வனம் 21.8.09

பூதம் அவனைக் குறித்துச் சொல்லியது: " நீ சாகணும், நான் பார்க்கணும்". அது அவனை நேராகப் பார்த்துச் சொல்லியிருந்தால் கூட அவனுக்கு அவ்வளவு பயமாக இருந்திருக்காது. அது சுவரைப் பார்த்து சொல்கிற மாதிரி, போஸ்டரில் இருப்பவனைப் பார்த்து சொல்கிற மாதிரி, தூரத்தில் போகிறவனைப் பார்த்து சொல்கிற மாதிரி, தான் கனவில் கண்டவனை நினைத்துச் சொல்கிற மாதிரி சொன்னதுதான் அவனுக்குப் பீதியையும் கவலையையும் உண்டு பண்ணியது.
அந்த பூதம் ரொம்ப நாட்களாக அங்கு இருக்கிறது. வேலைக்காரி பெருக்கும்போது அதை மூலையில் குவித்து விடுவாள். காற்றடிக்கும் போதெல்லாம் அது வீடு முழுக்க பரவி விடும். அது இருப்பது அவனுக்குத் தெரியும் என்று அதற்கும் தெரிந்திருக்க வேண்டும். ஆனாலும் அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பது போல் இருவரும் இருந்தார்கள்.
அவனுடைய அம்மா அப்பா எல்லாருமே அவனுக்கு பூதம் இருப்பது தெரியாது என்று விடாப்பிடியாக நம்பினார்கள். அது பற்றி வெளிப்படையாகப் பேச விடாமல் எதோ ஒன்று அவர்களைத் தடுத்தது.
அன்று காலை அவன் நாற்காலியில் அமர்ந்து காலாட்டிக் கொண்டிருந்த போதுதான் பூதம் "நீ சாகணும், நான் பார்க்கணும்" என்று யரையோ சொல்வது போல், குடி மயக்கத்தில் சொல்வது போல் சொல்லியது. அந்த நேரத்தில் அதை அவன் எதிர் பார்க்கவில்லை. அது சொல்லியது முதலில் வெறும் ஒலியாகப் பொருளற்றுதான் அவன் காதில் விழுந்தது. அது தொடர்ந்து 'இன்னிக்கு சாயந்தரத்துக்குள் செத்துரு. என்ன சரியா?" என்று சொல்லியதும்தான் அவன் முதலில் சொன்னவற்றையும் சேர்த்து யோசித்தான்.
பயம் கிளம்பினாலும் அது சொன்னது காதில் விழாத மாதிரி இருக்கப் பார்த்தான். பூதம் கோபமாக திரும்பி வாசல் நோக்கி சென்றது. அது எப்போதெல்லாம் மூலையில் மறைவாக இருக்கும், எப்போதெல்லாம் வெளியே போகும் என்பவை எல்லாம் அவனுக்கு அத்துப்படி. அதனாலேயே அவன் பள்ளியிலிருந்து வருகையில் அது வீட்டில் பரவி இருக்கும் சமயம் என்றால் வீட்டில் நுழையாமல் கால் போன போக்கில் பக்கத்துத் தெரு வழியாகவெல்லாம் போய்விட்டு அது மூலைக்குப் போயிருக்கும் என்று நிச்சயம் ஆன பிறகுதான் வீட்டுக்குள் வருவான். இன்று அது அவன் இருக்குமிடத்திற்கு வந்தது எதிர் பாராத நேரத்தில்.
அது சும்மா சொல்லியதா அல்லது கோபத்தில் சொல்லியதா அல்லது உண்மையிலேயே ஏதாவது செய்து விடுமா என்று அவனுக்குத் தெரியவில்லை. சங்கடமாக இருந்தது. அது அந்த சமயத்தில் வந்ததே பயத்தை உண்டு பண்ணியது.
அன்று மத்யானம் வீட்டு வாசலில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதிலிருந்து ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இறங்கினர். அப்பா அலுவலகத்தில் அவரோடு பணி புரிகிறவர்கள். இவனைப் பாத்ததும் புன்னகைத்தவாறே "அப்பா இருக்காரா" என்றார்கள். இவன் "உள்ளே வாங்க" என்று அவர்களை அழைத்து அமரச் சொன்னான். "அப்பா இதோ வந்து விடுவார்" என்று சொல்லிவிட்டு உள்ளே போனான்.
சமையலறையில் தரையில் அமர்ந்து அப்பா சாப்பிட்டுக் கொண்டிருந்தார். "யார்டா" என்பது போல் நிமிர்ந்து பார்த்தார். "அவங்கதான்" என்றான். "போய் ரெண்டு கூல் ட்ரிங்க் வாங்கிக் கொண்டு வா. சட்டைப் பையில் பர்ஸ் இருக்கு. எடுத்துக்கோ" என்றார்.
முன் அறையில் இருந்த இரண்டு நாற்காலிகளிலும் அவர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். அதைத் தவிர வேறு நாற்காலி கிடையாது. அப்பா வந்தால் கட்டிலில்தான் உட்கார வேண்டும். ஒரு சின்ன ஸ்டூல் இருந்தது. அவன் அவர்களைப் பார்த்து மீண்டும் புன்னகைத்து விட்டு "அப்பா இதோ வந்து விடுவார்" என்றான். "நீ என்ன கிளாஸ் படிக்கிறே" என்றார் அவர். போன மாதம் வந்த போதும் அவர் அதே கேள்வியைக் கேட்டார் என்பது ஞாபகம் வந்தது.
"ப்ளஸ் டூ"
"நல்லாப் படி. ஆல் தெ பெஸ்ட்" என்றார் அவர்.
அந்தப் பெண்மணியும் புன்னகைத்தாள். இவன் பர்ஸிலிருந்து பணத்தை அவர்கள் பார்க்காத வண்ணம் எடுக்க முடியாது. பர்ஸை எடுத்துக் கொண்டு உள்ளே போனான்.
"எவ்வளவு எடுத்துக்கட்டும்..... உங்களுக்கு?"
"எனக்கு வேண்டாம். ரெண்டு வாங்கிட்டு வா. உனக்கு வேணுமா"
"வேண்டாம்" என்று சொல்லிவிட்டு பர்ஸை அப்பாவின் மடியில் போட்டு விட்டு வெளியே போனான்.
பக்கத்துக் கடை மூடி இருந்தது. அடுத்த தெரு வழியாக மெயின் ரோட்டில்தான் போய் வாங்க வேண்டும். இவன் மெயின் ரோட்டை நெருங்குகையில் ஒரு பெருங்கூச்சல் கேட்டது. ஒரு ஊர்வலம் போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தான். தெருவும் சாலையும் சந்திக்கும் இடத்தில் இருந்த மூடி இருந்த ஒரு கடையின் வாசலில் நின்று கொண்டான். "ஓ. அதுதான் பக்கத்துக் கடை மூடி இருந்ததா?"
சிறிய சாலையாகையால் அது முழுவதையும் அடைத்துக் கொண்டு ஊர்வலம் சென்றது. அதன் ஆரம்பம் எங்கே என்று தெரியவில்லை. வெகு நேரமாக சென்று கொண்டிருக்க வேண்டும். அவர்கள் குறிப்பிட்ட குழுவினரைத் தாக்கியும் இன்னொரு குழுவினரை ஆதரித்தும் கோஷமிட்டுக் கொண்டு போனார்கள். கூட்டத்தில் ஒரு பகுதியினர் இவன் வந்த தெருவில் நுழைந்தனர். அது வழியாக மைதானத்திற்கு குறுக்கு வழி இருந்தது. அங்கு மாலை பொதுக் கூட்டம் இருந்தது. ஊர்வலம் போனவர்களில் சிலர் கையில் கம்பு வைத்திருந்தனர். ஒருவர் சோடா பாட்டில் ஒன்றை நடுத் தெருவில் போட்டு உடைத்தார். பல பேர் காலில் செருப்பு இல்லாமல்தான் நடந்து சென்றனர். இன்னும் சில பாட்டில்கள் உடைக்கப் பட்டன. ஒரு சில்லு இவனைத் தாண்டிக் கொண்டு போய் மூடியிருந்த கடையின் சுவரில் மொதி மேலும் உடைந்து தெறித்தது. இவன் அய்யோ என்று நகருவதற்கு முன் கூட்டத்தில் சென்ற ஒருவன் இவனைப் பார்த்து "நீ அவனா" என்று கேட்டான். அவன் கேள்வி புரிய கொஞ்ச நேரம் ஆயிற்று. இவன் 'இல்லை' என்று தலை ஆட்டினான். அவன் நம்பவில்லை என்று தோன்றியது. ஒருவேளை தன்னை அடிப்பார்களோ என்ற பயம் வந்தது. அந்தாளின் பின்னால் வந்தவன் அவனை 'போ ! போ ! ' என்று நெட்டித் தள்ள அவன் இவனைத் திரும்பிப் பார்த்தவாறே போய் விட்டான்.
நல்ல வேளையாக ஊர்வலம் அந்த இடத்தைக் கடந்து சென்று விட்டது. கடைகளை மெல்லத் திறந்தார்கள். இவன் இரண்டு அட்டை டப்பாக்களில் அடைக்கப் பட்ட குளிர் பானங்களை வாங்கிக் கொண்டு திரும்பினான்.
அப்பா கோபமாக இருந்தார். "என் இவ்வளவு லேட்" என்றார். அவர் கோபம் அலுவலகத்திலும் பிரசித்தம் போலும். அந்த பெண்மணி 'பரவாயில்லை ஸார்" என்றாள். "பக்கத்துக் கடை இல்லேப்பா, ஏதோ ஊர்வலம் வேறே". அந்த ஆள் "என்ன ஊர்வலம்?" என்றார். "தெரியவில்லை" என்றான்.
குளிர் பானம் குடிக்கவே வந்தவர்கள் போல் அவர்கள் குடித்த உடனே கிளம்பிப் போனார்கள்.
அம்மா உள்ளே வந்தாள். "சினிமா போலாமா" என்றாள்.
அவன் அரை டிராயரைக் கழட்டி விட்டு பேன்ட்டைப் போட்டுக் கொண்டான். அவன் நினைத்த மாதிரியே அப்பா "மூணு டிக்கட் வாங்கி வை" என்று தியேட்டார் பெயரைச் சொன்னார். அந்த தியேட்டருக்கு அடிக்கடி போனதில்லை.
"புதுப் படம்பா."
"தியேட்டர் மேனேஜர் கிட்டே எங்க ஆபீஸ் பேரைச் சொல்லி என் பேரைச் சொல். டிக்கட் தருவார்". என்று சொல்லிவிட்டு மேனேஜர் பெயரைச் சொன்னார்.
அவன் பணத்தை வாங்கிக் கொண்டு உல்லாசமாகக் கிளம்பினான். வாசலுக்கு வந்ததும் பக்கத்து வீட்டுப் பையன் "எங்கேடா? நானும் வரேன்" என்றான். 'சரி உடனே வா." எந்தப் படம், எந்த தியேட்டர் என்று சொன்னான். தான் பார்த்துவிட்டதாகவும், சும்மா தியேட்டர் வரை வருவதாகவும் கூறி இவன் தோளில் கையைப் போட்டுக் கொண்டான்.
அந்தத் தியேட்டர் அவர்கள் வீட்டிலிருந்து தூரமாக இருந்த ஒன்று. அவனுக்கு சைக்கிள் தெரியாது. இருவரும் நடந்தே போனார்கள். பேச்சு அந்தப் படத்தைப் பற்றியும் அதன் இயக்குனர் மற்றும் நடிக நடிகைகள் பற்றியும் இருந்தது.
தியேட்டர் வாசலில் பெருங்கூட்டம். இவர்கள் முண்டி அடித்துக் கொண்டு மேனேஜர் அறை எங்கே என்று கேட்டுக் கொண்டு உள்ளே போகப் பார்த்தார்கள். அந்தக் கூட்டம் இவர்களை லட்சியம் செய்யும் கூட்டம் இல்லை. ஓரு கார் வந்தது. அது உள்ளே போகக் கதவைத் திறந்த போது கூட்டமும் உள்ளே போயிற்று. இவர்கள் எப்படி உள்ளே வந்தார்கள் என்றே தெரியவில்லை. மெள்ள அலுவலக அறை போல் தெரிந்த ஒன்றின் அருகில் கொண்டு செல்லப் பட்டார்கள். அதன் கதவு மூடப் பட்டு இருந்தது. அதன் வாசலிலும் பெரும் கூட்டம் இருந்தது. அதன் கதவைத் திறந்துகொண்டு ஒருவர் ஒரு அலுமினியப் பெட்டியுடன் வேளியே வந்தார். கூட்டம் அவரைச் சூழ்ந்துகொண்டது. "எல்லாரும் கவுன்டருக்கு வாங்க" என்று சொல்லி விட்டு அவர் நடந்தார். அப்போது ஒரு போலிஸ்காரர் உள்ளே வந்தார். கையில் இருந்த கம்பை தரையில் பல முறை அடித்தார். கூட்டம் சற்று தூரத்தில் இருந்த கவுன்டரை நோக்கி நகர்ந்தது.
சுமார் பத்து பேர் அந்த அறை வாசலிலேயே நின்றனர். இவன் திறந்த கதவு வழியாக வேளியே வந்தவரிடம் "மேனேஜர் சார் இருக்காங்களா" என்றான். மேனேஜரின் பெயரைச் சொன்னான். அவர் உள்ளே போகுமாறு சைகை காட்டிவிட்டு போனார். இவர்கள் ஊள்ளே நுழைந்ததும் பாக்கிப் பேரும் உள்ளே நுழைந்தனர். அறைக்குள் இருந்த இருவரில் ஒருவர் பாக்கிப் பேரை வெளியே தள்ளி விட்டு, தானும் வெளியே போய் கதவை மூடினார். கதவிலிருந்த தாள் கதவை மூடும் போதே தானாகவே போட்டுக் கொண்டது.
கண்ணாடி போட்டுக் கொண்டு நெற்றியில் விபூதியோடு நாற்காலியில் அமர்ந்திருந்தவர்தான் மேனேஜராக இருக்கக் கூடும் என்று அவரிடம் போனார்கள்.
"சார்."
என்ன வேண்டும் என்பது போல் பார்த்தார். அவன் அப்பா அலுவலகம் மற்றும் அப்பா பேரைச் சொன்னான்.
"இதே ரோதனயாப் போச்சு" என்றார் அவர். பிறகு "எத்தனை டிக்கட் வேண்டும்" என்றார். "மூணு" என்றான் அவன்.
"எதுக்கு மூணு நீங்க ரெண்டு பேர்தானே இருக்கீங்க?"
"அப்பா அம்மா வந்துட்டே இருக்காங்க. இவன் வரலை" என்று நண்பனைக் காட்டினான்.
அவர் மூன்று டிக்கட்களைக் கொடுத்தார். இவன் பணத்தைக் கொடுத்தான்.
அதே நிமிஷம் கதவு தட தடவென்று இடிக்கப் பட்டது. அவர் எழுந்து ஒர் நாற்காலியை கதவருகில் போட்டார். "இதே ரோதனையாப் போச்சு" என்றார்.
"டேய் கதவைத் திறடா" என்று பல பேர் கத்தினார்கள்.
"நாலே நாலு டிக்கட் கொடுத்துவிட்டு ஹவுஸ் ஃபுல்லாடா நாயே" கதவைத் திறடா" "அந்த ரெண்டு நாயிங்களுக்கு மட்டும் எப்படிடா டிக்கட் கொடுத்தே." "டேய் நாயிங்களா. வெளிலே வாங்கடா பார்க்கலாம்" என்று பலவாறு கூச்சல்கள் கேட்டன. அவனுக்கு பயம் தாங்க முடியவில்லை. கதவு பெயர்ந்துவிடும் போல் இருந்தது.
வெளியிலிருந்து ஒரு குரல் ஒரு ஜாதிப் பெயரைச் சொல்லி கூடவே நாயிங்களா வெளியே வாங்கடா என்று இரண்டு மூன்று ஆபாச சொற்றோடர்களைக் கத்தியது. இன்னும் பல பேர் அதில் சேர்ந்து கொண்டார்கள்.
ஒரு கதவின் மேல் தழ்ப்பாள் பிய்த்துக் கொண்டது. மேனேஜர் "இதைப் பிடிங்கப்பா" என்று சொல்லவும் அவர்கள் அவர் காட்டிய மேஜையைப் பிடித்துக் கொண்டார்கள். மூவரும் அதை நகர்த்தி கதவுக்கு அண்டக் கொடுத்தார்கள்.
அவன் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது. அவன் சிநேகிதனும் பயத்தில் வெளிறிப் போயிருந்தான். மேனேஜர் இதெல்லாம் சகஜம் என்பது போல் ஒரு சமயம் தோற்றமளித்தாலும் "ரோதனை ரோதனை" என்று திரும்பத் திரும்பச் சொன்னார்.
அந்த அறைக்கு இருந்த ஒரே சன்னல் அடைத்து சாத்தப் பட்டிருந்தது.
ஒரு ஸ்டூலின் மேலிடுந்த ஃபோனை எடுத்து அவர் டயல் செய்தார். தியேட்டர் பேரைச் சொல்லிவிட்டு "கொஞ்சம் கலாட்டாவா இருக்கு" என்றார்.
எதிர் முனையில் என்ன சொன்னார்களோ "எந்த ஷோவுக்கு சார்" என்று கேட்டு விட்டு "உங்களுக்கு இல்லாமயா சார். எப்ப வேணா வாங்க". என்றார்.
மேஜையும் சேரும் நகர்ந்தன. மேனேஜரும் இவர்கள் இருவரும் மேஜையின் மறு பக்கத்திலிருந்து அதைக் கதவை நோக்கித் தள்ளினார்கள். அதற்குள் வெளியே கூட்டத்தில் யாரோ ஒருவர் கீழே விழுந்து பலமான அடி பட்டு விட்டது போலிருக்கிறது. "கண்ணு தெரியலையா பேமானிங்களா" என்று அங்கு ஒரு புதிய சண்டை ஆரம்பம் ஆகி விட்டது.
ஐந்து நிமிடத்தில் வெளியே கலாட்டா சுத்தமாக நின்று விட்டது. ஒரு குரல் "கதவைத் திறய்யா" என்றது. மேஜையையும், சேரையும் நகர்த்திவிட்டு, பின் மேனேஜர் கதவைத் திறந்தார். ஒரு ஆள் நின்று கொண்டிருந்தார். அவர் தோரணையும், மிடுக்கும் அவர் மஃப்டியில் இருக்கும் போலிஸ் என்பதைக் காட்டின. "ஏன்யா. புதுப் படத்துக்கு கொஞ்சமாவது டிக்கட் விக்கக் கூடாதா? அத்தனையையுமா ப்ளாக்குலே விப்பீங்க" என்றார். "சரி ஒவ்வொரு கவுன்டருக்கும் அம்பது டிக்கட்டாவது பப்ளிக்குக்குக் கொடுங்க" என்றார். "எல்லாரும் ப்ளாக்கிலேயே வாங்கிப்பாங்க சார்"என்றார் மேனேஜர்". "நீ ஒதை பட்டு சாகணும்னு.." என்று பேச்சு தொடர்ந்து கொண்டிருக்கும் போதே இவர்கள் இருவரும் மெள்ள வெளியே வந்துவிட்டார்கள். டிக்கட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கூட்டம் எல்லாம் கவுன்டர்களின் முன் நின்றது.
நண்பன் விடை பெற்றுக் கொண்டான். ஒன்றும் பேசவில்லை. இவன் தியேட்டருக்கு வெளியே வந்து நின்றான். பயத்தின் கேவல் இன்னமும் மனதில் இருந்தது.
தியேட்டர் எதிரில் ஒரு சிறிய பாலம். ஆனால் அகலமானது. எல்லா வாகனங்களும் அதன் வழியாகத்தான் வர வேண்டும், போக வேண்டும். ஒரு சைக்கிள் ரிக்ஷா பாலத்தின் எதிர் முனையில் தென் பட்டது. அது மேலே மேலே ஏறி வருகையில் அதில் அப்பாவும் அம்மாவும் அமர்ந்திருப்பது தெரிந்தது. சில நிமிடங்களில் படம் பார்க்கப் போவது குதூகலமாக இருந்தது.
***************

பொழுது போக்கும், ரஜினியும்.

பொழுது போக்கும், ரஜினியும்.

வ.ஸ்ரீநிவாஸன்

பொழுது ஏகமாக மலை போல் குவிந்து கிடக்கிறது. பல சமயம் கவலை, பயம், துக்கம் என்று குட்டி வேறு போடுகிறது. அதை என்ன செய்வது? செலவழிக்கக் கூடிய வாய்ப்பும், வசதியும், வகையும் உள்ளவர்கள் சிலர். உயிர் வாழ, உணவு, உடைக்காக உழைப்பவரும் இருபத்தி நாலு மணி நேரமும் உழைப்பதில்லை. இன உறவிலும் மகா பஞ்சம். கிடைக்கையிலும் சிலருக்கு தயாரிப்பும், காரியமும், தளர்ச்சியும் அரை மணி கூட இல்லை. சிலருக்கு அது அடிப்படை தாகம் இல்லை. கேளிக்கை தான். இதில் நிஜத்தை விட கற்பனைக்கே இந்த சமூகத்தில் வாய்ப்பு ஏராளம். வம்பு, ஆராய்ச்சி, வன்மம் என்ற பொழுது போக்கு அறிவுஜீவிகளைப் போன்றவர்களின் ஏகபோக உரிமையாகி விட்டது. பாக்கிப் பேர் மிஞ்சினால் மனதளவில் எண்ணுவதோடு சரி. அரசியல் எல்லோருக்கும் அமைவதில்லை. அந்த இடங்களில் பல சமயம் பாத்திரம் மாறி விடுகிறது. என்டர்டெய்ன் செய்பவர் யார் ரசிப்பவர் யார் என்பதில்.

இந்தத் தீராப் பொழுதைப் போக்க உதவியவர்களில் பலர் முன்பெல்லாம்
கீழ்மையாய், இளக்காரமாய் நோக்கப் பெற்றார்கள். கூத்தாடி, பாகவதர்,
நாட்டியக்கரி....சிலர் சாமியோடு சேர்த்து வணங்கப் பெற்றார்கள். சிலர்
மரியாதைக்குரிய தலைவர்கள் ஆனார்கள். கிரிக்கட், கால் பந்து, பொதுக்
கூட்டம், கச்சேரி, புத்தகம், பத்ரிகை, நாடகம் என்று பகிரங்கமாக பொழுது
போக்க எத்தனை சாதனங்கள். பின் வானொலி, சினிமா மற்றும் டி.வி வேறு.

முதலில் இருந்த நிலை மாறி, பிறகும் இப்பொழுதும் அதிகம் பேரின் பொழுது போக உதவியவர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர். இதில் தரம், சமூகப் பிரக்ஞை, நீதி, நியாயத்திற்கு எதற்கு இடம்?

பொழுது போக்கிலேயே கூட இரண்டு வகை என்கிறார்கள். ஒன்று வெறுமனே பொழுது போக்குவதற்காம்; இன்னொன்று பொழுதையும் போக்கி விட்டு சிந்தனை லாபத்தையும் பெறுவதற்காம். வியாபார புத்தி. வெறுமனே பொழுது போனால் என்னவாம்? சிந்தனை லாபம் என்ற பம்மாத்து கடைசியில் வெறும் பொழுது போக்குத் தானே? சிரிக்க வைத்தால் போதாதா? சிந்திக்கவும் வைக்கணுமாம் ! எதற்கு? என்ன சிந்தித்து எது சித்தித்தது?

கடந்த அரை நூற்றாண்டில் சினிமா, கோவில்களின் இடத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிடித்துக் கொண்டு விட்டது. கோவில் பழைய செவ்வியல் கேளிக்கை. அரசியல், சுதந்திர தாக, சமூக சீர்திருத்த, பொதுவுடமைப் பேச்சுகள், எழுத்துகள், கறுப்பு வேள்ளை சினிமா நவீனத்துவ கேளிக்கை. இன்றைய கிரஃபிக்ஸ், இன்டர்நெட், பண்(பற்ற)பலை வரிசை போன்ற ஹை-டெக் பொழுது போக்குகள் பின் நவீனத்துவ கேளிக்கை.

ரஜினி தமிழ் நாட்டில் சிசுக்கள், நகர முடியாத கண் தெரியாத வயோதிகர்கள்
தவிர அனைவரையும் என்டர்டெய்ன் ( இதை எப்படி தமிழில் சொல்வது? சந்தோஷப் படுத்துகிறார் என்று சொல்லலாமா?) செய்கிறார். வெளி நாட்டுறைத் தமிழர்கள், இதர மாநிலத்தவர் போன்றவர்களைச் சேர்த்தால் இது இருபது கோடியைத் தாண்டலாம்.

சிலர் பல தடவை அவர் படத்தைப் பார்த்து மெய் மறக்கிறார்கள். ஒரு மாத
சம்பளத்தைக் கொடுத்து டிக்கட் வாங்குகிறார்கள். பாலாபிஷேகம்
செய்கிறார்கள். சிலர் வெறுமனே பார்க்கிறார்கள். சிலர் அவரைத்
திட்டுகிறாகள். சிலர் அவர் வாழ்க்கை வரலாறை புத்தகம் போட்டு சமூக சேவை செய்கிறார்கள். சிலர் அவரைக் கட்டுடைக்கிறார்கள். சிலர் அவரிடம் குழைகிறார்கள். சிலர் அவரை பயமுறுத்துகிறார்கள். நமக்குத் தெரியாத எத்தனை எத்தனையோ டீல்கள். மொத்தத்தில் அவரளவு அதிகம் பேரை, தமிழர்களை, தமிழகத்தவரை என்டர்டைன் / எங்கேஜ் வேறு யாரும் பண்ணுவதில்லை. கேளிக்கை தருவது மூலமாக. அதுவும் கமிட்மென்ட் இல்லாத என்டர்டைன்மென்ட். அவரைக் கேட்டு விட்டு நீங்கள்
காவியையோ, கறுப்பையோ, செங்கொடியையோ ஏந்த வேண்டாம். மன சாட்சி
குறுகுறுப்பு போன்ற பம்மத்து வேலைகளுக்கு இடம் தராத ப்யூர் என்டர்டைன்மென்ட்.

இத்தனை கோடிப் பேருக்கும் அவர் தேவைப் படுகிறார். அதுவும் அவர்
விற்கிறார், இவர்கள் வாங்குகிறார்கள், அல்லது சரியாகச் சொல்ல
வேண்டுமெனில், நாம் வாங்குகிறோம். நிர்பந்தமோ ஒப்பந்தமோ இல்லாத சுலபமான பரிவர்த்தனை.

ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்தாலும் அவர் சம்பளம் தயார்.
அவர் கறுப்புப் பணம் செய்யும் பட்சத்தில் அது அரசு கவனிக்க வேண்டிய
குற்றம். மற்றபடி என்டர்டைன்மென்ட் நோக்கில் டிமாண்ட் மற்றும் சப்ளை
என்பதை விட சப்ளை மற்றும் டிமாண்ட் என்கிற ரீதியில் இதுதான் நடக்கிறது. இதில் எரிச்சல் படுவது உலக இயக்கத்தைப் பற்றி புரிந்து கொள்ளாமையால்தான்.

இருபது கோடி என்ன, நாஞ்சில் நாடனையும், ஜெய மோகனையும் பத்தாயிரம் பேர் படிப்பார்களா? அடுக்கவே அடுக்காது. ஆயிரம் பேர் ஊன்றிப் படித்தால்
அதிகம். ரஜினி சினிமா, ஊன்றிப் படிப்பது முதலிய கமிட்மென்ட் எதுவும்
இல்லாத வெள்ளந்தியான (இது சமீப தமிழ் உலகில் நையப் புடைக்கப் பட்ட ஒரு சொல்) கேளிக்கை. இதில் குடல் கருகுவதில்லை, கும்பி எரிவதுமில்லை. கேன்ஸர் வருவதில்லை, பாலியல் நோய் பற்றிக் கொள்ளவோ தொற்றிக் கொள்ளவோ செய்வதில்லை. மூளை மழுங்குகிறது என்று சொல்பவர்கள் உண்டு. எதனால் மூளை மழுங்குவதில்லை? ஆத்திகத்தால், அரசியலால், விளையாட்டால், மதத்தால், மொழியால், பகுத்தறிவால் மழுங்கவில்லையா? பொய்யை விற்கிறார்கள் என்பதற்கு யார் பொய்யை விற்கவில்லை என்று தயை கூர்ந்து சிந்தியுங்கள் என்று பதிலிறுக்கலாம். தவிர பொய்யைத்தானே விற்க முடியும்? அதுதானே கவர்ச்சியாய் சுவாரஸ்யமாய் இருக்கிறது? உண்மையே உன் விலை என்ன?

நமக்குத் தேவை மலையாய் கடலாய், குவியும் விரியும் பொழுதை எப்படியாவது போக்குவது. எளிமையான சுலபமான சமூக அங்கீகாரம் பெற்ற, சட்டத்துக்கு உட்பட்ட, சாமர்த்தியம் தேவைப் படாத கேளிக்கை சினிமா. அதிலும் என் ரசனை அளவில் சுவாரஸ்யமான ஒன்று என்றால் ஒசத்தி கண்ணா ஒசத்தி. அதை நயம்பட விற்பவர் ரஜினி.

சினிமா இருக்கக் கூடாது என்றால் சாரயக் கடைகள் இருக்கக் கூடாது. சாராயக் கடைகளிலும், சாராய கொள்கலன்களிலும் 'குடி குடியைக் கெடுக்கும்' என்று எச்சரிக்கிறார்கள். சினிமா அரங்குகளில் அவ்வாறு இன்னும் இல்லை. மது தொலைக் காட்சியில் தென்படும் சமயங்களிலும் இப்போது எச்சரிக்கைகள் வருகின்றன. ஏதோ அதில் வரும் இதர காட்சிகள் நம்மை நேரே மோட்சத்திற்கே இட்டுச் சென்று விடும் என்பது போல. மதுவாவது, ரஜினி திரையில் முதலில் வரும் கணத்தைப் போல பலரை மோட்சத்திற்கு இட்டு செல்லும் என்று என் நண்பர்கள் சிலர் அடித்துச் சொல்லி நான் கேட்டதுண்டு. சாராய விற்பனை சென்ற ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாம் தமிழகத்தில். சாரயம் ஒரு பொழுது போக்குத்தானே? சத்து மாவு விற்க வேண்டும் என்று சொல்ல நாம் யார்? சத்து மாவில் கலப்படம் இல்லை என்று யார் சொன்னது? சத்து மாவில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது?

மேலும் சினிமா இருக்கக் கூடாது என்றால் சிற்றுண்டிச் சாலைகள் இருக்கக்
கூடாது. ஆண்களும் பெண்களும் கண்களைத் தவிர இதர உடம்பை மறைத்துக்
கொண்டுதான் (ஜனாதிபதி மன்னிப்பாராக) வாழ வேண்டும். நமது முதலமைச்சர்கள் கண்டு களிக்கும் நன்றி நவிலும் நட்சத்திரக் கொண்டாட்டங்கள் நடக்க முடியாது.

நல்ல சினிமாதான் வேண்டும் என்பது இன்னும் அடாத செயல். எது நல்ல சினிமா? ஆளாளுக்கு மாறு படும். இதுதான் நல்ல சினிமா என்று பேசாத படம் தோன்றி, டிஜிடல் சினிமா தோன்றாத காலத்திலிருந்தே மக்கள் திரும்ப திரும்பக் காட்டி விட்டார்கள். ரொம்பப் பிடிவாதம் பிடித்தால் நல்ல அரசியல் தலைவர், சமூக சீர்திருத்தவாதி, மடத் தலைவர், மதத் தலைவர், நல்ல எழுத்தளர், கவிஞர், பத்ரிகை, இவை எல்லவற்றையும் விட நல்ல காற்று, நல்ல தண்ணீர், நல்ல உணவு வேண்டும் என்று கூட மக்கள் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். நாம் விரும்புவதை அல்லது நாம் விரும்புவதாக தோற்றுவிக்கப் பட்ட பிரமையை, நம் தகுதிக்கு ஏற்றதை எல்லா இடங்களிலும் நாம் பெற்றுக் கொண்டவாறே இருக்கிறோம்.

யாரும் யாரையும் வழி கேட்பதில்லை உயிர் வாழ. தாய், தகப்பன், உற்றார்,
சமூகம், வாத்தியார், போலிஸ், தலைவர், குருஜி மற்றும் சமய சந்தர்ப்பம்;
மேலும் இவை அனைத்தையும் மிஞ்சிய ஆசை, பயம் இவற்றின் இடை விடாத உந்துதல்; மற்றும் லட்சோப லட்சம் விஷயங்கள் மூலம் தாக்கம் பெற்று வாழ்கிறோம். வாழ்க்கையும் யாருக்கும் சுலபமாக எப்போதும் இல்லையே. உத்தரவாதங்களும் இல்லை. செவ்வியான் ஆக்கமும் அவ்விய நெஞ்சத்தான் கேடும் தானே நினைக்கப் படுகின்றன. அது வேறு குழப்பம்.

இதைத்தான் செய்ய வேண்டும் என்று யாரும் நிர்ணயம் பண்ண முடியாது. வாழ்க்கை பிய்த்துக் கொண்டு போய் விடும். புத்தன் கடவுள் ஆகவில்லையா? மதம் போதை வஸ்து என்ற முன்னாள் சோவியத் யூனியனில் பின்னர் போதை வஸ்துவே மதமாகவில்லையா?

ரஜினியை விட அதிகம் என்டர்டைன் செய்தவர்கள் அவரை விட அதிகம் செல்வமும் செல்வாக்கும் பெற்றார்கள். பெறுகிறார்கள். பெறுவார்கள். சிலர் விரித்த சினிமா அரசியல் என்ற இரண்டு கடைகளிலும் பரப்பிய பொருள் கொள்ளை கொள்ளையாய்க் கொள்ளப் பட்டது அல்லவா? அவர்கள் பெரும் பணக்காரர்கள் ஆனார்கள் என்றால் அந்த அளவு பொழுது போக்க உதவி இருக்கிறார்கள் என்று பொருள். இதிலும் கறுப்புப் பண விவகாரம் அரசால், நீதித் துறையால் கவனிக்கப் பட வெண்டிய ஒன்று என்பதைத் தவிர குறை சொல்ல என்ன உள்ளது?

கேளிக்கையில் உயர்ந்தது, தாழ்ந்தது என்று உள்ளது என சுலபமாகச் சொல்லி
விடுவார்கள். அவர்கள் ஒரு வகையில் மனுவாதிகள் அல்லது மார்க்ஸ்வாதிகள். எல்லா கேளிக்கையும் ஒன்றே, குலத்தைப் போல. வேண்டுமானால் ரகசிய கேளிக்கைகள் எல்லாருக்கும் கிடைப்பதில்லை எனலாம். கேளிக்கை எப்பேற்பட்டதாயினும் அதில் மனம் அடையும் மகிழ்வோ நெகிழ்வோ ஒன்றே. தீவிரம் வேண்டுமானால் மாறு படலாம்.

ஆனால் ரஜினி மேட்டர் pure entertainment. அவர் படத்தைப் பார்த்துக்
கொண்டிருக்கும் போது யாரும் வன் முறை செய்வதில்லை. அவருக்கு முந்திய சூப்பர் ஸ்டார் போல் அவருக்காக பச்சை குத்தவோ வாக்குச் சீட்டை குத்தவோ கூட வேண்டாம். முன்னவருக்கும் முந்தைய சூப்பர் ஸ்டாரைப் போல வெறும் அப்பழுக்கில்லாத பொழுது போக்கு. இவருக்கு சங்கீத ரசனை கூட வேண்டாம்.

எம்ஜியார் காலத்தில் " நம்பியாரிடம் எப்பவும் ஜாக்ரதையாய் இரு" என்று
அக்கறையும், அஞ்ஞானமுமாய் அறிவுரை கூறி அவருக்கே ஓட்டு போட்ட மூதட்டிகள் உண்டு. அவர் ஆதரித்தவர் அரசமைத்தார். இப்போதெல்லாம் யாரும் திரையில் தோன்றும் ரஜினியை நிஜ ரஜினி என்று நம்பி ஏமந்து ஓட்டளிப்பதில்லை. அப்படியே ஏமாந்தாலும் என்ன செய்வது? சத்யஜித் ரே படங்களை தமிழ்ப் படுத்தி எல்லா தியேட்டர்களிலும் ஓட்டலாமா? யார் பார்ப்பது? பொழுது மேன்மேலும் விளைந்து புற்று வைத்து விடாதா?

இயற்கை அதன் தர்மத்தை செய்து வருகின்றது. மனிதனின் விழைவு நியாயமா, சந்தோஷமா? காத்தலா, அழித்தலா? மனிதன் விதியின் கைப்பாவையா, விதி மனிதனின் காரியங்களுக்குக் கைத்தடியா? இது எல்லாமுமேயா, இடைப் பட்டதா, அல்லது எதுவுமே இல்லையா? மனிதர்க்கு என்ன தேவை? காற்று, தண்ணீர், உணவு, பிறகு உடை, உறைவிடம். உயிர் வாழ்ந்தால்தான் இன விருத்தி. எனவே பின்பு அது.

இதைத் தவிர மலையாய் நிமிர்ந்து எழுந்து கடலாய் விழுந்து புரண்டு
இருக்கும் பொழுதை என்ன செய்வது? எனவே உண்டி கொடுத்தோருக்குப் பின்
கேளிக்கை கொடுத்தவர்தானே உயிர் கொடுத்தோர்.

இது நேரிடையான - satire சிறிதும் இல்லாத - கட்டுரை.
*********

Thursday, July 30, 2009

எமன்.

எமன் : பிரசுரம் : சொல்வனம்  12-7-2009


வ.ஸ்ரீநிவாசன்.


எங்கள் வீட்டின் நான்கு குடித்தனங்களுக்கும் சொர்க்கம் நிச்சயம் மேலேதான் என்பதில் சந்தேகம் இல்லை. வீட்டின் மொட்டை மாடிதான் எங்கள் சொர்க்கம். பெரிய திடல் மாதிரி அது இருக்கும். நாலு பக்கமும் மூன்றடி உயர கைப்பிடிச் சுவர் மொட்டை மாடியை ஒரு குளம் மாதிரி காட்டும். சிறுவர்கள் விளையாட்டு மைதானம் அதுதான். மணல் அற்ற மைதானம். துளசி, மல்லிகை என்று செடி கொடிகள் ஓரமாய் இருக்கும் ஒரு நந்தவனமும் அதுதான். வடாம் போட, துணி உலர்த்த, கோடை காலத்து இரவில் தூங்க என்று அது எங்களுக்கு எல்லாமாக இருந்தது. அந்தக் கைப்பிடி சுவரில் சாய்ந்து கொண்டு வீதியைப் பார்த்தால் பொழுது நிமிடமாய்ப் போகும். மல்லாந்த இரவில் வானத்தைப் பார்த்தால் சுருக்க விடிந்துவிடும். கைப்பிடி சுவரில் சாய்ந்து எத்தனை கல்யாண ஊர்வலம், சாமி புறப்பாடு, அரசியல் ஊர்வலம், ஆலி ஜூலா எல்லாம் பார்த்திருக்கிறோம், எதோ உப்பரிகையிலிருந்து ராஜா பார்ப்பதைப் போல.

அப்பா எப்போதாவதுதான் அங்கெல்லாம் வருவார். அன்றும் வந்தார். ஒரு பிரம்பு சாய்வு நாற்காலியை நான் கொண்டு வந்தேன். அம்மா ஏற்கனவே பாயில் உட்கார்ந்து இருந்தாள். நானும் என் இரண்டு தங்கைகளும் கைப்பிடி சுவரில் சாய்ந்து நின்று கொண்டு இருந்தோம்.

ஜூலை மாதத்து மாலை நேரம். அருகில் இருந்த நாற்சந்தி வழக்கம் போல் ஜன சந்தடியோடு, வாகன இரைச்சலோடு இருந்தது. மூலையில் இருந்த பிள்ளையார் கோவில், அடுத்த திருப்பத்தில் இருந்த மார்க்கட், நேராகப் போனால் வரும் மெயின் ரோடு எல்லாமுமே கூட்டத்துக்கும், இரைச்சலுக்கும் காரணமாயிருந்தன. விளக்குக் கம்பங்களில் அரசியல் கட்சித் தோரணங்கள், இண்டு இடுக்கு விடாமல் வீட்டு சுவர்களில் சுவரொட்டிகள், சுதந்திரமாய்த் திரியும் மாடுகள் என்று வண்ணங்கள் கண்ணில் அடித்தன.

அப்போது அப்பா பெயர் சொல்லி யாரோ வீதியிலிருந்து கூப்பிடுவது கேட்டது. நான் எட்டிப் பார்த்தபோது சுமார் ஐம்பது, ஐம்பத்தைந்து வயது மதிக்கத் தக்க ஒருவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. கட்டம் போட்ட அரைக்கை சட்டையும், வேட்டியும் அணிந்திருந்தார். கீழே போய் அவருக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன். அப்பாவைப் பார்க்க வேண்டும் என்றவரைக் கூட்டிக் கொண்டு மேலே வந்தேன்.

“என்னைத் தெரியுதா” என்று கொஞ்சம் கலங்கியவாறே அவர் அப்பா அருகில் வந்தார். அப்பா அவரைப் பார்ததில் அவருக்குச் சட்டென்று தெரியவில்லை என்பது தெரிந்தது.

“கீழே போய் இன்னொரு சேர் கொண்டு வா” என்று அப்பா சொன்னார். நான் புறப்படும் முன், “அதெல்லாம் வேண்டாம் தம்பி” என்றவாறே அப்பா காலடியிலேயே அவர் தரையில் உட்கார்ந்து விட்டார்.

அம்மா எழுந்து “இந்தப் பாயில் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்றாள்.

“வேண்டாம்மா. நீங்க ஒக்காருங்க” என்று கொஞ்சம் பதற்றமாகக் கைகளாலும் சைகை செய்தபடி சொன்னவர் நிமிர்ந்து அப்பாவையே பார்த்தார்.

அப்பா கொஞ்சம் கூச்சமாகி இருந்தார். பிறகு மெள்ள, “செல்லம்... செல்லையா...” என்றார்.

“ஆமா, செல்லையாவேதான். பரவாயில்லை. ஞாபகம் வச்சிருக்கியே.” என்று நிறுத்தியவர், “எப்படி இருக்கே, நல்லா இருக்கியா.. முப்பத்தஞ்சு வருஷமாச்சு நாம பாத்து”என்றார். பிறகு அம்மாவிடம் திரும்பி, “நீங்க ஒக்காருங்கம்மா” என்றார். எங்கள் பக்கம் பார்த்து, “பசங்களா?” என்று கேட்டார்.

அப்பா “ஆமாம்” என்றார்.

“கோயமுத்தூர் போன மாசம் போயிருந்தேன். உங்க டிபார்ட்மென்ட்லே ஒன்னப் பத்தி விசாரிச்சேன். நீ மெட்றாஸ் போய் இருபது வருஷமாச்சுன்னாங்க. இங்க வந்து விசாரிச்சு உன்னப் பத்திக் கேட்டு அட்ரஸ் தெரிஞ்சுகிட்டு இங்க வரேன்....இப்ப என்ன இன்ஸ்பெக்ஷன்லே இருக்கியாமே, ஊர்லே இருக்கியோ இல்லயோன்னு நினச்சேன்”

“இப்போ மெட்றாஸ்லேதான் ட்யூட்டி. இன்னும் ரெண்டு மாசத்துக்கு.. .. நீ இப்போ எங்கே இருக்கே?”

“சீரங்கத்துலேயேதான் இருக்கேன். மலேசியா, சிங்கப்பூர், துபாய்னு போயிட்டு பத்து வருஷம் முன்னாடி ஊர் திரும்பிட்டேன். உனக்கு எப்போ ரிடயர்மென்ட் ?”

“இன்னும் மூணு வருஷம் இருக்கு. நீ என்ன பண்றே?”

“ம்..... என்னெல்லாமோ பண்ணேன்.” என்றவர் என்னைப் பார்த்து, “என்ன படிக்கிறே தம்பி” என்றார்.

“ஃபர்ஸ்ட் இயர் பி. காம்.”

“நீங்கம்மா?”

“நான் லெவென்த். இவ நைன்த்” என்று சொல்லிவிட்டு என் முதல் தங்கை அப்பாவைப் பார்த்தாள்.

அப்பா, “இவர் என் கூட திருச்சி காலேஜ்லே படிச்சவர். முப்பது முப்பத்தஞ்சு வருஷம் முன்னாடி. நான் ஹாஸ்டல், இவர் டே ஸ்காலர்” என்றார்.

“நாம காலேஜ்ல சேந்து படிச்சதைச் சொல்றே. முக்கியமான விசயத்தச் சொல்லு” என்றவர், மெல்ல எங்கள் பக்கம் திரும்பி, “நான் உயிரோட இருக்கறதுக்குக் காரணமே உங்கப்பாதான்.” என்று சொல்லி எங்கள் மூவரையும் பார்த்தார்.

“நாங்கள் காலேஜ்ல படிக்கறப்ப காவேரிலே நான் போயிருக்க வேண்டியவன். உங்கப்பாதான் என்னைக் காப்பாத்தினார்.” இதைச் சொல்லும்போது, அவர் குரல் கொஞ்சம் விம்மியது.

இவ்வளவு நேரம் ‘யார் இந்த ஆள்’ என்று பார்த்துக் கொண்டிருந்த அம்மாவின் கண்கள் பிரகாசமாயின.

பிறகு அவர் எங்கப்பாவைப் பார்த்து, “ நான் அன்னிக்கே போயிருக்கலாம்பா. என்னை ஏன் காப்பாத்தினே” என்றார். உட்கார்ந்தவாறே அப்பாவின் கைகளைப் பிடித்துக் கொண்டார். அவர் கண்கள் கலங்கி இருந்தன.

இரண்டு நிமிடம் யாரும் ஒன்றும் பேசவில்லை. அப்பாவின் கைகளை விடுவித்தவாறே தலையைக் குனிந்தவாறு பொதுவாக “ஐயாம் சாரி” என்றார்.

“உம் பிரதர் கோபாலன் எங்கே இப்ப” என்று அப்பாவிடம் கேட்டர்.

“மதுரையிலேயே ப்ராக்டீஸ் பண்ணிண்டு இருக்கார்”

“உண்மையிலேயே சொல்றேம்பா. எனக்கு உயிர் தந்ததுக்கு நான் உனக்கு என்ன வேணும்னாலும் தரலாம். நம்ம செத்துருவோமோன்னு கொஞ்சம் கூட தயங்காம தண்ணிலே குதிச்சு என்னை வெளிலே கொண்டு வந்தே. எங்கம்மாப்பா உன்னைத்தான் குலதெய்வம்பாங்க. ஆனா நான் வாழ்ந்திருக்கக் கூடாதுப்பா. என் கதை அன்னிக்கே முடிஞ்சிருக்கணும். நீ பண்ணது எவ்வளவு பெரிய தப்புன்னு உனக்குத் தெரியாது. என்ன அப்படியே சாக விட்டிருக்கணும். ஆனா நீதாம்பா எனக்கும் கண் கண்ட கடவுள்”.

அப்பாவுக்கு கூச்சம் அதிகமாகி இருந்தது. நல்ல வேளை வேறு குடித்தனக் காரர்கள் யாரும் இன்னும் வரவில்லை.

அவர் மேலும் பேசும் முன் அப்பா, “சும்மா இரு செல்லம். அதெல்லாம் ஒண்ணுமில்லே.” என்றார். பிறகு, “நான் எங்க உன்னக் காப்பாத்தினேன். ஏதோ பதட்டத்தில தண்ணிலே குதிச்சேனே ஒழிய நானே முழுகிடுவேனோன்னு பயந்துட்டேன். நான் முழுகிப் போகாம இருக்க முயற்சி பண்ணப்ப நீயும் என் கூட வெளிலே வந்தே. அதப் பத்தி திருப்பித் திருப்பி பேசாதே. உனக்கு எத்தன பசங்க. என்ன பண்றாங்க. உன் குடும்பம் பத்தி
சொல்லு.” என்றார்.

“நான் மேக்கொண்டு முப்பத்தஞ்சு வருஷம் வாழ்ந்தது ஒன்னாலேதான். நீயா என்னக் காப்பாத்தினயோ இல்லே உன் விதியோட என் விதி பிணஞ்சு நானும் தப்பிசேனோ...... ஆனா நான் அன்னிக்கே போயிருக்கலாம். ஒண்ணு தெரிஞ்சுக்க. இந்தத் தடவை ஒன்னாலே ஒண்ணும் பண்ண முடியாது. ஒன்னப் பாக்கணும் ஒருவாட்டியாவதுன்னுதான் அதைத் தள்ளிப் போட்டேன். எனக்கு என்னெல்லாம் நடந்ததுன்னு ஒனக்குத் தெரியாது, இனிமேலும் என்னப் பத்தி ஒனக்கு ஒண்ணும் தெரியாது. உன்னாலே என்னைத் தடுக்கவும் முடியாது.”

அவரது கலைந்த தலைமுடியும், கறுக்கும் முகமும், கலங்கிய கண்களும் இதற்கெல்லாம் சற்றும் சம்பந்தமில்லாத சிறிய புமுறுவலோடு இருந்த உதடுகளும் அவர் பயித்தியமோ என்று எண்ண வைத்தன. அப்பாவுக்குக் கூச்சத்தோடு இப்போது குழப்பமும் சேர்ந்திருந்தது. “அதெல்லாம் இருக்கட்டும். ராத்திரி இங்கே சாப்டுட்டுப் போலாம்” என்றார்.

அவர் மெல்ல சிரித்தார். முகம் தெளிவான மாதிரி இருந்தது. “ இனிமே எனக்கு சாப்பாடு வேண்டாம். உன்னைப் பார்த்தது போதும். உன்னைப் பார்க்கத்தான் உயிரோடு இருந்தேன். நீ என்னைக் காப்பாத்தினபோது எங்க அப்பா அம்மாதான் இருந்தாங்க. அப்புறம் எவ்வளவோ புது சொந்தம். ஆனா இன்னைக்கு யாரும் கிடையாது. அப்பா அம்மா கூட கிடையாது. நீ மட்டும்தான் எனக்கு. அதான் உன்னைத் தேடி அலைஞ்சேன். உன்கிட்டே சொல்லிட்டுப் போக. இனிமே உன்னால் என்னைக் காப்பாத்த முடியாது.”

அம்மா இதற்குள் கீழே போய்ப் காப்பி கொண்டு வந்துவிட்டாள். அதை மறுக்காமல் வாங்கிக் கொண்டார். சொட்டு விடாமல் குடித்தார். நல்ல பசியோடு இருக்கிறார் என்று தெரிந்தது. சடக்கென்று எழுந்து கொண்டார். அம்மாவைப் பார்த்து பெரிய கும்பிடு போட்டார். ‘ நான் யாரோ பக்கிரின்னு நினைச்சுராதீங்க. பி.ஏ.பி.எல். படிச்சு இருக்கேன். நில புலன்லாம் இருக்கு. நான் பார்க்காத ஊர் இல்லே. ஆனா இதுக்கெல்லாம் ஒண்ணும் அர்த்தம் இல்லை.” என்றார். அம்மா என்ன சொல்வது என்று தெரியாமல் அப்பாவைப் பார்த்தாள்.

அவர் கீழே விழுந்து அப்பாவை வணங்க முற்பட்டபோது அப்பா அவரைத் தடுத்து விட்டார். “செல்லம்” என்று ஒரு அதட்டல் போட்டார்.

“இன்னும் ‘ ருமாடிஸம் இருக்கா ஒனக்கு” என்றார் அவர். அப்பா ‘உம்’ கொட்டினார். அவர் எப்போ கிளம்பிப் போவார் என்பது மாதிரி இருந்தார்.

அவர் மறுபடியும் “ஐயாம் சாரி” என்றார். “வரேம்ப்பா” என்று அப்பாவின் இரண்டு கன்னங்களையும் தடவி விட்டு கிளம்பி எங்களிடம் “வரேன்” என்று சொல்லிவிட்டு அம்மாவைப் பார்த்து மறுபடியும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு விறுவிறுவென்று படியிறங்கிப் போய் விட்டார். எல்லாம் ஒரு பத்து, பதினைந்து நிமிடங்களுக்குள் வேகவேகமாக நடந்து விட்டன.

அப்போது வாசலில் ஒரு பெரிய ஊர்வலம் வந்தது. அரசியல் தலலவர் ஒருவரின் பிறந்த நாள். பேரிரைச்சலுடன் அலங்கரிக்கப் பட்ட வாகனங்கள், விதம் விதமான ஆட்டங்கள் என்று அந்த ஊர்வலம் சென்றது. வாழ்க ஒழிக கோஷங்கள், ஒலி பெருக்கிகளில் பிரசாரப் பாடல்கள், பேச்சாளர்கள், குழாய் விளக்குகள், ஜெனரேட்டர், போலீஸ், குதிரை, யானை என்று ஊர்வலம் போய்க் கொண்டே இருந்தது.

இது நடந்து இருபது வருடம் ஆகி விட்டது. அதற்கப்புறம் செல்லையாவைப் பற்றி ஒன்றும் கேள்விப்படவேயில்லை. ஆனால் அவரை எப்போதுமே மறக்க முடியாதபடி ஆகிவிட்டது. அன்று இரவுதான் எங்கப்பா போய் விட்டார்.

***********

பெயரிலென்ன இருக்கிறது?

பெயரிலென்ன இருக்கிறது?

எழுதியவர் வ.ஸ்ரீநிவாசன் - (பிரசுரம் : சொல்வனம் 6/24/09)

இது ஷேக்ஸ்பியர் ஓரிடத்தில் கேட்பது. என் உயர் அதிகாரி ஒருவர், ‘பெயரில்தான் எல்லாம் இருக்கிறது’ என்றார். எங்கள் வங்கியில் இருந்த பெரும்பான்மை உயர் அதிகாரிகள் கொங்கணி மொழிக்காரர்கள். இவரும்தான். ஆங்கிலம், மலையாளம், தமிழ் பேசுவார். இவரோடு ஒரு முறை பேங்களூரு வரை போய் வர வேண்டி இருந்தது. காரில். அப்போது அவர் பேசிக் கொண்டே வந்தார். ‘ஒருவருடைய பெயர் தான் அவருடைய ‘Life Script’. அதில்தான் அவர் வாழ்க்கை ஒட்டு மொத்தமாக அடங்கியுள்ளது. என் பெயரில் சதானந்த் இருக்கிறது. அதனால் தான் நான் எப்போதும் ஆனந்தமாய் இருக்கிறேன்’ என்றார். அவர் ஆனந்தமாய் இருந்தாரோ என்னவோ அவரிடம் பணியாற்றிய அதிகாரிகள் சதா ஒரு வித கிலியிலும்,குழப்பத்திலுமே இருந்தார்கள். (அதனல்தான் அவர் ஆனந்தமாய் இருந்தார் போலும்). அவர் எப்போது என்ன செய்வார் என்று தெரியாது. காலையில் சென்று அவரிடம் ‘குட் மார்னிங்க்’ சொல்பவரிடம் ‘உன்னை தண்ணியில்லா காட்டுக்கு அனுப்பி விடுவேன்’ என்பார். மேசையின் அறைகளில் கடைசி அறையைத் திறந்து அதில் தன் கால்கள் இரண்டையும் போட்டுக் கொண்டு கேபினில் அமர்ந்திருப்பார். அவர் அறை குண்டூசியை யாருமே தொட மாட்டர்கள். எல்லாம் அவர் பல் பதம் பார்த்தவை. ‘காலையில் ஒரு மணி வாக் போவேன் தினமும்’ என்பார். அவர் சொல்லும் பாதை உதாரணத்திற்கு ‘பாரிசில் புறப்பட்டு, தாம்பரம் வரை போய் திரும்பி, வலசரவாக்கம் வந்து மீண்டும் ஆவடி வந்தேன்’ என்கிற ரீதியில் இருக்கும். மாதந்தோறும் அவர் மருந்துகளோடு தொலை பேசியில் கத்தி வாங்கும் கருத்தடை சாதனம் எல்லார் கவனத்தையும் கவரும். சில சமயம் ராமாயணம், இந்த லைஃப் ஸ்கிரிப்ட் போன்ற விஷயங்களைப் பற்றி சுவாரஸ்யமாக, அவர் படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கியது உண்மைதான் என்று தோன்றும்படி, பேசுவார். மற்றபடி தங்கப் பதக்கம் வாங்கியவன் வங்கியில் சேர்ந்த மாதிரிதான்.

நான் பிற்காலத்தில், மிக்க பொறுப்போடு வேலை பார்த்த என் துணை அதிகாரி ராமலிங்கம் என்பவர் மாற்றல் ஆகிச் செல்கையில், இந்த ‘லைஃப் ஸ்கிரிப்ட்’ விஷயத்தைப் பேசினேன். எங்கள் கிளை ப்யூன் ‘குமாரு’க்கு இரண்டு மனைவிகள். ‘க்ருஷ்ணன்’ என்கிறவருக்கு பல சிநேகிதிகள். இதையெல்லாம் சொல்லி விட்டு ‘ராமலிங்கம் ஆதர்ச மகனாக, கணவனாக, சகோதரனாக, நண்பனாக இருந்த ராமன் போல் ஓர் ஆதர்ச அதிகாரியாக இருந்தார். லிங்கத்தைப் போல அரூபமாக (இந்த இடத்தை துளியும் விரச அர்த்தம் வர வாய்ப்பே கொடுக்காமல் பேசினேன்) மர்மமாகவும் இருந்தார்’ என்றேன். அதற்கும் காரணம் இருந்தது. அவருக்கு வரும் தொலை பேசி அழைப்புகள். அவர் திடீர் திடீரென்று காணாமல் போவது. அவர் வீடு எங்கு இருக்கிறது என்று யாருக்கும் தெரியாமல் இருந்தது போன்றவை.

‘சின்னப்பையன்’ என்ற பெயர் கொண்ட ஒருவர் என்னுடன் வேலூரில் பணியாற்றினார். முதலில்
மிலிடரியில் பணிசெய்தவர். (எக்ஸ் சர்விஸ் மென்களில் மூன்று வர்க்கங்கள் உண்டு. ஆர்மி, நேவி, ஏர் ஃபோர்ஸ் என்று. கொஞ்சம் பழக்கத்திற்குப் பின் ஒருவர் எந்தப் பிரிவில் பணி புரிந்தவர் என்று அவர்களைக் கேட்கமலே சொல்லி விடலாம். ஆனால் பொதுக் குணம்: கேள்வி கேட்காமல் சொன்ன வேலையை செய்வது. உடல் வலு மிக்கவர்களாக இருப்பது.) தலைமை கடை நிலை ஊழியர். அவர் போன்ற பொறுப்பு மிகுந்த ஊழியர்களைக் காண்பது அரிது. அவர் இல்லாவிட்டால் கிளையை நடத்துவது சிரமம். ஆயிரக் கணக்கான ஓய்வூதியக் காரர்களை வாடிக்கையாளர்களாய்க் கொண்டிருந்த இந்தக் கிளையில் ஒவ்வொரு பென்ஷனரையும் தனிப்பட்ட முறையில் அறிந்தவர். பல சமயங்களில் அவர்கள் பென்ஷன் தொகை உட்பட. இந்த சின்னப் பையன்தான் எங்கள் கிளையில் இருந்த சுமார் முப்பது பேரில் முதியவர்.

அவர் குடும்பத்தில் இருந்த ஒரு இளைஞன் பெயர் ‘ஜாம்பவான்’. டி.வி. சம்பந்தப் பட்ட வேலைகளைச் செய்து வந்தார். எங்கள் வீட்டு ஆன்டனாவை வைக்க வந்த போது அவர் நண்பனை துணக்குக் கூட்டி வந்தார். அவர் பெயர் ‘நட்சத்திரம்’. இதைத் தவிர என் கல்லூரி நாட்களில் என்னுடன் ‘படவட்டம்’ என்று ஒருவர் படித்தார். மிக இனிமையானவர். மாலையிலும் காலை வேளைகளிலும் அஞ்சல் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டே படித்து வந்தார். ‘என்னங்க படம் பட்டம்’ என்று கூப்பிடுபவர்களைப் பார்த்தும் புன்னகையே புரிவார்.

‘புதுமைப் பித்தன்’, ‘மௌனி’ போன்றவர்களது கதைகளைப் படிக்காமல் அந்தப் பெயர்களைக் கேட்கையில் கொஞ்சம் கூச்சம் ஏற்படுகிற மாதிரி இருக்கும் என்றே நினைக்கிறேன். அவர்கள் பெயராக அவை இருந்ததனால் அவை சாதாரணமாக ஏன் பொருத்தமாகக் கூட ஒலிக்கின்றன. ‘ஜெயகாந்தன்’ வெற்றியை ஈர்ப்பவர் என்றும் ‘ஜெயமொகன்’ வெற்றியை நேசிப்பவர் என்றும் பொருள் ஆகின்றன. ‘ராமம்ருதம்’ வேறு எந்தப் பெயராக இருந்திருக்க முடியும்? ‘நாஞ்சில் நாடன்’ என்ற பெயராலேயே, கட்சி நெடி அடிக்கும் என்று அவர் அருகிலேயே நான் சென்றதில்லை. 2001ல் தான் முதல்முறையாக அவரைப் படித்தேன். அப்போதுதான் தெரிந்தது இது எதிர் துருவத்தில் இருக்கும் நாஞ்சில் நாடு என்பது. பிரமிளின் பெயர் சிவராமலிங்கம். “அழிக்கும் கடவுள் பின் காக்கும் கடவுள் மறுபடி அழிப்பு தான். அதுதான் அவரோடு ஆன உறவு பரம பத சோபன படம் போல் கொஞ்சம் ஏணியும் நிறைய பாம்புகளும் கொண்டது” என்று வெங்கட் சாமிநாதன் சொன்னதாகக் டேவிட் என்னிடம் சொன்னார். ‘அசோக மித்திரன்’ என்ற பெயரும் பு.பி. மௌனி மாதிரி கூச்சம் வரவழைப்பதாகத்தான் உள்ளது. (உண்மையில் அவன் ‘சோக மித்திரன்’ என்று சுஜாதா எழுதினார்.)

‘ரஸ்கால்நிகாவ்’ முதல் சிறிய பாத்திரமான ‘மர்மலடாவ்’ வரை பல காரணப் பெயர்களைக் கொண்டது தாஸ்த்தாயெவ்ஸ்கியின் ‘குற்றமும் தண்டனையும்’.

நான் ஓரிடத்தில் பேசப்போனேன். விழாவுக்கு தலைமை வகித்த புலவர் ஒருவர், வயதுமுதிர்ந்தவர், தன் பெயருக்கு ஏற்ற மாதிரி சுறுசுறுப்பான சீனிவாசன் (எறும்பு என்ற விளக்கத்தோடு) இப்போது உரை ஆற்றுவார் என்று அறிமுகம் செய்தார். அப்போதே நான் நல்ல வெளையாகக் கவனமாக ஸ்ரீநிவாசன் என்றே எல்லா இடத்திலும் உச்சரிப்பு கெடாமல் எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டேன். ஆனாலும் இந்தப் பெயர் சீனு, சீனி, சீனா, ஸ்ரீ, ஸ்ரீநி, சீமாச்சு (குறைந்த பட்சம் பழைய கதைகளில்) இன்னும் பல்வேறு ரூபம் கொள்கிறது. சுப்ரமண்யமும் அப்படித்தான். ஆனாலும் சில பெயர்களில் அபாயம் அதிகம். காமினி, சோபா (வாடகை சோபா இருபது ரூபா), மிருனாளினி (இது ஆங்கிலத்தில் Mi-மை ru-ரு na- ந li-ளி ni-னி ஆகிற கொடுமையைப் பார்த்திருக்கிறேன்). புண்டரிகாட்சன், குஞ்சித பாதம் (இப்பெயர்கள் இப்போது புழக்கத்தில் உள்ளனவா?) போன்ற பெயர்கள் தூங்கு மூஞ்சி ஆசிரியர்களின் வாயில் பாதியில் நின்று திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படுகையில் வகுப்பறை ரண களம் ஆகி விடும்.

மும்தாஜ், அப்பாஸ் ‘காஃபி வித் அனு’ தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சேர்ந்து தோன்றினார்கள். மும்தாஜ், அப்பாஸை ‘ஆயுஷ்மான் பவ” என்று வாழ்த்தினார். இன்னொரு நிகழ்ச்சியில் அஸின் தன் பெயரின் பொருளை இப்படி விளக்கினார். “ஆங்கிலமும் சம்ஸ்க்ருதமும் சேர்ந்த பெயர். ஸின் (sin)- பாவம்; எதிர்ப்பதம் அஸின். ‘ஸின்’ ஆங்கிலம், ‘அ’ சம்ஸ்க்ருதம்” என்றார். மும்தாஜ் வட இந்திய இஸ்லாமியர். அஸின் கேரள கிறிஸ்தவர்.

சம்ஸ்கிருதம் பற்றியும் எனக்கு ஒன்றும் தெரியாது. எங்கள் பள்ளியில் வி.வி.என். என்கிற வி.வி.நடராசன் அற்புதமான தமிழாசிரியர். அவர் சொல்லிக் கொடுத்த கம்ப ராமாயணப் பாடல்கள் இன்னமும் மனதில் இருக்கின்றன. அவர் சம்ஸ்கிருதத்தை ‘வட்ட்ட்ட மொழி’ என்று கூறி பல்லைக் கடிப்பார். அவர் ‘ஐயர்’ ஜாதியைச் சேர்ந்தவர் என்று என் பள்ளித் தோழன் மூலமாக சமீபத்தில்தான் தெரிந்து கொண்டேன். தமிழ் பற்று = சம்ஸ்க்ருத வெறுப்பு என்று தமிழ் நாட்டில் இருக்கிறது.

இதை எழுதுகையில் பெயர்கள் தமிழில் இல்லாததால் சிலர் வாங்கிக் கட்டிக் கொண்டது நினைவுக்கு வருகிறது. திரு. கி.ஆ.பே. விஸ்வநாதம், திரு சி.பா.ஆதித்தனார் ஆகியோர் மாநிலக் கல்லூரியில் பேச வந்த போது உடன் பேச வந்த தேவநேய பாவாணர், முன்னவரை ஏன் பெயரை ‘உலக நம்பி’ என்று மாற்றிக் கொள்ளவில்லை என்றும், இரண்டாமவரை ‘பத்ரிகையின் பெயரை ஏன் நாட்கம்பி என்று மாற்றவில்லை என்றும் திட்டித் தீர்த்தார். கி.ஆ.பே. அவர்களின் பேத்தி பெயர் (ஜெயஸ்ரீ) கூட விமர்சிக்கப் படடதாக நினைவு. அதே கூட்டத்தில் கல்யாண பத்ரிகைகளில் சிரஞ்சீவி என்று போடுகிறீர்கள் சிரம் என்றால் தலை, எனவே சிரஞ்சீவி என்றால் தலையை வெட்டுகிறவன் என்று பொருள் வருகிறது என்று கி.ஆ.பே. பேசினார். நான் என் பள்ளி நாட்களை நினைத்துக் கொண்டேன். வகுப்புகளில் ‘Soothing Effect’ ‘தளை, அடி, தொடை” ‘ கூதிர் காலம்” போன்ற வார்த்தைகள் வருகையில் பள்ளி மாணவர்கள் ‘களுக்’கென்று சிரிப்பதில் குழந்தைத்தனம் இருக்கும்.

ஒரு கவிஞர் திடீரென்று தன் பெயர் கடவுள் பெயர் என்று அறிந்து கொண்டு ஒரு நெருப்பு கக்கும் புரட்சிப் பெயரில் பல நாள் எழுதி வந்தார். மீண்டும் ஞானோதயம். அந்த புரட்சி வடமொழி புரட்சி என்பதால் இப்போதெல்லாம் அதைத் தமிழ் படுத்தி, படுத்தி வருகிறார். ஸ்ரீநிவாசனுக்கு தமிழ்ப் பெயர் இருக்கிறதா என்று யோசித்து இருக்கிறேன். சமீபத்தில் தான் நாஞ்சில் சார் எதேச்சையாக சொல்லிய ‘திருவாழி’ என்கிற பெயர் தெரிய வந்தது. ஆனால் அது முடிவு பெறாத சொல்லாகப் பட்டது. ‘திருவாழி மார்பன்’ முழுச் சொல்லாக இருக்கிறது. ஆனால் ஸ்ரீநிவாசன் திருவாழி மார்பனைவிட சுருக்கமாக இருக்கிறது. மேலும் திருவாழி என்கிற சொல் பெருசு, பிரபலம், கதை சொல்லி, பூச்சி கொல்லி மாதிரி அஃறிணை சாயலில் இருந்ததால் என் பெயர் ஆகும் வாய்ப்பை இழந்தது. தவிர ஸ்ரீநிவாசனும், ராமனும், க்ருஷ்ணனும், சுப்ரமண்யமும், ராஜகோபாலனும், ராமசாமியும், காமராஜனும், கருணாநிதியும், ராமச்சந்திரனும் தமிழனுக்கு மட்டுமே சொந்தமான அவனுடைய ப்ரத்யேக சம்ஸ்கிருதம்.

பெயரில் என்னவெல்லாம் இருக்கிறது!

Tuesday, July 7, 2009

திரும்பிப் பார்த்தலும் திரு அல்லிக் கேணியும்.

திரும்பிப் பார்த்தலும் திரு அல்லிக் கேணியும்.

வ.ஸ்ரீநிவாசன்.

‘நாஸ்டல்ஜியா’. - அகராதிப்படி நாடு / வீடு திரும்புதல் பற்றிய பேரவா, கடந்த காலத்தைப் பற்றிய உணர்ச்சி மிகு ஏக்கம். பழைய அனுபவங்களைத் திரும்பிப் பார்த்தலைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுத்தப் படுகிறது. நாஸ்டல்ஜியாவை உணர்ச்சி மிக உபயோகப்படுத்திக் கொண்டதாலேயே வெற்றி பெற்ற திரைப் படங்கள் எங்கும் உண்டு. சமீபத்தில் தமிழில் ‘அழகி, ஆடோகிராஃப்’. குரோசாவாவின் ‘ட்ரீம்ஸ்’ கடந்த காலம் என்னும் கட்டுக்குள் சிக்காமல் எக்காலத்துக்கும் ஏற்றதான க்ளாஸிக். மற்றும் பெர்க்மனின் ‘ஃபேன்னி அண்ட் அலெக்ஸான்ட்ரா’.

சொந்த ஊர் உணர்ச்சிமிகப் பேசுபவர்களை நான் சந்தித்திருக்கிறேன். சொந்த ஊரில் போய்தான் சாக வேண்டும் அல்லது சாவதற்காவது சொந்த ஊர் போய்விட வேண்டும் என்கிற நண்பர்கள் எனக்கு உண்டு. சொந்த ஊர் தண்ணீர், வாசனை, பாஷை பற்றி ஏங்குபவர்களை எனக்குத் தெரியும். அது போன்ற உணர்வுகள் என்னை அலைக்கழித்ததில்லை.

ஏதோ ஒரு ஊரிலிருந்து பல வருட இடைவெளியில் சென்னை சென்டிரல் ஸ்டேஷனில் இறங்குகையில் ஒரு பரிச்சய உணர்வு (ஃபெமிலியர் ஃபீலிங்) சில நொடிகள் இருக்கும். ஏழு மணி ஆகிவிட்டால் சூரியன் உதித்து இத்தகைய உணர்வுகளைச் சுட்டெரித்துவிடும்.


இருபத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு மாலை அசோகமித்திரன் அவர்களின் 75வது வயது ஆரம்ப விழாவிற்காக திருவல்லிக்கேணி சென்றேன். மௌன்ட் ரோடில் (அண்ணா சாலை) இந்து ஆஃபீஸில் இறங்கி எதிர் திசையில் ஒரு பஸ் பிடித்து வாலாஜா சாலை வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இறங்கியதும் ஒரு பாதுகாப்பு உணர்வு, ஒருஅமைதி கலந்த மகிழ்ச்சி சூழ்ந்தது. அப்போது புரிந்தது சொந்த ஊருக்காக ஏங்குபவர்களைப் பற்றி. இந்த ‘நாஸ்டல்ஜியா’ உண்மையில் உடல் சம்பந்தப் பட்டது என்று தோன்றுகிறது; பழகிய இடம், சூழல், காற்று, வானம், வாசம் என்று. புது இடத்தில் தூங்க மறுக்கும் உடலின் நுண்புலனுணர்வு போல். இது வழக்கம் போல் நினைவுகளால் அபகரிக்கப் பட்டு பூதாகாரப் படுத்தப் படுகிறது. காமம், சாப்பாடு போல் கொஞ்சம் உடலாலும், பெரும்பாலும் மனதாலும் பேணப்படுவதாக இருக்கிறது. ‘எடர்னல் ப்ரெஸென்ட்’ புலனாகையில் இவ்வுணர்வுகள் மங்கிவிடுகின்றன.

இவ்விருபத்தெட்டு வருடங்களில், நான் பிறந்ததிலிருந்து இருபத்தேழு வருடங்கள் வாழ்ந்த திருவல்லிக்கேணி சிறியதாகி இருந்தது. ‘பெரிய தெரு’ சிறிய தெருவாகி இருந்தது. மிக அகலமான தெருக்கள் என்று நினைவில் இருந்தவை குறுகி இருந்தன. என் பால்ய பருவத்தில் பதிவாகி இருந்த நினைவுகளில் இருந்த திருவல்லிக்கேணி அப்போதிருந்த என் வளர்ச்சியைக் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளவில்லை போலும். மேலும் கட்டடங்கள் பெரும்பாலானவை இப்போது இரண்டு மூன்று மடங்கு உயரம் கூடி இருந்தமையும் ஒரு முக்கிய காரணம். முப்பத்தைந்து வருடங்கள் கழித்து சென்னை திரும்பிய என் நண்பனும் இதே மாதிரி உணர்ந்ததைச் சொன்னான். என்னை விட உயரமான அவனுக்குத் திருவல்லிக்கேணி இன்னும் சிறியதாக ஆகி இருக்கும்.

திருவல்லிகேணியிலிருந்துதான் பார்த்த சாரதி பெருமாள் பரிபாலனம் செய்து வருகிறார். அவரது கோயிலின் குளம்தான் அல்லிக்கேணி எனும் அழகு தமிழ்ப்பெயர் கொண்டது. வைணவத் தமிழின் எழிலுக்கு இணை இருக்கிறதா என்ன? பார்த்தனின் சாரதி பெரிய மீசையுடன், அம்பு பட்ட தழும்புகளோடு ஆஜானுபாகுவாய் நிற்கிறார். கோவிலின் வாயிலிலிருந்தே காணக்கிடைக்கிறார்.



ஒரு காலத்தில் சனிக்கிழமை தோறும் சென்று தரிசித்து வந்த கோயிலுக்கு, கடந்த சுமார் நாற்பது வருடங்களில், நான்கைந்து முறையே சென்றிருக்கிறேன். சமீபத்தில் திரு நாஞ்சில் நாடன் அவர்களோடு நானும் இயக்குனர் சுகாவும் சென்றோம். அந்தக் கோவிலில் எந்த சந்நிதி எங்கே இருக்கும், என்ன சம்பிரதாயம் போன்ற விஷயங்கள் குறித்து ஒன்றும் தெரியாமல் இருந்த என்னை “அய்யங்கார் என்று அபாண்டமாக பழி சுமத்தப் படுகிற’ (உபயம் ‘கவிஞர்’ கனிமொழி பற்றிய ‘சோ’ வின் பிரயோகம்) என்கிற அடைமொழியோடு விளித்து அவருக்கே உரிய நகைச்சுவையோடு கிண்டல் செய்தார் சுகா.

இக்கோவிலில் இருக்கும் மூலவர் சிலை, கடவுளின் குறியீடு எனில் எதிரே கடற்கரைக்குக் கிழக்கே நீண்ட நெடிய நீலக்கடலாய் அவரது ஸ்தூல சரீரம். பைந்நாகங்கள் யுகயுகமாய் கரை சேர்ந்து கடல் மீண்டு கொண்டிருக்கின்றன.

மெரினா கடற்கரை. திருவல்லிக்கேணிவாசிகள் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தது. உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை என்கிறார்கள்.


கடலெதிரில் சென்னை பல்கலைக் கழகம், மாநிலக் கல்லூரி, இராணி மேரிக் கல்லூரி, விவேகாந்தர் இல்லம் ஆகியவை.

நட்பு யாதெவற்றையும் விட உற்றதாய் இருந்த ஒரு காலத்தில் எங்கள் நண்பர் குழாத்தின் மாலைகள் மற்றும் முன்னிரவுகளெல்லாம் இக்கடற்கரையில்தான் கழிந்தன. கடலின் பின்னணியில் எவ்வளவு யுகங்களாய் மனிதனின் சிரிப்பும், கண்ணீரும், காதலும் இங்கு காற்றில் கலந்து கரைந்து கொண்டிருக்கின்றன. எவ்வளவு பேருக்கு வாழ்வாதாரமாய் கடலும், அதன் கரையும்.

இங்குதான் மகாகவி பாரதி பேசியிருக்கிறார். வ.உ.சியும் அவர் குருநாதர் பால கங்காதர திலகரும், சுப்ரமணிய சிவாவும் பேசியிருக்கிறார்கள். ராஜாஜியும், காமராஜரும் சேர்ந்து பேசியதை நானே கேட்டிருக்கிறேன். சர்வ கட்சி கூட்டம் ஒன்றில் (சீனப் போர் சமயம் என்று நினைக்கிறேன்) கலைஞர் முதலிய பெரும் பேச்சாளர்கள் பேசியவற்றையெல்லாம் விட கவிஞர் கண்ணதாசன் ‘கடலெங்கும் அலை கொண்ட மணல் எங்கும் தலை’ என்று ஆரம்பித்துப் பேசிய பேச்சு அங்கு திரண்டிருந்த மக்களை அக்கணமே போர்க்களத்திற்குச் செல்ல தயாராக்கும் விதத்தில் அமைந்தது. சோ அவர்கள் பேசிய மாபெரும் பொதுக் கூட்டத்தைக் கேட்டிருக்கிறென். பெரியார் அவர்கள் வராததால் அவர் பேச்சை திரு வீரமணி அவர்கள் படிக்கக் கேட்டிருகிறேன்.


கடற்கரை அல்லாத திருவல்லிக்கேணியின் பிற பகுதிகளில் ம.பொ.சி., ஜெயகாந்தன், நா. பார்த்தசாரதி, நெல்லை ஜெபமணி போன்றவர்களின் பேச்சுகளைக் கேட்டிருக்கிறேன். 1967ல் அண்ணாவின் தேர்தலுக்கு முந்தைய கடைசிப் பேச்சு திருவெட்டீஸ்வரன் பேட்டையில் மதியம் நடந்தது. அப்பேச்சைக் கேட்டேன். பல பிராமணர்கள் தி.மு.க.வுக்கு ஓட்டு கேட்ட தேர்தல் அது. பின்னர் பாலர் அரங்கத்தில் (கலைவாணர் அரங்கம்) ராஜாஜி பிறந்த நாளுக்கு முதலமைச்சர் அண்ணா வந்திருந்து ஆங்கிலத்தில் ஆற்றிய உரையையும் கேட்டிருக்கிறேன். நாவலர் நெடுஞ்செழியன், சின்ன அண்ணாமலை, நாஞ்சில் மனோகரன் முதலியவர்களின் பொதுக் கூட்டங்களுக்கும் போனதுண்டு.

நான் படித்த இந்து உயர் நிலைப் பள்ளி ஆசிரியர்கள் அனைவரின் மேன்மையும் இப்போது புரிகிறது. பழுப்பேறிய, பல முறை துவைத்துக் கட்டப் பெற்ற வேட்டிகளோடும், கசங்கிய, சிலசமயம் கிழிந்த சட்டைகளொடும் வந்து பாரபட்சம் இன்றி, அனைத்து மாணவர்களையும் ஒன்றாக பாவித்து பாடம் சொல்லிக் கொடுத்த அவர்களது வறுமையில் செம்மை வாழ்க்கைக்கான உரத்தை இளமையிலேயே எங்களுக்கு அளித்தது.

பிறகு படித்த மாநிலக் கல்லூரி பிரம்மாண்டமானது. சுதந்திரம் மிக்கது. இருபாலரும் படித்தது. ‘ப்ரின்ஸஸ் ஆஃப் ப்ரெஸிடென்சி’ என்பார்கள். வாழ்க்கையின் சிக்கல்கள், பிரிவினைகள் அனத்தும் லேசாக புரிய ஆரம்பித்திருந்த காலம். கல்லூரிக்கு அருகில் இருந்த மாணவர் விடுதி பின் வரும் காலம் எப்படி இருக்கும் என்பதற்கு அடையாளமாய் இருந்தது. இன மற்றும் சாதி உணர்வுகள் நீறு பூத்து இருந்த அந்தக் காலத்தில் ஒரு ‘சிங்’ மாணவர் தலைவராக முடிந்தது.

அம்பு பட்ட மால் தென்கிழக்கில் என்றால் வெட்டுப் பெற்ற ஈஸ்வரன் வட மேற்கில் ஆட்சி செய்கிறார். திருவெட்டீஸ்வரன். அவரைத் தாண்டிப் போனால் இசுலாமியர் வாழும் பகுதிகள்.

திருவல்லிக் கேணியில் ஸ்டார் டாக்கீஸ், பாரகன் தியேட்டர் இருந்தன. வட மேற்குப் பக்கம் வசிப்பவர்களுக்கு தேவி, பிளாசா, சாந்தி, அண்ணா, ஓடியன், க்ளோப், மிட்லேண்ட் மற்றும் கெயிட்டி, கேஸினோ தியேட்டர்கள் நடக்கிற தூரம்தான். கதவுகள் எல்லாம் திறக்கப் பட்ட சினிமாக் கொட்டகைகளில், காற்றாட நடக்கும் இரவுக் காட்சிகளும், சிகரெட் புகையால் சூழப்பெற்று தேவலோகமாகும் அவற்றின் இடைவேளைகளும், காட்சி முடிந்து திரும்புகையில் திறந்திருந்து விருந்தோம்பும் பால் கடைகளும் சுகமானவை.

ஹிந்து உயர் நிலைப் பள்ளியில் கர்நடக சங்கீத கச்சேரிகளும், கதா காலட்சேபங்களும் நடைபெறும். வாரியார் சுவாமிகள், பால க்ருஷ்ண சாஸ்திரிகள் போன்றவர்கள் சுவை குன்றாது கூறிய இராமாயண, மகாபாரதக் கதைகள் இன்னமும் நினைவில் உள்ளன. என்.கே.டி கலா மண்டபத்தில் நாடகங்கள் தொடர்ந்து நடந்தன. கே.பி. சுந்தராம்பாள் போன்றவர்கள் பாடினார்கள்.

‘அவமரியாதை’ வேரூன்றவில்லை. மனிதரிடையே பரஸ்பர நம்பிக்கை இருந்தது. எல்லோருமே பெரும்பாலும் மத்யதர, கீழ் மத்யதரத்தைச் சேர்ந்தவராய் இருந்தார்கள். பொருளாதார ஏற்ற தாழ்வுகளின் இடைவெளி கம்மியாய் இருந்தது. அரசியல்வாதிகளில் கௌரவமானவர்கள், நேர்மையாளர்கள் மதிக்கப் பட்டார்கள்.’ஜென்’னில் கூறுவதைப் போல் ‘A careless trust on the divine occasion of our dust’ இருந்தது.

‘ரத்னா கேஃப்’தான் மிக உயர்ந்த சிற்றுண்டிச் சாலை. அவர்கள் பரிமாறிய சாம்பாரும், கொடுத்த காபியும், ஸ்தல புராணங்களில் இடம்பெறும் தகுதி வாய்ந்தவை. அதை தவிர பைக்ராப்ட்ஸ் ரோடு (பாரதி சாலை) முழுவதும் சிற்றுண்டிசாலைகள் தான். ‘ரோலக்ஸ்’ ‘புஹாரி’ மற்றும் பல அசைவ உணவகங்களும் இருந்தன. தனியார் ‘மெஸ்’கள் பல உண்டு. திருவல்லிகேணியை ‘பிரம்மச்சாரிகளின் சொர்கம்’ என்று இதனால்தான் சொல்வார்கள். அப்போதே சென்னையில் (மதறாஸில்) சில பிரம்மச்சாரிகளின் (மற்றும் அல்லாதவர்களின்) சொர்கம் அல்லது நரகமாக கோடம்பாக்கம்.

சென்னை, நகரமாக மெடாமார்ஃபாஸிஸ் ஆகிக் கொண்டிருந்த ஆரம்ப காலத்திலேயே அதன் முக்கிய குடியிருப்புப் பகுதிகளில் ஒன்று திருவல்லிக்கேணி. 1ம் எண் பேருந்து திருவல்லிக்கேணி யிலிருந்து பாரிமுனை செல்லும். 2 ம் எண் பேருந்து தங்கசாலை செல்லும்.

இப்போது எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் என்று அழைக்கப் படும் ‘கிரிக்கட்’ மைதானம் அப்போது மெட்றாஸ் க்ரிக்கட் க்ளப்’ (எம்.சி.சி.) என்று அழைக்கப் பட்டது. இது சேப்பாக்கம் என்கிற திருவல்லிக்கேணி பகுதியைச் சார்ந்தது. இதைத்தவிர மாநிலக் கல்லூரிக்கு சொந்தமான மெரினா க்ரௌண்ட்ஸிலும் கிரிக்கட் நடக்கும். க்ருபால் சிங், வி.வி.குமார்,வெங்கட்ராகவன் முதலிய சூப்பர் ஸ்டார்களோடு ரசிகர்கள் அருகிலிருந்து அளவளாவி, தொட்டுத் தழுவி மகிழ்ந்திருந்த இடங்கள் இவை.

மகாகவி வாழ்ந்த இடம் பார்த்த சாரதி கோவிலின் மாட வீதிகளில் ஒன்றான துளசிங்கப் பெருமாள் கோவில் தெரு. தமிழ் தாத்தாவின் வீடு திருவெட்டீஸ்வரன் கோவிலின் மாட வீதிகளில் ஒன்றான பிள்ளையார் கோவில் தெருவில் உள்ளது. வீட்டின் பெயர் தியகராஜ விலாசம். சாமிநாதைய்யரின் நண்பர் தியாகராஜ செட்டியாரின் நினைவாக. இதே தெருவில் சி.சு. செல்லப்பா பல காலம் வசித்து வந்தார். எழுத்து பத்ரிகை நடந்தது இங்கிருந்துதான். ‘கசடதபற’ திருவல்லிக்கேணியிலிருந்துதான் வந்தது. நா.பா.வின் ‘தீபம்’ பத்ரிகை ஆஃபீஸ் எல்லீஸ் சாலையில் இருந்தது. ‘கணையாழி’ அலுவலகம் சிலகாலம் பெல்ஸ் சாலையில் இருந்தது.

இந்து உயர் நிலைப் பள்ளியைத் தவிர, கெல்லட் பள்ளி, நேஷனல் பாய்ஸ் ஹை ஸ்கூல், நேஷனல் கேர்ல்ஸ் ஹை ஸ்கூல், முஸ்லிம் உயர் நிலைப் பள்ளி, லேடி வில்லிங்டன் பள்ளி எல்லாம் இங்கிருந்த பெரிய பள்ளிகள். ஜாம்பஜார் முக்கியமான மார்க்கெட். அருகிலேயே பெரிய மசூதியும், ஆற்காட் நவாப் அரண்மனையான ‘அமீர் மஹாலு’ம் இருக்கும்.

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலைதான் நீண்ட பெரிய சாலை. இதில் ஒருகாலத்தில் ட்ராம் வண்டிகள் செல்லுமாம். நான் டிராம் வண்டிகளுக்காக போடப் பட்ட தண்டவாளங்களைப் பார்த்திருக்கிறேன்.

தமிழர் தலைவர்களான காஞ்சிபுரத்து அண்ணாதுரை, இலங்கையில் பிறந்த எம்ஜியார் ஆகியோரது சமாதிகள் அடங்கிய நினைவிடங்கள் திருவல்லிக்கேணிக்கு வட கிழக்கு விளிம்பில் உள்ளன. அதன் தென் கிழக்கில் உள்ள கிருஷ்ணாம்பேட்டையில்தான் - என்னை விட வயதில் மிக மூத்தவர்களான, பசும்பாலூற்றிய யசோதா, கோதண்டம் தம்பதியினரும், எருமைப் பால் ஊற்றிய சகுந்தலாவும், அவரது மகன் பதியும், எதிரில் இருந்த ரிக்ஷா வண்டி நிலையத்தில் கைரிக்ஷா அயராது ஓட்டிய அன்பே வடிவான (சிறுவனான என்னை காசு வாங்காமல் சும்மா மாட வீதிகளைச் சுற்றி ஒரு சுற்று ஓட்டி வருவார்கள். என் அப்பா ஒருவர் வாசலுக்கு வரும்போது மட்டும் எழுந்து நிற்பார்கள். அவர் அவர்களை மரியாதையாக நடத்துவார். மழை வந்தால் வீட்டு வாசற்கதவுகளைத் திறந்து விட்டு விடுவார். அவ்வளவுதான்) முருகேசனும், சக்கரையும், முனுசாமி சகோதர்களும் (அண்ணன் தம்பி இருவர் பெயருமே முனுசாமிதான்) சின்னத் தம்பியும், மதுரையும், அவர்களது மனைவியரும், ராதா என்கிற மதுரையின் மகளும் (“பாவம்டா அவ” என்று அவளுக்கு மட்டும் கொஞ்சம் அதிகமாகவே சாதம் கொடுப்பாள் என் தாயார். அவள் பாவம்டா என்று சொன்னதன் காரணத்தை பால்வினை நோய் என்றால் என்ன என்று படித்து தெரிந்து கொண்ட வயதில் நான் தெரிந்து கொண்டேன்), எதிர்வீட்டு முதலியார் பாட்டியும், என் முதல் ஆசிரியர் நாயுடுவும், மீசைக்கார நாயக்கர் தாத்தாவும், லாலா என்று சகட்டுமேனிக்கு அழைக்கப் பட்ட வட இந்தியர்களும், எங்கள் ஆஸ்தான தையற்காரர்களான இப்ரஹீமும், முஸ்தாபாவும், எல்லோரும் - ஆம் அந்த க்ருஷ்ணாம்பேட்டையில்தான் என் தந்தையைப் போல், எங்கள் பக்கத்து வீட்டுகாரப் பெரியவர்களைப் போல் எரியூட்டவோ புதைக்கவோ பட்டிருப்பார்கள். அங்கிருந்து பின்னர் திருவல்லிகேணியில் முங்கிக் குளித்து தேவதைகளாக அங்குதான் உலவிக் கொண்டு இருப்பார்கள். அதுதான் அந்த பாதுகாப்பு உணர்வு. அவர்கள் அங்கு மட்டும் இல்லை எங்கும், எந்த ஊரிலும், எந்த கண்டத்திலும் கூடவே வரும் சந்திரனைப் போல் கூடவே இருக்கிறார்கள்.

அதனால்தான் ‘எங்கள் ஊர்’ என்று ஒவ்வொரு எழுத்தாளரும் எழுதுகையில் ஜெயகாந்தன் சொல்கிறார்: “என்கதைகளில் மண் வாசனையை விட மனித வாடையே அதிகம் வீசும்”.

****************

Friday, May 8, 2009

ஓம் நமோ நாராயணா !

பிறந்ததிலிருந்தே ஜென்ம ஜென்மமாய்
‘ப்ளூ பேபி’. பிறர் கை பட்டு
அறுந்த வில்லை உடைத்தோர்
திருமணம். சாதா வனக் குரங்கை
மறைந்து கொன்ற மாவீரம். பின்னொரு நாள்
நீர்ப் பாம்பின் சிரசில் நடனம். என்றென்றும்
அறிதுயில் என்ற பெயரில்
அசையாதுறங்கும் பரந்தாமா ! பலஹீனம் நீங்கி
பிறிதெம்மைக் காப்பது எப்போது?

ஓம் நமோ நாராயணா !

10-4-09

ஓம் நமசிவாய !

ஓம் நமசிவாய !


பாம்பை கயிறென்று எண்ணி
கழுத்தில் விட்டாச்சு.
அமுதென்ற நினைப்பில் கொல்லும்
விடத்தை குடிச்சுமாச்சு.
வாயால் அருந்த வேண்டிய நீரை
தலையில் வச்சாச்சு.
ஆக்குவதாய் எண்ணி
அனைத்தையும் அழிச்சாச்சு.
முக்கண்ணில் ஒன்று கூட
‘ஒர்க்’ பண்ணா பரமசிவனே!
ஓம் நமசிவாய !

10-4-09

Tuesday, May 5, 2009

ஜே.க்ருஷ்ணமூர்த்தி.

ஜே.க்ருஷ்ணமூர்த்தி.

வ.ஸ்ரீநிவாசன்.

(க்ருஷ்ணமூர்த்தியைப் பற்றி எழுதுவது காற்றை கையில் பிடிப்பதைப் போல.)

1895 மே 12ம் தேதி ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில், மதனபள்ளியில் தம் பெற்றோருக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தவர் ஜே.க்ருஷ்ணமூர்த்தி (‘கே’).

1875ல் ஆரம்பிக்கப் பட்ட ப்ரம்ம ஞான சபையின் (Theosophical Society) உறுப்பினர்கள் புதிய ‘ஜகத்குரு’ (world teacher) வின் வருகையை எதிர் நோக்கியிருந்தனர். குறிப்பாக டாக்டர் அன்னி பெசன்ட் அம்மையாரும், சி. டபிள்யூ. லெட்பீட்டரும். 1909 ல் லெட்பீட்டர் ‘கே’யை அடயாறு கடற்கரையில் கண்டு பிடிக்கிறார். கேயின் ‘ஒளிவட்டத்’தில் சிறிதும் ‘சுயநலம்’ இல்லாது இருப்பது அவரைக் கவருகிறது. இவரே ‘உலக ஆசான்’ என்ற முடிவில் அன்னி பெஸன்ட்டால் கேயும் அவர் இளைய சகோதரர் நித்யாவும் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கேயே வளர்க்கப் படுகிறார்கள்.

‘ஆர்டர் ஆஃப் த ஸ்டார் இன் தி ஈஸ்ட்’ என்னும் புதிய ‘உலக ரட்சகரு’ (messiah)க்காக தோற்றுவிக்கப் பட்ட ஸ்தாபனத்தின் உறுப்பினர்களான, உலகெங்கும் பரவியுள்ள பிரம்ம ஞான சபையினர் சொத்துகளையும், செல்வங்களையும் வாரி வழங்குகிறார்கள். 1925ல் நித்யாவின் அகால மரணத்துக்குப் பின் கே பெரும் துக்கத்துக்கு உள்ளாகிறார். 1929 ஆகஸ்ட் 3ம் நாள் ஆர்டர் ஆஃப் த ஸ்டாரைக் கலைத்துவிட்டு அதற்கு வந்த கோடிக் கணக்கான சொத்துகளையும், செல்வங்களையும் திருப்பிக் கொடுத்துவிட்டு ‘உண்மை பாதையற்றது; எந்த ஸ்தாபனத்தின் மூலமாகவும், மதத்தின் மூலமாகவும், இனக்குழுவின் மூலமாகவும் அதனை அடைய முடியாது; என்னுடைய ஒரே அக்கறை மனிதனை நிபந்தனையின்றி, முழுமையாக விடுதலை அடையச் செய்வது மட்டுமே’ என்று அனைத்தையும் விட்டு விட்டு தனியாளாகிறார். பிறகு உலகம் முழுவதும், ஓரிடத்தில் நிரந்தரமாக தங்காது, சென்று பலதரப் பட்ட மக்களையும் சந்தித்து அவர்களோடு உரையாடுகிறார். தனிப்பட்ட உரையாடல்கள், பலர் பங்கேற்கும் சம்பாஷணைகள், பொதுக் கூட்டங்கள் என்று இறக்கும் காலம் வரை மனிதர்களோடு உரையாடிக் கொண்டே இருந்தார்.

‘இயேசு கிறிஸ்துவுக்குப் பிறகு அனைத்தையும் துறந்தவர் கே’ என்கிறார் ஹென்றி மில்லர். உலகிலேயே மிக அதிகமான மனிதர்களோடு தனிப்பட்ட உரையாடல்களை மேற்கொண்டவரும் இவரே. இவரது பேச்சுகளால், போதனைகளால் ஈர்க்கப் பட்டவர்கள் பலர். இவர் ‘அறைக்குள் வந்தபோது அன்புக் கடவுளே வந்ததாக உணர்ந்தேன்’ என்று கலீல் கிப்ரான் சொல்கிறர். ‘நான் சந்தித்த மனிதர்களிலேயே அழகானவர்’ என்கிறர் பெர்னார்ட் ஷா.

இவரது பேச்சுகளைக் கேட்ட (இவரைக் கேட்பது புத்தரைக் கேட்பதைப் போல் இருக்கிறது) ஆல்டஸ் ஹக்ஸ்லி இவர் எழுதலாம் என்றார். அதன் பின் இவர் எழுதிய போதிலும், எழுதியவை சொற்பமே. பாக்கி எல்லாம் இவரது பொது மேடைப் பேச்சுகள், சம்பாஷணைகள். நேர்காணல்கள் ஆகியவற்றின் திரிபில்லாத எழுத்து வடிவங்களே.

அவ்வப்போது இவர் பற்றிய உலக கவனம் அதிகமாகும். எழுபதுகளில் அப்படி ஒரு சந்தர்ப்பம் நேர்ந்தது. தமிழ் இலக்கிய உலகில் அவரது தாக்கம் பெரிதும் இருந்தது. அசோகமித்திரன், பிரமிள், லா.ச.ரா., ஜெயகாந்தன் முதலியவர்கள் இவர் பற்றி பலதும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அதே காலகட்டத்தில் இருந்த ஒஷோ இவர் பற்றி பலபக்கங்களுக்கு கூறி இருக்கிறார். ரமண மகர்ஷியும் இவர் பற்றிய கேள்விகளுக்குப் பதில் தந்துள்ளார். இப்போது பிரபலமாக உள்ள ஜக்கி வாசுதேவ், ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர் முதலியோரிடம் இவரது தாக்கம் பெரிதும் தெரிகிறது.
ஓஷோ தானும் கேயும் மஹாவீரரையும் புத்தரையும் போல ஒரே காலத்தில் உலகின் மீது சஞ்சாரம் செய்வதாகக் கூறியதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். யோகி ராம்சூரத் குமார் இவர் கை தன் சிரசில் பட்டதும் தன்னுடைய ‘நான்’ கழன்று விட்டதாகக் கூறினார் என்பார்கள். மேலும் ‘கடவுளை நம்பாதவர்க்கும் ஒரு குரு வேண்டுமல்லவா அவர்தான் கே’ என்றும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் கே ‘நான் உங்கள் குருவல்ல’ என்று கறாராக ஆரம்பத்திலிருந்தே தெளிவுபடுத்தி இருக்கிறார். மேலும் குரு சிஷ்யனையும், சிஷ்யன் குருவையும் சிதைத்து விடுவார்கள் என்பது போன்று குரு சிஷ்ய மனோபாவத்தை வெகு வலுவாக எதிர்த்துள்ளார்.

ஓஷோ, ரமணர், சாய்பாபா, ஜக்கி வாசுதேவ், ரவிஷங்கர் போன்றவர்களில் ரமணர் ஒரு ஏழை கிராமத்து மனிதர் போலவே உடை (ஒரே ஒரு கோவணம் மட்டுமே) அணிந்து வாழ்ந்தவர். பாக்கிப் பேருக்கு என்று ஒரு பிரத்யேக உடை அலங்காரம் உண்டு. ஆனால் ‘பார்த்தால் பிறர் போலிருந்த’ ஆன்மிகர் கே. முழு சூட்டிலிருந்து, வேட்டி ஜிப்பா , ஜீன்ஸ், டீ ஷர்ட் வரை அந்தந்த ஊர்களில் மக்கள் அணியும் ஆடைகளையே அவர் அணிந்து வந்தார்.

சோதித்துப் பார்க்க முடியாதவற்றை எற்றுக் கொள்ள வேண்டாம் என்று கூறும் அவர் பற்றிய மஹாத்மியங்கள் அவரது போதனைகளுக்கு நேரெதிராக அமானுஷ்யமாக இருக்கும்.

பிரம்ம ஞான சபையின் உலக ஆசானாக இருந்த காலத்தில் சென்றவிடங்களிலெல்லாம் ஊடகங்களின் கேலிக்கு ஆளானவர். எந்த சர்வகலா சாலையும் இவரை மாணவராக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஆனால் பின்னர் உலகமே இவர் பேசியதைக் கெட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான உலக சமாதான சங்கத்தில் தொண்ணூறு வயதில் பேசுகையில் இவர் சொல்கிறார்: ‘என்னிடம் எல்லாக் கேள்விகளும் கேட்கப் பட்டுள்ளன.’

கேயின் போதனையை, தத்துவத்தை சுருக்கமாக சொல்லுங்கள் என்றால் சொல்ல முடியாது. இவர் எந்த தியரியையும், சூத்திரத்தையும், வழிமுறையையும் தரவில்லை. ‘வாழ்க்கை என்ன என்று சுருக்கமாக சொல்லுங்கள்’ என்றால் சொல்ல முடியுமா?

‘வாழ்க்கை உறவுகளில் ஓர் இயக்கம்’. ‘வாழ்க்கை செயல்களில் ஓர் இயக்கம்’ என்கிற கே உறவு பற்றியும் செயல் பற்றியும் மிக விரிவாக, மிகப் புதிதாகப் பேசி இருக்கிறார். நமக்கு யாருடனாவது உண்மையிலேயே உறவு இருக்கிறதா? என்று வினவும் அவர் ‘மிக நெருக்கமானதாக கருதப் படும் கணவன், மனைவிக்கு இடையில் உள்ள உறவு கூட இரண்டு பிம்பங்களுக்கு இடையில்தான் உள்ளது என்னும் துக்கத்தை எடுத்துக் காட்டுகிறார். இந்த பிம்பம் செய்தல் மனிதர் பற்றி மட்டுமல்ல, பொருட்கள் பற்றி, கருத்துகள் பற்றியும் நமக்கு உள்ளது. ‘பிம்பங்கள் இன்றி வாழ்வதே சுதந்திரம்’ என்கிறார் கே. பிம்பங்கள் இல்லை எனில் நிஜத்தை நேரிடையாக திரிபு இன்றி பார்க்க முடிகிறது. அப்போது உண்மையான உறவு மலர்கிறது. ‘உங்கள் மனைவி (கணவன்) பேசுவதை என்றாவது நீங்கள் செவி மடுத்து இருகிறீர்களா என்கிற கேள்விக்கு நம் நேர்மையான பதில் என்ன?

அதே போல் செயல். பயம், இன்பம், இலாபம், பாதுகாப்பு, நமது பிரத்யேக கட்டுப்பாடுகள் முதலியவற்றால் நிர்ணயிக்கப் படும் நமது செயல்கள் பின்னப் பட்டவையாக, சவால்களுக்கு சமமில்லாத பதில்களாகவே உள்ளன. எண்ணத்தின் அடிப்படையில் எழும் இந்த செயல்களால் எப்படி நன்மை விளைய முடியும். ‘சரியானதைச் செய்யுங்கள், சரியானது நடக்கும்’ என்கிற கே ‘நிஜங்கள் (Facts) சரியான செயலை உண்டுபண்ணும்’ என்று கூறுகிறார். மேலும் ‘நிஜம் என்பது உண்மையிலேயே நடந்து கொண்டிருப்பது’ என்றும் சொல்கிறார்.


‘கலை’ என்பது ஒவ்வொன்றையும் அதன் சரியான இடத்தில் வைப்பது’ என்கிறார். கவிதை வரிகளோ, ஓவியங்களோ, சிற்பமோ, இசையோ கலை அல்ல, அதைச் செய்யும் மனிதனது வாழ்க்கை பிரிவை, துயரத்தை, அழிவை உற்பத்திப் பண்ணுவதாய் இருந்தால் என்னும் கே வாழும் கலை பற்றி சொல்கிறார். ‘வாழும்கலை என்பது பயமின்றி, துக்கமின்றி, பிரச்னை இன்றி, சச்சரவு இன்றி வாழுதல்’ என்கிறார்.

‘செவி மடுத்தல்’ வாழ்வின் அனைத்தையும் விட முக்கியமான செயல். செவிமடுக்கும் கலை, நோக்கும் கலை, கவனிக்கும் கலை பற்றி விரிவாகப் பேசுகிறார். நாம் வாழ்வில் இடையூறு இன்றி எதையாவது கவனிக்கிறோமா என்பது நமக்கு புலனாகிறது. எதைக் கேட்கையிலும் நம் அபிப்பிராயம், நம் கட்டுண்ட நிலை அதைக் கேட்கவொண்ணாமல் செய்வதை நாம் உணருகிறோம். ஒரு மரத்தைக் கூட நாம் எண்ணத்தின் இடைஞ்சல் இன்றி காண முடியாமல் இருப்பதை உணருகிறோம்.

இயற்கையோடு உறவு இல்லாத மனிதன் ஏற்கனவே இறந்தவன் என்னும் இவரது இயற்கை பற்றிய வர்ணணைகள் ‘ரொமேன்டிக்’ ஆனவையல்ல.

மதங்கள், தேசியம், ஆகியவை எப்படி மனிதனைப் பிரித்துள்ளன என்று கூறும் கே ‘ஒருவன் இந்துவாக இருக்கும் வரை, இசுலாமியனாக இருக்கும்வரை, அரேபியனாக இருக்கும் வரை யூதனாக இருக்கும் வரை இந்து-முஸ்லிம் பிரச்னையோ, அரபு-இஸ்ரேல் பிரச்னையோ தீர வழியே இல்லை என்பதை தெளிவு படுத்துகிறர். தேசங்களாய்ப் பிரிந்து, போருக்கான தளவாடங்களைக் கூட்டிக் கொண்டே இருக்கும் மனிதக் குழுக்கள் ஐக்கிய நாடுகள் சபையையும் வைத்திருக்கும் விநோதத்தில் உள்ள அபத்ததை எடுத்துக் காட்டுகிறார். தேசியம் என்பது ஒளியூட்டப்பட்ட காட்டுமிராண்டித் தனம் (glorified tribalism) என்கிறார். இப்போதுள்ள விஞ்ஞான வளர்ச்சியால் ஒரே நாளில் உலகின் பசியையெல்லம் துடைத்து எறிந்து விட முடியும், ஆனால் நாம் தேசிய பிரிவுகளுக்குள் சிக்கி இருப்பதால்தான் அது சாத்தியமாகவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார்.



இவரால் கிறிஸ்தவர்களுக்கு நடுவே பேசுகையில் ‘உலகின் பாதி கத்தோலிக்கர்கள் இனி ஆயுதம் ஏந்துவதில்லை என்று முடிவு செய்தால் உலகில் யுத்தம் என்பதே இருக்காது’ என்று சொல்ல முடிகிகிறது. சென்னையில் பேசுகையில் பக்கத்திலிருக்கும் மலைக் கோவிலுக்கு (திருப்பதி) இரண்டு நாளைக்கு ஒருமுறை ஒரு மில்லியன் டாலர் காணிக்கை குமிவதில் இருக்கும் அபத்தம் பற்றி பேச முடிகிறது. ‘ஹரிஜனங்கள் கோவில் பிரவேசம் பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன என்று கேட்ட நிருபர்களிடம் ‘ கோவில்களே கூடாது’ என்று சொல்ல முடிகிறது.


வாழ்க்கையை கவனிக்கச் சொல்லும் இவர் உண்மை என்பது வாழ்க்கைதான், மாறிக் கொண்டேயிருக்கும் வாழ்க்கையை தேங்கிப் போன கருத்துகளால் நிறைந்த மனதால் புரிந்து கொள்ள முடியாது, உண்மை உங்களுக்குப் புரிதலைக் கொடுக்கும், சௌகர்யத்தை அல்ல என்கிறார். வாழ்வை மீறிய தத்துவ விசாரங்களில் இவர் ஈடுபடுவது கிடையது. மறை நூல்களிலிருந்தோ வேறெவற்றிலிருந்தோ ‘மேற்கோள்கள் காட்டுவது கிடையாது.

சிஷ்ய கோடிகளும், மடங்களும், இவருக்கு இல்லை. கூடாது என்று மறுத்தவர். இவரது மையங்கள் வெறும் நிர்வாக மையங்களேயன்றி பராம்பர்ய ஆதீனங்கள் இல்லை. இவருக்கு அபாஸ்ல்கள் (apostle) கிடையாது. உனக்கு நீயே ஒளியாய் இரு என்கிற இவர் தான் யாருக்கும் குருவல்ல என்பதில் கடைசிவரை மாறாமல் இருந்தார்.


இவரது போதனைகள் குணரூபமாக (abstract) இருப்பதாகவும் புரிந்து கொள்ள கடினமானவையாக இருப்பதாகவும், கடைபிடிக்க முடியாத விஷயங்கள் என்றும் விமரிசனங்கள் உண்டு. கூர்ந்து பார்த்தால் மோட்சம், கடவுள், சொர்கம், நரகம், மறு பிறவி, கம்யூனிசம், பூஜை புனஸ்காரம் ஆகிய அனைத்து கருத்துகளின் அவசியமின்மை பற்றியும், வாழ்வின் ஒற்றை அவசியமான தினசரி வாழ்க்கை பற்றியும்தான் இவரது பேச்சுகளும் போதனைகளும் அமைந்துள்ளன. ‘தினசரி வாழ்வில் ஒழுங்கைக் கொண்டு வாருங்கள். அதுதான் முதற்படி (first step) முதற்படியே கடைசிப் படி’ என்று கற்பனைகளில் தப்பிக்க விடாமல் நம்மை நாமே காணும்படி செய்கிறார். காயம், குற்றவுணர்வு, பயம், இன்பம், ஆசை, காலம், எண்ணம், மரணம், அன்பு, தியானம் முதலிய நாம் வாழ்வில் தினசரி சந்திக்கும் மிக முக்கியமான விஷயங்களைப் பற்றி இவர் கூறிய சொற்கள் அப்போதே கவனித்து அப்போதே சொன்னவை. நினைவில் கோர்த்து வைத்திருந்து மறுபடி கூர்ந்து சொன்னவையல்ல.

இவரது மரண காலம் வரை இவர் உரையாற்றிக் கொண்டு இருந்தார். 1986 ஜனவரி 4ம் தேதி வாழ்நாளில் இவர் கடைசியாக உரையாற்றிய பொதுக் கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது ‘உங்கள் வாழ்க்கையை குளறுபடியாக நீங்கள் ஆக்கியிருந்தால் அதை மாற்றுங்கள், இன்றே மாற்றுங்கள்’ என்றவர், ‘நீங்கள் நிச்சயமற்று இருந்தால் ஏன் என்று கண்டு பிடியுங்கள், நிச்சயத்தோடு இருங்கள். உங்களால் நேராக சிந்திக்க முடியவில்லை என்றால் அது ஏன் என்று கண்டுணர்ந்து நேராக, தர்க்க ரீதியாக சிந்தியுங்கள்’ என்றார்.

அவ்வருடம் பிப்ரவரி 17 அன்று பைன் காட்டெஜில், ஓஹாய், கலிஃபோர்னியாவில் இறந்தார். வெஞ்சுரா, கலிஃபோர்னியாவில் இவர் உடல் தகனம் செய்யப் பட்டது. மரணத்துக்குப் பின் எந்தச் சடங்கும் செய்யப் படவில்லை. பிரார்த்தனைகளோ, ஊர்வலங்களோ இல்லை.

கேயின் போதனைகள் என்றும் மனிதரின் பிரக்ஞையில் இருக்கும், அவை மனித வாழ்வைப் பற்றி, மனிதனைப் பற்றி, மனித மனம் பற்றி அன்போடு, அக்கறையோடு, உண்மையை மட்டுமே சார்ந்து பேசுவதால்.

**************

“ஆனால் உங்களை எப்படிப் புதைப்பது?”
‘எப்படி வேண்டுமென்றாலும், உங்கள் விருப்பப்படி” என்றார் சாக்ரடீஸ், “அதாவது உங்களால் என்னைப் பிடிக்க முடிந்தால், நான் உங்கள் விரல்களின் நடுவே நழுவாதிருந்தால்” - PHAEDO ‘சாக்ரடீஸின் கடைசி நாட்கள்’.

Monday, May 4, 2009

மானசரோவர் - அசோகமித்திரன்.

காணக் கிடைத்தவை.

வ.ஸ்ரீநிவாசன்.


மானசரோவர் - அசோகமித்திரன்.

ஏற்கனவே படித்து விட்டேன் என்று நினைத்திருந்த புத்தகம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு ‘சாவி’யில் தொடராக வந்தது என்று 2006ல் அசோகமித்திரன் குறிப்பிடுகிறார். ஒரு நண்பரோடு பேசுகையில் ‘படிக்கவில்லை’ என்று தோன்றியது. இந்த முறை புத்தகக் கண்காட்சியில் ஞாபகமாக வாங்கி இப்போதுதான் படித்தேன். மொத்தமும் புதிதாக இருந்தது. ஆனாலும் முன்பு படித்திருக்கவில்லை என்று நிச்சயமாக சொல்ல முடியாது.

கடைசி பாகத்தின் கடைசிப் பகுதியில் கோபால் சத்யன்குமாரிடம் சொல்கிறான்: “இந்தப் பக்கம் வா சத்யன் குமார். இது ஒரு மரமா இரண்டா, ஆலமரமா அரச மரமா என்று சொல்ல முடியாதபடி போய்விட்டது. நிஜம் பொய் கூட இப்படித்தான் பிரித்து சொல்ல முடியாதபடி போய் விடுகிறது”

கோபால், சினிமா தொழிலில் இருக்கும் எழுத்தாளன். சத்யன் குமார் என்கிற இந்திப் படவுலக சூப்பர் ஸ்டாரின் மொழியில் “மதறாஸி ஸ்கிரிப்ட் ரைட்டர்”. சினிமாவுக்குக் கதை சுருக்கங்கள் எழுதி கதை எழுதுவதென்பதே வரவில்லை என்று நினைப்பவன். தன் தொழில் வாய்ப்புக்காக மனைவியையே பலி கொடுப்பவன் என்கிற பயங்கரமான பழிச் சொல் சொல்லும் அவன் மனைவி ஜம்பகம், குடும்பப் பெரியவர்கள் வற்புறுத்தலால் ஒரு சோதாப் பயலை பள்ளிப் பருவத்திலேயே கல்யாணம் செய்து கொண்டு மாமியார்ப் பேயும், வாழ்க்கைப் பேயும் அறைந்து சிரிப்பையே தொலைத்த செல்லம் காட்டப் படாத மகள் காமாட்சி, “தானும் நடிகனாக வர வேண்டும்” என்று ஆசைப்பட்ட, செல்வ மகனாக இருந்தாலும் பல நாட்கள் வயிறார உணவு கிடைக்காத பதினைந்து வயது மகன் ராஜா, இன்னும் கதைச் சம்பவங்களில் நேரடியாக வராத தாயார், மாமனார், மாமியார் என்கிற குடும்பம். நத்தானியெல் வெஸ்ட், டக்டர் ஜிவாகோ என்று படிக்கும், ஒரே வார்த்தை இரண்டு இடங்களில் வராதவாறு வசனம் எழுதும் அழகும் அகந்தையும் உள்ளவன்.

பிரிவினைக்கு முன்பே பெஷாவரிலிருந்து பம்பாய் வந்த பஞ்சாபி இசுலாமியன் சத்யன் குமார். பெற்றோரையும், உறவினரையும் ஒரேயடியாகப் பிரிந்து பல சம்பந்தமில்லாதவர்களோடு சம்பந்தம் கொண்டு வாழ்பவன். இசை அமைப்பாளர் நௌஷாத் போன்றவர்களின் மேதைமை, பட முதலாளிகளின் வியாபார யுக்திகள், தகவல் உறிஞ்சும் நிருபர்களின் விடா முயற்சிகள், துரத்தல்கள், இவன் கேட்கிறான் என்று எதையும் செய்ய தயாராயிருக்கும் வாய்ப்பு ஆசையில், தேவையிலிருக்கும் பெண்கள், அவர்தம் அன்னையர், முகமோ முகவரியோ இல்லாத பற்பல திரைத் துறை மனிதர்கள் இவர்கள் மத்தியில் கோபால்ஜி (கோபாலை அவன் அப்படித்தான் கூப்பிடுகிறான்.) என்னும் மெஹர் பாபாவை நினைவு படுத்துபவனின் நட்பு என்று அவன் வாழ்க்கையின் ஒரு துண்டம்.

இதற்கிடையே சினிமாவில் கதாநாயகியின் தோழியாக வரும், பத்து வயதிலிருந்து தன் சோற்றுக்கு பிறர் கையை நம்பி வாழாமல், குழந்தை கருவில் உதித்த உடனே வாய்ப்புகளைக் குறைத்துக் கொண்ட துணை நடிகை சியாமளா, அவளை அடித்துக் கொன்றிருக்கக் கூடிய கணவனிடமிருந்து கூட்டி வந்து தன்னுடன் வைத்துக் கொள்ளும் வம்பு பேசும் சவுண்ட் ரிகார்டிஸ்ட் ராமநாதன், வேலைக்கரி, பால்காரர் எல்லோரும் நாவலில் வருகிறார்கள்.

ஒரு நாள் கோபால் வாழ்க்கையில் பல விபரீதங்கள் நடந்து விடுகின்றன. மகன் ராஜா இறந்து விடுகிறான். அவன் இறந்தது கூட சரியாகத் தெரியுமா என்கிற ஸ்திதியில் ஆடைகள் கூட இல்லாமல் இருக்கும், கணவனின் கண்களைப் பிடுங்கப் பாயும் ஜம்பகம் என்று ஆகி விடுகிறது.

இது தெரிந்து அங்கு வரும் சத்யன்குமார் தன் துக்கங்களை எண்ணி கோபாலின் தோளில் சாய்ந்து ஒரு பெண்ணைப் போல் கண்ணீர் உகுக்கிறான். அவனிடம் மட்டும் கோபால், தான் டாக்டரை அழைத்துவர போன சமயம் வீட்டில் ராஜாவும் ஜம்பகமும் மட்டும்தான் இருந்தார்கள். தான் திரும்பி வருகையில் ராஜா செத்துப் போயிருந்தான். அவன் முகத்தில் தலையணை வைத்து அழுத்தப் பட்டிருந்தது, என்று சொல்கிறான்.

சத்யன்குமாரின் அடுத்த மதறாஸ் வருகையின்போது கோபால்ஜி அங்கு இல்லை. அவனைத் தேடுகிறான். பம்பாய்க்கும் மதறாஸுக்குமான தொழில் நிமித்தமான அலைச்சல்களுகிடையே தேடல் தொடர்கிறது. சவுண்ட் ரிகார்டிஸ்ட் ராமநாதன் மற்றும் அவனுடன் வாழும், ராஜா இறந்த அன்று கோபால் வீட்டில் பார்த்த, சியாமளா மூலமும் கோபாலைக் கண்டு பிடிக்க முயற்சிக்கிறான். இந்தப் பழக்கத்தில் சியாமளாவை தன்னோடு வீட்டுக்காரியாக இருக்க முடியுமாவென்று பம்பாய்க்கு அழைத்துச் செல்கிறான். தன்னால் மேலும் ஒளியமுடியாது என்ற நிலையில், உயிர்பயம் தரும் வயிற்று உபாதையுடன் மதறாஸ் வந்து ராமனாதனைக் கூட்டிக் கொண்டு கோபால் இருக்கக் கூடிய இடத்திற்கு விரைகிறான்.

சித்தர். நாட்டின் பிரதம மந்திரியே வந்து போகும் இல்லத்துப் பெண்மணிக்கு வினோதமான கஷ்டங்கள். அமானுஷ்யமான நிகழ்வுகளும், இறந்தவர் தோன்றிப் பேசுவதுமாயிருக்கும் சிதைந்து கொண்டேயிருக்கும் வீட்டில் சித்தர் காலடி வைத்ததிலிருந்து எல்லாம் சரியாகி விட்டது. கும்பகோணத்திலிருந்து திருவாரூர் போகும் வழியில் உள்ள வீர ஆஞ்சனேயர் கோவிலைக் கட்டியவர். கோயில் என்றால் ஒரு சிறு கட்டிடம். அவர் எல்லா இடத்திலும் இருக்கிறார். கோபாலிடம் அவர் எதையும் கேட்பதில்லை. புகையிலையைத் தவிர. அதற்கான காசையும் அவர் கொடுத்து விடுகிறார். நடு நிசியிலும் அவருக்காக புகையிலை தரும் வெற்றிலை பாக்குக் கடை திறந்திருக்கிறது, அதற்காகவே என்பது போல.

ஜம்பகத்தை அவள் பெற்றோர் அழைத்துச் சென்ற சில நாட்களில் கோபாலும் புறப்படுகிறான். ரயிலில் ஜெயச்சந்திரிகா என்ற நடிகை (இவள் தாயார் பால்யத்தில் கோபாலுடன் கொஞ்சம் பழகி இருக்கிறாள்) தன்னுடன் முதல் வகுப்பில் வருமாறும் பின் தன்னுடனேயே இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறாள்.

கும்பகோணத்தில் இறங்கி, மாமனார் வீட்டிற்கோ, மகளைக் கொடுத்திருக்கும் வீட்டுக்கோ அல்லது சித்தர் இருக்குமிடத்திறகோ போகக் கூடிய ஒரு புள்ளியில் கோபால் சித்தர் இடத்திற்கே போகிறான்.

சத்யன் குமார் அங்கு வந்து சேர்கிறான்.

நீங்கள் ‘மானசரோவர்’ இனிமேல்தான் படிக்கப் போகிறீர்கள் என்றால் மேற்கொண்டு இக்கட்டுரையைப் படிக்காதீர்கள். ஏற்கனவே படித்து விட்டீர்கள் என்றால் அல்லது படிக்கப் போவதில்லை என்றால் தயவுசெய்து தொடருங்கள்.

அங்கு தன்னை சித்ரவதை செய்து கொண்டிருக்கும் பாவச்சுமையை கோபாலிடம் இறக்கிவைக்க சத்யன்குமார் முயலுகையில், கோபால் ‘ஒன்றும் சொல்ல வேண்டாம்’ என்கிறான். சித்தரும் அப்படியே சொல்கிறார். மேற்கொண்டு, “என் பளு குறைய நான் இன்று சொல்லியே ஆக வேண்டும்...” என்கிற சத்யன் குமாரிடம், சித்தர், “என்ன சொல்ல வேண்டும்? கோபால் வீட்டிலில்லாத போது நீ அவன் பெண்டாட்டி கையைப் பிடித்திழுத்தாய் அல்லது அவள் உன் கையைப் பிடித்திழுத்தாள். இதை அவன் பெண்ணும் பிள்ளையும் பார்த்து விட்டார்கள். இதை விட வேறன்ன இருக்க முடியும்?” என்கிறார்.

‘அவள் மட்டும் வேண்டுமென்று அப்படிச் செய்தாளா?’ ‘நான் ஆமாம் அல்லது இல்லை என்று சொன்னால் உன்னால் அப்படியே ஏற்றுக்கொள்ள முடியுமா’ ‘மெஹர் பாபா சொன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா? முடிந்ததா?’ என்கிறார்.

‘சுவாமிஜி’ என்கிறவனிடம் ‘இங்கே யாரும் சாமி கிடையாது, பூதம்தான்’ என்றவர், அருகில் ஓடும் கொஞ்சமே தண்ணீர் இருக்கும் ஆற்றில் சத்யன்குமாரை குளித்துப் போகும்படி சொல் என்று கோபாலிடம் சொல்கிறார். அதுதான் அவன் மானசரோவர் என்றும் சொல்கிறார்.

மானசரோவர் என்றால் என்ன என்கிற சத்யன்குமாருக்கு “ வடக்கே பனி சூழ்ந்த ஹிமாலய மலைகளுக்கு நடுவே ஓர் ஏரி. அங்கே குளித்துவந்தால் மனம் சுத்தமாகி விடும். மனம் சுத்தமானால் யோகம் சித்திக்கும். யோகமெல்லாம் நமக்கெதற்கு? மனம் கொஞ்சமாவது சுத்தமானால் போதாதா? என்கிறான் கோபால்.

மேலும் சத்யன்குமார் “ நான் பாபிஜி பாபிஜி என்று பதறினேன். பாபிஜியை உதறித் தள்ளிவிட்டு ஓடி வந்தேன்” என்கிறான்.

‘உனக்கு ஆற்றில் குளிக்கத் தெரியுமில்லையா? தெரியாமலென்ன? நீதான் எவ்வளவோ சினிமாக்களில் குளித்திருக்கிறாயே’

சத்யன் குமார் சிரிக்கிறான். இத்துடன் நாவல் முடிகிறது.

ஒரு பார்வையில் இந்நாவல் குற்ற உணர்வின் பல்வேறு தளங்களையும், தாக்கங்களையும், மனித மனம் அதனால் உருவாக்கிக் கொள்ளும் சித்ரவதைகளையும் கூறுகிறது. சத்யன்குமார் முப்பத்தெட்டு வயதாகியும் மணம் செய்து கொள்ளாதவன். ஆஸ்பத்ரியில் கிடக்கையிலும் நர்ஸை கட்டி அணைப்பவன், கூட நடிக்கும் நடிகையும் அவள் அன்னையும் நாணம் கொள்ளக் காரணமாய் இருப்பவன். அதன் மூலம் ஆண் பெண் உறவின் பல பரிமாணங்களையும் காண்பவன். அவனுக்கு ஜம்பகமும் இன்னொரு கிளர்ச்சிதரக்கூடிய பெண்தான்.

கோபாலைப் பற்றி ஜம்பகம் எழுப்பும் குற்றசாட்டுகள் நெருப்பில்லாமல் புகையாது குறைந்த பட்சம் பத்து சதவீதமாவது உண்மையாய் இருக்கும் என்று கொள்கையில் அதுவும் சென்னையை விட்டு கும்பகோணம் போகையில் ஜெயசந்திரிகா அன்று இரவு அவனைத் தூங்க விடவில்லை என்கையில் ஒரு சமயம் கோபாலே நினைப்பது போல் அவன்தான் அவன் மகனைக் கொன்று விட்டானோ?

அவன் மறைமுகமாக அவன் குடும்பத்தை சிதைத்து விடுகிற விஷயங்களுக்குத் துணை போனவன்; அவனால் அதுகுறித்து அதிகம் எதுவும் செய்ய முடியது என்றாலும். இறுதியில் ஒருபக்கம் பத்து மைல் போனால் இருக்கும் மனைவியையோ இன்னொரு பக்கம் போனால் இருக்கும் மகளையோ பார்க்கப் போகாமல் (அவர்களும் இவனைப் பார்க்க வரவில்லை) சித்தர் இருக்கும் இடத்தில் தங்கி விடுகிறான். கையலாகாதவன்?

ஜம்பகம் சத்யன்குமார் கையைப் பிடித்து இழுத்தாள் அல்லது சத்யன்குமார் ஜம்பகம் கையைப் பிடித்து இழுத்தான் (அதை குழந்தைகள் பார்த்து விட்டன) என்கிற ஒரு ambiguity வருகிறது. நிஜமும் பொய்யும் கலந்து விடுகிறது. இரண்டுக்கும் முகாந்திரம் இருக்கிறது. முகாந்திரம் இல்லாமலும் காரியங்கள் நடப்பதில்லையா என்ன? பார்த்த ஒரு குழந்தையை சித்த சுவாதீனமில்லாத, கற்பனையிலாவது தொடர்ந்து கணவனால் வஞ்சிக்கப் பட்ட, என்ன நடக்கிறது என்றே தெரியாத, ஆடை இல்லாமல் போவதைக் கூட அறியாத, துணியை நனைத்துக் கொள்கிற, ஆங்காரமாய் அடாத சொற்களில் கணவனை ஏசுகிற ஜம்பகம் குற்ற உணர்வில் கொன்று அதனால் தாங்க முடியாத எல்லையற்ற குற்ற உணர்வில் சித்த சுவாதீனத்தை முற்றிலுமாக இழந்திருக்கலாம்.

குற்றத்தை ஒப்புக் கொண்டு பளுவை இறக்க வரும் சத்யன் குமார், “நான் பாபிஜி பாபிஜி என்று பதறினேன். பாபிஜியை உதறித் தள்ளிவிட்டு ஓடி வந்தேன்” என்று தான் அந்த அளவுக்காவது குற்றமற்றவன் என்று இப்போதும் சொல்லக் காரணம் என்ன?

மகனின் மரணமும், விபரீதமான நிலையில் இருக்கும் மனைவியும் என்று கோபாலைப் பார்க்கும் சத்யன் குமார் மனதில் முதலில் வந்திருக்க வேண்டிய எண்ணமே அந்த சம்பவம்தானே? பின்னர் தன் பெற்றோரிலிருந்து அனைவரையும் நினைத்துப் பார்க்கும் அவன் பிரக்ஞையில் ஜம்பகம் வராதது ஏன்? அது எப்படி சாத்தியம்?


ஜம்பகம் தொட்டாளா சத்யன்குமார் தொட்டானா என்கிற இரண்டையும் தாண்டி மூன்றாவதாக ஒருவேளை ஒன்றுமே நடக்கவில்லையோ? அப்போது ஜம்பகம் ஏன் ஒருநாள் சத்யன்குமார் வந்து சென்றதை கோபாலிடம் சொல்லவில்லை? இரண்டு குறைப் பிரசவங்கள், மேலும் தவழும் முன்பே இறந்த இரண்டு குழந்தைகள். குடித்து கும்மாளம் போடுவதாக அவள் கற்பனை பண்ணும் அல்லது சந்தேகிக்கும் கணவன், சோதாப் பயலுக்கு வாழ்க்கைப் பட்ட மகள் இவற்றாலோ அல்லது இவையன்றியோ சித்தம் கலங்கிய நிலை காரணமா? அல்லது வேண்டுமென்றா?

சரி கோபால்? அதாவது ஒரு வார்த்தையில் இருக்கும் உதாசீனத்தைக் கூட தாங்காது பதில் வார்த்தை பேசுகிறவன் இதைத் தெரிந்து அல்லது யூகித்துக் கொண்ட பிறகு நடந்து கொள்வது விசித்திரமாக இல்லை? சித்தர் ஓரிடத்தில் சொல்வதைப் போல் சம்சாரம் பண்ணி சாகரத்தை எப்படிக் கடக்கப் போகிறவன்? பொறுப்புகளிலிருந்து தப்பித்துக் கொள்கிற அறிவுஜீவி?

ஒன்றுமே நடக்காத போது சத்யன்குமார் இவ்வளவு பிராயாசை எடுத்துக் கொண்டு வருவது எதற்கு? அவ்வளவு துன்மார்க்கனா அவன்?

அனுமன் என்னும் பிரம்மச்சாரி கோபால்களுக்கும் சத்யன்குமார்களுக்கும் எதிரில் நிற்கும் ஆதர்சம் போல் தெரிகிறார். அந்த ஆதர்சத்தைத் தேடி கோபால் கொஞ்ச நாட்களாகவே நகர்ந்து கொண்டிருக்கிறான். நாவலின் முதல் பத்தியிலேயே பவுர்ணமிக்கு வீர ஆஞ்சனேயர் கோவிலுக்குப் போவதைப் பற்றி வருகிறது.

கதை மொத்தமுமே கோபால் மற்றும் சத்யன்குமாரால் ‘தன்மை’ (First Person) யில் சொல்லப் படுகிறது. தன்மையில் சொல்லப் படும் கதைகளில் எப்படி ஒரு சில நினைவுகளை, எண்ண ஓட்டங்களை கடைசி வரை வாசகனிடமிருந்து மறைப்பதற்காக தன்னிடமிருந்தும் மறைக்க முடியும்? சத்யன்குமார் ஜம்பகத்தையோ அவள் வீட்டில் நடந்தாகக் கூறப்படும் அசம்பாவிதத்தையோ மிக நெருக்கடியான தருணங்களில் கூட ஏன் நினைக்கவில்லை?

‘தன்மை’ யில் எழுதப் படும் கதைகளில் இந்த சிக்கல் இருக்கிறது. ஜெயமோகனின் “காடு’ நாவலிலும் வருகிறது. அதைப் பிறிதொரு சமயம் பார்ப்போம்.

அசோகமித்திரனின் கூர்மையான பார்வை புற வாழ்வின் சகல நுணுக்கங்களையும் அகத்தின் சகல மடிப்புகளையும் காட்டிக் கொண்டே செல்கிறது. ஒரு வார்த்தையைக் கூட எடுக்க முடியாதபடிக்கு இருக்கும் எளிய செறிவு, இரு வேறு மனிதர்களின் பிரக்ஞையிலிருந்து பீறிடும் தனித் தனி நினைவுகள், உணர்வுகள் மீது முழுமையான கட்டுப்பாடு, ஒழுங்கு, வாழ்வில் எதுவும் எப்பேற்பட்ட அவலமும் நடக்கலாம் என்பதை குரலெழுப்பாமல் உயர்வு நவிற்சி துளியும் இல்லாமல் கூறும் தனித் திறமை இவையெல்லாம் நாவல் ஏற்படுத்தும் பாதிப்பை சிதறடிக்காமல் ஒருமுகப் படுத்துகின்றன.

ஜம்பகம், காமட்சி, சியாமளா, சுந்தரம், அத்தை, ஜெயசந்திரிகா என்ற - மற்றும் தேசப்பிரிவினையின் போது தாங்க முடியாத அவலங்களுக்கு ஆளான, உலகின் எல்லாக் காலங்களிலும் எல்லா பாகங்களிலும் இன்றும் துயரங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் ஆனால் உலகம் மீண்டும் உயிர்த்தெழ காரணமாயிருக்கும் - பெண்கள் பற்றிய கதையாகவும் இது உள்ளது.

மானசரோவர் ஒரு ஆன்மீக நாவல், சினிமா பற்றின நாவல் அல்லது சித்தர் பற்றின நாவல், பாவச் சுமையை முற்றிலும் கழுவ முயன்று கொண்டேயிருக்கும் இந்திய மனம் பற்றிய நாவல், நகர்வாழ் மத்தியதர, கீழ் மத்தியதர மனிதர்களையும் மேல்தட்டு மக்களோடு அவர்களுக்கு நேரும் அனுபவங்களைப் பற்றியுமான நாவல் - இன்னும் என்னவெல்லாமோவாக அறியப்படலாம். எனக்கு இது ஒரு உளவியல் த்ரில்லர் என்றும் பட்டது. இந்த த்ரில்லரில் முடிவில் எந்தப் புதிரும் அவிழ்க்கப் படவில்லை. துன்மார்க்கத்தைப் (wickedness) பற்றிய நாவல் என்றும் தோன்றுகிறது. (டாக்டர் ஜிவாகோ படத்தில் ராட் ஸ்டீகரின் பாத்திரம் சாத்தானை நினைவுறுத்தும்)

இந்நூலைப் பற்றி இன்னும் விரிவாக எழுதலாம்தான். இவ்வளவு சாத்தியங்களை எழுப்பும் இவ்வளவு ஆழங்களுக்குச் சென்றிருக்கும் புத்தகத்துக்கு இது கொஞ்சமும் போதாது. எனினும் படித்த மாத்திரத்தில் தோன்றியவை இவை.

மொத்ததில் மானசரோவர் முக்கியமாக எதைப் பற்றிய நாவல்? ‘நிஜம் பொய் கூட இப்படித்தான் பிரித்து சொல்லமுடியாதபடி போய் விடுகிறது’ என்பதுதான் இதன் ரசமாக எனக்குத் தென்படுகிறது.